Friday, December 26, 2008
ஏ வெட்னெஸ்டே
நயந்தாராவின் அபரிதமான நடிப்பால் தான் தமிழில் கஜினி கன்னாபின்னாவென ஓடியதாக்கும்! என்று அள்ளிவிட்டு என் டீமில் இருக்கும் ஒரு சப்பாத்தியிடம் வெட்னெஸ் டே டிவிடியை பண்டமாற்றம் செய்து விட்டேன்.
ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியில் படித்து விட்டு ஒற்றை பையுடன் தனி கிளைடர் விமானத்தில் ஜெய்பூர் அரண்மனை முன் வந்திறங்கி, உச்சா போக கூட ரீட் அண்ட் டெய்லர் சூட் மட்டும் அணிந்து காக்ரா சோளி, சராரா, பாந்தினி சில்க்ஸ் புடவைக்கு கை இல்லாத ரவிக்கையுடன், கார்னியர் லிப்ஸ்டிக் மின்ன "ஓ ஷப்பா, ஹை குடியே" என ஐநூறு பில்ஸ்பெர்ரி சக்கிப்ரேஷ் மைதாமாவு பெண்களுடன் ஆட்டம் போட்டு அதில் வரும் அடுத்தவன் பெண்டாட்டியை டாவடித்து, பின் அவள் தங்கச்சிக்கு தாலி கட்ட குதிரையேறி, முந்தின காதலிக்கு கண்ணீருடன் அல்விதா சொல்லும் ஷாரூக், சல்மான்களுக்கு மட்டுமே கதை பண்ணுவோம் நாங்கள் என்ற அடிப்படை நியூட்டன் விதிகளை தவிடுபொடி ஆக்கி விட்டார் இந்த படத்தின் டைரக்டர் நீரஜ் பாண்டே.
இந்தியாவின் நிர்வாக உள்கட்டமைப்பு, முக்ய முடிவுகள் எடுக்கும் திறன், தீவிரவாத தடுப்பு மற்றும் நீதி விசாரணை, தண்டனைகளின் தாக்கம் இவற்றை கொஞ்சம் கூட தயவுதாட்சண்யமின்றி உள்ளது உள்ளபடி காட்சிகளாக்கிய இயக்குனரின் தைரியத்தை எண்ணி நான் பிரமித்து நிற்கிறேன்.
ஒரு இந்தி படத்தில் ஸ்கர்ட் அணிந்த நாயகி கிடையாது, டைட் பனியனும், ரேபான் கிளாஸ் அணிந்த நாயகனும் இல்லை, ஏ.கே 56 ரக துப்பாக்கி, சாட்டிலைட் போன் வசதி கொண்ட வில்லனும் இல்லை.
பின்ன என்ன தான்யா இருக்கு இந்த படத்துல?
கதை இருக்கு, திரைக்கதை இருக்கு, உண்மைகளை டமால்னு போட்டுடைக்கும் தைரியம் மட்டும் இருக்கு.
ஒரு சாமான்யன் மனதில் குண்டுவெடிப்புகள் ஏற்படுத்தும் தாக்கம் எப்படி இருக்கும்? அதை அவன் எப்படி எதிர்கொள்வான்? என்பதை இதைவிட சிறப்பாக யாரும் காட்டமுடியாது. வசனங்கள் பல இடங்களில் பச்ச மிளகாய் ரகம்.
ஒரு மைக், வோடோபோன் நாய்குட்டி போல பின் தொடரும் கேமிராமேன் சகிதம் இன்று இன்வஸ்டிகேஷன் ஜர்னலிசம் என்ற பெயரில் பேட்டி எடுக்கும் அரை டிக்கெட்டு ஜர்னலிஸ்ட்டுகளை செமையா கலாசி இருக்கிறார் இயக்குனர். ஆனாலும் மும்பை குண்டுவெடிப்பில் இந்த அரை டிக்கட்டுகளின் அட்டகாசத்தை நாடு நன்கு அறியும்.
Spoofing என்று சொல்லபடும் பகடி பண்ணுதல் எப்படி? என்பதை இந்த படத்தை பார்த்து உதவி இயக்குனர்கள் கற்று கொள்ளலாம்.
ஒரு வளர்ந்து வரும் ஹீரோ தமக்கு வரும் கொலை மிரட்டலுக்கு பயந்து போலிஸ் கமிஷனரிடன் உதவி கேட்கும் போது தான் ஒரு மைனாரிட்டி, எனவே தனக்கு பாதுகாப்பு வேணும்! என சொல்லும் காட்சி தூள்.
ஒரு வலுவான, துரிதமான திரைகதை எப்படி இருக்க வேண்டும்? எனபதற்க்கு இந்த படம் ஒரு சிறந்த எடுத்துகாட்டு. படத்தில் நஸ்ரூதீன் ஷாவும், அனுபம் கேரும் மிக இயல்பாக நடித்து உள்ளனர். "ஏய்ய்ய், நான் பாக்கத் தான் சுள்ளான், சூடானா சூரியன்" என கத்தும் நம்மூர் பஞ்ச் பரமசிவன்கள் அவசியம் இந்த இருவரின் நடிப்பையும் பார்க்க வேணும்.
எனக்கிருக்கும் ஒரே கவலையெல்லாம் எக்காரணம் கொண்டும் இந்த படத்தின் தமிழ் உரிமையை நம்மூர் ரீமேக் ராஜாக்களான காப்பி-பேஸ்ட் ரவியோ, விஜய்யோ வாங்கி விட கூடாது. :)
மொத்தத்தில் 'ஏ வெட்னெஸ் டே' இந்தியாவின் மெத்தன போக்குக்கு ஒரு சவுக்கடி.
Tuesday, December 23, 2008
பாத்ரூமில் சினிமா பாட்டு பாடுபவரா? ஒரு குவிஜு
நீங்கள் ஒரு மிகச் சிறந்த பாத்ரூம் சிங்கரா? அப்ப இந்த குவிஜு உங்களுக்கு தான். இது ரொம்ப சிம்பிள் (அத நாங்க சொல்லனும்). உங்களுக்கு நல்லா தெரிஞ்ச சில பாடல்களின் முதல் வரியை அதாவது பல்லவியை( நடிகை இல்லப்பா) சில படங்களாய் இங்க குடுத்ருக்கேன். படங்களை வெச்சு முதல் வரியை கண்டுபிடிக்கனும். அவ்ளோ தான்.
பல்லாங்குழி இருக்கு, ஒரு ரூபாய் நாணயம் இருக்கு. என்ன பாட்டு? பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்.
நீங்க அந்த பாடலின் பல்லவியை மட்டும் சொன்னா போதுமானது. படம் பேரு தெரிஞ்சா சொல்லலாம் ஆனா அவசியமில்லை. சமீபத்தில் 1965ல வந்தது, அப்ப நான் வால் டிராயர் அணிந்து அந்த படத்தை பார்த்தேன்! அப்படின்னு கொசுவர்த்தியும் சுத்தலாம் தப்பில்லை.
படங்கள் க்ளூ போதவில்லைன்னு நீங்க பீல் பண்ணிணா உங்களுக்கு எக்ஸ்ட்ரா குறிப்புகள்:
1) ஜே.கே ரீத்தீஷ் கூட என்ன பாட்டுனு சொல்லிடுவாரு.
4) டாக்டர்களுக்கு பிடிக்காத படத்திலிருந்து ஒரு பாடல்.
5) ரெண்டு வரிகளுக்கு நாலு படம் குடுத்து இருக்கேன், ஆகவே நோ குறிப்பு. தெரியலைன்னா ஏடிஎம் போய் பணம் எடுத்து எனக்கு அனுப்புங்க.
Friday, December 19, 2008
தமிழ் நாட்டுல ஏன் ஹிந்திய எதிர்த்தாங்க?
பக்க வாத்யமா வழக்கமான கிதார், கீபோர்ட் தபேலா நாலு ஸ்பீக்கர் ரெண்டு மைக். கச்சேரி ஆரம்பிச்சிட்டாங்க. நாம கேள்வியே படாத ஏதோ பாடல்கள் எல்லாம் வரிசையா பாடினாங்க. 'ரூப் தேரா மஸ்தானா' என்ற ஒரே ஒரு பாட்டு மட்டும் தான் கேட்ட மாதிரி இருந்தது. அதையும் பாடின ஆளுக்கு மூக்கடைப்பு போல. சுருதி சேரவே இல்லை. சுருதின்னா கமல ஹாசன் பொண்ணு இல்லை.
சரி எனக்கு ஒரு விஷயம் புரியவேயில்லை.
நான் இருக்கறது பெங்களூர் கிளை. எங்க ஆபிஸ்ல அனேகமா எல்லா மொழி ஆளுகளும் வேலை பாக்கறாங்க. என்பதுகளில் எல்லா மொழிலயும் படங்கள் பாடல்கள் வந்ருக்கும் தானே! அது என்னங்க இவங்களே ஹிந்தி பாடல்களை மட்டும் கணக்குல எடுத்துகிட்டாங்க? இதை நாம கேட்டோம்னா மதராஸி எப்பவுமே பிரச்சனை செய்வாங்க!னு ஈசியா கேசை மூடிடுவாங்க. நெல்லை/மதுரைகாரங்களும் அவங்களை பொறுத்தவரை மதராஸி தான். ஹிந்திய ஒரு மொழியா எடுத்து படிச்சதனால எனக்கு ஹிந்தில ஓரளவு பேச, எழுத தெரியும்.
சரி, இப்ப இதே சீனை சென்னையில இருந்து பாப்போம். அங்கயும் இதே மாதிரி ஒரு ஆபிஸ், இதே மாதிரி ஒரு பாடல் கலை நிகழ்ச்சி நடக்குது. என்பதுகளில் வந்த இளைய ராஜா இசையில நம்மாளுக மைக் மோகன் கணக்கா சீன் போட்டு பாடுவாங்கன்னு நான் சொல்லவே வேணாம். நாம ஹிந்தி பாடலோ, தெலுங்கோ, கன்னடமோ பாடி இருப்போமா? மிஞ்சி போன சுராங்கனி மாலு கண்ணா மால் மட்டும் பாடி இருப்போம், அதுவும் ஏதாவது டூர் போகும் போது பஸ்ல தான் அந்த பாட்டு பாடுவாங்க. அந்த நாலு வரிக்கு மேல அதுவும் நகராது.
சரி தான், இப்ப நீ என்ன தான் சொல்ல வர?ன்னு நீங்க கேப்பீங்க.
நான் ஒன்னும் சொல்ல வரலை, சில கேள்விகள் கேள்விகளாகவே இருக்கறது தான் நல்லது. தமிழ்நாட்டுல ஏன் ஹிந்திய எதிர்த்தாங்கன்னு இப்ப தெரியுது. :))
இந்த நிகழ்வை மனசுல வெச்சு ஒரு ஹைக்கூ தோணிச்சு (உங்களை அவ்ளோ லேசுல விடறதா இல்லை நானு!)
தமிழக
சட்டமன்றம்
கூடியது.
ஆளுனர் உரை
இந்தியில்.
Tuesday, December 16, 2008
நீங்கள் எல்.ஐ.சி பாலிசிதாரரா? - குவிஜு பதில்கள்
புரபசரும் ரொம்பவே ஆர்வமா, உனக்கு தெரிஞ்சா சொல்லுப்பா, நானும் தெரிஞ்சுக்கறேன்!னு அவன் வலையில் விழுந்தார்.
ரொம்ப சிம்பிள், ப்ரீமியம் கட்டினவன் மண்டைய போட்டு அவன் தலமாட்டுல வெளக்கு வைக்கும்போது தான் இன்ஷுரன்ஸ் பணத்தை குடுப்போம்!னு சிம்பாலிக்கா சொல்றாங்க, அதான் அந்த லோகோவுக்கு அர்த்தம்!னு பையன் சிரிக்காம கலாய்க்க அந்த புரபசர் முகம் போன போக்கை பாக்கனுமே!
அப்புறம் அந்த பையன் புரபசர்கிட்ட மன்னிப்பு கேட்டுகிடான். வகுப்பும் தூங்கி வழியாம கலகலப்பா போச்சு.
சரி, இப்ப நாம் விடைகளை பாப்போமா?
1. Columbia pictures
2. Red hat
3. Cadburys
4. Red bulls
5. Bacardi
6. Dunlop
7. Puma
8. Tata
9. SBI
10. Ing vysya
11. Wikipedia
12. Mercedes benz
இந்த தடவை நிறைய பேரு சரியான விடைகளை சொல்லி இருக்கீங்க, ரொம்ப சந்தோசம்.
ப்ரியன், எம்ஜி நிதி, கப்பி பய, கைபுள்ள, நாகை சிவா, ரவி, சரவண குமரன், மெட்ராஸ்காரன், ஸ்ரீன்னு இந்த லிஸ்ட் ரொம்ப நீளாமாவே இருக்கு. (யார் பேராவது விட்டு போச்சா?)
மீண்டும் ஒரு சுவாரசியமான குவிஜுடன் உங்களை சந்திக்கிறேன்.
பி.கு: அந்த காலேஜ் பையன் நானில்லை, என் உடன்பிறப்பு. :)
Thursday, December 11, 2008
நீங்கள் எல்.ஐ.சி பாலிசிதாரரா? - ஒரு குவிஜு
சரி குவிஜுக்கு போகலாம்.
Tuesday, December 09, 2008
மரபு கவிதை Vs ஹைக்கூ
கவிதை எழுதறவங்களை பாத்தா எனக்கு கொஞ்சம் பொறாமையா இருக்கும். ஏன்னா கவிதைக்கு அழகு வார்த்தைச் சுருக்கம். அது நம்ம கேசுல கிடையாது. சில சமயம், ஈசியா சொல்ல வேண்டிய ஒரு விசயத்தை ஏன்டா இந்த கவிதை ஆளுங்க இப்படி தலையை சுத்தி மூக்கை தொடறாங்க?னு நினைச்சு இருக்கேன்.
ஸ்கூல படிக்கும் போது ஏதோ ஒரு ஆர்வத்துல கவிதை எழுதறேன் பேர்வழின்னு வானம்-வெண்ணிலா, மழை-மண் ஈரம், தென்றல், இப்படி ஏதோ ட்ரை பண்ணி எனக்கே அது செம மொக்கையா தெரிய அத்தோடு என் கவிஜை ஆர்வம் மூட்டை கட்டப்பட்டது.
காலேஜ் படிக்கறப்ப மர்ம தேசம்னு ஒரு சீரியல் இந்திரா செளந்தர்ராஜன் எழுதினது டிவில வந்தது. உங்க எல்லோருக்கும் தெரிஞ்சு இருக்கும். அதுல டைட்டில் போடும் போது அந்த எபிசோடுக்கு ஏத்த மாதிரி நாலஞ்சு லைன்ல ஹஸ்கி வாய்ஸ்ல சித்தர் பாடல்கள் ரேஞ்சுல ஒன்னு வாசிப்பாங்க. எனக்கு அது ரொம்ப புடிக்கும். அதை மனசுல வெச்சு நான் பிளாக் ஆரம்பிச்ச புதுசுல இந்த புதிர்க் கவிதையை(?) எழுதினேன். யார்னு கண்டுபிடிக்க முடியுதா?னு பாருங்க.
மாமுனி மந்திரம்
ஓர்முறை சோதிக்க
பேரொளி வீசும்
பரிதியின் மைந்தனாய்
நீர் நிலை தவழ்ந்து
சாரதி புதல்வனாய்
சீர் பெற வளர்ந்து
தடக்கை சிவக்க
கொடை பல அளித்து
கூடா நட்பால்
சோதரன் இல்லாளை
பொல்லாப்பழி செய்து
சேரா இடம் சேர்ந்து
கான்டீபன் அம்பினில்
விண்ணுலகு புகுந்து
செங்கமலன் தாழ்
எய்தினேன்! வலையுலக
வள்ளல்களே! என் பெயர்
நவின்றிடுவீர், அம்பியின்
பின்னூட்டத்தில்!"
இந்த ஹைக்கூ கவிதைகள்ன்னு ஒரு சமாச்சாரம் (சம்சாரம் இல்ல) இருக்கே! ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும். ஹைக்கூ கவிதைகள் வாமன அவதாரம் மாதிரி. மூனு அடி மண் கேட்டு கடைசில கொடுத்தவனுக்கே ஒரு ஷாக் கொடுப்பாரே, அது போல இந்த ஹைக்கூஸ் நச்சுனு நாலு வரில ஒரு கதையே சொல்லிடும். நேத்து எனக்கு ஒரு ஹைக்கூ தோணிச்சு(இது வேறயா?)
எப்படி இருக்கு?னு சொல்லுங்க.
"சிசேரியன் செய்து
இன்குபேட்டரில் குழந்தை
மருமகளுக்கு சுகப் பிரசவம்
சந்தோஷமாய் சிரிக்கும்
மெகாசீரியல் மாமியார்!"
இதை போல(இத விட பெட்டரா) இன்னும் சில ஹைகூஸ் ட்ரை பண்லாமா?னு ஒரு யோசனை. அதான் படிக்க/ நாலு சாத்து சாத்த நீங்க இருக்கீங்களே, அந்த தைரியம் தான்.
