Friday, August 28, 2009

இலவசமா குடுக்கறாங்க பா!

இதுக்கு இவ்ளோ துட்டுனு விலை சொன்னா நாம உடனே பேரத்துல எறங்குவோம். அதனால தானோ என்னவோ இலவசமாவே குடுக்கறாங்க.

அப்படி என்னத்த தான் குடுக்கறாங்க?

கீழே உள்ள படத்தை பாருங்க.மரக் கன்றை வாங்கி நான் போன்சாய் முறையில தான் வளக்க போறேன்னு அடம் பிடிக்க கூடாது. மரக் கன்றுகள் லிஸ்டுல சந்தன மரம் இல்லையே?ன்னு எல்லாம் என்னை நோண்டக் கூடாது. :)

முப்பது, நாப்பது வருஷம் கழிச்சு மரம்ன்னு ஒன்னு இருந்ததுனு நம் வருங்கால சந்ததியினர் படிக்கற அளவுக்கு இப்போ நம் கைவரிசைய காட்டிட்டு இருக்கோம்!னு சொல்ல எனக்கு ரொம்ப வெக்கமா இருக்கு.


என் பதிவுக்கு ஓட்டு போடுங்க, பின்னூட்டம் போடுங்கன்னு எல்லாம் நான் கேக்க மாட்டேன். தயவு செஞ்சு சென்னைவாசிகள் குறிப்பிட்ட நம்பருக்கு குறுஞ்செய்தி அனுப்பி ஒரு மரக் கன்றை இலவசமா பெறுங்க. தினமும் மறக்காம ஒரு கப் தண்ணியும் விடுங்க. ஏன்னா மரத்தை வெச்சவன் தண்ணி ஊத்துவான்னு இளைய ராஜா பாடி இருக்காரு. :)

மத்தவங்க சென்னைல இருக்கற உங்க உறவினர், நண்பர்களுக்கு வழக்கம் போல கம்பெனி குடுக்கற இலவச நெட் சேவையை பயன்படுத்தி என்னை மாதிரி பார்வேர்ட் பண்ணுங்க. :)

நல்ல பதிவு, பகிர்வுக்கு நன்றி, கலக்கிட்டீங்க அம்பி!, கழுவிட்டீங்க அம்பி! ன்னு எனக்கு பின்னூட்டம் போடற நேரத்துல ஒரு குறுஞ்செய்தி அனுப்பிறலாம் தானே! :)

Monday, August 24, 2009

யேர் இந்தியா

க்ரிப்டாலஜி படித்து சைடு போசில்(அப்போதைய) அரவிந்தசாமி சாயலில் இருக்கும் என்னை, இன்டர்போலுக்கு ஆலோசனை வழக்குவதற்காக என் துறைத் தலைவர் டெல்லிக்கு அனுப்பினார் என நான் இந்த பதிவை ஆரம்பித்தால் உங்களில் பலருக்கு தொண்டையில் கிச்கிச் வந்து, ஹக்க்க் என துப்பி விடுவீர்கள் என எனக்கு தெரியும்.

காலாவதியாகி விட்ட எங்கள் கம்பெனியின் பிராடக்ட் லைசன்ஸை இந்த ரிசிஷன் நேரத்தில் புதுப்பிக்கலாமா? வேணாமா? என மண்டையை தடவியபடி கிளைன்ட் யோசிப்பதற்குள், அவர்களை நேரில் சந்தித்து, எங்கள் பிராடக்டை வாங்கினால் ஈரேழு பதினாலு லோகங்களில் உள்ள செய்திகள் எல்லாம் உங்கள் லேப்டாபிலேயே அருவியா கொட்டும். உங்கள் பிசினஸில் தேனாறும் பாலாறும் ஓடும்! என அள்ளிவிடும் வழக்கமான சீப் டிரேய்னர் தன் மனைவியின் ரெண்டாவது பிரசவத்துக்கு போய் விட்டதால், பிராடக்ட் பில்டப் குடுக்க நீ தான் டெல்லிக்கு போகனும்! என என் துறை தலைவர் எனக்கு கொம்பு சீவி விட்டபடியால், நானும் வழக்கமாக எங்கள் ஆபிசில் டிக்கட் புக் பண்ணி தரும் ஹெச்ஆர் அட்மின் உதவியை நாடினேன்.

