Monday, June 28, 2010

பெண்களூரு

Part-1, Part-2

நீங்கள் அணிந்து இருக்கும் ஸ்வெட்டர்/ஜெர்கினை வைத்தே பெண்களூருக்கு வந்து எத்தனை காலம் ஆனது?னு சொல்லி விடலாம்.

1) ஜெர்கின் முழு ஜிப்பும் கழுத்து வரை போட்டு குணா கமல் மாதிரி மங்கி தொப்பி போட்டு இருந்தால் இங்கு காலடி வைத்து சில தினங்களே ஆகி உள்ளது.

2) ஜெர்கின் ஜிப்பை போடாமல் டூயட் காட்சியில் வரும் விஜயகாந்த் மாதிரி காட்சி அளித்தால் சில வாரங்கள் கடந்து விட்டீர்கள்.

3) என்னாது? ஜெர்கினே போடலையா? இங்க வந்து ஒரு வருடம் ஆச்சோ?

4) ஸ்லீவ்லெஸ்ஸா..? வேணாம்! நான் வாய தொறக்கறதா இல்லை.

நானும் இப்படி தான் நல்ல குளிர் காலம் ஆரம்பிக்கும் நவம்பரில் ஹாயாக புதிய வானம்! புதிய பூமி!னு பெண்களூர் வந்திறங்கினேன். எங்கெங்கு காணினும் ஒரே பிகர் மயமடா!

மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்!
பிகரில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்!னு அந்த காலத்துலேயே சும்மாவா பாடி வெச்சுருகாங்க.

ஊரை சுத்தி எக்கசக்க அனுமார் கோவில்கள். பஸ் ஸ்டாப்பில் நாம் கொஞ்ச நேரம் அசையாமல் உட்கார்ந்து இருந்தால் கூட, அனுமார் கோவிலாக்கி விடுவார்கள். சங்கடஹர சதுர்த்திகளில் (பவுர்ணமியில் இருந்து நாலாம் நாள்) பேச்சிலர்கள் இரவு உணவுக்கு ஓட்டல்களுக்கு செல்வதில்லை. ஏனெனில் அன்று இந்த ஊர் பிள்ளையார் கோவிலில்களில் தடபுடலாக பூஜை நடத்தி சுட சுட வெண்பொங்கல், புளியோதரை, கொண்டகடலை சுண்டல் என அமர்களப்படுத்துகிறார்கள். எந்த சாமியா இருந்தா என்ன? மக்கள் வயிற்றுப் பசியை தீர்ப்பதே பெரிய புண்யம் தானே? உண்டி குடுத்தோர் உயிர் குடுத்தோர் அன்றோ? (ஒரு காலத்தில் வாங்கி சாப்பிட்ட பொங்கலுக்கு எவ்ளோ கூவனுமோ கூவியாச்சு) :)

உணவு முறைன்னு பாத்தா ஒரு இட்லிக்கு ஒரு பிளேட் சாம்பார் மாதிரி ஒரு திரவம் குடுக்கறாங்க. பெண் பாக்கும் போது கொடுக்கற கேசரிய தாராளமா ஒரு பிளேட் கேசரிபாத்னு தராங்க.

எரிச்சல் தரகூடிய ஒரு விசயம் என்னனா நூத்துக்கு எழுபது பேர் (அதுல அறுபது பேர் கன்னடர்கள்) வாயில் பான்பராக் போன்ற ஒரு லாகிரி வஸ்துவை போட்டு மெல்வது.

கன்னட திரைப்பட துறை பண்ணும் காமடிக்கு அளவே கிடையாது. எந்த மொழி படங்களும் அப்படியே டப் செய்ய மாட்டார்களாம். ஆனா ஒரு தமிழ் படம் விடாம ரீமேக் செய்து ரிலீஸ் செய்து விடுவார்கள். அதிலும் மறைந்த விஷ்ணுவர்த்தன், சரத்குமார் படங்கள் எல்லாத்தையும் காப்பி அடித்து தானே அப்பா சரத், தாத்தா/பேரன் சரத், பெரியப்பா/சித்தப்பா சரத்னு எல்லா ரோல்களிலும் வந்து இம்சை படுத்துவார்.

உதாரணமாக நம்மூர் நாட்டாமை படத்தை இங்க சிம்ஹாத்ரி சிம்ஹா!னு காப்பி பேஷ்ட் பண்ணி விஜயகுமார் ரோலிலும் வி-வர்த்தனே கையில் கிராபிக்ஸ் உதவியுடன் செல்ல பிராணியாக ஒரு சிங்கத்துடன் திரையில் வந்து விட்டார்.

நடுரோட்டில் நின்று கொண்டு மஞ்சுநாத்/பரமேஷா/மஞ்சுளா/ராஜ்குமார் இந்த நாலு பெயரில் ஏதாவது ஒன்னை சொல்லி கூப்பிட்டால் குறைஞ்சது ஐம்பது பேராவது திரும்பி பார்ப்பார்கள்.

