Thursday, April 27, 2006

ஒரு சொல் கேளீர்...!



ஏப்ரல் 30 2006 - அக்க்ஷ்ய த்ரிதியை. சித்திரை மாதம் அமாவசைக்கு 3ம் நாள் தான் அக்க்ஷ்ய த்ரிதியை. மிகவும் சுபமான நாள்.

இதை பற்றி யஜுர் வேதத்தில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நாளில் செய்யும் தானம், தர்மங்கள் 7 பிறவிக்கு தொடரும். ஸ்வர்ண தானம் மிக உயர்ந்தது. வெள்ளி, பசு, தயிர், பால், இதுவும் தானம் அளிக்கலாம்.

எல்லாம் சரி. ஆனால் இன்று, இதை வேறு மாதிரி மாற்றி விட்டனர் நமது மக்கள்.

இந்த நாளில் 1 கிராமாவது தங்கம் வாங்கி தமது பீரோவில் வைத்தால், அந்த வருடம் முழுக்க கூரையை பிச்சுண்டு கொட்டும்னு எவனோ விட்ட பீலாவை நம்பி, நம்ம மக்கள், பனகல் பார்கில் பைத்தியமா திரியரா.

இந்த ஒரே நாளில் மட்டும் 400 டன் தங்கம் விற்பனை ஆகும்னு கணக்கிடப்பட்டுள்ளது. இது குறைந்த பட்ச அளவு தான்னு புள்ளி விபரங்கள் சொல்கின்றன. தங்க காசுகளை பிளாட்பாரத்தில் போட்டு விற்றதை போன வருடம், நான் சென்னையில் இருந்த போது பார்திருக்கிறேன்.

பொதுவாக சித்திரையில் கல்யாணங்கள் குறைவாக நடக்கும். தங்கம் உபயோகம் கம்மியா இருக்கும். இதை ஈடு கட்ட, அக்க்ஷ்ய த்ரிதியையை உபயோகப்படுத்தி கொள்ள ஆரம்பித்து விட்டனர் நமது வியாபாரிகள்.

"கேட்கறவன் கேனையனா இருந்தா
கேப்பையில நெய் வடியுதுனு சொல்வானாம்!"


மக்களே! இந்த நாளில் உங்களை தானம், தர்மம் தான் செய்ய சொல்லி இருக்கு. உங்கள் பீரோவை நிரப்ப சொல்ல வில்லை.

ஏற்கனவே தங்கம் கிராம் 800 ரூபாய் ஆகி விட்டது. பாவம் பெண்ணை பெற்றவர்கள். தமிழ் நாட்டில் குறிப்பிட்ட சில வகுப்புகளில் பெண்ணுக்கு நகை போடுவது கிலோ கணக்கில் தான். இதில் 60:70 (60 பவுன், 70 ஆயிரம்) என ரேஷியோ எல்லாம் வேற. ஆந்திராவில் இன்னும் மோசம். 50 லட்சம், 60 லட்சம், 1 கோடி வரை பேரம் படியுமாம். என் ஆபிஸ் குல்டி தடியன் பீத்திக் கொண்டான்.

1) நல்ல விஷயங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். மூட நம்பிக்கை வேண்டாமே!

he hee, அஸின் எனக்கு கிடைப்பாள்னு நினைத்தா அது நம்பிக்கை. 10 தடவை கஜினி படம் பாத்தேன்! அதனால அஸின் எனக்கு தான் கிடைப்பானு நினைத்தா அது மூட நம்பிக்கை!

2) பெண்ணுக்கு தேவை புன்னகை, பொன்னகை இரண்டாம் பட்சமே!

3) குணத்தில் தங்கமாய் இருங்கள், உங்கள் நேரத்தை தங்கமாய் செலவு செய்யுங்கள்.

4) இந்த புனித நாளில், ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவியுங்கள். இதை விட பெரிய புண்ணியம் வேறு எதுவும் இல்லை.

5) இந்த நல்ல நாளில் உங்கள் தாய், தந்தையர் பெயரில், உங்கள் பள்ளியில், கல்வி அறக்கட்டளை தொடங்குங்கள்.

6) ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவி செய்யுங்கள். இது ஒரு மிக சிறந்த சனி பரிகாரம், தெரியுமா?

7) உங்கள் குழந்தையை, "தங்கமே!னு கொஞ்சுங்கள். (மனைவி, பெண் தோழிகளையும், தில்லு இருந்தா ஜிகிடிகளையும் தான்)

உலகையே வென்ற அலெக்ஸாண்டர், தான் இறக்கும் போது சொன்னது இது, "எனது இறுதி ஊர்வலத்தில், எனது உள்ளங்கைகளை விரித்து வையுங்கள். இந்த உலகுக்கு தெரியட்டும், உலகை வென்ற நான், எதையும் எடுத்து செல்ல வில்லையென்று!"

எவ்வளவு சத்யமான வார்த்தைகள்!

At the end of the game, both the Pawn and the king goes to the same box.

மொத்ததில், அக்க்ஷ்ய த்ரிதியை லலிதா, GRT, பிரின்ஸ் ஜுவல்லரி காராளுக்கு தான் நல்லது!

ஊதற சங்க ஊதி விட்டேன்.

பின்குறிப்பு: இது ஒரு அவசர பதிவு. உடுப்பி பயணம் அடுத்த போஸ்ட்டில். இதே படத்தை எனது முந்தய பதிவில் போட்டுள்ளேன்.

படத்தில் இருப்பது பாகிஸ்தான் பேட்ஸ்மேன் ஈஜாஸ் அகமது பையனும், ஊரை அடித்து உலையில் போட்ட தாவூத்தின் புதல்வியும் தான்.(இவ்ளோ பாரம் சுமக்கறதே, கர்ணம் மல்லேஸ்வரி பொண்ணுனு நினைத்தேளோ?)

Wednesday, April 26, 2006

உம்மாச்சி காப்பாத்து..!

Click here to read the Part-1



தமிழ் வருட பிறப்பு - விஷு என்பதால் கையில் வீணையுடன் ஷாரதாம்பாளுக்கு விஷேச அலங்காரம், வைர கீரீடம்,காதில் வைர தாடகங்கள், கழுத்தில் மலர் மாலைகள், காலில் சிலம்புகள்,பச்சை பட்டு,ரத்ன சிம்மாசனத்தில் சாந்தமான,கருணை பொங்கும் பார்வை, அம்பி,வந்து சேர்ந்தாயா? என்று கேட்பது போன்ற இதழோரம் மெல்லிய புன்சிரிப்பு,காண கண் கோடி வேண்டும்.

