Friday, March 20, 2009

குழலும் யாழும் இனிதா?

திருவள்ளுவருக்கும் வாசுகி அம்மாவுக்கும் குழந்தை இருந்ததா? அவரும் என்னை மாதிரி இரவு எட்டு மணிக்கு செர்லாக் ஊட்டி, பாட்டு பாடி தூங்க வைத்து, பின் இரவு பதினோரு மணிக்கு ஹக்கீஸ் டயப்பர் மாத்தி இருப்பாரான்னு எல்லாம் எனக்கு தெரியாது. ஆனா மனுஷன் ஒன்னேமுக்கால் அடிகளில் மழலைசொற்கள் பத்தி சோக்கா சொல்லி இருக்காருய்யா!

அதுவும் குழந்தைகள் ஒரு அர்த்தமும் இல்லாமல் தன் போக்குக்கு ஒலிகளை எழுப்பும்போது அதை நம் போக்குக்கு அடடா, என் குழந்தை என்னமா பேசறான்! என பூரிக்கும் தருணங்கள் இருக்கே! அங்க தான்யா நிக்கறாரு வள்ளுவர்.

பொதுவாக ஏழு மாதத்திலிருந்து குழந்தைகளுக்கு பேச்சு வருமாமே! நாம என்னத்த கண்டோம்?

முதலில் தா தா தா என ஒலிக்க தொடங்கி நாம அதை தாத்தா என பொருட்கொண்டு பெருமிதப்படுகிறோம். தாத்தாவை தொடர்ந்து அத்தை வலம் வர தொடங்குவார். அம்மா அப்பா எல்லாம் வர சிறிது காலம் பிடிக்கும் போல.

உனக்கு ஒரு தங்கை இருந்திருந்தா குழந்தை அழகா சித்த்தீனு கூப்பிடும், நானும்

"மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது!
மனசுகுள்ள பஞ்ச வர்ண கிளி பறக்குது!ன்னு பாட்டு பாடி இருப்பேன்னு தங்கமணியிடம் வாயை குடுத்து நன்றாக வாங்கி கட்டிகொண்டேன்.

எனக்கு நாலு பெரியப்பா கிடைத்த மாதிரி என் ஜுனியருக்கு ஒரு பெரியப்பாவும் இல்லை, அத்தையும் இல்லை, ஒரே ஒரு சித்தப்பா தான். அதே போல ஜுனியருக்கு மாமாவும் இல்லை, பெரியம்மாவும் கிடையாது, சித்தியும் இல்லை. இது தான் இன்றைய நிலை.

இல்லாத உறவு முறைகளை எப்படி அறிமுகப்படுத்துவது? என்ற குழப்பத்துக்கு இடம் கொடுக்காமல் பதிவுலகில் தான் எத்தனை அத்தைகள், சித்தப்புக்கள், தாய்மாமன்கள்.

ஹிஹி, பாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. :))

ஆக இனிமே ஷைலஜா அத்தை உனக்கு செயின் தருவாங்க, ராமலெட்சுமி அத்தையும், முத்துலெட்சுமி அத்தை வளையல் தருவாங்கன்னு ஜுனியருக்கு சொல்லிட வேண்டியது தான். சாப்பிட படுத்தினால் இருக்கவே இருக்காரு நம்ம தாய்மாமன் கைப்புள்ள. அவரு பதிவை தொறந்து அவர் படத்தை காட்டியே சாதம் ஊட்டிறலாம். ஜுனியர் இன்னும் பயந்து போய் அழுதா என்ன பண்றதுன்னு தெரியல. :)

இந்த நேரத்தில் டக்குனு தோணிய ஹைக்கூ(அத நாங்க சொல்லனும்)

வெப்காம் பார்த்து
அழுகை நிறுத்தும் குழந்தை.
சிரித்தபடியே அழும்
ஆன்சைட் அப்பா.

இதை ஹைக்கூன்னு ஒழுங்கா ஒத்துகுங்க.இல்லாட்டி நீங்க ஒத்துக்கற வரைக்கும் ஹைக்கூ எழுதறதா உத்தேசம்.

