Tuesday, January 20, 2009

ஒரு கிளிக்குக்கு நூறு டாலர் தராங்களாம்

நான் நிஜமாவே பிசியா வேலைல மூழ்கி இருக்கும்போது(நம்புங்க ப்ளீஸ்), என் டீமில் இருக்கும் ஒரு சப்பாத்தி தரதரன்னு என் சேரை இழுத்து, உன் கிட்ட ஒரு முக்யமான விஷயம் சொல்லனும் என கிசுகிசுப்பான குரலில் சொன்னதும் எனக்கு ஒரே யோசனையா போச்சு. என்ன தான் என் மேலே ஒரு நல்ல அபிப்ராயம் இருந்தாலும் இட்ஸ் டூ லேட். சாரி எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு அப்படின்னு நானும் சீரியசா பதில் சொல்ல நினைத்தாலும், பின் விளைவுகளை எண்ணி கப்சிப்னு விஷயத்துக்கு காது குடுத்தேன்.

விஷயம் ரொம்ப சிம்பிள். இந்த சைட்டுல போய் நம்ம ஈமெயில் ஐடிய குடுத்தா அவங்க ஒரு மெயில் அனுப்புவாங்களாம். நாம நல்ல பிள்ளையா அவங்க கிட்ட ரிஜிஸ்டர் பண்ணிகிட்டோம்னு வைங்க, அவங்க ஒரு நாளைக்கு ஒன்னு அல்லது ரெண்டு மெயில் அனுப்புவாங்களாம். அதுல இருக்கற விளம்பர லிங்கை கிளிக் பண்ணிட்டு ஒரு நாப்பது செகண்ட் பொறுமையா இருக்கனுமாம். (அந்த நேரத்துல இரண்டு பதிவு படிச்சிரலாம்).

எங்க லிங்கை கிளிக்கினதுக்கு ரொம்ப நன்றி, இந்தா பிடிங்க நூறு டாலர்ன்னு நம்ம அக்கவுண்டுல லபக்குனு போட்ருவாங்களாம். அட, இது என்ன நோகாம நொங்கு திங்கற வேலையா இருக்கே!ன்னு நானும் ஒரு அக்கவுண்ட் கிரியேட் பண்ணி சொன்ன மாதிரியே செஞ்சாச்சு. இதோ படம் போட்டு பாகம் குறிச்சு இருக்கேன் பாருங்க:

நாம இப்படி கஷ்டப்பட்டு(?) சம்பாதிச்ச பணத்தை(?) நமக்கு செக்காவோ, வெஸ்டன் யூனியனாவோ அனுப்புவாங்களாம். என்னவோ போங்க, ஆப்ரிக்காகாரன் அவங்க ஊர் பாங்குல லட்சகணக்கான டாலர்களை என் பெயரில் மாத்தி எழுதட்டுமான்னு தினமும் மெயில் விடு தூது விட்டுட்டு இருக்கான். அடுத்தவன் பணம் நமக்கெதுக்கு?ன்னு நானும், வேணாம் ராசா! நீயே வெச்சுக்கோன்னு சும்மா இருக்கேனாக்கும்.

இவங்க சொன்ன மாதிரி டாலர் செக் அனுப்புவாங்களா இல்லாட்டி வட பழனி முருகன் டாலர் அனுப்புவாங்களா?ன்னு இனிமே தான் தெரியும். :)

Thursday, January 15, 2009

சிட்டி சென்டர்


மால் என்றவுடன் உங்களுக்கு ஏதேனும் கஞ்சா, அபின் போன்ற லாகிரி வஸ்து நினைவுக்கு வந்தால் நீங்கள் ரொம்பவே ராம் கோபால் வர்மா படம் பார்ப்பவராக இருப்பீர்கள். கொஞ்சம் குறைத்து கொள்ளுங்கள்.

திருமால் நினைவுக்கு வந்தால் மார்கழி குளிரில் சுடசுட வெண்பொங்கலுக்கு பஜனை செய்தவராக இருப்பீர்கள். போகட்டும்,பெருமாள் உங்களையும் காப்பாத்தட்டும்.