எப்பவோ எனக்கும் அவனுக்கும் நடந்த ஒரு வாய்க்கால் தகராறை மனதில் வைத்து, யேர் இந்தியாவுல மட்டும் தான் டிக்கட் இருக்கு, இந்த பிடி! என டிக்கட்டை கையில் குடுத்தான். ஏன் இப்படி?னு நான் கேட்டதுக்கு, நாம் எல்லோரும் இந்தியர்கள், எனவே இந்திய பொருளையே வாங்குவோம்! என எழுந்து நின்னு உறுதிமொழி எடுக்கறான். விஜய் மல்லய்யா கூட இந்தியர் தான்டே! என நான் சொன்னதை எல்லாம் பொருட்படுத்தவேயில்லை.

எனக்கு யேர் இந்தியாவில் டிக்கட் கிடைத்ததில் தங்கமணிக்கு அளவில்லா சந்தோஷம். உங்களுக்கு பிரேக் பாஸ்ட் ஊட்டிவிட்டு, பாட்டு பாடி, கதை சொல்லி தூங்க வைத்து பத்ரமா டெல்லியில் கொண்டு போய் விடுவாங்க! கவலையே படாதீங்க! என தங்கமணி தன் பங்குக்கு வெந்த புண்ணில் வெங்காயத்தை தடவினார். நல்லா இருடே!

உங்களுக்கு லால் பகதூர் சாஸ்த்ரியை தெரியுமா? இந்திய பிரதமராக இருந்தாரே! அவர் பிரதமராக பதவியேற்ற அதே வருஷம் யேர் இந்தியாவிலும் நிறைய்ய பேர் யேர்ஹோஸ்டஸ்ஸாக டூட்டியில் சேர்ந்தார்களாம். அதுக்கப்புறமா புது அப்பாயின்மெண்டே போடலை போலிருக்கு.

ரயிலா இருந்தா பயணிகள் சார்ட் எல்லாம் ஒட்டுவாங்க. லிஸ்ட் பாத்து அண்டை அயலார் நட்புறவை வளக்கலாம், வேற ஒன்னுமில்லை. இங்க அத மாதிரி லிஸ்ட் எல்லாம் ஒட்ட மாட்டாங்க போல. பிளைட்டில் அவ்வளவாக கூட்டமில்லை. பக்கத்து சீட்டில் ஆள் அமைவதெல்லாம் இறைவன் குடுக்கும் வரம்! என உறுதியாக சொல்வேன். என்ன தான் யேர் இந்தியாவில் டிக்கட்டை கிழித்து குடுத்தாலும், அன்னிக்கு கடவுள் ரொம்பவே கருணை காட்டி இருந்தான். குதிரை வால் கொண்டை, காதில் பிளாட்டினம் ரிங்க், டெனிம் டி-ஷர்ட், த்ரீ-போஃர் என அழைக்கப்படும் முக்காலே அரைக்கால் ஜீன்ஸ், கையில் ஷெர்லாக் ஹோம்ஸ் புத்தகம்.

இந்த பெண்கள் ஏன் தான் ஷெர்லாக் ஹோம்ஸையும், ஹாரி பாட்டரையும் கட்டி கொண்டு அழுகிறார்களோ? எனக்கு தெரிந்ததெல்லாம் என் அருமை மகன் உண்ணும் செர்லாக் தான். (அதையும் இப்பலாம் துப்பி விடுகிறான், ஃபேளவர் மாத்தனும் போல.)

இந்த கதையின் முடிவில் ஒரு எதிர்பாராத திருப்பம் வரும் பாருங்கள்! அங்க தான் ஷெர்லாக் ஹோம்ஸ் சேர் போட்டு நிக்கறார்! என பொத்தாம் பொதுவாக நூல் விட்டதில் க்ளிக் ஆகி விட்டது.

இந்த கதையை நீங்கள் ஏற்கனவே படித்து இருக்கிறீர்களா?

ரெண்டு தடவை. உங்களுடன் சேர்ந்து மூனாம் தடவையும் படிக்க எனக்கு ஆட்சேபனை இல்லை.

இந்த சம்பாஷனைக்கு பிறகு, லேமேன் பிரதர்ஸ் செய்த தவறுகள், ஐரோப்பாவின் வேலையில்லா திண்டாட்டம், நார்த் கொரியா பரிசோதனை செய்த ஏவுகணை டெக்னாலஜி, என லோக விஷயங்களை பத்தி கன்னாபின்னாவென குதிரை வால் கொண்டையுடன் விவாதிக்க நான் ஒன்னும் லூசு இல்லை.

1) பாந்தினி சில்க் மெட்டீரியலில் கரீனா கபூர் அணிந்து வரும் பட்டீயாலா மாடல் எடுப்பாக இருக்குமா? இல்லை கட் சுடிதார் தான் சிறந்ததா?

2) கார்னியரில் என்ன பொருட்கள் புதிதாக மார்கெட்டுக்கு வந்திருக்கிறது?

3) ராக்கி சாவந்துக்கு வாழ்வு குடுக்கப் போகும் வள்ளல் யார்?

4) பெண்களுரில் மிகச் சிறந்த மால் எது? என உபயோகமான கருத்துக்கள் பரிமாறப் பட்டன. அடுத்த சீட்காரர்களும் தங்கள் கருத்துக்களை தாராளமாக அள்ளி வழங்க, நீயா? நானா? கோபி மாதிரி நிகழ்ச்சியை(கடலையை) சுமூகமாக கொண்டு செல்ல வேண்டியதா போச்சு.

ஆனாலும் இந்த பைலட் ரொம்ப மோசம். வண்டி உளுந்தூர்பேட்டையில அஞ்சு நிமிஷம் நிக்கும். டிபன், காப்பி சாப்டறவங்க சாப்டுக்கலாம்னு ஒரு அறிவிப்பு குடுத்து, ஹைதராபாத், நாக்பூர்னு வண்டியை ஸ்டாப்பிங் போட்டு ஓட்ட வேணாமோ? எங்கயும் நிப்பாட்டாமல் வண்டியை நேரே டெல்லிக்கு கொண்டு போய் விட்டார்.

டக்குனு எழுத பேப்பர் எதுவும் கிடைக்காததால், குதிரை வால், தனது ஈமெயில் ஐடியை என் உள்ளங்கையில் எழுத வேண்டியதா போச்சு. முகம் அலம்பும் போது தண்ணீர் பட்டதால் அந்த ஐடி அழிந்து விட்டது என நான் சத்தியம் செய்தாலும் மேலிடம் நம்ப மறுக்கிறது. :)

Monday, August 10, 2009

ஸ்வைன் ப்ளூவை மும்பை ஏர்போட்டுல எப்படி தடுக்கறாங்க தெரியுமா?

போன வாரம் என் நண்பன் மும்பை சர்வதேச விமான நிலையத்துக்கு (சத்ரபதி சிவாஜி நிலையமாமே!) வந்திறங்கினான். வழக்கம் போல வரிசை என்ற பெயரில் நாலு நாலு பேரா ஒரு லைன்ல போனாங்களாம். பிளைடுலயே ஒரு கார்டு குடுத்து இருக்காங்க. அதுல ஒரு பத்து கேள்விகள் (டிக் செய்யனுமாம்).

அதாகபட்டது, கடந்த பத்து நாளுல நீ இந்த ஸ்வைன் ப்ளூ வந்த நாடுகளுக்கு பயணம் செஞ்சியா? (அறுபத்தி நாலு நாடுகள் லிஸ்டுல இருந்ததாம்)

2) அங்க போயி உனக்கு காய்ச்சல், உடம்பு வலி, தொண்டை வலி, வாந்தி ஏதும் வந்ததா? (யெஸ் அல்லது நோ டிக்குங்க)

3) அப்படி வந்திருந்தால் சிகிச்சை எடுத்தியா? (இதுவல்லவோ கேள்வி!)

4) இந்தியாவுல எங்க தங்க போற?

5) எந்த பிளைட்டுல வந்த?, நம்பர் எழுது.

அப்புறம் வழக்கம் போல பாஸ்போட் நம்பர் எழுது, எங்க பாஸ்போட் எடுத்த?னு சிலபல கேள்விகள்.

இதை எடுத்துகிட்டு நீண்ட கியூவுல போய், அங்கன வரிசையா சிலபல ஹெல்த் ஆபிசர்கள் சேர் போட்டு உக்காந்து இருந்தாங்களாம். (சில பிகர்களும் ஆபிசர்களா இருந்தாங்க என்பது உபரி தகவல்) அவங்க கிட்ட இந்த கார்டை குடுத்தா, உங்களுக்கு காய்ச்சல் வந்துச்சா?னு ராயப்பேட்டை பொது மருத்துவமனை கம்பவுண்டர் மாதிரி கேக்கறாங்களாம். இல்லைனு சொன்னா, ஒரு சீல் குத்தி அனுப்பிடறாங்களாம்.

எனக்கு ஒரே ஒரு டவுட்டு தான்.