Wednesday, March 18, 2009

யூத் விகடனில் அம்பி

"உங்களுக்கு பத்திரிகையில எழுதறத்துக்கு எல்லாம் ஆர்வம் இல்லையா?"னு ஷைலஜா அக்கா மையமாய் கேட்டவுடன் எனக்கே சிரிப்பை அடக்க முடியலை.

அதுகெல்லாம் நமக்கு அறிவு பத்தாதுனு எனக்கே தெரியும். இருந்தாலும் ஆசை யாரை விட்டது? நான் எழுதினதுல ஏதாவது தேறுமா?னு பாத்து சொல்றேன் அப்படினு பாலிஷ்ஷா சொல்லிட்டு வந்தாச்சு.

யூத் விகடனில் நிரந்தரமாய் திண்ணை கட்டி ஆட்சி செய்து வரும் ராமலட்சுமி அக்காவிடமிருந்து தீடிர்னு இன்று காலை ஒரு மெயில். 'விட்' அப்படினு புதுசா ஒரு பக்கம் யூத் விகடன்ல ஆரம்பிச்சு இருக்காங்க. உங்க பதிவை அனுப்புற வழிய பாருங்க அப்படினு அன்பு கட்டளை.

யாருக்கு அனுப்பனும்? எப்படி அனுப்பனும்? மெயில் ஐடி என்ன?னு நான் குடைஞ்ச குடைசலில் பாவம் வெறுத்து போயி அவங்களே பழத்தை உறிச்சு குடுத்துட்டாங்க. (ஏன்டா இந்த பயலுக்கு சொன்னோம்?னு அவங்களுக்கு ஆயிருக்கும்). அப்புறம் அவங்க சொன்ன ஒரு பதிவை கொஞ்சம் டிங்கரிங்க் பண்ணி ஒரு வழிய அனுப்பியாச்சு. இவன் பதிவு வரலைன்னா என் தலைய போட்டு உருட்டுவானேன்னு ராம லட்சுமி அக்கா தன் குல தெய்வத்துக்கு நேர்ந்துகிட்டதா உறுதி செய்யப்படாத தகவல் வந்தது.

சக்தி விகடனை உருவாக்கறதுல மொட்டை பாஸா செயல்பட்ட ஷைலஜா அக்காவிடமும் மேற்படி விஷயத்தை சொல்லிட்டு நான் பாட்டுக்கு அலுவலக பிசில(சரி, இதுக்கே துப்பினா எப்படி?) இதை மறந்தே போயிட்டேன்.

சாயந்தரமா ராமலட்சுமி அக்காவிடமிருந்து "யப்பா! யூத் விகடன்ல வந்துடிச்சுபா!"னு மறுபடி மெயில். அவங்க வேண்டிகிட்ட குல தெய்வம் அவங்களை கைவிடலை.ஏற்கனவே இங்க எழுதின பதிவு தான். இதோ இந்த சுட்டில போயி பாத்து உங்க மேலான கருத்துக்களை மறக்காம அள்ளி தெளியுங்க. :)

எனக்கும் ரொம்ப சந்தோஷம் தான், ஆனா ஒரு சின்ன குறை. என் படைப்பை சுட்டி விகடன்ல பதிப்பாங்கன்னு நெனச்சேன், இப்படி யூத் விகடன்ல போட்டுடாங்களே பா! :)

Friday, March 13, 2009

பெண்களுரு (Bengaluru)

இப்ப தான் சமீபத்துல 2005ல நான் முதல்முதலா பெங்களூருக்கு நல்லா குளிர் அடிக்கும் டிசம்பர் மாதத்தில் வந்து சேர்ந்தேன். கம்பெனி குடுத்த கெஸ்ட் ஹவுஸ்ல பையை வெச்ச கையோட நண்பன் ஒருத்தனுடன் ரூம் பாக்க கிளம்பியாச்சு. ஏன்னா பதினெஞ்சு நாளைக்கு தான் இந்த கெஸ்ட் ஹவுஸ்ன்னு சொல்லிட்டாங்க.

இந்த ஊர்ல வீட்டு முதலாளிகள் ஒரு நல்ல பழக்கம் வெச்சு இருக்காங்க. அதாவது, ரூம் வேணும்னு போய் நின்னா முதல் கேள்வி எந்த கம்பெனில வேலை பாக்கறீங்க? என்பது தான். நீங்க சொல்லும் கம்பெனியின் மார்கெட் நிலவரத்தை பொறுத்து அந்த முக்கு சந்து வீட்டின்/ரூமின் வாடகை முடிவு செய்யப்படும்.