இதையெல்லாம் மீறி தமிழர்களிடையே ஒரு மால் கலாச்சாரம் வளர்ந்து வருகிறது. திக்கற்றவருக்கு தெய்வமே துணை மாதிரி சென்னைவாசிகளுக்கு ஸ்பென்சர் தவிர இன்னொரு மால் தான் சிட்டி சென்டர்.(இன்னுமா தமிழ்ப்படுத்தலை?)

அன்றாட வாழ்வில் நாம் என்னவெல்லாம் பயன்படுத்த மாட்டோமோ அதையெல்லாம் கடை போட்டு, லைட்டு போட்டு கடை பரத்தி வைத்திருக்கிறார்கள். சிறிது பயம் கலந்த ஆர்வத்துடன் மக்கள் எஸ்கலேட்டரில் கால் பதிக்கிறார்கள். அலேன் சோலி, ரேமான்ட்ஸ், போன்ற பிராண்டட் கடைகளில் கடைப் பணியாளர்கள் தாயக்கட்டை உருட்டி கொண்டிருக்கிறார்கள். லேண்ட் மார்க்கில் நிலமை கொஞ்சம் பரவாயில்லை. சிடி வாங்கும் சாக்கில் பலர், ஏசியில் அமர்ந்து ஒசியில் பாட்டு கேட்கிறார்கள். இன்னும் சிலர் கையில் டிபன் பாக்ஸ் எல்லாம் கட்டி கொண்டு புக்ஸ் செக்க்ஷனில் சம்மனம் போட்டு அமர்ந்து யவன ராணி படித்து கொண்டிருக்கிறார்கள். புஃட் வேர்ல்டில் தம் குழந்தைகளுக்கு செர்லாக் தேடும் அம்மாக்கள், காஸ்மெடிக்ஸ் செக்க்ஷனில் கோத்ரேஜ் டை தேடும் அரக்கு கலரில் லிப்ஸ்டிக் அடித்த ஆன்டிக்கள், இடது கையில் பாப்பின்ஸ் வைத்து கொண்டு, வலது கைக்கு டெய்ரி மில்குக்கு அடம் பிடிக்கும் டெனிம் ஜீன்ஸில் டிராயர் அணிந்த மஷ்ரூம்கட் செட்டிநாட் வித்யாஷ்ரம் குழந்தைகள், பில்லுக்கு கார்டு தேய்க்கவும், ட்ராலி தள்ள மட்டுமே அழைத்துவரப்படும் அப்பாவி ரங்குக்கள், யார்ட்லி(ஒரிஜினல்) யார்ட்லி(டூப்ளிகேட்), டாமி பாய்/கேள், ஓல்ட் ஸ்பைஸ், என கலவையாய் மணக்கும் கசகச மக்கள், எதையோ தேடி, எதையோ வாங்கி, எங்கோ ஒடிக் கொண்டிருக்கிறார்கள்.

எத எடுத்தாலும் ஆயிரம் ரூபாய்க்கு மேல் என அறிவிக்கப்படா விதிப்படி பெண்களுக்கு கை, காது, மூக்குக்கு என தோரியம் நீங்கலாக பூமியில் கிடைக்கும் எல்லா மெட்டல்களிலும் நகைகள் கொட்டிக் கிடக்கிறது. பெண்ணுக்கு அழகு புன்னகையே! என கல்யாணமான புதிதில் சாலமன் பாப்பையா மாதிரி நான் தீர்ப்பு சொன்னதில் நொந்து போன என் தங்கமணி அமைதியாக எல்லாத்தையும் பார்த்துக் கொண்டே வந்தார் என நினைத்தது சில வினாடிகளில் தப்பா போச்சு.

அந்த பிளாக் கலர் டாப்ஸ் போட்ட பொண்ணை தானே பாத்தீங்க? என அம்மணி அதிரடியாய் கேட்க, "கட்டிடம் எல்லாம் என்னமா கட்டியிருக்கான், லைட்டு எல்லாம் என்னமா மின்னுது!" என நான் சமாளிக்க பாத்தும் கதை ஒப்பேறவில்லை. நிலைமையை உடனே சமாளிக்க அபியும் நானும் படத்துக்கு டிக்கட் வாங்க வேண்டியதா போச்சு. படம் முழுக்க தேடியும் அபி அப்பாவுக்கு பதில் பிரகாஷ்ராஜ் தான் வந்தார். என்ன அனியாயம்? முடிந்தால், விரிவாக இந்த படத்தை பற்றி எழுத உத்தேசம். ஏற்கனவே பலர் இப்படத்தை பற்றி எழுதியாச்சு.

