Showing posts with label Flashback. Show all posts
Showing posts with label Flashback. Show all posts

Monday, August 24, 2009

யேர் இந்தியா

க்ரிப்டாலஜி படித்து சைடு போசில்(அப்போதைய) அரவிந்தசாமி சாயலில் இருக்கும் என்னை, இன்டர்போலுக்கு ஆலோசனை வழக்குவதற்காக என் துறைத் தலைவர் டெல்லிக்கு அனுப்பினார் என நான் இந்த பதிவை ஆரம்பித்தால் உங்களில் பலருக்கு தொண்டையில் கிச்கிச் வந்து, ஹக்க்க் என துப்பி விடுவீர்கள் என எனக்கு தெரியும்.

காலாவதியாகி விட்ட எங்கள் கம்பெனியின் பிராடக்ட் லைசன்ஸை இந்த ரிசிஷன் நேரத்தில் புதுப்பிக்கலாமா? வேணாமா? என மண்டையை தடவியபடி கிளைன்ட் யோசிப்பதற்குள், அவர்களை நேரில் சந்தித்து, எங்கள் பிராடக்டை வாங்கினால் ஈரேழு பதினாலு லோகங்களில் உள்ள செய்திகள் எல்லாம் உங்கள் லேப்டாபிலேயே அருவியா கொட்டும். உங்கள் பிசினஸில் தேனாறும் பாலாறும் ஓடும்! என அள்ளிவிடும் வழக்கமான சீப் டிரேய்னர் தன் மனைவியின் ரெண்டாவது பிரசவத்துக்கு போய் விட்டதால், பிராடக்ட் பில்டப் குடுக்க நீ தான் டெல்லிக்கு போகனும்! என என் துறை தலைவர் எனக்கு கொம்பு சீவி விட்டபடியால், நானும் வழக்கமாக எங்கள் ஆபிசில் டிக்கட் புக் பண்ணி தரும் ஹெச்ஆர் அட்மின் உதவியை நாடினேன்.

எப்பவோ எனக்கும் அவனுக்கும் நடந்த ஒரு வாய்க்கால் தகராறை மனதில் வைத்து, யேர் இந்தியாவுல மட்டும் தான் டிக்கட் இருக்கு, இந்த பிடி! என டிக்கட்டை கையில் குடுத்தான். ஏன் இப்படி?னு நான் கேட்டதுக்கு, நாம் எல்லோரும் இந்தியர்கள், எனவே இந்திய பொருளையே வாங்குவோம்! என எழுந்து நின்னு உறுதிமொழி எடுக்கறான். விஜய் மல்லய்யா கூட இந்தியர் தான்டே! என நான் சொன்னதை எல்லாம் பொருட்படுத்தவேயில்லை.

எனக்கு யேர் இந்தியாவில் டிக்கட் கிடைத்ததில் தங்கமணிக்கு அளவில்லா சந்தோஷம். உங்களுக்கு பிரேக் பாஸ்ட் ஊட்டிவிட்டு, பாட்டு பாடி, கதை சொல்லி தூங்க வைத்து பத்ரமா டெல்லியில் கொண்டு போய் விடுவாங்க! கவலையே படாதீங்க! என தங்கமணி தன் பங்குக்கு வெந்த புண்ணில் வெங்காயத்தை தடவினார். நல்லா இருடே!

உங்களுக்கு லால் பகதூர் சாஸ்த்ரியை தெரியுமா? இந்திய பிரதமராக இருந்தாரே! அவர் பிரதமராக பதவியேற்ற அதே வருஷம் யேர் இந்தியாவிலும் நிறைய்ய பேர் யேர்ஹோஸ்டஸ்ஸாக டூட்டியில் சேர்ந்தார்களாம். அதுக்கப்புறமா புது அப்பாயின்மெண்டே போடலை போலிருக்கு.

ரயிலா இருந்தா பயணிகள் சார்ட் எல்லாம் ஒட்டுவாங்க. லிஸ்ட் பாத்து அண்டை அயலார் நட்புறவை வளக்கலாம், வேற ஒன்னுமில்லை. இங்க அத மாதிரி லிஸ்ட் எல்லாம் ஒட்ட மாட்டாங்க போல. பிளைட்டில் அவ்வளவாக கூட்டமில்லை. பக்கத்து சீட்டில் ஆள் அமைவதெல்லாம் இறைவன் குடுக்கும் வரம்! என உறுதியாக சொல்வேன். என்ன தான் யேர் இந்தியாவில் டிக்கட்டை கிழித்து குடுத்தாலும், அன்னிக்கு கடவுள் ரொம்பவே கருணை காட்டி இருந்தான். குதிரை வால் கொண்டை, காதில் பிளாட்டினம் ரிங்க், டெனிம் டி-ஷர்ட், த்ரீ-போஃர் என அழைக்கப்படும் முக்காலே அரைக்கால் ஜீன்ஸ், கையில் ஷெர்லாக் ஹோம்ஸ் புத்தகம்.

இந்த பெண்கள் ஏன் தான் ஷெர்லாக் ஹோம்ஸையும், ஹாரி பாட்டரையும் கட்டி கொண்டு அழுகிறார்களோ? எனக்கு தெரிந்ததெல்லாம் என் அருமை மகன் உண்ணும் செர்லாக் தான். (அதையும் இப்பலாம் துப்பி விடுகிறான், ஃபேளவர் மாத்தனும் போல.)

இந்த கதையின் முடிவில் ஒரு எதிர்பாராத திருப்பம் வரும் பாருங்கள்! அங்க தான் ஷெர்லாக் ஹோம்ஸ் சேர் போட்டு நிக்கறார்! என பொத்தாம் பொதுவாக நூல் விட்டதில் க்ளிக் ஆகி விட்டது.

இந்த கதையை நீங்கள் ஏற்கனவே படித்து இருக்கிறீர்களா?

ரெண்டு தடவை. உங்களுடன் சேர்ந்து மூனாம் தடவையும் படிக்க எனக்கு ஆட்சேபனை இல்லை.

இந்த சம்பாஷனைக்கு பிறகு, லேமேன் பிரதர்ஸ் செய்த தவறுகள், ஐரோப்பாவின் வேலையில்லா திண்டாட்டம், நார்த் கொரியா பரிசோதனை செய்த ஏவுகணை டெக்னாலஜி, என லோக விஷயங்களை பத்தி கன்னாபின்னாவென குதிரை வால் கொண்டையுடன் விவாதிக்க நான் ஒன்னும் லூசு இல்லை.

1) பாந்தினி சில்க் மெட்டீரியலில் கரீனா கபூர் அணிந்து வரும் பட்டீயாலா மாடல் எடுப்பாக இருக்குமா? இல்லை கட் சுடிதார் தான் சிறந்ததா?

2) கார்னியரில் என்ன பொருட்கள் புதிதாக மார்கெட்டுக்கு வந்திருக்கிறது?

3) ராக்கி சாவந்துக்கு வாழ்வு குடுக்கப் போகும் வள்ளல் யார்?

4) பெண்களுரில் மிகச் சிறந்த மால் எது? என உபயோகமான கருத்துக்கள் பரிமாறப் பட்டன. அடுத்த சீட்காரர்களும் தங்கள் கருத்துக்களை தாராளமாக அள்ளி வழங்க, நீயா? நானா? கோபி மாதிரி நிகழ்ச்சியை(கடலையை) சுமூகமாக கொண்டு செல்ல வேண்டியதா போச்சு.

ஆனாலும் இந்த பைலட் ரொம்ப மோசம். வண்டி உளுந்தூர்பேட்டையில அஞ்சு நிமிஷம் நிக்கும். டிபன், காப்பி சாப்டறவங்க சாப்டுக்கலாம்னு ஒரு அறிவிப்பு குடுத்து, ஹைதராபாத், நாக்பூர்னு வண்டியை ஸ்டாப்பிங் போட்டு ஓட்ட வேணாமோ? எங்கயும் நிப்பாட்டாமல் வண்டியை நேரே டெல்லிக்கு கொண்டு போய் விட்டார்.

