Friday, November 16, 2007

ஓம் ஷாந்தி ஓம்!

இப்ப எங்க டீம்ல இருக்கற எல்லாரும் மாஞ்சு மாஞ்சு ஈ ஓட்டிட்டு இருக்கறதுனால, என்ன பண்ணலாம்?னு கான்பிரன்ஸ் ரூம் புக் பண்ணி யோசிச்சோம். அப்ப தான் ஒரு சப்பாத்திக்கு இப்ப ரிலீஸ் ஆகியிருக்கற இந்த படம் போகலாம்னு பல்பு எறிய, மடமடனு மானேஜரையும் ஆட்டத்துக்கு சேர்த்து, ஒரு முக்யமான மீட்டிங்க் இருக்கு, லேட்டா வருவேன்!னு தங்கமணிக்கும் தகவல்(அல்வா) குடுத்து டிக்கட் புக் பண்ணியாச்சு.

சரி, படத்தின் பெயரை பாத்தால் எதோ தியானம், மன அமைதி, உம்மாச்சி வர பக்தி படம்னு பாத்தா கதை என்னவோ நம் தமிழில் ஒரு டஜன் படங்களுக்கு மேலாக அரைத்த மறுஜென்மம் மாவு தான் என்றாலும், இவங்க கொஞ்சம் பிரஷ்ஷா தண்ணி விட்டு அரச்சு இருக்காங்க.
பொதுவா ஹாரூக் படம் எல்லாம் எனக்கு போகோ சானல் பாக்கற மாதிரி காமடியா இருக்கும். இந்த படமும் அதே மாதிரி தான். எழுபதுகளில் வாழ்ந்த ஒரு ஜூனியர் ஆர்டிஸ்டாக ஷாரூக் வருகிறார். பெரிய காலருடன் கலர் கலர் சட்டை, பெல்பாட்டம் பெண்ட் அணிந்து தன் நண்பனுடன் அவர் அடிக்கும் லூட்டி சிரிப்பை வரவழைக்கிறது.


பிலிம் பேர் அவார்டுக்கு டகால்டி பண்ணி ஹாலுக்கு உள்ளே நுழையும் காட்சி டாப் என்றால் தன் உள்ளங்கவர் நடிகையை கவர தமிழ் ஹீரோ மாதிரி சண்டையிடும் ஹூட்டிங்க் காட்சி விவிசி.


ஹீரோயின் புதுமுகம் தீபிகா படுகோனே - பிரபல பாட்மிட்டன் சாம்பியன் ப்ரகாஷ் படுகோனேவின் மகள். அம்மணிக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்து இருக்கு. ஷாரூக் படத்தில் ஹீரோயின்(கள்) எல்லாம் எம்டிஆர் ஆவக்காய் ஊறுகாய் கணக்கா சும்மா தொட்டு கொள்ள வந்து போவார்கள். இதில் தலை கீழ். அம்மணிக்கு நடிப்பதற்க்கு செம வாய்ப்பு. அழகாய் ஸ்கோர் பண்ணி இருக்கிறார்.
வர வர கலி முத்தி விட்டது. பின்ன என்ன, சல்மான் தான் சட்டை இல்லாமல் பாடல் காட்சியில் வலம் வருவார் என்றால் இந்த ஷாரூக் கூட சட்டை இல்லாமல் ஐட்டம் சாங்க் ஆடுகிறார்.
காமிரா நம்ம ஊர் மணிகண்டன். படம் முழுக்க கண்ணை உறுத்தாத வகையில் காமிரா கோணங்கள். கலை சாபு சிரில்.படத்தில் வரும் பிரமாண்ட ஸ்டுடியோ செட்கள் சும்மா அதிருது.


