Thursday, October 16, 2008

அம்பி நடிக்க போகும் சினிமா

ஊர் கூடி தேர் இழுக்கும் இந்த திரை வைபவத்துல என்னையும் எழுத்து விட்ட புண்ணியவதி ராப் மற்றும் உஷாஜி அவர்களுக்கும் முதலில் நன்றி.


1) எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

தூர்தர்ஷன் வாரம் ஒரு படம் போட ஆரம்பிச்சதும்னு நினைக்கிறேன். சாந்த சக்குபாய்னு ஒரு படம், தேவர் மகன்ல ரேவதி வாய தொறந்தா வெறுங்காத்துதேங் வருது!னு சொல்வாங்க. ஆனா இந்த படத்துல நடிச்ச அந்த அம்மா வாய தொறந்தா ஒரே பாட்டா கொட்டுது. செம கொத்து கொத்திட்டாங்க. என் ஆயுசுக்கும் மறக்க மாட்டேனே!

அதுக்கப்புறம் ஆயிரத்தில் ஒருவன் படம். எம்ஜிஆர் பட்டய கிளப்பி, லவங்கத்தை லவட்டி, சோம்பை சுவைத்திருப்பார். அதுல வர ஒரு காட்சிய தெனாலில ஜோ-தேவயானி-கமல் வெச்சு செமையா கலாய்ச்சு இருப்பாங்க.

2) கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

கடைசியா தங்கமணியுடன் சென்னை சத்யத்துல பாத்த சிவாஜி. பக்கத்துல தங்கமணி இருந்ததால ஷ்ரேயாவின் உணர்ச்சி கொப்பளிக்கும் நடிப்பை வாய்/மனம் எல்லாம் திறந்து பாராட்ட முடியாத துர்பாக்கியசாலி ஆயிட்டேன். குறிப்பா வாஜி! வாஜி! பாட்டுல ஒரு கட்டத்துல வாஜிஜிஜிய்ய்ய்!னு இழுப்பாங்க பாருங்க, அதுக்கே டிக்கட் காசு சரியா போச்சு.(இன்னிக்கு செமையா இருக்கு எனக்கு). :)

3) கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

இந்த கே டிவில நைட் போடற படத்த தான் பாக்கறது. கடைசியா பாத்தது தமிழ் செல்வன். இப்ப எல்லாம் கவர்மெண்டுக்கு எதிரா மக்கள் பொங்கி எழுற மாதிரி படங்களா போட்டு தாக்கறாங்க. என்ன நுண்ணரசியல்டா சாமி! மீடியான்னா சும்மாவா? மஞ்சள் மகிமை, மானாட மயிலாடன்னு ஆடிட்டு இருந்தா டப்பா டான்ஸ் ஆடிரும்.

4) மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

(கமல் நடித்த) நாயகன், சின்ன வயசுல தென்பாண்டி சீமையிலே! கேக்கும் போது என்னையறியாமல் கண்களில் கண்ணீர் வழிந்தது. அதுக்கப்புறம் 'தாரே சமீன் பர்' படத்துல அமீர் அந்த குழந்தையின் பெற்றோரிடம் பேசிட்டு வெளிய வருவாரு, அப்ப அந்த குழந்தைய காட்டுவாங்க, பொல பொலன்னு கண்ணீர் வந்ருச்சு. சே! தங்கஸ் பாத்தா நக்கல் வுடுவாங்களேன்னு நைசா துடச்சுகிட்டு அங்க பாத்தா, அம்மணியும் கண்ண கசக்கிட்டு இருக்காங்க. என்ன கொடுமை அமீர்? :)

5a) உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - அரசியல் சம்பவம்?

இருவர். அவரு கணக்கு கேட்டதும், இவரும் பேசாம, "மாநாட்டுக்கு வந்த மன்னார்சாமி அளித்த நன்கொடை நூறுபாய்ய்ய்!"னு கணக்கு காட்டிருந்தார்னா ப்ரச்சனையே வந்ருக்காதோ? சில கேள்விகள் கேள்விகளாகவே இருப்பது தான் நல்லது. என்ன சொல்றீங்க?

5b) உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?

கஜேந்திரா!ன்னு ஆஸ்காருக்கு தேர்வாக வேண்டிய ஒரு கேப்டன் படம். அதுல போலிஸா வர ராதாரவிக்கு கஜா எப்போ கேட்டாலும் ஒரு கோடாலிய தூக்கி வீச வேண்டியது ஒன்னு தான் பொறுப்பு. ஒரு சீன்ல நடு ஏரியிலிருந்து கிட்டதட்ட ரெண்டு கிமீ இருக்கும். கஜா இந்தா பிடி!னு கரையிலிருந்து நம்ம ராதாரவி கோடலிய வீசுவாரு பாருங்க! அடடா என்ன டெக்னாலஜி? என்ன கிராபிக்ஸ்? :)

சீரியசா பதில் சொல்லனும்னா, ஆளவந்தான்ல ரெண்டு கமலுக்கும் நடக்கும் கிளைமாக்ஸ் பைட் தான். ஒரு பைப்பை வெச்சுகிட்டு நந்து கமல் ரேஞ்ச் காட்டுவாரு. எந்த ஆங்கில படத்திலிருந்து சுட்டிருந்தாலும் அத அப்படியே இங்க காட்டற திறமை வேணுமில்ல?

6) தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

ஸ்கூல் படிக்கும் போது வாரமலர்ல வர சினிமா பொன்னய்யா "இந்த காரை சொப்பன சுந்தரி வச்ருந்தாக!" போன்ற கிசுகிசு படிச்ச நியாபகம். இப்ப சுத்தமா இல்லை. ஆமா, விஷாலுக்கும் நயனுக்கும் ஏதோ கிசுகிசுவாமே! நிசமா? ஏன் தான் என் வயிதெறிச்சலை கொட்டிகாறானோ இந்த விஷால்.

7) தமிழ்ச்சினிமா இசை?

கேட்பது உண்டு. பெரிய்ய்ய ஈடுபாடுன்னு ஒன்னும் சொல்றதுக்கு இல்லை. காலை ஏதும் ஒரு பாட்டை ஹம் பண்ண ஆரம்பிச்சா நைட்டு ஜுனியரை தூங்க வைக்கற வரைக்கும் அதே லைனை பாடறது பழக்கமா போச்சு.

கோக்க கோலா ப்ரவுனு கலருடா!

என் அக்கா பொண்ணும் அதே கலருடா!னு நேத்து பாடி ஜுனியரை தூங்க வெச்சேன்.

8) தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா?

ஒரு ஜப்பனிய மொழி படம், 1942 ல அமெரிக்க விமானம் ஜப்பான்ல குண்டு போட பறந்து போகும். அந்த விமானி பட்டனை அமுக்கறத்துக்கு ஒரு நிமிஷம் முன்னடி தான் அவருக்கு நியூயார்க்குல குழந்தை பொறந்ருக்கு!னு நடுவானத்துல போன் வரும். இந்த நொடில போய் இப்படி ஒரு கொலபாதக செயல் செய்யனுமா?னு மனபோராட்டத்துல தவிப்பாரு. ஆனா கடைசில கடமை தான் பெரிசு!னு பட்டனை அமுக்கிடுவாரு. குண்டு நேரே ஒரு ஜப்பானிய பிரசவ ஆஸ்பத்திரில போய் விழும். ஒரு சோகமான ஜப்பானிய மொழி பாடல் பேக்ரவுண்டு மியூசிக்கோட படத்தை முடிச்சுடுவாங்க.


- மேலே சொன்ன மாதிரியெல்லாம் அள்ளி விட்டு லெவல் காட்டனும்னு எனக்கு மட்டும் ஆசையில்லையா? :)

என்ன செய்ய, என் உலதரம் எல்லாம் போன வாரம் போட்ட அனகோண்டா(ஆத்தாடி, எம்மாம் பெரிய்ய பாம்பு), முந்தின வாரம் போட்ட ஸ்பைடர்மேனோட தான் இன்னும் இருக்கு.

9) தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்?

ஜென்டில்மேன் பட ஹுட்டிங்குக்கு நான் பத்தாவது படிக்கும் போது ஷங்கர் வந்தாரு.முதன் முறையா அப்ப தான் ஒரு படபிடிப்பை நேர்ல பாத்தேன். பாரதி படத்துல என் தம்பி ஒரு கேரக்டர் ரோல் செஞ்சான். மூனு நாள் படபிடிப்புக்கு மொட்டை எல்லாம் போட்டுகிட்டான். என் தூரத்து சொந்தகாரர் ஒருவர் வடபழனில துணை நடிகர் ஏஜண்டா இருக்கறதா அம்மா சொல்வாங்க. அவ்ளோ தான் நம்ம தொடர்பு.

துண்டை கக்கத்தில் வைத்து கொண்டு, "கும்படறேன் எஜமான்!" போன்ற நாலு பக்க வசனம் பேசி, நயந்தாரா கூட நடிக்க நான் தயாரா தான் இருக்கேன். ஒரு பயலும் கூப்ட மாட்டேங்கரான். இதுனால சினிமா துறை முன்னேறாதா என்ன?

10a) தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

கவலைகிடமா இருக்கு. இப்படியே பார்முலா படங்களும், "என் பின்னாடி டோட்டல் தமிழகமே இருக்கு!" போன்ற வசனங்களுமா வந்தா மக்கள் டிவிடில கூட படம் பாக்க பயப்படுவாங்க. நடக்கறத தான் காட்டுறோம்!னு சப்ப கட்டு எல்லாம் இனி செல்லாது. தமிழக டெக்னீசியன்கள் மூளகாரங்க. திரு, ரவிசந்திரன், சாபு சிரில், போன்றோரை வீணடிக்கற மாதிரி மொக்கை படங்கள் எடுக்ககூடாது.

10b) அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

ரொம்ப நல்லா இருக்கும். வாரம் மூனு பட விமர்சன பதிவுகளுக்கு பதில் கோலங்கள் அபியின் பேத்திக்கு காதுகுத்து!னு சிலர் பதிவு எழுதலாம். ஆனா துணை நடிகர்கள் எல்லாம் என்ன செய்வாங்களோ? அவங்களுக்கு எல்லாம் தினப்படி சம்பளம், பேட்டாவாமே! :(

எனக்கு தெரிஞ்சு எல்லா மக்களும் இந்த சங்கிலிய இழுத்தாச்சு.அதனால தமிழ்மண நிர்வாகிகளை இந்த டேக்கை எழுத கூப்ட்டுக்கறேன்.

பாவம்! தமிழ்மண நிர்வாகிகளை பாண்டிசேரி வாசக கண்மணிகள் கூட கூப்டலை. :)

Tuesday, October 07, 2008

நாளைக்கு ஆயுத பூஜையாம்ல

நவராத்திரியின் கிளைமாக்ஸே இந்த ஆயுத பூஜை தான். அவரவர் தம் தொழிலுக்கு உதவும் கருவிகளை சுத்தபடுத்தி, பொட்டு வெச்சு பூ வெச்சு கும்புடற அழகு இருக்கே! அடடா! கண் கொள்ளா காட்சி.

செய்யும் தொழிலே தெய்வம்!
சீனியும்,ரவையும் சேர்ந்தா அமிர்தம்!னு பெரியவங்க சும்மாவா சொல்லி இருக்காங்க.

வருசம் பூரா சைக்கிளை, வண்டியை மிதிமிதினு மிதிக்கும் நம் மக்கள் இந்த நாளில் அத பாத்து பாத்து தொடைக்கறது என்ன, சந்தனம் வைக்கறது என்ன, குங்குமம் வைக்கறது என்னனு அமர்களம் படுத்திடுவாங்க.