டக்குனு எழுத பேப்பர் எதுவும் கிடைக்காததால், குதிரை வால், தனது ஈமெயில் ஐடியை என் உள்ளங்கையில் எழுத வேண்டியதா போச்சு. முகம் அலம்பும் போது தண்ணீர் பட்டதால் அந்த ஐடி அழிந்து விட்டது என நான் சத்தியம் செய்தாலும் மேலிடம் நம்ப மறுக்கிறது. :)

Friday, March 13, 2009

பெண்களுரு (Bengaluru)

இப்ப தான் சமீபத்துல 2005ல நான் முதல்முதலா பெங்களூருக்கு நல்லா குளிர் அடிக்கும் டிசம்பர் மாதத்தில் வந்து சேர்ந்தேன். கம்பெனி குடுத்த கெஸ்ட் ஹவுஸ்ல பையை வெச்ச கையோட நண்பன் ஒருத்தனுடன் ரூம் பாக்க கிளம்பியாச்சு. ஏன்னா பதினெஞ்சு நாளைக்கு தான் இந்த கெஸ்ட் ஹவுஸ்ன்னு சொல்லிட்டாங்க.

இந்த ஊர்ல வீட்டு முதலாளிகள் ஒரு நல்ல பழக்கம் வெச்சு இருக்காங்க. அதாவது, ரூம் வேணும்னு போய் நின்னா முதல் கேள்வி எந்த கம்பெனில வேலை பாக்கறீங்க? என்பது தான். நீங்க சொல்லும் கம்பெனியின் மார்கெட் நிலவரத்தை பொறுத்து அந்த முக்கு சந்து வீட்டின்/ரூமின் வாடகை முடிவு செய்யப்படும்.

இதுவே சென்னையா இருந்தா கேட்கப்படும் முதல் கேள்வி நீங்க பேச்சுலர்ஸா? என நினைக்கிறேன். ஒரு வேளை இப்ப நிலமை மாறி இருக்கலாம்.

ஒரு வழியா ரூம் பாத்து செட்டில் ஆனதும், வார இறுதியில் வெளியே சுத்தி பாக்க கிளம்பியாச்சு. இங்க தான் பிரச்சனையே! முதல்ல கன்னடம் பிடிபடவில்லை. பஸ்ல ஏறினா ஒரக்கட பன்னி! பன்னி!னு கண்டக்டர் சொல்றார். என்னடா பன்னின்னு திட்றார்?னு மெல்ல விசாரிச்சா வாங்க!னு சொல்ல பன்னியாம். போங்கனு சொல்லனும்னா ஜன்னியா? யானைக்கு அர்ரம்னா குதிரைக்கு குர்ரம் தானே?

சரி விடுங்க, நம்ம ஸ்டாப் எதுன்னு கண்டுபிடிக்கறத்துக்கு சஞ்சய் ராமசாமி மாதிரி பஸ் போகும் போதே சின்னதா மேப் போட்டு வெச்சுகிட்டேன். உதாரணமா, சிவப்பு சட்டை போட்டு ரிஷப்ஷன்ல நச்சுனு உக்காந்து இருக்கும் பியூட்டி பார்லருக்கு ரெண்டாவது ஸ்டாப்புல தான் இறங்கனும். ஒரு தடவை அதே பொண்ணு மஞ்ச சட்டை போட்டு வந்ததால் என் ஸ்டாப் மிஸ்ஸாகி போச்சு. அதே ரோட்ல ரெண்டு பியுட்டி பார்லர்கள் இருந்தது அப்புறம் தான் தெரிஞ்சது.

இங்க இன்னொரு வினோத விஷயம், என்னனு பாத்தா எந்த பக்கம் திரும்பினாலும் மஞ்சளும் சிவப்பும் கொண்ட ஒரு கொடி முக்குக்கு முக்கு பறந்துகிட்டு இருக்கும். அப்புறம் தான் தெரிஞ்சது அது கர்நாடக மாநிலத்துக்குன்னு தனிகொடி. இந்த கொடி பறக்கற எந்த கட்டிடத்தின் மீதும் கல் எறிய மாட்டாங்க. அதனால் கூகிள், யாஹூன்னு எல்லா கம்பெனி வாசலிலும் இந்த கொடி பட்டொளி வீசி பறக்கும். :)

இன்னமும் சில பேர் கர்நாடகா என்பது மைசூர் ராஜா தலைமையில் உள்ள தனி நாடுன்னு தான் நெனச்சுட்டு இருக்காங்க. நல்லா இருங்கடே!

வெள்ளிகிழமை ஆனவுடன் ஒருவரை ஒருவர் கண்டிப்பா விசாரித்துக் கொள்ளும் கேள்வி, அப்புறம், வீக் எண்ட் பிளான் என்ன? என்பது தான். வெள்ளி மாலை பொழுதுகளில் எல்லா ஏடிஎம்களிலும் மக்கள் வரிசையில் நின்னு ரெண்டாயிரம் எடுத்து கொண்டு ரெண்டு நாளில் மெகா மால்களிலோ தியெட்டர்களிலோ மொய் எழுதி விட்டு வருவார்கள்.

சில குறிப்பிட்ட கம்பெனிகள் தவிர பெரும்பாலான கம்பெனிகளில் டிரஸ்கோட் எனப்படும் உடை விதிமுறைகள் சென்னை அளவுக்கு கிடையாது. எங்க மானேஜர் வருஷத்துக்கு ஒரு தரம் திருப்பூர் போயி ரெண்டு டஜன் டி-ஷர்ட் வாங்கிட்டு வந்துடுவாரு. உடைல என்ன இருக்கு? ஆணிய ஒழுங்கா புடுங்கினா போதும் எனபது தான் இங்குள்ள நிலை. ஆனா சென்னைல இப்படி கிடையாதுன்னு உறுதியா சொல்வேன். மே மாத வெயிலும் டை கட்டி போகும் ஆட்களும் உண்டு.

சென்னை மக்களிடம் இருக்கும் சுறுசுறுப்பு இங்க கிடையாது. அதுக்கு இங்கு நிலவும் வானிலையும் ஒரு காரணம் என்று சொல்லலாம். கல்யாணத்துக்கு பத்திரிகை குடுத்தா வளைகாப்புக்கு வந்து நிப்பாங்க. :)

- இன்னும் சொல்வேன்.

Friday, January 09, 2009

நடந்தது என்ன? - நான் தான் ஜோதா அக்பர்


நேற்று இரவு விஜய் டிவி பாத்த போது ஒரு சுவாரசியமான விஷயத்தை காட்டினார்கள். முன் ஜென்ம நினைவு, மறுபிறவி இதிலெல்லாம் அனேகமாக எல்லாருக்கும் ஒரு வித எதிர்பார்ப்புடன் கூடிய குருகுருப்பு இருக்கும். " நான் போன ஜென்மத்துல ராணியா பொறந்திருப்பேன்" போன்ற டயலாக்குகளை அடிக்கடி நீங்கள் கேட்டிருக்கலாம்.

அதை போல தமிழ் நாட்டில் பிரபலமான குடும்பத்தை சேர்ந்த அந்த அம்மா தமக்கு ஏற்பட்ட நினைவலைகளை பகிர்ந்து கொண்டார். பதேஃபூர் சிக்ரி அரன்மனையை சுற்றி பார்க்கும் போது தமக்கு ஏற்கனவே அங்கு வாழ்ந்த நினைவு இருப்பதாக உணர்ச்சிபூர்வமாய் அவர் கூறியபோது நம்மால் நம்பாமல் இருக்க முடியலை.

இதை போல பல சம்பவங்கள் உலகமெங்கும் நடந்தேறி இருக்கிறது. நமக்கே சில விசித்திர கனவுகள் வரும். அதன் பொருள் நமக்கு தெரியாது. ஆனால் ஏதோ ஒரு தருணத்தில் சிலபல ஆண்டுகள் கழித்து அதே மாதிரி ஒரு சம்பவம் நடக்கும் போது பளீர்னு மின்னல் வெட்டுவது போல நினைவலைகள் தோன்றும்.

குதிரைகளை பாக்கும் போது ஏதோ காலகாலமாய் அதனுடன் பழகியது போலவும், சான்டில்யன் கதைகளை படிக்கும் போது ஏற்கனவே அந்த கால சூழலில் வாழ்ந்தது போலவும் தோணுகிறதே. அதான் அந்த ஆசிரியரின் வெற்றி என நான் கருதுகிறேன். உங்களுக்கு இந்த மாதிரி அனுபவம் ஏற்பட்டு இருக்கிறதா?

