Wednesday, March 14, 2007

Pointers in C

உங்களுக்கு ஆபிஸில் ரொம்ப வேலை பளுவா?
ரெஸ்ட் எடுக்க ஒரு ரிஸர்ட் வேணுமா?
ஆணி பிடுங்கி பிடுங்கி சோர்ந்து விட்டீர்களா?

ஆமாம்பா ஆமாம்! என்பது உங்கள் பதிலாக இருந்தால் உடனே நீங்கள் போக வேண்டிய இடம் கிண்டியில் இருக்கும் TRC சாரின் அழகிய வீடு.

இந்த பக்கம் நிஜமான நாலு கால் குதிரைகள் ஓடும் ரேஸ்கோஸ் மைதானம், அந்த பக்கம் பசுமையான கோல்ப்(Golf) புல்வெளி.

ஒரு 2 நாளுக்கு தேவையான உடைகளுடன் போய் விடுங்கள். நல்லா ஒரு குளியல்(வென்னீரும் உண்டு) போட்டு, உமா மேடம் சமயலை ஒரு கட்டு கட்டி விட்டு அருகில் இருக்கும் சோபாவில் சாய்ந்து கொண்டு ஒரு குட்டி தூக்கம் போடுங்கள்.
பக்கத்துல இருந்து சார் ஏதாவது தொண தொணனு பேசினாலும் ஒன்னும் கண்டுக்க வேண்டாம்.
சாயந்தரம் ஏலக்காய் மணக்க டீயுடன் சமோசாவும் உண்டு. (எலேய் கொடி, எத்தனை சமோசாவை நைஸா அமுக்கின எனக்கு தராம?)
சாயந்தரம், அப்படியே ரிலாக்ஸ் பண்ணிக்க இந்த பீச், நாரத கான சபா எல்லாம் TRC சாரே கூட்டிண்டு போவார்.

மிகவும் ராசியான வீடு. பிளாகர் மாநாட்டில் கலந்து கொண்ட என் அருமை சகோதரி பொற்கொடிக்கு ஒரே மாதத்தில் டும் டும் டும்! எனக்கு 2 வது மாததில் தங்கமணி பிக்கப்பு! :)

அட! இப்பவே நிறைய பேரு கிளம்பறாங்க பாருடா! ஷ்யாம் நீ எங்க புறப்படற?
நான் சொல்வதில் சந்தேகம் இருந்தால் பக்கா திருடனையோ அல்லது வேதா(ளத்தை)வையோ கேட்டு பாருங்கள்.

இந்த கோடை விடுமுறையை கொண்டாடுங்கள் TRC சாரின் வீட்டில்.
பேஜர் கிடையாது, பேக்ஸ் கிடையாது. போனா வராது! கேட்டாலும் கிடைக்காது! உடனே முன்பதிவுக்கு முந்துவீர்!

என்னடா தலைப்புக்கும், பதிவுக்கும் சம்பந்தமே இல்லையே?னு நீங்க கேக்கலாம். தப்பில்லை.
இப்ப முஸ்தபா! முஸ்தபா! டொன்ட் வொரி முஸ்தபா! பாட்டுல எங்கே முஸ்தபா வரான்? நாம கேட்டோமா? அதே மாதிரி தான் இதுவும்.
கூகிள்ல யாராவது "Pointers in C"னு தட்டினா ஹிஹி நம்ம பிளாக்கும் அவன் கண்ணுக்கு படும். ஹேப்பியா எல்லா வேலையவும் மூட்டை கட்டி வெச்சுட்டு (பொற்கொடி மாதிரி) நம்ம பிளாக்கை படிப்பான். கமண்டும் விழும். இதுவும் ஒரு பிளாக் பிரமோஷன் டெக்னிக் தான். எப்புடி நம்ம டகால்டி...?

உடனே இதை பார்த்து எதிர்கட்சிகள்னு வரிசையாக
1) ASP .NET
2) C#
3) UNIX and LINUX in 30 Days போஸ்ட் போட வேண்டாம். ஏற்கனவே அதை எல்லாம் காப்பிரைட் வாங்கி வெச்சுருக்கோமாக்கும். :)
பி.கு: அடுத்த பதிவு நீங்கள் கும்மி அடிக்க ஆவலுடன் காத்திருக்கும் "பார்த்த முதல் நாளே!"

Friday, March 09, 2007

உளறுதல் என் உள்ளத்தின் வேலை!









மருண்ட விழி பார்த்து
மானே என்றேன்!
இருண்ட கூந்தலை
கார் முகில் தான் என்றேன்!
செவ்விதழ் பார்த்து
செர்ரி என்றேன்
பித்தன் என்றனர்!
பிதற்றுகிறான் என உமிழ்ந்தனர்.
கவலையில்லை என் கண்மணி!
பிறை சூடி மான் மழு ஏந்தி
சதிக்கு நிகராய் சதிராடிய
சண்முகன் தகப்பனும்
பித்தன் தானே என் பொன்மணி!

அண்ணா சாலையில் பாலே நடனம்
சன் டிவியில் பிளாஷ் நியூஸ்!
ஓ! சாலையில் ஒயிலாக நீ நடந்தாயா?
டிராபிக் ஜாமானது என் மனது!
சிவப்பு விளக்காய் உன் மாமன்
ஆரஞ்சு விளக்காய் என் மச்சினி
பச்சை விளக்காய் நீ கண் சிமிட்டினால்
டாப் கியரில் பறக்காதோ நம் காதல் வண்டி?

நேர்-நேர் தேமாவாம்!
நிரை-நேர் புளிமாவாம்!
இலக்கணம் சொன்னது மல்லிகா டீச்சர்!
நான்-நீ இணைந்தால் என்ன மா?
இதை நான் கேட்டால் தப்பா மா?

பக்குவமாய் நாள் பார்த்து
பதவிசாய் உன் பக்கம் அமர்ந்து
பரவசமாய் பரிசமிட்டேன்
கண்ணாலே பல கதைகள் பேசி
காதோரம் கதைத்து விட்டு
கடமை அழைக்கிறது! என
காற்றாய் பறந்து விட்டாய்!
கரிசனமாய் கணினியில் கையசைத்து
கண்ணோரம் வந்த நீர் துடைத்து
கல கலவென வெளியே சிரித்து
ஓவென உள்ளே அழுது
நாளைய ஆஸ்காருக்கு காத்திருக்கிறேன்
நானும் ஒரு கைதேர்ந்த நடிகனாய்!

.......... அம்புட்டு தான் பா! ஸ்ப்ப்பா மூச்சு வாங்குது!

ரொம்ப நாளா களுத, இந்த காதல் கவித எல்லாம் எழுதனும்!னு ஒரே ஆசை.
அட பாருங்க, இந்த நேரம் பார்த்து நமக்கு பாட்டெழுத வரல! பாட்டெழுத வரல! மண்டபத்துல யாரோ எழுதி குடுத்தத வாங்கவும் மனசு இல்ல.


இந்த நேரத்துல ரிலே கவிதை எழுதி எனகுள்ள தூங்கிட்டு இருந்த சிங்கத்த சொறிஞ்சு விட்டுடாங்க.
சரி உளறல் தானே!னு விடுட முடியுமா? நாளைக்கு பாராளுமன்றத்துல எதிர் கட்சிகள் எள்ளி நகையாடிட கூடாது இல்ல? அதுனால கவிதை எழுத என்னென்ன வேணும்?னு ஒரு லிஸ்ட் போட்டேன்.

இதோ உங்கள் பார்வைக்கு:


1) மானே! தேனே! எல்லாம் சரளமா அங்கங்க தூவிக்கனும்.


2) கண்மணி போட்டா பொண்மணி கண்டிப்பா போடனும், அப்ப தான் கவிதை tally ஆகும்.

3) எதுகை மோனை இருந்தா டாப்பு டக்கர், உதாரணமா
மாப்பிள்ளை
வேப்பிலை
(கருவேப்பிலை கூட போட்டுக்கலாம் தப்பில்லை!)


தொடர் ஒட்டத்தில்---------------------------------

தலைவர்(கார்த்திக்) : கொதிக்கின்ற நீருக்குள் குதிக்கும் பொருளாய்

நிதியமைச்சர் (பரணி) : விழி விழுந்து என் விதி பார்த்துது.

துணைமுதல்வர் (வேதா) : உன் உதோட்டோர வழியும் சிரிப்பில்

கலை மற்றும் விளம்பரதுறை (மணி) : என் எல்லா நாட்காட்டி பொழுதுகளிலும்
பொதுப்பணித் துறை (ஜி-Z): சத்தமில்லாமல் புன்னகையிலும்...

மத்திய தகவல் தொடர்புதுறை (அடியேன்) : நானும் ஒரு கைதேர்ந்த நடிகனாய்!

டிஸ்கி: அந்த படத்தை பார்த்து ஒன்னும் நான் கவிதை எழுதலை! என்னய நம்புங்க எஜமான்! :)

Tuesday, March 06, 2007

மத்திய அமைச்சர் பதவியேற்ப்பு விழா!

நாட்டாமை ஷ்யாம் (ஓ.பன்னீர்செல்வம்!னு வாசிக்கபடாது) தலைமையில் பிளாக் முன்னேற்ற கழக மாநில அமைச்சர்கள் பதவியேற்ற கையோடு
மத்திய அமைச்சர்களும் பதவியேற்று கொண்டதை கழக செய்தி மலரான சங்கொலி மூலம் நீங்கள் அறிவீர்கள்.



நாம் என்றுமே பதவியை தேடி போனதில்லை, வந்த பதவியை ஒரு வழி பண்ணாமல் விட்டதில்லை, மேலும் பதவி என்பது நமக்கு மூக்கில் ஒழுகும் சளி போல, எந்த நேரமும் சிந்தி விட்டு போயிவிடுவோம்! என்பதை தமிழகம் அறியும். தரணியும் புகழும்.



இந்த நேரத்தில் மத்திய தகவல் தொடர்புதுறை அமைச்சர் பதவி என்னை தேடி வந்ததால் வேறு வழியில்லாமல் தம்பி! உன் சொல்லுக்கு கட்டுப்பட்டு இந்த முள் கீரீடத்தை சுமக்க இசைந்து விட்டேன், தலை அசைத்து விட்டேன்.


இதோ நாம் பதவியேற்றுக் கொண்ட காணக் கிடைக்காத காட்சி! (படத்துக்கு நன்றி கோல்மால் கோபால்)
தூர்தர்ஷன் முதல் கிரான்ட்ஸன் டிவி வரை கோலங்கள் மற்றும் செல்வி சீரியலின் நடுவே ஒரு வாரத்துக்கு ஒளிபரப்பும் செய்யப்படும். நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் குடும்ப குத்து விளக்கு செல்வி கவுஷா! இந்த நிகழ்ச்சியின் விளம்பரதாரர் நாயுடு ஹால். (பார்த்தே ஆகனும்! அது உங்க தலைவிதி)

நாட்டு மக்களுக்கு என்ன சலுகைகள்? என்று கேட்கும் எதிர்கட்சிகளின் வாயை அடைக்க இதோ:

1a) புதிதாக என்கேஜ்மெண்ட் ஆன ஜோடிகளுக்கு இலவச சாடிலைட் போன், வெப் காமிரா.(ஒரு நாளைக்கு 18 மணி நேரம் மட்டுமே டாக் டைம்).

1b) உள்ளூர், வெளியூர் கட்டணங்களூம் அவர்களுக்கு ப்ரீ. (என்ன சந்தோஷம் தானே பிரியா?)

2) பத்து பைசாவில் பஞ்சாப்புக்கு கால் செய்யலாம்! அதாவது பஞ்சாபில் உள்ள மக்களுக்கு கால் செய்யலாம்!னு சொல்ல வந்தேன். (எவன்டா அவன்! என் தங்கமணிட்ட போட்டு கொடுக்கறது?)

3) பிளாக் எழுதும் இளம் பேச்சுலர்களுக்கு ஆபிஸில் ஸ்பெஷல் பெர்மிஷன், ஒரு நாளைக்கு 4 மணி நேரம் மட்டும் வேலை செய்தால் போதும்.(அந்த நேரத்திலும் கமண்ட் போட்டுண்டு இருக்க கூடாது)

எப்படியோ நல்லது நடந்தா சரி! :)

4) இனி ஒவ்வோர் ஊரிலும் எத்தனை கல்லூரிகள், எத்தனை பிகர்கள் என்ற தகவல் சுரங்கம் டச் ஸ்கீரினில் அந்த கல்லூரி வாசலிலேயே நிறுவப்படும். நாட்டமை சில வருஷங்களுக்கு முன் மிகவும் கஷ்ட்டப்பட்டதாக கேள்வி, அதான் இந்த ஏற்பாடு!


5) மொக்கை போஸ்ட் போடுபவர்களுக்கு ஊக்க தொகை வழங்கப்படும். அதை வருடம் தோறும் நடக்கும் மொக்கைகள் முன்னேற்ற கழகத்தின் தற்போதைய தலைவியாம் நமது ஜி3 அக்கா வழங்குவார்கள். கீதா மேடம் தான் அந்த கட்சியின் நிறுவனர் எனபதை நீங்கள் அறிவீர்கள்.

இதை எல்லாம் வரவேற்காமல் வெளி நடப்பு செய்ய நினைக்கும் எதிர்கட்சிகளுக்கு நான் ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன்.

எங்கள் வாரிய தலைவர்கள் வசம் சகாய வாடகைக்கு ஆட்டோக்கள், சுமோக்கள், லாரிகள் எல்லாம் ஜாமான் செட்டுக்களுடன் தயாராக உள்ளன. ரெண்டு முட்டை பிரியாணி மட்டும் தான் எங்களுக்கு செலவு, ஆகவே ஒழுங்கா மரியாதையா நாடாளு மன்றத்தில் அவரவர் இருக்கையில் அமரவும்.

Thursday, March 01, 2007

அந்ந்ந்த கலர்!