நீங்க எழுதின ஹைக்கூகளையும் சொல்லுங்க, பதில் மரியாதை பண்ண ரொம்ப ஆவலோட இருக்கேன். :)
Friday, December 05, 2008
சன் டிவி தொகுப்பாளினிகளும் ஒரு குவிஜும்
சன் டிவி தொகுப்பாளினி: நான் உங்ககிட்ட ஒரு கேள்வி கேப்பேன், அதுக்கு கரக்ட்டான விடை தரனும். சரியா?
நேயர்: சரி.
இந்தியாவின் முதல் பிரதமர் யாரு?
ரொம்ப கஷ்டமா இருக்கே! ஒரு க்ளூ குடுங்க ப்ளீஸ்!
சரி, அவருக்கு ரோஜான்னா ரெம்ப பிடிக்கும்.
எனக்கு தெரிஞ்சு போச்சு! செல்வமணி தானே விடை?
இல்லீங்க, அவருக்கு குழந்தைங்கனா கூட ரெம்ப பிடிக்கும்.
கண்டுபிடிச்சிட்டேன்! அப்துல் கலாம்.
இல்லீங்க, இன்னொரு க்ளூ தரேன். முதல் எழுத்து நே. கடைசி எழுத்து ரு. முத எழுத்துக்கும் கடைசி எழுத்துக்கும் நடுவுல ஒரு எழுத்தும் கிடையாது.
நேயர்: ஐயோ! இது ஒரு க்ளூவா? இன்னும் கொஞ்சம் க்ளூ ப்ளீஸ்!
கம்பியர்: (கடுப்புடன்) நேரு என்ற சரியான விடையை நீங்க யோசிச்சிடீங்கன்னு எனக்கு தெரியுது. வெரி குட். நாம இப்ப ஒரு நல்ல பாடலை பாக்கலாமா?
*******************************************************************
இப்படி ஒரு துணுக்கு க்ரேசி மோகன் டிராமாவில் பார்த்த நியாபகம். இதுக்கும் இந்த குவிஜுக்கும் ஒரு தொடர்பும் இல்லை என நான் சொன்னால் நீங்க நம்ப போவதில்லை. :)
அடுத்ததா ஸ்ரீதர் சொன்ன மாதிரி, 'ஐ லவ் யூ ரஸ்னா!' அல்லது 'ஐயம் ஏ காம்ப்ளான் பாய்!' டைப்பில் குவிஜு நடத்தலாமா?னு யோசிச்சுட்டு இருக்கேன்.
இப்போ விடைகளை பார்க்கலாம்:
1)தொட்டுத் தொடரும் ஒரு பட்டுப் பாரம்பரியம் - போத்தீஸ் அல்லது ராஜ் மகால் (ஆமா, ரெண்டுமே சரி தான்)
2) ஸ்வீட்ட எடு! கொண்டாடு! - காட்பரீஸ்
3) வெண்மையின் புது மந்திரம்! - பவர் சோப்
4) மனைவி பேச்ச கேளுங்க! - கோடக் Securities
5) நான் என் மனம் சொல்வதை கேட்டேன். - டாட்டா இன்டிகாம்
6) தாய் வீட்டு சீதனம். - ஆச்சி மசாலா
7) ஐ மிஸ் யூ ஸோ மச்! இட் ஹர்ட்ஸ். - ஏர்டெல் voice mail
8) எடுத்துக்கோ! எடுத்துக்கோ! அண்ணாச்சி கடையில் எடுத்துக்கோ! - சரவணா செல்வரத்னம் ஸ்டோர்ஸ்.
9) தி டேஸ்ட் ஆப் இந்தியா - அமுல் products
10) டோண்ட் ப்ரே! ஜஸ்ட் ஸ்ப்ரே! - ஸ்ப்ரேமின்ட்(மவுத் ப்ரெஷ்னர்)
நிலா மற்றும் வித்யா எல்லா விடைகளும் கரக்ட்டா சொல்லி இருக்காங்க. வாழ்த்துக்கள்.
மற்றவர்கள் எத்தனை ரைட்டு?னு அவங்களுக்கே இப்போ தெரியும்னு நினைக்கிறேன். கலந்துகொண்ட எல்லோருக்கும் வாழ்த்துக்கள், மற்றும் என் நெஞ்சார்ந்த நன்றி! (சே! ஏதோ பொது மேடை பேச்சு மாதிரி என் பிளாக் ஆயிட்டு வருதோ?)
இந்த குவிஜு ஒரு வகையில் சர்வே மாதிரின்னு சொல்லலாம். தமிழகத்தில் மட்டும் காட்டப்படும் விளம்பரங்களை பலரும் சரியாக கண்டுபிடித்து விட்டார்கள். இந்தியா முழுதும் விற்கப்படும் பொருட்களை, சேவைகளை கண்டுபிடிப்பதில் பலரும் சிறிது சிரமப்பட்டு உள்ளார்கள். பலர் எந்த பொருள்? இதுவா? அதுவா? என குழம்பி உள்ளார்கள்.
இவை எல்லாம் அடுத்த குவிஜில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். (என்னது அடுத்ததா? நீ அடங்கவே மாட்டியா?னு எல்லாம் பின்னூட்டம் போடுவீங்களோ?)
பி.கு: பதிவின் தலைப்புக்கும் பதிவுக்கும் தொடர்பு இருக்கு தானே? :)
Tuesday, December 02, 2008
சில விளம்பரங்கள் - ஒரு குயிஜு
புது காரு! புது வீடு! கலக்கறே சந்துரு! என்றால் நமக்கு ஏஷியன் பெயின்ட்ஸ் நினைவுக்கு வருகிறது இல்லையா? அது தான் ஜிங்கில்ஸின் மாயம். திரைப்பட பாடல் வரிகளை விட சில விளம்பர பட வரிகள் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கிறது என நான் சொன்னால் அது மிகையில்லை. பாடல் வரிகள் என்று இல்லை, சில தீம் மியூசிக், அல்லது பிஜிஎம் உதாரணமாக டைட்டன் வாட்ச்சுக்க்கான தீம் மியூசிக்கை கொஞ்சம் அசை போடுங்கள் பார்க்கலாம், சரி வேணாம்! லேட்டஸ்ட் ஹிட்டான ஏர் டெல் பிஜிஎம் நினைவுக்கு வருதா? அதான் அவ்ளோவே தான்.
சில பிரபல வரிகளை கீழே குடுத்துள்ளேன், எந்த பொருள்? என நீங்கள் சொல்லனும். சிம்பிள் தானே? ரொம்பவே எளிமையாக தான் கேள்விகள் இருக்கு என நம்புகிறேன். எல்லாம் போன தடவை பட்ட அனுபவம் தான்.
1)தொட்டுத் தொடரும் ஒரு பட்டுப் பாரம்பரியம்.
2) ஸ்வீட்ட எடு! கொண்டாடு!
3) வெண்மையின் புது மந்திரம்!
4) மனைவி பேச்ச கேளுங்க!
5) நான் என் மனம் சொல்வதை கேட்டேன்.
6) தாய் வீட்டு சீதனம்.
7) ஐ மிஸ் யூ ஸோ மச்! இட் ஹர்ட்ஸ். (i miss you so much, it hurts).
8) எடுத்துக்கோ! எடுத்துக்கோ! அண்ணாச்சி கடையில் எடுத்துக்கோ!
9) தி டேஸ்ட் ஆப் இந்தியா!
10) டோண்ட் ப்ரே! ஜஸ்ட் ஸ்ப்ரே! (Don't pray! Just spray)
Friday, November 28, 2008
மும்பை - மாரல் ஆப் தி ஸ்டோரி
முதலாம் நூற்றாண்டு
கோவலனா கள்வன்? தவறான நீதி வழங்கிய நானே கள்வன்! நானே கள்வன்! - பாண்டியன் நெடுஞ்செழியன் தம் உயிரை விடுகிறான்.
மாரல்: அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்(எமனாகும்).
இருபதாம் நூற்றாண்டு - 1919 AD
ஜாலியன் வாலா பாக் படுகொலைக்கு முக்ய காரணகர்த்தாவாய் திகழ்ந்த ஜெனரல் டயர் சாகும் தருவாயில் சொன்னது, ""but I don’t want to get better. Some say I did right, while others say I did wrong. I only want to die... and know of my maker whether I did right or wrong" .
இருபதாம் நூற்றாண்டு - 1956
நிகழ்ந்த ரயில் விபத்துக்கு தார்மீக பொறுப்பேற்று லால் பகதூர் சாஸ்திரி தம் மத்திய ரயில்வே மந்திரி பதவியை நேரு மிகவும் வேண்டி கேட்டும் ராஜினாமா செய்தார்.
மாரல்: சில நேரங்களில் தன்னெஞ்சே தன்னைச் சுடும்.
இருபத்தி ஒன்னாம் நூற்றாண்டு - 2006 AD
மும்பை புற நகர் ரயிலில் வெடிகுண்டு வெடித்து 200 அப்பாவி பொது மக்கள் பலி.
2008 AD
பெங்களூர், ஐதராபாத், அஹமதாபாத், டெல்லி, புனே, மீண்டும் மும்பை ஆகிய இடங்களில் குண்டு வெடித்து மீண்டும் அப்பாவி மக்கள் பலி (இறந்தவர் எண்ணிக்கை தெரியல, மேலும் நான் கணக்குல வீக்கு)
சோனியா, மற்றும் பிரதமர் காயமடைந்தவர்களை நேரில் சென்று பார்த்து, "அச்சசோ அடி பட்டுச்சா? தெண்பாண்டி சீமையிலே! தேரோடும் வீதியிலே! மான் போல வந்தவனே! யாரடிச்சாரோ!" என பாடி விட்டு வந்தனர்.
சிவராஜ் பாட்டீல் நீல கலர் கோட்டா? கருப்பு கலர் கோட்டா?னு குழம்பி, அவர் மனைவி முடிவு சொல்லி, இறுதியாக கருப்பு கோட் அணிந்து "தீவிரவாதிகளை கண்டு இந்த அரசு பயப்படாது! இரும்பு கரம் கொண்டு அடக்க (ஒருவழியா) முடிவு எடுக்கலாமா?ன்னு காரிய கமிட்டி கூடி விவாதித்து, முடிவு எடுத்துகிட்டே இருப்போம்" என நாசமா போன CNN, நாறிட்டு இருக்கும் NDடிவிக்கு பேட்டி குடுத்தார்.
மாரல்: இடுக்கண் வருங்கால் நகுக! :(
டேய்! உங்களுக்கு வெக்கமே கிடையாதா டா? ஆசை வெக்கமறியாதோ? வேணாம், நெல்லை தமிழ்ல ஏதாவது திட்டிட போறேன்.
Wednesday, November 26, 2008
நண்பர்களுக்கு நன்றி-1
இந்த பதிவை ஆரம்பிக்கும் நேரம் (26/11/2008 காலை 10.30Hrs IST ) ஹிட் கவுண்டர் 99891 காண்பிக்கிறது. ஒரு லட்சத்துக்கான எண்ணிக்கையுடன் கவுன்டவுனை ஆரம்பிக்கிறேன். 25,000 50,000 ஹிட் வந்த நேரம் காலம் எல்லாம் நோட் பண்ணலை. பிளாக் ஆரம்பித்து ஆறு மாதம் கழிந்த பின்னரே இந்த ஹிட் கவுண்டர் சேர்க்கப்பட்டது. ஏன்னா முதல் ஆறு மாதங்கள் ஈ ஒட்டிக் கொண்டிருந்தேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்.
இந்த கவுண்டரின் விசேஷம் என்னவென்றால் நான் லாக்-இன் செய்யும் போதும் கணக்கில் எடுத்து கொண்டு விடும். ஆக அதுவே ஒரு 25,000 ஹிட் தேறி விட்டது. இந்த ஆதரவுக்காக என் நலன் விரும்பிகளுக்கும், கமண்டு போடாமல் கமுக்கமாக படிக்கும் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
பஞ்சாபி பதிவு, ஆதலால் பிளாக் எழுதுவீர் ஆகிய பதிவுகளின் உபயத்தால் சில நாட்கள் ஆயிரக்கணக்கில் ஹிட்கள் குவிந்தன. இந்த காலகட்டத்தில் கேள்வி பதில்கள் எல்லாம் ஆரம்பிக்கும் எண்ணம் இருந்தாலும் "நீங்க வெறும் தாஸா? இல்ல லாடு லபக்தாஸா?" போன்ற கேள்விகள் தான் நமக்கு வரும் என நன்கு உணர்ந்து இருந்ததால் கம்முனு இருந்தேன்.
நாளை தான் ஒரு லட்சத்தை தொடும்! என நினைக்கிறேன். அப்படியே தொடலைனாலும் நானே ரிப்ரிஷ் செய்து விடுவேன்னு உங்களுக்கே தெரியும். ஆகவே ஒழுங்கா நீங்களே ஆக வேண்டிய காரியத்தை பண்ணி விடவும். இப்போ 11.12 மணிக்கு( நடுவுல டீ குடிக்க போனேன்பா!) 99,914 ஹிட்டுக்கள்(அதுல ஒன்னு என்னது). தலைகீழ் எண்ணிக்கை ஆரம்பமாகிறது: 86, 85, 84.....
அட எண்ணிக்கையில என்ன இருக்குப்பா? பத்து பேர் மனசுல நான் இடம் பெற்றிருந்தால், ஏதாவது மகிழ்ச்சியான தருணங்களில் இந்த அம்பியை நீங்கள் நினைத்து கொண்டால் அதுவே எனக்கு மகிழ்ச்சி.
டிஸ்கி 1: இந்த பதிவில் கவுண்டர் என்ற வார்த்தை ஹிட் கவுண்டரை மட்டுமே குறிக்கும். சாதிப் பெயர் இல்லை. :)))
டிஸ்கி 2: இந்த பதிவுக்கும் அந்த பதிவுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை!னு நான் சொன்னா நீங்க நம்பித் தான் ஆகனும்.
Monday, November 24, 2008
வானரம் ஆயிரம்
பொதுவா பசங்க எல்லாம் எஸ்கர்ஷன் போறதுக்கு பெர்மிஷன்லேந்து பெயிலான ரேங்க கார்டை காட்றது வரைக்கும் அம்மா! அம்மா!ன்னு(ஜெஜெ இல்லப்பா, பெற்றெடுத்த தாயார்) எல்லா விசயத்தையும் அம்மாகிட்ட தான் சொல்வாங்க. பொண்ணுங்க எல்லாம் எங்க அப்பா தான் நல்லவரு! வல்லவரு!னு அப்பாகிட்ட தான் செல்லம் கொஞ்சுவாங்க. ஆனா இந்த படத்துல ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையே உள்ள பாசப்பிணைப்பை சொல்ல முயற்சித்து இருக்காரு கெளதம் மேனன்.
ஸ்கூல் பையனா வரும்போதும் சரி, காலேஜ் பையனா வரும்போதும் சரி பாடி லாங்வேஜ்ஜை ரொம்ப அழகா வெளிபடுத்தி இருக்காரு சூர்யா.
குழந்தைகளுக்கு என்னிக்குமே தங்கள் தந்தை தான் ஹீரோ! என்ற ஸ்டோரி லைனை சின்ன சின்ன காட்சிகள் மூலம் வெளிபடுத்தி இருக்காங்க. அதே போல தந்தைகளின் கடமை என்ன?னும் அழகா சொல்லப்பட்டு இருக்கு. நாம என்ன செய்யறோமோ/பேசறோமோ அதே தான் நம் குழந்தைகள் பின்பற்றும்ங்கறது முற்றிலும் உண்மை.
விஜய்யை எப்படி தமிழ் மக்கள் போக போக ஏத்துகிட்டாங்களோ அதே மாதிரி இந்த படத்துல ஹிரோயினா வர சமீரா ரெட்டியும் படம் போக போக ஓகே ஆகி விடுகிறார். குத்து ரம்யாவா இது? மேடம், பெங்க்ளூர்ல நிறைய பிட்னஸ் ஜிம்ஸ் இருக்கு. அட்ரஸ் வேணும்னா நான் குடுக்கறேன். கார்னியர் ப்ராடக்ட்ஸ் கூட நிறையா இருக்கு. சொல்றதை சொல்லிட்டேன். அம்புட்டு தான்.
அப்பாவா வர சூர்யா தன் பையன் என்ன கேட்டாலும் ஒத்துக்கறாரு. முதல்ல சமீரா ரெட்டிய புடிச்சுருக்கு டாடி!னு சொன்னா, சரிப்பா, வீட்டுக்கு கூட்டிட்டு வா!ன்னு சொல்றாரு. அப்புறம் பாத்தா, பக்கத்து வீட்டு குத்து ரம்யாவையும் எனக்கு புடிச்சுருக்கு டாடி!னு சொன்னா வெரிகுட் சாய்ஸ்னு சொல்றாரு.
எனக்கும் தான் பக்கத்து வீட்ல பிகர் இருந்தது, என் அப்பா கிட்ட மூச்சு விட்ருப்பேனா? அப்படியே சொல்லியிருந்தாலும் எங்கப்பா என் முதுகுல தோரணம் ஆயிரம் கட்டியிருப்பார்ன்னு எனக்கு தெரியாதா என்ன? :)
படத்தில் சில துக்கடாக்கள்:
90களில் வரும் காட்சி என காட்ட, பாட்டு சீனில் பேக்ரவுன்டில் சாலிட்டர் டிவியின் விளம்பரம் காட்டப்படுகிறது.
