Friday, October 27, 2006

வீர வேல்! வெற்றி வேல்! ஷக்தி வேல்! எமை ஆளும் வஜ்ரவேல்!

தேவர் படை ஒரு புறம், அசுரர் படை மறு புறம். சூரபத்மன் மனம் போல திருச்செந்தூர் கடலும் பொங்கியது. அவனின் மனதில் தோன்றிய எண்ண அலைகள் போல கடலில் தோன்றிய அலைகளும் ஆர்பரித்தது.

"யார் இந்த பாலகன்? பால் மனம் மாறாது, மந்தகாச புன்னகையுடன், கண்களில் குறும்பு தெறிக்க, காதில் மகர குழைகள் ஆட, சிவப்பு பட்டாடை உடுத்தி, கழுத்தில் முத்து மாலைகள் அசைய, கைகளில் ரத்ன கங்கணம் மின்ன, பாதங்களில் பொற்சிலம்புகள் ஒலி எழுப்ப, ஆயிரம் கோடி சூரியனை போல பிரகாசத்துடன் ஒளி பொருந்திய முகத்துடன், எழுத்தாணி பிடிக்க வேண்டிய வயதில்,கையில் வேலுடன் இருக்கும் இவனா என் அசுரர் படையை அழித்தவன்?


சிங்கமுகனை இவன் தான் கொன்றான்! என செய்தி வந்ததே? உண்மையா என்ன? அவனை வெல்ல இந்த உலகில் ஒருவரும் இல்லையே?

சரி, தாரகன் கதி..? இந்திரனையே மண்டியிட செய்தவன் ஆயிற்றே?

இந்த பாலகனை என்னால் எதிரியாகவே பார்க்க முடியவில்லையே? கையேடுத்து வணங்க மனம் துடிக்கிறதே? எங்கே போனது எனது ஆக்ரோஷம்?

சே! நான் கோழை ஆகி விட்டேனா? இவன் யார்? யக்ஷனா? தேவனா? கிங்கரனா? கந்தர்வனா? அற்ப மானிட பதரா?"

குமரன் திருவாய் மலர்ந்தான்,"என்ன அசுரர் தலைவனே! மவுனம் ஏன்? தன்னெஞ்சே தன்னை சுடுகிறதா?
பேராசை பட்டாய், நான் என்ற அகங்காரம் கொண்டாய்! தர்மத்தை மறந்தாய்! தன்னடக்கத்தை துறந்தாய்! அடாத செயல்கள் செய்தாய்! அனுபவிக்கிறாய்!

இப்பவும் ஒன்றும் கெட்டு போகவில்லை. உன் தவறுக்கு வருந்து. தப்பு செய்தமைக்கு மன்னிப்பு கேள்".
"வினாஷ காலே விபரீத புத்தி!" விதி யாரை விட்டது?

"பச்சிளம் பாலகனே! மாயைகள் கற்றவனே! என் தம்பி மார்களை கொன்றாய்! இந்த ஒரு காரணம் போதும்! உன்னை தண்டிக்க. ஆனாலும், இந்த சூரபத்மன் ஒரு பாலகனை கொன்றான்! என்ற பழி வேண்டாம், மன்னிப்பு கேள்! உயிர்பிச்சை அளிக்கிறேன்!" பாவம் ஆணவம் கொக்கரித்தது.

கோபமும், ஆணவமும் தலையெடுத்து விட்டால் அங்கு புத்திக்கு ஏது இடம்?

நான் அப்படி தான் இருப்பேன்! மாற மாட்டேன்! என்னை மிஞ்ச யாரும் இல்லை! எனக்கு யாரும் புத்திமதி அளிக்க வேண்டாம்! என மனம் ஆர்ப்பாட்டம் செய்யும். இதுவரை இனிமையாக பழகியவரும், பகைவராய் தெரிவர்.

சூரன் மட்டும் விதிவிலக்கா என்ன?

ஆனாலும், நமது கந்தன், கடம்பன், குமரன், வேலன், முருகன், அழகன், கார்த்திகேயன், பகைவருக்கும் அருள்வானே!

சூரனை இரண்டாய் பிளந்து, மயிலும், சேவற் கொடியுமாய் மாற்றி எப்போழுதும் தன்னோடு இருக்குமாறு செய்து விட்டானே! அவனது கருணையே கருணை.