நான் பலமுறை இதை மாதிரி உணர்ந்து இருக்கிறேன். இதை ஒரு அம்மானுஷ்ய சக்தி என்று சொல்வதா? மூளையின் நினைவுகளில் ஏற்படும் தாக்கம் என கொள்வதா? எனக்குள்ள ஒரு பட்சி சொல்லுது என பலபேர் சொல்வதை கேட்டு இருக்கோம். தம் உள்ளூணர்வை தான் அப்படி நாம் சொல்கிறோம்.

இந்த நிகழ்ச்சியின் இடையில் நானும் ரொம்ப சீரியசா முகத்தை வைத்து கொண்டு என் தங்கமணியிடம், "போன ஜென்மத்துல நான் தான் ராஜ ராஜ சோழன்னு எனக்கு தோணுது, இதை பத்தி நீ என்ன நினைக்கிறாய்?" என சீரியசா கேட்க, அம்மணிக்கு சிரிப்பை அடக்க முடியலை.

சரி, உங்களுக்கு இப்படி ஏதும் தோணி இருக்கா? சும்மா சொல்லுங்க பாப்போம்.

Wednesday, July 09, 2008

வங்கி தேர்வு - நடந்தது என்ன?

நீங்கள் எப்போதாவது இந்த வங்கி தேர்வுகள் ஏதேனும் எழுதியதுண்டா? ஆம்! எனில் மேற்கொண்டு படியுங்கள். இல்லையெனில் என்னவென்று தெரிந்து கொள்ள மேற்கொண்டு படியுங்கள்.(அவ்ளோ லேசுல விட்ற மாட்டோம் இல்ல).
80-90களில் வங்கியில் வேலை செய்வது என்பது பலருக்கு ஒரு லட்சிய கனவாகவே இருந்தது. பிஎஸ்ஆர்பி(BSRB) என்ற வார்த்தை மந்திரம் போல உச்சரிக்கப்பட்ட காலம் அது. அந்த போட்டி தேர்வுக்கு ஏதோ அலங்க நல்லூர் ஜல்லிகட்டுக்கு காளையை தயார் செய்வது போல சிலர் பத்தாவதில் இருந்தே தம் மக்களை தயார் செய்தவர்களும் உண்டு.

கணக்கில் ஆழ்ந்த அறிவு, நுண்ணிய லாஜிக்கல் அறிவு, ஊறுகாய் போல கொஞ்சம் ஆங்கில அறிவு இருந்தால் ஞான பழம் எனக்குத் தான்!னு சொல்லி விடலாம். கணக்குனா சும்மா எட்டில் ஐந்து போனால் மிச்சம் எவ்வளவு? ரகம் இல்லை.
நான் குறிப்பிட்ட எட்டு, ஐந்து என்பதை வெறும் நம்பர்கள் என நினைவில் கொள்க.

1) சென்னையிலிருந்தும், மதுரையிலிருந்தும் இரண்டு வேறு ரயில்கள் மணிக்கு முறையே 50, 40 கிமீ வேகத்தில் வந்தால் அவை இரண்டும் எங்கு சந்தித்து கொள்ளும்? - இது ஒரு வகை.

2) ரமா, ஸ்வேதா, ரம்யா, அக்ஷிதா, ஷாலினி ஆகிய ஐந்து பேரும் வட்டமாக உக்காந்து கேசரி சாப்பிட்டால், ரமாவுக்கு பக்கத்தில் ரம்யா இல்லை, ஷாலினிக்கு பக்கத்தில் ஸ்வேதா தான் இருக்கா, அக்ஷிதாவுக்கு கேசரி பிடிக்காது, அப்போ அம்பி யாரு பக்கத்துல உக்காந்து இருப்பான்? - இது லாஜிக்கல் ரீஸனிங்கில் ஒரு வகை.

3) ரூம் போட்டு யோசித்து ஐந்தாண்டு திட்டத்தை நேரு தீட்டியதால் இந்தியாவுக்கு விளைந்த நன்மைகளை பத்தி ஒரே பீட்டரா எடுத்து விடு - இது ஆங்கில அறிவை சோதிக்க ஒரு வழிமுறை.

இதற்கென ப்ரத்யேக வகுப்புகள் எல்லாம் அனல் பறக்கும் பயிற்சிகள் அளித்து வந்தன. கேள்விக்கான விடைகள் ஏ/பி/சி/டி தான் (டிபிசிடி இல்லை). எங்க ஊரில் இவ்வகை வகுப்பு ஒன்று ரொம்பவே பிரசித்தம். நெல்லை மாவட்டத்திலேயே எங்க ஊரில் உள்ள அந்த குறிப்பிட்ட வகுப்பில் பயிற்சி எடுக்கவென்றே பலர் தங்கி படித்த காலங்களும் உண்டு. உங்க ஆட்கள் கொஸ்டின் பேப்பரை லவட்டி விடுவீர்களோ? என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை. எல்லாம் திட்டமிட்ட பயிற்சிகள் தான்.

இவ்வகை தேர்வு மையங்கள் பெரும்பாலும் பெரு நகரத்தில் உள்ள கல்லூரிகளாக தான் இருக்கும். பையங்கள் எல்லாம் ஏதோ ஜாலி டூர் போவது போல போவார்கள். பெண்கள் தேர்வு எழுத கிளம்பினால், உஜாலா சொட்டு நீலம் போட்டு வெளுத்த வேட்டியும், முழங்கை வரை மடித்து விட்ட வெள்ளை சட்டையுடன் அப்பாவோ, தம்பியோ (வெட்டியாக இருக்கும் பட்சத்தில்) முந்தைய நாளே மஞ்சபையுடன் கூடவே கிளம்பி விடுவார்கள்.
முப்பிடாத்தி அம்மன் கோவில் குங்குமம், அதற்கு மேல் திருனீறு, பின் ஒரு சாந்து பொட்டு, அதற்க்கு மேல் வீட்டின் பெரியவர்கள் யாரேனும் இட்டு விட்ட வெற்றி திலகம் சகிதமாக தேர்வு மையத்துக்கு ஒரு ஸ்பெஷல் எபக்டோடு வருவார்கள்.

வாம்மா மின்னல்! இது எத்தனையாவது படையெடுப்பு?னு ஏதேனும் ஒரு பையன் சவுண்டு விட்டா, பதிலுக்கு வெள்ளை வேட்டி விடும் சவுண்டுக்கு ஏரியாவே அதகளபடும். தப்பிச்சோம்! பிழைச்சோம்!னு அந்த பையன் எக்ஸாம் எழுதாமலேயே எஸ்ஸாகி விடுவான்.

சும்மா ஆசைக்கு ஒரு தரம் நானும் தேர்வுக்கு போய் நட்ராஜ் பென்சிலால் கொஸ்டின் பேப்பரில் ஷேடு அடித்து விட்டு வந்தேன். நல்ல வேளை தேர்வாகவில்லை, பேங்குல உக்காந்து பிளாக் எல்லாம் எழுத/படிக்க முடியுமோ?

இனிமே இவ்வகை தேர்வுகளுக்கு ஹால் டிக்கட்டுடன் பணம் கட்டிய ரசீது, ரசீது தந்த காஷியரின் பெயர், முகவரி, அவருக்கு எத்தனை குழந்தைகள்? போன்ற விபரங்களும் தெரிந்து கொண்டு போகனும் போலிருக்கு. அமெரிக்காவில் இருக்கும் வங்கிகளுக்கு பாங்கிங் சாப்ட்வேர் எழுத தெரிந்த நம்மால், நிஜமான சமீபத்தில் (போன வாரம் தான்) இங்கு ஒரு வங்கி தேர்வை கணினிமயமாக்க முடியலை என எண்ணும் போது சிலபல தெலுங்கு பட டைடில்கள் எல்லாம் வாய்க்கு வருகிறது.

Friday, July 04, 2008

எதிரொலி

சன் டிவியும் விஜய் டிவியும் தமிழனின் வரவேற்பறையில் நுழையாத என்பதுகளில் தூர்தர்ஷன்காரர்கள் டில்லியிலிருந்து, போனா போகட்டும் என அவ்வப்போது தமிழ் நிகழ்ச்சிகளையும் நடத்தி கொள்ள அனுமதித்து இருந்த காலம்.
உடனே வாசகர்கள் கிரேன் ஷாட், காமிரா ஆங்கிள் எல்லாம் யோசித்து பார்க்க வேண்டாம்.