இதுவே சென்னையா இருந்தா கேட்கப்படும் முதல் கேள்வி நீங்க பேச்சுலர்ஸா? என நினைக்கிறேன். ஒரு வேளை இப்ப நிலமை மாறி இருக்கலாம்.

ஒரு வழியா ரூம் பாத்து செட்டில் ஆனதும், வார இறுதியில் வெளியே சுத்தி பாக்க கிளம்பியாச்சு. இங்க தான் பிரச்சனையே! முதல்ல கன்னடம் பிடிபடவில்லை. பஸ்ல ஏறினா ஒரக்கட பன்னி! பன்னி!னு கண்டக்டர் சொல்றார். என்னடா பன்னின்னு திட்றார்?னு மெல்ல விசாரிச்சா வாங்க!னு சொல்ல பன்னியாம். போங்கனு சொல்லனும்னா ஜன்னியா? யானைக்கு அர்ரம்னா குதிரைக்கு குர்ரம் தானே?

சரி விடுங்க, நம்ம ஸ்டாப் எதுன்னு கண்டுபிடிக்கறத்துக்கு சஞ்சய் ராமசாமி மாதிரி பஸ் போகும் போதே சின்னதா மேப் போட்டு வெச்சுகிட்டேன். உதாரணமா, சிவப்பு சட்டை போட்டு ரிஷப்ஷன்ல நச்சுனு உக்காந்து இருக்கும் பியூட்டி பார்லருக்கு ரெண்டாவது ஸ்டாப்புல தான் இறங்கனும். ஒரு தடவை அதே பொண்ணு மஞ்ச சட்டை போட்டு வந்ததால் என் ஸ்டாப் மிஸ்ஸாகி போச்சு. அதே ரோட்ல ரெண்டு பியுட்டி பார்லர்கள் இருந்தது அப்புறம் தான் தெரிஞ்சது.

இங்க இன்னொரு வினோத விஷயம், என்னனு பாத்தா எந்த பக்கம் திரும்பினாலும் மஞ்சளும் சிவப்பும் கொண்ட ஒரு கொடி முக்குக்கு முக்கு பறந்துகிட்டு இருக்கும். அப்புறம் தான் தெரிஞ்சது அது கர்நாடக மாநிலத்துக்குன்னு தனிகொடி. இந்த கொடி பறக்கற எந்த கட்டிடத்தின் மீதும் கல் எறிய மாட்டாங்க. அதனால் கூகிள், யாஹூன்னு எல்லா கம்பெனி வாசலிலும் இந்த கொடி பட்டொளி வீசி பறக்கும். :)

இன்னமும் சில பேர் கர்நாடகா என்பது மைசூர் ராஜா தலைமையில் உள்ள தனி நாடுன்னு தான் நெனச்சுட்டு இருக்காங்க. நல்லா இருங்கடே!

வெள்ளிகிழமை ஆனவுடன் ஒருவரை ஒருவர் கண்டிப்பா விசாரித்துக் கொள்ளும் கேள்வி, அப்புறம், வீக் எண்ட் பிளான் என்ன? என்பது தான். வெள்ளி மாலை பொழுதுகளில் எல்லா ஏடிஎம்களிலும் மக்கள் வரிசையில் நின்னு ரெண்டாயிரம் எடுத்து கொண்டு ரெண்டு நாளில் மெகா மால்களிலோ தியெட்டர்களிலோ மொய் எழுதி விட்டு வருவார்கள்.

சில குறிப்பிட்ட கம்பெனிகள் தவிர பெரும்பாலான கம்பெனிகளில் டிரஸ்கோட் எனப்படும் உடை விதிமுறைகள் சென்னை அளவுக்கு கிடையாது. எங்க மானேஜர் வருஷத்துக்கு ஒரு தரம் திருப்பூர் போயி ரெண்டு டஜன் டி-ஷர்ட் வாங்கிட்டு வந்துடுவாரு. உடைல என்ன இருக்கு? ஆணிய ஒழுங்கா புடுங்கினா போதும் எனபது தான் இங்குள்ள நிலை. ஆனா சென்னைல இப்படி கிடையாதுன்னு உறுதியா சொல்வேன். மே மாத வெயிலும் டை கட்டி போகும் ஆட்களும் உண்டு.