"ஷ்ரி சக்ர ராஜ சிம்மாசனேஷ்வரி
ஷ்ரி லலிதாம்பிகையே! - புவனேஷ்வரி"

என்று என்னை அறியாமல் பாட ஆரம்பித்து விட்டேன்.

" உழன்று திரிந்த என்னை
உத்தமனாக்கி வைத்தாய்
உயரிய பெரியரொடு, ஒன்றிட
கூட்டி வைத்தாய்!
நிழலென தொடர்ந்து வந்த
என் கொடுமையை நீக்க செய்தாய்!"

எவ்வளவு சத்யமான வரிகள்! (ராகம் என்னவோ? ராகமாலிகையா? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்!)
என் அப்பா, பெரியப்பா, எல்லாம் மிக உருக்கமாக இந்த பாடலை பாடுவார்கள். நமக்கு கேள்வி அறிவு தான்.

ஒரு பெண்மணி மிக இனிமையான குரலில் சவுந்தர்ய லகரி சொல்ல ஆரம்பித்தார்கள். என்னை அறியாமல் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது. ஆதி ஷங்கரர் சம்ஸ்க்ருத ஸ்லோகங்களாக ஷ்ரி லலிதா தேவியை வர்ணிப்பார். தமிழிலில் பாஷ்யம் கிடைக்கிறது. படித்து பாருங்கள். நேரில் பார்த்தால் மட்டுமே அவ்வளவு அழகாக வர்ணிக்க முடியும்.

மகா மேருவுக்கு, தாழம்பு குங்கும அர்ச்சனை செய்து கொண்டிருந்தார்கள். ஷ்ரி சக்ரத்தின்
3-D வடிவம் தான் மகா மேரு. 44 முக்கோணங்கள் குறிப்பிட்ட டிகிரியில் பிரமிடுகளாக தோற்றம் அளித்து ஒன்றை ஒன்று சந்திக்கும். ஷ்ரி சக்ரம் மற்றும் மகா மேருவை பற்றி ஷ்ரி காஞ்சி பரமாச்சார்யார்(மகா பெரியவா) தனது தெய்வத்தின் குரல் புத்தகத்தில் மிக அற்புதமாக விளக்கி இருக்கிறார். மொத்தம் 7 வால்யூம்கள். 4 வது வால்யூம், 275 வது பக்கம் என்று நினைகிறேன்.

ஏறக்குறைய இதே லாஜிக்கில் தான் எகிப்து பிரமிடுகள் கட்டப்பட்டுள்ளன. எந்த பொருளும் பிரமிடுக்குள் வைத்தால் கெட்டு போகாது.இன்று கோவில் கடைகளில் கூட மகா மேரு என்று விற்க ஆரம்பித்து விட்டர்கள். கலி காலம்!.

கொஞ்ச நேரம் என்னை மறந்து அந்தர்முக தியானத்தில் லயித்து இருந்தேன். நம்மை நாமே உள் நோக்கி உற்று பார்ப்பது தான் அந்தர்முக தியானம். ஒரு இருண்ட குகைக்குள், தன்னந்தனியாக வேகமாக ரோலர் கோஸ்டரில் பயணம் செய்வது போன்று இருக்கும். அம்மா, அப்பா, உடன்பிறந்தவர்கள், நண்பர்கள், நமது பிளாக், பிளாக் கமெண்ட்ஸ், நமக்கு பிரியமானவர்கள் என எல்லார் முகமும் மறைந்து கடைசியாக ஒரு வெறுமை ஏற்படும். பின் தோன்றும் மிக பெரிய பேரோளியில் நாம் கரைந்து போவோம். இது தான் அந்தர்முக தியானம். முதலில் கஷ்டமாக இருக்கும். பின் பழக, பழக யோகம் கைகூடும்.(அம்பி, நிஜமாகவே நீ தானா பேசுவது?னு நீங்கள் ஆச்சர்யப்படுவது எனக்கு தெரிகிறது.)

மணியோசையுடன் தீப ஆரத்தி காட்டினார்கள். ஊண் உருக, உள்ளம் உருக பிறந்த பயனை அடைந்தேன்.

பின் ப்ரகாரம் சுற்றி, ஷக்தி கணபதி, தோரண கணபதியை வணங்கி குங்கும அர்ச்சனை ப்ரஸாதம் வாங்கி கொண்டு, துங்க பத்ரா நதிக்கரைக்கு வந்தேன்.

எவ்வளவு பெரிய பெரிய மீன்கள்! இந்த மீன்களில் ஒன்றாக நான் பிறந்து இருக்க கூடாதா? என தோன்றியது. இதே போல, சரவண பொய்கையில் ஒரு மீனாக பிறக்க வேண்டுமென ஒரு முருகன் பாடல் வரும். ராகம், தாளம் பல்லவி எல்லாம் மறந்து விட்டது. தெரிந்தவர்கள் சொல்லலாமே?


சிருங்கேரி ஆச்சார்யார் இருக்கும் இடமான ந்ருசிம்மவனத்துக்கு செல்ல வில்லை. கேம்ப் சென்றிருப்பதாக தகவல் அறிந்தேன். மிகவும் பழமை வாய்ந்த சந்ரமெளீஸ்வரர் ஸ்படிக லிங்க பூஜை பார்க்க முடியவில்லை. இந்த லிங்கம் பற்றி மேலும் தகவல்களை
இங்கே அறியலாம்.

அனேகமாக எல்லா இடங்களிலும் கேமரா அனுமதி இல்லை. சில விஷயங்களை, இடங்களை நேரில் பார்த்தால் மட்டுமே ரசித்து, உணர முடியும். போட்டோக்கள் அதை உணர்த்த முடியாது. (கலவர பயத்தால் நான் கேமரா எடுத்து போக வில்லைனு உண்மையை சொல்லவா முடியும்?)