ரெண்டு பாட்டு முணுமுணுக்க வைக்குது.
ஒரு பாட்டுக்கு ஹிந்தி படவுலகே திரண்டு வந்து ஷாரூக்கோடு ஆட்டம் போடுகிறது. பின்னணி இசையில் கவனம் செலுத்திய மீஜிக் டைரக்டர் பாட்டுகளை சும்மா காத்தாட விட்டு விட்டார்.
ரெண்டாம் பாதி கொஞ்சம் ஜவ்வா இழுக்குது. முடிவு எல்லாம் நாம் அதுவும் தமிழர்கள் ஈசியா யூகிக்க கூடியது தான். நெஞ்சம் மறப்பதில்லை!னு ஆரம்பிச்சு, நானே வருவேன்! வரைக்கும் எத்தனை தமிழ் படம் பாத்து இருப்போம்.
சும்மா உங்க பிரண்ட்ஸோடு ஜாலியா போயிட்டு வாங்க. படத்துல காத்து இல்லை,கருத்து இல்லைனு எல்லாம் குத்தம் சொல்ல கூடாது. மேசேஜ் சொல்றத்துக்கு இந்த படம் என்ன செல்போனா?
ஷாரூக் சொந்த காசை போட்டு படம் எடுத்ருக்கார்.
ஏற்கனவே படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டாம். கல்லா களை கட்டியாச்சாம்.

Thursday, November 15, 2007

வேல்


முருக வழிபாட்டில் வேலுக்கு முக்யமான ஒரு இடம் உண்டு. ஏனேனில் வேலானது சக்தியின் மறுப்ரதியாகவே கருதபடுகிறது. முருகனடியார்கள் வேலை தம் இல்லத்தில் வைத்து வணங்குவது வழக்கம். திருபரங்குன்றத்தில் கூட வேலுக்கு தான் சகல விதமான அபிஷேகங்கள் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.(தகவல் தவறாயிருப்பின், வலிக்காமல் குட்டி திருத்தவும்).

கந்த சஷ்டி கவசத்தில் முருகனை பாதாதிகேசம் அழகாக வர்ணித்த பால தேவராயர், முருகன் கை வேலை அடியவர் தம் அனைத்து அவயங்களையும் காக்க வருமாறு அழைக்கிறார். பக்தர்தம் துன்பத்தை போக்க, எப்படி விஷ்ணுவின் சுதர்சன சக்ரம் விரைந்து வருமோ அதை போல முருகன் வருமுன் அவனது கைவேல் விரைந்து வந்து விடுமாம்.

பொதுவாக தமிழ் பேசும் இடங்களில் எல்லாம் முருகன் வியாபித்து இருக்கிறான். அது மலேசியாவாகட்டும், சிங்கப்பூர், லன்டன், அமெரிக்கா என முருகனடியார்கள் அவனது திருபுகழை பாடி பரவசமடைகிறார்கள். இதனால் தானோ என்னவோ அம்பிகையை பாடி வந்த ஆதிசங்கரர் திருசெந்தூரில் குடி கொண்டிருக்கும் முருகனை சுப்ரமண்ய புஜங்கம் பாடி வழிபட்டார்.
சஷ்டியில் (விரதம்) இருந்தால் அகப்பையில் வரும் என்பதை தான் நம் மக்கள் சட்டியில் இருந்தால் ஆப்பையில்(கேசரி?) வரும் என மாற்றி விட்டனர்.

இன்று கந்த சஷ்டி. திருசெந்தூரில் மக்கள் கூட்டம் கடல் அலையென கூடி நிற்கும். அகங்காரம் அழித்து, பகைவருக்கும் அருள் புரிந்து நிற்பான் கந்தன்.
சரவண பவ! என வள்ளி கணவனை காவடி சிந்து பாடி, கூவி அழைத்தால் கண்டிப்பாக குரல் குடுப்பான்.


பி.கு: தலைப்பை பார்த்து தலைதெறிக்க வந்த பக்த கோடிகளுக்காக பழனி பஞ்சாமிர்தம். :)
சென்ற வருட பதிவு இங்கே