நாளை கந்த சஷ்டி திருவிழா!

நான் உடல் வருத்தி, பட்னி எல்லாம் இருந்து, பெரியதாக எந்த விரதமும் இருந்தது இல்லை.

"உடலை வளர்த்தேனே! உயிரை வளர்த்தேனே!"
என்று இருந்து வந்தேன்.

மூன்று வருடங்களுக்கு முன்னால் நான் மிகுந்த கஷ்ட தசையில் இருந்த போது, "முருகா! என் வினையை களைவாய்! என மனமுறுகி ஷஷ்டி விரதம் இருந்தேன். அதுவும் சூரசம்காரம் அன்று மட்டும் தான்!

இதோ இப்பவும் 6 நாட்கள் முருகன் சிந்தனையில் ஆழ்ந்து விட்டேன். என் மனம் எல்லாம் திருசெந்தூரில் நாளை நடக்க இருக்கும் சூரசம்காரத்தில் தான் உள்ளது.


நான் குழந்தையாக இருந்த போது எங்கள் ஊரில் முருகன் காவடி வரும். எங்கள் வீட்டு முன்னால் என் அப்பா முருகன் மேல் மனமுருகி காவடிசிந்து பாட, அழகாக முருகனடியவர் காவடி ஆடுவர். நான் அவர்களுக்கு தாகம் தணிய மோர் அளிப்பேன்.

இப்பவும் நம்மிடையே தலை தூக்கும் அசுரர்களான, நான்! என்ற அகந்தை, ஈகோ, கோபம், பேராசை, உலக இச்சைகள், சோம்பேறித்தனம், எல்லாவற்றையும் அந்த கந்தன் கைவேல் நொறுக்கட்டும்.

கூவி அழைத்தால், குரல் குடுக்காமல் இருப்பானோ அந்த மால் மருகன்?

பி.கு: முதல் கமண்ட் போடுபவர்களுக்கு, முருகன் பேரை சொல்லி அலகு குத்தி விடப்படும். :)


Wednesday, October 18, 2006

நான் சிரித்தால் தீபாவளி!"வீட்டை கட்டி பார்! கல்யாணம் பண்ணி பார்!" வரிசையில் இனிமேல், "டிக்கட் ரிஷர்வேஷன் பண்ணி பார்!" என்பதையும் சேத்துக்கனும் போலிருக்கு.

ஆபிஸில் நமது லீவு ஸ்டேடஸ் சரியாக தெரியாததால், ரயிலில் முன்பதிவு செய்யமுடியவில்லை. பூசாரி(PL) சாமி(PM) எல்லாம் வரம் குடுத்து முடித்த போது, அடுத்த பொங்கலுக்கு டிக்கட் இருக்கு! பரவாயில்லையா?னு பதில் வந்தது.

சரி, இந்த தனியார் பஸ்ஸில் டிரை பண்ணலாம்!னு முடிவு பண்ணி போயி கேட்டா, ஓடிப் போ! அற்ப பதரே! என்பதையே ரொம்ப டீசண்டா பதில் சொன்னார்கள்.

இனி தமிழ் நாடு பஸ் தான்!னு முடிவு பண்ணி காலையில் பல் தேய்த்த கையோடு, அவசரமாக வந்ததை கூட அடக்கி கொண்டு கியூவில் போயி நின்னாச்சு! (டிக்கட் எடுக்க தான்! வேற எதுக்கும் இல்லை).
ஆந்திரா முன் பதிவு கவுண்டர் காத்தாடியது. குல்டிகள் என்னிகி பஸ்ல போயிருக்கா? H1B விசா எடுத்து அமெரிக்காவுக்கே லாரில போற கோஷ்டி தானே அது?

நம்ப நேரம், எல்லா பயலும் மதுரைக்கு தான் டிக்கட் எடுப்பான் போலிருக்கு. ஒரு சேஞ்சுக்கு இந்த தடவை ஹைத்ராபாத்ல போயி தீவாளி கொண்டாடுங்களேன்!னு பக்கதுல நின்ன கடா மீசை மாமாவிடம் நான் ரவுசு விட்டதில் இடுப்பு பெல்ட்டை தட்டி காட்டினார். ஜாமான், செட்டு எல்லாம் அதுல தான் போலிருக்கு.