சிருங்கேரி இன்னும் வியாபார தலமாக மாறவில்லை என்பது ஒரு பெரிய ஆறுதல். தாஜ் ஓட்டல்காரன் பார்த்தான் என்றால் " 2 இரவு, 3 பகல், இந்த கோடையை குடும்பத்துடன் சிருங்கேரியில் கொண்டாடுங்கள்!"னு விளம்பரப்படுத்தி விடுவான். சிருங்கேரி பற்றி மேலும் தகவல் அறிய, visit this website: www.sringeri.net

மறுபடி உலக பற்றுகள் தொற்றி கொண்டது. டிபன் சாப்பிட ஓட்டல் தேடினேன். ஒரு அக்ரகார வீட்டில் மெஸ் நடத்துகிறார்கள். பல மாதங்களுக்கு பிறகு, சம்மணம் போட்டு இலையில் மல்லிகைப்பூ(இட்லி) சாப்பிட்டேன். ஆகா! இப்படி ஒரு சுவையை என் அம்மா சமையல் நீங்கலாக(என் அம்மா பிளாக் படிச்சா கோச்சுக்க கூடாது இல்லையா?) நான் சுவைத்ததில்லை.

என் பக்கத்தில் ஒரு குஜராத்தி குடும்பம் மல்லிகைப்பூக்களை(இட்லிகளை) வேட்டையாடு! விளையாடு!னு எனக்கு போட்டியாக வெளுத்து வாங்கிக் கொண்டு இருந்தது. என்னடா! எதாவது இட்லி பந்தயம் நடக்கிறதா?னு மீதி பேருக்கு சந்தேகம் வந்து விட்டது. பாவம்! நம்மை போல கலவரத்தில் சிக்கி இருப்பா போலிருக்கு! பந்தையத்தில் குஜராத்திகளே ஜெயித்தார்கள். அந்த நள சக்ரவர்த்தியை தனியே கூப்பிட்டு மனமார வாழ்த்தினேன்.

சங்கீதமும், சமையலும் ஒன்னு!னு எங்க பெரியப்பா சொல்வார். இரண்டுக்கும் உடனே ரிஸல்ட் தெரிந்து விடும். நாரத கான சபாவில் பாட்டு நன்னா இருந்தா சபாஷ்! பலே!னு ( நமது)தொடையை தட்டி தாளம் போடலாம். நல்லா இல்லைனா நைஸா உருளைகிழங்கு போண்டா சாப்பிட கேண்டீனுக்கு நழுவிடலாம். தில்லு இருந்தா, கல்ல விட்டு எறியலாம். சமையல் நன்னா இருந்தா சமைச்ச கைக்கு தங்க வளையல் போடறேன்!னு எங்க அப்பா மாதிரி அல்வா குடுக்கலாம்.(சாரி அப்பா!).

பின்பு, அங்கு விசாரித்ததில் சிருங்கேரியில் இருந்து உடுப்பி 2.5 மணி நேர பயண தூரம் தான் என்று தெரிந்தது. சரி, உடுப்பி ஓட்டல் தான் பாத்துருக்கோம், அசல் உடுப்பி எப்படி இருக்குனு பாத்துடுவோம்னு முடிவு பண்ணி, "சன்முகம்! எடுறா வண்டிய!"னு சிருங்கேரி பஸ் நிலையம் வந்து சேர்ந்தேன்.

....இன்னும் பயணிப்பேன்.

பின்குறிப்பு: எல்லா படங்களும் வெப்சைட்டில் இருந்து சுட்டது.

Sunday, April 23, 2006

உம்மாச்சி காப்பாத்து!

தமிழ் வருட பிறப்புக்கு ஊர் பக்கம் போகலாம் என்ற கனவு கலவரத்தால் தகர்ந்த பின், சரி இங்க பெங்களூர் அருகில் உள்ள இடங்களுக்கு போயிட்டு வரலாம்னு பொட்டிய தூக்கிட்டேன். சிருங்கேரி என்ற இடத்துக்கு போயிட்டு வா அண்ணா!னு என் உடன்பிறப்பு கட்டளையிட்டு விட்டான். தட்ட முடியலை.

எல்லா பஸ்ஸும் கல்லடி பட்டு காயமானதால், ஓடவில்லை. ஆட்டோ காரா எல்லாம் கிட்டத்தட்ட ஆட்டோ மொத்த விலையே சொன்னார்கள். ரஜினிகாந்த் மட்டும் தான் நியாயமான ரேட்டுகாரன் போலிருக்கு.

இரவு 8.45 க்கு தான் பஸ் என்றாலும், 6 மணிக்கே ஆட்டோ பிடித்து (3 மொக்கைகளை வழியில் பிடித்து ஆட்டோ சார்ஜ் ஷேர் பண்ணிட்டேன்)வழி எங்கும் கலவர சுவடுகளை கண்டுகளித்து, மெஜெஸ்டிக் பஸ் நிலையம் சென்றடைந்தேன்.

1.5 நாளாக தொடர்ந்த உண்ணவிரதத்தை, பிரட்டும்,ஆரஞ்சு ஜூஸ்ஸும் பருகி முடித்து கொண்டேன். தமிழகதின் விடிவெள்ளி, கழக போர் வாள், அஞ்சா நெஞ்சன், தானை தலைவன் நமது அம்பி தனது உண்ணாவிரததை முடித்து கொண்டார்னு சன் டீவியில் பிளாஷ் நியூஸ் வந்ததாமே? பாத்தேளா?

9 மணி நேரம் பயணம். இரவு நேரம் என்பதால் வழி எங்கும் உள்ள மலை அழகை ரசிக்க முடியலை. 12 மணிக்கு பேர் தெரியாத ஒரு இடத்தில் டிரைவர் மாமா உச்சா போறத்துக்கு பஸ்ஸ நிப்பாடினார். அந்த இடத்துல தான் எல்லா டிரைவர்களுக்கும் வரும் போலிருக்கு. நிறைய பஸ் இருந்தது. நானும் கீழே இறங்கினேன்,(அதுக்கு இல்ல, சும்மா காத்து வாங்க!).

அப்டியே ஒரு 50 அடி நடந்தேன். திரும்பி வந்தா, என் பஸ்ஸ காணும். டிரைவர் கொஞ்சம் ஓரம் கட்டி நிப்பாடி இருப்பார் போலிருக்கு. இங்க தான் ஒரு சிக்கல். நம்ம ஊரா இருந்தா மதுரை பஸ், கோவை பஸ், திருச்சி பஸ்னு செந்தமிழ்ல வாசிச்சு நாம ஒரு முடிவுக்கு வந்துரலாம். ஆனா, இங்க எல்லா பஸ்ஸுலயும் கன்னட ஜிலேபினா பிழிஞ்சு இருக்கான்? சும்ம சொல்ல கூடாது, வளைச்சு, வளைச்சு பிழிஞ்சு இருக்கான். பப்பரப்பேனு! ஒரு 1 நிமிஷம் நின்னேன்.