இந்த கூத்தில் அகப்படவனுக்கு அஷ்டமத்து சனிங்கற மாதிரி பாவப்பட்ட ரங்கமணிகள் பாடு தான் திண்டாட்டம். அந்த டிவில அப்படி என்ன தான் இருக்கோ? இங்க வந்து அந்த கிச்சனை சுத்தம் பண்ணா என்ன? அந்த பரண்ல இருக்கற சுத்தம் பண்ணா என்ன?னு மிலிட்டரி ட்ரில் தோத்திடும். பத்து மணிக்கு நமீதா பேட்டி வருது!னு உண்மைய அதுவும் ஆயுத பூஜை அன்னிக்கு சொல்ல நாம என்ன அவ்வளவு பேக்கா?

கடந்த கால வரலாறு நமக்கு கத்து குடுத்த பாடங்கள் தான் என்ன? வாங்கிய விழுபுண்கள் தான் என்ன? :)

சரி, சொல்ல வந்ததை சொல்லிடறேன்: எல்லோருக்கும் இனிய விஜய தசமி/ஆயுத பூஜை நல் வாழ்த்துக்கள்.

இது என்னோட வழிபாடு:


இது தங்கமணியின் வழிபாடு: :)

Friday, October 03, 2008

காமராஜர் ஆட்சி அமைப்போம்!

நான் தேய்த்து குளிக்கும் ஹமாம் சோப்(நேர்மையான சோப் யு நோ..?) போல நாளும், வாரங்களும் கரைவதே தெரிவதில்லை. சமீபத்தில் டிவியில்/இணையத்தில் பார்த்த, படித்த சில காட்சிகள்/செய்திகள் என்னையறியாமல் நகைக்க வைத்தது.

காட்சி#1: பொதுவாக நம்மூர் பிரதம மந்திரிகள் வெளிநாடுகளுக்கு சுற்றுபயணம் செய்யும் போது, தம் விமான பயணத்தில் போர் அடிக்காமல் இருக்க, "ஆமா! ஆமா! பெரியய்யா! ஆமா! ஆமா! சின்னய்யா!" என கே. எஸ். ரவிகுமார் படங்களில், கையது கட்டி, வாயது பொத்தி வரும் சில கேரக்டர்களை போல, சில பேமஸ்(?) பத்திரிகையாளர்களை தம்முடன் அழைத்து செல்வது வழக்கம். அவங்களும் ஓசில விமானத்திலும் கூட பஜ்ஜி போண்டா கிடைக்குதேன்னு பிரதமர் கிட்ட, "நீங்க பள்ளி படிக்கும் போது டாவடித்த அனுபவம் உண்டா? நாக்கு முக்க சாங்க் கேட்டாச்சா?"னு எல்லாம் மொக்கை போட்டு வருவார்கள்.

அது போல தற்போதைய பிரதமர் என அழைக்கப்படும் மன்மோகன் சிங்க்ஜியுடனும் ஒரு ஜால்ரா கோஷ்டி விமானம் ஏறி அமெரிக்கா, பிரான்ஸ்(ராப்பை பாத்தீங்களாப்பா?) சுத்தி பாத்து வந்தார்களாம். நடு வானில் நம்ம பிரதமரும் பொறுப்பா பேட்டி குடுக்கறத டிவியில காட்னாங்க. ஒரிஸ்ஸாவிலும், கர்நாடகாவிலும் நடந்த கலவரங்கள் தான் தம் வாழ்க்கையிலேயே மிகவும் வருத்தபட வைத்த நிகழ்வுகள்னு நம்மாளு ஒரு பிட்டை போட்டாரு. அப்ப பெங்களுர், ஐதரபாத், அஹமதபாத், டில்லினு பொட்டலம் பொட்டலம் வெச்சாங்களே அதெல்லாம் உப்பு பெறாத விஷயங்களா?

'பொருளாதார நிபுணர்' மன்மோகன் சிங்கை கூட அரசியல்வாதி ஆக்கிட்டாங்களே!னு முதல்வன் படத்து வசனம் தான் நினைவுக்கு வந்தது.


