Friday, June 26, 2009

கேள்வி கேக்கறது ரொம்ப ஈசி

நீங்கள் எப்போதாவது ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து இருக்கிறீர்களா? இந்த சங்கிலி தொடரை ஆரம்பித்தவர் அனேகமாக இதை மனதில் கொண்டு தான் இப்படி கேள்விகளை கொக்கி போட்டுள்ளார் என எனக்கு தோன்றுகிறது.

1) உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

சொந்த பெயரை(ரெங்க ராமன்) தானே கேக்கறீங்க? பெயர் எல்லாம் அப்பா அம்மா வெச்சது தான். ரொம்ப பிடிக்கும். ஏறக்குறைய ஐம்பதாயிரம் பேர் ஆணி புடுங்கும் என் கம்பெனியில் என் பெயர் கொண்ட இன்னொரு நபர் இல்லவே இல்லை.

2) கடைசியா அழுதது எப்போது?

போன ஞாயிறன்று. ஆனாலும் வெங்காயம் ரொம்பவே படுத்தி விட்டது. சுயிங்கம் சாப்பிட்டு கொண்டே வெங்காயம் உரித்தால் கண்ணீர் வராதாமே! உண்மையா?

3) உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?

பத்தாவது வரை அழகாக இருந்தது. காலேஜ் வந்தபுறம் அவசர அவசரமா புரபசர் சொல்வதை நோட்ஸ் எடுத்ததால் கையெழுத்து கெட்டு விட்டது. வேற யாராவது கையெழுத்து போட்டு எனக்கு குடுக்கும் காசோலை ரொம்ப பிடிக்கும்.

4) பிடித்த மதிய உணவு?

சின்ன வெங்காயம் போட்டு மணக்க மணக்க சாம்பார் + உருளைகிழங்கு(காரம் சேர்த்த) ரோஸ்ட்.

செம பசியோடு இருக்கும் போது சாப்பிடும் படி இருக்கும் எந்த சைவ உணவும் எனக்கு இஷ்டமே!

5) நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?

கண்டிப்பாக. முதலில் உங்களை நீங்களே நேசியுங்கள். தன்னாலே உலகம் உங்களை நேசிக்கும்! என்ற வரிகளை நம்புகிறேன்.

6) கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில குளிக்கப் பிடிக்குமா?

அகத்தியர் அருவி, பாண தீர்த்தம்னு மணிக்கணக்கா மூழ்கி முத்தெடுத்த கூட்டம்லே நாங்க. தடுக்கி விழுந்தாக் கூட தாமிர பரணியில் தான் விழுவோம்லே நாங்க.

7) ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?

முகம். ஒருவரின் மன நிலையை முகமே காட்டி விடும்.

8) உங்கள் துணைவர்/துணைவி கிட்டே உங்களுக்குப் பிடிச்ச/பிடிக்காத விஷயம்?

பிடித்தது: எதையும் உடனே செய்து விட வேண்டும் என்ற துடிப்பு. பல சமயங்களில் அது எனக்கே ஆப்பாகி விடுகிறது. :)

பிடிக்காதது: "கலகம் விளைவிக்கும் கேள்விகளை தவிர்த்தால் மங்களம் உண்டாகும்" என சீவல்புரி சிங்காரம் என் ராசிக்கு பலன் சொல்லி இருக்கார், எனவே, நாம அடுத்த கேள்விக்கு போவோமே, ப்ளீஸ்.

(ஆமா, யாரது மங்களம்? என்றெல்லாம் கலாய்த்து பின்னூட்டம் போடக் கூடாது. )

9) இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?

கோபிகா, நயன் தாரா என நான் சொல்வேன் என நீங்கள் எதிர்பார்த்தால் நான் பொறுப்பல்ல. என்னோடு எம்சிஏ படித்த சில நண்பர்கள் இப்போ அருகில் இல்லை.

10) இதை எழுதும்போது என்ன நிறத்தில் ஆடை அணிந்துள்ளீர்கள்?

கறுப்பு கலர் டி-ஷர்ட், சாம்பல் கலர் காட்டன் பேண்ட்.

11) என்ன பார்த்து/கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?

வேற என்ன, நான் பிடுங்கி கொண்டிருக்கும் ஆணியை தான் பாத்திட்டு இருக்கேன். என் பக்கத்து சீட்டிலிருந்து ஏதோ ஒரு மலையாள பாடல் முணுமுணுக்கப்படுகிறது. வல்லிய கேரளம். :)

12) வர்ணப் பேனாவாக உங்களை மாற்றினால், என்ன நிறப் பேனாவாக மாற ஆசை?