அப்போ தான் பளிச்சுனு ஒரு ஐடியா தோணிச்சு.

பஸ்ல வலது பக்கம் 3 வது சீட்ல ஜன்னல் பக்கமா ஒரு ஜிகிடி (மஞ்சள் சுடிதார், கறுப்பு ஷால்) இருந்ததே! அது தான் நம்ம உக்காச்சுண்டு இருந்த பஸ்னு 90 கோடி நியூரான்களில் ஒண்ணு நினைவு படுத்தியது.(உன் புத்தியே இப்படி தானா?னு நீங்க கமெண்ட் போட்டாலும் பரவாயில்லை).

எனவே பஸ்ஸ தேடறத விட்டுட்டு, மஞ்சள் கலர் சிங்குசாவை தேட ஆரம்பித்தேன். நல்ல வேளை, அதுவும் பஸ்ஸ விட்டு இறங்கி இருந்தது.(எதுக்காக இறங்கியதுனு சந்தேகம் கேக்காதீங்கோ, சத்யமா எனக்கு தெரியாது). ஒரு வழியா மஞ்சள் கலர பாலோ பண்ணி என் பஸ்ஸுக்கு போய் சேர்ந்தேன்.

மறுபடி பயணம் தொடங்கியது.சரியாக காலை 5.40 க்கு சிருங்கேரி சென்றடைந்தேன்.

சரியாக தூக்கம், உணவு இல்லாத காரணத்தால் மிகுந்த களைப்பு. குளிக்க சரியான வசதி செய்து இருந்தார்கள். நல்ல அருமையான குளியல் போட்டேன். 7 வாரமாக துவைக்காத ஜீன்ஸை விடுத்து, பளீச்னு வெள்ளை வேஷ்டி, காஷ்மீரி ஷால்(செம குளிர் பா!) அணிந்து கொண்டேன்.(தம்பியின் கட்டளைகளில் இதுவும் ஒண்ணு!).

முதலில் ஷாரதாம்பாள் கோவிலுக்குள் சென்றேன்.

....பயணங்கள் முடிவதில்லை (அடுத்த போஸ்ட்ல பக்தி ரசம் வழிஞ்சு ஓட போகுது!)

பின்குறிப்பு: "உம்மாச்சி காப்பாத்து!" இந்த டைடிலை தந்து உதவிய குழந்தை விஜிக்கு நன்றி. (ராயல்டி எல்லாம் வேண்டாம் தானே? வேணும்னா இந்த போஸ்டை படிக்கவும்)

Thursday, April 20, 2006

தனி ஒருவனுக்கு உணவில்லையெனில்....?



தீடீர்னு, கன்னட படவுலகின் தலைமகன், பிதாமகன்(விக்ரம் இல்லை)இறையடி சேர்ந்து விட்டார். கன்னட ரசிக கன்மணிகளுக்கு எமதர்ம ராஜன் தன் கடமையை செய்தது பிடிக்க வில்லையோ என்னவோ? பொங்கி எழுந்து விட்டனர்.


கண்ணில் பட்டதை கொளுத்தி, கையில் கிடைத்ததை எறிந்து 2 நாளுக்கு ஒரே கும்ப மேளா தான்.

அவசரம், அவசரமாக, எங்களை ஆபிஸிலிருந்து அடித்து விரட்டாத குறையா பஸ்ஸில் ஏற்றி அனுப்பி வைத்தனர் பெரிய தலைகள். இன்னும் வேலை பாக்கி இருக்கு!(பிளாக் படிக்க முடியலையேனு வாசிக்கவும்) லேட்டா போறேனே!னு நான் சொன்னதை எல்லாம் காதுலயே வாங்க வில்லை.


சரினு ரூமுக்கு வந்த பிறகு தான் தெரிந்தது, எல்லா கடையும் பெருமாள் கோவில் கதவு மாதிரி நடையை உச்சி காலத்துகே சார்த்தி விட்டனர் என்று. ஆகா! இன்று இரவு புவாவுக்கு என்னடா செய்ய போற அம்பி?னு அதுக்குள்ள வயிறு கேள்வி எழுப்பியது. சரி, நம்ப வீட்டுக்கு போன் பண்ணி கொஞ்சம் அனுதாப அலைய எழுப்பாலாம்னு டயல் செய்தேன்.

போன எடுத்தது என் உடன்பிறப்பு.

நான்: பத்ரமா ஒரு வழியா ரூமுக்கு வந்து சேர்ந்தேன் டா இப்பொ தான்!
தம்பி: எனக்கு தெரியும் டா! பாகிஸ்தான்ல வேலை பார்த்தாலும் நீ தப்பிச்சு வந்துடுவ டா! (ஆகா! இன்னிகி நம்மள ஓட்டனும்னு சங்கல்பமா?)

நான்: நைட்டு சாப்ட ஒன்னுமே இல்லடா!(அழும் குரலில்).
தம்பி: இன்று, புதன் கிழமை. பெருமாளுக்கு உகந்த நாள். உபவாசம் இரு! கொஞ்சம் நல்ல புத்தியாவது கிடைக்கட்டும்.
நான்: Ghrr...rrrr. நீ போன அம்மாட்ட குடுக்கறியா?
தம்பி: உனக்கு நல்ல புத்தி வரணும்னு வேன்டிக்க அம்மா கோவிலுக்கு போயிருக்கா!
நான்: போன வைடா! நேர்ல வந்து வச்சுக்கரேன்டி உன் கச்சேரிய!

சரியாக 15 நிமிடம் கழித்து, என் செல் அழைத்தது.