சமீரா ரெட்டி சென்னையில் இருக்கும் காட்சிகளில் அம்மணி சுடிதார் போட்டு பின் குத்தி ஷாலில்(வலது புறம் ) வளைய வருகிறார்.
கிதார் வாசிக்க தெரிந்த எவரும் கண்டிப்பாக பாடும் பாடல் 'என் இனிய பொன் நிலாவே' தேர்தெடுத்தது சூப்பர்.
ஆள் கடத்தல்(Extortion) இல்லாமல் தனக்கு படம் எடுக்கத் தெரியாது என்பதை மறுபடியும் கெளதம் நிரூபித்து உள்ளார்.
ராணுவம் ஆள் கடத்தல் மீட்பு நடவடிக்கையில் இறங்கும் போது, மிஷின் கன் பயன்படுத்த மாட்டார்கள், சைலன்சர் பொருத்திய ரிவால்வர் தான்.வீணான அப்பாவி உயிர்ச் சேதத்தை தவிர்க்கத் தான் இந்த ஏற்பாடு. 'ஷூட் அட் புல்' என குறிப்பிட்டு பெரும்பாலும் கடத்தியவர் தலையில் சுட முயற்சிப்பார்கள். நுணுக்கமான இந்த விசயத்தை நோட் பண்ணியிருக்காங்க. சூப்பர்.
இப்படத்தின் எடிட்டரான ஆன்டனிக்கு சம்பள பாக்கி போல. கத்திரியை பயன்படுத்தவே இல்லை. 'லைஃப் ஹேஸ் டு கோ ஆன்!' என சூர்யா சொல்வதை எடிட்டர், 'பிலிம் ஹேஸ் டு கோ ஆன்!'ன்னு தப்பா புரிஞ்சுகிட்டாரு போல. :)
பாடல்கள் எல்லாம் தாமரை. எளிய வரிகள், மேடம்! நேஷனல் அவார்டு எல்லாம் உங்க வரிகளுக்கு ஜுஜுபி. தாமரையின் வரிகளை தம் இசை கொண்டு அமுக்க விரும்பவில்லை ஹாரிஸ். பதமா வாசிச்சு இருக்காரு.
வசனம் பல இடங்களில் ரொம்ப ஷார்ப்.
எ.கா: உங்கள மாதிரி பொண்ணுங்க இங்க படிச்சு, அங்க போய் எம்எஸ் பண்ணி, வேலை பாத்து, அங்க டாக்ஸ் கட்டுவீங்க, அதுக்கு பதில் இங்கயே வேலை பாத்து, டாக்ஸ் கட்டினா என்ன மாதிரி பையன்களும் நல்லா இருப்பாங்க இல்ல!
சிக்ஸ் பேக்குக்கு குடுத்த பில்டப்புக்கு இன்னும் கொஞ்சம் காட்சி அமைச்சு இருக்க வேணாமோ? சல்மான் கானை பாருங்க, எப்பவுமே குளிக்க போற மாதிரி தான் பாடல் காட்சிகளில் வர்ராரு.
ஏதாவது ஒரு காட்சியில் பார்வையாளர்கள் தம் அப்பாவை நினைத்து கொள்வார்கள். புதிதாக அப்பாவாகி இருக்கும் கைப்புள்ளை, வெட்டி பாலாஜி போன்றோர் கையில் நோட்டு புக், பேனாவுடன் படம் பார்க்க செல்லவும். :)
பி.கு: பதிவு ஒழுங்கா தான் எழுதி இருக்கேன், தலைப்புல தான் என் வேலைய காட்டிட்டேன் போல. :)
Friday, November 21, 2008
குவிஜு விடைகள்
ஜார்ஜ் புஷ்ஷே! மன்னிப்பு கேள்! ஓபாமா உனக்கு புடிச்சது உப்புமாவா? போன்ற உணர்ச்சி குவியலாய் தமிழ்மணத்தில் எழுதபடும் பதிவுகளில் இருந்து உங்களுக்கு தற்கால விடுதலை அளிக்கவே இம்மாதிரி குவிஜை அறிமுகப்படுத்தினேன். வேற எதுவும் காரணம் இல்லை.
முதல்ல இந்த குவிஜுக்கு நீங்க குடுத்த ஆதரவுக்கு மிக்க நன்றி.
இந்த குவிஜை எப்படி அணுகனும்?னு நான் வழிமுறை எல்லாம் உதாரணத்தோட போட்டு இருந்தும், பல பேர் கண்ண மூடிகிட்டு தொபக்கடீர்னு போட்டில குதிச்சு இருக்கீங்க. உங்க ஆர்வத்தை நினைச்சா எனக்கு புல்லரிக்கிது. :)
நான் ரொம்ப தெளிவா சொல்லியிருக்கேன்:
1) எல்லா கேள்விகளும் குறிபிட்ட ஆட்களை பத்தி தான்.
2) எல்லா குறிப்புகளும் நேரிடையாகவோ மறைமுகமாவோ ஆட்களை தான் குறிக்கும்.
சரி விடுங்க, அடுத்த தடவை நான் இன்னும் கொஞ்சம் கவனமா முடிஞ்சா உங்க வீட்டுக்கே வந்து பிட் நோட்டீஸ் குடுக்க முடியுமா?னு ட்ரை பண்றேன். அதோட இல்ல, இந்த வகை குவிஜை இன்னும் எளிமையாக, 'நாலுல ஒன்ன தொடுங்க பாப்போம்!' ரேஞ்சுல நடத்த முடியுமா?னு சிந்திக்கிறேன்.
இப்போ விடைகளை பாப்போம்.
1) ஒரு வீணை, திருவள்ளுவர் சிலை இதானே படங்கள். வள்ளுவர் வீணை வாசிச்சா ஒரு இசை கலைஞர் வருவார்னு சொல்லிட்டேன்.
வெரி சிம்பிள்: பாலசந்தரின் கவிதாலயாவின் லோகோ என்ன? வள்ளுவர். ஆக விடை விணை பாலசந்தர்.
(என்ன இப்பவே கண்ண கட்டுதா?)
2) கிரிகெட்டுக்கும் பீருக்கும் என்ன சம்பந்தம்? இதானே குறிப்பு. பீர்னாலே விஜய் மல்லயா தான். கிரிகெட்டுல 20-20ல கைய சுட்டுகிட்டாரே.
ஸ்ரீதர் கவுதம் கம்பீர்னு சொல்லி இருக்கார். சரி அதுக்கும் மார்க் குடுத்து இருக்கேன். ஆக விடை விஜய் மல்லய்யா.
3) இங்க்லீஷ் எழுத்துக்கள்(A to Z) மற்றும் கிருஷ்ணர் பேமிலி (கிருஷ்ணர்+பாமா+ருக்மணி)படம். அதாவது ஓ+பாமா=ஓபாமா.
(யாருப்பா அது? கல்ல விட்டு எறியறது?)
4) டாலர் படம் + சில ரத்னங்கள் படம். அத ஏன் டாலரா பாக்கறீங்க? 'மணி'யா(Money) பாருங்க பா. ஆக மனிரத்னம். குறிப்பை வாசிங்க, மனிரத்னம் பட வசனம் மாதிரி இருக்கா? :)
5) இது ரொம்ப சிம்பிள். பல்லாங்க்குழியின் வட்டத்தை பாத்து ஒத்தை நாணயம்னு பாடின சினேகா தான் விடை. சிலருக்கு அந்த பாட்டுல வேலை பாத்த லைட்பாய்ஸ் பேர் கூட தெரிஞ்சு இருக்கலாம். சொல்லுங்க, சந்தோஷமா நானும் தெரிஞ்சுக்கறேன். :D
6) ஒரு சுவர் படம் + ஒரு ஆமை படம். 'தி வால்'னு(The Wall) ராகுல் டிராவிட்டை ஒரு காலத்துல சொல்லிட்டு இருந்தாங்க. அண்ணன் 20-20 கிரிகெட்டையே டெஸ்ட் ரேஞ்சுக்கு ஆமை வேகத்துல ஆடறதுல கில்லாடி.
7) சுட சுட ஈமெயில் அதாவது ஹாட்மெயில். அதை ஆரம்பிச்சது யாரு? சமீர் பாட்டியா. கொஞ்சம் கூகிள் ஆண்டவரை கேட்டு தான் பாருங்களேன்.
8) சாமான்யனுக்கும் விமான பயணம் கிட்டனும்னு ஆசை பட்டவரு டெக்கான் ஏர்லைன்ஸ் ஓனர் கேப்டன் கோபி நாத். சிலர் இதுக்கு விஜய் மல்லயானு சொல்லி இருக்காங்க. சாரி, அவரு சல்லிசா ஷேர் தான் வாங்கினாரு. விடை கேப்டன் கோபி நாத் தான்.
9) ஒரு பாங்க்ரா டான்ஸ்(பஞ்சாபி)+ ஒரு கதகளி டான்ஸ் போட்டோ. நயன்தாரா உங்களுக்கு(எனக்கும் தான்) புடிக்கும் தான். ஆனா குறிப்பையும் படிங்கண்ணே. பளார்னு ஒரு அறை விட்டது யாரு? ஹர்பஜன் சிங்க் தானே? சிலர் ஸ்ரீசந்த்னும் சொல்லி இருக்காங்க. சரின்னு மார்க் குடுத்து இருக்கேன்.
10) அரை வேக்காட்டு பிட்சாவை மட்டுமல்ல சோனியாகாந்தியையும் நமக்கு அறிமுகப்படுத்தியது யாரு? இத்தாலி. காந்தி படமும் போட்டு இருக்கேன். ஆக விடை சோனியா காந்தி.
ரொம்பவே கஷ்டமா இந்த குவிஜை நான் அமைச்சு இருந்தததா நீங்க கருதினா, நான் உங்க கிட்ட சாரி கேட்டுக்கறேன். சத்தம் போடாம பதிவை படிச்சிட்டு குவிஜை ட்ரை பண்ணியவங்களுக்கும் மிக்க நன்னி.
சரியான விடை சொன்னவர்கள் விபரம்:
ரவி: 7/10
ஸ்ரீதர் நாராயணன்: 6/10
எம்ஜி நிதி: 5/10
கில்ஸ்: 4/10
ராப்: 5/10
கெக்கேபிக்குணி அக்கா: 3/10
வல்லி சிம்ஹன்: 3/10
(மார்க் தப்பா இருந்தா சொல்லுங்க திருதிடறேன். )
Tuesday, November 18, 2008
குவி குவி குவிஜு
ரூல்ஸ்:(ஆமா! பெரிய்ய்ய ஐசிசி ரூல்ஸ்)
1) ஒரு ஆளு ஒரு தடவை தான் மெயிலனும்.
2) ஆபிஸ்ல பக்கத்து சீட்டு பிகர்கிட்ட எல்லாம் கேக்க கூடாது.(ஹிஹி, பாம்பின் கால் பாம்பறியும்).
3) ஒரு கேள்விக்கு ஒரு மார்க் தான். அரை/கால் மார்க் எல்லாம் கேட்கபடாது. 4) யாரு முழுசா கரக்ட்டோ அவங்க மார்க்கோட விடைகள் எல்லாம் வெள்ளிகிழமை தான் வெளிவரும். சீக்ரம் வேணும்னா என் ஆபிஸ் வேலைய நீங்க முடிச்சு குடுங்க. :)
படங்கள் நேரிடையாகவோ, உருவகமாகவோ ஒரு குறிப்பிட்ட நபரை குறிக்கும். எல்லா கேள்விகளுமே குறிப்பிட்ட ஆட்களை பத்தி தான்.
எடுத்துகாட்டு:
இந்த படத்தை பாத்ததும் உங்கள் நினைவுக்கு வரும் நடிகர்? விடை: விஜய்.
இப்போ புரிஞ்சதா?
இப்போ ஆட்டைக்கு போவலாமா?
1) திருவள்ளுவர் வீணை வாசித்தால் இந்த இசை கலைஞர் வருவாரே!
Friday, November 14, 2008
கொல்டிகாரு
அம்மணி முத முதலா இப்ப தான் இன்டர்வியூ எடுக்கற அனுபவம். சும்மா தானே(வெட்டியா தானேனும் வாசிக்கலாம்)இருக்காரு ரங்கு!னு என்னை கூப்ட்டு ஏதாவது டிப்ஸ் குடுங்களேன்னு ரெம்ப்ப பவ்யமா கேட்டாங்க.
நமக்கு இது போதாதா?
உள்ளுகுள்ள ரெம்ப சந்தோஷபட்டாலும், வெளிகாட்டாம, இதெல்லாம் உன் ஆபிஸ் சமாசாரம். என்ன தான் இருந்தாலும் நான் ஒரு மூனாம் மனுஷன். நீயே பாத்துக்கோ!னு பந்தாவா சொல்லிட்டேன்.
தங்க்ஸும், இதெல்லாம் கதைக்காவாதுனு முடிவு பண்ணி, சரி, நீங்க போய் நாளைக்கு சமைக்க வேண்டிய காய்கறி என்ன?னு பாத்து கட் பண்ணி வைங்க, அப்படியே வாஷிங்க்மெஷின்ல இருக்கற துணிய காய போட்ருங்க, இடைபட்ட கேப்புல தூங்கற ஜுனியர் எழுந்தா கொஞ்ச நேரம் தூளி ஆட்டுங்க, இல்லாட்டி அவனை தூக்கி வெச்சு ஏதாவது கதை சொல்லுங்க, மறக்காம டயப்பர் மாத்திடுங்க!னு வரிசையா அடுக்கிட்டே போக, எனக்கு அப்பவே கண்ண கட்டிடுச்சி.
சரி, நீ இவ்ளோ கேக்கற, ஹெல்ப் பண்ணாம இருக்க முடியல, போன் போட்டு நீ அந்த கேன்டிடேட் கிட்ட இன்டர்வியூ ஷெட்யூல் பண்ணி கன்பார்ம் பண்ணு. பேசிட்டே இரு. டெக்னிக்கலா ஸ்ட்ராங்கானு பாரு. நானும் கூட இருக்கேன்னு சொல்லி சமாளிசாச்சு.
ஆள் பெயர், ஊர் எல்லாம் என்னனு பாத்தா விஜயவாடாவுலிருந்து ஒரு பக்கா கொல்டி பையன். டக்குனு பல்ராம் நாயுடு இங்க்லீஷ் நினைவுக்கு வர எனக்கும் ஒரு ஆர்வம் தொத்திகிச்சு.
நாலு ரிங்க் போய், நம்மாளு போனை எடுத்து
ஹலோ! எவரண்டி?
நாங்க கெக்ரான் மோக்ரான் கம்பனில இருந்து பேசறோம், நாளைக்கு நைட்டு எட்டு மணிக்கு உங்க கூட டெக்னிக்கல் டிஸ்கசன் பண்ண போறோம், ரெடியா இருங்க என்ன?
ஐந்து செகண்டுக்கு எதிர்முனையிலிருந்து பேச்சே வரலை,
மேடம், நீங்க சொன்னதை எனக்கு மெயிலா அனுப்புங்க ப்ளீஸ், அப்ப தான் நான் நம்புவேன். ஏற்கனவே என் பிரண்டு ஒருத்தன் மைக்ரோசாப்டுல இருந்து பேசறோம்!னு சொல்லி ஒரு மணி நேரம் என்னை கலாய்ச்சுட்டான். அவ்வ்வ்வ்வ், தப்பா எடுத்துகாதீங்க ப்ளீஸ். (குசும்பன் வேலையா இது?)
பாவம் ரொம்ப அடி வாங்கி இருக்கான் போல!னு நினைச்சுகிட்டு, சரி! உடனே உங்க மெயில் பொட்டியை பாத்துட்டு எனக்கு பதில் அனுப்புங்க!னு சொல்லி தங்க்ஸ் போனை கட் பண்ணிட்டு டக்குனு ஒரு மெயில் தட்டி விட்டாங்க.
உங்க கம்பனில இன்டர்வியூ வரதெல்லாம் நான் செஞ்ச புண்யம், நளைக்கு ஏழு மணில இருந்தே நான் ரெட்டியா சே! ரெடியா இருக்கேன்.
மேடம், நீங்களும் தெலுகா? நாளைக்கு என்ன படிக்கனும்?னு கொஞ்சம் சொன்னா புண்யமா போகும்னு ரெண்டு நிமிஷத்துல ரிப்ளை வந்தது.
அடங்கொய்யால! பல்ராம் நாயுடு வேலைய இங்கயே காட்றியா? இருடி,உனக்கு நாளைக்கு இருக்கு தீவாளின்னு தங்க்ஸ் கடுப்பாயிட்டாங்க.
அடுத்த நாள் சொன்ன நேரத்துக்கு போனை போட்டு தங்க்ஸ் ஒரே டெக்னிகல் கேள்விகளா கேட்டு கொடஞ்செடுத்தாங்க. அந்த பையனும் ஓரளவு சரியான பதில்களா சொல்லிட்டான். நான் சைலண்டா எல்லாத்தையும் கேட்டுகிட்டு இருந்ததில் முக்யமான சில துளிகள்:
1) அந்ததந்த மாநில மக்களின் மொழி அக்ஸண்ட் அவங்க பேசர இங்க்லிபிசுல ஒலிக்கிறது.
ஆட்டோ, ஆபிஸ் எல்லாம் சேட்டன்களுக்கு(சேச்சிகளுக்கும் தான்) ஓட்டோ ஓபிஸ் ஆகிறது.
