Monday, May 26, 2008

சரம் தெரியுமா சரம்?

சரம் என்றவுடன் உங்களுக்கு மல்லிகை சரம் நினைவுக்கு வந்தால் நீங்கள் நம் குசும்பன் போல சமீபத்தில் (அந்த சமீபம் இல்ல) திருமணம் ஆனவராக இருக்கலாம்.

சர வெடி நினைவுக்கு வந்தால் நீங்கள் கைப்புள்ளை, என்னை போல சமீபத்தில்(இப்பவும் அந்த சமீபம் இல்ல) தலை தீபாவளி கொண்டாடியவராக இருக்கலாம்.

சரம் என்றவுடன் சூடி கொடுத்த சுடர் கொடி நினைவுக்கு வந்தால் அடிக்கடி நம் 'பாசுரபுயல்' கேஆரெஸ் பதிவுகளுக்கு சென்று வந்தவராக இருக்கலாம்.


சரம் என்றவுடன் லலிதாம்பிகையின் புருவங்கள் தானே! என்று தோன்றினால் சாக்த சிரோண்மணி மதுரையம்பதி அவர்களின் பதிவில் தடுக்கி விழுந்தவராக இருக்கலாம்.

சரம் என்றவுடன் பச்சை கிளி முத்துச் சரம் என நீங்கள் பாடினால் நீங்கள் எம்ஜிஆர் ரசிகர். கரக்ட்டா? இல்ல, டக்குனு ஜோதிகா முகம் நினைவுக்கு வந்தால் பிறர் மனை நோக்கா பேராண்மையாளர் நீங்க தான். ஹிஹி.


இதை எல்லாம் மீறி அட வலை சரம்னு சொல்ல வேண்டியது தானே?னு நீங்க முணுமுணுத்தால் கைய குடுங்க. அதே தான்! இந்த வாரம் என்னை வலை சரத்துக்கு ஆசிரியரா இருக்க சொல்லிருக்காங்க. பாவம், அவங்க போதாத நேரம்!
ஏற்கனவே பல ஜாம்பவான்கள் (கரடினு எல்லாம் ஒன்னும் திட்டலப்பா) முத்திரை பதித்த இடம் அது. என்னை போன்ற தேங்காய் மூடி பாகவதர்களுக்கும் ப்ரைம் டைமில் நாரத கான சபாவில் தெரியாத்தனமா நேரம் ஒதிக்கிட்டாங்களோ?னு எனக்கே ஒரு சந்தேகம் இருக்கு.

ஆகவே ஒரு வாரம் அங்க தான், தினம் ஒரு பதிவு போடலாம்னு எண்ணம். எல்லோரும் வந்து வழக்கம் போல அட்சதை போட வேணும்னு கேட்டுக்கறேன்.

Monday, May 19, 2008

மைசூர் காவேரி எக்ஸ்பிரஸ்

சென்னை மத்திய புகைவண்டி நிலையத்தில்(சென்ட்ரல் ஸ்டேஷன்னு சொல்ல வந்தேன்) சிட்டு குருவி லேகியம் தவிர எல்லா கடைகளும் வந்து விட்டது. ஆனாலும் நிலையத்தின் தூய்மை என்னவோ இன்னும் விஜய் படங்கள் போல அதே நிலைமையில் தான் இருக்கு. சட்ட வட்டமாக நடுவில் உட்கார்ந்து கொண்டு தலைக்கு நாலு சப்பாத்தியும் சப்ஜியையும் குடும்பத்துக்கே பறிமாறி கொண்டிருந்தாள் ஒரு பரதேவதை.