அம்மா:(பதட்டமான குரலில்) என்னப்பா! என்ன நடக்குது அங்க? உனக்கு ஒன்னும் இல்லியே? நைட் எங்க சாப்ட போற?
நான்: பத்ரமா இருக்கேன். ஏரியால சுத்தி பாக்றேன். இல்லைனா பட்னி தான்.
அம்மா: பிரட் கூடவா கிடைக்காது?
நான்: மெடிக்கல்ஸ் கடை மட்டும் தான் திறந்து இருக்கு. அதுலயும் பிரட் இல்லை.
தம்பி: பேசாம ரெண்டு க்ரொஸின், நாலு மெட்டாஸின் வாங்கி போட்டுக்கோ. அம்மாவ விட்டு கேசரி கிண்டி கொரியர்ல அனுப்ப சொல்லவா?
அம்மா: பேசாம இருடா! பாவம்! அவனே பட்னியா இருக்கான்!
நான்: சரிமா! நான் ஏதாவது கிடைக்குமானு பாக்ரேன். நீ கவலைப்படாதே! குட் நைட்!

நம்ம கால வார, எல்லா வீட்டுலயும் ஒன்னு இப்படி இருக்கும் போலிருக்கு.

அப்புறம் மறுபடி ஏரியவை ஒரு சுத்து, சுத்தி வந்தேன். திறந்து இருந்த மெடிகல்ஸும் மூடி விடுவான் போல தெரிந்தது. நேர போயி, 2 குலுகோஸ் பாக்கெட் வாங்கி வந்து, காவேரி தண்ணியில் கலந்து குடிச்சுட்டு பெட்ல தாச்சுன்டேன்.

மறு நாள் காலை அதிசயமா ஒரு கடை காந்தி ஜயந்தியன்று சில வைன் ஷாப் பாதி கதவு திறந்து வைப்பது போல, லேஸா திறந்து வைத்தான். வெறும் பிஸ்கோத்து மட்டும் தான் தேறியது. இப்படியாக காலை டிபன் பிஸ்கோத்தும், காவேரி ஜலமுமாக முடிந்தது.

மதியம், எப்படியோ ஒரு நம்ம நெல்லை ஜில்லாகாரர் ஒருத்தர் ரொம்ப தில்லாக, கடையை பின்பக்கம் மட்டும் திறந்து வைத்து, சாப்பாடு பார்சல் கட்டி குடுத்தார். சாம்பாரும், ரசமும் மட்டும் தான் (அதுவும், எங்கிருந்தோ அவுட்ஸோர்ஸிங்). காயிகறி எல்லாம் இல்லை.

கடுச்சுக்க கட்டை விரல் இருக்குல்ல!னு நக்கல் விட்டார்.(பாசக்கார பயலுக). போனா போகுதுனு அப்பளம் தந்தார்.ஊர்காரன் அண்ணாச்சினு ஐஸ் வைச்சு 4 அப்பளம் வாங்கிட்டேன்.
எங்க கல்லிடை குறிச்சியிலிருந்து, பாரினுக்கு எல்லாம் அப்பளம் ஏற்றுமதி ஆகும். சில மாமிகள், அவா ஆத்துலேயே அப்பளம் எல்லாம் தயார் செய்து அமெரிக்காவில் இருக்கும் தங்கள் பெண்களுக்கு எக்ஸ்போர்ட் செய்து விடுவார்கள். ம்ம்ம்... அது ஒரு காலம். இப்போதெல்லாம், மாமிகளுக்கு கோலங்கள் அபியையும், செல்வியையும் கவனிக்கவே நேரம் சரியா இருக்கு. கமர்ஷியல் பிரெக்ல தான் மாமாக்களுக்கு மம்மம் எல்லாம்.

சரி, நம்ம கதைக்கு வருவோம்.

செம பசியோட ரூமுக்கு வந்து சோத்து மூட்டைய பிரிச்சேன். சாம்பாரா, ரசமானு சாலமன் பாபையாவை வைத்து பட்டிமன்றமே வைக்கலாம். அந்த லட்சணத்துல இருந்தது சாம்பார்(?). ரொம்ப கஷ்டப்பட்டு அதையும் உள்ள தள்ளிடேன். 2 அப்பளம் தான் மிச்சம் இருந்தது.

அப்போ தான் சனி பகவான் தன் திருவிளையாடலை துவங்கினார்.

எனக்கு பக்கத்து போர்ஷன்ல 3 பஞ்சாபி குதிரைகள் குடி இருக்கு. சும்மா சொல்ல கூடாது, கோதுமையா தின்னு, 6 அடி, 65 கிலோனு அரேபிய குதிரை மாதிரி இருக்கும். நம்ம இந்தி அறிவை அதுகளோட பேசி (கடலை போட்டு என்று வாசிக்க வேண்டாம்!) தான் நாம வளர்த்துக்கறோம்.
2 குதிரைகள் நான் ரசம் சாதம் சாப்பிட(முழுங்க) ஆரம்பிக்கும் போது வந்து சேர்ந்தது. பப்பட்! பப்பட்!னு கத்திண்டு ஒரு குதிரை ஒரு அப்பளத்தை எடுத்து படக்குனு கடித்தது. ரொம்ப தாராளமா இன்னொரு அப்பளத்தை எடுத்து, 2வது குதிரைக்கு ஊட்டி விட்டது. எனக்கு உள்ள போன ரசம் சாதம்(?) மெல்லவும் முடியலை, முழுங்கவும் முடியலை.

"பிச்சை எடுத்தாராம் பெருமாளு!
பிடுங்கி தின்னாராம் அனுமாரு!!"
ரேஞ்சுக்கு என் நிலமை ஆகி விட்டது.

சரி, நிறையா சிரிச்சாச்சு! கொஞ்சம் சிந்திப்போமா?

1) இந்த மாதிரி கடையடைப்புகள் நியாயமான காரணங்களுக்காக நடத்தப்படுகிறதா?


2) நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்களாய் உருவாகின்ற இந்த ரவுடிகளுக்கு எங்கிருந்து வருகிறது இவ்வளவு தைரியம்?



3) இந்த ரவுடிகளால் சேதப்படுத்தப்பட்ட பஸ்களின் எண்ணிக்கை 522. சேத மதிப்பு 1.28 கோடி (courtasy Times of India).இந்த இழப்பீட்டை மக்கள் தான் தங்கள் வரிப்பணத்தில் ஈடு கட்ட வேண்டுமா? ரவுடிகளும் வரி கட்டுகிறார்களா?

4)என்ன தான் நாம சாப்ட்வேர் எழுதினாலும், இன்னும் அன்டர்வேர் வெளியே தெரியும்படி வேஷ்டி கட்டிய கூட்டம் கையில் தான் ஆட்சி அதிகாரம் உள்ளது! இது மாறவே மாறாதா? அல்லது மாற்ற முடியாதா?

