Wednesday, April 28, 2010

விளம்பரங்கள்

Part-1 ; Part-2 ; Part -3 ; Part-4

ஒரு தேசிய வங்கிக்கு உள்ளே செல்லவே நம்மில் பலருக்கு ஒரு வித தயக்கம் இருந்திருக்கும். உள்ள போனா ஒருவரும் கண்டுகொள்ள மாட்டார்கள். வங்கிக்குள் நுழையறதுக்கே ஒரு ஆள் சிபாரிசு வேண்டும். டிமாண்ட் டிராப்டோ, ஒரு செலானோ நிரப்புவதற்குள் யப்பா! இந்த ஆபிஸர்கள் படுத்தர பாடு இருக்கே! இதெல்லாம் ஒரு பத்து வருடங்களுக்கு முன்னால். இப்போ நிலைமை ரொம்பவே தேவலை.

எல்லாம் காம்படீஷன் பாஸ்! காம்படீஷன்!

ஆனாலும் தேசிய வங்கிகளை விட தனியார் வங்கிகள் தனித்து நிற்பது வாடிக்கையாளர் சேவை என்ற விஷயத்தில் தான்!னு அவங்களே சொல்லிக்கறாங்க.

வாடிக்கையாளர் சேவையை மையமாக வைத்து மூன்று விதமான விளம்பரங்கள் இப்போது வந்து கொண்டிருக்கிறது.

ஒரு அப்பாவி வாடிக்கையாளர் கஸ்டமர் ரிலேஷன் ஆபிஸராக இருக்கும் ஒரு பெண்மணியிடம் மிகவும் தயக்கமுடன் ஒரு அக்கவுண்ட் ஆரம்பிக்கனும்!னு சொல்கிறார். உடனே அதற்கான விண்ணப்பம் வருகிறது. (தேசிய வங்கிகளில் இந்த விண்ணப்பம் வாங்கவே ஒரு ஆள் சிபாரிசு வேணும்). அவர் அதை பூர்த்தி செய்து குடுக்க உடனே அந்த அம்மணி ஒரு அப்ரன்டீசை கூப்பிட்டு அவன் காதில் "ஒரு மாக்கான் சிக்கிட்டான், அமுக்கி போட்ருவோம்!னு சொல்கிறார்.

ஐந்து வினாடியில் அந்த அப்ரண்டீஸ், ஒரு தட்டில் குலாப்ஜாமூன் தலையில் ஒத்தை மெழுகுவர்த்தியுடன் வந்து ஹேப்பி பர்த்டே! என பாடுகிறார். எனக்கு ஒரு சந்தேகம், மெழுகு சூட்டில் குலாப் ஜாமூன் உருகிடாதோ..? இதே ஒரு பிளேட் கேசரின்னா பிரச்சனை இல்லை. சும்மா, ஒரு ஐடியாவுக்கு சொன்னேன், அவ்ளோ தான்.

அந்த கஸ்டமர் திருதிருவென முழிக்கிறார். "யோவ்! நீ தான்யா இன்னிக்கு உன் பர்த்டே!னு எழுதி இருக்க, ஒழுங்கா குலாப் ஜாமூனை சாப்பிடு!" என அந்த அம்மணி அன்பாக மிரட்டுகிறார். "நல்லா ஸ்வீட்டா இருக்கா?" என அந்த அப்ரண்டீஸ் தன் பங்குக்கு விசாரிக்கிறது.

"கஸ்டமர் சேவையில் சின்ன சின்ன விஷயங்களில் கூட கவனமா இருப்போம்!" என்ற பீத்தலுடன் அந்த விளம்பரம் முடிகிறது.

இந்த விளம்பரத்துக்கு தேசிய வங்கிகள் ஏதும் எதிர் விளைவு நிகழ்த்தினால் எப்படி இருக்கும்? என எனக்கு பாத்ரூமில் தோன்றியது. ஆமா, பல பேருக்கு அங்க தான் ஞானோதயம் பிறந்து ஐடியா மணிகளாக திகழ்கிறார்கள். கட்டின துண்டுடன் (யு)ரேகா! என கத்தியபடி கிரேக்க விஞ்ஞானி அரிக்கமெடிஸ் ஓடலாம், அதுக்காக நான் ஓட முடியுமா..? அதான் இங்க பதிகிறேன்.

சரியாக ஒரு மாதம் கழித்து அதே கஸ்டமருக்கு அதே வங்கியிடம் இருந்து ஸ்டேட்மண்ட் வருகிறது. ஒரு மாதம் முன்னாடி நீ அமுக்கிய குலாப் ஜாமூக்கு ரூபாய் நூறை உன் அக்கவுண்டில் இருந்து கழித்து விட்டோம். புரிந்துணர்வுடன் கூடிய உன் ஒத்துழைப்புக்கு மிகவும் நன்றி! என அந்த லெட்டரை வாசித்தவுடன் நம்மாளு மயக்கம் போட்டு விழுகிறார். அப்படியே அந்த காட்சியை ப்ரிஸ் பண்ணி பேக்ரவுண்டில் ஒரு வாய்ஸ் ஒலிக்கிறது.

"எங்கள் வங்கியில் இந்த மாதிரி மறைமுக வரி என்ற பெயரில் மொள்ள மாரித்தனம் எல்லாம் கிடையாது. நாங்கள் ஒரு திறந்த புத்தகம்!"

அதே வங்கிக்கு இன்னொரு விளம்பரம். ஒரு பாட்டி (கீதா பாட்டி மாதிரி ) அந்த வங்கி கிளைக்கு சென்று தான் எழுதி வரும் கண்ணன் வருவான்! கண்ணை குத்துவான்! தொடர் பதிவு பத்தி நீ என்ன நினைக்கிறாய்? அதுல என் எழுத்து நடை எப்படி..? பின்னூட்டமா வந்து குவிகிறதே! என மொக்கை போடுகிறார். உங்களை கஸ்டமராக அடைந்த பாவத்துக்கு எனக்கு இதுவும் வேணும்! இன்னமும் வேணும்!னு அந்த மேனேஜர் (அனன்யா மஹாதேவன் மாதிரி ) மனசுகுள் புலம்பினாலும் "அடடா! உங்களை மாதிரி வருமா? உங்க லெவல் என்ன? நடை என்ன? வயசென்ன..? என்று சகித்துக் கொள்வது போல காண்பிக்கிறார்கள்.

அந்த விளம்பரத்தில் வர மாதிரி எல்லாம் எந்த தனியார் வங்கி கிளையிலும் போய் மொக்கை போட முடியாது. பொதுவாக ரிலேஷன்ஷிப் மானேஜராக நல்ல வாட்டசாட்டமா அசோக் பில்லர் மாதிரி இருக்கும் ஒரு குஜராத்தி பெண்ணையோ, மார்வாடியையோ தான் அந்த சீட்டில் உக்காத்தி இருப்பார்கள். (எம்.ஜி ரோடு கிளை டாப் டக்கர். காலை எட்டு மணிக்கே கூட்டம் அம்முது).

அந்த பிகரிடம் பேச டோக்கனெல்லாம் கூட தருவார்கள். மிகச் சரியாக பத்து நிமிடம், பத்தே நிமிடம் தான் நம் பேச்சை கேக்கும். அப்புறம் அதன் பேச்சை அதுவே கேக்காது. நமக்கு பேக்ரவுண்டில் வீணை, புல்புல்தாரா, சாக்ஸ்போன் சவுண்டெல்லாம் ஒரே டிராக்கில் கேக்கும். அதுக்கப்புறம் நாம குணா கமல் மாதிரி கையில் லட்டு வாங்கிண்டு கிளம்பிட வேண்டியது தான். ஏன்னா அடுத்த ஆள்

"ஒரு லட்டே
லட்டு தருகிறதே!
அடடா!ன்னு ஆயில்யன் மாதிரி கவிஜ வாசிச்சுண்டு லட்டு வாங்க வரிசையில் இருப்பான். :)

சரி, டிராக் மாறி விட்டது. இவ்வளவும் எதுக்கு சொல்றேன்னா இப்பல்லாம் தனியார் வங்கிகள் கடைந்த மோரில் வெண்ணெய் எடுத்து விடுகிறார்கள். அதனால நாம் தான் உசாரா இருக்கனும். பத்து நிமிடம் அங்கே லட்டு வாங்கினாலும் ஒழுங்கா தேசிய வங்கியில் யாரையாவது பிடிச்சு ஒரு அக்கவுண்ட் துவங்கி வெச்சுக்கனும். இல்லாட்டி உன் குத்தமா? என் குத்தமா?னு பாடிட்டு போயிடுவாங்க.

Wednesday, April 21, 2010

நாங்கள் இந்தியர்கள்

பொட்டி தட்டி களைத்து போன மக்கள் பஃப் பக்கம் ஒதுங்க நினைக்கும் அது ஒரு அந்தி சாயும் பெண்களூர் மாலை நேரம். ஷாரூக்கானே தன் பணத்தை முதலீடு செய்திருப்பதாக சொல்லபடும் அந்த வங்கியின் பிரதான கிளை அமைந்து இருக்கும் எம்.ஜி ரோடில் வலதுபுற ஓரமாக நடந்து வந்தேன். ரெண்டு துரைசாரினிகள் ஒருவருக்கு முப்பது இருக்கலாம், அருகில் இருப்பது அவரது மகள் பன்னிரெண்டு வயதிருக்கலாம். அந்த டிராபிக் நிறைந்த சாலையை வலபுறமிருந்து இடபுறம் கடக்க நாலு முறை முயற்சி செய்து தோற்று விட்டனர்.