சென்னை மக்களிடம் இருக்கும் சுறுசுறுப்பு இங்க கிடையாது. அதுக்கு இங்கு நிலவும் வானிலையும் ஒரு காரணம் என்று சொல்லலாம். கல்யாணத்துக்கு பத்திரிகை குடுத்தா வளைகாப்புக்கு வந்து நிப்பாங்க. :)

- இன்னும் சொல்வேன்.

Friday, March 06, 2009

அடிக்கடி எஸ்.எம்.எஸ் அனுப்புற ஆளா நீங்கள்?

ஹிந்துஸ்தான் பெட்ரோலியத்தில் இந்துக்களுக்கு மட்டும் தான் பெட்ரோல் போடறாங்களா? என காமடி வசனங்கள் நிறைந்த தீ படமும், படிக்காதவன் பட விளம்பரங்களுக்கு நடுவில் செய்திகளை போடும் சன் டிவியில் நேற்று ஒரு சுவாரசியமான விஷயத்தை காட்டினார்கள்.

என்னோட பேச விருப்பமா? உடனே இந்த நம்பருக்கு டயல் பண்ணுங்கனு யாரோ ஒரு அபிராமியிடம் இருந்த ஒரு குறுஞ்செய்தி வர, நம்மாளு ஒருத்தர் உடனே அந்த நம்பருக்கு டயல் பண்ணி குணா கமல் மாதிரி அபிராம்மி அபிராம்மின்னு புலம்பி இருக்காரு. அவரு டயல் பண்ணது ஒரு ஐஎஸ்டி நமபர்னு அஞ்சு நிமிஷத்துல அவர் பேலன்ஸ் எல்லாம் கரைஞ்சு போனபிறகு தான் தெரிஞ்சு இருக்கு.

இதே மாதிரி உங்களுக்கு அந்த பாட்டு டவுன்லோடு பண்ணனுமா? தண்டயார்பேட்டை கிரிகெட் மேட்ச் ஸ்கோர் வேணுமா? இவரோட பொன்மொழிகள் வேணுமா?ன்னு ஒரு நாளைக்கு எத்தனை விதமான அழையா விருந்தாளிகளாய் இந்த குறுஞ்செய்திகள்.

எண்ணிக்கைக்கு ஒரு நாளைக்கு அஞ்சுன்னு வெச்சா கூட ஒரு மாசத்துக்கு நூத்தியம்பது (அப்ப பிபரவரி மாசத்துக்கு?னு பாயிண்ட் எல்லாம் பிடிக்க கூடாது).

வாடிக்கையாளர் சிம் வாங்கிய ஒரே பாவத்துக்கு தான் இந்த கருமத்தை எல்லாம் சகிச்சுக்க வேண்டி இருக்கு. இப்படி கு.செ வராம இருக்கனும்னா DNBன்னு டைப் பண்ணி அவுகளுக்கு அனுப்பி வைக்கனுமாம். உடனே 48 மணி நேரத்திலோ அல்லது ஒரு வாரத்திலோ மேல் நடவடிக்கை எடுப்பாங்களாம்.

எனக்கு ஒரே ஒரு சந்தேகம் தான்:

வாடிக்கையாளரா மனம் உவந்து ஒரு மண்ணாங்கட்டி சேவையோ, மோர்குழம்போ உங்க கிட்ட கேக்கலை. நீங்களா ஏதோ தானமா குடுக்கற மாதிரி கு.செ அனுப்பி வைக்கறீங்க. அதுக்கு நாங்க தயவு செய்து டிஸ்டர்ப் செய்யாதீங்க!னு எதுக்கு கெஞ்சனும்? இதே நிலை தான் தான் வெளி நாட்டிலும் இருக்கிறதா? அங்க எல்லாம் கன்ஸ்யுமர் ரைட்ஸ் ரொம்பவே மதிக்கபடும் என்பதால் கேக்கறேன்.