கடைசியாக கர்னாடகா முதல்வருக்கு ஒரு வார்த்தை!

உங்கள் அப்பா எத்தனை டகால்டி வேலைகள் செய்து உங்களை முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வைத்தார் என்பது நாடு அறிந்த விஷயம்.

ஏஸி ரூமுக்குள் மூக்கை நோண்டிக் கொண்டிருப்பதற்காக, உங்களை முதலமைச்சர் ஆக்க வில்லை. சட்டம் என்ற சவுக்கை சரியான நேரத்தில் சொடுக்க தெரியனும்.

இந்த விஷயத்தில் தமிழ் நாட்டின் அம்மா எவ்வளவோ பரவாயில்லை.

"தனி ஒருவனுக்கு உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்!"

என்றான் பாரதி.

இங்க கதையே உல்டாவா போயிடுத்து!

"ஜகத்தினை அழிப்பதினால்
தனி ஒருவனுக்கு உணவில்லை!"

Monday, April 17, 2006

மலையேற போனாலும் மச்சினன் தயவு வேணும்! - II

Click here to read Part-I

நானும் அனுமார் வாலுக்கு பொட்டு வைக்க சதா வருவானு பார்த்தா, சதாக்கு பாட்டி மாதிரி சோதாவா ஒரு மாமி தான் வந்தா. "அம்பி! கொஞ்சம் என் செருப்ப பாத்துக்கோ! பெருமாள சேவிச்சுட்டு வந்துடறேன்"னு கடுப்பேத்தினா.

ஆப்படித்து விட்டாரே என் அனுமார்!

மாமி! புளியோதரை நைவேத்யமா?னு கையில இருந்த தூக்க பார்த்து கேட்டேன்.

"வட மாலை டா அம்பி! பேத்திக்கு நல்ல வரனா அமையணும்னு 4 வாரமா வேண்டுதல்!"

"பேத்திய கூட்டிண்டு வந்துருந்தா அனுமார்(அம்பி) அருள் பரிபூரணமா கிடைக்குமே மாமி!"னு சும்மா ஒரு பிட்ட போட்டேன்.

அவளுக்கு எதோ எக்ஸாமாம்! சாயந்தரம் வந்து சேவிக்கரேனுட்டா!

யுனிவர்ஸிட்டி எக்ஸாம் போர்டை மனதார சபித்தேன்.

அதுக்குள்ள, என் சித்தப்பா வந்து, "அம்பி, இங்க என்னடா பண்ற? உன்னை எல்லாரும் தேடறா டா அங்க!"னு ஒலை வாசிச்சார்.

"ஒரு மாமி கோவிலுக்கு உள்ள் போயிருக்கா. வட மாலை ப்ரஸாதம் தருவா! நீங்க வாங்கி வைங்கோ! நான் இதோ வந்துடரேன்"னு நைஸா சித்தப்பாவ செருப்புக்கு காவல் வைத்து விட்டு நான் கம்பி நீட்டி விட்டேன்.எனக்கு எப்படி
கேசரி மீது காதலோ, அது போல சித்தப்பாவுக்கு உளுந்து வடை.

பொதுவாக இந்த மாதிரி சொந்தக்காரா கல்யாணங்கள், பேச்சுலர் பையன்/பெண்களுக்கு ஒரு ரஞ்சி டிராபி மேட்ச் மாதிரி. பல (செலக்டர்கள்) பெண்ணை/பிள்ளையை பெற்றவர்கள் உன்னிப்பாக கவனிப்பார்கள். நல்ல பிள்ளை மாதிரி ஸீன் போட தெரியனும். இந்த விஷயத்துல நான், எங்க அருமை அண்ணன்
டுபுக்கு எல்லாம் டாக்டர் பட்டம் பெற்றவர்கள்.

இந்த மாதிரி இடங்களில் பிகர்களை கவர் செய்ய கூடாது. அவர்களை பெற்ற புண்ணியவான்களை நன்றாக கவனிக்கனும்.ரொம்ப பொறுப்பான பிள்ளை மாதிரி வந்தவர்களை வரவேற்று சிம்மாசனத்தில் அமர்த்தனும்.பஞ்சு மிட்டாய் கலர் பட்டு புடவைய கூட "அட்டகாசமான கலர்"னு அள்ளி விடனும்.4 இட்லிக்கு ஒரு வாளி சாம்பார் கேட்டா கூட சலிக்காம பறிமாறனும்.

இந்த டகால்டி வேலை எல்லாம் ரொம்ப தெளிவா செஞ்சேன். என் டிரிக் ஒர்க்கவுட் ஆக ஆரம்பித்தது.

"யாரு இந்த அம்பி? துறுதுறுனு இருக்கானே?னு என் அம்மாவிடமே சில செலக்டர்கள் விசாரிக்க ஆரம்பித்து விட்டனர்.
இன்னும் ஒரு படி மேல போய், ஒரு ரூபாய் ஸைஸுக்கு குன்னக்குடி வைத்ய நாதன் மாதிரி பொட்டு வைத்த ஒரு பாட்டி, "அம்பி இங்க வா! எங்க வேலை பாக்ற? சம்பளம் எல்லாம் ஒழுங்கா தறாளா?னு சிபிஐ ரேஞ்சுக்கு கேப் விடாம கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.

எல்லா விபரமும் (பல்லை கடித்து கொண்டு)சொன்னேன். ஓ! நீ அங்க யா வேலை பாக்கற? அதே பில்டிங்ல தான் என் பேத்தி, 6 வது மாடியில இருக்கா!(வடாம் காய போடற வேலையோ?)
சுபா!னு கூப்டா திரும்பி பார்ப்பா! (அடடா! இது வல்லவா அடையாளம்!)

அதற்குள் என் அம்மா வந்து, அவன் ரொம்ப சின்ன பையன் மாமி!(அப்படியா மம்மி?)என்று சொல்லி என்னை அந்த பொட்டு மாமியிடமிருந்து மீட்டு கொண்டு போனார்கள்.