ஸ்டேஷனில் இருக்கும் டிவிக்களில் அண்ணாச்சி கடையில் குளிர் அடிக்குது!னு யாரோ ஒரு நடிகை வாங்கிய காசுக்கு அள்ளி விட்டு கொண்டிருந்தார். (அந்த நடிகையின் பெயரை முடிந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும், சும்மா ஒரு பொது அறிவுக்கு தான். )

சென்னையில் அடிக்கும் வெய்யிலுக்கு அப்பளம் காய போட்டால் எண்ணெய் செலவின்றி பொரிந்து விடும் போலிருக்கு. 9.30க்கு தான் ரயில். எனக்கு கொஞ்சம் எப்பவுமே எச்சரிக்கை உணர்வு அதிகம். ஆனாலும் ஒரு மணி நேரத்துக்கு முன்னாடியே வந்து தேவுடு காப்பது எல்லாம் எனக்கே டூ மச்சாக இருந்தது. ஏற்கனவே பிளாட்பாரத்தில் வண்டி நின்று கொண்டிருந்தாலும், எனக்கு வண்டிக்குள்ளே போக இஷ்டமில்லை. சும்மாவே நம் மக்களுக்கு பேசறத்துக்கு காசு கொடுக்கனும். அதிலும், அறிமுகம் இல்லாதவர்களிடம், அது சன் பீஸ்ட் பிஸ்கோத்து விக்கும் சூர்யாவா இருந்தா கூட பேச்சு வெச்சுக்காதீங்கனு மைக்கில் அறிவித்து இருந்தபடியால், சுமாராக சூர்யா போல் இருக்கும் என்னை (சரி, இதுக்கே துப்பினா எப்படி?) சந்தேகமாகவே பார்க்கும் வாய்ப்புக்கள் இருக்கறபடியால், எதுக்கு வம்பு?னு சரியாக 15 நிமிடத்துக்கு முன்னாடி தான் வண்டியில் ஏறினேன்.

ரயிலில் தனியாக, அதுவும் என்னை போன்ற ஏமாந்த சோனகிரிகள் பயணித்தால் எப்படி தான் கூட இருப்பவர்களுக்கு தெரியுமோ?
"எச்சூஸ்மி! நாங்க பேமிலியா வந்ருக்கோம். என் மச்சினி மட்டும் 10ம் நம்பர் சீட். கொஞ்சம் மாத்திக்க முடியுமா?னு சொல்லி அந்த சீட்டை தள்ளி விட்டு விடுவார்கள். அங்க போனா உச்சா வாடை புரட்டி எடுக்கும். கூட பயணிக்கும் சதாவை பார்க்காமல் டாய்லைட்டை பார்த்து டிடிஆர்ர்ர்ர்ர்!னு தொண்டை கிழிய கத்றத்துக்கு நான் என்ன அன்னியன் படத்து அம்பியா என்ன?

நல்ல வேளை இந்த தடவை அந்த மாதிரி ஒன்னும் நடக்கலைனு நான் பெறுமூச்சு விடுமுன் தொப்பி போட்ட ஒரு தடியன் (மிடில் பர்த்தாம்)மெதுவாக தொண்டையை கனைத்தான். நானும் என் பிரண்டும் சேர்ந்து வந்துருக்கோம். அதனால....
(பெரிய துரியோதனனும் கர்ணனும்) நானும், என் பிரண்டு கூட தான் வந்ருக்கேன்! அதனால... அதே பிட்டை அவனுக்கே போட்டதில் கடுப்பாகி போனான். ஆனால் இன்னொரு லோயர் பர்த்த்காரனை சரி கட்டி இடத்தை பிடித்து விட்டான்.

இந்த பெங்களுர் டிரெயினில் பயணிப்பவர்களை மிக எளிதாக கண்டு கொள்ளலாம்.

ஆண்கள் எல்லோரும் டவுசர் பாண்டிகளாக இருப்பார்கள். தோளில் ஏதேனும் கேக்ரான்-மோக்ரான் சாப்ட்வேர் கம்பனி ப்ரீயா குடுத்த பை இருக்கும். இடது கையில் கண்டிப்பாக ஒரு பிஸ்லரி பாட்டில் இருக்கும், வலது கையில் காமிரா மொபைல் (யாருக்கு தான் பேசுவார்களோ?). ஏதேனும் ஒரு காதில் கடுக்கன், ஈயம் பித்தளையில் தேள் டாலர் போட்ட செயின் கண்டிப்பாக இருக்கும்.

அம்மணிகளை பத்தி சொல்ல வேண்டியதில்லை. சென்னையில் மீரா சீயக்காய் போட்டு வளர்த்த கூந்தலை, பெங்களுரில் கழுதை வால் மாதிரி வெட்டி இருப்பார்கள் என்பதோடு நிறுத்தி கொள்கிறேன். முக்யமா எல்லோரும் இ-டிக்கட் தான் வைத்து இருப்பார்கள்.