இது போதாது!னு முன்னாடி இருந்த சில பயலுகள், இலவச சேவையாக பின்னாடி நின்ன அவுக ஊரு டிக்கட்டுகளுக்கும் சேர்த்து டிக்கட் எடுத்து கொடுத்து சைடு கேப்பில் சாண்ட்ரோ ஓட்டி கொண்டிருந்தனர். ஹைவேஸ்லயே அம்பாசிடர் ஓட்ட முடியாம நாம தவிச்சுண்டு இருக்கோம், சரி விடுங்கோ, பல்லு இருக்கறவன் பக்கோடா திங்கறான்.

ஒரு வழியாக நம்ப முறை வந்து, குறி கேட்க காத்து இருப்பதை போல கவுண்டர் ஆளை நெருங்கினால், அப்ப தான் அவருக்கு டீ வருது. நான் எல்லாம் கழனி தொட்டிய கண்ட கன்னுகுட்டி மாதிரி, சர்ர்ர்ர்!னு ஒரு மடக்கில் டீயை உறிந்து விடுவேன். அவர் என்னடா?னா எதோ நம்ப ஷ்யாம் சரக்கு அடிப்பது போல ரசித்து, சுவைத்து குடிக்கறார். சைடு டிஷ்ஷுக்கு கடலெண்ணய்ல போட்ட பஜ்ஜி வேற. சரி, அடுத்த அரை மணி நேரத்தில் கடல மாவு பஜ்ஜி தன் வேலையை காட்டி விடும்!னு நான் யூகித்து அதுகுள்ள நாம டிக்கட் எடுத்துடணும்!னு எனக்கு தவிப்பு.

பஜ்ஜி முடிஞ்சு நல்வாக்கு சொல்வார்!னு பார்த்தா பக்கத்து சீட்டு பங்கஜத்துக்கு(ஆமா! அப்படி தான் போர்டுல இருந்தது) அப்ப தான் டவுட்டு வரனுமா? நம்மாளு ஒரு வழியாக கிளியர் பண்ணிட்டு,(டவுட்டை தான்)என் சீட்டை வாங்கி ஏதோ "கவுன் பணேகா கரோர்பதி" அமிதாபச்சன் மாதிரி கம்யூட்டரை தட்டி ஸ்டேடஸ் பார்த்தார். என் 10th, 12th எக்ஸாம் ரிஸல்ட் கூட அவ்வளவு படபடப்புடன் நான் பார்த்தது இல்லை. ஒரு வழியாக என் மூதாதையர் செய்த புண்ணியத்தில் 25ம் சீட் கிடைத்தது.

ஆபிஸில் நான் திரு நெல்வேலி காரன்!னு பீத்தி கொண்டதில் ஆளாளுக்கு எவ்வளவு அல்வா வேணும்?னு லிஸ்ட் குடுக்க ஆரம்பித்து விட்டனர்.

மேனேஜர் - அரை கிலோ
சீனியர் டெக்னிகல் மேனேஜர் - 1 கிலோ
HR வைஸ் பிரெஸிடண்ட் - 2 கிலோ

வரும் போது பஸ் ஸ்டாண்டில் போலீஸ் நாய் மோப்பம் பிடித்து அல்வா பொட்டலத்தை தூக்கிண்டு ஓடிட கூடாதே முருகா!னு இப்பவே வேண்டிக் கொண்டேன்.

இது போதாது!னு டீம்ல இருக்கற வானரங்கள் வேற தனி லிஸ்ட் குடுத்ருக்கா. நீயே ஸ்வீட்! உனக்கு எதுக்கு ஸ்வீட்?னு சில மனுக்களை தள்ளுபடி பண்ணியாச்சு!

ஆக மொத்ததுல, ஆபிசுக்கே அல்வா குடுக்க போறேன். :p

சரி, எல்லோருக்கும் அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள்! இந்த தடவை மார்கட்ல ஏதவது புதுசா நயன் தாரா வெடி, பாவனா வெடி, கும்தலக்கா ரசிகா வெடி!னு வந்திருக்கலாம். எல்லாத்தையும் பாத்து ஜாக்ரதையா ஹேண்டில் பண்ணுங்கோ! நான் வெடியை தான் சொன்னேன்.