ஜிலேபி தேசத்திலிருந்து திருனெல்வேலி வரை பஸ்ஸில் பயணம் செய்து ஒரு வழியாக கல்லிடைக்கு பஸ் பிடிக்க பாபநாசம் செல்லும் பேருந்தில் ஏறி சன்னலோர இருக்கையில் அமர்ந்தவுடன், "என்ன லே புறத்தாலயே நிக்க! முன்னால வாலே!னு கண்டக்டர் நெல்லைத் தமிழிலில் கொஞ்சியதை கேட்டவுடன் பாரதியின் காதில் பாய்ந்த தேன் என் காதிலும் பாய்ந்தது!

ஹப்பா! எவ்ளோ நாளாச்சு இத எல்லாம் கேட்டு!

எல்லா வயல்களிலும் அறுவடைக்கு அனேகமாக இன்னும் ஒரு வாரம் இருக்கும். மண நாளை எதிர்பார்த்து காத்திருக்கும் நிச்சயக்கப்பட்ட பெண் போல (ஹிஹி, என் தங்கமணியைப் போல!னும் வாசிக்கலாம்) நெற்கதிர்கள் மேற்க்குத்தொடர்ச்சி மலையின் காற்றில் தலை சாய்த்து நிற்கும் காட்சியை நேரில் பார்த்தால் தான் அழகு! என்பதால் போட்டோ பிடிக்க வில்லை.

(ஹிஹி, காமிரா கொண்டு போக மறந்துவிட்டேன்! என்ற மேட்டரை பின்ன எப்படி சமாளிக்கறதாம்? தங்கமணியிடம் செம ஆப்பு! :(

ஊருக்கு போனவுடன் சுகமாக தாமிரபரணியில் 2 மணி நேர குளியல், சுடச்சுட அடை!னு மெனு களை கட்டியது.



மறு நாள் அதிகாலையிலேயே நெல்லை ஆரேம்கேவிக்கு பயணம். கடையவே நாம தான் தொறந்தோம்.

அடடா! எத்தனை புடவைகள்! எத்தனை கலர்கள்!

இந்த பாவப்பட்ட ஆண்களுக்கு திரும்ப திரும்ப ஒரு சில பொதுவான நிறங்களில் தான் சட்டையும் சரி, பேண்டும் சரி அமையும். ஆனால் மீனா ஆண்டி சொல்லியபடி லேடிஸ்க்கு தான் எத்தனை சிங்குசா கலர்கள்!

மாம்பழ கலர்ல அரக்கு பார்டர்!


எம்.ஸ் ப்ளு, நேவி ப்ளு, ஸ்கை ப்ளு, டார்க் ப்ளு, காப்பர் சல்பேட் ப்ளு


கேவா கலர் (தெரியுமா?), பால் கோவா கலர், நவாப்பழ கலர்,


வெங்காய கலர் (அதுல பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் வேற)

பாட்டில் க்ரீன், ஆலிவ் க்ரீன், கிளிப்பச்சை,


பர்கண்டி(ஜருகண்டி இல்லை),


மெரூன் ரெட், பிளட் ரெட், அஜித் ரெட்,


வெளிர்மஞ்சள், பச்சமஞ்சள், பொன்னிறம்(ஹிஹி, ஐஸ் குட்டி நிறம்!னு நான் கேட்டேன்),


லைட் பிரவுன், டார்க் பிரவுன், காப்பி பிரவுன்,


யானை கலர், கழுதை கலர்(கஷ்ட காலம்),


சிமெண்ட் கலர், செங்கற்பொடி கலர்,

அடங்கப்பா சாமி! என்ன, படிக்கற உங்களுக்கே கண்ண கட்டுதா?
கடைகாரனுக்கு எப்படி இருக்கும்?

100 வருஷமா கடை நடத்தறாங்க, அதுனால நாங்க கேட்ட கலர், பிடிச்ச டிஸைன் எல்லாம் ஜஸ்ட் ஒரு 3 மணி நேரத்துல கிடைத்து விட்டது.

"பார்த்தது போதும்! சட்டுபுட்டுனு ஒன்ன செலக்ட் பண்ணு!"னு அவசரப்படுத்தும் ரங்கமணிகளை பாண்டி பஜாருக்கு டிக்கட் எடுத்து குடுத்து நாயுடு ஹாலுக்கு அனுப்பி விடுவது சாலச் சிறந்தது!

அங்கே தான் எடுத்து போட்ட நாலுல, ஒன்ன செலக்ட் பண்ணிண்டு வந்துண்டே இருக்கலாம். (இப்ப அதுலயும் டிசைன் எல்லாம் வந்துடுத்தாம்! )

பாரம்பரிய பட்டு தவிர, இப்ப ஸ்டோன் வர்க்(stone work), திரட் வர்க்(thread work) வெச்சு எல்லாம் வந்துருக்கு. இது போதாது!னு பனாரஸ் பட்டு, பாந்தினி சில்க்ஸ், போச்சம்பள்ளி சாரீஸ் வேற அட்டகாசமா இருக்கு!


- எதிர்கால தங்கமணிகள் கவனிக்கவும். வருங்கால, நிகழ்கால ரங்கமணிகள் கோ-ஆப்டெக்ஸ் துண்டு(அதுவும் 10% தள்ளுபடியில்) வாங்கி கொள்ளவும், வேற எதுக்கு தலைல போட்டுக்க தான்!

நான் எதிர்பார்த்தபடியே எங்களுக்கு பக்கதுல ஒரே கசமுசா!

"ஈ கலரு எனக்கு மேட்ச்சாயிட்டு இருக்கும்! நோக்கிக்கோ" - சூர்யா டிவி டாப் டக்கராயிட்டு ஓடிக்கொண்டிருந்தது.



ஆயிரம் ஏஞ்சலினா வந்தாலும் ஒரு கேரளாவுக்கு ஈடு இணை ஆகுமா?



ஓ! ஆ கலரு நிங்களுக்கு ஒன்னாம் கிளாஸாயிட்டு(first classaa) இருக்கும்! இது சத்யமாக்கும்!னு சொல்லி நெஜாமாலுமே அவங்களுக்கு மேட்ச்சான கலரில் ஒன்னை சுட்டி காட்டி சம்மன் இல்லாம ஆஜர் ஆக வேண்டி இருந்தது,



ஏனெனில் ஆப்பெண்குட்டி கையில் யான் தேடிக் கொண்டிருந்த கலர்ல எம்ராய்டரி பண்ணிய பட்டு புடவையாக்கும்!

ஹிஹி, எல்லா கலருமே அவங்களுக்கு மேட்ச் தான்! (சொக்கா! எனகில்லை! எனக்கில்லை!)

பாலக்காட்டு குட்டிக்கு பரம சந்தோஷம்! (ஆமா! அருண் & KK, அவங்களுக்கு பாலக்காடு தான் ஓரிஜினாம், மத்தபடி ஊரு மட்டும் தான் விசாரிச்சேன்.)

(இது தங்கமணிக்கு- என்ன நம்புங்க எஜமான்!)

கூட வந்த அச்சன் சுதாரிக்குமுன், நைசா அந்த புடவைக்கு பில்லை போட்டு விட்டேன். ஒரு வழியா எல்லா ஷாப்பிங்கும் முடிஞ்சு உங்களுக்கு அல்வா எல்லாம் வாங்கிண்டு இதோ மறுபடி ஆணி பிடுங்க வந்தாச்சு!

நான் சாப்டா நீங்க சாப்ட மாதிரி தானே!னு இந்த தடவையும் நான் அல்வா குடுக்க முடியலை. ஏனெனில் பக்கத்து வீட்டு டுபுக்கு டிசிப்பிள் கொத்தா சட்டைய பிடிச்சு அவங்க பங்கை எடுத்துண்டு தான் எனக்கே குடுத்தாங்க.



அல்வாவை முழுங்கிட்டு அப்டியே போகத லே! நச்சுனு நாலு கமண்ட் போட்டுட்டு போல!


பி.கு: மார்ச் மாத வெளியீடு "பார்த்த முதல் நாளே!" விரைவில் உங்கள் அபிமான பிரவுஸர்களில் உலகமெங்கும்!

Thursday, February 22, 2007

டாட்டா! பை! பை!



கடந்த டிசம்பரிலிருந்து ஓய்வில்லாமல் சோறு தண்ணி (காவிரி தண்ணீர் தான்) கூட சரியாக இல்லாமல் ஆணி பிடுங்கியதில் மிகவும் சோர்வாக உள்ளதால், "சரி! தாமிரபரணி பாயும் நம்ம ஊர் பக்கம் ஒரு ஐந்து நாள் போய் ஓய்வெடுக்கலாம்!னு முடிவு பண்ணி இதோ கிளம்பியாச்சு.

போன தடவை அம்மாவுக்கு தீபாவளி புடவை எடுத்ததில் மதுரையில் இனிமே எந்த கடையிலும் இந்த அம்பிய உள்ள விடக்கூடாது!னு முடிவு பண்ணிடாங்களாம். அதனால் இந்த தடவை திருனேல்வேலி ஆரெம்கேவியல தான் நம்ம கச்சேரி இருக்கு.

ஆமா! தங்கமணிக்கு புடவை எடுக்கனும். ராசு குட்டி மாதிரி நம்ம மனசுல ஒரு டிசைன், கலர்(அதாவது புடவை கலருங்க) எல்லாம் இருக்கு. அதே கலர் அங்கே இருக்கனும். ஜோதிகா அக்கா கூட இந்த கலர்! இந்த கலர்!னு அடிக்கடி டிவி பொட்டியில வராங்க.

ஐம்பதாயிரம் கலர்ல புடவைகள் இருக்கு!னு சொல்றாங்க. நாம நினைக்கறது ஐம்பதாயிரத்து ஒன்னாவது கலரா இருந்தா என்ன பண்றது? அது மட்டுமல்ல, எப்பவுமே நாம செலக்ட் பண்ற புடவைய விட பக்கத்துல இருக்கற பிகர் செலக்ட் பண்ணி கைல வச்சுருக்கற புடவை மேல தான் கண்ணா இருக்கும். எப்படா அந்த பிகர் அத கீழே போடுவாங்க? நாம லபக்குனு கொத்தலாம்?னு நப்பாசையா இருக்கும்.

இன்னும் சிலர், இந்த பேட்ஸ்மேனுக்கு பின்னாடி இருக்கற விக்கட் கீப்பர் மாதிரி, "அய்யே! உங்களுக்கு இந்த கலர் மேட்சே ஆகாது! நல்லா நெய்யில செஞ்ச அல்வா துண்டு மாதிரி இருக்கீங்க! இந்த கலர் டிரை பண்ணுங்க!"னு சொல்லி நைசா ஒரு சிங்குசா கலர் புடவைய தலைல கட்டிருவாங்க.

அந்த டகால்டி வேலை எல்லாம் பண்ண வேண்டி இருக்கும்!னு நினைக்கிறேன். பார்ப்போம்!

வார கடைசியில் போவதால் நம்ம மக்களுடன் தாமிரபரணியில் ஜலக்ரீடை, அருவியில் ஆட்டம்! எல்லாம் நடத்திடலாம்னு பிளான். போட்டோ எல்லாம் புடிச்சுண்டு வரேன்.

ஆக, கல்லிடையில் ஐந்து நாட்களுக்கு யானைகள் முகாம் நடக்க போகுது!னு இப்பவே உடன்பிறப்பின் நக்கல் ஆரம்பித்து விட்டது.

கல்லிடைக்கு போனாலும் போன் சிக்னல் எல்லாம் நல்லா கிடைக்கனும். ம்ஹூம்! என் கவலை எனக்கு!

ஒரு ஐந்து நாட்களுக்கு உங்க கடை கண்ணி(கன்னி இல்ல) பக்கம் வர முடியாது.

கீதா மேடம்! போய்ட்டு வந்து நீங்க போட்ருக்கற பதிவுகளை(பாருங்க எல்லாரும் மொக்கைகளை!னு வாசிக்கறாங்க) எல்லாம் படிச்சுக்கறேன்.

ஆளுக்கு அஞ்சு கமண்ட் போட்டு வைங்க, அப்ப தான் அல்வா குடுப்பேன், அட நிஜமான ஒரிஜினல் நயம் திருனெல்வேலி அல்வாவை சொன்னேன் பா!

இது நம்ம 75வது போஸ்ட். உருப்படியா ஏதாவது எழுதனும்!னு தான் நினைச்சேன். பாருங்க மொக்கையாயிடிச்சு. இத தான் பெரியவங்க அன்னிக்கே சொல்லி வெச்சுருகாங்க
"பனை மரத்துக்கு அடியில உக்காந்து பால குடிச்சாலும்,
பாக்கறவன் பகார்டி!னு நினைச்சு பங்கு கேட்பானாம்!"

எல்லாருக்கும் பிர்லா! பை! பை! (எப்பவும் டாட்டா தானே சொல்றோம்! சும்மா ஒரு சேஞ்சுக்கு இருக்கட்டுமே!).... :)

Monday, February 19, 2007

நான் வளர்கிறேனே மம்மி!

பிப்ரவரி 18 2006, விளையாட்டு போக்குல நாம பிளாக் ஆரம்பிச்சு ஒரு வருடம் (with 74 posts) ஓடி விட்டது. ஒரு வருஷத்தில் தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு தான் எத்தனை பயனுள்ள பதிவுகள்! அப்படினு நான் பில்டப் குடுத்தா என் வீட்டுக்கு ஆட்டோ இல்ல, சுமோ இல்ல, ஜாமான் செட்டோட லாரியே வரும்! அனுப்பறத்துக்கு பாசக்கார பயலுங்க அமெரிக்காவுல கூட நிறைய பேரு இருக்காங்க!னு எனக்கு நல்லா தெரியும்.

இந்த ஒரு வருடத்தில் என்ன எழுதி கிழித்தாய்? என்று கேட்கும் எதிர் கட்சியினருக்கு (யாருப்பா அது?) நான் ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன்!

"அரைச்சா தான் மாவு!
அடிச்சா தான் தக்காளி!"

(ஆமா! தமிழ்ல எதுகை மோனையோட பேச தெரிஞ்சா இங்கே தலைவர்கள் ஆயிடலாமே, கட்சிக்கும் கொள்கைக்கும் சம்பந்தமா தான் பேசனுமா என்ன?)