திங்கள் கிழமைன்னா எல்லா மொழி பாடல்களும் வரும் தமிழ்மணம் போன்ற சித்ரஹார், செவ்வாய்னா ஒரு ரூம் செட்டுக்குள்ளேயே மொத்த கதையையும் நகர்த்தும் குடும்ப நாடகம், புதனும் வியாழனும் சில மொக்கை பேட்டிகள், வெள்ளி கிழமைன்னா ஒளியும் ஒலியும், சனி கிழமைன்னா ஸ்லீவ்லஸ் ஸ்வட்டர் போட்ட ராஜேஷ் கண்ணாவும், பன் கொண்டை போட்ட ஷர்மிளா டாகூரும் தள்ளி தள்ளி நின்னு டூயட் பாடும் ஹிந்தி படம், ஞாயிறுன்னா காலையில் ரங்கோலி, பின் ராமாயணம், சாயந்திரம் மனாளனே மங்கையின் பாக்கியம் என்ற புத்தம் புதிய திரைபடம் என மக்களை மெய்மறக்க வைத்து இருந்தது தூர்தர்ஷன்.

இதுல வியாழ கிழமைன்னு நினைக்கிறேன், ஒரு வார நிகழ்ச்சிகளை சில வாசக கண்மணிகள், விமர்சனம் என்ற பெயரில் டெம்ளேட் கடிதங்கள் போடுவார்கள். அந்த நிகழ்ச்சிக்கு பேர் எதிரொலி. காமடி நிகழ்ச்சி இல்லாத குறையை இந்த நிகழ்ச்சி போக்கி கொண்டிருந்தது என சொல்லலாம்.

அந்த நிகழ்ச்சிக்குன்னே பாலசந்தர் ப்ரேம் போட்ட கண்ணாடி அணிந்த ஒருத்தர் தான் பதில் சொல்ல வருவார். நியூஸ் படிக்க செலக்ட் செய்யாமல், இந்த எதிரொலிக்கு கடிதம் படிக்க ஒரு அம்மணியை அனுப்பி இருப்பார்கள். ஏன்னா அப்ப ஷோபனா ரவியின் புடவை டிஸைனுக்கு தான் மவுசு.

பெரும்பாலும் எதிரொலிக்கு வரும் கடிதங்கள் எல்லாம் ஜிங்ஜக்காக தான் இருக்கும்.
உதாரணமாக, போன வாரம் செவ்வாய் இரவு 7 மணிக்கு வயலும் வாழ்வும் நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அந்த நிகழ்ச்சியில் இயற்கை உரம் பற்றி எடுத்துரைத்த நபர் சட்டை கூட போட நேரமில்லாமல் உள்பனியனோடு வந்திருந்தது நெஞ்சை நெகிழ செய்தது! என்று விழுப்புரத்திலிருந்து வீராச்சாமி என்ற நேயர் எழுதியுள்ளார்!னு அந்தம்மா ஒரு பிட்டை போடுவாங்க.

உடனே நம்மாளு ஒரு தெய்வீக சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டு, அடுத்த தடவை அவரை சட்டை போட்டு பேட்டி குடுக்க செய்கிறேன் அப்படின்னு சமாளிப்பார்.

ஏன் செவ்வாய்கிழமை நாடகங்களை ஒரே ரூமில் எடுக்கறீங்க?னு ஜாம்பஜார்லேருந்து ஜக்கு என்ற வாசகர் கேட்டு இருக்கார்.

இது ஒரு நல்ல கேள்வி. இப்ப குடும்ப விஷயங்கள்னா அது நாலு சுவத்துகுள்ள தான் இருக்கனும் என்பதை தான் அந்த நாடகத்தின் இயக்குனர் சிம்பாலிக்கா சொல்லி இருக்கார்.
ஜாம்பஜார்ல தக்காளி ரொம்ப சீப்பா கிடைக்குமாமே! தக்காளி தொக்கு போட்டா இட்லிக்கும், தயிர் சாததுக்கும் செம காம்பினேஷன் மிஸ்டர் ஜக்கு! அப்படினு ஒரே போடா போடுவார் நம்மாளு.

இப்ப இந்த நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருக்கும் ஜக்கு, கேள்வியை விட்டுவிட்டு தக்காளி வாங்கி தொக்கு போட ஆரம்பிச்சுடுவார்.

டிஸ்கி: தமிழ்மணத்துல சில கேள்வி பதிவுகளை படித்து விட்டு பின் அதுக்கு பதில்களையும், பதிலுக்கு பதிலையும், பதிவா படிக்கும் போது இந்த எதிரொலி நிகழ்ச்சி எனக்கு நியாபகத்துக்கு வரவில்லைன்னு சொல்லிக்கறேன். :))

Wednesday, June 25, 2008

தகப்பஞ்சாமி




When the student is ready, the master appears - Buddhist Proverb.


இன்றைய சூழலில் பிள்ளைகள் மட்டுமல்ல, பெற்றோரும் செல்பேசி, கணிணி, ஈமெயில் அறிவு பெற்றவர்களாக இருப்பது காலத்தின் கட்டாயமாகி உள்ளது. இப்பொழுது வரும் செல்போன்கள் எல்லாம் பாக்க அழகா பாவனா மாதிரி இருக்கு. ஆனா கீபேடுகள் அவ்ளோ சுலபமா இருப்பதில்லை. அதிலும் நேரு காலத்து ட்ரிங்க் ட்ரிங்கையே உபயோகித்து வந்தவர்களுக்கு தீடீர்னு இப்படி உள்ளங்கையில் உலகம் வந்தவுடன் சிறிது தயக்கம், நாம ஏதும் அமுக்கி, ஏதும் ரிப்பேர் ஆனா பையனுக்கு வேற தண்டச் செலவு என்ற பெற்றோருக்கே உரித்தான பயம். செல்போனுக்கே இப்படினா கணிணி இன்னும் மோசம்.



அம்மா! இங்க பாரு, இது தான் இன்டர் நெட் எக்ஸ்ப்ளோரர், இது வழியா தான் மெயில் அனுப்ப முடியும், என நம் வழக்கமான மேதாவிதனத்தை காண்பித்தால் பெற்றோர் முகத்தில் தயக்கம், மலைப்பு என எல்லாம் ஒன்று சேர்ந்து விடுகிறது.


அப்புறம் நாம் புரிந்து கொண்டு சுலபமான வார்த்தைகளை போட்டு சொல்லி குடுத்தால் கற்று கொள்ளும் ஆர்வம் கண்ணில் மின்னுகிறது. இருந்தும் இந்த வயதில் கத்துக்க முடியுமா? இதெல்லாம் சாத்தியமா? என நியாயமான கவலைகள். ஆனாலும் பிள்ளைகளின், பேரன்களின் ஓட்டத்துக்கு ஈடு குடுக்கனுமே? என்ற பரபரப்பு.



நினைத்து பார்க்கிறேன், நான் வார்த்தைகளை கூட்டி கூட்டி பேச ஆரம்பித்த புதிதில் இந்த 'க' எனக்கு வராது. எனவே தக்காளியெல்லாம் தத்தாளி தான். கத்ரிக்காய் எல்லாம் தத்தரிதாய் ஆனது. ஆங்கில எழுத்தில் 'சி' எனக்கு மட்டும் வலது பக்கமாக வரும் அரைவட்டம்(தாரே சமீன் பர்?). ஆனாலும் பொறுமையாக எனக்கு பயிற்சி அளித்து, திருத்திய அவர்களின் பொறுமையில் தசாம்சமாவது (அய்யோ! படம் இல்லீங்கணா! பத்தில் ஒரு பங்குனு சொல்ல வந்தேன்) எனக்கு வாய்க்காதா என்ன?