சில ஆதரவற்ற இல்லங்களுக்கும் முடிந்த பொருளுதவி அளிக்கலாம், தப்பில்லை.ஆயிரம் இரண்டாயிரம்!னு வெடிக்கு செலவழிக்கும் காசை சில பேருக்கு டிரஸ் எடுக்க குடுத்து உதவலாமே! பாவம்! சிலருக்கு வருடம் ஒரு முறை தான் புது டிரஸ் கிடைக்கும்.

இந்திய தொலைகாட்சிகளில் முதன் முறையாக "ஜோதிகாவின் தலை தீபாவளி!"னு ஒரு புரோகிராம் உடும்பு மார்க் ஜட்டிகள் விளம்பரதாரர் உதவியுடன் உலகமெங்கும் ஒளிபரப்பப் படலாம். வாயை பொலந்துண்டு டிவியவே பார்த்துண்டு இருக்க வேண்டாம், உங்கள் நண்பர்கள், பெற்றவர், உற்றவர்களை சந்தித்து பேசி மகிழலாம்.

இதோ இன்று இரவு மதுரை, நாளை மதுரை வீதிகளில் அம்பியின் திக்விஜயம், ஷாப்பிங்க் எல்லாம். இரவு நெல்லை பயணம். எப்படா வீட்டுக்கு போவோம்?னு இருக்கு. ஒரு வாரம்
பிளாக்குக்கு லீவு விட்டாச்சு. என் பிளக்கை ஜாக்ரதையா பாத்துக்கோங்கோ! பேரீச்சம்பழத்துக்கு ஆசைப்பட்டு பார்ட் பார்டா பிரிச்சு இந்த ஷ்யாம் விலை பேசி விடலாம். :)

பி.கு: சரி, நீங்களும் தலைக்கு எவ்ளோ கிலோ அல்வா வேணும்?னு சொல்லுங்கோ. வாங்கிண்டு வரேன். நான் சாப்பிட்டா நீங்க சாப்பிட்ட மாதிரி தானே? :D

Wish U all a  Safe and Prosperous Diwali  

Wednesday, October 11, 2006

பெஷ்டு கண்ணா! பெஷ்டு!'மதுரையின் மங்கையற்கரசி' 'மலையரசன் புதல்வி' அருமை சகோதரி
தீக்ஷண்யா என்னை எழுத சொன்ன பதிவு.

1)The best thing to do -
நாலு பேருக்கு நாம உதவி செய்ய முடிஞ்சா அதுவே பெரிய விஷ்யம்.

2) The best gift -
that i gave is:
பொறுமையாக சிலருக்கு எழுதறிவித்தது!

that i received- இது தான்.

அண்ணன் மகள் சித்தப்பாவுக்கு, ஒரே முத்த மழை பொழிந்து விட்டாள்.

3) The best thing I've ever heard -
அண்ணா! I got the Offer!னு உடன்பிறப்பு(Srini) என்னிடம் போனில் சொன்ன அந்த தருணம்.

4) The best thing I've said:
கவலை படாதீங்க! (srini)அவனை நான் பாத்துக்கறேன்!னு என் அம்மா அப்பவாவிடம் சொன்னது. என்னை "ஆனந்தம்" படத்துல வர மம்முட்டி மாதிரி தான் வீட்டுல நடத்துவாங்க. எதுனாலும் பெரியவனிடம்(நான் தான்!) ஒரு வார்த்தை கேட்டுகலாம்!னு அம்மா சொல்வா.

5) The best thing that happened to me:
நடப்பது எல்லாமே நல்லதுக்கு தான்!என்று நம்புகிறேன்.

6) The best person I've met:
திருமதி உமா மேடம்( Mrs.TRC)
(TRC sir, உங்க பேரு சொல்வேன்னு! பாத்தீங்களா? அஸ்க்கு புஸ்க்கு!)

7) The best friend:
என்னோட அம்மா!

8) The best moment:
When I took in-charge and lead my college NCC-Navy team for a Prestigious Camp.

9)The best book:
பகவத் கீதை.

10) The best blog:
நான் கமண்ட் போடற எல்லா பிளாகும் தான்! குறிப்பா சொல்லனும்னா,
Ms.Congeniality இவங்க எழுதற விதம் ரொம்ப பிடிக்கும். கமண்ட் போடறதுல ரொம்ப Etiquitte பார்ப்பாங்க!அனுமார் பத்தி போஸ்ட் போட்டு என்னை கண் கலங்க வச்சுட்டாங்க.