அனேகமாக எல்லா ஆங்கில வார்த்தைகளுக்கு பின்னும் தெலுங்குகாரர்கள் லு போட்டும், கன்னடர்கள் உ போட்டும் பேசுகிறார்கள்.
உதா: ஆரக்கல்லு, டேபிலு,டாக்குமெண்டு, கர்சர்ரு, கேபினு.
2) கொல்டிகள் ஐ.டி துறையில் எப்படியாவது ஒரு பெரிய்ய கம்பெனியில் நுழைந்து, அமெரிக்கா ஆன்சைட்டுக்கு போக வேண்டும்! என்பதை ஒரு தவமாகவே கருதுகிறார்கள். நன்றாக கவனிக்கவும் எப்படியாவது!
இங்கு பெரிய்ய கம்பெனி எனபதற்க்கு தகுந்த விளக்கம், அவங்க வட்டத்தில் அந்த கம்பெனி பெயர் சொன்னா தெரியனும்.
எ.கா: இன்போசிஸ், விப்ரோ, சத்யம், டிசிஎஸ்.
இதன் பின்புலம் என்னனு பாத்தா வெரி சிம்பிள்: எல்லாம் கல்யாணத்துக்கு வரும் வரதட்சணை தான். இன்போசிஸ், விப்ரோ, டிசிஎஸ்: இந்த கம்பெனியில் இருந்து, அதுவும் அமெரிக்காவில் வேலை என்றால் ஒரு கோடி முதல் ஒன்னரை கோடி வரை ரொக்கம், ஒரு சைட்டு(அதாவது இடம்பா) அல்லது அப்பர்ட்மெண்ட், காரு சே! கார் மற்றும் ஒரு மணப்பெண். :-)
இதுவே இந்தியாவில் வேலை என்றால் ஐம்பது முதல் எழுபத்து ஐந்து லட்சம் வரை ரொக்கம், பிற பொருட்கள் மற்றும் ஒரு மணப்பெண்.
நிற்க, மேலே சொன்னதெல்லாம் கொல்டிகள் மற்றும் கன்னடர்களுக்கு மட்டும் தான்.
தமிழ்நாட்டில், பையன் ரிட்டையர் ஆனா பென்ஷன் வருமா? வேலையில் இருக்கும் போது மண்டைய போட்டா நம்ம பொண்ணுக்கு இன்ஷுரன்ஸ் வருமா? என நோண்டி நொங்கெடுத்து தான் "என் கண்ணயே உங்க கிட்ட ஒப்படைக்கிறேன்"னு டயலாக் பேசுகிறார்கள்.
சரி டிராக் மாறி விட்டது.
ஓரளவுக்கு அந்த பையன் நல்லாவே பதில் சொல்ல, தங்க்ஸ் இன்டர்வியுவை முடித்து கொள்வதாக அறிவிக்க, அந்த பையன், "தெய்வமே! தெய்ய்ய்வமே! நன்றி சொல்வேன் தெய்வமே!"னு ஒரு ரெண்டு நிமிஷம் நா தழ தழக்க முடித்து கொண்டான்.
இப்ப விசாரிச்சதுல அந்த பையன் அடுத்த கட்டங்களையும் தாண்டி, நேர்காணலுக்கு சென்று கொண்டிருக்கிறான்னு தெரிஞ்சது. ம்ம்ம், யாரு பொண்ணை பெத்து வெச்ருகாங்களோ?
Thursday, November 06, 2008
மெட்ராஸ் aka சென்னை
ஒரு சில மாதங்கள் கழித்து வருபவர்களுக்கு கூட சென்னை பல திடிக்கிடும் மாற்றங்களுடன் அசுர வேகத்தில் வளர்ந்து காட்சியளிக்கிறது.
சென்ட்ரலில் நிறைய ஆட்டோக்கள் விற்பனைக்கு உள்ளது. ஆமா! ஆட்டோ வருமா?னு கேட்டால் ஆட்டோ விலையை தான் சொல்கிறார்கள்.
மியுச்சுவல் பண்ட், ஷேர் மார்கெட்டில் பணத்தை போட்டு விட்டு தேவுடு காப்பவர்கள், ரெண்டு ஆட்டோ வாங்கி வாடகைக்கு விடுங்கள். பணத்துக்கு சென்னை கியாரண்டி.
அறிவாலயத்தில் முன்னாடி சன் டிவினு இருந்த போர்டு இப்போ கலைஞர் டிவினு சொல்லுது. மானாட மயிலாட சூட்டிங்க் எல்லாம் இங்க தான் நடக்குதா? :-)
டூ வீலர்களில் செல்பவர்கள் ஹெல்மெட்டை மடியில் வைத்து கொண்டு சிக்னலில் மட்டும் தலையில் அணிகிறார்கள். வாழ்க்கையில் இப்படியா பிடிப்பு இல்லாம இருப்பாங்க..?
திரும்பின பக்கம் எல்லாம் காஃபி டே கடைகளூம், பெட்ரோல் பங்குகளில் கூட பிட்சா கார்னரும் இருக்கு. ஞாயிறுகளில் மக்கள் வீட்டில் சமைக்காமல் கூட்டம் கூட்டமா ரெஸ்டாரண்ட் போய் மொய் எழுதுகிறார்கள்.
மக்கள் பிராண்டட் உடைகளையே விரும்பி அணிகிறார்கள். இந்தியா ஒளிர்கிறது?
தடுக்கி விழுந்தா ரிலையன்ஸ் ப்ரேஷ், தாவி எழுந்தா நில்கிரீஸ் என காய்கறிகளை அழகா நறுக்கியே பாக்கெட் போட்டு விற்பனை செய்கிறார்கள். சென்னை வாழ் ரங்கமணிகள் சந்தோஷமாக வாங்கி செல்கிறார்கள். ஒரு ரங்குவின் கஷ்டம் இன்னொரு ரங்குவுக்கு தானே தெரியும். :-)
புஸ்வாணம், மத்தாப்பு எல்லாம் காலாவதியாகி இப்போ வானத்திலேயே மத்தாப்பு கொட்ற வெடிகள் தான் மக்கள் வெடிக்கிறார்கள். அப்ப தான் ஓசோனில் சீக்ரம் ஓட்டை விழும் பாருங்க.
காய்கறி விலை பெண்களூருவை விட அதிகமா இருக்கு. (பீன்ஸ் கிலோ என்பது ரூபாய், தக்காளி கிலோ அறுபது ரூபாய், கத்ரிகாய் கிலோ நாப்பது ரூபாய்). சரி விடுங்க, அரிசி கிலோ ஒரு ரூபாய் தானே? :-)
முக்ய ஏரியாக்களில் (அடையாறு, பாண்டி பஜார், வேளசேரி) நாயுடு ஹால் விரிவாக்கம் செய்து உள்ளது. சொல்ல மறந்துட்டேனே, நாயுடு ஹாலில் இப்போ பெண்களுக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும் தேவையான ஆடைகள் கிடைக்கிறது.
நாரத கான சபாவில் எஸ்.வி.சேகரின் மகாபாரததில் மங்காத்தா நாடகத்துக்கு வழக்கம் போல எட்டுக்கல் மூக்குத்தி, ஆரணி புடவை சகிதம் என்.ஆர்.ஐ மாமிகள் வந்து, "திஸ் கை இஸ் டூ ஃபன்னி யூ நோ" என கமண்டுகிறார்கள். இதையே தான் புரட்சி தலைவியும் சொல்றாங்க போல. :-)
நாங்கள் சென்னையில் இருந்த ஒரு வாரமும் ஒரு மணி நேரம் கூட கரண்ட் கட்டாகவில்லை. ஆற்காட்டாருக்கு நல்ல புத்தி வந்து விட்டதா?னு ஆச்சர்யமாக பேப்பர் பாத்தா தீபாவளி முன்னிட்டு கரண்ட் கட் ஒரு வாரத்துக்கு மட்டும் இல்லையாம். அதானே பாத்தேன்.
கலர் கலரான பெயர் பலகைகள் மறைந்து நியான் விளக்குகளில் வணிக வளாகங்களின் பெயர்கள் இரவு பத்து பதினோரு மணி வரையிலும் ஒளிருகின்றன. இதை கட்டுபடுத்தினால் ஒரு வேளை நிறைய மின்சாரம் மிச்சம் ஆகுமோ?
பாருங்க, இதெல்லாம் அமைச்சர் யோசிக்க வேண்டியது, நான் யோசிச்சுட்டு இருக்கேன். என்ன செய்ய, ஏதாவது நல்லது நடக்காதா?னு மனசு கிடந்து அடிச்சுகுதே.
சென்னையில் ஒரு சில ஏரியாக்களில் மட்டும் ஜீன்ஸ் கலாசாரம் வந்தாலும், இன்னமும் ரங்கநாதன் தெருவில் இருக்கும் ஒரு கடையில் ஐந்தரை மீட்டருக்கு கட்டம் போட்ட காட்டன் சுடிதார் மெட்டிரீயல் வாங்கி ஒரு மணி நேரத்தில் பட்யாலா ஸ்டெயிலில் தைத்து ஆறரை மீட்டருக்கு துப்பட்டா வாங்கி இரண்டு பக்கமும் பின் போட்டு அணிந்து செல்கிறார்கள். வாழ்க சென்னைவாழ் மக்கள்.
பி.கு: உங்களுக்கு நேரம் இருந்தால் இங்க போய் ஈசியான ஒரு புதிருல கலந்துக்குங்க.
Thursday, October 16, 2008
அம்பி நடிக்க போகும் சினிமா
ஊர் கூடி தேர் இழுக்கும் இந்த திரை வைபவத்துல என்னையும் எழுத்து விட்ட புண்ணியவதி ராப் மற்றும் உஷாஜி அவர்களுக்கும் முதலில் நன்றி.
1) எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
தூர்தர்ஷன் வாரம் ஒரு படம் போட ஆரம்பிச்சதும்னு நினைக்கிறேன். சாந்த சக்குபாய்னு ஒரு படம், தேவர் மகன்ல ரேவதி வாய தொறந்தா வெறுங்காத்துதேங் வருது!னு சொல்வாங்க. ஆனா இந்த படத்துல நடிச்ச அந்த அம்மா வாய தொறந்தா ஒரே பாட்டா கொட்டுது. செம கொத்து கொத்திட்டாங்க. என் ஆயுசுக்கும் மறக்க மாட்டேனே!
அதுக்கப்புறம் ஆயிரத்தில் ஒருவன் படம். எம்ஜிஆர் பட்டய கிளப்பி, லவங்கத்தை லவட்டி, சோம்பை சுவைத்திருப்பார். அதுல வர ஒரு காட்சிய தெனாலில ஜோ-தேவயானி-கமல் வெச்சு செமையா கலாய்ச்சு இருப்பாங்க.
2) கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
கடைசியா தங்கமணியுடன் சென்னை சத்யத்துல பாத்த சிவாஜி. பக்கத்துல தங்கமணி இருந்ததால ஷ்ரேயாவின் உணர்ச்சி கொப்பளிக்கும் நடிப்பை வாய்/மனம் எல்லாம் திறந்து பாராட்ட முடியாத துர்பாக்கியசாலி ஆயிட்டேன். குறிப்பா வாஜி! வாஜி! பாட்டுல ஒரு கட்டத்துல வாஜிஜிஜிய்ய்ய்!னு இழுப்பாங்க பாருங்க, அதுக்கே டிக்கட் காசு சரியா போச்சு.(இன்னிக்கு செமையா இருக்கு எனக்கு). :)
3) கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
இந்த கே டிவில நைட் போடற படத்த தான் பாக்கறது. கடைசியா பாத்தது தமிழ் செல்வன். இப்ப எல்லாம் கவர்மெண்டுக்கு எதிரா மக்கள் பொங்கி எழுற மாதிரி படங்களா போட்டு தாக்கறாங்க. என்ன நுண்ணரசியல்டா சாமி! மீடியான்னா சும்மாவா? மஞ்சள் மகிமை, மானாட மயிலாடன்னு ஆடிட்டு இருந்தா டப்பா டான்ஸ் ஆடிரும்.
4) மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
(கமல் நடித்த) நாயகன், சின்ன வயசுல தென்பாண்டி சீமையிலே! கேக்கும் போது என்னையறியாமல் கண்களில் கண்ணீர் வழிந்தது. அதுக்கப்புறம் 'தாரே சமீன் பர்' படத்துல அமீர் அந்த குழந்தையின் பெற்றோரிடம் பேசிட்டு வெளிய வருவாரு, அப்ப அந்த குழந்தைய காட்டுவாங்க, பொல பொலன்னு கண்ணீர் வந்ருச்சு. சே! தங்கஸ் பாத்தா நக்கல் வுடுவாங்களேன்னு நைசா துடச்சுகிட்டு அங்க பாத்தா, அம்மணியும் கண்ண கசக்கிட்டு இருக்காங்க. என்ன கொடுமை அமீர்? :)
5a) உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - அரசியல் சம்பவம்?
இருவர். அவரு கணக்கு கேட்டதும், இவரும் பேசாம, "மாநாட்டுக்கு வந்த மன்னார்சாமி அளித்த நன்கொடை நூறுபாய்ய்ய்!"னு கணக்கு காட்டிருந்தார்னா ப்ரச்சனையே வந்ருக்காதோ? சில கேள்விகள் கேள்விகளாகவே இருப்பது தான் நல்லது. என்ன சொல்றீங்க?
5b) உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?
கஜேந்திரா!ன்னு ஆஸ்காருக்கு தேர்வாக வேண்டிய ஒரு கேப்டன் படம். அதுல போலிஸா வர ராதாரவிக்கு கஜா எப்போ கேட்டாலும் ஒரு கோடாலிய தூக்கி வீச வேண்டியது ஒன்னு தான் பொறுப்பு. ஒரு சீன்ல நடு ஏரியிலிருந்து கிட்டதட்ட ரெண்டு கிமீ இருக்கும். கஜா இந்தா பிடி!னு கரையிலிருந்து நம்ம ராதாரவி கோடலிய வீசுவாரு பாருங்க! அடடா என்ன டெக்னாலஜி? என்ன கிராபிக்ஸ்? :)
சீரியசா பதில் சொல்லனும்னா, ஆளவந்தான்ல ரெண்டு கமலுக்கும் நடக்கும் கிளைமாக்ஸ் பைட் தான். ஒரு பைப்பை வெச்சுகிட்டு நந்து கமல் ரேஞ்ச் காட்டுவாரு. எந்த ஆங்கில படத்திலிருந்து சுட்டிருந்தாலும் அத அப்படியே இங்க காட்டற திறமை வேணுமில்ல?
6) தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
ஸ்கூல் படிக்கும் போது வாரமலர்ல வர சினிமா பொன்னய்யா "இந்த காரை சொப்பன சுந்தரி வச்ருந்தாக!" போன்ற கிசுகிசு படிச்ச நியாபகம். இப்ப சுத்தமா இல்லை. ஆமா, விஷாலுக்கும் நயனுக்கும் ஏதோ கிசுகிசுவாமே! நிசமா? ஏன் தான் என் வயிதெறிச்சலை கொட்டிகாறானோ இந்த விஷால்.
7) தமிழ்ச்சினிமா இசை?
கேட்பது உண்டு. பெரிய்ய்ய ஈடுபாடுன்னு ஒன்னும் சொல்றதுக்கு இல்லை. காலை ஏதும் ஒரு பாட்டை ஹம் பண்ண ஆரம்பிச்சா நைட்டு ஜுனியரை தூங்க வைக்கற வரைக்கும் அதே லைனை பாடறது பழக்கமா போச்சு.
கோக்க கோலா ப்ரவுனு கலருடா!
என் அக்கா பொண்ணும் அதே கலருடா!னு நேத்து பாடி ஜுனியரை தூங்க வெச்சேன்.
ஒரு ஜப்பனிய மொழி படம், 1942 ல அமெரிக்க விமானம் ஜப்பான்ல குண்டு போட பறந்து போகும். அந்த விமானி பட்டனை அமுக்கறத்துக்கு ஒரு நிமிஷம் முன்னடி தான் அவருக்கு நியூயார்க்குல குழந்தை பொறந்ருக்கு!னு நடுவானத்துல போன் வரும். இந்த நொடில போய் இப்படி ஒரு கொலபாதக செயல் செய்யனுமா?னு மனபோராட்டத்துல தவிப்பாரு. ஆனா கடைசில கடமை தான் பெரிசு!னு பட்டனை அமுக்கிடுவாரு. குண்டு நேரே ஒரு ஜப்பானிய பிரசவ ஆஸ்பத்திரில போய் விழும். ஒரு சோகமான ஜப்பானிய மொழி பாடல் பேக்ரவுண்டு மியூசிக்கோட படத்தை முடிச்சுடுவாங்க.
- மேலே சொன்ன மாதிரியெல்லாம் அள்ளி விட்டு லெவல் காட்டனும்னு எனக்கு மட்டும் ஆசையில்லையா? :)
என்ன செய்ய, என் உலதரம் எல்லாம் போன வாரம் போட்ட அனகோண்டா(ஆத்தாடி, எம்மாம் பெரிய்ய பாம்பு), முந்தின வாரம் போட்ட ஸ்பைடர்மேனோட தான் இன்னும் இருக்கு.
9) தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்?