Tuesday, November 06, 2007

தல தீபாவளிலூசா இருக்கும் டிராயரை அடிக்கடி தூக்கி விட்டு கொண்டு, காமராஜர் மாதிரி முழங்கை வரைக்கும் சட்டை போட்டு கொண்டு, ஓடி ஓடி பிஜிலி வெடி போட்டு, பொதிகை டிவில ரஜினி, கமல் புது பட டிரெயிலர் பார்த்து பெருமூச்சு விட்டு, அம்மா செஞ்சு வெச்ச கேசரில ஆரம்பிச்சு, பக்கத்து வீட்டு ஆன்டி குடுத்த கல்கோனா (மைசூர் பாகுனு அவங்க சொல்லிக்குவாங்க) வரை உள்ளே தள்ளி, அடுத்த நாளே கார்க் புடுங்கி தீபாவளி கொண்டாடிய நாட்கள் போய், பத்து நாட்களுக்கு முன்னாடி வரைக்கும் லீவுக்காக மேனேஜர் கேபினுக்கு காவடி எடுத்து, டிரேயின் எல்லாம் கோட்டை விட்டு, பாடவதி பஸ்ஸில் பயணம் செய்து ஒரு வழியாக ஊருக்கு போய், பாத்து பாத்து வாங்கிய புடவையை அம்மாக்கு குடுத்து அவர்கள் முகத்தில் மின்னல் கீற்றாய் ஒளிர்ந்து மறையும் புன்னகையை பாத்து சந்தோஷப்பட்டு, தீபாவளி கொண்டாடிய காலமும் கடந்து போய்,புடவை எல்லாம் இந்த பெங்களூரில் ஒன்னும் சரியா அமையாது! எல்லாம் சென்னைல பாத்து, கேட்டு உனக்கு எடுத்து தரேன், இல்லாட்டி ராசுகுட்டி மாதிரி ஒரு புடவை நாமளே ஆர்டர் குடுத்ருவோம் என்ன?னு தங்கமணிக்கு மெய்யாலுமே அல்வா குடுத்து தல தீபாவளி கொண்டாட கிளம்பியாச்சு.

தல தீபாவளினாலே, எல்லோரும் அடுத்து கேட்கும் கேள்வி, அப்பறம், மாமனாருக்கு எவ்ளோ வேட்டு வைக்க போற? செயினா? மோதிரமா?

ஆஹா, இதேல்லாம் நம்ம கீதா பாட்டி காலத்துல வேணா நடந்ததா இருக்கலாம். இப்ப எந்த ரங்குவாவது வாய் திறந்து கேட்க முடியுமா? இல்ல, நினைக்க தான் முடியுமா? பின்னி பிரிய கழட்டிடுவாங்க இல்ல? :)

சென்னைல மழை கொட்டு கொட்டுனு கொட்டுது. இதுல எங்க போய் வெடி வெடிக்க? அப்படியே வெடிச்சாலும், எல்லாம் புஸ்ஸுனு தான் போக போகுது. அதனால பேசாம, மாமியார் செஞ்ச மிகசரோட சோபாவுல செட்டில் ஆயிட்டோம்னா நமீதாவோட சேர்ந்து நாமளும் தீபாவளி கொண்டாடிடலாம்.

என்னை போலவே தல தீபாவளி கொண்டாடும் நமது நண்பர்களான கைப்புள்ள, 'பிரியமான நேரம்' ப்ரியா, பொற்கொடி, பத்ம ப்ரியா, மணிப்ரகாஷ் ஆகிய எல்லோருக்கும் என் தீபாவளி வாழ்த்துக்கள். அடுத்த வருஷம் தல தீபாவளி கொண்டாட ரெடியாக இருக்கும் நண்பர்களுக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள். :)

பி.கு: என்னடா இந்த பதிவுக்கு அஜித் படம் போட்டு இருக்கே?னு நீங்க கேக்கலாம். மறுபடி ஒரு தடவை தலைப்பை வாசித்து பார்க்கவும்.

Friday, November 02, 2007

விளம்பரங்கள் - II

part- I

ஒரு விளம்பரம் வெற்றியடைய அடிப்படையாக சில விஷயங்கள் தேவை.

1) மக்கள் வாழ்வோடு தொடர்புடைய நிகழ்வுகளை சிம்பிளாக சொல்லும் விதம். எ.கா: குழந்தைகள் உண்டியலில் சேமிக்கும் பழக்கத்தை அழகாக தங்கள் வங்கிக்கு பயன்படுத்தி இருப்பார்கள் பாங்க் ஆப் இந்தியா.