11) The best place:
எங்கள் வீடு & நெல்லை அகஸ்தியர் அருவி, பாண தீர்த்தம் (சின்ன சின்ன ஆசை!ரோஜா படம் நினைவில் உள்ளதா?)

12) The best food:
தயிர் சாதம் - மாவடு/மாங்காய் ஊறுகாய். ஸ்ஸ்ஸ்ஸ்....

13) The best song:
a)தாயே யசோதா! - மஹாராஜபுரம் சந்தானம் அவர்கள்

b)ஷ்ரி சக்ர ராஜ சிம்ஹாசனேஸ்வரி - எங்க அப்பா பாடுவார். மனமே லேசாயிடும். இப்ப எல்லாம் அப்பா ரொம்ப பாடறது இல்லை. :(

இந்த பாடலை, இப்ப தான் கேட்கற வாய்ப்பு கிடைச்சது! இப்போ இது தான் ஆபிஸ்ல ரிப்பீட்ட்ட்ட்டூ....


14) The best hangout:
மதுரையில் நண்பர்/ நண்பிகளுடன் அரட்டை அடிக்கும் விங்க்ஸ் கிச்சன்.

15) The best eatout:
மூணு வேளையும் ஹோட்டல் தான். இதுல என்னத்த சொல்வேன்! படு பாவி பசங்க பொசுக்கு பொசுக்குனு பந்த் வேற நடத்தறாங்க இந்த ஜிலேபி தேசத்துல. ம்ம்ஹும்ம்.

16) The best hobby:
குட்டி குட்டி குழந்தைகளின் செயல்களை கண் கொட்டாமல் பார்த்து கொண்டு இருப்பது! நைசா அதை பிரண்டு பிடிச்சு அதுகளோட விளையாடுவது. இப்படி தான் போன வாரம், ஒரு குழந்தையை பிரண்டு பிடிச்சு, அது என்ன விட்டு வரவே மாட்டேன்!னு அடம் பிடிச்சு, அதோட அம்மாவும், சித்தியும் என்ன செய்யறது?னு திகைச்சு போயி ஒரே ரகளை ஆயிடுச்சு. அப்புறம் நானே Dairy Milk குடுத்து சமாதானம் பண்ணி டாட்டா எல்லாம் காமிச்சேன், குழந்தைக்கு மட்டும் தான்!னு நான் சொன்ன நம்பவா போறீங்க? ம்ம்ஹும்!

17) The best TV show ever:
தூர்தர்ஷனில் வந்த சுரபி - இந்தியாவை பற்றி நிறைய தெரிந்து கொண்டேன். அதில் வரும் ரேணுகா ஷஹேன் சிரிப்புக்கு மட்டுமே சொத்தை எழுதி வைக்கலாம்.

18) The best manager:
என் அம்மா! She is More than a CEO!

19) The best musician:
கடவுள். இவரு ஒகே! ஸ்டார்ட் மீஜிக்!னு சொல்லிட்டா அப்புறம் யாரால நிப்பாட்ட முடியும்?

20) The best gang:
எம்.சி.ஏ படிக்கும் போது நாங்க ஏழு பேரு. ரெயின்போஸ் கேங்க். ஏழு வண்ணங்களை போல ஏழு விதமான குணங்கள்.
இப்போ நம்ப பிளாக்ல வர ப்ரியா, TRC sir, கார்திக், வேதா, உஷா, ஷ்யாம், பொற்கொடி, கீதா மேடம்(நான் மேடம்!னு தான் எழுதி இருக்கேன்) etc... கேங்க்.

21) The best drink:
தாமிர பரணி தண்ணீர். (என் மேல நம்பிக்கை இல்லைனா TRC சாரை கேளுங்க!)

22)The best quote:
Be Yourself! Trust will follow You! :D

23) The best woman:
ஹிஹி, My Future தங்கமணி! (இப்பவே தாஜா பண்ணி வைக்கனும் இல்ல? அப்புறம் பூரி கட்டை பறக்கும்)

24)The best kid:
நாம எல்லோரும் தான். எவ்ளோ பெரியவங்க ஆனாலும், நம்மிடம் ஒரு அளவுகாவது சிறுபிள்ளதனம் இருக்க தானே செய்யும்? பாருங்க, இந்த கீதா மேடம் தனக்கு 15 வயசு!னு சிறுபில்லதனமா போஸ்ட் போடறாங்க. நாம சகிச்சுக்கலையா? (தலைல அடிச்சுண்டு தான் அதை படிச்சேன்)

25)The best poem:
"Miles to go befor I sleep!"