நோய் வந்தவரிடமே இப்படி காந்தீய வழியில் விசாரிச்சா அவரு ஆமா! ஆமா! பெரியய்யா!னு ஒத்துப்பார்னு என்ன நிச்சயம்?

எல்லா பயணிகளையும் ஒரு குறைந்த பட்ச உடல் வெப்ப அளவை காட்டும் ஸ்கேன் வழியா வரச் செஞ்சா தானே உறுதியா எதையும் நிர்ணயிக்க முடியும்?

பாதுகாப்பு முதல் ஹெல்த் வரை எல்லா விஷயங்களிலும் இப்படி மெத்தன போக்கான நடைமுறைகளை பின்பற்றினால் அப்புறம் ஏன் அப்பாவி பொது ஜனம் மண்டைய போட மாட்டாங்க?

இந்த நிகழ்வு ஜூலை மாதம் கடைசியில் நிகழ்ந்தது. இதுவரை கிடைத்த தகவல்படி ஸ்வைன் ப்ளூவுக்கு ஆறு பேர் இந்தியாவில் பலி. ஒரு வேளை இப்ப முழிச்சு இருக்கலாம். எனக்கு தெரியலை.

மத்த சர்வதேச விமான நிலையங்களிம் இப்படி தான் செக்கிங்க் நடக்குதா?னு வந்தவங்க யாராவது பின்னூட்டத்தில் சொல்லுங்க.

Thursday, August 06, 2009

சல்சா

தங்கமணியும், ஜுனியரும் நன்றாக அயர்ந்து உறங்கும் ஒரு ஞாயிறு மதிய வேளையில், நான் மட்டும் டிவியை நோண்டிக் கொண்டிருக்கும் போது ஒரு சுவாரசியமான நடன நிகழ்ச்சியை காண நேர்ந்தது. அப்புறம் என்ன ஏதுன்னு கூகிளிட்டு பாத்ததில் அதுக்கு பேரு சல்சா என தெரிய வந்தது. ஸ்பானிஷ் மற்றும் கரீபியனின் கலவையாக உருவாகி இருக்கும் இந்த சல்சா நடனம், பார்ப்பவரை சுண்டி இழுக்கும் திறன் பெற்றது.

பொதுவாக மற்ற நடனங்கள் ஒரு நிமிடத்துக்கு 80 முதல் 120 பீட்டுகள் வரை ஆடப் பெறும். சல்சா 140 பீட்டுகள் வரை போகுமாம். இந்த நடனத்துக்கு சரியான பாடல் அமைவது மிக முக்யம். டூயட் சாங்கிலும் சட்டை பொத்தானை திருகியபடியே, நாலு அடி தள்ளி மரத்துக்கு பின்னாடி நின்னு, நாயகியை பார்த்து பாடும் முரளி சாங்கோ, இல்லாட்டி லல்லல் லா லாலே லல்லலா! என நாயகன், நாயகி, பேக்ரவுண்ட் சிங்கர்ஸ், எஸ்.ஜே.ராஜ்குமார், பின் சந்தேகத்துக்கு டைரக்டர்(விக்ரமன்) குரலில் வரும் பாடல்கள் எல்லாம் சல்சாவுக்கு ஒத்து வரவே வராது. க்யுபா மற்றும் கரீபியன் பாடல்கள் செம காம்பினேஷன். பாடலை கேட்டாலே உற்சாகம் பிறந்து, பக்கத்து சீட்டில் இருப்பவர் கையை பிடித்து கொண்டு ஆடனும் போல இருக்கும். (ஆனா நான் அப்படியெல்லாம் ஒன்னும் இதுவரை ஆடலை).

சரியான பார்ட்னர் அமைவது சல்சாவுக்கு மிக முக்யம்.(இப்ப தான் பாயிண்டுக்கு வர்ரான்யா). தனித் தவில் வைத்து தனியாவர்த்தனம் எல்லாம் இங்க வாசிக்க முடியாது. கண்டிப்பாக ஒரு ஆண், ஒரு பெண் என ஜோடியாகத் தான் ஆட முடியும் (ஆஹா! இதுவல்லவோ நடனம்). ஒருவர் மீது ஒருவர் பரஸ்பர நம்பிக்கை கொள்வது மிக முக்யம். காத்தில் ஆடும் மயிலிறகு போல சுத்தி மிதந்து, சுயன்று, வட்டமடித்து, தரையில் கிங்க் பிஷர் விமானம் போல தரையிறங்கும் போது ஆண் பார்ட்னர் அலேக்காக பிடிக்க தெரியனும். சாம்பார் வெச்சு பத்து, சட்னி வெச்சு அஞ்சு, மிளகாய் பொடி வெச்சு நாலு என ப்ரேக்பாஸ்ட் என்ற பெயரில் இட்லிகளை அமுக்கி விட்டு வரும் ஆள் சல்சாவுக்கு வந்தால் ஆண் பார்ட்னர் சட்னியாகி விடுவார்.