2) எளிமையான, நாம் அன்றாடம் புழங்கும் வார்த்தைகள், வரிகள், பாடல்கள். புது வீடு! புது மனைவி! கலக்கற சந்துரு! - ஏஷியன் பெயின்ட்ஸ்.

3) விளம்பர படத்தில் நடிக்க தேர்ந்தெடுக்கப்படும் மாடல்கள் நமது பக்கத்து, எதிர் வீட்டு தெரிந்த முகங்கள் போல இருப்பது பிளஸ் பாயிண்ட். பத்தே மூவுல செக் மேட் என பிஸ்து காட்டுவாரே அந்த ஏர்டெல் தாத்தா மாதிரி.

இது மூணும் சரியாக இருந்து விட்டால் அந்த விளம்பரம் ஹிட் என நான் அடித்து கூறுவேன்.

வளவள டயலாக்ஸ், சொல்ல வந்த விஷயத்தை தலையை சுத்தி மூக்கை தொடும் பாணி, முகம் சுளிக்க வைக்கும் விதமாய் படமாக்கிய விதம் என பல விஷயங்கள் ஒரு நல்ல பிராண்டை கூட மக்கள் ஏறெடுத்து பார்க்காத நிலைக்கு தள்ளி விடும்.

நான் சொன்ன அடிப்படை விஷயங்கள் தவிர ஒவ்வோரு பொருளை மார்கட் பண்ண ஒரு தனி டெக்னிக் கையாள வேண்டி இருக்கும்.
உதாரணமாக, "வாஷிங்க் பவுடர் நிர்மா! பாலை போல வெண்மை - நிர்மாவாலே வருமே!" என பாட்டு பாடி, நிர்மாவின் சிறப்பை சொல்லுவது ஒரு விதம் என்றால் மஞ்ச கட்டியை வாங்கினா மஞ்ச சட்டை, நீல கட்டியை வாங்கினால் வெள்ளை சட்டை என கம்பேரிசன் பண்ணி தனது மார்கட் எதிரிக்கு ஆப்பு வைப்பது ஒரு வகை.

ஆடை வகைகளுக்கு என்றுமே ஒரு தனி மார்கட் உண்டு. பொங்கலுக்கு ஆரம்பித்தால் கிறிஸ்மஸ் வரை புத்தாடை வாங்காத ஆள் தான் யாரு? அதுவும் புடவை என்றால் கேட்கவே வேணாம்.
எனவே ஜவுளி கடைகள் போட்டி போட்டு கொண்டு விளம்பர ஏஜன்சிகளை அணுகி ஒரு படம் எடுத்து குடுங்க எஜமான்! என கெஞ்சுகின்றன. இதில் டாப் டக்கர் என சொன்னால் சென்னை சில்க்ஸ் தான்!
"மத்தாப்பு சுட்டு சுட்டு போட தான் வேணும்" என ரீமேக் சாங்க் பாடி, சென்னை சில்க்ஸில் தீபாவளி! என ஒரு தீபாவளியை நம் கண் முன் கொண்டு வந்து விடுகிறார்கள். முக்யமாக, இவர்கள் தேர்ந்தெடுக்கும் மாடல்கள் இருக்கே! ஆஹா! சுப்பரோ சூப்பர்!

இப்போழுது ஸ்ரீதேவி சில்க்ஸ் - கோவை ஒரு விளம்பரம் காட்டுகிறார்கள்.
ஏதோ ஒரு பழைய பாடலை நினைவுபடுத்தும் வகையில் "ஆசை அதற்க்கும் மேலே!" என ஒரு மாடல் தன் தோழியரோடு ஆடுவது அடடா! கண் கொள்ளா காட்சி. அந்த மாடல் நடிகை பத்மப்ரியா தான்! என என் தங்கமணி அடித்து(தரையில தான்) கூற, நான் இல்லை என மறுக்க, இப்படியாக இன்னும் அந்த விளம்பரம் சென்சார் இல்லாமல் எங்கள் வீட்டில் ஓடி கொண்டிருக்கிறது. (இனி என்ன ஆகுமோ?)