காட்சி#2: டில்லியில கனாட் ப்ளேஸ் என்ற முக்ய இடத்துல நீங்கள் நடந்து போகும் போது "என் குழந்தைக்கு உடம்பு சரியில்லை! என் தங்கமணிக்கு சுளுக்கு"னு அழகா வெள்ளகார துரை கணக்கா இங்கிலிபீசுல நைச்சியமா பேசி பணத்தை கறந்ருவாங்களாம். சில கொடாகொண்டர்கள், சரி வா! நானே அந்த மருந்தை வாங்கி தரேன்!னு சொல்லி மருந்தகத்துக்கு கூட்டி போனாலும், இந்த லகுடுபாண்டிகள் அசருவதில்லையாம். ஏன்னா அந்த கடைகாரர் கூட இந்த பயலுவ ஏற்கனவே ஒரு டீல் போட்ருப்பாங்களாம். சில ஏமாந்த வெள்ளகார துரைங்க ஏடிஎம்ல பணம் டிராப் பண்ணி எல்லாம் குடுத்து ஏமாந்து போயிருகாங்களாம். மேலும் தெரிஞ்சுக்க இக்கட சூடுங்க.

முத்துலட்சுமியக்கா உஷாரா இருந்துகுங்க. உங்களுக்கு இளகிய மனசு. :)


காட்சி#3: இளங்கோவன் "காமராஜர் ஆட்சி அமைப்போம்"னு உதாரா பேட்டி குடுக்கறத டிவில பாத்தேன். இதையே தங்கபாலு அணியினரும் சொல்றாங்க, ஜி.கே.வாசன் அணியும் சொல்றாங்க. (வேற ஏதாவது அணி இருந்தா (கண்டிப்பா இருக்கும்) பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.)

சத்யமூர்த்தி பவனில் உள்ள டாய்லெட்டில் காணாம போன சொம்பு(சிம்பு இல்ல) பத்தி விசாரிக்கறத்துக்கே டெல்லியிலிருந்து மேலிட பார்வையாளர் வர வேண்டி இருக்கு. இதுல என்னத்த ஜெயிச்சு? என்னத்த அமைச்சு?

என்னது? சத்யமூர்த்தி பவனில் டாய்லெட்டே கிடையாதா? கிழிஞ்சது கிருஷ்ணகிரி. :)

காட்சி#4: அக்டோபர் 2 முதல் பொது இடங்களில் தம்மடிக்க தடைன்னு எங்க ஆபிஸ்ல கூட மெயில் அனுப்பினாங்க. ஏன்னா சிட்டிக்கு நடுவுல எம்ஜி ரோட்டில் தான் எங்க ஆபிஸ். அதனால ஆபிஸ்ல இருக்கற பல பிகர்கள், ஹாயா பில்டர் பிடித்து கொண்டே அமெரிக்க பொருளாதாரம் பத்தி கதையடிக்கும். இதுனாலேயே பல கடலை மகசூலில் நான் கலந்து கொள்ள முடியாத அவல நிலை இருந்து வந்தது. இனிமே.....ஹிஹி, அன்புமணி அய்யாவுக்கு நன்றி ஹை!


பொது இடம்னா இது, இது, இவங்க எல்லாம் ஃபைன் வசூலிக்கலாம்!னு சொல்லி இருக்காங்க. ரோட்ல குடிக்ககூடாது! பஸ் ஸ்டாப்புல குடிக்க கூடாதுன்னா நாங்க எங்க தான்யா குடிக்கறது? எங்களை கட்டுபடுத்த நாங்க என்ன ஆடுமாடா?னு புகை வண்டிகள் எல்லாம் போர்குரல் குடுத்து இருக்காங்க. :)


ஒரு சட்டம் போடும் போது, தெள்ளத்தெளிவாக வரைமுறைகளை வகுத்து விட வேண்டும். இல்லாட்டி இப்படித் தான் வெண்டைகாயை நறுக்கி விட்டு தண்ணீரில் கழுவின மாதிரி ஆயிடும். (ஒரு தடவை முயன்று பாருங்களேன், என் அனுபவத்தில் சொல்கிறேன்)