மக்களுக்கு கடவுள் பக்தி ரொம்ப்ப ஜாஸ்த்தி. எல்ல கன்னடியர்களும் மூக்கு ஆரம்பிக்குமிடத்தில் ஒரு குங்கும பொட்டு வைத்திருப்பார்கள். கன்னடம்/ராஜ்குமார்னு நீங்க கொஞ்சம் சத்தம் போட்டு பேசினால் மிக்ஸி விளம்பரத்தில் சொன்ன மாதிரி தர்ம அடிக்கு நான் கியாரண்டி.

கன்னட மக்கள் அடிப்படையில் பார்த்தால் அன்பானவர்கள். உதவும் மனப்பான்மை மிக்கவர்கள். ஆனால் நம்மைப் போலவே எளிதில் உணர்ச்சி வசபடுபவர்கள். இதனை இங்குள்ள அரசியல்/இன சக்திகள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ம்ம், இக்கரைக்கு அக்கரை மஞ்சள், சாரி, பச்சை. :))

இந்தியாவிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கபடுவது இங்கு தான்.

ஆசியாவிலேயே அதிகமான பப்புகள் இருப்பதும் இங்கு தான். (பப்புனா குழந்தைக்கு ஊட்டும் பப்பு சாதம் அல்ல).

நூற்றுக்கு தொன்னூறு சதவீத பெண்கள் லிப்ஸ்டிக் அடித்துக் கொள்கிறார்கள். பத்து சதவீதம் பேர் அன்றைய தினம் லிப்ஸ்டிக் தீர்ந்து போனதால் மறுபடியும் வாங்க கடைகளில் நிற்கிறார்கள்.

தென்னிந்தியாவிலேயே அதிக பிகர்கள் இருக்கும் சிட்டியும் இது தான்!னு கைபுள்ள என்கிட்ட ரகசியமா சொன்னார். கேரளாவை அவர் கணக்குல சேர்க்க வில்லை என்று எண்ணுகிறேன். ஆயிரம் இருந்தாலும்... (சரி இதுக்கே மண்டகபடி இருக்கு எனக்கு).

சராசரியாக ஒரு நாளைக்கு பத்து பேர் தங்கள் வேலையை ரீசைன் செய்து விட்டு வேற கம்பனிக்கு மாறுகிறார்கள். ஆனா புடுங்க போவது என்னவோ ஒரே வகை ஆணியை தான்.
இங்கு மக்களுக்கு எரிச்சல் தரக்கூடிய ஒரு பெரிய விஷயம் டிராபிக் நெரிசல் தான். எல்க்ட்ரானிக் சிட்டி, ஐடிபிஎல் செல்லும் கம்பனி பேருந்துகளிலேயே பெரும்பாலும் பிராஜக்ட் ஸ்டேடஸ் மீட்டீங்கை நடத்தி முடித்து விடுகிறார்கள். சிலர் இன்னும் ஒருபடி மேலே போய் அடுத்த கம்பனி பஸ்ஸில் தமது பயோடேட்டாவை குடுத்து ஒரு வாரத்தில் பஸ் மாறி விடுகிறார்கள். அந்த அளவுக்கு டிராபிக் நெருக்கடி உள்ளது. டிசம்பர் 2010ல கிழக்கே போகும் மெட்ரோ ரயில் வரும்னு சொல்றாங்க, பாப்போம், நம்பிக்கை தானே வாழ்கை.

பெங்களுரில் தவிர்க்க வேண்டிய நபர்கள்:

1) கின்டர் கார்டன் ஸ்கூல் நடத்துபவர்கள். சில பள்ளிகளில் பெற்றோருக்கு பஞ்சாமிர்தமும் குடுத்து மொட்டையும் போட்டு விடுகிறார்கள்.

2) ரியல் எஸ்டேட்காரர்கள்: பெரும்பாலும் ரெட்டிகளே! ஆனால் பலே கெட்டிகாரர்கள். கணக்கு போட்டு பாத்தா கார் பார்கிங்குக்கா இவ்ளோ லோன் போட்டு குடுத்தோம்?னு தோணும்.

3) மெகா மால்காரர்கள்: தோலிருக்க சுளை முழுங்குவதில் டாக்டர் பட்டம் பெற்றவர்கள். ஒரு பாப்கார்ன் பாகெட்டை நாப்பது ரூவாய்க்கு விற்று விடுகிறார்கள். நீ எதுகுய்யா வாங்கற?னு தான் நானும் கேக்கறேன்.
இதுவும் கண்டவர் விண்டிலர்! கதை மாதிரி தான் போலிருக்கு.

இவ்ளோ சங்கடங்கள் இருந்தாலும் இந்த ஊருக்கே உரித்தான வானிலை அடடா! ஆனா சம்மரில் இங்கும் வெய்யில் கொளுத்தத் தான் செய்கிறது.
சென்னையை விட ஆணி புடுங்க சம்பளம் தாராளமா தராங்க. செலவும் ஜாஸ்தியா தான் இருக்கு என்பது வேற விஷயம். சில விஷயங்களை ஆராயகூடாது, அனுபவிக்கனும். (அப்பாடி, மாரல் ஆப் தி பதிவு சொல்லியாச்சு!)