ஆரம்ப காலங்களில், கீதா மேடமிடம், எனது அருமை சகோதரி, சியாட்டல் சிங்கம், அவரது ரங்கமணியின் சிம்ம சொப்பனம், கழக கட்டிங்க் பிளயர்! (போர்வாள் தான் இருக்கனுமா என்ன?) 'பாயிண்டர்ஸ்' புகழ் பொற்கேடி ஸாரி, பொற்கொடியும், நானும் டியூஷன் எடுத்துக் கொண்டு மொக்கை பதிவுகள் போட கற்று கொண்டோம். ஆனாலும் மேடத்தை மிஞ்ச முடியலை! முடியவும் முடியாது! என்று மனபூர்வமாக ஒத்துக் கொள்வதில் நான் ஆனந்தம் அடைகிறேன்! :)

நான் நினைத்திருந்தால் இந்த ஒரு வருடத்தில் நூறு மொக்கை பதிவுகள் போட்டு சங்க நாதம் செய்திருக்கலாம். இதை தானா இந்த பிளாக்கர் உலகம் விரும்புகிறது?


பிளாக் எழுதறதுக்கு தான் எனக்கு ஆபிஸ்ல சம்பளம் தரா!னு நான் ரொம்ப நாளா நினைச்சுண்டு இருந்தேன். இல்லைடா அம்பி! ஆணி பிடுங்கவும் தான் சம்பளம்(யாருப்பா அது தண்டச் சம்பளம்!னு வாசிக்கறது?)னு கொஞ்ச நாள் கழிச்சு தான் தெரிய வந்தது.


எனக்கு கடை இருக்கறது எங்க மேனேஜருக்கே தெரியும். "ராஜா! கண்ணு! என் செல்லம் இல்ல! இங்க்லீஸ்ல எழுதுப்பா!"னு சொல்லி பாத்தாங்க. அஸ்கு புஸ்கு! எழுதறதே உங்கள பத்தி தானே!னு நான் உண்மைய சொல்ல முடியுமா என்ன?

இந்தா! அந்தா!னு ஒரு வழியா ஆபிஸ்ல பிராடக்ட்டை ரீலீஸ் பண்ணியாச்சு!
இனிமே கிளயண்ட் காறி துப்பற வரைக்கும் கவலையில்லை.

பெங்களூருக்கு என்னை பார்க்க வரும் போது மறக்காமல் எனக்கு பிடிச்ச பால் திரட்டிப்பால் வாங்கி வந்த கீதா மேடம், சாம்பு மாமா, கண்ணை இமை காப்பது போல என் தங்கமணியை காத்து வரும் எஸ்கேஎம் அக்கா, என்னை தன் மகனை போல அன்பு காட்டிவரும் திராச(TRC) சார் - உமா மேடம், தவறாது மெயில் பண்ணும் பக்கா திருடன்(தமிழன்) கோபி, சென்னை மாமி, சென்னையில் நடந்த மாபெரும்(?) பிளாக்கர் மாநாட்டில் கலந்து கொண்ட 'திருப்பாவை' புகழ் வேதா(ள்), சியாட்டல் போய் பாயின்டர்ஸ் படிப்பதில் மட்டுமே ரொம்ப பிஸியாக இருந்தாலும்(?) தவறாது எனக்கு மெயில் பண்ணும் பொற்கொடி, தினமும் எனக்கு மெயிலில் கொடுமை அளிக்கும் லண்டன் உஷா, சமயல் குறிப்பு சொல்லும் விஜி, ஜிமெயிலில் மிரட்டும் சுபா, என்னை (பரமார்த்த)குருவாக ஏற்றுக் கொண்டு ஒரு ஷிஷ்ய பரம்பரையை உருவாக்கி வரும் ஆஸ்திரேலியா கோப்ஸ், விரைவில் ஹைதராபாத் மறுமகளாக போகும் 'கண்ணாளனே' புகழ் ப்ரியாலு, நானூறு அடித்த(பதிவுகளை சொன்னேன்பா!) கார்த்தி, தினமும் குட்மார்னிங்க் மெயில் அனுப்பும் சகோதரி தீக்ஷன்யா, எனதருமை நண்பன் அர்ஜுனா, தவறாது வரும் மருதம், பொன்னரசி, எண்ணெய் கத்த்ரிக்காய் புகழ் அருண், தீடிரேன கவிதை எழுதும் ஜி3 அக்கா, அமெரிக்காவிலிருந்து அன்போடு என்னை பார்க்க வந்த கன்யா, குழந்தை வளர்ப்பில் குதித்திருக்கும் ஷ்ரியக்கா, சோடி போட்டு பாடிக் கலக்கும் கிட்டு மாமா & மாமி, நாட்டமை' ஷ்யாம், பெங்க்ளூரில் என்னை சந்தித்து உரையாடிய கில்ஸ்...

ஸ்ஸ்ப்பா! மூச்சு வாங்குது பா! ஜோடா ஒடைச்சு தாங்க பா!

(க்ளக்! பிளக்! க்ளக்! பிளக்! க்ளக்! பிளக்!)

என்னை வெச்சு காமெடி பண்ணும் ரவி, ஆபிஸில் கோல்மால் மட்டுமே பண்ணும் கோபாலு, அதி காலை மூனு மணிக்கு, இரவு 12 மணிக்கெல்லாம் என் பிளாக்கை படிக்கும் மை பிரண்ட், மனோஜ், கவிதை எழுதி கலக்கும் டீரிம்ஸ், அமெரிக்காவில் இருந்து என்னை அன்போடு நலம் விசாரிக்கும் ராமச்சந்திரன்,

"அர்ஜுனருக்கு ஒரு கண்ண பரமாத்மா! " போல என்னை வழி நடத்தும் அருமை அண்ணன் டுபுக்கு, எவ்வளவு அடிச்சாலும் தாங்கும், தனக்கென்று ஒரு பாணியில் எழுதும் கைப்புள்ள அங்கிள், பக்கத்து போர்ஷனில் என்னை குடி வைத்து சொந்த செலவில் சூனியம் வைத்து கொண்ட டுபுக்கு டிசைப்பிள், தீபிகா புகழ் பாடும் பரணி, பிசியா இருக்கும் பாலமுருகன், குட்டி(சுவரு), ஆண்களுக்கு பெல்ட் ஐடியா அளிக்கும் சுமதி, என் திருமணத்துக்கு அமெரிக்காவிலிருந்து வருகை புரிந்து ஆயிரம் டாலர்(முருகன் டாலர், ஐயப்பன் டாலர் இல்ல) மொய் எழுத துடிக்கும் ஹேமாக்கா மற்றூம் சுசிக்கா, என பிளாக் மூலம் கிடைத்த நல்ல உள்ளங்களின் லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது. யார் பெயராவது விட்டு போயிருந்தால் குழந்தையை மன்னிக்கவும்.
என்னை உங்கள் வீட்டு குழந்தையாக, சரி பிள்ளையாக, அன்பு காட்டிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி ஹை!னு சொன்னால் அது ரொம்ப சின்னதாக இருக்குமே?....

Friday, February 16, 2007

ஓம் நம சிவாய!


அன்னைக்கு நவராத்திரி என்றால், அய்யனுக்கு இன்று சிவராத்திரி! மாசி மாதம் தேய்பிறை சதுர்தசியில் வருவது தான் சிவராத்திரி.
******************************************************************************
உலகாளும் மன்னனுக்கு உறக்கம் வரவில்லை. எப்படி வரும்? விடிந்தால் அவன் பார்த்து பார்த்து கட்டிய சிவ ஆலய குடமுழுக்கு ஆயிற்றே! எல்லா ஏற்பாடும் தயார் நிலையில். வீதியேங்கும் வண்ண கோலங்கள் என்ன, வான வேடிக்கைகள் என்ன! வேத மந்திரங்களின் கணீர் ஓசை என்ன! சத்திரங்களில் 18 வகை பதார்த்தங்களுடன் வந்தவருக்கு எல்லாம் உணவேன்ன! என்று நாடே திமிலோகப்பட்டது.

"மன்னா! இதை மாதிரி ஒரு ஆலயம் இந்த உலகில் இதுவரை எவரும் கட்டியதில்லை, இனி கட்டப்போவதும் இல்லை!" என்று தலமை சிற்பி இறுமாப்புடன் சொன்ன சொற்கள் மன்னனின் காதில் தேனாய் பாய்ந்ததில் வியப்பேன்ன? நடு ஜாமம் மூன்றாம் நாழிகையிலும் மன்னன் உறங்காமல் புரண்டு படுத்தான்.

எல்லாம் முகஸ்துதி படுத்திய பாடு!

"விடிந்தால் என் லக்ஷியம் நிறைவேறி விடும். உலகை ஆளும் ஈசனுக்கு நான் ஆலயம் எடுத்து விட்டேன்! என வரலாறு இதை பதிவு செய்து விடும்". மெதுவாக கர்வம் அங்கே தலைதூக்கியது.

களைப்பு மிகுதியால் மன்னவனும் கண்யர்ந்தான்.

கனவில் தோன்றினான் பசுபதி நாதன்.






பாராளும் மன்னனே! நாளை நீ எமக்கு அமைத்த ஆலயத்தில் யாம் குடி பெயற இயலாது. அன்பன் ஒருவன் இதே நாளில் கோலாகலமாக குடமுழுக்கு ஏற்பாடு செய்துள்ளான். வேறு முஹூர்த்தம் பார்த்து கொள்! முடிந்தால் நீயும் அந்த விழாவில் கலந்து கொள்!

உறக்கம் கலைந்து துள்ளி எழுந்தான். குழப்பத்தில் ஆழ்ந்தான்.

யாரங்கே! கூட்டடா மந்திரி சபையை!
நாலாம் ஜாமம் முடிவில் அவசர கூட்டமா? என்ன நேர்ந்தது?

ஆனாலும் கூப்பிட்டது மன்னன், தலைபணிந்தது அரசவை.

"என் நாட்டில் இன்னொரு குடமுழுக்கா? யாரது? எங்கே? எப்படி எனக்கு தெரியாமல்? ஒற்றர் படை உறங்கி விட்டதா? விரைவோம் ஈசன் சொன்ன அனபரது இருப்பிடத்துக்கு!" - அதிகாரம் சாட்டையை சொடுக்கியது.

சாதாரண குடில். குடமுழுக்குக்கான அறிகுறி எதுவும் இல்லை.

யாரது வீட்டில்?

என்ன விஷயம்? பாராளும் மன்னன் பரதேசி என் வீட்டு வாயிலில்...?

கனவின் விவரம் அறிவிக்கப்பட்டது. கையது பொத்தி, கண்ணீர் மலகி மெய்யொழுக வாய் திறந்தார் அன்பர்.
மன்ன! நீங்கள் கட்டிய ஆலயம் பார்த்து அன்பனும் ஆசை கொண்டேன்.

"உள்ளம் பெருங்கோவில்!
ஊண் உடம்பு ஆலயம்!
கண்ணிரன்டும் தூங்கா மணி விளக்கு!" எனவும்


நெஞ்சகமே கோவில்!
நினைவே சுகந்தம்!
அன்பே மஞ்சன நீர்!
பூஜை கொள்ள வாராய் பராபரமே! என்று உருகி அழைத்தேன். அதற்க்கு தானோ என்னவோ நம் ஈசன் தலை சாய்த்து இருக்கிறான்.


"நட்ட கல்லை தெய்வம் என்று
நாலு புஷ்பம் சாத்தியே
சுற்றி வந்து முனுமுனுவென்று
சொல்லும் மந்திரம் ஏதடா?

நட்ட கல்லும் பேசுமோ நாதன்
உள்ளிருகாயில்?
சுட்ட சட்டி சட்டுவம்
கறிச்சுவை தான் அறியுமோ?"

- சிவ வாக்கியர் (சித்தர் பாடல்கள்)


அன்பரது தாள் பணிந்து வணங்கியது அதிகாரம்.



படோப பூஜைகள், அபிஷேகங்கள், தூப தீப வழிபாடுகள் என மனம் லயிக்காமல் ஸ்வாமி கும்மிடுவதை விட மனமுருகி நாலு வில்வம் சாத்தினால் நாதன் செவி சாய்க்காமலும் இருப்பானோ?


இந்த சிவ ராத்திரி நன்னாளில் " நெட் கனெக்க்ஷன் வரலை! பிளாக்கர் பப்ளிஷ் ஆகலை! போட்ட போஸ்ட்டுக்கு கமண்ட் வரலை! போன்ற முக்கியமான உலக கவலைகளை சிறிது தள்ளி வைத்து சூடான பில்டர் காப்பியையும் மறந்து ஈசன் நினைவும் கொள்வோமே! :)
பி.கு: இந்த பதிவை படித்து விட்டு "எலேய் அம்பி! மெய்யாலுமே நீ தானா இப்படி போஸ்ட் போட்டது? உன் லிங்க் தானா?னு செக் பண்ணினேன்!" அப்படினு என்னை வெச்சு காமடி, கீமடி எதுவும் பண்ண படாது. இப்பவே சொல்லிட்டேன் ஆமா!
எனக்கும் அப்பப்ப கொஞ்சம் நல்ல புத்தி வரும்.
ஓம் நம சிவாய!ஓம் நம சிவாய! ஓம் நம சிவாய! ஓம் நம சிவாய!

Friday, February 09, 2007

நடந்தாய் வாழி காவேரி!



மண், பெண், பொன் இவை மூன்றுக்கும் சண்டையிட்ட மனித இனம் தண்ணீருக்கும் சண்டையிட தவறியதில்லை. (ஷ்யாம், தண்ணினா நிஜமான தண்ணி, பகார்டியோ, பேக்பைபரோ இல்லை)

17 வருஷமா 600 முறை கூடி பேசி சும்மா ஜவ்வா இழுத்து காவேரி நதி விஷயத்துல ஒரு தீர்ப்பை சொல்லிட்டாங்க. வழக்கம் போல ஜிலேபி தேசம் " நாட்டாமை!(ஷ்யாம் இல்லை) தீர்ப்பை மாத்தி சொல்லு!"னு கத்திடாங்க. தமிழக பஸ்கள் வர/போக முடியலை, ரோடு எல்லாம் மறியல், அம்மா டிவி, (கிராண்ட்)சன் டிவி எல்லாம் கட். பந்த் வேற நடக்க போகுது. ஒரே கும்மமேளா தான்!