26) The best dancer: இவரு தான்!

Pic courtasy: 'நவீன ரவிவர்மா' உஷாலு! :)

நந்தி பகவான் மிருதங்கம் அடிக்க, ப்ரிருங்கி தாளம் போட, சரஸ்வதி வீணை வாசிக்க, நாரதர் (நான் இல்லீங்கோ!) மகர யாழ் மீட்ட, பதஞ்சலி முனிவரின் ஜதிக்கு
"சிதஞ்சித முதஞ்சித பதம்ஜல ஜலம்ஜித மஞ்சு கடகம்!
அஹம் ஜன, மனம்ஜன .....!"

என்று சிவ கணங்கள் முன்னிலையில் டமருகம் ஒலிக்க, எனது உள்ளத்தில் எப்போழுதும் உறைந்து இருக்கும் சிவகாமியுடன் சேர்ந்து ஆடினாரே! அது ஆட்டம்.

27) The best movie:
நிறைய இருக்கு. குறிப்பா சொல்லனும்னா முகவரி. அஜித் உணர்ந்து நடித்திருப்பார்.

தனது லட்சியத்துக்கும், வாழ்க்கை போராட்டதுக்கும் இடையே சிக்கி தவிக்கும் ஒரு மிடில் கிளாஸ் பையனின் கதை. டெஹ்ராடன் லால் பஹதூர் சாஸ்திரி அகாடமியில் டிரைனிங்க் முடித்து இந்த நேரம் இந்திய ஆட்சி பணியில் அமர்ந்து இருக்க வேண்டியது. இப்படி பிளாக் எழுதும் அற்ப பதராயிட்டேன்.

28) The best actor:
மம்முட்டி. அந்த அமைதியான, ஆனால் அழுத்தமான முக பாவங்களை எப்படி ரசிக்காமல் இருக்க முடியும்.

29) The best vehicle:
என்னுடய மனம். இதை விட வேகமான ஒரு வாகனமும் உண்டோ?
இதோ TRC சார் வீட்டு சோபாவில் உக்காச்சுண்டு ஏலக்காய் டீ குடிக்கனும்!னு நினைகிறேன். ஹைய்யா! Tea குடிச்சாச்சு!

ஆஞ்சேனேயர் ஒருத்தர் தான் மனதின் வேகத்தை விட வேகமாக செல்ல கூடியவர்.
"மனோ ஜவம் மாருத துல்லிய வேகம்!"னு என் தங்க தலைவனை சும்மாவா சொல்றாங்க?

30) The best scene in a movie:
நாயகன் படத்தில் வேலு நாயக்கருக்கும், அவர் மகளுக்கும் நடக்கும் விவாதம்!
"உங்களுக்கு சரி!னு படறது மத்தவாளுக்கு தப்பு!னு படுதே அப்பா?"னு கேட்கும் அந்த சீன். நமது வாழ்க்கையிலும் இதே மாதிரி எத்தனை காட்சிகள் வந்து போகின்றன.

"அற்ப மாயைகளோ?
வெறும் காட்சி பிழை தானோ?
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?"

பி.கு: யக்கா கை வலிக்குது! :D
நானா இந்த டேகை எழுத யாரையாவது இழுத்து விட்டா, வீட்டுக்கு ஆட்டோ வரும்!னு உளவுதுறை தகவல் அளித்து விட்டது. எனவே விருப்பம் உள்ளவர்கள் Continue பண்ணலாம். நிலா ரொம்ப ஆசைபடறாங்க போல. :)

Friday, October 06, 2006

சென்னை மாநாட்டு செய்திகள்!நெல்லையில் நடந்த பிளாக்கர்கள் மாநாடு மாபெரும் வெற்றி பெற்றதை நீங்கள் யாவரும் அறிவீர்கள். இதை தொடர்ந்து நமது கழக கண்மணி குவைத்தில் நமது புகழை பரப்பி வரும் பக்கா திருடன்! சே! பக்கா தமிழன் தாம் சென்னைக்கு வருவதாகவும், சென்னையில் ஒரு மா பெரும் கூட்டத்தை ஏற்பாடு செய்து எதிர் கட்சிகளுக்கு நமது பலத்தை நீருபிக்க வேண்டிய கட்டாயத்தை எடுத்து சொல்லவும், 'ஆகட்டும் பார்க்கலாம்!" என்று சொல்லி இருந்தோம்.