சரவணா ஸ்டோர்ஸ்காரர்கள் சினேகாவை தங்கள் விளம்பரங்களுக்கு வருட கான்டிராக்ட் போட்டுவிடுவார்கள் போலும். ஆனால் தீடிர்னு "எல்லோர் கண்களும் எந்தன் மேலே"னு அழகான ஒரு அமீர் கல்யாணி ராகத்தில் அமைந்த ஜிங்கிளுக்கு ஷ்ரேயா ஆடி வருகிறார்.

சரி, டிராக் மாறி விட்டேன்.
இப்போ விளம்பர ஏஜன்சிகளின் லேட்டஸ்ட் டிரண்ட் குழந்தைகளை முன்னிலைபடுத்தி விளம்பரங்களை அமைப்பது.
a) மூணு மாசம் முழுகாம இருக்கேன்!னு தன் கணவனுக்கு ப்ரூ காப்பி குடுத்து புரிய வைக்கிறாள் அவரது தங்கமணி.
b) ஆரோக்யம்னா அது கோல்ட் வின்னர் தான்!னு சமையலே தெரியாத ஒரு குழந்தை அம்மாக்களுக்கு அறிவுறுத்துகிறது.
c) கறை நல்லதாக்கும்!னு ஒரு பாசமலர் அண்ணன் -தங்கை குழந்தைகள் சொல்கின்றன.
d) தாத்தா குடுத்த உண்டியலை, பத்ரமா பாங்க் ஆப் இந்தியாவின் லாக்கரில் வைக்கிறான் அந்த பொடியன்.
e) நூடுல்ஸ் எங்கே?னு வீட்டையே அட்டகாசம் செய்கிறான் ஹார்லிக்ஸ் பொடியன்.

அடிப்படையில் லாஜிக் இல்லை என்றாலும், நம் மனதில் இத்தகைய விளம்பரங்கள் ஒரு மாஜிக் செய்து விடுகின்றன, இல்லையா?
விளம்பரங்கள் காலத்துக்கேற்ப மாறிக்கொண்டே வரனும். இல்லாவிட்டால் மக்களுக்கு போரடித்து விடும்.
அமுல் - டேஸ்ட் ஆஃப் இந்தியா சிறந்த உதாரணம். சென்னையில் பனகல் பார்க், மவுண்ட் ரோடு என நெரிசல் மிகுந்த சிக்னல்களில் பில் போர்டுகள் வைத்து இருப்பார்கள். வாரம் ஒரு முறை, அந்த வாரத்தில் நடந்த ஏதேனும் முக்ய நிகழ்வுகளை ஹைலைட் பண்ணியிருப்பார்கள். கவனித்ததுண்டா?

கற்பனை வளமும், கிரியேட்டிவா திங்க் பண்ண தெரிந்து இருந்தாலும், மக்களின் மனசை பல்ஸ் பிடித்து பார்க்க தெரிந்து இருந்தால், எல்லாவற்றுக்கும் மேலாக நீங்கள் செய்யும் விஷயத்தை ரசித்து, அனுபவித்து செய்ய கூடிய மனபான்மை இருந்தால், விளம்பர துறை உங்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க தயாராக இருக்கிறது.

வாய்ப்பு கிடைத்தால், கோபிகாவுடனோ, யானா குப்தாவுடனோ மாடலாக நடிக்க நான் கூட தயாராக தான் உள்ளேன். ஒரு பயலும் கூப்ட மாட்டேங்கறான். மீசையை எடுத்து, கோட் சூட் போட்டா நானும் சஞ்சய் ராமசாமி தான்!னு சொன்னா தங்கமணி வாயை மூடிக் கொண்டு சிரிக்கற நிலைமை தான் உள்ளது. ஹும்! ஆசை இருக்கு தாசில் பண்ண! அதிர்ஷடம் இருக்கு பிளாக் எழுத! :)

நாகை சிவா வீட்டுக்கு போய் பல விளம்பரங்களை கண்டு ரசியுங்களேன்.