இந்த தடவை பாதுகாப்பு ஏற்பாடுகளை கொஞ்சம் நன்னா பண்ணிருந்ததால அதிகம் சேதம் இல்லை, (இதுவரைக்கும்).

"அம்பி! இந்த தடவை உன்னை தான் நாலு சாத்து சாத்துவா! எங்களை அடிக்க மாட்டா! - இது எங்க ஆபிஸ்ல இருக்கற ஒரு ரசகுல்லாவின் அல்ப சந்தோஷம்.

இந்த தடவை உஷாரா பிரட், பிஸ்கட் எல்லாம் முன்னாடியே வாங்கி வெச்சுட்டேன். இல்லைனா ஹிஹி,இருக்கவே இருக்காங்க நம்ப டுபுக்கு டிசிப்பிள்.

சரி, மேட்டருக்கு வருவோம்.

1) இப்ப நாஸிக்குல நோட்டு அடிக்கறாங்க, அதுக்காக எங்களுக்கு போக தான் மீதிய இந்தியாவுக்கு அனுப்புவோம்!னு அந்த ஊர்காரங்க சொன்னா எப்படி இருக்கும்?

2) நம்ப நெய்வேலில கரிய தோண்டி அனல் நிலையம் மூலமா மின்சாரம் தயாரிச்சு அனுப்பறாங்க. எங்களுக்கு தான் எல்லாம்!னா சொல்றோம்?

என்ன இது சிறு பில்லத்தனமா இல்ல இருக்கு..?

இது போதாது!னு நம்மூர்ல இருக்கற கழக கண்மனிகள்
"கன்னடம் வென்றாய்!
காவேரி தந்தாய்!
கழகம் காத்தாய்!
கத்ரிக்காய் பொரித்தாய்!"னு போஸ்டர் அடிச்சா இங்க எங்களுக்கு ரிவிட்டு அடிப்பாங்க.அதனால கொஞ்சம் அடக்கி வாசிங்கண்ணா!

இயற்கையின் மீது உரிமை கொண்டாட வேண்டாம். பதிலுக்கு இயற்கையும் நம் மீது உரிமை கொண்டாட ஆரம்பித்து விட்டால்
"பினாமி வைத்திருப்பவன் கூட
சுனாமியில் போய் சேர வேண்டியது தான்! அப்புறம்
அனானி கமண்ட் கூட கிடைக்காது!"

நைல் நதி, கங்கைகரை, தாமிரபரணி(எங்க ஊர விட்டு குடுக்க மாட்டோம் இல்ல) என நதிக்கரைகளில் தான் மனித நாகரீகம் தழைத்து வளர்ந்தது. அந்த நதியை வைத்தே இன்று மனிதன் மாக்களாய் மாறி சண்டையிடுவதை நினைத்தால் நாம் வெட்கப்படனும், வேதனைப்படனும். ஆனா பாருங்க நிறைய பேரு ஹையா! பந்த்! ஒரு நாள் லீவு! ஜாலி!னு குதிக்கறாங்க.

இந்த தீர்ப்பு வரதுக்கே 17 வருஷம் ஆயி போச்சு! இதுக்கு தான் நம்ப சின்ன கவுண்டரை தீர்ப்பு சொல்ல சொல்லி இருந்தா பத்து நிமிஷத்துல தோளுல துண்ட மாத்தி போட்டு தீர்ப்பு சொல்லி இருப்பாரு! இத நான் இங்க சொன்னா நாலு சாத்து சாத்துவானுங்க! எதுக்கு வம்பு!
நல்லா தண்ணி காட்றாங்க பா!

பி.கு: காதலர் தின ஸ்பெஷல் - உலக பிரவுசர்களை கலக்க வருகிறது ஆதலால் பிளாக் எழுதுவீர் - II

Friday, February 02, 2007

பால் காய்ச்சியாச்சு!





பேச்சிலரா சிவனேனு இருந்த(இருக்கற) இந்த குழந்தைய வசமா மாட்டிவுட்டுடாங்க. இது வரைக்கும் சின்னதா ஒரு ரூம்ல இருந்த நான் இனிமே இருக்க முடியுமா? அதுனால, சரி! அழகா, சின்னதா, ஒரு வீடு (இது தங்கமணிக்கு - சின்ன வீடு இல்ல எஜமான்) பாத்துடலாம்!னு முடிவு பண்ணி இந்த ஜிலேபி தேசதுல சுத்தி சுத்தி வந்தேன்.

எல்லா பயலும் வீடு வாடகைக்கு பதிலா வீட்டோட விலையேவே சொல்றான். ஒரு வீட்ட பாக்க போன போது பாதி ரூம் கட்டி முடிக்காம இருக்கே! என்னயா மேட்டர்?னு கேட்டா உங்க கிட்ட அட்வான்ஸ் வாங்கி தான் மீதிய கட்டனும்! எப்படி வசதி?னு பல்ல காட்றான்.

அப்ப தான் கம்பருக்கு ஒரு சடையப்ப வள்ளல் மாதிரி நம்ப
டுபுக்குடிசிப்பிள் என் மேல இரக்கப்பட்டு பொங்கல் அன்னிக்கி சாப்பிட கூப்டாங்க. நமக்கு தான் சோறு கண்ட இடம் சொர்க்கம் ஆச்சே! நைட்டுக்கு பார்சலும் சேர்த்து தருவீங்களா?னு முன்னாடியே போன்ல விசாரிச்சுண்டு அவங்க வீட்டுக்கு போயி சும்மா கட்டு கட்டுனு கட்டிடேன்.

சூப்பரா சமச்சு இருந்தாங்க. (ஹிஹி, ரசத்துல தான் கொஞ்சம் காரம் கம்மி).
அப்ப தான் அவங்க பக்கத்து அபார்ட்மெண்ட் காலி!னு கேள்விப்பட்டு கப்புனு அமுக்கிட்டேன்.
விதி யாரை விட்டது? இனிமே தான் இருக்கு அவங்களுக்கு தலைவலியே!
நல்ல பவுர்ணமி அன்னிக்கி பாலும் காச்சியாச்சு!



அடுத்த போஸ்ட் "வீட்டுக்கு வெள்ளை அடிச்சாச்சு! கக்கூஸ் கழுவியாச்சு!னு எல்லாம் கண்டிப்பா போட மாட்டேன். பயப்படாதீங்க.

ஆகவே மக்களே! இப்ப சொல்லுங்க, பிளாக் எழுதினா உங்களுக்கு என்ன என்ன கிடைக்கும்..?

Next Post: ஆதலால் பிளாக் எழுதுவீர் - II Don't miss it. :)

Saturday, January 13, 2007

பொங்கலோ பொங்கல்!



போன போஸ்டுக்கு நான் தனி தனியா எல்லோருக்கும் பதில் போட முடியலை. ஆபிஸ்ல இன்னும் ஏகப்பட்ட ஆணி பிடுங்க வேண்டி இருக்கு. ஆதலால் மன்னிக்கவும். இதுக்கு நடுவுல போன் கால் வேற அட்டெண்ட் பண்ண வேண்டி இருக்கு, ஹிஹி. நானும் தெரிஞ்ச வரைக்கும் விசாரிச்சு பார்த்துட்டேன், ரிலயன்ஸ், டாட்டா இன்டிகாம், ஏர்டெல்னு எல்லா பயலுகளும் இன்கம்மிங்க் தான் ப்ரீ!னு சொல்றானுங்க. இந்த குழந்தை மேல இரக்கப்பட்டு அவுட்கோயிங்க் ப்ரீ!னு சொல்ல கூடாதா? ஏதோ இந்த ஸ்கைப்!னு ஒன்னு இருக்கறதால தப்பிச்சோம்.

ஆனா சும்மா சொல்ல கூடாது, பய புள்ளைங்க சுத்தி சுத்தி வந்து கும்மி அடிச்சுட்டு போயிருக்கீங்க. சைடு கேப்புல இந்த ஷ்யாம் பயல் "அம்பியின் தங்கமணி யாரு?" யாரு மனசுல யாரு?னு போட்டி வெச்சு 10$ ஆட்டய போட பாக்கறான். :)

சரி, எல்லோருக்கும் எங்கள் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
வழக்கம் போல குக்கரில் சக்கரை பொங்கல், சாலமன் பாப்பையா பட்டிமன்றம், பாவனா பேட்டி, 'குடும்ப குத்து விளக்கு' நமீதா கொண்டாடும் பொங்கல்! உலக தொலைகாட்சிகளில் முதன் முறையாக!னு டிவி முன்னாடி நிறைய நேரம் கழிக்க வேண்டாம்.

Tuesday, December 19, 2006

ஹேப்பி பர்த்டே டியர் ஆஞ்சேனேயா!




டிசம்பர் 20 - மார்கழி மாதம் - மூல நக்ஷத்திரம் வாயு குமாரன், அஞ்சனா மைந்தன், ஷ்ரிராம தூதன், அடக்கமே வடிவானவன், சொல்லின் செல்வன், கூப்பிட்ட குரலுக்கு மனோ வேகத்தில் ஓடி வருபவன், என் நெஞ்சில் என்றும் குடி கொண்டு இருக்கும் ஆஞ்சேனேய ஸ்வாமி அவதரித்த திரு நாள்.

இவரை பற்றி எழுத இந்த ஒரு பதிவு போதாது! தன்னடக்கம் என்றால் அது ஆஞ்சேனேயர் தான்!

அயோத்தி மா நகரம் திருவிழா கோலம் பூண்டு இருந்தது. ஆம்! 14 வருடங்கள் கழித்து அவர்கள் உள்ளம் கவர் ரகு வம்சத்தில் உதித்த ஷ்ரிராமன் மரவுரி களைந்து ராஜாராமனாக வெண் பட்டுடை அணிந்து, நெற்றியில் சூரிய திலகம் இட்டு, மார்பில் முத்து மாலைகள் அசைய, பரந்து விரிந்த தோளில் சிவப்பு நிற அங்கவஸ்தரம் புரள, ஒரு கையில் கோதண்ட வில்லும், மறு கையில் ஒர் அம்புமாக சீதா தேவி இடப்புறம் அமர சிம்மாசனத்தில் அமர்ந்து வசிஷ்டர் தலமையில் வேத மந்த்ரங்கள் முழங்க பஞ்ச வாத்தியங்கள் முழங்க, ரகுகுலத்தின் நவரத்ன கீரீடத்தை தன் திருமுடியில் சூட்டிக் கொள்ளும் திருநாள்.


ஒரு புறம் உருவிய வாளுடன் லக்ஷ்மணனும் சத்ருகனனும் மெய்காப்பாளர்களாக நிற்க, மறு புறம் கூப்பிய கைகளுடன் பரதன், விபீஷணன், சுக்ரீவன், அங்கதன், ஜாம்பவான் ஆகியோர் நிற்க, எல்லார் கண்ணும் தேடுகிறதே யாரை..? எங்கே ஷ்ரிராமனின் தாசன் அனுமான்..?

இதோ,ஷ்ரிராமனின் திருவடிகளில் கண்ணீர் மள்க கூப்பிய கரங்களுடன், மண்டியிட்டு "இந்த காண கிடைக்காத காட்சியை காண தானே பிரபு, இந்த அடியவன் காத்திருந்தேன்! என்று என் தலைவன் பவ்யமாக அமர்ந்து இருக்கிறான்.

சூரிய பகவானிடம் 4 வேதங்களையும் கற்க அவருடன் சரிசமமாக பயணம் செய்து குருகுலம் பயின்ற அந்த தீக்கொழுந்தா இவன்..?

விஸ்வரூபம் எடுத்து கடலை சர்வ சாதாரணமாக தாண்டிய அந்த உருவமா இது..?

ராவணன் முன்னால் கம்பீரமாக வாலினால் சிம்மாசனம் போட்டு அமர்ந்த அந்த அனுமனா?

இலங்கைக்கு தீ வைத்து விட்டு சற்றும் தளர்வடையாமல் பறந்து வந்து, "கண்டேன் கற்பின் கொழுந்தை!" என சொன்ன அந்த சொல்லின் செல்வனா இவன்..?

பட்டாபிஷேகம் முடிந்ததும், அவரவர்க்கு பரிசுகளை வாரி வழங்கிய ஷ்ரிராமனை பார்த்து சீதா தேவி, ஸ்வாமி! அனுமனை மறந்து விட்டீர்களே?என்று கேட்க, ராமனும் இல்லை ப்ரியே! அவனுக்கு குடுக்க என்னிடம் ஒன்றுமே இல்லையே! என்று தான் யோஜனை, இருந்தாலும் நமது கல்யாணத்தில் அணிந்த முத்து மாலையை அளிப்போம்! என்று அனுமனுக்கு அளிக்கிறார்.

அதோடு, சிரஞ்சீவி(எலேய் ஷ்யாம்! தெலுங்கு நடிகர் இல்லை) பட்டத்தையும் அளித்து, எங்கேல்லாம் ராம நாமம் சொல்லபடுகிறதோ அங்கெல்லாம் அனுமன் இருந்து அதை காது குளிர கேட்க்கும் வரத்தையும் அளிக்கிறார்.

இந்த பதிவையும் எனது தலைவன் அனுமன் கண்டிப்பாக படித்து பூரிப்பான்! ஹிஹி, கமெண்ட்டும் போடுவான். :)
அதனால் தான் ராமர் பட்டாபிஷேகத்தை பற்றி விரிவாக எழுதி உள்ளேன். ஹேப்பி பர்த்டே தல!

1) முதன் முதலாக Open heart surgery பண்ணி தனது நெஞ்சில் ராமரை காட்டியது எனது தங்க தலைவன் தான்!

