நயந்தாராவின் அபரிதமான நடிப்பால் தான் தமிழில் கஜினி கன்னாபின்னாவென ஓடியதாக்கும்! என்று அள்ளிவிட்டு என் டீமில் இருக்கும் ஒரு சப்பாத்தியிடம் வெட்னெஸ் டே டிவிடியை பண்டமாற்றம் செய்து விட்டேன்.

இந்தியாவின் நிர்வாக உள்கட்டமைப்பு, முக்ய முடிவுகள் எடுக்கும் திறன், தீவிரவாத தடுப்பு மற்றும் நீதி விசாரணை, தண்டனைகளின் தாக்கம் இவற்றை கொஞ்சம் கூட தயவுதாட்சண்யமின்றி உள்ளது உள்ளபடி காட்சிகளாக்கிய இயக்குனரின் தைரியத்தை எண்ணி நான் பிரமித்து நிற்கிறேன்.
ஒரு இந்தி படத்தில் ஸ்கர்ட் அணிந்த நாயகி கிடையாது, டைட் பனியனும், ரேபான் கிளாஸ் அணிந்த நாயகனும் இல்லை, ஏ.கே 56 ரக துப்பாக்கி, சாட்டிலைட் போன் வசதி கொண்ட வில்லனும் இல்லை.
பின்ன என்ன தான்யா இருக்கு இந்த படத்துல?
கதை இருக்கு, திரைக்கதை இருக்கு, உண்மைகளை டமால்னு போட்டுடைக்கும் தைரியம் மட்டும் இருக்கு.
ஒரு சாமான்யன் மனதில் குண்டுவெடிப்புகள் ஏற்படுத்தும் தாக்கம் எப்படி இருக்கும்? அதை அவன் எப்படி எதிர்கொள்வான்? என்பதை இதைவிட சிறப்பாக யாரும் காட்டமுடியாது. வசனங்கள் பல இடங்களில் பச்ச மிளகாய் ரகம்.
ஒரு மைக், வோடோபோன் நாய்குட்டி போல பின் தொடரும் கேமிராமேன் சகிதம் இன்று இன்வஸ்டிகேஷன் ஜர்னலிசம் என்ற பெயரில் பேட்டி எடுக்கும் அரை டிக்கெட்டு ஜர்னலிஸ்ட்டுகளை செமையா கலாசி இருக்கிறார் இயக்குனர். ஆனாலும் மும்பை குண்டுவெடிப்பில் இந்த அரை டிக்கட்டுகளின் அட்டகாசத்தை நாடு நன்கு அறியும்.
Spoofing என்று சொல்லபடும் பகடி பண்ணுதல் எப்படி? என்பதை இந்த படத்தை பார்த்து உதவி இயக்குனர்கள் கற்று கொள்ளலாம்.
ஒரு வளர்ந்து வரும் ஹீரோ தமக்கு வரும் கொலை மிரட்டலுக்கு பயந்து போலிஸ் கமிஷனரிடன் உதவி கேட்கும் போது தான் ஒரு மைனாரிட்டி, எனவே தனக்கு பாதுகாப்பு வேணும்! என சொல்லும் காட்சி தூள்.
ஒரு வலுவான, துரிதமான திரைகதை எப்படி இருக்க வேண்டும்? எனபதற்க்கு இந்த படம் ஒரு சிறந்த எடுத்துகாட்டு. படத்தில் நஸ்ரூதீன் ஷாவும், அனுபம் கேரும் மிக இயல்பாக நடித்து உள்ளனர். "ஏய்ய்ய், நான் பாக்கத் தான் சுள்ளான், சூடானா சூரியன்" என கத்தும் நம்மூர் பஞ்ச் பரமசிவன்கள் அவசியம் இந்த இருவரின் நடிப்பையும் பார்க்க வேணும்.
எனக்கிருக்கும் ஒரே கவலையெல்லாம் எக்காரணம் கொண்டும் இந்த படத்தின் தமிழ் உரிமையை நம்மூர் ரீமேக் ராஜாக்களான காப்பி-பேஸ்ட் ரவியோ, விஜய்யோ வாங்கி விட கூடாது. :)
மொத்தத்தில் 'ஏ வெட்னெஸ் டே' இந்தியாவின் மெத்தன போக்குக்கு ஒரு சவுக்கடி.