ஜென்டில்மேன் பட ஹுட்டிங்குக்கு நான் பத்தாவது படிக்கும் போது ஷங்கர் வந்தாரு.முதன் முறையா அப்ப தான் ஒரு படபிடிப்பை நேர்ல பாத்தேன். பாரதி படத்துல என் தம்பி ஒரு கேரக்டர் ரோல் செஞ்சான். மூனு நாள் படபிடிப்புக்கு மொட்டை எல்லாம் போட்டுகிட்டான். என் தூரத்து சொந்தகாரர் ஒருவர் வடபழனில துணை நடிகர் ஏஜண்டா இருக்கறதா அம்மா சொல்வாங்க. அவ்ளோ தான் நம்ம தொடர்பு.
துண்டை கக்கத்தில் வைத்து கொண்டு, "கும்படறேன் எஜமான்!" போன்ற நாலு பக்க வசனம் பேசி, நயந்தாரா கூட நடிக்க நான் தயாரா தான் இருக்கேன். ஒரு பயலும் கூப்ட மாட்டேங்கரான். இதுனால சினிமா துறை முன்னேறாதா என்ன?
10a) தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
கவலைகிடமா இருக்கு. இப்படியே பார்முலா படங்களும், "என் பின்னாடி டோட்டல் தமிழகமே இருக்கு!" போன்ற வசனங்களுமா வந்தா மக்கள் டிவிடில கூட படம் பாக்க பயப்படுவாங்க. நடக்கறத தான் காட்டுறோம்!னு சப்ப கட்டு எல்லாம் இனி செல்லாது. தமிழக டெக்னீசியன்கள் மூளகாரங்க. திரு, ரவிசந்திரன், சாபு சிரில், போன்றோரை வீணடிக்கற மாதிரி மொக்கை படங்கள் எடுக்ககூடாது.
10b) அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
ரொம்ப நல்லா இருக்கும். வாரம் மூனு பட விமர்சன பதிவுகளுக்கு பதில் கோலங்கள் அபியின் பேத்திக்கு காதுகுத்து!னு சிலர் பதிவு எழுதலாம். ஆனா துணை நடிகர்கள் எல்லாம் என்ன செய்வாங்களோ? அவங்களுக்கு எல்லாம் தினப்படி சம்பளம், பேட்டாவாமே! :(
எனக்கு தெரிஞ்சு எல்லா மக்களும் இந்த சங்கிலிய இழுத்தாச்சு.அதனால தமிழ்மண நிர்வாகிகளை இந்த டேக்கை எழுத கூப்ட்டுக்கறேன்.
பாவம்! தமிழ்மண நிர்வாகிகளை பாண்டிசேரி வாசக கண்மணிகள் கூட கூப்டலை. :)
Tuesday, October 07, 2008
நாளைக்கு ஆயுத பூஜையாம்ல
செய்யும் தொழிலே தெய்வம்!
சீனியும்,ரவையும் சேர்ந்தா அமிர்தம்!னு பெரியவங்க சும்மாவா சொல்லி இருக்காங்க.
வருசம் பூரா சைக்கிளை, வண்டியை மிதிமிதினு மிதிக்கும் நம் மக்கள் இந்த நாளில் அத பாத்து பாத்து தொடைக்கறது என்ன, சந்தனம் வைக்கறது என்ன, குங்குமம் வைக்கறது என்னனு அமர்களம் படுத்திடுவாங்க.
இந்த கூத்தில் அகப்படவனுக்கு அஷ்டமத்து சனிங்கற மாதிரி பாவப்பட்ட ரங்கமணிகள் பாடு தான் திண்டாட்டம். அந்த டிவில அப்படி என்ன தான் இருக்கோ? இங்க வந்து அந்த கிச்சனை சுத்தம் பண்ணா என்ன? அந்த பரண்ல இருக்கற சுத்தம் பண்ணா என்ன?னு மிலிட்டரி ட்ரில் தோத்திடும். பத்து மணிக்கு நமீதா பேட்டி வருது!னு உண்மைய அதுவும் ஆயுத பூஜை அன்னிக்கு சொல்ல நாம என்ன அவ்வளவு பேக்கா?
கடந்த கால வரலாறு நமக்கு கத்து குடுத்த பாடங்கள் தான் என்ன? வாங்கிய விழுபுண்கள் தான் என்ன? :)
சரி, சொல்ல வந்ததை சொல்லிடறேன்: எல்லோருக்கும் இனிய விஜய தசமி/ஆயுத பூஜை நல் வாழ்த்துக்கள்.
இது என்னோட வழிபாடு:
இது தங்கமணியின் வழிபாடு: :)
Friday, October 03, 2008
காமராஜர் ஆட்சி அமைப்போம்!
காட்சி#1: பொதுவாக நம்மூர் பிரதம மந்திரிகள் வெளிநாடுகளுக்கு சுற்றுபயணம் செய்யும் போது, தம் விமான பயணத்தில் போர் அடிக்காமல் இருக்க, "ஆமா! ஆமா! பெரியய்யா! ஆமா! ஆமா! சின்னய்யா!" என கே. எஸ். ரவிகுமார் படங்களில், கையது கட்டி, வாயது பொத்தி வரும் சில கேரக்டர்களை போல, சில பேமஸ்(?) பத்திரிகையாளர்களை தம்முடன் அழைத்து செல்வது வழக்கம். அவங்களும் ஓசில விமானத்திலும் கூட பஜ்ஜி போண்டா கிடைக்குதேன்னு பிரதமர் கிட்ட, "நீங்க பள்ளி படிக்கும் போது டாவடித்த அனுபவம் உண்டா? நாக்கு முக்க சாங்க் கேட்டாச்சா?"னு எல்லாம் மொக்கை போட்டு வருவார்கள்.
அது போல தற்போதைய பிரதமர் என அழைக்கப்படும் மன்மோகன் சிங்க்ஜியுடனும் ஒரு ஜால்ரா கோஷ்டி விமானம் ஏறி அமெரிக்கா, பிரான்ஸ்(ராப்பை பாத்தீங்களாப்பா?) சுத்தி பாத்து வந்தார்களாம். நடு வானில் நம்ம பிரதமரும் பொறுப்பா பேட்டி குடுக்கறத டிவியில காட்னாங்க. ஒரிஸ்ஸாவிலும், கர்நாடகாவிலும் நடந்த கலவரங்கள் தான் தம் வாழ்க்கையிலேயே மிகவும் வருத்தபட வைத்த நிகழ்வுகள்னு நம்மாளு ஒரு பிட்டை போட்டாரு. அப்ப பெங்களுர், ஐதரபாத், அஹமதபாத், டில்லினு பொட்டலம் பொட்டலம் வெச்சாங்களே அதெல்லாம் உப்பு பெறாத விஷயங்களா?
'பொருளாதார நிபுணர்' மன்மோகன் சிங்கை கூட அரசியல்வாதி ஆக்கிட்டாங்களே!னு முதல்வன் படத்து வசனம் தான் நினைவுக்கு வந்தது.
காட்சி#2: டில்லியில கனாட் ப்ளேஸ் என்ற முக்ய இடத்துல நீங்கள் நடந்து போகும் போது "என் குழந்தைக்கு உடம்பு சரியில்லை! என் தங்கமணிக்கு சுளுக்கு"னு அழகா வெள்ளகார துரை கணக்கா இங்கிலிபீசுல நைச்சியமா பேசி பணத்தை கறந்ருவாங்களாம். சில கொடாகொண்டர்கள், சரி வா! நானே அந்த மருந்தை வாங்கி தரேன்!னு சொல்லி மருந்தகத்துக்கு கூட்டி போனாலும், இந்த லகுடுபாண்டிகள் அசருவதில்லையாம். ஏன்னா அந்த கடைகாரர் கூட இந்த பயலுவ ஏற்கனவே ஒரு டீல் போட்ருப்பாங்களாம். சில ஏமாந்த வெள்ளகார துரைங்க ஏடிஎம்ல பணம் டிராப் பண்ணி எல்லாம் குடுத்து ஏமாந்து போயிருகாங்களாம். மேலும் தெரிஞ்சுக்க இக்கட சூடுங்க.
முத்துலட்சுமியக்கா உஷாரா இருந்துகுங்க. உங்களுக்கு இளகிய மனசு. :)
காட்சி#3: இளங்கோவன் "காமராஜர் ஆட்சி அமைப்போம்"னு உதாரா பேட்டி குடுக்கறத டிவில பாத்தேன். இதையே தங்கபாலு அணியினரும் சொல்றாங்க, ஜி.கே.வாசன் அணியும் சொல்றாங்க. (வேற ஏதாவது அணி இருந்தா (கண்டிப்பா இருக்கும்) பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.)
சத்யமூர்த்தி பவனில் உள்ள டாய்லெட்டில் காணாம போன சொம்பு(சிம்பு இல்ல) பத்தி விசாரிக்கறத்துக்கே டெல்லியிலிருந்து மேலிட பார்வையாளர் வர வேண்டி இருக்கு. இதுல என்னத்த ஜெயிச்சு? என்னத்த அமைச்சு?என்னது? சத்யமூர்த்தி பவனில் டாய்லெட்டே கிடையாதா? கிழிஞ்சது கிருஷ்ணகிரி. :)
காட்சி#4: அக்டோபர் 2 முதல் பொது இடங்களில் தம்மடிக்க தடைன்னு எங்க ஆபிஸ்ல கூட மெயில் அனுப்பினாங்க. ஏன்னா சிட்டிக்கு நடுவுல எம்ஜி ரோட்டில் தான் எங்க ஆபிஸ். அதனால ஆபிஸ்ல இருக்கற பல பிகர்கள், ஹாயா பில்டர் பிடித்து கொண்டே அமெரிக்க பொருளாதாரம் பத்தி கதையடிக்கும். இதுனாலேயே பல கடலை மகசூலில் நான் கலந்து கொள்ள முடியாத அவல நிலை இருந்து வந்தது. இனிமே.....ஹிஹி, அன்புமணி அய்யாவுக்கு நன்றி ஹை!
பொது இடம்னா இது, இது, இவங்க எல்லாம் ஃபைன் வசூலிக்கலாம்!னு சொல்லி இருக்காங்க. ரோட்ல குடிக்ககூடாது! பஸ் ஸ்டாப்புல குடிக்க கூடாதுன்னா நாங்க எங்க தான்யா குடிக்கறது? எங்களை கட்டுபடுத்த நாங்க என்ன ஆடுமாடா?னு புகை வண்டிகள் எல்லாம் போர்குரல் குடுத்து இருக்காங்க. :)
ஒரு சட்டம் போடும் போது, தெள்ளத்தெளிவாக வரைமுறைகளை வகுத்து விட வேண்டும். இல்லாட்டி இப்படித் தான் வெண்டைகாயை நறுக்கி விட்டு தண்ணீரில் கழுவின மாதிரி ஆயிடும். (ஒரு தடவை முயன்று பாருங்களேன், என் அனுபவத்தில் சொல்கிறேன்)
Tuesday, September 23, 2008
உங்களுக்கு சாருவை தெரியுமா?
ரொம்ப நாளாவே சாரு பத்தி எழுதனும்னு நினைச்சுட்டு இருந்தேன். இப்ப தான் நேரம் கிடைச்சது.
இந்த அம்பி அப்படி என்னடா சாரு பத்தி எழுத போறான்?னு உங்களுக்கு இருக்கற ஆர்வம் ரொம்ப நியாயம் தான். தப்பு!னு எல்லாம் சொல்ல மாட்டேன்.
சாதகம் பண்ணியவர்களுக்கு சாரு ஒரு கைக்குழந்தை. மத்தவர்களுக்கு ஒரு முரட்டு பிள்ளை. ஆமாம்! சாருவை கேட்பவர் அப்படியே பரவச நிலைக்கு ஆட்பட்டுவிடுவார்னு பரவலா பேச்சு இருக்கு.
எழுபத்திரெண்டு மேளகர்த்தா ராக அமைப்பில் சாரு இருபத்திஆறாவது மேளகர்த்தாவா வராரு. சாரு ஒரு சம்பூர்ணம் ராகம். எப்படின்னா ஏழு ஸ்வரங்களும்(ச ரி க ம ப த நி) சாருவில் வருது. சாருவை தழுவி வந்தவங்களை ஜன்ய ராகம்னு சொல்லுவோம். தரங்கிணி, மாரவி, பூர்வதன்யாசி, சிவமனோஹரினு ஒரு லிஸ்டே இருக்குங்க.
திரைபடங்களில் இந்த சாரு ரொம்பவே வந்து போயிருக்காரு. வரிசையா நான் பாடல்களை சொன்னா அட ஆமாம்!னு சொல்வீங்க.
1) பீமா படத்துல வர ரகசிய கனவுகள் ஜல் ஜல். இந்த பாட்டுல த்ரிஷாவ பாக்காம கண்ண மூடிட்டு கேட்டு பாருங்க, சாரு தெரிவாரு.
2) வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் பெண் புறாவே! பாட்டு நியாபகம் இருக்கா? என்ன படம் சொல்லுங்க பாப்போம்..? அதுவும் சாரு தான்.
3) ஆடல் கலையே தேவன் தந்தது! - ரஜினி நிஜமாவே நடிச்ச ராகவேந்திரா படத்திலும் சாரு தான்.
4) காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே - தம்பிக்கு எந்த ஊரு? இங்கயும் சாரு தான்.
5) ஏதோ ஏதோ - உனக்கு 18 எனக்கு 20. வேற யாரு சாரு தான்.
6) கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா?னு சாமில கேட்டதும் சாரு தான்.
பி.கு: சொல்ல மறந்துட்டேனே, எனக்கு சாருன்னா சாருகேசி ராகம் தான் நினைவுக்கு வரும். உங்களுக்கு எப்படி..?
Friday, September 12, 2008
நயன் தாராவுக்கு ஓணம் நல்வாழ்த்துக்கள்
வீட்லயும், ஆபிஸ்லயும் ஓயாத வேலை...வேலை...வேலை. சுத்தமா ஏறக்குறைய ஒரு மாசம், இந்த பக்கமே வர முடியலை. இருந்தும் சைலண்டா சில பதிவுகளை படிச்சு பின்னூட்டம் போட முடியாம இருந்து வந்தேன்.
ஓணமும் அதுவுமா ஒரு வாழ்த்து பதிவு போடலைனா ஆபிஸ்ல இருக்கற ஓமனக் குட்டி கோச்சுக்காதோ? அதான் இதோ தட்டியாச்சு.
காலைல டிபன் சாப்டற நேரத்துல தற்செயலா( நிஜ்ஜம்மா) சூர்யா டிவிய திருப்பினா யேசுதாஸ் பாட்டுக்கு சில மோகினிகளே மோகினி ஆட்டம் ஆடிக் கொண்டிருந்தார்கள். அடடா! கண் கொள்ளா காட்சி! என்ன நெளிவு சுளிவு! என்ன லாவகம்!னு என்னை மறந்து ஆட்டத்தை மட்டும் ரசித்து கொண்டிருந்த எனக்கு பக்கத்தில் தங்கமணி வந்தது கூட தெரியவில்லை.
அடடா! அவங்கள பாரேன்! ஓணம்னா கரக்ட்டா அது சம்பந்தமா தான் புரோகிராம் போடறான். நம்மூர்ல தான் பிள்ளையார் சதுர்த்திக்கு நமீதா பேட்டிய போடறான். இதை பாத்தாவது நம்மாளுங்க திருந்தனும். அப்ப தான் இத மாதிரி அரிய கலைகள் எல்லாம் அழியாம நாளைக்கு வர போற சந்ததியினருக்கு நாம தர முடியும். நீ என்ன நினைக்கிற இத பத்தி?னு ரொம்ப சீரியசா முகத்தை வெச்சுண்டு நான் கேட்டதை, ஒரு நிமிஷம் (ஒரு நிமிஷம் தான்) உண்மைனு நம்பி, பின் வழக்கம் போல இதெல்லாம் ஒரு பொழப்பு?னு புகழாரம் கிடைத்தது. எனக்கு டிபனும் செமித்தது.
கேரள சமையலில் தேங்காய் அதிகம் இருக்கும். நெல்லைகாரர்களின் சமையலிலும் அந்த தாக்கம் கண்டிப்பாக இருக்கும். அவியல், ஓலன், அடபிரதமன், பச்சடி, கிச்சடின்னு சமையல் அட்டகாசமாக இருக்கும்.
என்ன தான் அவங்க நமக்கு முல்லை பெரியாரில் தண்ணி தர மறுத்தாலும், நாம அவங்களை மதிக்க தான் செய்யரோம். அசின், கோபிகா, நயன்தாரா, பாவனா, மீரா ஜாஸ்மின், நவ்யா நாயர்னு தமிழுக்கு அவங்க ஆற்றியுள்ள சேவைகள் கொஞ்சமா நஞ்சமா? :)
பண்டிகைனாலும் பத்தாயிரத்துக்கு பட்டுபுடவை வாங்காம, சிம்பிளா சந்தன கலரில் பொன் பார்டர் போட்டு அவங்க பாரம்பரிய புடவையில கலக்குவாங்களே, அதுக்கே ஒரு ஓ! போடலாம். (கொஞ்சம் ஓவரா தான் போறேனோ?)
சரி மறுபடியும் என் ஓணம் நல் வாழ்த்துக்களை சொல்லிக்கறேன்.