ஆபிஸ் போனதும், 6வது மாடிக்கு போயி, "சுபா!னு கூப்பிட்டு பார்க்கலாமா?னு நினைத்தேன். ஒரு வேளை, சுபாக்கு பதில், சுபாஷினி, சுபலட்சுமி, சுபஷ்ரி, சுபப்ரியானு பல சுபாகள் திரும்பி பார்த்தா என்ன பன்றது? அதோட மட்டும் இல்லை, பல சுபாக்கள் குதிகால் உயர செருப்பு வேற அணிந்து இருந்தனர். எனவே அந்த ஐடியாவை டிராப் செய்து விட்டேன்.


ரகளைகள் தொடரும்.....

Wednesday, April 12, 2006

விளக்கேற்ற வரலாமா?




நாளை மறு நாள் தமிழ் வருட பிறப்பு! உங்காத்துக்கு காலைல வந்து விளக்கேற்றி வைக்கனும்னு ரொம்ப நாளா ஆசை, வரட்டுமா அம்பி?னு அஸின் ஒரே பிடிவாதம்.

ஓ! முன்னாடியே சொல்ல கூடாதா? ஏற்கனவே காலைல ஐஸ் குட்டி வரேன்னுடாளே! நீ வேணா, சாயந்தரம் வந்துக்கோ!னு சொல்லிட்டேன்.

சந்தோஷமா விளக்கும் கையுமா வாசல்ல வந்து நின்னுட்டா அஸின். விளக்கு டிஸைன் நன்னா இருக்கு இல்ல? (சத்யமா நான் விளக்கு டிசைன தாங்க சொல்றேன்!)

Note:
பிளாக் ஆரம்பிச்சு ரெண்டு மாதம் ஆக போகுது! இன்னும் அஸின் படத்த உன் ப்ளாக்ல போடலயா? உடனே அஸின் படத்த போடுனு ஜொள்ளாண்டவர் என் கனவுல வந்து அசரிரீ வாக்கு சொன்னார். சும்மா மேட்டர் இல்லாம போட்டா உதை விழும். he hee,அதுக்கு தான் இந்த பில்டப்பு!

Monday, April 10, 2006

மலையேற போனாலும் மச்சினன் தயவு வேணும்! - I

என் பெரியப்பாவுக்கு 2 செல்(ல)வ மகள்கள். முதல் பெண்ணுக்கு சென்ற வருடம் சென்னையில் திருமணம் சிறப்பாக நடந்தது. என் பெரியப்பாவுக்கு மகன்கள் இல்லை. எனவே அம்பியாகிய நான் அவசரத்துக்கு உப்புமா போல ஆக்டிங் மச்சினன் ஆக்கப்பட்டேன். எனக்கும் சொந்த அக்கா, தங்கை இல்லாததால், புதிய போஸ்டிங்கை ரொம்ப குஷியா ஏற்று கொண்டேன். நானும் எப்போ தான் பாச மலர் சிவாஜி ஆறது?

மாப்பிளைக்கு மாலை போடுவது, சந்தனம் இடுவது போன்ற முக்கிய பொறுப்புகள் அடியேனுக்கு கிட்டியது. இது எல்லாம் சும்மா ஜுஜுபி வேலைகள் தான். மாப்பிளை வீட்டார், தஞ்சாவூர் காரர்கள் என்பதால், எங்க ஸைடில் லேசா சின்ன உதறல்.

இங்கு தஞ்சாவூர் காரர்கள் பத்தி நான் கண்டிப்பாக சில வார்தைகள் சொல்ல வேண்டும். மாப்பிள்ளைக்கு மாலை போடுகிறோமோ இல்லையோ, அவரின் பெரியப்பா, சித்தப்பா, தாய் மாமா, என எல்லா பரிவார தேவதைகளுக்கும் மல்லிகை மாலை சார்த்த வேண்டும். அரை மணிக்கு ஒரு தடவை, "டிபன் சாப்டேளா அண்ணா? காபி சாப்டேளா அண்ணா?னு விசாரிக்க வேண்டும்.

நான் கும்பகோணம் வெத்தலை போட்டா தான், என் தம்பி பையன் தாலி கட்டுவான்னு சில தஞ்சாவூர் பெரியப்பாக்கள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவார்கள். இதுக்காக, பெண்ணை பெற்றவர் கும்பகோணமா போயிட்டு வர முடியும்? காப்பில சர்க்கரை கம்மியா இருக்கே!னு சில சவுரி வைத்த சொர்ணா அக்கா மாமிகள் சட்ட ஒழுங்கு மசோதா தாக்கல் செய்வார்கள். அதான் உங்க உடம்பு முழுக்க ஸுகர் இருக்கேனு நம்ப நுனி நாக்கு வரை வந்து விடும், சொல்லிட்டோம், அவ்ளோ தான், சொர்ணா அக்கா பரவை முனியம்மா குரலில் கத்த ஆரம்பித்து விடுவார்கள்.இந்த TCC (Tanjore Code of Conduct) ரூல்ஸை மறந்தோம், பேக்கப்! என்று டிக்ளேர் செய்து விடுவார்கள், அந்த மகானுபாவர்கள்.
எல்லா தஞ்சாவூர் காரர்களையும் நான் குத்தம் சொல்லலை. இப்படியும் சில தஞ்சாவூர் புண்ணியவான்கள் இருக்கானு தான் சொல்ல வரேன்.

நல்ல வேளை, என் பெரியப்பா சம்பந்திகள் மிகவும் பெருந்தன்மையாக நடந்து கொண்டனர். நானும் என் பெரியப்பாவும், நல்ல (பிகர்கள் இருக்கும்) ஏரியாவான மேற்கு மாம்பலத்தில், ஒவ்வொரு மண்டபமா ஏறி இறங்கி சல்லடை போட்டு சலித்து, ஒரு மண்டபத்தை பிடித்து விட்டோம். மண்டபம் வாடகையில இன்னொரு பெண்ணுக்கு கல்யாணமே நடத்திரலாம் போலிருக்கேனு பெரியப்பா கணக்கு போட்டார்.
தி. நகர், பாண்டி பாஜார் எல்லாம் ரொம்ப பக்கம், மாப்பிளையாத்து காரா ஜானுவாசத்துக்கு தீடீர்னு ஏரொபிலேன் தான் வேணும்னு கேட்டா கூட, சரவணா ஸ்டொர்ஸ்ல வாங்கிண்டு வந்துரலாம் பெரியப்பா!னு நான் சொன்னத அப்படியே நம்பிட்டார் என் பெரியப்பா.

he hee, நம்ப கணக்கே வேற!

பக்கத்துல ஒரு பெருமாள் கோவில் இருக்கு. எப்படியும் அனுமார் வாலுக்கு பொட்டு வைக்க சில பல ஐய்யங்கார் வீட்டு சதாக்கள் வருவா! நமக்கும் கொஞ்சம் கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கும். அப்டியே ஒன்ன பிக்கப் பண்ணி கலர் கலரா பூக்கள் உள்ள தோட்டதுல ஓ! சுகுமாரி!னு டூயட் பாடலாம்னு பிலான் போட்டு தான் அந்த மண்டபத்த புக் பண்ண் வெச்சேன். உன் புத்திய காட்டிடியேடா!னு என் அக்கா கண்டுபிடிச்சுட்டா.

கல்யாணத்தன்று என் பெரியப்பாகள், பெரியம்மாக்கள், அத்தங்கார்கள், அத்திம்பேர்கள், சித்தி, சித்தப்பா என ஒரு படையே போர் கால நடவடிக்கை மாதிரி பம்பரமாக சுத்தி, சுத்தி வந்து தஞ்சாவூர் காரர்களை கவனித்து வந்தோம்.
சொந்த அக்கா ஒண்ணும் இல்லையே! லீவு எல்லாம் கிடையாதுனு ரொம்ப அன்பாக ப்ராஜக்ட் மானேஜர் அல்வா குடுத்ததால், மண்டபம் - ஆபிஸ் - மண்டபம் என அவ்வை ஷன்முகனாக அல்லாடிக் கொண்டு இருந்தேன். முத்து பிள்ளை ரொம்ப தான் பிலிம் காட்றான்னு நல்ல பேரும், நம்ம சாதி சனம் மத்தியில் இலவசமா கிடைத்தது.
இருந்தாலும், கரெக்ட்டா வர வேண்டிய நேரத்துக்கு கேப்டன் மாதிரி வந்து ராம காரியத்தில் ஒரு அணில் போல (தன்னடக்கம் பா!) ஓடியாடி வேலை செய்து வந்தேன். மறக்காம வீடியோக்கு போஸ்சும் குடுத்து வந்தேன்.(ஒரு விளம்பரம் தான்!)
எங்க குடும்பத்தில் ஷ்ரிராம்( நான் தான்) என்றால், 66.5 கிலோ சொக்க தங்கம்னு பேர் வாங்கி இருப்பதால், என் வால கொஞ்சம் சுருட்டி வைத்தேன்.
மொத்த குடும்பமும் குழுமி இருந்ததால், ஜானுவாசத்துக்கு எழுந்தருளிய பச்சை கல் நெக்லஸ், சின்னதா காதுல ஒரு ஜிமிக்கி, கையில சாம்சங் செல், ஆலிவ் கிரீன் கலர் மெட்டல் ஷிபான் புடவை, கருப்பு கலர் வெல்வட் ஜாகெட் அணிந்த குதிரை வால் பிகரை கூட சரியா(?) பார்க்க வில்லை.

அம்பியின் ரகளைகள் தொடரும்.....

Thursday, April 06, 2006

கோபாலபுரத்து கோமகன்!

பராசக்தியில் தொடங்கியது என் பயணம்.
பாசக்கிளிகள் வரை தொடர்கிறது இன்னும்.
ஆகி விட்டது அகவையோ என்பது.
அடங்க வில்லையே என் ஜார்ஜ் கோட்டை கனவு!.

பகுத்தறிவே எனது பாசறை.
என் மேல் துண்டு மட்டும் மஞ்சளாடை!
தமிழ் எனது உயிர் மூச்சு.
பிற மொழிகளில் இங்கு என்ன பேச்சு?
என் தமிழ் அகராதியில் சன் டிவியும் தூய தமிழ் சொல்லே!

செல்ல மகனை அழகு பார்த்தேன் மேயராக.
மருமகனையும் மாற்றினேன் மந்திரியாக.
பேரனும் செல்கிறான் மக்களவை!
பேத்தியும் செல்வாளோ ராஜ்யசபை?

மடல் எழுத மட்டும் தான் என் கழக கண்மணிகள்
மடையன் தானே என் மற தமிழன்!

சர்வம் கிருஷ்ணார்பணம்! - கீதையில் கண்ணன்.
சர்வம் எனக்கே அர்பணம்! - கோபாலபுரத்து கோமகன்!
தாமரை ஆண்டால் என்ன? கை ஆண்டால் என்ன?
என் பேரன் மட்டும் மத்திய மந்திரி!
ஏனெனில் நான் ஒரு ராஜ தந்திரி!


Note: யாரை சொல்கிறேன்னு சொல்லவும் வேண்டுமோ?

Monday, April 03, 2006

நான் யாரென நவின்றுடுவீர்!

"மாமுனி மந்திரம்
ஓர்முறை சோதிக்க
பேரோளி வீசும்
பரிதியின் மைந்தனாய்
நீர் நிலை தவழ்ந்து
சாரதி புதல்வனாய்
சீர் பெற வளர்ந்து
தடக்கை சிவக்க
கொடை பல அளித்து
கூடா நட்பால்
சோதரன் இல்லாளை
பொல்லாப்பழி செய்து
சேரா இடம் சேர்ந்து
கான்டீபன் அம்பினில்
விண்ணுலகு புகுந்து
செங்கமலன் தாழ்
எய்தினேன்! வலையுலக
வள்ளல்களே! என் பெயர்
நவின்றிடுவீர், அம்பியின்
பின்னூட்டத்தில்!"

மர்ம தேசம் டைட்டில் ஸாங் மாதிரி இருக்கா?
இது முழுக்க முழுக்க நம்ம சொந்த சரக்கு தான்.
மண்டபத்தில் யாரோ எழுதி தந்தது எல்லாம் இல்லை.
நடுவுல இந்த மானே! தேனே! எல்லாம் தூவ முடிய வில்லை.

இது வெண்பாவா, ஆசிரியப்பாவா, கலிப்பாவானு யாராவது சொன்னா புண்ணியமா போகும்.
இல்லை! இது பெரியப்பானு நீங்க நக்கல் பண்ணினாலும் எனக்கு ஆட்சேபணை இல்லை.
அப்பப்பா! பிரமாதம்! கவித, கவித!னு பாராட்டினால் மிக்க சந்தோஷம்.