இது பத்தி ஒரு நண்பனிடம் பேசியபோது மேலும் சில சுவாரசியமான தக்வல்கள் தெரிய வந்தது. அதாகப்பட்டது நாம ஐ.டி ப்ரூப், அட்ரஸ் ப்ரூப், ரேஷன் கார்டு எல்லாம் குடுத்து ஒரு சிம் கார்டு வாங்கினால் நம்மை மாதிரியே நம்பர் வாங்கிய லட்சோப லட்சம் இ.வாக்களின் நம்பர்கள் அடங்கிய டேட்டாபேஸை கணிசமான தொகைக்கு இப்படி மார்கெட்டிங்க் செய்யும் கேக்க்ரான் மோக்ரான் ஆளுகளுக்கு நம்ம சர்வீஸ் புரவைடர் ஒரு பொது சேவை மாதிரி வழங்கி விடுவாராம்.

அப்புறம் என்ன? நான் ஷில்பா பேசறேன், நான் ஸ்வேதா பேசறேன்! உங்களுக்கு லோன் குடுக்க ஆசையா இருக்குன்னு ஒரே கால்ஸ் தான், கு.செ தான்.

சைடு கேப்புல இத்தகைய ஷில்பாக்களை பிக்கப் செய்யும் ஆட்களும் உண்டு என்பதெல்லாம் இந்த பதிவுக்கு சம்பந்தமில்லாத விஷயம்.

இதே மாதிரி நொந்த அனுபவம் உங்களுக்கும் இருக்கா? வரிசையா சொல்லுங்க பாப்போம்.

Tuesday, March 03, 2009

நாகேஷும் சில நகைச்சுவை பதிவர்களும்

பல சரித்திர நாயகர்களுக்கு உலக/தமிழ் சினிமா வடிவம் கொடுக்க தொடங்கியதில் நம்மில் பலருக்கு அந்த கேரக்டரில் நடித்த நடிகர்கள் தான் மனசில் நிற்கிறார்கள். கர்ணன், ராஜ ராஜ சோழன் என நினைத்தால் சிவாஜி, கிருஷ்ண பரமாத்மாவென்றால் என்.டி.ஆர், போலிஸ் கமிஷ்னர் என்றால் விஜயகாந்த், அபிராமி தியேட்டர் வாசலில் பிளாக்கில் டிக்கெட் விற்பவர் என்றால் டாக்டர் விஜய் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

பொதுவாக கதாநாயகனாக நடிக்க தோற்றப் பொலிவு, உடற்கட்டு என தகுதிகள் இருந்த காலத்தில் அனைத்து விதிகளையும் கட்டுடைத்து அடுத்த வீட்டு பையன் போன்ற தோற்றத்தில் இருந்த நாகேஷ் அவர்கள் இன்றைய தனுஷ் வகையறாக்களுக்கு ஒரு முன்மாதிரியாக திகழ்ந்தார். ஆனா அவரு பஞ்ச் டயலாக் பேசி பசுபதியை எல்லாம் தூக்கி வீசலை என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

பொதுவாக நகைச்சுவையை சில கூறுகளாக பிரிக்கலாம்:

1)பிறரை தாழ்த்திப் பேசி, பகடி பண்ணுதல் - டேய் கருவா சட்டி தலையா! அடப் பாவிகளா! உங்கள எல்லாம்....வகைகள்.

2)தன்னைத் தாழ்த்தி கொள்ளுதல் - என்னை ரெம்ப நல்லவன்ன்ன்னு சொல்லிட்டான்டா!

3)உடல் அசைவுகளால் நகைச்சுவை காட்டுதல் - சார்லி சாப்ளின் மேனரிசம்.

இன்றைய நகைச்சுவை நடிகர்கள் இதில் ஏதேனும் ஒரு பிரிவில் தான் இருப்பார்கள். ஆனால் நாகேஷ் காமெடியில் இதையெல்லாம் மீறி ஒருவிதமான வார்த்தைகளில் விவரிக்க முடியாத நளினம், மனித நேயம் இருக்கும். அதனால் தானோ என்னவோ இதுவரை அவரின் கலையுல வாரிசாக யாரும் கண்டறியப்பட வில்லை. சின்ன நாகேஷ்!னு யாரேனும் டைட்டில் கார்டில் போட்டுக்கறாங்களா? தெரிந்தால் எனக்கும் சொல்லுங்கள்.


