தேவர் படை ஒரு புறம், அசுரர் படை மறு புறம். சூரபத்மன் மனம் போல திருச்செந்தூர் கடலும் பொங்கியது. அவனின் மனதில் தோன்றிய எண்ண அலைகள் போல கடலில் தோன்றிய அலைகளும் ஆர்பரித்தது.
"யார் இந்த பாலகன்? பால் மனம் மாறாது, மந்தகாச புன்னகையுடன், கண்களில் குறும்பு தெறிக்க, காதில் மகர குழைகள் ஆட, சிவப்பு பட்டாடை உடுத்தி, கழுத்தில் முத்து மாலைகள் அசைய, கைகளில் ரத்ன கங்கணம் மின்ன, பாதங்களில் பொற்சிலம்புகள் ஒலி எழுப்ப, ஆயிரம் கோடி சூரியனை போல பிரகாசத்துடன் ஒளி பொருந்திய முகத்துடன், எழுத்தாணி பிடிக்க வேண்டிய வயதில்,கையில் வேலுடன் இருக்கும் இவனா என் அசுரர் படையை அழித்தவன்?

சிங்கமுகனை இவன் தான் கொன்றான்! என செய்தி வந்ததே? உண்மையா என்ன? அவனை வெல்ல இந்த உலகில் ஒருவரும் இல்லையே?
சரி, தாரகன் கதி..? இந்திரனையே மண்டியிட செய்தவன் ஆயிற்றே?
இந்த பாலகனை என்னால் எதிரியாகவே பார்க்க முடியவில்லையே? கையேடுத்து வணங்க மனம் துடிக்கிறதே? எங்கே போனது எனது ஆக்ரோஷம்?
சே! நான் கோழை ஆகி விட்டேனா? இவன் யார்? யக்ஷனா? தேவனா? கிங்கரனா? கந்தர்வனா? அற்ப மானிட பதரா?"
குமரன் திருவாய் மலர்ந்தான்,"என்ன அசுரர் தலைவனே! மவுனம் ஏன்? தன்னெஞ்சே தன்னை சுடுகிறதா?
பேராசை பட்டாய், நான் என்ற அகங்காரம் கொண்டாய்! தர்மத்தை மறந்தாய்! தன்னடக்கத்தை துறந்தாய்! அடாத செயல்கள் செய்தாய்! அனுபவிக்கிறாய்!
இப்பவும் ஒன்றும் கெட்டு போகவில்லை. உன் தவறுக்கு வருந்து. தப்பு செய்தமைக்கு மன்னிப்பு கேள்".
"வினாஷ காலே விபரீத புத்தி!" விதி யாரை விட்டது?
"பச்சிளம் பாலகனே! மாயைகள் கற்றவனே! என் தம்பி மார்களை கொன்றாய்! இந்த ஒரு காரணம் போதும்! உன்னை தண்டிக்க. ஆனாலும், இந்த சூரபத்மன் ஒரு பாலகனை கொன்றான்! என்ற பழி வேண்டாம், மன்னிப்பு கேள்! உயிர்பிச்சை அளிக்கிறேன்!" பாவம் ஆணவம் கொக்கரித்தது.
கோபமும், ஆணவமும் தலையெடுத்து விட்டால் அங்கு புத்திக்கு ஏது இடம்?
நான் அப்படி தான் இருப்பேன்! மாற மாட்டேன்! என்னை மிஞ்ச யாரும் இல்லை! எனக்கு யாரும் புத்திமதி அளிக்க வேண்டாம்! என மனம் ஆர்ப்பாட்டம் செய்யும். இதுவரை இனிமையாக பழகியவரும், பகைவராய் தெரிவர்.
சூரன் மட்டும் விதிவிலக்கா என்ன?
ஆனாலும், நமது கந்தன், கடம்பன், குமரன், வேலன், முருகன், அழகன், கார்த்திகேயன், பகைவருக்கும் அருள்வானே!
சூரனை இரண்டாய் பிளந்து, மயிலும், சேவற் கொடியுமாய் மாற்றி எப்போழுதும் தன்னோடு இருக்குமாறு செய்து விட்டானே! அவனது கருணையே கருணை.
நாளை கந்த சஷ்டி திருவிழா!
நான் உடல் வருத்தி, பட்னி எல்லாம் இருந்து, பெரியதாக எந்த விரதமும் இருந்தது இல்லை.
"உடலை வளர்த்தேனே! உயிரை வளர்த்தேனே!"
என்று இருந்து வந்தேன்.
மூன்று வருடங்களுக்கு முன்னால் நான் மிகுந்த கஷ்ட தசையில் இருந்த போது, "முருகா! என் வினையை களைவாய்! என மனமுறுகி ஷஷ்டி விரதம் இருந்தேன். அதுவும் சூரசம்காரம் அன்று மட்டும் தான்!
இதோ இப்பவும் 6 நாட்கள் முருகன் சிந்தனையில் ஆழ்ந்து விட்டேன். என் மனம் எல்லாம் திருசெந்தூரில் நாளை நடக்க இருக்கும் சூரசம்காரத்தில் தான் உள்ளது.

நான் குழந்தையாக இருந்த போது எங்கள் ஊரில் முருகன் காவடி வரும். எங்கள் வீட்டு முன்னால் என் அப்பா முருகன் மேல் மனமுருகி காவடிசிந்து பாட, அழகாக முருகனடியவர் காவடி ஆடுவர். நான் அவர்களுக்கு தாகம் தணிய மோர் அளிப்பேன்.
இப்பவும் நம்மிடையே தலை தூக்கும் அசுரர்களான, நான்! என்ற அகந்தை, ஈகோ, கோபம், பேராசை, உலக இச்சைகள், சோம்பேறித்தனம், எல்லாவற்றையும் அந்த கந்தன் கைவேல் நொறுக்கட்டும்.
கூவி அழைத்தால், குரல் குடுக்காமல் இருப்பானோ அந்த மால் மருகன்?
பி.கு: முதல் கமண்ட் போடுபவர்களுக்கு, முருகன் பேரை சொல்லி அலகு குத்தி விடப்படும். :)