ஸ்கை ப்ளூ. ஆமா பேனாவா மாத்தி யாரு கைல குடுப்பீங்க?


13)பிடித்த மணம்?

ரவையை நெய்யோடு சேர்த்து ஐஸ்வர்யா ராய் நிறத்துக்கு வறுத்துகொண்டு, ஒன்றுக்கு ரெண்டு பங்கு சீனி போட்டு, நெய் விட்டு, பதமாக கிண்டிய கேசரியை சுட சுட வாழை இலையில் போடும்போது ஒரு நறுமணம் வரும். அது நமக்கு ரொம்ப இஷ்டம்.

14) நீங்கள் அழைக்கப்போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்? அவரை நீங்கள் அழைக்கக் காரணம் என்ன?

எல்லாரையுமே பிடிக்கும். விருப்பமும், நேரமும் உள்ள யாரும் அம்பி அழைத்ததாய் நினைத்து எழுதலாம், படிக்க ஆவலாய் உள்ளேன்.

15) உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

ராப்: வலையுலகில் வேஷம் போடாமல் மனதில் பட்டதை கலக்கலாய் சொல்ல தைரியம் கொண்ட இவரின் எல்லா பதிவுகளும் தான்.

பிளாகேஸ்வரி: இவரின் எல்லா விளம்பரங்கள் தொடர்பான பதிவுகள் மற்றும் இவரின் நையாண்டி தொணி கலந்த மற்ற பதிவுகளும் தான்.

ஸ்ரீதர்: மிக நேர்த்தியாய், கொஞ்சமும் லாஜிக் இடிக்காமல் இவர் எழுதும் கதைகள்.

16) பிடித்த விளையாட்டு?

லக்கோரி. ஏழு கற்களை வரிசையாக அடுக்கி ஒரு டீமிலிருந்து பந்தை எறிந்து அந்த கற்களை சிதறடிக்க வேண்டும். எதிரணி பந்தை எடுத்து நம்ம டீம் ஆட்கள் மீது எறிவார்கள். நம்மாட்கள் எல்லாரும் அவுட் ஆகறதுகுள்ள சிதறிய கற்களை அடுக்கிடனும். செம த்ரில்லா இருக்கும்.

ரெண்டு விஷயம் இதுல ரொம்ப முக்யம்:

1) கற்களை சிதறடிக்கும் போது கவனமா இருக்கனும். பிள்ளையாருக்கு தேங்காய் வடல் போடற மாதிரி எறிந்தால் அம்பேல்.

2) பந்தை கரக்ட்டா எறிந்து எதிரணியை அவுட் ஆக்கனும். ஒரு தடவை, என் டீம் எறிந்த பந்து குறி தவறி தெருவில் ஒரு மாமியின் பின்புறத்தை பதம் பார்த்து விட மொத்த ஆட்டமும் க்ளோஸ். ஆனா அந்த மாமியின் ரங்கமணி எங்க டீமுக்கு ரகசியமாய் ஆளுக்கு நூறு கிராம் அல்வா வாங்கி தந்தார். :)

17) கண்ணாடி அணிபவரா?

இப்பொழுது கணினிக்கு முன்னால் மட்டும்.

18) எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும்?

போரடிக்காமால் விறுவிறுப்பான திரைகதை உள்ள எந்த படமும்.
பிரெஞ்சு, ஜப்பான், இரானிய மொழி படங்கள் எல்லாம் பாக்க ஆசை, ஆனா இன்னும் நேரம் வாய்க்கவில்லை (அப்படின்னு சொல்லிக்க வேண்டியது தான்)

19) கடைசியாகப் பார்த்த படம்?

வெண்ணிலா க-குழு மற்றும் யாவரும் நலம் (டிவிடி).

20) பிடித்த பருவ காலம் எது?

வெண்பொங்கல் மணம் வீசும் மார்கழி மாதம்.

21) என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?
Magic of Thinking Big

22) உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்றுவீர்கள்?

ஆபிஸ்ல படமே வைக்கறதில்லை.
லேப்டாப்பில் நயந்தாரா, அனுஷ்கா,மேக்னா நாயுடுனு வைக்கனும்னு ஆசை தான், மேலிடம் அனுமதி கொடுக்கவில்லை.

23)பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

மென்டலின், புல்லாங்குழல் இசை பிடிக்கும்.

பூமியில் டர்ர்ர்னு போரிங்க் போடற சத்தம், குழாயை டொர் டொர்ர்னு ரம்பம் வைத்து அறுக்கும் சத்தம் பிடிக்காது.

24) வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு?

இந்த பக்கம் ஆப்ரிக்கா, அந்த பக்கம் அன்டார்டிகானு சொல்ல ஆசை தான். ஆனா அங்க எல்லாம் போனதில்லை. இப்போதைக்கு இந்த பெண்களூரு தான்.

25) உங்களிடம் ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?

இதை என் நண்பர்களாகிய நீங்கள் தான் சொல்லனும். அடக்கம் அமரருள் உய்க்கும் யு நோ!

26) உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்?

தன் பொறுப்பை தட்டிக் கழிக்கும் பொது வாழ்வில் ஈடுபட்டுள்ளவர்களின் செயல்கள்.

27) உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

முன் கோபம்

28) உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?

முன்னார் (கேரளா)

29) எப்படி இருக்கணும்னு ஆசை?

போதுமென்ற நிறைவான மனதுடன்.

30) கணவர்/மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?

மறுபடியுமா? விட மாட்டீங்க போல. பெங்களூர் தக்காளியில் தொக்கு போட்டால் ருசியா இருக்காது, ஆனா ஜாம் செய்யலாம், குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். நாம அடுத்த கேள்விக்கு போவாமா? ( நன்றி பொதிகையில் எதிரொலி நல்ல தம்பி)

31) வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க.

உருகும் ஐஸ்க்ரீம்.
முழுதும் உருகுமுன் நீங்களும் உண்டு பிறருக்கும் பகிர்ந்து வாழுங்கள். (எனக்கே இது டூ மச்சா தெரியுது)

32) உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

பிடித்தது: அதீத தைரியம் (சில நேரங்களில் மட்டும்).

பிடிக்காதது: முன் கோபம், சில சமயம் சோம்பல்.

Thursday, June 18, 2009

பேரம்

காலை பத்து மணி:

மிஸ்டர் ரவி, நாங்க 'கெக்ரான் மொக்ரான்' கம்பெனியின் இருந்து பேசறோம். போன வாரம் உங்க கூட நடந்த டிஸ்கஷன்ல நாங்க ரொம்ப இம்ரஸ் ஆயிட்டோம். உங்கள செலக்ட் பண்றதுன்னு முடிவும் பண்ணிட்டோம். ஆனா நீங்க கேக்கற சம்பளம் தான் ரொம்ப ஜாஸ்தின்னு எங்க ஹெட் பீல் பண்றார். கொஞ்சம் மறுபரிசீலனை பண்ண முடியுமா?

ரொம்ப தாங்க்ஸ் சார், ஆனா சம்பளம் நான் சொன்னது தான், ஏன்னா இப்ப என் டெக்னாலஜிக்கும், என் அனுபவத்துக்கும் நல்ல டிமாண்ட் இருக்கு. உங்க ஹெட்கிட்ட பேசிட்டு மதியத்துகுள்ள சொல்லுங்க, எனக்கு இன்னொரு ஆஃபரும் கைல இருக்கு!

ரவி போனை தூண்டித்து விட்டு மனைவியை பார்த்து, பத்து நிமிஷத்துல மறுபடி கால் பண்ணுவாங்க பாரு! என கண் சிமிட்டினான்.

சொல்லி வெச்ச மாதிரி மறுபடி கால், பேரம் ரவிக்கு சாதகமாய் படிந்தது.

நைட் டின்னருக்கு லீ மெரிடியன் போகலாமா திவ்யா?

வேணாங்க, டெலிவரி டைம், எப்போ வேணாலும் வலி வரலாம்.

ஆமா, நீ சொல்றதும் கரக்ட்டு தான்.

*************************************************************************

நன்பகல் ஒரு மணி

டாக்டர்! நார்மல் டெலிவரி ஆயிடும் இல்ல?

மிஸ்டர் ரவி, நானும் அப்படி தான் நெனச்சேன், செக் பண்ணதுல பேபி பொசிஷன் மாறி இருக்கு. சிசேரியன் பண்ணித்தான் எடுக்க முடியும். கொஞ்சம் கிரிட்டிகல் கேஸ், அதனால் சிட்டில 'கைனோ எக்ஸ்பர்ட்' சாந்தா தாயுமானவனை வரவழைக்கலாம்னு பீல் பண்றோம். அவங்க பீஸ் கொஞ்சம் ஹெவி தான். நீங்க என்ன சொல்றீங்க?

நோ பிராப்ளம் டாக்டர், ப்ளீஸ் டூ இட்.