ரயில் புறப்பட்டு பத்து நிமிடத்தில் பரிசோதகர் நீல நீற கோட்(இந்த வெய்யிலில் எப்படி சார்?) அணிந்து வந்தார். ஒழுங்கா இ-டிக்கட்டுக்கு ஐடி கார்டு எடுத்து வைங்க!னு கறாராக சொல்லி விட்டார். அதோடு நிற்கவில்லை, இந்த சீட் எக்ஸ்சேஞ்ச் மேளா நடத்திய தொப்பிகாரனை ஒழுங்கா அவன் சீட்டுக்கே போக சொல்லிவிட, கம்பார்ட்மெண்ட் முழுக்க பலபேர் குறுக்கேயும் நெடுக்கேயும் போக ஆரம்பித்து விட்டனர். எல்லோரும் இடம் மாத்தி இருக்காங்க போலிருக்கு.

வாலு போச்சு! கத்தி வந்தது டும்! டும்! டும்! போல தனக்குரிய சீட்டுக்கு ஜீன்ஸும், டிஷர்ட்டும் அணிந்த பெண் வந்து சேர்ந்தாள். ஒட்டு கேட்கும் பழக்கம் எல்லாம் எனகில்லை, காத்து வாக்கில் டிடிஆரிடம் சொன்ன போது விழுந்தது, பெயர் கூட ஏதோ பூஜாவாம்.

சரி, இந்த டிடிஆர் செஞ்சது கரக்ட்டா? அதாவது கராறாக ரூல்ஸ் ராமானுஜமாக இருந்ததை சொல்றேன். மக்களுக்காக தான் ரூல்ஸ்!னு நினைக்கறீங்களா? இல்ல ரூல்ஸுக்காக தான் மக்கள்!னு நினைக்கறீங்களா? வளர்ச்சியடைந்த நாடுகளில் எல்லாம் மக்கள் சட்டத்தை மிகவும் மதிக்கிறார்கள், பொது இடத்தில் குப்பை போடாமல் இருப்பது, துப்புவது போன்றவை. சட்டங்கள் கடுமையாக்கப்பட்டால் மக்கள் நம்மூரிலும் சட்டத்தை மதிப்பார்களா? இதை பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க?

டிஸ்கி#1: கடைசி பாரா தான் மாரல் ஆப் தி பதிவு. :)

டிஸ்கி#2: அப்புறம் பூஜா பற்றிய பிற தகவல்களை அடுத்த பதிவுல சொல்லுவியா அம்பி?னு பின்னூட்டம் எல்லாம் போட கூடாது. :))

Tuesday, May 13, 2008

இந்த நாள் உன் காலண்டர்ல குறிச்சு வெச்சுக்கோ!

பதினாலு மே 2007

அக்னி நட்சத்திர வெய்யிலையும் பொருட்படுத்தாது வந்திருந்த கூட்டம் குளிரூட்டபட்டு இருந்த அந்த மண்டபத்தில் பிதுங்கியது. ஒன்பதரைக்கு முகூர்த்தம் ஆரம்பம் என்பதால் காலையில் இட்லி, மசால் தோசை, நெய் வழுக்கிய கேசரியை சுகமாய் உள்ளே தள்ளி விட்டு சாவகாசமாய் வம்படித்து கொண்டிருந்தனர் பல மாமாக்கள்.

மண மேடையில் ஒன்னுமே சாப்பிடாம உட்கார்ந்து இருக்கும் மாப்ளையையும், பெண்ணையும் மிலிட்டரி டிரில் வாங்கி கொண்டிருந்தனர் இரு வீட்டு புரோகிதர்களும். நெக்லஸ் புதுசா? செவப்பு கல் வெச்ச தோடு போட்டு இருந்தா உனக்கு இன்னும் எடுப்பா இருந்திருக்கும்! ஆம்படையான்ட சொல்லி இந்த தீவாளிக்கு வாங்கிக்கோ! என யாரோ ஒரு அப்பாவி ரங்குவுக்கு ஆப்படித்து கொண்டிருந்தார் ஒரு மாமி.

டிரவுசரை அவுத்து கொண்டு "டாடி! அலம்பி விட வா! என திருவாய் மலர்ந்து அவசரமாய் ஓடிய தன் மூணு வயது தவபுதல்வனை பின் தொடர்ந்து ஓடி கொண்டிருந்தார் இன்னொரு அப்பாவி ரங்கு. வாங்கிய காசுக்கு வஞ்சனையில்லாமல் "வள்ளி கணவன் பெயரை வழிப்போக்கன் சொன்னானடி!"னு அட்ரஸ் விசாரித்து கொண்டிருந்தார் நாதஸ்வர வித்துவான்.

பாச மலர் சாவித்திரியின் தோழிகள் ரேஞ்சுக்கு ஐந்து நிமிஷத்துக்கு ஒரு முறை கலகலவென சிரித்து, தம் டிஜிட்டல் காமிராவில் தம் தோழியை பதிந்து கொண்டிருந்தனர் மணபெண்ணின் தோழிகள். உன்னை பாத்து ஒன்னும் சிரிக்கலை, நீ வேஸ்ட்டா அசடு வழியாதே!னு மாப்ளையின் தம்பி தன் பங்குக்கு கடுப்பேத்தி கொண்டிருந்தான்.

இதோ அந்த தருணம் வந்து விட்டது. அண்ணாமலையில் ரஜினி சரத்பாபுவை பாத்து சொல்வாரே!

ஆபிஸ்ல வேலை இல்லாத போதும் நைட் பத்து மணி, பதினோரு மணி வரை வெட்டியா(அய்ய, வெட்டி பாலாஜி உங்கள இல்ல) சீட்ட தேய்ச்சுட்டு ஒவ்வோரு மொக்கை பதிவா போய், பின்னீட்டீங்க அண்ணே! கலக்கிடீங்க அக்கா! அங்க தான் நீங்க நிக்கறீங்க போங்க! ரீப்பீட்டேய்ய்!னு பின்னூட்டம் போட்டுட்டு வர உன்னை,

ஆபிஸ் கேண்டீன், ஓட்டல்னு வெந்ததையும் வேகாததையும் சாப்பிட்டு காலம் தள்ற உன்னை,

பக்கத்து சீட்டு ரசகுல்லா கிட்ட பெங்காலி, எதிர் சீட்டு பஞ்சாபி கிட்ட ஹிந்தி,அடுத்த சீட்டு திருச்சூர் குத்து விளக்குகிட்ட மலையாளம்னு சம்சரிச்சுட்டு இருக்கற உன்னை

ஒரு பொறுப்புமிக்க ரங்குவாக, இட்லிக்கு மாவு பதம் தெரிந்த ஒரு ரங்குவாக, பூரிகட்டையின் நீளம், பருமன், அகலம் தெரிந்த ஒரு ரங்குவாக மாத்தி காட்டறேன்!

இந்த நாள் உன் காலண்டர்ல குறிச்சு வெச்சுக்கோ!

அக்னியை சாட்சியாக வைத்து, பொன் தாலியை மணபெண்ணின் கழுத்தில் கட்டியவுடன் அந்த பெண், இந்த அப்பாவி பையனை பார்த்த பார்வையின் விளைவே இந்த பதிவு. காலம் யாருக்காகவும் நிற்பதில்லை.

மே 15 இன்று தமது திருமண நாளை கொண்டாடும் பிளாகேஸ்வரி அக்காவுக்கு இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.

Friday, May 09, 2008

சென்ஷி அண்ணணுக்கு ஒரு கடிதம்(09/05/2008)

//இது சும்மா இட்லிக்கு மாவு ஆட்டிக்கொடுத்துட்டு சாப்டப்புறம் பாத்திரம் கழுவி வைக்குற வேலை இல்ல.. பின்னூட்டம்.//

இட்லிக்கு மாவட்டறதுன்னா சும்மா இல்ல, முந்தின நாளே சரியா எட்டு மணி நேரத்துக்கு முன்னாடி அரிசிய ஊற போட்டனும், 1 மணி நேரத்துக்கு முன்னாடி உளுந்த ஊற போடனும். அதுவும் கருப்பு உளுந்தா இருந்தா களையற வேலை வேற எக்ஸ்ட்ரா.


அப்புறம் இஷ்ட தெய்வத்தை கும்பிட்டு(அட இட்லி பஞ்சு போல வரனும் இல்ல) கிரைண்டரை முதல்ல லேசா கழுவி, மெதுவா ஓட விட்டு கொஞ்சம் கொஞ்சமா அரிசிய முதல்ல போடனும். உளுந்த போட்டா மாவு காலி. மொத்தமா அரிசிய அரைக்க போட்டா கிரைண்டர் சண்டித்தனம் பண்ணி நின்னுடுமாக்கும். நான் சொல்றது சாய்வு வகை கிரைண்டர். குழவி கல்லு கிரைண்டர்னா எடுத்து அலம்பி வைக்கறதுக்குள்ள தாவு தீர்ந்துடும். பத்து நிமிஷத்துக்கு ஒரு முறை கொஞ்சம் கொஞ்சமா தண்ணி விடனும். நைசா வரனுமில்ல.

நாப்பதஞ்சு நிமிஷம் அரச்ச பிறகு அரிசிய வழிச்சு எடுக்கனும்.


அப்புறம் உளுந்து. ஓவரா தண்ணி காட்டினா நாள் முழுக்க நீங்க உளுந்து மட்டும் தான் அரச்சுட்டு இருக்கனும். சன் மீயூசிக்குல ஹேமா சிம்ஹாவை பாத்து மெய் மறந்து, தண்ணி விட மறந்தீங்கன்னா கிரைண்டரில் இருந்து உளுந்து உருண்டை எடுக்கலாம்.

இத எல்லாத்தையும் விட மெயின் மேட்டர், நீங்க மாவாட்டும் சுபயோக சுப நேரத்தில் மின்சாரம் இருக்கனும். நடுவுல புடுங்கிகிச்சுனா மின்சாரம் வர வரைக்கும் தேவுடு காக்கனும். டிவியும் பாக்க முடியாது. ரீப்பீட்ட்ட்யேயும் போட முடியாது.


அப்புறம் தான் மெயின் மேட்டர்:
சரியான விகிதத்துல உப்பு போடனும். எல்லாம் முடிஞ்சு உடனே தூக்கி பிரிஜ்ஜுல வெச்சுடகூடாது. அரை நாள் வெளியே வெச்சா மாவு பொங்கி பாத்ரம் நுனி வரை வரும். அதனால் கொஞ்சம் பெரிய பாத்ரத்துல தான் மாவை சேமிச்சு வைக்கனும். இல்லாட்டி வீட்டை மறுபடி சுத்தம் பண்ற வேலை வேற.

அடுத்த நாள் இட்லி வார்க்கும் படலம் ஆரம்பமாகுது.

இட்லி அடுக்குகளில் லேசா நல்லேண்ணைய தடவிட்டு, ஒரு கரண்டி மாவை விட்டு, கேஸ் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து விட்டு இப்ப நீங்க டிவி பாக்கலாம். அவசரபட்டு முன்னாடியே இட்லி அடுக்கை தொறந்தா அரிசி மாவு களி தான் கிடைக்கும், இட்லி கிடைக்காது.

இப்ப சொல்லுங்க, கஷ்டப்பட்டு மேட்டர் சேகரிச்சு டாமேஜர் இல்லாத நேரமா பதிவ தட்டி, பின்னூட்டத்துக்கு தேவுடு காத்து கிடந்தா, நீங்க சாவகாசமா வந்து வெறும் ரீப்பிட்டேய்ய்ய்ய் (இதுக்கு தமிழாக்கம் எல்லாம் மிக அருமையா மிஸ்டர் புதசெவி குடுத்து இருக்காரே, பாக்கலையா?) மட்டும் போட்டுட்டு போவீங்களாக்கும்? எந்த ஊர் நியாயம்ண்ணே? :))