தொண்டர்கள் விருப்பம் தான் நமக்கு முக்கியம்! என கருதி, சென்னைக்கு பயணபட்டோம். சென்னைக்கு வந்தால் தமது குடிலில் தான் தங்க வேண்டும்! என
TRC சார் அடம் பிடிக்கவே, அவரது விருப்பத்தை ஏற்று கொண்டோம்.

தனி விமானத்தில் வந்தால் நம்மால் பொது மக்களுக்கு இடையூறாக அமையுமே! என்று இரவு நேரம் பயணப்பட்டு ஒரு வழியாக சென்னை வந்து சேர்ந்தோம்.

காலை சிறிது ஷாப்பிங்க் எல்லாம் செய்து விட்டு, கரெக்ட்டா சாப்பாடு போடும் வேளையில் சார் வீட்டுக்கு போய் கதவை தட்டினோம். 25 - 29 வயதே மதிக்கதக்க ஒருவர்(கீதா மேடம் கவனிக்கவும்) என்னை வரவேற்றார். எதிரே நிற்பது TRC சாரின் பேரனா? இளைய மகனா?னு என் மனதில் சாலமன் பாப்பையா தலமையில் ஒரு குட்டி பட்டி மன்றமே நடந்தது. "நான் தான் TRC சார்!" என்று சொல்லவே நான் அவர் வீட்டு சோபாவில் மயங்கி சரிந்தேன்.

பின் அருமையான மதிய உண்வை அமுக்கினேன். (நல்ல வேளை கத்திரிகாய் கறி செய்யவில்லை.)

மாலை நாங்கள் இருவரும் பாப நாசம் சிவன் அவர்களின் 116 -வது பிறந்த நாள் சிறப்பு கச்சேரிக்கு நாரத கான சபாவுக்கு கிளம்பினோம். பாகவதர் கால ஜிப்பா, மற்றும் கரை வேஷ்டி கட்டிய மாமாக்களும், வைர மூக்குத்தி அணிந்த மாமிகளும் "இரும்பு அடிக்கற இடத்தில் ஈக்கு என்ன வேலை?" என்பது போல டி-ஷர்ட், டெனிம் நீல ஜீன்ஸில் வந்த எங்கள் இருவரையும் பார்த்தனர். கச்சேரி படு அமர்களம். அதை பற்றி விலாவரியாக சார் எழுதுவார்.

முக்கியமாக, "நின் மதி வதனமும் நீள் விழியும் கண்டு!" என்ற வரி வரும் போது என் பக்கத்தில் இருந்த ஒரு மாமா அவரது மாமியை பார்த்து ரொமான்ஸ் லுக் விட்டு "ரம்பா!" என்று அழைக்க, பதிலுக்கு மாமியும் "ஸ்வாமி!"னு திருப்பி போட்டு தாக்க, அட்ரா சக்கை! அட்ரா சக்கை! ம்ம்ஹ்ம்ம்.

அடுத்த நாள் தான் சென்னை பொது கூட்டம் என்று முடிவாகி இருந்தது. ஏற்கனவே சொன்ன இடம் சின்னதாக இருந்ததால், சார் அவரது மனதை போலவே பெரியதான அவரது வீட்டுக்கே மாற்றப்பட்டது.

"கழக கண்மணி! டகால்டி ராணி! எம்முடன் ஒரு கொடியில் பிறந்த இரு மலரான போர்கோடி!" சே! பொற்கொடி முன்னதாகவே வந்து மாநாட்டு பந்தல் முகப்பில் காத்திருந்தார். "வாழ்வளித்த தெய்வம்!"
வேதா(ளம்) தமது சுண்டல் கலக்க்ஷன் பணியை கூட விட்டு விட்டு பொது கூட்டத்துக்கு வந்திருந்ததை பார்த்து அதிர்ச்சியில் எமக்கு பேச்சே வர வில்லை...