ஓகே! இந்க பார்ம்ஸை பில் பண்ணிட்டு அம்பதாயிரம் முதல்ல டெபாசிட்டா கட்டிடுங்க, மீதி டெலிவரிக்கு அப்புறமா சொல்றோம்.

ரிசப்ஷன் நோக்கி ஓடிய ரவியை பார்த்தபடியே டாக்டர், "நர்ஸ், ஆப்ரேஷன் தியேட்டர் ரெடி பண்ணுங்க!"

சாந்தா மேடத்துக்கும் போன் பண்ணிடவா டாக்டர்?

வேணாம், இது நார்மல் கேஸ் தான், இருந்தாலும் சிசேரியன் பண்ணிடுவோம், நானே மேனேஜ் பண்ணிடுவேன்! என்ன புரிஞ்சதா?
புரிஞ்சது டாக்டர்.
***************************************************************************
மாலை ஐந்து மணி

மணி, என் கார்ல என்ன ப்ராப்ளம்னு கொஞ்சம் பாருப்பா! அடிக்கடி மக்கர் பண்ணுது.

அடடே வாங்க டாக்டர், போன வாரம் தானே ஹாரன் பிராப்ளம்னு வந்தீங்க? இந்த கார் வாங்கி எவ்ளோ வருஷம் இருக்கும் டாக்டர்?

அது ஆச்சு, மூனு வருஷம்.

ஒரு நல்ல பார்ட்டி கைவசம் இருக்கு, ஒன்னேமுக்காலுக்கு ஆரம்பிச்சு ஒன்னரைக்காவது முடிச்சிடலாம். உங்களுக்கு ஒகேன்னா சொல்லுங்க, நாளைக்கே முடிச்சிடலாம்.

ம்ம்ம், சரி முடிச்சுடு, எத்தனை நாளைக்கு இப்படி ரிப்பேர் பண்ணிட்டு இருக்கறது?

ஒகே டாக்டர், நீங்க கிளம்புங்க, நாளை காலை பணத்தோட நான் உங்க வீட்டுக்கு வரேன்.

"டேய் சங்கர், டாக்டரை நம்ம வண்டில கொண்டு போய் அவங்க வீட்ல விட்டுட்டு வா".

டாக்டரை வழியனுப்பிவிட்டு, தன் கைபேசியை உயிர்பித்தான் மணி.

ஹலோ! ராஜு சார், செம கன்டீஷன்ல ஒரு வண்டி வந்ருக்கு. ரெண்டேமுக்கால் சொல்றாங்க. எப்டியும் பேசி ரெண்டேகாலுக்கு முடிச்சிடலாம். இன்னொரு பார்ட்டி வேற ரெண்டரை தர ரெடியா இருக்காங்க. நீங்க நமக்கு நல்லா பழக்கம். என்ன சொல்றீங்க?

பேரம் மணிக்கு சாதகமாய் படிந்தது.

****************************************************************************
இரவு எட்டு மணி

ஐயா, உங்களை நம்பி தான் வந்ருக்கேன், நீங்க தான் அம்மாகிட்ட சொல்லி என் புள்ளைக்கு அவங்க ஸ்கூலுல எடம் வாங்கி தரனும்.

இதோ பாரு மணி! என் கம்பனி வேற, அம்மா ஸ்கூல் நிர்வாகம் வேற. இருந்தாலும் நீ தான் எங்க வண்டி எல்லாத்துக்கும் மெக்கானிக். அதனால் தான் உனக்கு மட்டும் ஐம்பதாயிரம்னு சொல்றாங்க. மத்தவங்களுக்கு ஒரு லட்சம். தெரியுமா? சரி விடு, இப்பெல்லாம் கார்பரேஷன் ஸ்கூல்ல கூட நல்லா சொல்லி தராங்களாமே! பேசாம அங்க சேர்த்து விட்டுடு. என்ன பத்மா, நான் சொல்றது சரி தானே?

இல்லீங்கய்யா. நம்ம அம்மா ஸ்கூல் தான் டாப்!னு எல்லாரும் சொல்றாங்க. நான் நாளை மதியம் பணத்தோட வந்திடறேன்.

போயிட்டு வரேம்மா! மணி விடை பெற்றான்.

என்ன சரி தானே பத்மா, ஏதோ நம்மால முடிஞ்ச கல்வி சேவை! என கண் சிமிட்டினார் அந்த 'கெக்ரான் மொக்ரான்' கம்பெனியின் ஹெட்.

************************************************************************
இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது.