Tuesday, September 28, 2010

NRI மாமி

Part-1

பொதுவாக கல்யாணம் ஆன ஆண்களுக்கு தமது மாமியார் வீடுகளில் தங்கமணியின் தூரத்து சொந்த பந்தங்களிடமிருந்து சிலபல சோதனைகள் வந்து வாய்க்கும். அதையெல்லாம் எடுத்தோம் கவிழ்த்தோம்னு டீல் பண்ண முடியாது, பண்ணவும் கூடாது. அப்படி செய்தால் செய்கூலியும் சேதாரமும் ஜாஸ்தியா இருக்கும். வள்ளுவர் சொன்ன மாதிரி அகலாது அணுகாது, நாலு பேரையும் கணக்கில் எடுத்துக் கொண்டு தான் ஒரு முடிவுக்கு வரனும். சரி, நேரே விஷயத்துக்கு வரேன்.

ஒரு தரம் குடும்ப சகிதமாய் நங்கநல்லூர் அனுமார் கோவிலுக்கு போய்விட்டு அக்கடானு வந்த நேரம் தங்க்ஸின் தூரத்து சொந்த பந்தம் வந்து சேர்ந்தனர்.
ஒரு எழுபது வயது மதிக்க தக்க ஒரு என்.ஆர்.ஐ மாமா, மாமி. அவங்களும் பெண்களூர்ல தான் இருக்காங்களாம். கர்ணனுக்கு கவச குண்டலம் போல என்ஆர்ஐ மாமிகளுக்குன்னு சில பொதுவான விஷயங்கள் உண்டு.

காதில் எட்டு கல் வைத்து வைர தோடு(கலிபோர்னியாவில் வாங்கியது) தான் போட்டு இருப்பார்கள்.

தர்மாவரமோ ஆரணியோ அல்லது காட்டன் சில்கோ(ஆழ்வார்பேட்டை பிரசாந்தினியில் நல்ல வெரைட்டி இருக்கு தெரியுமா?) தான் உடுத்தி இருப்பார்கள்.

"திஸ் ஓல்ட் மேன் இஸ் ஆல்வேஸ் லைக் தேட்!" என அவர்களது ரங்க்ஸை அன்பாக கடிந்து கொள்வார்கள்.

போன டிசம்பர் சீசன்ல சீனி(மான்டலீன் ஸ்ரீனிவாஸ்) சிகாகோ வந்ருந்தான், பின்னிட்டான் தெரியுமா! என ஒரு பிட்டை போடுவார்கள்.

மேற்படி விஷயங்களில் வைரத் தோடு, ஆரணி நீங்கலாக எந்த பந்தாவும் இல்லை இந்த மாமியிடம். பரஸ்பர ஷேமம் உபயஷேமம் முடிந்த பின் இவர் தான் எங்க வீட்டு மாப்ளை என நான் அறிமுகம் செய்து வைக்கப்பட்டேன்.

பெண்களுர்ல நீங்க எங்க இருக்கீங்க..?

சொன்னேன்.

அவர்கள் யெலஹங்காவில் இருக்காங்களாம். ஒரு தரம் ஆத்துக்கு கண்டிப்பா வரனும் என அன்பு கட்டளை. பெண்களூரில் இருந்து யெலஹங்கா போற நேரத்துல ஸ்ரீலங்காவுக்கே போயிட்டு வந்துடலாம். :)

அவர்களுக்கு ஐந்து பிள்ளைகள் அமெரிக்காவில் ஐந்து வேவ்வேறு மாநிலங்களில் இருக்காங்க. சான் ஜோஸ் கிளைமேட் தான் எனக்கு ஒத்துக்கும்! அதுனால் அந்த பிள்ளை வீட்ல தான் தங்குவோம்! என்றார்.

நயாகராவை ரெண்டு பக்கத்துல இருந்தும் பாத்தாச்சாம். நயந்தாராவை எதுக்கு இவங்க ரெண்டு பக்கத்துல இருந்தும் பாக்கனும்? எந்த பக்கம் பாத்தாலும் அழகா தானே தெரியும்?னு தங்கஸிடம் கிசுகிசுத்தேன். நறுக்குனு ஒரு கிள்ளு மட்டும் பதிலாக வந்தது. எப்போதும் அப்பாவிகளை தான் இந்த உலகம் தண்டிக்கிறது.

எந்த கம்பெனியில் வேலை..?

சொன்னேன்.

இங்க தான் ஒரு சூட்சமம் இருக்கு. மூன்றேழுத்து, நாலேழுத்துன்னு அவங்க ஒரு கம்பெனி பட்டியல் வைத்திருப்பார்கள். அந்த லிஸ்டுகுள்ள நம்மது இருந்தா தப்பிச்சது. நம்மது ஒரு மன்னார் அன்ட் மன்னாராகவோ இல்ல ஒரு கெக்ரான் மோக்ரானாகவோ இருந்து தொலச்சா மேலும் சில குறுக்கு விசாரணைகள் தொடரும். இது கூட பரவாயில்லை, நம்ம நேரம், போன வருடமோ, போன மாசமோ நம்ம கம்பெனிய வேற ஒருத்தன் சல்லிசா இருக்கேன்னு வாங்கி இருப்பான். இல்ல, நம்ம கம்பெனி, நமக்கு குடுக்க வேண்டிய சம்பளத்துல ஒரு பக்கோடா கம்பெனிய வாங்கி இருப்பான். உடனே மாத்துடா கம்பெனி போர்டை!னு ரீபிராண்ட் செய்து இருப்பார்கள். இதை புரிய வைப்பதற்குள் நமக்கு நாக்கு தள்ளி விடும்.

உங்கள நம்பி தான் எங்க பொண்ணை தந்ருக்கோம், கண்ண கசக்காம இருந்தா சரி! என முடிவுரை எழுதி விடுவார்கள்.

அந்த கம்பெனில நீங்க என்ன பண்றீங்க..?

கால் கிலோ ரவைய வறுத்து முக்கா கிலோ சீனி, 200 கிராம் நெய்யும் விட்டு கேசரி கிண்டிட்டு இருக்கேன்னா சொல்ல முடியும்..? ரொம்ப எளிமையா நான் செய்யறதை சொல்லி புரிய வைத்தேன். ஒரு வழியாக சமாதானம் ஆகி மறுபடியும் ஸ்ரீலங்காவுக்கு, சே யெலஹங்காவுக்கு எங்களை அழைத்து விட்டு பின்கோடு உட்பட அவர்கள் முகவரியை எழுதி குடுத்து விட்டு சென்றனர். :)

Thursday, September 09, 2010

விடுமுறை தின நல்வாழ்த்துக்கள்

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும்
கலந்தெனக்கு நீ தருவாய்!
கோலம் செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே
சங்கத் தமிழ் இந்தா!

அவ்வை மூதாட்டி எழுதியதை யாரோ ஒரு புது கவிஞர் இப்படி மாத்தி எழுதியதாய் படித்த நினைவு.

நாடு இருக்கற நிலமையில் மக்களும் இப்படி தான் பிள்ளையாரிடம் வேண்டிப்பாங்கன்னு எனக்கும் தோணுது.

ஆங்! எல்லாருக்கும் ரம்ஜான் மற்றும் விடுமுறை தின(அதான்பா! வினாயக சதுர்த்தி) நல் வாழ்த்துக்கள்.