என்னைப் பார்த்ததும் அந்த அம்மணிக்கு என்ன தோன்றியதோ தெரியலை, "யோவ், நீங்கள்ளாம் எப்படி தான் சாலையை கடக்கறீங்களோ?"னு கொஞ்சம் ஆச்சர்யம், கொஞ்சம் மன வெறுப்புடன் அலுத்துக் கொண்டார். முன்பின் தெரியாத ஒரு இளைஞனிடம்(நான் தான்டே!) இவ்ளோ ஜகஜமாக பேச ஒரு கட்ஸ் வேணும். நம்மூர்ல இதே வேலைய நாம செஞ்சு இருந்தா ஊர்ல இருக்கற அப்பாவ இங்க இருந்தே கூவி அழைத்து, கும்மி இருப்பார்கள். அப்படி அலுத்துக் கொண்ட அடுத்த ரெண்டு நொடிகளில் தனது மன உளைச்சலை என்னிடம் கொட்டினதுக்கு மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.

டக்குனு அந்த பெண்மணி அப்படி சொன்னதும் எனக்கும் ரோசம் பொத்துக் கொண்டு வரவில்லை. உண்மை தானே! நம்மூர்ல சிக்னல்களை, பாதசாரிகளை, ஸீப்ரா கிராசிங்குங்களை என்னிக்கு மதிச்சு இருக்கோம்..? நித்ய கண்டம் பூர்ண ஆயுசு உள்ளவர்கள் மட்டுமே இங்கு சாலைகளை கடக்க முடிகிறது. யார் எவர் மீது மோதினாலும், முதலில் யார் சவுண்டு விடுகிறார்களோ அவர்கள் நியாயம் தான் ஜெயிக்கிறது.

உங்களுக்கு ஏற்பட்ட அசெளகரியத்துக்கு மிகவும் வருந்துகிறேன், நானும் இந்த சாலையை கடக்க வேண்டும், என்னுடன் வாருங்கள், உங்களுக்கு என்னால் உதவ முடியும் என நினைக்கிறேன். நீங்கள் எந்த நாட்டை சார்ந்தவர் என நான் தெரிந்து கொள்ளலாமா..?

நாங்கள் ஜெர்மனியை சேர்ந்தவர்கள்.

(ஜெர்மானியர்கள் கொஞ்சம் முன்கோபிகள் என்பது உண்மை தான் போலும்)

டிராபிக் கான்ஸ்டபிள் வண்டியை நிப்பாட்ட கை காட்டுவது போலவே நாங்கள் மூனு பேரும் கை காட்டியபடியே அந்த சாலையை ஒரு வழியாக கடந்தே விட்டோம். அந்த பெண்மணிக்கு மகிழ்ச்சி தாங்க வில்லை. கிரேட்! கிரேட்! என நாலைந்து முறை சொல்லி விட்டார். பாவம், ரெம்ப அடி வாங்கி இருப்பாங்க போல.

என் பெயரை கேட்டு தெரிந்து கொண்டு மிக சரியாக தப்ப்பாக உச்சரித்து விட்டு நன்றி சொல்லி கிளம்பினார்கள்.

ஹர்ஷர் காலத்தில் வந்த சீன யாத்ரீகர் யுவாங்-சுவாங்கும், மெகஸ்தினசும் தமது இந்திய பயண கட்டுரைகளில் இந்தியர்களை, இங்குள்ள வளங்களை வியந்து பாராட்டி எழுதியுள்ளனர். இந்த ஜெர்மானிய பெண்ணும் தனது இந்திய பயணத்தை பற்றி ஜெர்மனிலோ, ஆங்கிலத்திலோ பதிவு எழுதலாம். ஒரு வேளை நீங்கள் அதை படிக்க நேர்ந்தால், "உனக்கு உதவியதும் ஒரு இந்தியன் தான்!" என தைரியமாக பின்னூட்டமிடுங்கள்.

பி.கு: ஐஸ்லாந்தில் எரிமலை குமறியதால் தான் நான் பதிவெழுத தாமதமாகி விட்டது என சொன்னால் நீங்கள் நம்ப போவதில்லை. அடுத்த பதிவு கொஞ்சம் சீக்ரமாகவே வரும்.