டிஸ்கி#1: இந்த பதிவின் உட்பொருள், வெளிபொருள் எல்லாம் கேட்டு குடைய கூடாது.
டிஸ்கி#2: இதுக்கும் மேல ஏதாவது சந்தேகம்னா கைபுள்ளையை தொடர்பு கொள்ளவும். :))

Wednesday, May 07, 2008

ஐபிஎல் கிரிக்கெட்

இந்த ஐபிஎல் கிரிக்கெட் வந்தாலும் வந்தது, ஆபிஸ்ல ஒரே கும்பமேளாவா இருக்கு. அதுவும் பெங்களூரில் பல மாநில மக்கள் ஒன்றாக(?) ஒரே கம்பனியில் வேலை பார்க்கும் நிலையில், அவனவனுக்கு தம் சொந்த ஊர் பாசம் பீறிட்டு(பீர் இட்டுனு வாசிக்கபடாது) கிளம்புகிறது.

இப்ப எங்க ஆபிஸ்லயே பாருங்களேன்:

1) ரசகுல்லா டீம் (ஆமா பெங்காலி ரசகுல்லாஸ் தான்)
2) சப்பாத்தி டீம் (எல்லா வட இந்திய மா நிலங்களும் அடக்கம்)
3) வடா பாவ் டீம் (மாராத்தி டீம்)
4) கொல்டி டீம்
5) கப்பகெழங்கு டீம் (என்டா ஆயில்ய சேட்டா! முழிக்கினது?)
6) காவிரி டீம் (அவங்களே தான்)
7) சாம்பார் இட்லி டீம் (இட்லி வடை இல்லப்பா! நாமே தான்)
8) பஞ்சாப் குதிரைகள் டீம் (எல்லா குதிரகளுமே கிட்டதட்ட ஆறு அடி எழுபது கிலோவுங்கோ)

இதுல ஒருத்தருக்கு ஒருத்தர் அனுசரணையா, ஆதரவா (பிராஜக்ட்டுல தான்) இருந்து வந்த நிலையில் இந்த ஐபிஎல் மொத்தமா ஆப்படித்து விட்டது.

ஏய்! ரூவாய வாங்கிட்டு என்னடா உங்க ஆளு விளையாடவே வர மாட்டேங்கறாரு?னு கப்பகிழங்கு மும்பையை கேட்க,

உங்க ஆளு குமட்டுலயே குத்தினான் பாரு பஞ்சாப்! பேச வந்துட்டாங்க இவங்க!னு பதிலுக்கு தாக்க,

ஆனாலும் ஒரு குத்துக்கு மூணு கோடி! டூ மச்! சர்தாஜிகளால தான் முடியும்!னு கொல்டி குதிரைய வம்புக்கு இழுக்க,

வேணாம்டா உனக்கு! பஞ்சாப் அடி வாங்கனும்னு ஆசையா?னு கொல்டி அட்வைஸ் பண்ணினான்.
(ஏற்கனவே எசகுபிசகா வாங்கி இருப்பான் போல!)

நாலு மேட்ச் வரிசையா ஜெயிச்சதை பாத்து ஏமாந்து போய், "கும்தலக்கடி கும்மாவா? இட்லி சாம்பார்னா சும்மாவா?"னு நாம கடுப்பேத்தியது, இப்ப வரவன் போறவன் எல்லாம் அவ்ளோ தானா?னு துக்கம் விசாரித்து விட்டு போகிறான்.

ஆனா ஒரு விஷயத்துல எல்லோரும் ஒத்துமையா இருக்காங்க.

ஐபிஎல்லுல டிராவிட் தலைமையில் டெஸ்ட் மேட்ச் உங்களால் மட்டும் தான்டா ஆட முடியும்!னு காவிரிகாரங்களை ஓட்டு ஓட்டுனு ஓட்டி தள்றாங்க. அதே சமயம், விஜய் மல்லையாவின் தாராள குணத்தை பாராட்டாத ஆட்களே கிடையாது.

பின்ன, இவ்ளோ காசு செலவழிச்சு வெளிநாட்டுல இருந்து இல்ல கரகாட்ட செட்டை வரவழைச்சு இருக்கார்.

அடடா! என்ன ஆட்டம்! என்ன சுறுசுறுப்பு! :)