Tuesday, August 19, 2008
கஷ்டமர் கேர்
நீங்க எப்பவாவது வங்கிகளின் கஷ்டமர் கேரை அணுகி இருக்கீங்களா? அப்ப தொடர்ந்து படிங்க.
என்னது அணுகியதேயில்லையா? என்னனு தெரிஞ்சுக்கனும் இல்ல, அதனால நீங்களும் தொடர்ந்து படிங்க. :)
சென்னையிலிருந்து பெங்களூர் வந்து பிறகு, அங்க இருந்த வங்கி அக்கவுண்டை தொடவேயில்லை, ஏன்னா இங்கயுள்ள கமபனி வேற ஒரு வங்கில கணக்கு தொடங்கி குடுத்துடுச்சு. ஒரு வருடம் கழிச்சு கல்யாணம் ஆகி, தங்கமணி வந்துபிறகு நிதி நிர்வாக கணக்குகள் எல்லாம் முறைப்படி ஒப்படைக்கிறப்ப தான், இந்த வங்கி கணக்கு பத்தி பேச்சு வந்தது.
சரி, அந்த கணக்கை இங்க உள்ள கிளைக்கு மாத்தி விடலாம்னு தங்க்ஸை நேர்ல கூட்டிட்டு வங்கிக்கு போயாச்சு. அம்மணியும் நானும் அவங்க குடுத்த பேப்பர்ல எல்லாம் என் வீட்டு நம்பர், தெரு பெயர், எத்தனாவது சந்து, என் பிளாக் அட்ரஸ் எல்லாம் ரொப்பி குடுத்துட்டு வந்தாச்சு. அவங்களும் பொறுப்பா உங்க புதிய அக்கவுண்ட் நம்பர் இது தான்!னு பத்து நாள் கழிச்சு கொரியர் அனுப்பிட்டாங்க.
இணைய வங்கி சேவைக்கு பாஸ்வெர்டு அனுப்புங்க!னு அதுக்கு ஒரு விண்ணப்பம் குடுக்க, அந்த பிரஹஸ்பதி அனுப்பிய பாஸ்வேர்டு வெச்சு திறந்திடு சிசேம்!னு என் அக்கவுண்டை திறக்க முடியலை. இப்ப தான் ஒரு சிக்கல். என் பழைய ATM (அழகிய தமிழ்மகன் இல்லை) கார்டு காலாவதி ஆகிடுச்சு. அத்தோடு நானும் மறந்திட்டேன், தங்கமணியும் மறந்தாச்சு (அதிசயம் தான்!).
இப்ப தீடிர்னு தங்க்ஸ்க்கு நியாபகம் வந்து, வீட்ல வெட்டியா தானே இருக்கீங்க, ஒழுங்கா அந்த வேலைய முடிங்க!னு அன்பா சொல்ல, ஓடு! அந்த பேங்குக்கு!னு போயாச்சு. அங்க இருந்த ஒரு கஷ்டமர் கேர் அம்மணியை உதவி கேட்டேன். சந்தன கீத்து எல்லாம் வெச்சு பாக்க பாவனா மாதிரி நல்லா இருந்தாங்க, ஆனா லிப்ஸ்டிக் தான் கொஞ்சம் ஓவர்! என்பதெல்லாம் இந்த பதிவுக்கு அவசியமில்லாத விஷயம். அவங்களும் போன்ல பேசுங்க!னு நம்பர் போட்டு குடுத்தாங்க. ஒன்று! ரெண்டு!னு அவ்வையார் முருகனை வரிசைபடுத்தி பாடின மாதிரி போன்ல அந்தம்மா சொன்ன எல்லா நம்பரையும் அமுக்கியாச்சு. ஒரு பயலும் அந்த பக்கம் எடுக்க மாட்டேங்கறான். அவங்களும் நம்ம மாதிரி ஆபிஸ்ல பிளாக் எழுதறாங்க போலிருக்கு.
நீயே பாரு தாயி! உங்காளுக வேலை செய்யற லட்சணத்த!னு அவங்களவிட்டே டயல் பண்ண வெச்சேன். வெண்டகாய்க்கு ஏன் லேடிஸ் பிங்கர்!னு வெள்ளகாரன் பேரு வெச்சான்?னு அப்ப தான் புரிஞ்சது. சோக்கா சொல்லி இருக்கான்யா இங்க்லீஸ்காரன். அந்த அம்மணியும் ரொம்ப நேரம் ட்ரை பண்ணி கடைசியா ஒரு ஆளை லைன்ல புடிச்சுடுச்சு. போன் இப்ப என் கைக்கு வந்தது.
எதிர்முனை, "உங்க அக்கவுண்ட் நம்பர் சொல்லுங்க பாப்போம்".
சொன்னேன்.
நீங்க பிறந்த தேதி..? (பர்த்டே கேக் அனுப்ப போறாங்களா? அட செக் பண்றாங்களாம்!)
சொன்னேன்.
கடைசியா நீங்க பண்ண ஒரு மூணு டிரான்ஸாக்ஷன் என்னனு சொல்லுங்க பாப்போம்?
கடைசியா எழுதின மூணு பதிவை கேட்டா சொல்லி இருப்பேன். இருந்தும் தட்டு தடுமாறி சொல்லிட்டேன்.
இல்லயே அம்பி! தகவல் ஓரளவு தான் கரக்ட்டா இருக்கு. சரி, கார்டு நம்பர் சொல்லுங்க.
அதுக்கு தான் கண்ணு நான் போன் பண்ணி இருக்கேன். புது கார்டு வேணும்.
அடடா! நாங்க அதெல்லாம் கவனிக்கறதில்லை. நீங்க பேங்குலயே ஒரு விண்ணப்பம் குடுங்க. வேற ஏதேனும் வேணுமா?
ஆமா! இன்னும் டிபன் சாப்டலை. ஒரு மசால் தோசை கிடைக்குமா?
எதிர்முனை சிரிப்பு சத்ததுடன் தூண்டிக்கப்பட்டது. நான் மறுபடி பாவனாவிடம் சென்று முறையிட, அடடா!னு ஒரு உச்சு கொட்டி பக்கத்து சீட்டில் இருந்த ரீமா சென்னிடம் உதவி கேட்டது. மறுபடி ஒரு விண்ணப்பம் எழுதி குடுத்தாச்சு! பத்து நாளைக்குள்ள உங்களுக்கு தபால் வரலைன்னா என் பெயரை நயன் தாரானு மாத்தி வெசுக்கறேன்னு பாவனா சூளூரைக்க, மெய் சிலிர்த்து விட்டது எனக்கு.
சொன்ன மாதிரியே நாலாவது நாளில் தபால் வந்து விட, ஐந்தாம் நாள் பாவனாவே செல்பேசி உறுதி செய்ய, நான் இருக்கறது இந்தியாவில் தானா?னு ஆச்சர்யம் தாங்க முடியலை. அக்கவுண்ட் பேலன்ஸ் செக் பண்ணினா இரு நூற்றி இருபதைந்து ரூபாய் பாவனா பேரை சொல்லி அந்த பேங்குக்கு மொய் எழுதப்பட்டு இருந்தது. அட பாவிகளா! இந்த சேவை ஓசி!னு இல்ல நான் நினைச்சேன். இப்ப கார்டு வந்தாச்சு, ஆனா இணைய சேவைக்கு பாஸ்வேர்டு வரலை.
திக்கற்றவர்க்கு பாவனாவே கதி!னு மறுபடி படையெடுக்க இந்த தடவை போன்லேயே விண்ணப்பம் பெற்று கொண்டனர். இந்த தடவையும் மொய் எழுதனுமா?னு கேக்க, இல்ல, இது இலவசம் தான்!னு அம்மணி திருவாய் மலர்தருளினாங்க.
சொல்ல மறந்துட்டேனே! இந்த தடவை லிப்ஸ்ட்க் அளவா போட்டிருந்தாங்க. :)
Saturday, August 09, 2008
பிறந்த நாள் வாழ்த்து சொல்லேலோ ரெம்பாவாய்
(picture source: www.palanitemples.com)
Friday, August 01, 2008
இப்படிக்கு பெங்களூரிலிருந்து அம்பி
பொட்டலம் பொட்டலமாக வைத்தவர்களது கொள்(ல்)கை வெற்றி பெற்றதா? என அதையும் ஈமெயில் செய்தால் நன்றாக இருந்திருக்கும். விடுமுறை முடிந்து சென்னை சென்ட்ரல் வந்தால் ஒரே களேபரம். என் மாமியார் எனக்கு கட்டி குடுத்த சப்பாத்திகளை எல்லாம் போலிஸ்காரரிடம் காட்ட வேண்டி இருந்தது. தொட்டுக்க ஒன்னும் இல்லையா?னு அவர் கேட்டு விடுவாரோ என எனக்கு பயம். அவர் பக்கத்தில் இருந்த நாய் வேறு என்னை பார்த்து சினேகமாக வால் எல்லாம் ஆட்டியது. படக்குனு சப்பாத்தி பாக்கெட்டை கவ்வின்டு ஓடிட்டா என்ன செய்வதுனு என் கவலை.
பாதுகாப்புக்கு இருந்த அத்தனை காவல்துறையினர் முகத்திலும் ஒரு வித பதட்டம் தெரிந்தது. வீரம் என்பது பயம் இல்லாத மாதிரி நடிப்பது!னு சும்மாவா சொன்னார்கள். பாவம் அவர்களுக்கும் குழந்தை குட்டி இருக்குமே! இந்த பாமை செயலிழக்க செய்யும் வீரர்களுக்கு எந்த ஒரு நிறுவனமும் இன்ஷுரன்ஸ் அளிக்க முன்வருவதில்லையாம். வருத்தப்பட வேண்டிய விஷயம்.
பெங்களூரில் மக்கள் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீள வில்லை. பஸ் ஸ்டாபில் ஒருவரை ஒருவர் சந்தேகத்துடன் பார்த்து கொள்கிறார்கள். தியேட்டர்களில் எல்லாம் ரூவாய்க்கு மூனு டிக்கட்னு கூவாத நிலை தான். மெகா மால்களில் மக்கள் செல்ல தயங்குகிறார்கள். அனேகமாக பெங்களூரில் இன்று பசுபதி நடித்த குசேலன் ரீலிஸ் செய்வார்கள் என எண்ணுகிறேன். அதுல ரஜினி கூட வந்து போயிருக்காராம். அதான் ரஜினி மாப்பு மன்னிப்பு எல்லாம் கேட்டு இருக்காரேன்னு பாத்தா, அவர் இங்கு நேர்ல வந்து மன்னிப்பு கேக்கனுமாம். இது கன்னட கண்மணிகளின் கோரிக்கை(மிரட்டல்னு கூட வாசிக்கலாம்).
இவ்வளவு நாளாக மன்னிப்பு கேட்க தோன்றாத எண்ணம் தீடிர்னு ரஜினிக்கு தோணியது ஒன்றும் ஆச்சர்யம் இல்லை. இதே போல தெரியாம குண்டு வெச்சுட்டோம்!னு எதிர்காலத்தில் அவர்களும் மன்னிப்பு கேட்கலாம். நமக்கு தான் பெரிய மனசாச்சே! கேசை ஜவ்வாக இழுத்து மன்னித்து விடுவோம். ரெண்டு வாரத்துக்கு குசேலனில் நியூட்டன் தியரி, ஐன்ஸ்டீன் தியரினு திறனாய்வு பதிவுகளும், பசுபதிக்கு பல்பு, மீனாவுக்கு அல்வா, ரஜினிக்கு ஒரு திறந்து மூடிய கடிதம்னு பதிவுகள் தமிழ்மணத்தில் வலம் வரலாம். வாழ்க இந்திய ஜன நாயகம்!
Tuesday, July 22, 2008
அமுதுக்கும் தமிழ் என்று பெயர்!
மற்ற டிவிகளை ஒப்பிடும் போது விஜய் டிவியில் பல உருப்படியான, சிந்திக்க வைக்கும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறார்கள். அனேகமாக வாரத்தில் ஒரு நாலு நாட்கள் யாராவது சோபாவில் உட்கார்ந்து கொண்டு பேசுகிறார்கள். இதை மாதிரி டாக் ஷோ நடத்த ரொம்பவே தில்லு வேணும்.
- முதலில் சரியான நிகழ்ச்சி நடத்துனர்(Anchor) வேணும்.
- மக்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் நிகழ்ச்சியை வடிவமைக்க தெரியனும்.
- மூணாவது, நல்ல ஸ்டூடியோ தளம் அமையனும். ஒரு சில டிவிகள் வாய்கால் ஓரங்களில் எல்லாம் பேட்டி எடுக்கிறார்கள். பேக்ரவுண்டில் ஒருத்தர் சொம்பை தூக்கி கொண்டு நமக்கு தரிசனம் தருகிறார்.
இல்லாட்டி பொதிகையில் ஒரு காலத்தில் வந்த செவ்வாய் கிழமை நாடகம் மாதிரி ஆகி விடும். :)
நெல்லை கண்ணனை குழு தலைவராக கொண்டு "தமிழ் எங்கள் பேச்சு!" என ஒரு நிகழ்ச்சி தினமும் இரவு பத்து மணிக்கு நடந்து வருகிறது. பல்வேறு கட்டங்களாக தமிழகத்தின் தமிழ் ஆர்வலர்களை வடிகட்டி இப்போ நிகழ்ச்சி களை கட்ட தொடங்கி விட்டது. வெகு காலத்துக்கு பிறகு இனிய தமிழை அதுவும் தனியார் டிவியில் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. நெல்லை கண்ணன் அவர்களின் ஆழ்ந்த தமிழறிவு, தங்குதடையற்ற தமிழ் பேச்சு, திருகுறளாகட்டும், அக/புற நானூறு, சிலப்பதிகாரம், என வெள்ளம் போல பாய்ந்து வருகிறது.
திரு.கண்ணன் நாவில் பாரதியும், பாவேந்தரும் ரவுண்டு கட்டி வருகிறார்கள். போட்டியில் பங்கு பெறுபவர்களும் சளைத்தவர்களாக தெரியவில்லை. கவிதை சுற்று, எதுகை மோனை சுற்று என தெள்ளமுதாய் தமிழ் பிரவாகமெடுத்து வருகிறது. ஐந்து நிமிடங்களுக்கு மேல் இப்போதெல்லாம் எந்தவொரு நிகழ்ச்சியையும் பாக்க முடியாத நிலையில், இது போன்ற நிகழ்ச்சிகள் அத்தி பூத்தாற் போல வருவது மனதுக்கு இதமாக உள்ளது.
பல புதிய தமிழ் சொற்களின் அறிமுகம் கிடைத்தது. அவர்கள் முன் இலக்கியமோ, பின் இலக்கியமோ என்னை மாதிரி பட்ஜட் பத்மநாபனுக்கும் புரியும்படி பேசினார்கள்! எனபது இங்கு குறிப்பிடத்தக்க விஷயம். அதுவும் தமிழ்மணத்துக்கு ஒவ்வாத சொற்கள் அறவே இல்லாமல் பின்னிலக்கியமும் பேசபடுகிறது. ஒரு வேளை *** தான் பின்னிலக்கியமோ? என்ற எனது மாயை விலகியது. நிகழ்ச்சியை வெகு சுவாரசியமாக சின்ன சின்ன தகவல்களுடன் நெல்லை கண்ணன் கொண்டு செல்லும் அழகே அழகு. நிறை குடம் என்றும் தளும்புவதில்லை.
விஜய் டிவியின் கிரியேட்டிவ் டீமுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். நேரம் இருந்தால் நீங்களும் கண்டு களியுங்கள்.
Friday, July 18, 2008
கோபிகாவுக்கு கல்யாணமாம்!
அம்பியவே நினைச்சுட்டு இருக்காத! என்ன புரிஞ்சதா?
டிஸ்கி: கோபிகா போலவே, எனக்கும் துக்கம் தொண்டைய அடைக்கறது. அதனால் இந்த வாரம் ஒன்னும் எழுத முடியலை.
Friday, July 11, 2008
பக்கத்து சீட்டுல பிளாகர் உட்காந்தா....-II
மெயில் எல்லாம் சரிபடாதுன்னு சாட்டுல வர சொன்னேன்.
அம்பி, நானும் ஒரு வலைப்பூ தொடங்கறத்துக்கு முன்னால சில சந்தேகங்கள் இருக்கு.
வெரிகுட், கேளுங்க ஜம்பு.
என் அனுபவத்தையெல்லாம் கூட பதிவா போடலாம் தானே?
யூ மீன் சுற்றுலா, வேலை சம்பந்தமாவா?
ஆமா! அதே தான்!
(நல்ல வேளை, நான் வேற நினைச்சேன்) ஓ! தாராளமா பதிவிடுங்க. என்ன எழுதினாலும், நீங்க ஒரு இணைய ஜர்னலிஸ்ட், அத மனசுல வெச்சுட்டு எழுதுங்க.
என்னாது இணைய ஜர்னலிஸ்ட்டா?
இத பாருங்க ஜம்பு, முதல்ல உங்கள நீங்க நம்பனும், அப்ப தான் மத்தவங்க நம்புவாங்க. சரியா? உங்களுக்கு பிடிச்ச நடிகர் யாரு?
ஜிம் கேரி.
நல்லதா போச்சு! ஜிம் கேரியின் மறுபக்கம்னு ஒரு பதிவ போட்ரலாம். மக்கள் விரும்பினா ஜிம் கேரியின் இடது பக்கம், வலது பக்கம்னு ஒரு சீரிஸ் கூட எழுதலாம்.