நம்மிடையே வலையில் உலா வரும் பல அம்மாக்களின்/பாட்டிகளின் முயற்சிகளை நினைத்து பிரமிக்கிறேன். செளகார் ஜானகி, காரைக்கால் அம்மையார் என எத்தனை காரண பெயர்களுடன்(பட்ட பெயர்களுடன்) வலையுலா வந்து, பின்னூட்டமிட்டு, சமையல் குறிப்பு எழுதி, ஊர் உலகமெல்லாம் நமக்கு சுத்தி காட்டி, கதை சொல்லி, படம் காட்டி, தாலேலோ பாடி, நம் இல்ல விழாக்களில் முடிந்தால் நேரிலோ, மெயில் மூலமாகவோ வந்து வாழ்த்தி, ஹிஹி, மொய்யெழுதி, கால ஓட்டத்தில் கரைந்து விடாமல் நாணலாய் வளைந்து, தம் மக்கள் நின்றால் குடையாக, அமர்ந்தால் சிம்மாசனமாக வலம் வரும் எல்லா பெற்றோருக்கும் இந்த பதிவு சமர்ப்பணம். :)

Monday, May 19, 2008

மைசூர் காவேரி எக்ஸ்பிரஸ்

சென்னை மத்திய புகைவண்டி நிலையத்தில்(சென்ட்ரல் ஸ்டேஷன்னு சொல்ல வந்தேன்) சிட்டு குருவி லேகியம் தவிர எல்லா கடைகளும் வந்து விட்டது. ஆனாலும் நிலையத்தின் தூய்மை என்னவோ இன்னும் விஜய் படங்கள் போல அதே நிலைமையில் தான் இருக்கு. சட்ட வட்டமாக நடுவில் உட்கார்ந்து கொண்டு தலைக்கு நாலு சப்பாத்தியும் சப்ஜியையும் குடும்பத்துக்கே பறிமாறி கொண்டிருந்தாள் ஒரு பரதேவதை.

ஸ்டேஷனில் இருக்கும் டிவிக்களில் அண்ணாச்சி கடையில் குளிர் அடிக்குது!னு யாரோ ஒரு நடிகை வாங்கிய காசுக்கு அள்ளி விட்டு கொண்டிருந்தார். (அந்த நடிகையின் பெயரை முடிந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும், சும்மா ஒரு பொது அறிவுக்கு தான். )

சென்னையில் அடிக்கும் வெய்யிலுக்கு அப்பளம் காய போட்டால் எண்ணெய் செலவின்றி பொரிந்து விடும் போலிருக்கு. 9.30க்கு தான் ரயில். எனக்கு கொஞ்சம் எப்பவுமே எச்சரிக்கை உணர்வு அதிகம். ஆனாலும் ஒரு மணி நேரத்துக்கு முன்னாடியே வந்து தேவுடு காப்பது எல்லாம் எனக்கே டூ மச்சாக இருந்தது. ஏற்கனவே பிளாட்பாரத்தில் வண்டி நின்று கொண்டிருந்தாலும், எனக்கு வண்டிக்குள்ளே போக இஷ்டமில்லை. சும்மாவே நம் மக்களுக்கு பேசறத்துக்கு காசு கொடுக்கனும். அதிலும், அறிமுகம் இல்லாதவர்களிடம், அது சன் பீஸ்ட் பிஸ்கோத்து விக்கும் சூர்யாவா இருந்தா கூட பேச்சு வெச்சுக்காதீங்கனு மைக்கில் அறிவித்து இருந்தபடியால், சுமாராக சூர்யா போல் இருக்கும் என்னை (சரி, இதுக்கே துப்பினா எப்படி?) சந்தேகமாகவே பார்க்கும் வாய்ப்புக்கள் இருக்கறபடியால், எதுக்கு வம்பு?னு சரியாக 15 நிமிடத்துக்கு முன்னாடி தான் வண்டியில் ஏறினேன்.

ரயிலில் தனியாக, அதுவும் என்னை போன்ற ஏமாந்த சோனகிரிகள் பயணித்தால் எப்படி தான் கூட இருப்பவர்களுக்கு தெரியுமோ?
"எச்சூஸ்மி! நாங்க பேமிலியா வந்ருக்கோம். என் மச்சினி மட்டும் 10ம் நம்பர் சீட். கொஞ்சம் மாத்திக்க முடியுமா?னு சொல்லி அந்த சீட்டை தள்ளி விட்டு விடுவார்கள். அங்க போனா உச்சா வாடை புரட்டி எடுக்கும். கூட பயணிக்கும் சதாவை பார்க்காமல் டாய்லைட்டை பார்த்து டிடிஆர்ர்ர்ர்ர்!னு தொண்டை கிழிய கத்றத்துக்கு நான் என்ன அன்னியன் படத்து அம்பியா என்ன?

நல்ல வேளை இந்த தடவை அந்த மாதிரி ஒன்னும் நடக்கலைனு நான் பெறுமூச்சு விடுமுன் தொப்பி போட்ட ஒரு தடியன் (மிடில் பர்த்தாம்)மெதுவாக தொண்டையை கனைத்தான். நானும் என் பிரண்டும் சேர்ந்து வந்துருக்கோம். அதனால....
(பெரிய துரியோதனனும் கர்ணனும்) நானும், என் பிரண்டு கூட தான் வந்ருக்கேன்! அதனால... அதே பிட்டை அவனுக்கே போட்டதில் கடுப்பாகி போனான். ஆனால் இன்னொரு லோயர் பர்த்த்காரனை சரி கட்டி இடத்தை பிடித்து விட்டான்.

இந்த பெங்களுர் டிரெயினில் பயணிப்பவர்களை மிக எளிதாக கண்டு கொள்ளலாம்.

ஆண்கள் எல்லோரும் டவுசர் பாண்டிகளாக இருப்பார்கள். தோளில் ஏதேனும் கேக்ரான்-மோக்ரான் சாப்ட்வேர் கம்பனி ப்ரீயா குடுத்த பை இருக்கும். இடது கையில் கண்டிப்பாக ஒரு பிஸ்லரி பாட்டில் இருக்கும், வலது கையில் காமிரா மொபைல் (யாருக்கு தான் பேசுவார்களோ?). ஏதேனும் ஒரு காதில் கடுக்கன், ஈயம் பித்தளையில் தேள் டாலர் போட்ட செயின் கண்டிப்பாக இருக்கும்.

அம்மணிகளை பத்தி சொல்ல வேண்டியதில்லை. சென்னையில் மீரா சீயக்காய் போட்டு வளர்த்த கூந்தலை, பெங்களுரில் கழுதை வால் மாதிரி வெட்டி இருப்பார்கள் என்பதோடு நிறுத்தி கொள்கிறேன். முக்யமா எல்லோரும் இ-டிக்கட் தான் வைத்து இருப்பார்கள்.

ரயில் புறப்பட்டு பத்து நிமிடத்தில் பரிசோதகர் நீல நீற கோட்(இந்த வெய்யிலில் எப்படி சார்?) அணிந்து வந்தார். ஒழுங்கா இ-டிக்கட்டுக்கு ஐடி கார்டு எடுத்து வைங்க!னு கறாராக சொல்லி விட்டார். அதோடு நிற்கவில்லை, இந்த சீட் எக்ஸ்சேஞ்ச் மேளா நடத்திய தொப்பிகாரனை ஒழுங்கா அவன் சீட்டுக்கே போக சொல்லிவிட, கம்பார்ட்மெண்ட் முழுக்க பலபேர் குறுக்கேயும் நெடுக்கேயும் போக ஆரம்பித்து விட்டனர். எல்லோரும் இடம் மாத்தி இருக்காங்க போலிருக்கு.

வாலு போச்சு! கத்தி வந்தது டும்! டும்! டும்! போல தனக்குரிய சீட்டுக்கு ஜீன்ஸும், டிஷர்ட்டும் அணிந்த பெண் வந்து சேர்ந்தாள். ஒட்டு கேட்கும் பழக்கம் எல்லாம் எனகில்லை, காத்து வாக்கில் டிடிஆரிடம் சொன்ன போது விழுந்தது, பெயர் கூட ஏதோ பூஜாவாம்.

சரி, இந்த டிடிஆர் செஞ்சது கரக்ட்டா? அதாவது கராறாக ரூல்ஸ் ராமானுஜமாக இருந்ததை சொல்றேன். மக்களுக்காக தான் ரூல்ஸ்!னு நினைக்கறீங்களா? இல்ல ரூல்ஸுக்காக தான் மக்கள்!னு நினைக்கறீங்களா? வளர்ச்சியடைந்த நாடுகளில் எல்லாம் மக்கள் சட்டத்தை மிகவும் மதிக்கிறார்கள், பொது இடத்தில் குப்பை போடாமல் இருப்பது, துப்புவது போன்றவை. சட்டங்கள் கடுமையாக்கப்பட்டால் மக்கள் நம்மூரிலும் சட்டத்தை மதிப்பார்களா? இதை பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க?