2) முதன் முதலாக கூரியர் சர்வீஸை அறிமுகபடுத்தி ராமரின் கணையாழி, சீதையின் சூடாமணியை பத்ரமாக அவரவரிடம் சேர்த்தவன் என் தல தான்!



3) முதன் முதலாக பறக்கும் ஆம்புலன்ஸை(சஞ்சீவி மலை) அறிமுகப்படுத்தியது நீங்க தானே தல!

4) முதன் முதலாக பாஸ்போர்ட், விசா இல்லாமல் இமிக்ரேஷனில் மாட்டிக்காமல் பயணம் செய்தது என்னுடைய தல தான்!

5) அவர் பிரம்மசரிய விரததில் இருந்தாலும், தனது வாலில் பொட்டு வைக்கும் பெண்களுக்கு(பிகர்களுக்கு!னு வாசிக்கப்படாது ஷ்யாம்!) திருமணம் நடத்தி வைக்கிற அவரது பெருந்தண்மை தான் என்னே!

இந்த நாள் வரை அனுமனை வழிபடாமல் எந்த காரியமும் செய்த்ததில்லை, அவரும் என்னை கைவிட்டதில்லை. இதோ இந்த வருடம், அவரது அருள் எனக்கு பரிபூரணமாக கிடைத்து உள்ளது! சென்னையில் மழை பெஞ்சு இருக்கா?னு பார்க்க போன நான் சனிகிழமை நங்க நல்லூர் ஆஞ்சேனேயர் கோவிலுக்கும் சென்று பிரார்த்தனை நிறைவேற்றி வந்தேன்!

45 நாட்கள் சுந்தர காண்டம் படித்தால் நமது நியாயமான விருப்பங்கள் கண்டிப்பாக நிறைவேறும்! என்று என் அம்மா சொல்லி இருக்கிறார்கள். இந்த சுந்தர காண்டத்தின் சிறப்பை பற்றி தனியாக ஒரு பதிவு போடலாம்! என்று ஆசை. அனுமார் கருணையினால் நடக்கும் என்று நம்புகிறேன்.

எத்தகைய உயர்ந்த பதவியில் இருந்தாலும், லட்சம் கோடி சம்பாதித்தாலும், தன்னடக்கத்தையும் பவ்யத்தையும் அந்த அனுமன் நமக்கும் தரட்டும்! என்று வேண்டிக் கொள்கிறேன். ஜெய் ஷ்ரிராம்! ஜெய் ஆஞ்சேனேயா!


பி.கு:    விரைவில் வெளிவருகிறது "ஆதலால் பிளாக் எழுதுவீர்" உலகமெங்கும்!

Wednesday, December 13, 2006

நன்றி ஹை!



இந்த குழந்தையின் பிறந்த நாளை கரக்ட்டா நினைவில வெச்சுண்டு வாழ்த்தின அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி ஹை!

வெறும்ன நன்றி சொன்னா நன்னாவா இருக்கும்? அதுனால எல்லாருக்கும் கேக்.


வழக்கமா அல்வா தான் குடுக்கனும்!னு கூகிளில் தேடினேன். இன்னும் கிண்டலையாம். அதுனால இத வெச்சு அட்ஜ்ஸ்ட் பண்ணிக்கோங்க.

எனக்கு நைட் 12 மணிக்கு கமேண்ட் போட்ட G3 அக்காவுக்கு ஸ்பெஷலா ஒரு கேக்.



கைப்புள்ள அங்கிள்! உங்களை மறப்பேனா? அதுனால உங்களுக்கு ஒன்னு!


இன்னும் ஆபிஸ்ல, வேலை எல்லாம் செய்ய சொல்றா! பிளாக் எழுதலைனா நமக்கு கையும் காலும் எதோ Beer கண்ட பெங்களுர் குடிமகன் போல என்னவோ பண்றது. சீக்ரமே திரும்பி வரேன்.

உங்கள் அபிமான பிரவுஸர்களில் விரைவில் எதிர்பாருங்கள்! "ஆதலால் பிளாக் எழுதுவீர்!"

Wednesday, November 29, 2006

அக்கடானு நாங்க பிளாக் படிச்சா....





ஆபிச்ல எக்கசக்க வேலை. 3 வாரத்துல Beta product ரிலீஸ்!னு குண்டை தூக்கி போட்டுட்டார் மேனேஜர்.


குழந்தை(me only) ஆடி போயி இருக்கு.

வெந்த புண்னுல வேல பாச்சற மாதிரி நான் இந்த பிளாக் படிக்கறதை எப்படியோ மோப்பம் புடிச்ச நெட்வொர்க் அட்மின், ஆப்பு அடிச்சுட்டான். இதுக்கேல்லாம் அஞ்சுவானா இந்த அம்பி?

ப்ராக்ஸி(proxy) போட்டு டகால்டி பண்ணி சமாளிச்சுண்டு இருக்கேன். பிளாக்கர் - பீட்டா வெர்ஷனுக்கு மாறின புண்ணியவான்கள் சைட்டில்(பிளாக் சைட்டை சொன்னேன்) கமெண்ட் போட முடியலை. தப்ப எடுத்துக்க வேண்டாம்.

இதுக்கு நடுவுல, திடீர்னு சென்னைக்கு வேற இந்த வார கடைசில போக வேண்டி இருக்கு. சென்னைல மழை எல்லாம் எப்படி பெஞ்சு இருக்கு?னு சும்மா பார்த்துட்டு வரலாம்!னு தான். வேற ஒன்னும் இல்லை. ஹிஹி.

வழக்கம் போல TRC சார் வீட்டுல தான் டேரா. இல்லைனா பாவம், அவர் வருத்தபடுவார் இல்ல? ஹிஹி.

நான் ஏதோ அவர் வீட்டுல போயி 3 வேலை மூக்கு முட்ட அமுக்க போறதா எதிர் கட்சிகள் அவதூறு பரப்பலாம்! அவர்களுக்கு இந்த தருணத்தில் நான் ஒன்று சொல்லி கொள்ள விரும்புகிறேன்!
"எங்கள் உறவை யாராலும் பிரிக்க முடியாது! ஆட்ட முடியாது! அசைக்க முடியாது! (TRC சார்! கவுத்திராதீங்க, இந்த தடவை பஜ்ஜி உண்டா?)

முடிந்த வரை உங்கள் பதிவுகளை நேரம் கிடைக்கும் போது படிக்கிறேன். நிலைமை கொஞ்சம் சரியாகட்டும், பீனிக்ஸ் பறவையாய் மீண்டும் வருவேன்.

Friday, November 17, 2006

குட் மார்னிங்க் மிஸ்ஸ்!






பக்கத்து கம்பெனியில் இருந்து வந்த இந்த மெயிலை பாத்துட்டு எங்க டீம்ல ஒரே அமளியாயிடுத்து. சே! நாமளும் Children's Day கொண்டாடி இருக்கலாம்!னு ஒரே ஆதங்கம்.




டீம்ல இருக்கற ஒரு வானரம் சொல்றது, நாம எல்லாம் ஸ்கூல் போற அளவுக்கு இன்னும் வளரல! அதனால கிண்டர் கார்டன் ரேஞ்சுக்கு தான் டிரஸ் பண்ண முடியும். 4.5 ஆரோக்யா பாலை பீடிங்க் பாட்டிலில் விட்டு இந்த அம்பி கையில குடுத்து நாமளும் ஒரு போட்டோ எடுத்து அந்த ஆபிஸ்க்கு பதில் மெயில் அனுப்பினா தான் என் மனசு ஆறும்!

அதுக்கு நான் சொன்னேன், அப்படி மட்டும் நடந்தா உலகம் அழிஞ்சிடும்!

என்னை ஓட்டறது!னா எங்க டீம்ல எல்லோருக்கும் செம குஷி. நாம மட்டும் என்ன ஒழுங்கா என்ன? சான்ஸ் கிடச்சா மேனஜேரையே ஓட்டிடுவோம் இல்ல? :)

சரி, இந்த வாரம் இவ்வளவு தான்! வர்ட்டா? :)

Saturday, November 11, 2006

ரெடி! ஷ்டார்ட்! ஒன்..டூ..த்ரி...!



கதை, கவிதை!னு பட்டய கிளப்பும் பவித்ரா சிஸ்டர் நம்மை எழுத சொன்ன பதிவு இது!

3 Smells I love:

என்ன தான் நாம் ஏலக்காய், கிராம்பு எல்லாம் போட்டு சர்க்கரை பொங்கல் செய்தாலும், அது கோவிலில் நைவேத்யம் ஆகி, சுட சுட நம் கையில் வரும் போது வித்யாசமாக ஒரு நறுமணம் வீசுமே! அந்த தெய்வீக நறுமணம்.

சிறு குழந்தைகளை குளிப்பாடி, அதன் மேல் ஜான்ஸன் பவுடர் எல்லாம் போட்டாலும், அந்த பவுடரை மீறி ஒரு வாசனை வருமே! அது சூப்பர்.

முல்லைப்பூ அல்லது பிச்சிப்பூ (இரண்டும் ஒன்று தானா?) வாசனை. அதுவும் இந்த பூச்சரங்கள் இருக்க வேண்டிய தலையில் இருந்தால், டாப்பு டக்கர். (ஹிஹி)



3 Smells I hate:

பீடி சிகரெட் வாடை. சே! குமட்டிக்கொண்டு வரும். இந்த கருமத்தை எப்படி தான் ஊதறாங்களோ?

பான் பராக் வாடை - இந்த ஜிலேபி தேசத்தில் எல்லார் வாயிலும் பான் பராக் தான். கொஞ்சம் கூட இங்கிதம் இல்லாமல் கண்ட இடத்தில் புளிச்!னு துப்பும் அந்த ஜந்துக்களை பார்க்கும் போது நான் மெய்யாலுமே சில வினாடிகளுக்கு அன்னியனாக மாறி விடுகிறேன்.

கொய்யா/பலாப்பழ வாசனை - அது என்னவோ சின்ன வயசுல இருந்தே இந்த ரெண்டு பழங்களோட வாசனைனா அலர்ஜி.

3 Jobs that I have had in my life:

முதலில் ஒரு வருடம் பார்த்த லெக்சரர் வேலை. மிகவும் போர் அடிக்கும் சப்ஜக்ட்ஸை கூட பையன்களுக்கு எப்படி சுவாரசியமாக எடுக்கலாம்?னு தினமும் யோசிச்சு புதுசு புதுசா பல டெக்னிக்குகளை(டகால்டிகளை) பயன்படுத்திய காலங்கள்.

சென்னையில் பார்த்த சாப்ட்வேர் வேலை.

இப்போ பாக்ற வேலை. (நான் ஆபிஸ்ல நிஜமாலுமே வேலை எல்லாம் செய்றேன்!னு என் தம்பி கூட நம்ப மாட்டேங்கறான்.)

3 Movies that I could watch over and over:

தில்லுமுல்லு - தேங்காய் சீனிவாசன் ரஜினியை இன்டர்வியூ பண்ணூம் சீன், எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காது.

தில்லானா மோஹனாம்பாள் - "அடேங்கப்பா! ஆட்டம் ரொம்ப ஜாஸ்த்தியா இருக்கே!"னு பாலையா நக்கல் விடுவாரே! அப்படி ஒரு படம் இப்ப எல்லாம் சான்ஸே இல்லை.

காதலிக்க நேரமில்லை(படம் பெயரை தான் சொன்னேன்) - இங்கேயும் பாலையா தான் பட்டய கிளப்புவார்.

3 Fond memories:
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் எனது முதல் நாள். நெல்லையில் படித்த எனக்கு அந்த கல்லூரியின் பிரமாண்டம், பழமை, மக்கள் எல்லாரையும் பார்த்து ஒரு வித மலைப்பு, பிரமிப்பு, படபடப்பு. பட்டிகாட்டான் யானையை பார்த்த மாதிரி. ரெண்டே நாள் தான், அப்புறம் நம்ப வால்தனத்தை ஸ்டார்ட் பண்ணிட்டோம் இல்ல?

என் முதல் கம்பெனியின் கடைசி நாள். நான் கிளம்பும் போது அங்கே இருந்த ஆபிஸ் பாய் கண்களில் துளிர்த்த கண்ணீர் துளிகள். "இனிமே எங்கிட்ட எல்லாம் யார் சார் பேசுவாங்க?"னு சொன்ன அவரின் வார்த்தைகள். ஒரே பீலீங்க்ஸ் ஆப் இந்தியாவா போச்சு!

ஒரு மாதம் முன்னாடி எங்க மேனேஜர், "தமிழ்ச் சங்கம் தீர்த்து வைக்க முடியாத ஒரு சந்தேகததை, இந்த அம்பி தீர்த்து வெச்சுபுட்டான்!"னு சொல்லி டீம் மீடிங்க்ல ஒரு பெரிய காட்பரீஸ் சாக்லேட் குடுத்தாங்க. ரூமை விட்டு வெளியே வந்ததும் வழக்கம் போல பஞ்சாபி தட்டி பறிச்சுடுச்சு! :(

3 Jobs I would love to have:
மறுபடி கல்லூரி வேலை. நம்மால முடிஞ்ச அளவு சமூகத்தில நாலு நல்லது செய்யனும்.அவ்ளோ தான்!

3 Things I like to do:

சின்ன குழந்தைகளோடு என் பொழுதை இனிமையாக கழிப்பது.

நேரம் கிடைக்கும் போது இந்த பிளாக் எல்லாம் படிக்கறது,(இத தானே முழு நேரமும் செய்யறது!னு குத்தி காட்ட வேண்டாம்.)

என் உடன்பிறப்புடன் தினமும் ஆபிசில் நடந்த விஷயங்களை பற்றி அரட்டை அடிப்பது.

3 Of my favorite foods:

Butter scotch Ice Cream
தக்காளி சாதம், தயிர் சாதம்
ஹிஹி, கேசரி.

3 Places I would like to be right now:

நெல்லை அகத்தியர் அருவி, பாண தீர்த்த அருவிக் கரைகள்,

மதுரையில் அமைதியான என் தாத்தா வீடு, கடை வீதிகள்.