அட சூப்பர் ஐடியா அம்பி! இந்த சூடான இடுகைன்னா என்ன அம்பி?
அதுவா? உங்க பதிவை எத்தனை பேரு கமண்டு போடாம படிச்சுட்டு போனாங்கனு காட்டறது தான் சூடான இடுகை. இதுல வரனும்னா நீங்க ரூம் போட்டு யோசிச்சு பதிவுக்கு தலைப்பு வைக்கனும்.
அப்படியா?
ஆமா! இப்போ நீங்க சமையல் குறிப்புகளை பத்தி எழுத போறிங்கன்னு வெச்சுபோம். என்ன தலைப்பு வைப்பீங்க?
வேற என்ன, ஜம்புஸ் கிச்சன் கார்னர்!
அதான் இல்லை, சட்டிக் கதைகள் அப்படின்னு தலைப்பு வைக்கனும். நீங்க சட்டியே இல்லாம மைரோவேவ்ல கூட சமைக்கலாம். கடைசில இதே பதார்தத்தை சட்டியிலும், அதாவது வானலியிலும் சமைக்கலாம்!னு யதார்த்தமா ஒரு டிஸ்கி போட்ருங்க. இதான் டெக்குனிக்கு. புரிஞ்சதா?
இப்போ புரியுது.
வெரிகுட். உங்க இஷ்ட தெய்வம் யாரு? சிவனா? விஷ்ணுவா? இல்ல முருகனா?
ஐயப்பன்.
தப்பிச்சீங்க. ஐயப்பன் எல்லாருக்கும் வேண்டியபட்டவர் தான். சாமியே சரணம்!னு ஒரு பக்தி வலைபூ பெயரை துண்டு போட்டு வெச்சுகுங்க. பின்னாடி உதவும்.
ஓகே அம்பி, வேற ஏதாவது சந்தேகம்னா மறுபடி கேக்கறேன்!னு சொல்லிட்டு ஜம்பு எஸ்கேப் ஆயிட்டார். உங்களுக்கும் ஏதாவது யோசனை தோணிச்சுனா சொல்லுங்களேன், பாவம் ஜம்புவுக்கு உதவியா இருக்கும்.
Wednesday, July 09, 2008
வங்கி தேர்வு - நடந்தது என்ன?
80-90களில் வங்கியில் வேலை செய்வது என்பது பலருக்கு ஒரு லட்சிய கனவாகவே இருந்தது. பிஎஸ்ஆர்பி(BSRB) என்ற வார்த்தை மந்திரம் போல உச்சரிக்கப்பட்ட காலம் அது. அந்த போட்டி தேர்வுக்கு ஏதோ அலங்க நல்லூர் ஜல்லிகட்டுக்கு காளையை தயார் செய்வது போல சிலர் பத்தாவதில் இருந்தே தம் மக்களை தயார் செய்தவர்களும் உண்டு.
கணக்கில் ஆழ்ந்த அறிவு, நுண்ணிய லாஜிக்கல் அறிவு, ஊறுகாய் போல கொஞ்சம் ஆங்கில அறிவு இருந்தால் ஞான பழம் எனக்குத் தான்!னு சொல்லி விடலாம். கணக்குனா சும்மா எட்டில் ஐந்து போனால் மிச்சம் எவ்வளவு? ரகம் இல்லை.
நான் குறிப்பிட்ட எட்டு, ஐந்து என்பதை வெறும் நம்பர்கள் என நினைவில் கொள்க.
1) சென்னையிலிருந்தும், மதுரையிலிருந்தும் இரண்டு வேறு ரயில்கள் மணிக்கு முறையே 50, 40 கிமீ வேகத்தில் வந்தால் அவை இரண்டும் எங்கு சந்தித்து கொள்ளும்? - இது ஒரு வகை.
2) ரமா, ஸ்வேதா, ரம்யா, அக்ஷிதா, ஷாலினி ஆகிய ஐந்து பேரும் வட்டமாக உக்காந்து கேசரி சாப்பிட்டால், ரமாவுக்கு பக்கத்தில் ரம்யா இல்லை, ஷாலினிக்கு பக்கத்தில் ஸ்வேதா தான் இருக்கா, அக்ஷிதாவுக்கு கேசரி பிடிக்காது, அப்போ அம்பி யாரு பக்கத்துல உக்காந்து இருப்பான்? - இது லாஜிக்கல் ரீஸனிங்கில் ஒரு வகை.
3) ரூம் போட்டு யோசித்து ஐந்தாண்டு திட்டத்தை நேரு தீட்டியதால் இந்தியாவுக்கு விளைந்த நன்மைகளை பத்தி ஒரே பீட்டரா எடுத்து விடு - இது ஆங்கில அறிவை சோதிக்க ஒரு வழிமுறை.
இதற்கென ப்ரத்யேக வகுப்புகள் எல்லாம் அனல் பறக்கும் பயிற்சிகள் அளித்து வந்தன. கேள்விக்கான விடைகள் ஏ/பி/சி/டி தான் (டிபிசிடி இல்லை). எங்க ஊரில் இவ்வகை வகுப்பு ஒன்று ரொம்பவே பிரசித்தம். நெல்லை மாவட்டத்திலேயே எங்க ஊரில் உள்ள அந்த குறிப்பிட்ட வகுப்பில் பயிற்சி எடுக்கவென்றே பலர் தங்கி படித்த காலங்களும் உண்டு. உங்க ஆட்கள் கொஸ்டின் பேப்பரை லவட்டி விடுவீர்களோ? என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை. எல்லாம் திட்டமிட்ட பயிற்சிகள் தான்.
இவ்வகை தேர்வு மையங்கள் பெரும்பாலும் பெரு நகரத்தில் உள்ள கல்லூரிகளாக தான் இருக்கும். பையங்கள் எல்லாம் ஏதோ ஜாலி டூர் போவது போல போவார்கள். பெண்கள் தேர்வு எழுத கிளம்பினால், உஜாலா சொட்டு நீலம் போட்டு வெளுத்த வேட்டியும், முழங்கை வரை மடித்து விட்ட வெள்ளை சட்டையுடன் அப்பாவோ, தம்பியோ (வெட்டியாக இருக்கும் பட்சத்தில்) முந்தைய நாளே மஞ்சபையுடன் கூடவே கிளம்பி விடுவார்கள்.
முப்பிடாத்தி அம்மன் கோவில் குங்குமம், அதற்கு மேல் திருனீறு, பின் ஒரு சாந்து பொட்டு, அதற்க்கு மேல் வீட்டின் பெரியவர்கள் யாரேனும் இட்டு விட்ட வெற்றி திலகம் சகிதமாக தேர்வு மையத்துக்கு ஒரு ஸ்பெஷல் எபக்டோடு வருவார்கள்.
வாம்மா மின்னல்! இது எத்தனையாவது படையெடுப்பு?னு ஏதேனும் ஒரு பையன் சவுண்டு விட்டா, பதிலுக்கு வெள்ளை வேட்டி விடும் சவுண்டுக்கு ஏரியாவே அதகளபடும். தப்பிச்சோம்! பிழைச்சோம்!னு அந்த பையன் எக்ஸாம் எழுதாமலேயே எஸ்ஸாகி விடுவான்.
சும்மா ஆசைக்கு ஒரு தரம் நானும் தேர்வுக்கு போய் நட்ராஜ் பென்சிலால் கொஸ்டின் பேப்பரில் ஷேடு அடித்து விட்டு வந்தேன். நல்ல வேளை தேர்வாகவில்லை, பேங்குல உக்காந்து பிளாக் எல்லாம் எழுத/படிக்க முடியுமோ?
இனிமே இவ்வகை தேர்வுகளுக்கு ஹால் டிக்கட்டுடன் பணம் கட்டிய ரசீது, ரசீது தந்த காஷியரின் பெயர், முகவரி, அவருக்கு எத்தனை குழந்தைகள்? போன்ற விபரங்களும் தெரிந்து கொண்டு போகனும் போலிருக்கு. அமெரிக்காவில் இருக்கும் வங்கிகளுக்கு பாங்கிங் சாப்ட்வேர் எழுத தெரிந்த நம்மால், நிஜமான சமீபத்தில் (போன வாரம் தான்) இங்கு ஒரு வங்கி தேர்வை கணினிமயமாக்க முடியலை என எண்ணும் போது சிலபல தெலுங்கு பட டைடில்கள் எல்லாம் வாய்க்கு வருகிறது.
Friday, July 04, 2008
எதிரொலி
உடனே வாசகர்கள் கிரேன் ஷாட், காமிரா ஆங்கிள் எல்லாம் யோசித்து பார்க்க வேண்டாம்.
திங்கள் கிழமைன்னா எல்லா மொழி பாடல்களும் வரும் தமிழ்மணம் போன்ற சித்ரஹார், செவ்வாய்னா ஒரு ரூம் செட்டுக்குள்ளேயே மொத்த கதையையும் நகர்த்தும் குடும்ப நாடகம், புதனும் வியாழனும் சில மொக்கை பேட்டிகள், வெள்ளி கிழமைன்னா ஒளியும் ஒலியும், சனி கிழமைன்னா ஸ்லீவ்லஸ் ஸ்வட்டர் போட்ட ராஜேஷ் கண்ணாவும், பன் கொண்டை போட்ட ஷர்மிளா டாகூரும் தள்ளி தள்ளி நின்னு டூயட் பாடும் ஹிந்தி படம், ஞாயிறுன்னா காலையில் ரங்கோலி, பின் ராமாயணம், சாயந்திரம் மனாளனே மங்கையின் பாக்கியம் என்ற புத்தம் புதிய திரைபடம் என மக்களை மெய்மறக்க வைத்து இருந்தது தூர்தர்ஷன்.
இதுல வியாழ கிழமைன்னு நினைக்கிறேன், ஒரு வார நிகழ்ச்சிகளை சில வாசக கண்மணிகள், விமர்சனம் என்ற பெயரில் டெம்ளேட் கடிதங்கள் போடுவார்கள். அந்த நிகழ்ச்சிக்கு பேர் எதிரொலி. காமடி நிகழ்ச்சி இல்லாத குறையை இந்த நிகழ்ச்சி போக்கி கொண்டிருந்தது என சொல்லலாம்.
அந்த நிகழ்ச்சிக்குன்னே பாலசந்தர் ப்ரேம் போட்ட கண்ணாடி அணிந்த ஒருத்தர் தான் பதில் சொல்ல வருவார். நியூஸ் படிக்க செலக்ட் செய்யாமல், இந்த எதிரொலிக்கு கடிதம் படிக்க ஒரு அம்மணியை அனுப்பி இருப்பார்கள். ஏன்னா அப்ப ஷோபனா ரவியின் புடவை டிஸைனுக்கு தான் மவுசு.
பெரும்பாலும் எதிரொலிக்கு வரும் கடிதங்கள் எல்லாம் ஜிங்ஜக்காக தான் இருக்கும்.
உதாரணமாக, போன வாரம் செவ்வாய் இரவு 7 மணிக்கு வயலும் வாழ்வும் நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அந்த நிகழ்ச்சியில் இயற்கை உரம் பற்றி எடுத்துரைத்த நபர் சட்டை கூட போட நேரமில்லாமல் உள்பனியனோடு வந்திருந்தது நெஞ்சை நெகிழ செய்தது! என்று விழுப்புரத்திலிருந்து வீராச்சாமி என்ற நேயர் எழுதியுள்ளார்!னு அந்தம்மா ஒரு பிட்டை போடுவாங்க.
உடனே நம்மாளு ஒரு தெய்வீக சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டு, அடுத்த தடவை அவரை சட்டை போட்டு பேட்டி குடுக்க செய்கிறேன் அப்படின்னு சமாளிப்பார்.
ஏன் செவ்வாய்கிழமை நாடகங்களை ஒரே ரூமில் எடுக்கறீங்க?னு ஜாம்பஜார்லேருந்து ஜக்கு என்ற வாசகர் கேட்டு இருக்கார்.
இது ஒரு நல்ல கேள்வி. இப்ப குடும்ப விஷயங்கள்னா அது நாலு சுவத்துகுள்ள தான் இருக்கனும் என்பதை தான் அந்த நாடகத்தின் இயக்குனர் சிம்பாலிக்கா சொல்லி இருக்கார்.
ஜாம்பஜார்ல தக்காளி ரொம்ப சீப்பா கிடைக்குமாமே! தக்காளி தொக்கு போட்டா இட்லிக்கும், தயிர் சாததுக்கும் செம காம்பினேஷன் மிஸ்டர் ஜக்கு! அப்படினு ஒரே போடா போடுவார் நம்மாளு.
இப்ப இந்த நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருக்கும் ஜக்கு, கேள்வியை விட்டுவிட்டு தக்காளி வாங்கி தொக்கு போட ஆரம்பிச்சுடுவார்.
டிஸ்கி: தமிழ்மணத்துல சில கேள்வி பதிவுகளை படித்து விட்டு பின் அதுக்கு பதில்களையும், பதிலுக்கு பதிலையும், பதிவா படிக்கும் போது இந்த எதிரொலி நிகழ்ச்சி எனக்கு நியாபகத்துக்கு வரவில்லைன்னு சொல்லிக்கறேன். :))
Wednesday, July 02, 2008
புலம் பெயர்ந்த NRI
சென்னைக்கும் பெங்களூருக்கும் நான் சீசன் டிக்கட் எடுத்து வைத்திருப்பதால் தான் லாலுவால் துண்டு விழாமல் ரயில்வே பட்ஜெட் போட முடிகிறது என இப்பதிவை ஆரம்பித்தால் இதுவும் பட்டர்பிளை எபக்ட் தான் என பின்னூட்டம் விழற வாய்ப்புக்கள் பிரகாசமாக இருக்கிறபடியால் நேரே மேட்டருக்கு வருகிறேன். (மேட்டர் என்றால் விஷயம் என இங்கு பொருள் கொள்ளவும், என்ன செய்ய? தமிழ்மண நிலமை அப்படி)
உலக தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக திரைக்கே வராத ஏதோ ஒரு படம் ஓடிகொண்டிருக்கும் ஒரு இனிய மாலை வேளையில் தங்கமணியின் அப்பாவழி பாட்டியோட தம்பி பையன் டெக்சாஸிலிருந்து தம்பதி சமேதராக எங்களுக்கு காட்சி குடுக்க விழைகிறார் என தொலைபேசி செய்தி கேட்டு, நான் அவருக்கு என்ன முறை?னு யோசிக்கும்முன்னரே எங்கள் தெருவுக்கு எப்படி வரனும் என்று மறுபடி போன் கால்.
இந்த இடத்தில் தங்க்ஸின் ஏரியா பத்தி ஒரு சிறுகுறிப்பு. ஆட்டோ பிடிக்கவே ஆட்டோல தான் போகனும். மதுரை மீனாட்சி கோவிலில் கூட தெற்கு கோபுரம் வழியா நுழைஞ்சு, வடக்கு கோபுரம் வழியா வெளிய வந்து சிம்மக்கல் பஸ் ஸ்டாப்புக்கு வந்து சேர்ந்து விடலாம். ஆனால் இந்த ஏரியாவில் எந்த தெருவில் நுழைஞ்சு எந்த பக்கம் வந்தாலும் மறுபடி அதே தெருவுக்கு வந்து விடுவோம். ஒரு பிரபல பதிவர் கூட இதே ஏரியா தான்! என்ற க்ளூவுடன் இந்த இடத்தில் நிறுத்தி கொள்கிறேன்.(இதுக்கே இருக்கு எனக்கு மண்டகபடி).
ஒரு வழியாக அந்த குடும்பம் எங்கள் தெரு முக்கு வரைக்கும் வந்து விட்டது. நேர வர வேண்டியது தானே? மறுபடி ஏதோ குழப்பம் ஆகி, சத்யமா முடியலை!னு மறுபடி ஒரு போன். சரின்னு என் மாமனாரே எதிர் கொண்டு அழைத்து வந்து சேர்ந்தார்.
சரி பாவம்!னு ஆளுக்கு ஒரு சொம்பு தண்ணி காட்டினோம். அவங்க வீட்டு அம்மணி உடனே இது பாயில்டு வாட்டரா?னு புருவத்தை நெளித்தார்.
அக்குவா கார்டு வாட்டர்னு பதில் வந்த பிறகும் பல்ராம் நாயுடு பைனாக்குலரில் பாப்பது போல ஒரு லுக் விட்டுவிட்டு குடித்தார். பரஸ்பர ஷேம உபயஷேமம் எல்லாம் விசாரித்து கொண்டோம்.
அந்த டெக்சாஸ் பார்ட்டி என்ன பேசினாலும் தமிழிலும், பின் அதையே ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்து மேஜர் சுந்தர் ராஜன் பேசுவது போல பேசினார்.
"நைஸ் மீட்டிங்க் யூ! உங்கள பாத்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம். "
"எங்க வேலை பாக்கறீங்க? வேர் ஆர் யூ வேர்க்கிங்க்?"
என்னடா நம்மள வெச்சு காமடி கீமடி எதுவும் பண்றாங்களா?னு எனக்கு முதலில் சின்ன டவுட்டு. சரி இவங்க வழியிலேயே போவோம்!னு நானும் மே.சு.ரா பாஷையில் ஆரம்பித்து விட்டேன்.