டிஸ்கி#1: கடைசி பாரா தான் மாரல் ஆப் தி பதிவு. :)

டிஸ்கி#2: அப்புறம் பூஜா பற்றிய பிற தகவல்களை அடுத்த பதிவுல சொல்லுவியா அம்பி?னு பின்னூட்டம் எல்லாம் போட கூடாது. :))

Tuesday, May 13, 2008

இந்த நாள் உன் காலண்டர்ல குறிச்சு வெச்சுக்கோ!

பதினாலு மே 2007

அக்னி நட்சத்திர வெய்யிலையும் பொருட்படுத்தாது வந்திருந்த கூட்டம் குளிரூட்டபட்டு இருந்த அந்த மண்டபத்தில் பிதுங்கியது. ஒன்பதரைக்கு முகூர்த்தம் ஆரம்பம் என்பதால் காலையில் இட்லி, மசால் தோசை, நெய் வழுக்கிய கேசரியை சுகமாய் உள்ளே தள்ளி விட்டு சாவகாசமாய் வம்படித்து கொண்டிருந்தனர் பல மாமாக்கள்.

மண மேடையில் ஒன்னுமே சாப்பிடாம உட்கார்ந்து இருக்கும் மாப்ளையையும், பெண்ணையும் மிலிட்டரி டிரில் வாங்கி கொண்டிருந்தனர் இரு வீட்டு புரோகிதர்களும். நெக்லஸ் புதுசா? செவப்பு கல் வெச்ச தோடு போட்டு இருந்தா உனக்கு இன்னும் எடுப்பா இருந்திருக்கும்! ஆம்படையான்ட சொல்லி இந்த தீவாளிக்கு வாங்கிக்கோ! என யாரோ ஒரு அப்பாவி ரங்குவுக்கு ஆப்படித்து கொண்டிருந்தார் ஒரு மாமி.

டிரவுசரை அவுத்து கொண்டு "டாடி! அலம்பி விட வா! என திருவாய் மலர்ந்து அவசரமாய் ஓடிய தன் மூணு வயது தவபுதல்வனை பின் தொடர்ந்து ஓடி கொண்டிருந்தார் இன்னொரு அப்பாவி ரங்கு. வாங்கிய காசுக்கு வஞ்சனையில்லாமல் "வள்ளி கணவன் பெயரை வழிப்போக்கன் சொன்னானடி!"னு அட்ரஸ் விசாரித்து கொண்டிருந்தார் நாதஸ்வர வித்துவான்.

பாச மலர் சாவித்திரியின் தோழிகள் ரேஞ்சுக்கு ஐந்து நிமிஷத்துக்கு ஒரு முறை கலகலவென சிரித்து, தம் டிஜிட்டல் காமிராவில் தம் தோழியை பதிந்து கொண்டிருந்தனர் மணபெண்ணின் தோழிகள். உன்னை பாத்து ஒன்னும் சிரிக்கலை, நீ வேஸ்ட்டா அசடு வழியாதே!னு மாப்ளையின் தம்பி தன் பங்குக்கு கடுப்பேத்தி கொண்டிருந்தான்.

இதோ அந்த தருணம் வந்து விட்டது. அண்ணாமலையில் ரஜினி சரத்பாபுவை பாத்து சொல்வாரே!

ஆபிஸ்ல வேலை இல்லாத போதும் நைட் பத்து மணி, பதினோரு மணி வரை வெட்டியா(அய்ய, வெட்டி பாலாஜி உங்கள இல்ல) சீட்ட தேய்ச்சுட்டு ஒவ்வோரு மொக்கை பதிவா போய், பின்னீட்டீங்க அண்ணே! கலக்கிடீங்க அக்கா! அங்க தான் நீங்க நிக்கறீங்க போங்க! ரீப்பீட்டேய்ய்!னு பின்னூட்டம் போட்டுட்டு வர உன்னை,

ஆபிஸ் கேண்டீன், ஓட்டல்னு வெந்ததையும் வேகாததையும் சாப்பிட்டு காலம் தள்ற உன்னை,

பக்கத்து சீட்டு ரசகுல்லா கிட்ட பெங்காலி, எதிர் சீட்டு பஞ்சாபி கிட்ட ஹிந்தி,அடுத்த சீட்டு திருச்சூர் குத்து விளக்குகிட்ட மலையாளம்னு சம்சரிச்சுட்டு இருக்கற உன்னை

ஒரு பொறுப்புமிக்க ரங்குவாக, இட்லிக்கு மாவு பதம் தெரிந்த ஒரு ரங்குவாக, பூரிகட்டையின் நீளம், பருமன், அகலம் தெரிந்த ஒரு ரங்குவாக மாத்தி காட்டறேன்!

இந்த நாள் உன் காலண்டர்ல குறிச்சு வெச்சுக்கோ!

அக்னியை சாட்சியாக வைத்து, பொன் தாலியை மணபெண்ணின் கழுத்தில் கட்டியவுடன் அந்த பெண், இந்த அப்பாவி பையனை பார்த்த பார்வையின் விளைவே இந்த பதிவு. காலம் யாருக்காகவும் நிற்பதில்லை.

மே 15 இன்று தமது திருமண நாளை கொண்டாடும் பிளாகேஸ்வரி அக்காவுக்கு இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.

Thursday, April 17, 2008

ரெட்டை ஜடை வயசு - II

Part-I

மேக்கப் என்னவோ திருவள்ளுவர் மாதிரி போட்டாச்சு. நான் நினைத்த அனிமேஷனை எப்படி கொண்டு வருவது? என ஒரே யோசனை. பரமார்த்த குரு தன் சிஷ்ய புள்ளைகளிடன் யோசனை கேட்பது மாதிரி என் விசுவாச மாணவர்களிடமே மேட்டரை விளக்கினேன். ஒரு ஊஞ்சலில் வள்ளுவரை உக்காத்தி திரைக்கு பின்னாடி இருந்து இயக்கலாம்!னு சொல்றான் ஒருத்தன், வள்ளுவரையே கயிறு கட்டி மேடைக்கு மேலிருந்து தூக்கலாம்னு சொல்றான் இன்னொருத்தன். ஒன்னும் சரி வரலை. என் நோக்கம் எல்லாம், பார்வையாளருக்கு நாம் எப்படி வள்ளுவரை இயக்குகிறோம்? என்பது தெரியவே கூடாது.

அப்ப தான் கிஷ்கிந்தா வானர சேனையில் ஜாம்பவான் மாதிரி ஒருத்தன் பளிச்சுனு ஒரு ஐடியா குடுத்தான். கார்களை தூக்க ஜாக்கி பயன்படுத்துவோம் இல்லையா? அத மாதிரி ஏதாவது?னு அவன் சொல்ல, எனக்குள் வள்ளுவர் சும்மா ஜிவ்வுனு மேடையில் எழும்ப துவங்கினார்.

போட்டி நாளும் வந்தது. மேக்கப் எல்லாம் கச்சிதமாக அமைந்தது.கையில் ஏற்கனவே எழுதி வைத்த பனை ஓலை சுவடி, திருக்குறள், எழுத்தாணி எல்லாம் குடுத்து வெச்சாச்சு. மேடையில் வழக்கம் போல காந்தி வந்தார், அன்னை தெரஸா, இந்திரா காந்தி, ஆதி வாசி எல்லாம் வந்து போனார்கள்.

தீடிரென மொத்த அரங்க விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டன. பவர் கட் என எல்லோரும் நினைத்திருக்கும் வேளையில், மேடையில் வள்ளுவர் தலைக்கு பின்னாடி ஒரு ஓளி வட்டம் தெரிந்தது. மேடை முழுக்க சாம்பிராணி புகை மூட்டம். பிண்னணியில் கவிதாலயாவின் "அகர முத எழுத்தெல்லாம்" பாடல் ஓடிக் கொண்டே இருந்தது. தீடிரென வள்ளுவர் உட்கார்ந்திருந்த மரபலகை மெல்ல இஞ்ச் இஞ்சாக எழும்ப துவங்கியது.