எனக்கு ப்ரியமானவர்கள் இதயத்தில் எப்பொழுதும்.(டச் பண்ணிட்டேன் இல்ல?).

3 Things that make me cry:

உண்மையானவர்கள்!னு நான் நம்பியவர்கள் புரியும் நம்பிக்கை துரோகங்கள். நான் அதிகம் கண்ணீர் சிந்துவதில்லை.

சரி, மூனு பேரை இழுத்து விட்ருவோம் இந்த தடவை.

1)SKM - எழுத ஒன்னும் இல்லை!னு சொன்னீங்க இல்ல? நல்ல ஹோம்வொர்க், ம்ம் ம்ம், ஒழுங்கா எழுதுங்க.

2) கைப்புள்ளை - தல! நீங்க இந்த அடியவன் வீட்டுக்கு வரதே பெரிசு, ஹிஹி, அதான் ஏதோ என்னால முடிஞ்ச கைங்கர்யம்.

3)கார்த்திக் - இந்த போஸ்ட்டை நீங்க படிச்சு முடிக்கறத்துக்கு முன்னாடி கார்த்திக், என் டேகை எழுதி போஸ்டா போட்ருப்பார் பாருங்க.

Friday, November 03, 2006

சொர்க்கமே! என்றாலும்....



ஒரு வழியா தீபாவளி முடிஞ்சு மறுபடி வந்தாச்சு! திட்டமிட்டபடி முதலில் மதுரைக்கு போய் டிரஸ் எல்லாம் அங்கே எடுத்துண்டு போகலாம்!னு சொல்லி நம்ப சேக்காளி ஒருத்தனையும் கூட கூட்டிண்டு கடை வீதிக்கும் போயாச்சு. முதலில் அம்மாவுக்கு புடவை எடுத்துடலாம்!னு முடிவு பண்ணி புடவை கடைக்கு நுழைஞ்சா ஆண்களை அதுவும் பால் வடியும் முகம் கொண்ட என்ன மாதிரி குழந்தைகளை எல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டா! போலிருக்கு.

தம்பி! வீட்டுலேருந்து விவரம் தெரிஞ்ச யாரும் வரலையா?னு நக்கல் விடறான் கடைக்காரன்.
அப்புறம் போனா போகுது!னு ரெண்டே ரெண்டு புடவைகளை மட்டும் எடுத்து போட்டு செலக்ட் பண்ணூங்க!னு மிரட்றான்.

சரி, இன்னிக்கு இவனை சோடா குடிக்க வெச்சுபுடனும்!னு முடிவு பண்ணிட்டு, கார்டன் புடவைகளின் குவாலிடியில, மெட்டல் ஷிபான் வகை பளபளப்போட, பூனம் சில்க்ஸ் புடவை மாதிரி லேசா, பீக்காக் சில்க்ஸ் மாதிரி பார்டர் டிஸைன் போட்டு மைசூர் சில்க்ஸ் மாதிரி, பகல ஒரு ஷேடு, நைட்ல ஒரு ஷேடு காட்ற மாதிரி டபுள் ஷேடோட இருக்கற மாதிரி காப்பர் சல்பேட் ப்ளூ அல்லது நல்ல மெரூன் ரெட் ஆலிவ் க்ரீன் கலர் பார்டர் (சிங்கிள் சைடு மட்டும்)போட்டு ஒரு புடவை எடுத்து போடுய்யா! பார்ப்போம்!னு சொன்னேன்.

அதுக்கபுறமா அவன் வாயவே தொறக்கலை.

பின்ன என்ன, 4 வருஷமா எங்க அம்மாவுக்கு பார்த்து பார்த்து புடவை எடுக்கற இந்த அம்பிய, ஆபிஸ்ல இருக்கற மேனேஜர் மேடத்துக்கே காஸ்டியூம் ஐடியா குடுக்கற இந்த அம்பிய பார்த்து ரெண்டு புடவையில ஒண்ண செலக்ட் பண்ணு!னு சொன்னா என்ன அர்த்தம்?

ஒரு முக்கால் மணி நேரம், 4 அலமாரிய காலி பண்ணி கடைசியா நான் கேட்ட ஷேடுல (பார்டர் கலர் மட்டும் வேற) ஒரு புடவை கிடைத்து, கிடைதே விட்டது. என்னை விட, அந்த சேல்ஸ்மேனுக்கு ரொம்ப சந்தோஷம்.

அதுக்கபுறமா, பக்கத்து கடையில எனக்கு ஒரு ஜீன்ஸ், ஷர்ட், அப்பா/தம்பிக்கு ஒரு ஷர்ட் வெறும் பத்து நிமிடத்தில் கிடைத்து விட்டது.

இரவே மதுரையிலிருந்து கல்லிடை வந்தாச்சு! தொடர்ந்து மழை பெய்ததால் இந்த தடவை தாமிரபரணிக்கு போக அம்மா 144 தடை உத்தரவு போட்டு விட்டார்கள்.

சரி, வந்ததுக்கு ஒரு வெங்காய சாம்பார் நம் கையால் செய்வோம்!னு வெங்கல கடையில் யானை நுழைந்தது போல கிச்சனை அத களபடுத்தியாச்சு!


நல்லா 4 நாள் அம்மா சமையலை வெட்டியதில், புதுசாக வாங்கி வந்த ஜீன்ஸை அணிய தீபாவளி அன்று சிறிது சிரமப் படவேண்டி இருந்தது. எங்கள் வீட்டில் வாங்கிய நெல்லை அல்வா, பக்கத்து மாமியாத்து தேங்காய் பர்பி, எதிர் வீட்டு மாமி குடுத்த மாலாடு, அத்தையாத்து பாதுஷா, பெரியப்பா வீட்டு மைசூர் பாகு என்று கணக்கு வழக்கில்லாமல் ரைஸ்மில் டபுள் டியூட்டி பார்த்தது.தீபாவளி இஞ்சி லேகியம் வேறு தன் வேலையை காட்ட தொடங்க கார்க் புடுங்கி கொள்ளும் அறிகுறி வேறு பிரகாசமாக தெரிந்தது.

தீபாவளி அன்று, ஸ்வீட் என்ன வேணும்? சேமியா பாயசமா? ரவ கேசரியா?னு அம்மா கேட்க, ஹிஹி, எல்லார் ஓட்டையும் பெற்று தனிபெறும் மெஜாரிட்டியில் எப்போழுதும் போல ரவா கேசரியே வந்தது. (இல்லைனா நடக்கறதே வேற!)


கிலோ கணக்கில் லிஸ்ட் போட்டு வாங்கி வந்த திருனெல்வேலி அல்வாவை ஆபிஸ்ல எல்லோருக்கும் பங்கு வெச்சு குடுத்தது போக எனக்கும், உடன்பிறப்புக்கும் ஆளுக்கு கால் கிலோ தான் தேறியது.

நான் புதுசா நிக்கான் டிஜிட்டல் கேமரா வாங்கி இருக்கேன்!னு உங்க கிட்ட சொல்லாம(பீத்தாம) வேற யாருகிட்ட போய் சொல்லுவேன்?(பீத்துவேன்?)

எங்கள் வீட்டு மேல் மாடியிலிருந்து தொங்கியபடியே மேற்கு தொடர்ச்சி மலையை ஜூம் பண்ணி எடுத்தது.


எங்கள் வீட்டிலிருந்து தாமிர பரணிக்கு போகும் வழியில் உள்ள நெல்வயல்கள்.(இப்போ அறுவடை ஆகி விட்டது.) "என் இனிய தமிழ் மக்களே"!னு எத்தனை பாரதி ராஜா, K.S.ரவிக்குமார் படங்களில் பார்த்திருப்பீர்கள்?


அதோ கிழக்கால தெரியுதே! அந்த வாழைத்தோப்புலிருந்து, மேற்கால தெரியற மாந்தோப்பு வரை எல்லாம் நம்மது தான்! அப்படினு நான் இங்கே அள்ளி விட்டா தோப்புக்கு சொந்தக்காரங்க என்னை தூக்கி போட்டு மிதிப்பாங்க! :)


பி.கு: கல்லிடையை பற்றி இன்னும் தெரிந்து கொள்ள தவறாமல் படியுங்கள் TRC சார் பிளாக்கை. (ஏற்கனவே நாலு போஸ்ட் போட்டுட்டார்!) சீக்கிரம்! சீக்கிரம்! இன்னுமா லேட்டு?

(TRC சார்! குடுத்த காசுக்கு அதிகமாவே கூவியாச்சு! அடுத்த தடவை பஜ்ஜி வேணும்!)

Friday, October 27, 2006

வீர வேல்! வெற்றி வேல்! ஷக்தி வேல்! எமை ஆளும் வஜ்ரவேல்!





தேவர் படை ஒரு புறம், அசுரர் படை மறு புறம். சூரபத்மன் மனம் போல திருச்செந்தூர் கடலும் பொங்கியது. அவனின் மனதில் தோன்றிய எண்ண அலைகள் போல கடலில் தோன்றிய அலைகளும் ஆர்பரித்தது.

"யார் இந்த பாலகன்? பால் மனம் மாறாது, மந்தகாச புன்னகையுடன், கண்களில் குறும்பு தெறிக்க, காதில் மகர குழைகள் ஆட, சிவப்பு பட்டாடை உடுத்தி, கழுத்தில் முத்து மாலைகள் அசைய, கைகளில் ரத்ன கங்கணம் மின்ன, பாதங்களில் பொற்சிலம்புகள் ஒலி எழுப்ப, ஆயிரம் கோடி சூரியனை போல பிரகாசத்துடன் ஒளி பொருந்திய முகத்துடன், எழுத்தாணி பிடிக்க வேண்டிய வயதில்,கையில் வேலுடன் இருக்கும் இவனா என் அசுரர் படையை அழித்தவன்?


சிங்கமுகனை இவன் தான் கொன்றான்! என செய்தி வந்ததே? உண்மையா என்ன? அவனை வெல்ல இந்த உலகில் ஒருவரும் இல்லையே?

சரி, தாரகன் கதி..? இந்திரனையே மண்டியிட செய்தவன் ஆயிற்றே?

இந்த பாலகனை என்னால் எதிரியாகவே பார்க்க முடியவில்லையே? கையேடுத்து வணங்க மனம் துடிக்கிறதே? எங்கே போனது எனது ஆக்ரோஷம்?

சே! நான் கோழை ஆகி விட்டேனா? இவன் யார்? யக்ஷனா? தேவனா? கிங்கரனா? கந்தர்வனா? அற்ப மானிட பதரா?"

குமரன் திருவாய் மலர்ந்தான்,"என்ன அசுரர் தலைவனே! மவுனம் ஏன்? தன்னெஞ்சே தன்னை சுடுகிறதா?
பேராசை பட்டாய், நான் என்ற அகங்காரம் கொண்டாய்! தர்மத்தை மறந்தாய்! தன்னடக்கத்தை துறந்தாய்! அடாத செயல்கள் செய்தாய்! அனுபவிக்கிறாய்!

இப்பவும் ஒன்றும் கெட்டு போகவில்லை. உன் தவறுக்கு வருந்து. தப்பு செய்தமைக்கு மன்னிப்பு கேள்".
"வினாஷ காலே விபரீத புத்தி!" விதி யாரை விட்டது?

"பச்சிளம் பாலகனே! மாயைகள் கற்றவனே! என் தம்பி மார்களை கொன்றாய்! இந்த ஒரு காரணம் போதும்! உன்னை தண்டிக்க. ஆனாலும், இந்த சூரபத்மன் ஒரு பாலகனை கொன்றான்! என்ற பழி வேண்டாம், மன்னிப்பு கேள்! உயிர்பிச்சை அளிக்கிறேன்!" பாவம் ஆணவம் கொக்கரித்தது.

கோபமும், ஆணவமும் தலையெடுத்து விட்டால் அங்கு புத்திக்கு ஏது இடம்?

நான் அப்படி தான் இருப்பேன்! மாற மாட்டேன்! என்னை மிஞ்ச யாரும் இல்லை! எனக்கு யாரும் புத்திமதி அளிக்க வேண்டாம்! என மனம் ஆர்ப்பாட்டம் செய்யும். இதுவரை இனிமையாக பழகியவரும், பகைவராய் தெரிவர்.

சூரன் மட்டும் விதிவிலக்கா என்ன?

ஆனாலும், நமது கந்தன், கடம்பன், குமரன், வேலன், முருகன், அழகன், கார்த்திகேயன், பகைவருக்கும் அருள்வானே!

சூரனை இரண்டாய் பிளந்து, மயிலும், சேவற் கொடியுமாய் மாற்றி எப்போழுதும் தன்னோடு இருக்குமாறு செய்து விட்டானே! அவனது கருணையே கருணை.

நாளை கந்த சஷ்டி திருவிழா!

நான் உடல் வருத்தி, பட்னி எல்லாம் இருந்து, பெரியதாக எந்த விரதமும் இருந்தது இல்லை.

"உடலை வளர்த்தேனே! உயிரை வளர்த்தேனே!"
என்று இருந்து வந்தேன்.

மூன்று வருடங்களுக்கு முன்னால் நான் மிகுந்த கஷ்ட தசையில் இருந்த போது, "முருகா! என் வினையை களைவாய்! என மனமுறுகி ஷஷ்டி விரதம் இருந்தேன். அதுவும் சூரசம்காரம் அன்று மட்டும் தான்!

இதோ இப்பவும் 6 நாட்கள் முருகன் சிந்தனையில் ஆழ்ந்து விட்டேன். என் மனம் எல்லாம் திருசெந்தூரில் நாளை நடக்க இருக்கும் சூரசம்காரத்தில் தான் உள்ளது.


நான் குழந்தையாக இருந்த போது எங்கள் ஊரில் முருகன் காவடி வரும். எங்கள் வீட்டு முன்னால் என் அப்பா முருகன் மேல் மனமுருகி காவடிசிந்து பாட, அழகாக முருகனடியவர் காவடி ஆடுவர். நான் அவர்களுக்கு தாகம் தணிய மோர் அளிப்பேன்.