சிட்டி சென்டர் வாசலில் முகேஷ் அம்பானி மட்டுமே ஆட்டோ பிடிக்க முடியும். எங்க போகனும்?னு கேக்கறதுக்கு முன்னாடியே டூபிப்ட்டி குடு சார்! என கூலாக கேட்கிறார்கள். ஒன்னும் சொல்றதுக்கில்லை.

Friday, January 09, 2009

நடந்தது என்ன? - நான் தான் ஜோதா அக்பர்


நேற்று இரவு விஜய் டிவி பாத்த போது ஒரு சுவாரசியமான விஷயத்தை காட்டினார்கள். முன் ஜென்ம நினைவு, மறுபிறவி இதிலெல்லாம் அனேகமாக எல்லாருக்கும் ஒரு வித எதிர்பார்ப்புடன் கூடிய குருகுருப்பு இருக்கும். " நான் போன ஜென்மத்துல ராணியா பொறந்திருப்பேன்" போன்ற டயலாக்குகளை அடிக்கடி நீங்கள் கேட்டிருக்கலாம்.

அதை போல தமிழ் நாட்டில் பிரபலமான குடும்பத்தை சேர்ந்த அந்த அம்மா தமக்கு ஏற்பட்ட நினைவலைகளை பகிர்ந்து கொண்டார். பதேஃபூர் சிக்ரி அரன்மனையை சுற்றி பார்க்கும் போது தமக்கு ஏற்கனவே அங்கு வாழ்ந்த நினைவு இருப்பதாக உணர்ச்சிபூர்வமாய் அவர் கூறியபோது நம்மால் நம்பாமல் இருக்க முடியலை.

இதை போல பல சம்பவங்கள் உலகமெங்கும் நடந்தேறி இருக்கிறது. நமக்கே சில விசித்திர கனவுகள் வரும். அதன் பொருள் நமக்கு தெரியாது. ஆனால் ஏதோ ஒரு தருணத்தில் சிலபல ஆண்டுகள் கழித்து அதே மாதிரி ஒரு சம்பவம் நடக்கும் போது பளீர்னு மின்னல் வெட்டுவது போல நினைவலைகள் தோன்றும்.

குதிரைகளை பாக்கும் போது ஏதோ காலகாலமாய் அதனுடன் பழகியது போலவும், சான்டில்யன் கதைகளை படிக்கும் போது ஏற்கனவே அந்த கால சூழலில் வாழ்ந்தது போலவும் தோணுகிறதே. அதான் அந்த ஆசிரியரின் வெற்றி என நான் கருதுகிறேன். உங்களுக்கு இந்த மாதிரி அனுபவம் ஏற்பட்டு இருக்கிறதா?

நான் பலமுறை இதை மாதிரி உணர்ந்து இருக்கிறேன். இதை ஒரு அம்மானுஷ்ய சக்தி என்று சொல்வதா? மூளையின் நினைவுகளில் ஏற்படும் தாக்கம் என கொள்வதா? எனக்குள்ள ஒரு பட்சி சொல்லுது என பலபேர் சொல்வதை கேட்டு இருக்கோம். தம் உள்ளூணர்வை தான் அப்படி நாம் சொல்கிறோம்.

இந்த நிகழ்ச்சியின் இடையில் நானும் ரொம்ப சீரியசா முகத்தை வைத்து கொண்டு என் தங்கமணியிடம், "போன ஜென்மத்துல நான் தான் ராஜ ராஜ சோழன்னு எனக்கு தோணுது, இதை பத்தி நீ என்ன நினைக்கிறாய்?" என சீரியசா கேட்க, அம்மணிக்கு சிரிப்பை அடக்க முடியலை.

சரி, உங்களுக்கு இப்படி ஏதும் தோணி இருக்கா? சும்மா சொல்லுங்க பாப்போம்.