மரபலகையின் மேல் ஒரு சால்வை போட்டு வள்ளுவர் அமர்ந்து இருந்ததால் பலகை எப்படி இயக்கபடுகிறது? என பாக்கறவங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. வள்ளுவரின் முதுகுக்கு பின்னால் இருக்கும் மிக பெரிய திரை மறைவில் இருந்து பரமார்த்த குருவின் சிஷ்யர்கள் இருவர் கார் ஜாக்கியை பதமாக இயக்கினார்கள்.

டக்குனு பிண்னணி இசை நிறுத்தப்பட்டது. "குழந்தாய்! இந்த ஒலை சுவடியை நடுவர்களிடம் கொண்டு போய் குடு!" என வள்ளூவர் முன் வரிசையிலிருந்த ஒரு பிகரை பாத்து பிட்டு போட, அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது. வள்ளுவர் கிடைத்த கேப்பில் கெடா வெட்டி விட்டார். அடபாவி! நான் எழுதி குடுத்த டயலாக்குல இது இல்லவே இல்லையே? என நான் பதற, அந்த குழந்தை வேறு வழியில்லாமல் வள்ளுவரிடம் ஓலை வாங்கி நடுவர் குழுவிடம் சமர்த்தாக குடுத்து விட்டு இருக்கையில் அமர்ந்து வள்ளூவரை முறைத்தது.

நடுவர் குழுவில் இரண்டு தமிழ் புரபசர்களும் இருந்தனர். அவர்கள் வள்ளுவரை நேரில் பாத்த பரவச நிலையிலிருந்து சகஜ நிலைக்கு வரவே இரண்டு நிமிடங்கள் ஆனது. அப்புறம் என்ன, காந்தி, இந்திரா என எல்லாரையும் பின்னுக்கு தள்ளிவிட்டு வள்ளுவர் பரிசு கோப்பையை தட்டி சென்றார்.

நான் லெக்சரராக பணி புரிந்த இரண்டாம் ஆண்டில், இரண்டாம் ஆண்டு மாணவர்களோடு ஏற்பட்ட இந்த அனுபவத்தை வ.வா சங்கத்தின் ரெண்டு போட்டிக்கு அனுப்புகிறேன்.

அப்புறம், படிச்சுட்டு ஆளுக்கு ரெண்டு கமண்ட் போட்டுட்டு போங்க என்ன?

Wednesday, April 16, 2008

ரெட்டை ஜடை வயசு

பொதுவா இந்த கல்லூரிகளில் வருடம் முழுக்க செமஸ்டர் பரீட்சை, பிராக்டிகல்ஸ்னு மாணவர்களை பிராண்டி எடுத்தாலும் யூத் வெஸ்டிவல், ஒவ்வோரு துறைக்கும் தனி விழானு ஏதாவது ஒரு வகையில் ஒரு இடைகால நிவாரண நிதி அளித்து விடுவார்கள். அதுவரை வாலை சுருட்டி கொண்டிருந்த வானரங்கள் எல்லாம் அந்த ஒரிரு நாட்களில் அசோக வனத்தில் புகுந்த அனுமாராட்டும் கல்லூரியை துவம்சம் செய்து விடுவார்கள்.

அவனவன் த(ண்)னி திறமை எல்லாம் சும்மா பீறிட்டு வந்து பார்வையாளர்களை பரவசபடுத்தும். அதுவும், பதினெட்டு பட்டி மகளீர் கல்லூரிகளும் வருகிறார்கள் என்றால் கேட்கவே வேண்டாம்.

தீடிரென கடைகளில் பேர் அன் லவ்லி கீரிம்கள் அனைத்தும் விற்று தீரும். சலூன்களில் கூட்டம் ரொம்பி வழியும். துவைக்காத ஜீன்ஸும் டீ-ஷர்ட் சகிதமாய் பேஷன் ஷோவுக்கு வெங்கல கடையில் யானை புகுந்த கதையாய் இளைஞர் பட்டாளமும் களத்தில் குதிக்கும். ரீமிக்ஸ், மசாலா மிக்ஸ்னு கேசட் கடைகாரன் உயிரை வாங்கி பழம் நீயப்பா!வில் ஆரம்பித்து பம்பர கண்ணாலே! காதல் சங்கதி சொன்னாளேனு நைசா ப்ரபோஸ் பண்ணும் கேடிகளும் உண்டு.

தப்பிதவறி ஏதேனும் அப்பிராணி பெண் மேடையேறி அவள் குலதெய்வத்தை கும்பிட்டு, கண் மூடி, நித்யஷ்ரி மகாதேவன் ரேஞ்சுக்கு வாதாபி கணபதிம்! பஜே!னு ஆரம்பித்தால் பஜல்! பஜல்! காமன் பஜல் ஸே! பஜல்! பஜல்!னு மேடைக்கு கீழே ஒரு கூட்டம் தனியாவர்த்தனம் வாசிக்கும்.

இசைகருவிகள் போட்டினா, ஸ்டைலாக கிதார் வைத்து கொண்டு மைக்கேல் ஜாக்ஸனின் மச்சினன் மாதிரி பீட்டர் விடுவது ஒரு கோஷ்டினா மதுரை மண் மணம் கமழ, கரகாட்டகாரன் கவுண்டமணி மாதிரி தனிதவில் வாசித்து அசத்தும் இன்னொரு கோஷ்டி. டான்ஸ் போட்டினா இந்த மக்களுக்கு எங்கிருந்து தான் அவ்ளோ ஐடியா பெறுக்கெடுக்குமோ? ஆனா அழகா வந்து, அம்சமாய் ஆடி, முதல் பரிசை மகளிர் கல்லூரி தான் தட்டி செல்லும் எனபது ஊரறிந்த ரகசியம்.

நடன போட்டிகளுக்கு நடுவராய் அமர்ந்து சபாஷ்! சரியான போட்டி!னு சேவை புரிய புரபசர்களிடையே பலத்த போட்டி நிலவும். சலங்கை ஒலி பத்து தடவை பாத்தவனாக்கும்!னு பிஸ்து காட்டுவார்கள் சில பெருந்தலைகள்.

மாதம் ஒரு கிலோ லயன் டேட்ஸ்(பேரீச்சம்பழம்) சம்பளத்துக்கு நான் ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு கணிணி மாணவர்களோடு சேர்ந்து நானும் லெக்சரர் என்ற பெயரில் நான் படித்த காலத்தில் சாய்ஸில் விட்ட பாடங்களை மறுபடி படித்து, நடத்தி கொண்டிருந்த போது நடந்த நிகழ்ச்சி இது.

என்னை போன்ற அம்மாஞ்சிகளுக்கு "களி மண்ணில் கை வண்ணம் காணும் போட்டி" அல்லது " நேர் நேர் தேமா! நிரை நேர் புளிமா! போன்ற கவிதை போட்டிகளுக்கு நடுவராய் மாரடிக்கும் பாக்யம் தான் வந்து சேரும்.

அந்த வருஷ போட்டிகளில் மாறுவேட போட்டியும் இருந்தது. சுமார் ஒரு பத்து கல்லூரிகள் கலந்து கொண்டன. என் மாணவன் ஒருவனும் போட்டி ஆரம்பிக்கும் ஒரு வாரத்துக்கு முன்னாடி இருந்தே என்ன வேஷம் போடலாம்? ஒரு ஐடியா குடுங்க சார்!னு என்னை நச்சரித்து கொண்டிருந்தான்.

பொதுவா இந்த மாறுவேட போட்டினா ஒன்னு மொட்டை அடித்து கொண்டு கையில் கம்பு வைத்து, ஒரு டைம்பீஸ் கடிகாரத்தை முக்கால் முழ வேட்டியின் இடுப்பில் சொருகி காந்தினு பில்டப் குடுப்பார்கள், இல்லாட்டி தலையில் முக்காடு போட்டு கொண்டு அன்னை தெரஸானு அல்வா குடுப்பார்கள். நீ ஏதாவது வெரைட்டியா குடுடா! அப்ப தான் ஜெயிக்க முடியும்னு நான் வேறு கடுப்பேத்தி இருந்தேன்.