இப்பவும் நம்மிடையே தலை தூக்கும் அசுரர்களான, நான்! என்ற அகந்தை, ஈகோ, கோபம், பேராசை, உலக இச்சைகள், சோம்பேறித்தனம், எல்லாவற்றையும் அந்த கந்தன் கைவேல் நொறுக்கட்டும்.

கூவி அழைத்தால், குரல் குடுக்காமல் இருப்பானோ அந்த மால் மருகன்?

பி.கு: முதல் கமண்ட் போடுபவர்களுக்கு, முருகன் பேரை சொல்லி அலகு குத்தி விடப்படும். :)


Wednesday, October 18, 2006

நான் சிரித்தால் தீபாவளி!



"வீட்டை கட்டி பார்! கல்யாணம் பண்ணி பார்!" வரிசையில் இனிமேல், "டிக்கட் ரிஷர்வேஷன் பண்ணி பார்!" என்பதையும் சேத்துக்கனும் போலிருக்கு.

ஆபிஸில் நமது லீவு ஸ்டேடஸ் சரியாக தெரியாததால், ரயிலில் முன்பதிவு செய்யமுடியவில்லை. பூசாரி(PL) சாமி(PM) எல்லாம் வரம் குடுத்து முடித்த போது, அடுத்த பொங்கலுக்கு டிக்கட் இருக்கு! பரவாயில்லையா?னு பதில் வந்தது.

சரி, இந்த தனியார் பஸ்ஸில் டிரை பண்ணலாம்!னு முடிவு பண்ணி போயி கேட்டா, ஓடிப் போ! அற்ப பதரே! என்பதையே ரொம்ப டீசண்டா பதில் சொன்னார்கள்.

இனி தமிழ் நாடு பஸ் தான்!னு முடிவு பண்ணி காலையில் பல் தேய்த்த கையோடு, அவசரமாக வந்ததை கூட அடக்கி கொண்டு கியூவில் போயி நின்னாச்சு! (டிக்கட் எடுக்க தான்! வேற எதுக்கும் இல்லை).
ஆந்திரா முன் பதிவு கவுண்டர் காத்தாடியது. குல்டிகள் என்னிகி பஸ்ல போயிருக்கா? H1B விசா எடுத்து அமெரிக்காவுக்கே லாரில போற கோஷ்டி தானே அது?

நம்ப நேரம், எல்லா பயலும் மதுரைக்கு தான் டிக்கட் எடுப்பான் போலிருக்கு. ஒரு சேஞ்சுக்கு இந்த தடவை ஹைத்ராபாத்ல போயி தீவாளி கொண்டாடுங்களேன்!னு பக்கதுல நின்ன கடா மீசை மாமாவிடம் நான் ரவுசு விட்டதில் இடுப்பு பெல்ட்டை தட்டி காட்டினார். ஜாமான், செட்டு எல்லாம் அதுல தான் போலிருக்கு.

இது போதாது!னு முன்னாடி இருந்த சில பயலுகள், இலவச சேவையாக பின்னாடி நின்ன அவுக ஊரு டிக்கட்டுகளுக்கும் சேர்த்து டிக்கட் எடுத்து கொடுத்து சைடு கேப்பில் சாண்ட்ரோ ஓட்டி கொண்டிருந்தனர். ஹைவேஸ்லயே அம்பாசிடர் ஓட்ட முடியாம நாம தவிச்சுண்டு இருக்கோம், சரி விடுங்கோ, பல்லு இருக்கறவன் பக்கோடா திங்கறான்.

ஒரு வழியாக நம்ப முறை வந்து, குறி கேட்க காத்து இருப்பதை போல கவுண்டர் ஆளை நெருங்கினால், அப்ப தான் அவருக்கு டீ வருது. நான் எல்லாம் கழனி தொட்டிய கண்ட கன்னுகுட்டி மாதிரி, சர்ர்ர்ர்!னு ஒரு மடக்கில் டீயை உறிந்து விடுவேன். அவர் என்னடா?னா எதோ நம்ப ஷ்யாம் சரக்கு அடிப்பது போல ரசித்து, சுவைத்து குடிக்கறார். சைடு டிஷ்ஷுக்கு கடலெண்ணய்ல போட்ட பஜ்ஜி வேற. சரி, அடுத்த அரை மணி நேரத்தில் கடல மாவு பஜ்ஜி தன் வேலையை காட்டி விடும்!னு நான் யூகித்து அதுகுள்ள நாம டிக்கட் எடுத்துடணும்!னு எனக்கு தவிப்பு.

பஜ்ஜி முடிஞ்சு நல்வாக்கு சொல்வார்!னு பார்த்தா பக்கத்து சீட்டு பங்கஜத்துக்கு(ஆமா! அப்படி தான் போர்டுல இருந்தது) அப்ப தான் டவுட்டு வரனுமா? நம்மாளு ஒரு வழியாக கிளியர் பண்ணிட்டு,(டவுட்டை தான்)என் சீட்டை வாங்கி ஏதோ "கவுன் பணேகா கரோர்பதி" அமிதாபச்சன் மாதிரி கம்யூட்டரை தட்டி ஸ்டேடஸ் பார்த்தார். என் 10th, 12th எக்ஸாம் ரிஸல்ட் கூட அவ்வளவு படபடப்புடன் நான் பார்த்தது இல்லை. ஒரு வழியாக என் மூதாதையர் செய்த புண்ணியத்தில் 25ம் சீட் கிடைத்தது.

ஆபிஸில் நான் திரு நெல்வேலி காரன்!னு பீத்தி கொண்டதில் ஆளாளுக்கு எவ்வளவு அல்வா வேணும்?னு லிஸ்ட் குடுக்க ஆரம்பித்து விட்டனர்.

மேனேஜர் - அரை கிலோ
சீனியர் டெக்னிகல் மேனேஜர் - 1 கிலோ
HR வைஸ் பிரெஸிடண்ட் - 2 கிலோ

வரும் போது பஸ் ஸ்டாண்டில் போலீஸ் நாய் மோப்பம் பிடித்து அல்வா பொட்டலத்தை தூக்கிண்டு ஓடிட கூடாதே முருகா!னு இப்பவே வேண்டிக் கொண்டேன்.

இது போதாது!னு டீம்ல இருக்கற வானரங்கள் வேற தனி லிஸ்ட் குடுத்ருக்கா. நீயே ஸ்வீட்! உனக்கு எதுக்கு ஸ்வீட்?னு சில மனுக்களை தள்ளுபடி பண்ணியாச்சு!

ஆக மொத்ததுல, ஆபிசுக்கே அல்வா குடுக்க போறேன். :p

சரி, எல்லோருக்கும் அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள்! இந்த தடவை மார்கட்ல ஏதவது புதுசா நயன் தாரா வெடி, பாவனா வெடி, கும்தலக்கா ரசிகா வெடி!னு வந்திருக்கலாம். எல்லாத்தையும் பாத்து ஜாக்ரதையா ஹேண்டில் பண்ணுங்கோ! நான் வெடியை தான் சொன்னேன்.

சில ஆதரவற்ற இல்லங்களுக்கும் முடிந்த பொருளுதவி அளிக்கலாம், தப்பில்லை.ஆயிரம் இரண்டாயிரம்!னு வெடிக்கு செலவழிக்கும் காசை சில பேருக்கு டிரஸ் எடுக்க குடுத்து உதவலாமே! பாவம்! சிலருக்கு வருடம் ஒரு முறை தான் புது டிரஸ் கிடைக்கும்.

இந்திய தொலைகாட்சிகளில் முதன் முறையாக "ஜோதிகாவின் தலை தீபாவளி!"னு ஒரு புரோகிராம் உடும்பு மார்க் ஜட்டிகள் விளம்பரதாரர் உதவியுடன் உலகமெங்கும் ஒளிபரப்பப் படலாம். வாயை பொலந்துண்டு டிவியவே பார்த்துண்டு இருக்க வேண்டாம், உங்கள் நண்பர்கள், பெற்றவர், உற்றவர்களை சந்தித்து பேசி மகிழலாம்.

இதோ இன்று இரவு மதுரை, நாளை மதுரை வீதிகளில் அம்பியின் திக்விஜயம், ஷாப்பிங்க் எல்லாம். இரவு நெல்லை பயணம். எப்படா வீட்டுக்கு போவோம்?னு இருக்கு. ஒரு வாரம்
பிளாக்குக்கு லீவு விட்டாச்சு. என் பிளக்கை ஜாக்ரதையா பாத்துக்கோங்கோ! பேரீச்சம்பழத்துக்கு ஆசைப்பட்டு பார்ட் பார்டா பிரிச்சு இந்த ஷ்யாம் விலை பேசி விடலாம். :)

பி.கு: சரி, நீங்களும் தலைக்கு எவ்ளோ கிலோ அல்வா வேணும்?னு சொல்லுங்கோ. வாங்கிண்டு வரேன். நான் சாப்பிட்டா நீங்க சாப்பிட்ட மாதிரி தானே? :D

Wish U all a  Safe and Prosperous Diwali  

Wednesday, October 11, 2006

பெஷ்டு கண்ணா! பெஷ்டு!



'மதுரையின் மங்கையற்கரசி' 'மலையரசன் புதல்வி' அருமை சகோதரி
தீக்ஷண்யா என்னை எழுத சொன்ன பதிவு.

1)The best thing to do -
நாலு பேருக்கு நாம உதவி செய்ய முடிஞ்சா அதுவே பெரிய விஷ்யம்.

2) The best gift -
that i gave is:
பொறுமையாக சிலருக்கு எழுதறிவித்தது!

that i received- இது தான்.

அண்ணன் மகள் சித்தப்பாவுக்கு, ஒரே முத்த மழை பொழிந்து விட்டாள்.

3) The best thing I've ever heard -
அண்ணா! I got the Offer!னு உடன்பிறப்பு(Srini) என்னிடம் போனில் சொன்ன அந்த தருணம்.

4) The best thing I've said:
கவலை படாதீங்க! (srini)அவனை நான் பாத்துக்கறேன்!னு என் அம்மா அப்பவாவிடம் சொன்னது. என்னை "ஆனந்தம்" படத்துல வர மம்முட்டி மாதிரி தான் வீட்டுல நடத்துவாங்க. எதுனாலும் பெரியவனிடம்(நான் தான்!) ஒரு வார்த்தை கேட்டுகலாம்!னு அம்மா சொல்வா.

5) The best thing that happened to me:
நடப்பது எல்லாமே நல்லதுக்கு தான்!என்று நம்புகிறேன்.

6) The best person I've met:
திருமதி உமா மேடம்( Mrs.TRC)
(TRC sir, உங்க பேரு சொல்வேன்னு! பாத்தீங்களா? அஸ்க்கு புஸ்க்கு!)

7) The best friend:
என்னோட அம்மா!

8) The best moment:
When I took in-charge and lead my college NCC-Navy team for a Prestigious Camp.

9)The best book:
பகவத் கீதை.

10) The best blog:
நான் கமண்ட் போடற எல்லா பிளாகும் தான்! குறிப்பா சொல்லனும்னா,
Ms.Congeniality இவங்க எழுதற விதம் ரொம்ப பிடிக்கும். கமண்ட் போடறதுல ரொம்ப Etiquitte பார்ப்பாங்க!அனுமார் பத்தி போஸ்ட் போட்டு என்னை கண் கலங்க வச்சுட்டாங்க.

11) The best place:
எங்கள் வீடு & நெல்லை அகஸ்தியர் அருவி, பாண தீர்த்தம் (சின்ன சின்ன ஆசை!ரோஜா படம் நினைவில் உள்ளதா?)

12) The best food:
தயிர் சாதம் - மாவடு/மாங்காய் ஊறுகாய். ஸ்ஸ்ஸ்ஸ்....

13) The best song:
a)தாயே யசோதா! - மஹாராஜபுரம் சந்தானம் அவர்கள்

b)ஷ்ரி சக்ர ராஜ சிம்ஹாசனேஸ்வரி - எங்க அப்பா பாடுவார். மனமே லேசாயிடும். இப்ப எல்லாம் அப்பா ரொம்ப பாடறது இல்லை. :(

இந்த பாடலை, இப்ப தான் கேட்கற வாய்ப்பு கிடைச்சது! இப்போ இது தான் ஆபிஸ்ல ரிப்பீட்ட்ட்ட்டூ....


14) The best hangout:
மதுரையில் நண்பர்/ நண்பிகளுடன் அரட்டை அடிக்கும் விங்க்ஸ் கிச்சன்.

15) The best eatout:
மூணு வேளையும் ஹோட்டல் தான். இதுல என்னத்த சொல்வேன்! படு பாவி பசங்க பொசுக்கு பொசுக்குனு பந்த் வேற நடத்தறாங்க இந்த ஜிலேபி தேசத்துல. ம்ம்ஹும்ம்.

16) The best hobby:
குட்டி குட்டி குழந்தைகளின் செயல்களை கண் கொட்டாமல் பார்த்து கொண்டு இருப்பது! நைசா அதை பிரண்டு பிடிச்சு அதுகளோட விளையாடுவது. இப்படி தான் போன வாரம், ஒரு குழந்தையை பிரண்டு பிடிச்சு, அது என்ன விட்டு வரவே மாட்டேன்!னு அடம் பிடிச்சு, அதோட அம்மாவும், சித்தியும் என்ன செய்யறது?னு திகைச்சு போயி ஒரே ரகளை ஆயிடுச்சு. அப்புறம் நானே Dairy Milk குடுத்து சமாதானம் பண்ணி டாட்டா எல்லாம் காமிச்சேன், குழந்தைக்கு மட்டும் தான்!னு நான் சொன்ன நம்பவா போறீங்க? ம்ம்ஹும்!

17) The best TV show ever:
தூர்தர்ஷனில் வந்த சுரபி - இந்தியாவை பற்றி நிறைய தெரிந்து கொண்டேன். அதில் வரும் ரேணுகா ஷஹேன் சிரிப்புக்கு மட்டுமே சொத்தை எழுதி வைக்கலாம்.

18) The best manager:
என் அம்மா! She is More than a CEO!