அடுத்து சல்சாவுக்கு முக்யமானது உடை. உடனே ஜெயமாலினி, ஜோதி லட்சுமி, யானா குப்தா ரேஞ்சுக்கு காஸ்ட்யூம் இருக்கும் என நீங்கள் கற்பனை செய்து கொண்டால் நான் பொறுப்பில்லை. கால்களை தடுக்காமல், உடலை இறுக்கிப் பிடிக்காதவாறு பைஜாமா வகைகள், முட்டி வரை இருக்கும் நீண்ட பேண்ட் எல்லாம் உசிதமாக இருக்கும். அதுக்காக அலிபாபா பேண்ட் எல்லாம் செல்லாது செல்லாது. நன்றாக பயிற்சி பெற்றவர்கள் நீண்ட கவுன் வகைகளை தேர்வு செய்வார்கள். காற்றில் மிதந்து வருவது போல நடனம் சிறப்பாக அமையும்.

உடை, பாட்டு, பார்ட்னர் இவை எல்லாவற்றையும் விட மிக மிக முக்யமானது ஆடுபவரின் மன நிலை. மனதில் உள்ள மகிழ்ச்சி அப்படியே முகம் வழியா வழிந்து, ஆடுபவரின் நடன அசைவிலும் வெளிப்பட்டால் தான் சல்சா சிறப்பாக அமையும். இது பரதம், குச்சுபுடி, கதகளி(ஹிஹி) என எல்லா வகை நடனங்களுக்கும் பொருந்தும் என்பது அடியேன் கருத்து.

சல்சாவில் உள்ள அசெளகரியம் என்னன்னு பாத்தா "நான் சல்சாவுக்கு போறேன்"ன்னு யாரிடமும் நாம் தைரியமாக சத்தம் போட்டு சொல்ல முடியாது. என்னப்பா! நான் சல்சா பிராக்டிஸுக்கு போறேன்னு அந்த பொண்ணு தைரியமா என்கிட்ட சொல்லிட்டு போகுது. இதுகெல்லாம் கூடவா பிராக்டீஸ்?னு மேனேஜர் என்னிடம் ஆதங்கப்பட, அவருக்கு கூகிளிட்டு காட்டி சல்சானா நடனம்னு புரிய வைத்தேன்.

ஒரு மண்டலம் சல்சா ஆடி வந்தால் சகல நாடிகளும் சுத்தமாகி, கபாலம் திறந்து குண்டலினி எழுந்து, பூரண மோட்சம் கிட்டும்! என சல்சானந்தா புஜண்ட புராணத்தில் சொல்லி இருக்கார். எனவே நான் சல்சா கத்துக்க போறேன்! என தங்கமணியிடம் சொன்னவுடன், நாட்டிய பேரொளி பத்மினி அம்மா மாதிரி முகத்தில் நவரசத்தையும் காட்டி, ஒரு நொடி அதிர்ந்து விட்டார் தங்கமணி. பின் விலாவரியாக விளக்கியபின் சல்சாவில் உள்ள வில்லங்கத்தை மட்டும் சரியாக மோப்பம் பிடித்து, யூ டியூப்ல வீடியோ பாத்து வீட்லயே சல்சா கத்துகுங்க! என பெரிய மனசு பண்ணி அனுமதி வழங்கி, காலை அஞ்சரை மணிக்கு எழுப்பி விட்டு, "அப்பா ஒழுங்கா பிராக்டீஸ் பண்றாரா?"ன்னு நீ பாத்துக்கோ!னு ஜுனியரையும் ஏவி விட்டாச்சு. நல்லா இருங்கடே! :)

டிஸ்கி: சல்சா என்ற தலைப்பை ஜல்சா என்றோ ஜலஜா என்றோ மிகச் சரியாக தவறாகப் படித்து தலைதெறிக்க வந்த மக்களுக்கு நான் ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன். இது முழுக்க முழுக்க சல்சா என்ற நடனத்தை பற்றிய பதிவு மட்டுமே! :)