பையனுக்கு என்ன தோணினதோ தெரியலை, குடுகுடுனு போய் ஒரு நாடக கம்பனியிலிருந்து ஜடா முடி, நீளமான தாடி கமண்டலம் என அள்ளி கொண்டு வந்து சாமியார் வேஷம் போட போறேன்!னு ஒரு குண்டை தூக்கி போட்டான். வெறும் சாமியார் வேஷம் எல்லாம் கதைக்கு ஆவாதுனு நான் சொல்லியும் பையன் விடாபிடியா இருந்தான். சரி, வழக்கம் போல ஏதவது டகால்டி பண்ணிட வேண்டியது தான்!னு முடிவு பண்ணி கையில் பனை ஓலை கட்டு, எழுத்தாணி, வடகம் காய போட்டிருந்த வெள்ளை வேட்டினு சாமியாரை திருவள்ளுவரா மாத்தியாச்சு. மாத்தினாலும் ஒரு சின்ன நெருடல் இருந்தது. நமக்கு எல்லம் திருவள்ளுவர் என்றவுடன் என்ன ஞாபகம் வரும்? "அகர முத எழுத்தெல்லாம்"னு கே.பாலசந்தரின் கவிதாலயா தானே? (எனக்கு அப்படி தான்பா!)

அதே மாதிரி ஒரு அனிமேஷன் மேடையில பண்ணினா என்ன?னு தோணியது. அதை எப்படி செயல்படுத்தினேன்னு அடுத்த பதிவில் பார்ப்போமா?

Friday, April 04, 2008

பரீட்சை

வால் டிராயர் போட்டு கொண்டு எல்.கேஜி படிக்க ஸ்கூல் போன காலத்திலும் சரி, துவைக்காத ஜீன்ஸ் அணிந்து காலேஜ் செமஸ்டர் பரீட்சை எழுத போன போதும் சரி இந்த எக்ஸாம் பீவர் என சொல்லபடும் பரீட்சை பயம் எல்லாம் எனக்கு இருந்ததில்லை.
இதற்கு காரணம் அட்டை டூ அட்டை எல்லாம் கரைத்து குடித்து விட்டு போனேன் என அர்த்தம் கொள்ள கூடாது.

பள்ளி காலங்களில் அப்படி படித்ததுண்டு. ஐந்தாம் வகுப்பில் தொடர்ந்து எல்லா பரீட்சைகளிலும் முதலாவதாக வந்ததுக்காக, ஆண்டு இறுதியில் மேடை போட்டு கேசரி சாப்பிட ரெண்டு எவர்சில்வர் பேசின் குடுத்தார்கள். இன்னும் பத்ரமாக வைத்திருக்கிறேன்.

ஆறாவது சற்று பெரிய பள்ளிகூடம். புதிய களம், புதிய ஆசிரியர்கள். கண்ண கட்டி தமிழ்மணத்துல விட்ட மாதிரி இருந்தது. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தேர்வு. இந்த சமூக அறிவியல் பாடத்தில் தூர்தர்ஷனில் வரும் சுரபி ரேணுகா ஷாஹேன் தயவில் இமய மலை பத்தி நான் மட்டும் எக்ஸ்ட்ரா பிட்டு போட்டதில் என்னை தவிர மொத்த கிலாஸும் பெயில். நான் மட்டும் 45 மதிபெண்கள். பாஸ் ஆனா தான் ரேங்க் தருவார்கள். (இப்பவும் அப்படி தானே?)ஆக நான் மட்டும் பாசாகி முதல் ரேங்கும் பெற்று அடுத்த பத்து நாட்களுக்கு கிளாஸில் மகுடம் இல்லாத மகாராஜா ரேஞ்சுக்கு சீன் போட முடிந்தது.

அந்த பள்ளியில் ஒவ்வொரு ஆசிரியருக்கு ஒவ்வொரு மாதிரி எழுதனும்.

1) ஒருத்தருக்கு பாயின்ட் பாயின்டா எழுதினா தான் பிடிக்கும்.
2) ஒரு டீச்சருக்கு முக்யமான வரிகளை கலர் ஸ்கெட்ச்சால் பெயின்ட் அடிக்கனும்.
3) ஒரு ஆசிரியருக்கு பாரா பாராவா எழுதனும். எத்தனை ஷீட் பேப்பர் எழுதி இருக்கோம்னு பாத்து தான் சில பேர் மார்க் போடுவாங்க.

இந்த பாரா பார்ட்டிய நம் மக்கள் ஈசியா ஏமாத்திடுவாங்க. பாராவின் முதல் மற்றும் கடைசி வரிகள் மட்டும் அறிவியல் சம்பந்தமா எழுதிட்டு, நடுவுல அவனவன் ஈஷ்டத்துக்கு ராமாயணம் முதல் படையப்பா படத்தில் நீலாம்பரியின் பங்கு வரை எழுதி வைப்பான். நடுவுல நியூட்டன், ஐன்ஸ்டின் எல்லாம் வேறு வந்து நீலாம்பரியை குசலம் விசாரித்து விட்டு போவார்கள்.இதுல டோட்டல் மிஸ்டேக்னு சொல்லி மேலும் சில மார்க்குகள் வாங்கி வரும் கில்லாடிகளும் உண்டு.

எக்ஸாம் நடக்கற ஹால்களுக்கு மேற்பார்வைக்கு எந்த வாத்யார் வருகிறார்? என்பதை பொறுத்து தம் மார்க்குகளை முடிவு செய்யும் மக்களும் இருந்தனர். குறிபிட்ட ஒரு டீச்சரை எல்லா ஹால் மாணவரும் வலிய போய் தம் ஹாலுக்கு அழைத்து வருவர். ஏன்னா அந்த டீச்சருக்கு அவ்ளோ தயாள குணம்.

ஒரு வழியாக பள்ளீயில் இருந்து கல்லூரி வந்தபிறகு படிப்பு என்பது வேறு விதமாய் மாறியது.
இந்த கிண்டியில் நடக்கும் குதிரை ரேஸ் பத்தி தெரியுமா? இந்த குதிரை தான் ஜெயிக்கும்! என யூகத்துடன் பணம் கட்டுவார்களே, அது போல கல்லூரி வந்தபிறகு குறிபிட்ட பகுதியில் இருந்து தான் கேள்வி வரும் என கணித்து அதை மட்டும் படித்து விடுவேன்.

என் ஜாதகத்தில் பூர்வ புண்ய ஸ்தானமாகிய ஐந்தாம் இடத்தை குரு பார்ப்பதால், நான் படிச்சது மட்டும் தான் பரீட்சைக்கு வரும்! என நான் சொன்னதை இரண்டு ஆண்டுகள் வரை நம்பிய நண்பர்களும் உண்டு. அப்ப மூனாம் ஆண்டு என்ன ஆனது?னு நீங்க பின்னூட்டம் போடலாம். அந்த வருடம் குருபெயற்ச்சி ஆகி விட்டார் என சமாளித்து விட்டேன்.

சரி, இப்ப என்ன மேட்டர்னா, திருமணத்துக்கு பின்பும் எம்பிஏவில் எழுத வேண்டிய பேப்பர் நாலு பாக்கி இருக்கு! என தங்கமணி கூறியதும் (ஹிஹி, நானாவது இனி எக்ஸாமாவது) கடமை கண்ணாயிரமாக, "அதுக்கென்ன! நமக்கு படிப்பு தான் முக்யம்! நீ படிம்மா! என பெரிய தசரத சக்ரவர்த்தி மாதிரி வாக்கு குடுத்து விட்டேன்.

அந்த பரீட்சை இப்ப வந்து நிக்குது. ஈஸ்டர் விடுமுறை! ஹாயா வீட்டுல குறுந்தகடு (சி.டி தான்)பாக்கலாம்! என்ற என் திட்டத்துக்கு ஆப்பு வைப்பது போல் வீட்டில் வேலை செய்பவர் வேறு லீவு எடுத்து கொள்ள, நீங்க தானே வரம் குடுத்து இருக்கீங்க!னு சமயம் பாத்து தங்கமணி கோல் போட, வேற வழி இல்லாமல், எங்க வீட்டு சிற்றம்மல மேடையில் நானே தேவாரம் பாடவேண்டியதாய் போயிற்று. :)

ஆங்க்! சொல்ல மறந்துட்டேனே! விம் பாரும், ஸ்கரப்பரும் கூட்டணி சேர்ந்தால் பாத்ரங்கள் எல்லாம் என்னமா மின்னுது தெரியுமா? இதை தான் கற்றது கையளவு!னு பெரியவங்க சொல்லி இருக்காங்க போலிருக்கு.