படம் - நன்றி பிளாகேஸ்வரி

பொதுவாக நடிகன் என்ற வட்டத்தை தாண்டி திரைப்படத்தின் பாத்திரமாக வடிவம் பெற்று, அது மக்கள் மனதிலும் நீங்கா இடம் பேற்றவர்கள் மிகச் சிலரே. திருவிளையாடல் தருமி, எதிர் நீச்சல் மாது, சர்வர் சுந்தரம் என கதாபாத்திரங்களின் பேரை கேட்டாலே டக்குனு அந்த படங்களின் காட்சிகள், சில வசனங்கள், பாடல்கள், நாகேஷின் வசன உச்சரிப்புக்கள் எல்லாம் உங்கள் நினைவில் வந்து போகிறதா? இது தான் அந்த கலைஞனின் மாபெரும் வெற்றி என்பேன்.

இன்றைய தினத்தில் வின்னர் படத்தின் கைப்புள்ள, 23ம் புலிகேசி, கிரி படத்தில் வீரபாகு என வடிவேலுவுக்கும் விரல் விட்டு எண்ணக் கூடிய, மக்கள் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ள கூடிய பாத்திரங்கள் அமைந்தன.

இவ்வளவு தனித் திறமை பெற்று இருந்தும் ஒரு கலைஞனுக்கு கிடைக்க வேண்டிய கவுரவம், விருதுகள் எதுவும் நாகேஷுக்கு கிடைக்காமல் போனது மிகவும் துரதிஷ்ட வசமானது. அரசாங்கம் முடிந்தால் நாகேஷ் பெயரில் ஒரு விருது ஆரம்பித்து அடுத்த தலைமுறைக்கு இந்த மேதையை பற்றி தெரியபடுத்தி தம் தவறை துடைத்துக் கொள்ளட்டும்.

கடவுளை சிரிக்க வைக்க நாகேஷ் சில காலம் விண்ணுலகம் சென்றுள்ளார். கடவுளை வயிறு குலுங்க சிரிக்க வைத்த பிறகு மீண்டும் இந்த மண்ணுலகிற்க்கு விரும்பி வருவார் என விஜய் டிவியில் மனம் நெகிழ்ந்து பிண்னனி பாடகர் P.B.ஸ்ரீனிவாஸ் சொன்னது சத்தியமான உண்மை என்பேன்.

இப்ப அபி அப்பாவ பாருங்க, ஆசையா, முத்து முத்தான கையெழுத்துல அபி ஒரு கவிதை எழுதி தந்தா, அதை தொறந்து பாக்க கூட நேரமில்லாம, துபாய்க்கு வந்து பாத்திட்டு, உடன்பிறப்புக்கு ஒரு கடிதம் ரேஞ்சுக்கு, இவரும் அருமை மகள் எழுதிய கவிதைனு ஒரு தொலை நோக்கு பார்வையுடன், ஒரக்கண்ணில் கண்ணீர் துளியுடன் பதிவா போடறாரு. நேர்லயே அபியை பாராட்ட முடியலையேன்னு அவருக்கு எவ்ளோ பீலிங்க்ஸா இருந்திருக்கும்?

இன்று பதிவுலகையும் பாருங்கள், எத்தனை பேர் எவ்ளோ கஷ்டங்களுக்கு இடையில்,அலுவலக பணிக்கிடையில், வீட்டு வேலைகளுக்குகிடையில், காய்கறி நறுக்கி கொண்டும், பாத்திரம் தேய்த்துக் கொண்டும், டயப்பர் மாத்திக் கொண்டும்,பூரிக்கட்டை அச்சத்துடனும், நகைச்சுவையாக பதிவிடுகிறார்கள் என எண்ணிப் பாருங்கள். இத்தகைய நகைச்சுவை பதிவர்களை ஆதரித்து அங்கீகாரம் தாருங்கள்.

பி.கு: இந்த மேதைக்கு நினைவஞ்சலி கூட என்னால் இவ்ளோ தாமதமாகத் தான் போட முடியுது என நினைத்து மிகவும் வெட்கப்படுகிறேன்.