"இப்ப உங்களுக்கு லீவா? ஆர் யூ இன் ஹாலிடே?"
"யெஸ்! ஆமா".
ஆஹா! அவனா நீயி? சரி, ஒரு வழி பண்ணிடறேன்னு தொடர்ந்து போட்டு தாக்க, சிரிப்பை அடக்க முடியாமல் தங்கமணி உள் அறைக்கு ஓடி விட்டார்.
அப்படி இருந்தும் அந்த டெக்சாஸ் அம்மணி விடாமல் என் தங்க்ஸ் பின்னாடியே போய் அமெரிக்கா தல புராணம் பாட ஆரம்பித்து விட்டார். தல புராணம் என்றால் அஜித் வாழ்க்கை வரலாறு இல்லைனு இங்க சொல்லிக்க கடமை பட்டுள்ளேன்.
அங்க வீட்டுகுழாயை திறந்தா பாலும் தேனுமா வரும். இந்தியன் ஸ்டோர்ஸ்ல எல்லாம் கிடைக்கும்னு அம்மணியின் பில்டப் ஓவரா போகவே, தங்கமணியை காப்பாற்ற, "கேசரி பவுடர் கிடைக்குமா அங்கே?னு நானும் கேட்டு விட்டேன்.
அவரின் மூத்த பெண் பரத நாட்டியம் கற்று வருவதாய் டெக்சாஸ் அம்மணி அபிநயம் பிடித்து காண்பிக்க, தில்லானா வந்தாச்சா? இல்ல பதங்களா?னு நானும் அபிநயத்துலேயே கேட்டு விட்டேன். அடுத்த வருடம் அரங்கேற்றமாம்.
மறக்காம போட்டோ எடுத்து அனுப்புங்க!னு என் தங்கமணியும் அபிநயம் புடிக்க, என்னடா இது? ரெண்டாயிரம், மூவாயிரம்! மாமா பிஸ்கோத்து! ரேஞ்சுக்கு நிலைமை மாறுதேனு எனக்கு சிரிப்பு ஒரு பக்கம், கவலை ஒரு பக்கம் வந்துடிச்சி.
கண்டிப்பா ஈமெயிலில் அனுப்புறோம்!னு தட்டச்சு சைகை செய்தபடியே டெக்சாஸ் பார்ட்டி விடை பெற்றது.
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும். இந்தியாவுல இருக்கற எங்களுக்கு தமிழ் தெரியாதுனு அவங்க நெனச்சாங்களா, இல்ல அவங்களுக்கு தமிழ் மறந்து போச்சா?
பி.கு: கடைசியில் ஈமெயில் முகவரி அவங்களும் வாங்கிக்கவே இல்லை, நாங்களும் குடுக்கலை.
Monday, June 30, 2008
பக்கத்து சீட்டுல பிளாகர் உக்காந்தா...
போன முறை மைசூர் காவிரி எக்ஸ்பிரஸில் பூஜா விளைவால் கடுப்பான தங்கமணி, இந்த முறை புத்திசாலிதனமாய் செய்வதாய் நினைத்து, கவுஹாத்தி எக்ஸ்பிரஸில் எனக்கு டிக்கட் புக் செய்து இருந்தபடியால் அடியேன் ராமானுஜ தாசன் (மன்னிக்கவும், தமிழ்மணத்துல நிறையா விமர்சனம் படிச்ச விளைவு) ரயில் நிலையத்துக்கு போய் சேர்ந்தேன். என் ரயில் தவிர எல்லா ரயிலும் எந்த பிளாட்பாரத்தில் வரும்?னு அறிவிப்பு வருகிறது. சரினு கவுண்டரிடம் (சாதி பெயர் இல்லீங்கண்ணா) கேட்டால் கவுஹாத்தி கேன்சலாகி விட்டதே!னு ரெம்ப சந்தோஷமா சொல்றார். வட மாநிலத்தில் பலத்த மழையால் ஒரு வாரமாகவே அந்த ரயில் எல்லாம் ரத்தாம். அப்புறம், ஒரு பேருந்தில் இடம் பிடித்து அருகில் அமர்ந்திருந்த ஒருவரிடம் என் சோக கதையை சொல்ல வேண்டியதா போச்சு.
நீங்க பேப்பர் எல்லாம் படிக்கறதில்லையா? பக்கத்தில் அமர்ந்த பாவத்துக்கு துக்கம் விசாரித்தார்.
இல்லீங்க, நான் பிளாக் தான் படிக்கறது.
அவர் ஒரு நொடி ஙேனு முழித்துவிட்டு, அதுல கூடவா இந்த செய்தியெல்லாம் வரதில்லை?
அதுல இதெல்லாம் வராதுங்க. ஒரு வேளை "ஒரு தன்மான தமிழனை ஊருக்கு போக விடாமல் வடைமொழி மாநிலத்தவர் செய்த சதி!"னு நான் பதிவு போட்டா தான் உண்டு.
என்னை ஒரு ரேஞ்சாக பாத்துவிட்டு, நீங்க மாவோயிஸ்ட்டா? இல்ல கம்யூனிஸ்ட்டா? ஒரு ரேஞ்சா பேசறீங்க. இப்படிதான் பிளாக்குல வருமா?
அய்யா சாமி, நான் ரிசப்ஷ்னிஸ்ட் கூட இல்லை. நான் சும்மா ஒரு சாம்பிளுக்கு சொன்னேன், இதவிட பலபல மேட்டர்கள் எல்லாம் வெளிவரும்.
உதாரணத்துக்கு சிலது சொல்லுங்களேன்! மனுசன் லேசுலுல விடுவதாயில்லை.
உலத்தரத்துல எப்படி படம் எடுக்கனும்?னு கமலுக்கு ஒரு மூடிய கடிதம் போடுவாங்க. ஜூராஸிக் பார்க்குக்கும் தசாவதாரத்துக்கும் பத்து வித்யாசங்கள் காட்டுவாங்க. ஜலஜாவின் ஜல்சா கதைகள்னு ஒரு தொடரை ரீலீஸ் பண்ணுவாங்க. முன்/பின்/ நடு இலக்கியமெல்லாம் படைப்பாங்க.
கொஞ்சம் இருங்க, அது என்னங்க பின்னிலக்கியம்? நான் கேள்விபட்டதேயில்லையே?
அடடா இது தெரியாதா? விசித்திரன் (இதுல பெயர் இப்படி தான் வைக்கனும்) வீட்டின் பின்கதவை திறந்து பார்த்தான் அப்படினு சொல்ல வரதையே, உடலுக்கு ஒன்பது வாசலில் கண், மூக்கு, காது வாய் துவாரங்களை போல சமூகத்தில் அங்கீகாரம் பெற்றவை தவிர்த்து, விளிம்பு நிலை மனிதர்களை போல அதிகம் கண்டுகொள்ளபடாமல், ஆனால் தவிர்க்கவே முடியாத மீதி துவாரங்கள் போல இருக்கும் வீட்டின் பின்கதவை, இந்தியா சமீபத்தில் 1990களில் உலகமயமாக்கலுக்காக தனது வெளி நாட்டு கொள்கைகளை அமெரிக்க/ஐரோப்பிய ஏகாதிபத்தியத்துக்கு திறந்து விட்டது போல விசித்திரன் திறந்து பார்த்தான். இது பின்னிலக்கியம். புரிஞ்சதோ?
பாவம்! கேட்டவருக்கு கொஞ்சம் கண்ண கட்டி இருக்கும் போல. ஒரு மடக்கு தண்ணிய குடித்து கொண்டார்.
இப்படி எழுதினா யாரு படிப்பாங்க? நம்ம எழுதினதை மத்தவங்க படிச்சாங்களா இல்லையா?னு எப்படி தெரிஞ்சுக்கறது?
என்ன இப்படி கேட்டுடீங்க? நாங்களும் பதிவை படிச்சோம்னு சொல்ற விதமா "அவ்வ்வ்வ்" "ரீப்பீட்டேய்ய்ய்" "நல்ல பதிவு", :))னு எல்லாம் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பாங்க.
அட, இது நல்லா இருக்கே! நீங்க சொல்றத கேட்டதும் எனக்கும் ஒரு பிளாக் ஆரம்பிக்கனும்னு ஆசையா இருக்கு.
அதுகென்ன? காசா பணமா? கூகிள்காரன் சும்மா தரான். ஊருக்கு போனதும் ஆரம்பிச்சுடுங்க, சரியா?
சரிங்க, சாரி, கேக்க மறந்துட்டேன், உங்க பேரு?
அடியேன் நம்பி! சாரி அம்பி, ஆமா உங்க பேரு?
லிங்கம், ஜம்புலிங்கம்...
Wednesday, June 25, 2008
தகப்பஞ்சாமி
When the student is ready, the master appears - Buddhist Proverb.
இன்றைய சூழலில் பிள்ளைகள் மட்டுமல்ல, பெற்றோரும் செல்பேசி, கணிணி, ஈமெயில் அறிவு பெற்றவர்களாக இருப்பது காலத்தின் கட்டாயமாகி உள்ளது. இப்பொழுது வரும் செல்போன்கள் எல்லாம் பாக்க அழகா பாவனா மாதிரி இருக்கு. ஆனா கீபேடுகள் அவ்ளோ சுலபமா இருப்பதில்லை. அதிலும் நேரு காலத்து ட்ரிங்க் ட்ரிங்கையே உபயோகித்து வந்தவர்களுக்கு தீடீர்னு இப்படி உள்ளங்கையில் உலகம் வந்தவுடன் சிறிது தயக்கம், நாம ஏதும் அமுக்கி, ஏதும் ரிப்பேர் ஆனா பையனுக்கு வேற தண்டச் செலவு என்ற பெற்றோருக்கே உரித்தான பயம். செல்போனுக்கே இப்படினா கணிணி இன்னும் மோசம்.
அம்மா! இங்க பாரு, இது தான் இன்டர் நெட் எக்ஸ்ப்ளோரர், இது வழியா தான் மெயில் அனுப்ப முடியும், என நம் வழக்கமான மேதாவிதனத்தை காண்பித்தால் பெற்றோர் முகத்தில் தயக்கம், மலைப்பு என எல்லாம் ஒன்று சேர்ந்து விடுகிறது.
அப்புறம் நாம் புரிந்து கொண்டு சுலபமான வார்த்தைகளை போட்டு சொல்லி குடுத்தால் கற்று கொள்ளும் ஆர்வம் கண்ணில் மின்னுகிறது. இருந்தும் இந்த வயதில் கத்துக்க முடியுமா? இதெல்லாம் சாத்தியமா? என நியாயமான கவலைகள். ஆனாலும் பிள்ளைகளின், பேரன்களின் ஓட்டத்துக்கு ஈடு குடுக்கனுமே? என்ற பரபரப்பு.
நினைத்து பார்க்கிறேன், நான் வார்த்தைகளை கூட்டி கூட்டி பேச ஆரம்பித்த புதிதில் இந்த 'க' எனக்கு வராது. எனவே தக்காளியெல்லாம் தத்தாளி தான். கத்ரிக்காய் எல்லாம் தத்தரிதாய் ஆனது. ஆங்கில எழுத்தில் 'சி' எனக்கு மட்டும் வலது பக்கமாக வரும் அரைவட்டம்(தாரே சமீன் பர்?). ஆனாலும் பொறுமையாக எனக்கு பயிற்சி அளித்து, திருத்திய அவர்களின் பொறுமையில் தசாம்சமாவது (அய்யோ! படம் இல்லீங்கணா! பத்தில் ஒரு பங்குனு சொல்ல வந்தேன்) எனக்கு வாய்க்காதா என்ன?
நம்மிடையே வலையில் உலா வரும் பல அம்மாக்களின்/பாட்டிகளின் முயற்சிகளை நினைத்து பிரமிக்கிறேன். செளகார் ஜானகி, காரைக்கால் அம்மையார் என எத்தனை காரண பெயர்களுடன்(பட்ட பெயர்களுடன்) வலையுலா வந்து, பின்னூட்டமிட்டு, சமையல் குறிப்பு எழுதி, ஊர் உலகமெல்லாம் நமக்கு சுத்தி காட்டி, கதை சொல்லி, படம் காட்டி, தாலேலோ பாடி, நம் இல்ல விழாக்களில் முடிந்தால் நேரிலோ, மெயில் மூலமாகவோ வந்து வாழ்த்தி, ஹிஹி, மொய்யெழுதி, கால ஓட்டத்தில் கரைந்து விடாமல் நாணலாய் வளைந்து, தம் மக்கள் நின்றால் குடையாக, அமர்ந்தால் சிம்மாசனமாக வலம் வரும் எல்லா பெற்றோருக்கும் இந்த பதிவு சமர்ப்பணம். :)
Friday, June 13, 2008
அம்பியின் பார்வையில் தசாவதாரம்
சரி, வளவளனு பேசாம படத்துக்கு போகலாம். கதை என்னவோ குழந்தையிலிருந்தே கேட்டு வளர்ந்த கதை தான். கெட்டது செய்தா, உம்மாச்சி ஏதாவது ஒரு ரூபத்தில் வந்து நம் கண்ணை குத்துவார். ஆனா அதை படமாக்கிய விதம், அதான் திரைகதைனு சொல்லிக்கறாங்களே அங்க தான் நிக்கறார் டைரக்டர்.
மாயாஜால கதைகள், காட்சிகள்னா எனக்கு உசுரு. மாயா பஜார் படத்துல ரங்காராவ் வாயில லபக்குனு லட்டு போறதையே கண் கொட்டாம பாத்தவனாக்கும். விட்லாச்சாரியார்னு ஒருத்தர் (நம்ம கீதா பாட்டிக்கு சம காலத்தவர் தான்) இதுல கிங்க்னு கேள்வி. தந்திர காட்சிகள்னா கூப்டுடா விட்டலை!னு சொன்ன காலம் போய் நம்ம ஆட்களே சும்மா பின்னி பெடலெடுத்து இருக்காங்க. அதுலயும், அந்த கடலுக்கடியில் தண்ணிக்கு உள்ளே விஷ்ணு வர ஷாட் இருக்கே! அடடா! ரொம்ப ப்ரமாதம்.
படத்தின் கதை யுகங்கள் கடந்து சென்றாலும் திரைகதையில ஏகப்பட்ட நெளிவு சுளிவுகள் இருந்தாலும் ஒன்னு கூட சிக்கல் இல்லாம இருந்து இருக்கு. குறிப்பிட்டு சொல்லனும்னா, ஒரே காட்சியில் இரண்டு அவதாரங்கள் சந்தித்து கொள்கின்றன. ஆனாலும் நாம எப்படி ஜாங்கிரி வேற, ஜிலேபி வேறனு தெளிவா இருக்கோமோ, அதே மாதிரி, இவர் வேற, அவர் வேற!னு எந்த வித குழப்பங்களும் ஏற்படவில்லை.
கதையில் பல திடிக்கிடும் திருப்பங்கள் சுவையா இருக்கு. உயிருக்கே மிரட்டல் வருகிற நிலையில் கூட அவர் வாயிலிருந்து "ஓம் நமோ நாராயணாய!" என ஆரம்பிக்கற போது நம்மை சீட் நுனிக்கே வர செய்கிறது. படத்தில் ஆக்ரோஷமான சண்டை காட்சிகள் மெய் சிலிர்க்க வைத்து, கன்னத்தில் போட்டு கொள்ள வைக்கின்றன. அதிலும் தூணை பிளந்து கொண்டு கர்ஜித்து வருகிற காட்சி இருக்கே! கிளாசிக்.
கேமிரா எடுத்தவர் கைக்கு தங்கத் தோடா செஞ்சு போடலாம், தப்பேயில்லை. மேக்கப்மேன் சில இடங்களில் சொதப்பி விட்டாரோனு தோணுது. ஆனாலும் இந்த ராமருக்கும், கிருஷ்ணருக்கும் இப்படி அனியாயத்துக்கு பெயிண்டை வேஸ்ட் பண்ணி இருக்க வேண்டாம். அந்த செலவில் பாமாவுக்கும், சீதைக்கும் கொஞ்சம் டச்சப் செய்து இருக்கலாம். ஹிரண்யகசிபுவுக்கு வேறு நல்ல விக் குடுத்து இருக்கலாம். பழைய விக் போல, பேன் வேற இருந்து இருக்கும் போல. தலையை சொறிய முடியாத எரிச்சலோடு வசனங்களை பேசுகிறார்.
பாட்டெல்லாம் ரொம்பவே இனிமையா இருக்கு தான்.அதுக்காக உச்சா போறத்துக்கு கூட இடைவேளை விடாம, இந்த பிரகலாதன் ரொம்பவே பாடி இருக்க வேணாம். எழுந்து போனால் கதையின் கன்டினியுட்டி போயிடுமேனு அடக்கிண்டே இருக்க வேண்டியதா போச்சு.
சரி, நீங்க பல்ல கடிக்கறது எனக்கே கேக்கறது, இதோட நிறுத்திக்கறேன். பின்ன என்னங்க, நான் இல்லாம நீங்க மட்டும் தசாவதாரம் ரீலீஸ் அன்னிக்கு என்னைய விட்டுட்டு பாத்தா, ஜுனியர் போன உச்சாவை/கக்காவை உங்க வெள்ளை சட்டையால் தொடைப்பேன்னு மிரட்டல் விடுத்து இருக்காங்க தங்கமணி. அந்த கடுப்புல எழுதின பதிவு இது.