தொண்டர்களை பிக்-கப் செய்ய எதிர்கட்சிகள் லாரி தான் ஏற்பாடு செய்வார்கள். ஆனால் நாங்கள் சொகுசு காரில் அனைவரையும் அழைத்து வந்தோம். இதற்கிடையில் பக்கா தமிழனும் வந்து சேர்ந்தார். டிநகர் பிரசாரத்தில் தான் மும்முரமாக இருப்பதால் கூட்டதில் கலந்து கொள்ள முடியாமைக்கு செல்பேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார். சசிபிரபா அவர்கள். (சசி, சென்னை சில்க்ஸ்ல அன்று புடவை செம விற்பனையாமே? உண்மையா?)

இப்படியாக சார் வீட்டில் கசேரி களை கட்டியது. பிளாக்கர்கள் சந்திப்புக்கும் போண்டாவுக்கும் என்ன சம்பந்தமோ? இங்கேயும் போண்டா தான்! கூடவே சமோஸாவும் ஏலக்காய் டீயும்! உமா மேடத்தின் (சாரின் பிரதம மந்திரி) நல்ல மனம் போல டீயும் இனித்தது.விருந்தோம்பலில் தமிழர்கள் தலை சிறந்தவர்கள்! என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து விட்டார் சார்.

வெறும் இரண்டு பேரை வைத்து நெல்லையில் மாநாடா? என்று கை தட்டி கொக்கரித்த கூட்டமே! இன்று என்ன சொல்ல போகிறீர்கள்?

இரண்டு ஐந்தானது! நாளை ஐநூறு ஆகும்.
இன்று சென்னையில் மாநாடு நடத்தி விட்டோம்,
நாளை டெல்லியில் நடத்துவோம்.
பின் நாளை மறு நாள் அமெரிக்கவில் ஐ. நா சபையில் கோபி அன்னன் தலைமையில் நடத்துவோம்.

(ஹி,ஹி உஷா, இது அந்த
கோபி இல்லைமா! அண்ணாவை கோச்சுக்காத!)

போனா போகுது, வயதில் பெரியவர்கள்!னு சொல்லி கீதா மேடத்துக்கு(யாருப்பா அது? பாட்டி!னு வாசிக்கறது?) செல் பேசினால் மொபைலை அணைத்து விட்டார்கள். சரி! பாவம், பயண களைப்பு! மேலும் குதிரையில் இருந்து வேறு கீழே விழுந்து மூக்கில் அடி பட்டு கட்டு போட்டிருப்பதாக கேள்வி! எனவே தொந்தரவு செய்யவில்லை.

"ஒசில போண்டா தறாங்க!"னு விஷயம் வெளியே தெரிந்தால் மிக பெரிய கூட்டமே கூடி விடும் என்ற பயம் கருதி கட்சி உயர்மட்ட குழு மீட்டிங்க் போல இது ரகசிய கூட்டமாகவே நடத்தப்பட்டது. உடனே இதை கட்-காப்பி-பேஷ்ட் பண்ணி
"கீரை கடைக்கு எதிர்கடையா? உனக்கு பிடிச்சது தயிர் வடையா?"னு ஒரு பில்டப் குடுத்து மீள்பதிவு போட்டு விட வேண்டாம்.

இது பிரியாணி பொட்டலம் குடுத்து சேர்த்த கூட்டமல்ல, அன்பால் தானாகவே (போண்டாவுக்கு) சேர்ந்த கூட்டம்.

இது மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இன்னொரு முறை மூத்த பிளாகர் கீதா மேடம் தலை(மை)யில் நடத்தலாம் என்றும், அப்போழுது சுட சுட வாழைக்காய் பஜ்ஜியும், கொத்தமல்லி சட்னியும் பறிமாறப்படும்! என்ற வரலற்று சிறப்புமிக்க தீர்மானம் இயற்றப்பட்டது. இதனால் மேலும் பலர் ஜோதியில் ஐக்கியமாவர்கள்! என்று உளவுத்துறை தகவல் அளித்துள்ளது.

பி.கு: இது ஒரு வெள்ளோட்டம் தான். பலரது ஈ.மெயில் முகவரி தெரியவில்லை. நானும் தனி போஸ்ட் போட்டு தெரியபடுத்த வில்லை. அடுத்த முறை இன்னும் சிறப்பாக செய்வோம். என்ன மக்களே! சரி தானே? இதுகேல்லாம் அழ கூடாது! :)