19) The best musician:
கடவுள். இவரு ஒகே! ஸ்டார்ட் மீஜிக்!னு சொல்லிட்டா அப்புறம் யாரால நிப்பாட்ட முடியும்?

20) The best gang:
எம்.சி.ஏ படிக்கும் போது நாங்க ஏழு பேரு. ரெயின்போஸ் கேங்க். ஏழு வண்ணங்களை போல ஏழு விதமான குணங்கள்.
இப்போ நம்ப பிளாக்ல வர ப்ரியா, TRC sir, கார்திக், வேதா, உஷா, ஷ்யாம், பொற்கொடி, கீதா மேடம்(நான் மேடம்!னு தான் எழுதி இருக்கேன்) etc... கேங்க்.

21) The best drink:
தாமிர பரணி தண்ணீர். (என் மேல நம்பிக்கை இல்லைனா TRC சாரை கேளுங்க!)

22)The best quote:
Be Yourself! Trust will follow You! :D

23) The best woman:
ஹிஹி, My Future தங்கமணி! (இப்பவே தாஜா பண்ணி வைக்கனும் இல்ல? அப்புறம் பூரி கட்டை பறக்கும்)

24)The best kid:
நாம எல்லோரும் தான். எவ்ளோ பெரியவங்க ஆனாலும், நம்மிடம் ஒரு அளவுகாவது சிறுபிள்ளதனம் இருக்க தானே செய்யும்? பாருங்க, இந்த கீதா மேடம் தனக்கு 15 வயசு!னு சிறுபில்லதனமா போஸ்ட் போடறாங்க. நாம சகிச்சுக்கலையா? (தலைல அடிச்சுண்டு தான் அதை படிச்சேன்)

25)The best poem:
"Miles to go befor I sleep!"

26) The best dancer: இவரு தான்!

Pic courtasy: 'நவீன ரவிவர்மா' உஷாலு! :)

நந்தி பகவான் மிருதங்கம் அடிக்க, ப்ரிருங்கி தாளம் போட, சரஸ்வதி வீணை வாசிக்க, நாரதர் (நான் இல்லீங்கோ!) மகர யாழ் மீட்ட, பதஞ்சலி முனிவரின் ஜதிக்கு
"சிதஞ்சித முதஞ்சித பதம்ஜல ஜலம்ஜித மஞ்சு கடகம்!
அஹம் ஜன, மனம்ஜன .....!"

என்று சிவ கணங்கள் முன்னிலையில் டமருகம் ஒலிக்க, எனது உள்ளத்தில் எப்போழுதும் உறைந்து இருக்கும் சிவகாமியுடன் சேர்ந்து ஆடினாரே! அது ஆட்டம்.

27) The best movie:
நிறைய இருக்கு. குறிப்பா சொல்லனும்னா முகவரி. அஜித் உணர்ந்து நடித்திருப்பார்.

தனது லட்சியத்துக்கும், வாழ்க்கை போராட்டதுக்கும் இடையே சிக்கி தவிக்கும் ஒரு மிடில் கிளாஸ் பையனின் கதை. டெஹ்ராடன் லால் பஹதூர் சாஸ்திரி அகாடமியில் டிரைனிங்க் முடித்து இந்த நேரம் இந்திய ஆட்சி பணியில் அமர்ந்து இருக்க வேண்டியது. இப்படி பிளாக் எழுதும் அற்ப பதராயிட்டேன்.

28) The best actor:
மம்முட்டி. அந்த அமைதியான, ஆனால் அழுத்தமான முக பாவங்களை எப்படி ரசிக்காமல் இருக்க முடியும்.

29) The best vehicle:
என்னுடய மனம். இதை விட வேகமான ஒரு வாகனமும் உண்டோ?
இதோ TRC சார் வீட்டு சோபாவில் உக்காச்சுண்டு ஏலக்காய் டீ குடிக்கனும்!னு நினைகிறேன். ஹைய்யா! Tea குடிச்சாச்சு!

ஆஞ்சேனேயர் ஒருத்தர் தான் மனதின் வேகத்தை விட வேகமாக செல்ல கூடியவர்.
"மனோ ஜவம் மாருத துல்லிய வேகம்!"னு என் தங்க தலைவனை சும்மாவா சொல்றாங்க?

30) The best scene in a movie:
நாயகன் படத்தில் வேலு நாயக்கருக்கும், அவர் மகளுக்கும் நடக்கும் விவாதம்!
"உங்களுக்கு சரி!னு படறது மத்தவாளுக்கு தப்பு!னு படுதே அப்பா?"னு கேட்கும் அந்த சீன். நமது வாழ்க்கையிலும் இதே மாதிரி எத்தனை காட்சிகள் வந்து போகின்றன.

"அற்ப மாயைகளோ?
வெறும் காட்சி பிழை தானோ?
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?"

பி.கு: யக்கா கை வலிக்குது! :D
நானா இந்த டேகை எழுத யாரையாவது இழுத்து விட்டா, வீட்டுக்கு ஆட்டோ வரும்!னு உளவுதுறை தகவல் அளித்து விட்டது. எனவே விருப்பம் உள்ளவர்கள் Continue பண்ணலாம். நிலா ரொம்ப ஆசைபடறாங்க போல. :)

Friday, October 06, 2006

சென்னை மாநாட்டு செய்திகள்!



நெல்லையில் நடந்த பிளாக்கர்கள் மாநாடு மாபெரும் வெற்றி பெற்றதை நீங்கள் யாவரும் அறிவீர்கள். இதை தொடர்ந்து நமது கழக கண்மணி குவைத்தில் நமது புகழை பரப்பி வரும் பக்கா திருடன்! சே! பக்கா தமிழன் தாம் சென்னைக்கு வருவதாகவும், சென்னையில் ஒரு மா பெரும் கூட்டத்தை ஏற்பாடு செய்து எதிர் கட்சிகளுக்கு நமது பலத்தை நீருபிக்க வேண்டிய கட்டாயத்தை எடுத்து சொல்லவும், 'ஆகட்டும் பார்க்கலாம்!" என்று சொல்லி இருந்தோம்.

தொண்டர்கள் விருப்பம் தான் நமக்கு முக்கியம்! என கருதி, சென்னைக்கு பயணபட்டோம். சென்னைக்கு வந்தால் தமது குடிலில் தான் தங்க வேண்டும்! என
TRC சார் அடம் பிடிக்கவே, அவரது விருப்பத்தை ஏற்று கொண்டோம்.

தனி விமானத்தில் வந்தால் நம்மால் பொது மக்களுக்கு இடையூறாக அமையுமே! என்று இரவு நேரம் பயணப்பட்டு ஒரு வழியாக சென்னை வந்து சேர்ந்தோம்.

காலை சிறிது ஷாப்பிங்க் எல்லாம் செய்து விட்டு, கரெக்ட்டா சாப்பாடு போடும் வேளையில் சார் வீட்டுக்கு போய் கதவை தட்டினோம். 25 - 29 வயதே மதிக்கதக்க ஒருவர்(கீதா மேடம் கவனிக்கவும்) என்னை வரவேற்றார். எதிரே நிற்பது TRC சாரின் பேரனா? இளைய மகனா?னு என் மனதில் சாலமன் பாப்பையா தலமையில் ஒரு குட்டி பட்டி மன்றமே நடந்தது. "நான் தான் TRC சார்!" என்று சொல்லவே நான் அவர் வீட்டு சோபாவில் மயங்கி சரிந்தேன்.

பின் அருமையான மதிய உண்வை அமுக்கினேன். (நல்ல வேளை கத்திரிகாய் கறி செய்யவில்லை.)

மாலை நாங்கள் இருவரும் பாப நாசம் சிவன் அவர்களின் 116 -வது பிறந்த நாள் சிறப்பு கச்சேரிக்கு நாரத கான சபாவுக்கு கிளம்பினோம். பாகவதர் கால ஜிப்பா, மற்றும் கரை வேஷ்டி கட்டிய மாமாக்களும், வைர மூக்குத்தி அணிந்த மாமிகளும் "இரும்பு அடிக்கற இடத்தில் ஈக்கு என்ன வேலை?" என்பது போல டி-ஷர்ட், டெனிம் நீல ஜீன்ஸில் வந்த எங்கள் இருவரையும் பார்த்தனர். கச்சேரி படு அமர்களம். அதை பற்றி விலாவரியாக சார் எழுதுவார்.

முக்கியமாக, "நின் மதி வதனமும் நீள் விழியும் கண்டு!" என்ற வரி வரும் போது என் பக்கத்தில் இருந்த ஒரு மாமா அவரது மாமியை பார்த்து ரொமான்ஸ் லுக் விட்டு "ரம்பா!" என்று அழைக்க, பதிலுக்கு மாமியும் "ஸ்வாமி!"னு திருப்பி போட்டு தாக்க, அட்ரா சக்கை! அட்ரா சக்கை! ம்ம்ஹ்ம்ம்.

அடுத்த நாள் தான் சென்னை பொது கூட்டம் என்று முடிவாகி இருந்தது. ஏற்கனவே சொன்ன இடம் சின்னதாக இருந்ததால், சார் அவரது மனதை போலவே பெரியதான அவரது வீட்டுக்கே மாற்றப்பட்டது.

"கழக கண்மணி! டகால்டி ராணி! எம்முடன் ஒரு கொடியில் பிறந்த இரு மலரான போர்கோடி!" சே! பொற்கொடி முன்னதாகவே வந்து மாநாட்டு பந்தல் முகப்பில் காத்திருந்தார். "வாழ்வளித்த தெய்வம்!"
வேதா(ளம்) தமது சுண்டல் கலக்க்ஷன் பணியை கூட விட்டு விட்டு பொது கூட்டத்துக்கு வந்திருந்ததை பார்த்து அதிர்ச்சியில் எமக்கு பேச்சே வர வில்லை...

தொண்டர்களை பிக்-கப் செய்ய எதிர்கட்சிகள் லாரி தான் ஏற்பாடு செய்வார்கள். ஆனால் நாங்கள் சொகுசு காரில் அனைவரையும் அழைத்து வந்தோம். இதற்கிடையில் பக்கா தமிழனும் வந்து சேர்ந்தார். டிநகர் பிரசாரத்தில் தான் மும்முரமாக இருப்பதால் கூட்டதில் கலந்து கொள்ள முடியாமைக்கு செல்பேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார். சசிபிரபா அவர்கள். (சசி, சென்னை சில்க்ஸ்ல அன்று புடவை செம விற்பனையாமே? உண்மையா?)

இப்படியாக சார் வீட்டில் கசேரி களை கட்டியது. பிளாக்கர்கள் சந்திப்புக்கும் போண்டாவுக்கும் என்ன சம்பந்தமோ? இங்கேயும் போண்டா தான்! கூடவே சமோஸாவும் ஏலக்காய் டீயும்! உமா மேடத்தின் (சாரின் பிரதம மந்திரி) நல்ல மனம் போல டீயும் இனித்தது.விருந்தோம்பலில் தமிழர்கள் தலை சிறந்தவர்கள்! என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து விட்டார் சார்.

வெறும் இரண்டு பேரை வைத்து நெல்லையில் மாநாடா? என்று கை தட்டி கொக்கரித்த கூட்டமே! இன்று என்ன சொல்ல போகிறீர்கள்?

இரண்டு ஐந்தானது! நாளை ஐநூறு ஆகும்.
இன்று சென்னையில் மாநாடு நடத்தி விட்டோம்,
நாளை டெல்லியில் நடத்துவோம்.
பின் நாளை மறு நாள் அமெரிக்கவில் ஐ. நா சபையில் கோபி அன்னன் தலைமையில் நடத்துவோம்.

(ஹி,ஹி உஷா, இது அந்த
கோபி இல்லைமா! அண்ணாவை கோச்சுக்காத!)

போனா போகுது, வயதில் பெரியவர்கள்!னு சொல்லி கீதா மேடத்துக்கு(யாருப்பா அது? பாட்டி!னு வாசிக்கறது?) செல் பேசினால் மொபைலை அணைத்து விட்டார்கள். சரி! பாவம், பயண களைப்பு! மேலும் குதிரையில் இருந்து வேறு கீழே விழுந்து மூக்கில் அடி பட்டு கட்டு போட்டிருப்பதாக கேள்வி! எனவே தொந்தரவு செய்யவில்லை.

"ஒசில போண்டா தறாங்க!"னு விஷயம் வெளியே தெரிந்தால் மிக பெரிய கூட்டமே கூடி விடும் என்ற பயம் கருதி கட்சி உயர்மட்ட குழு மீட்டிங்க் போல இது ரகசிய கூட்டமாகவே நடத்தப்பட்டது. உடனே இதை கட்-காப்பி-பேஷ்ட் பண்ணி
"கீரை கடைக்கு எதிர்கடையா? உனக்கு பிடிச்சது தயிர் வடையா?"னு ஒரு பில்டப் குடுத்து மீள்பதிவு போட்டு விட வேண்டாம்.

இது பிரியாணி பொட்டலம் குடுத்து சேர்த்த கூட்டமல்ல, அன்பால் தானாகவே (போண்டாவுக்கு) சேர்ந்த கூட்டம்.

இது மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இன்னொரு முறை மூத்த பிளாகர் கீதா மேடம் தலை(மை)யில் நடத்தலாம் என்றும், அப்போழுது சுட சுட வாழைக்காய் பஜ்ஜியும், கொத்தமல்லி சட்னியும் பறிமாறப்படும்! என்ற வரலற்று சிறப்புமிக்க தீர்மானம் இயற்றப்பட்டது. இதனால் மேலும் பலர் ஜோதியில் ஐக்கியமாவர்கள்! என்று உளவுத்துறை தகவல் அளித்துள்ளது.

பி.கு: இது ஒரு வெள்ளோட்டம் தான். பலரது ஈ.மெயில் முகவரி தெரியவில்லை. நானும் தனி போஸ்ட் போட்டு தெரியபடுத்த வில்லை. அடுத்த முறை இன்னும் சிறப்பாக செய்வோம். என்ன மக்களே! சரி தானே? இதுகேல்லாம் அழ கூடாது! :)