Friday, March 30, 2007

சிருங்கேரி - II

Part - I
2000 வருடங்கள் பழமை வாய்ந்த சந்ர மவுலீஸ்வர லிங்கம். இதையும் சேர்த்து ஐந்து ஸ்படிக லிங்கங்கள் பரமேஷ்வரனால் ஆதி சங்கரருக்கு வழங்கப்பட்டு பாரததின் ஐந்து இடங்களில் ஸ்தாபிக்கப்பட்டது. இந்த ஐந்து லிங்கங்களுக்கும் கடந்த 2000 வருடங்களாக (ஒரு நாள் கூட தவறியதில்லை)மூன்று கால அபிஷேகம், பூஜைகள் செய்யப்பட்டு வந்துள்ளது என்பது சிறப்பு.


2) நாங்கள் சென்ற தினத்தன்று லக்க்ஷ தீபம் ஏற்றி இருந்தார்கள். காண கண் கோடி வேண்டும்.
3) அதி காலை நேர துங்கா நதிக்கரை.


4) இங்குள்ள வித்யா சங்கரர் கோவில் சிற்ப கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அழகான லக்ஷ்மி நரசிம்ஹரை பாருங்கள்.
"கல்லிலே கலை வண்ணம் கண்டான்!"
(நரசிம்மரை பார்த்ததாலோ என்னவோ என் முகத்திலும் சிறிது உக்ரம்!)

5) இரவு நேரத்தில் சாரதா கோவிலின் வாசலில் அழகான ரங்கோலி. சிகப்பு கலரில் இருப்பது நல்ல தாழம்பூ மணக்கும் குங்குமம் (பத்திரிகை இல்லை)


6) ஞான ஸ்வரூபிணியாய், வாக்வினியாய், கலைவாணியாய், அருளமுதை அள்ளி தரும் வாகீஸ்வரியாய் அன்னை சாரதாம்பாள் கொலுவிருக்கும் கோவில்.
7) மற்றுமொரு அழகான வயல்வெளி

பி.கு: அம்பி ஸ்டைலில் ஒரு கதை காட்டுக்குயில்-கருகுமணிமாலை முன்பதிவுக்கு முந்துங்கள்!

Thursday, March 29, 2007

சிருங்கேரி

போன முறை சிருங்கேரிக்கு பயணம் செய்த போதே முடிவு செய்து விட்டேன் - கண்டிப்பாக இந்த இயற்கையோடு இணைந்து இரண்டு நாளாவது வாழ வேண்டும்.
அதன் பின், கடந்த நவம்பரில் ஒரு சனி மஹாபிரதோஷம் வந்தது. அந்த புண்ணீய நாளில் 2000 வருடம் பழமை வாய்ந்த சந்ர மவுலீஸ்வர லிங்கத்தை தரிசனம் செய்தால் பிளாக்கில் நிறைய கமண்ட் விழும் என்பது ஐதீகம்!னு நான் சொன்னா நீங்க நம்பவா போறீங்க?
நானும் உடன்பிறப்பும் கிளம்பி விட்டோம். போன முறை சென்ற போது சிருங்கேரியின் அழகை வர்ணிக்க முயன்று இருந்தேன்.
இந்த தடவை எல்லாமே படம் பார்த்து கதை சொல்ற டெக்னிக் தான்!
1) மேற்க்கு தொடர்ச்சி மலையின் வனப்பில் அழகான வயல் வெளிகள்....
2) ஆரவாரமில்லாமல் அழகாக ஓடி வரும் துங்கா நதி
3) கோபுர தரிசனம் கோடி புண்ணீயம். எல்லோரும் கண்ணத்துல போட்டுகோங்கோ!
4) சைலஷ்ரி அம்பியானந்தா சுவாமிகள் நடந்து வருகையில் மயில்கள் ஆடின, குயில்கள் கூவின!னு நான் சொன்னா நம்பவா போறேள்?
வேணும்னா இப்படி வெச்சுக்கலாம்:
மயில்கள் ஆடும் போது, குயில்கள் கூவும் போது சைலஷ்ரி அம்பியானந்தா சுவாமிகள் நடந்து வந்தார்.

5) நானும் உடன்பிறப்பும்.
அம்பியானந்த சுவாமிகள் கண்ணில் வழியும் அந்த கருணையை பாருங்கள்.
மீதி படங்கள் அடுத்த பதிவில்...

Tuesday, March 27, 2007

ராமன் எத்தனை ராமனடி


தந்தையே, என்னுடைய பாவத்தில் பங்கு ஏற்பீர்களா? பரிதாபமாக கேட்டான் அந்த வேடன்.

குழந்தாய்! குறிப்பிட்ட வயது வரை உன்னை வளர்பது எங்கள் கடமை. நீ பெரியவன் ஆனதும், எங்களை பரிபாலிப்பது உன்னுடைய கடமை. உன் சுக துக்கங்களில் பங்கு ஏற்போமே தவிர பாவத்தில் எப்படியப்பா நாங்கள் பங்கு ஏற்க முடியும்..? இது தந்தை.

நேரே அவனது தங்கமணியிடம் வந்து, "ப்ரியே! நீயாவது என் பாவத்தில் பங்கு கொள்வாயா?" நல்லா இருக்கே கதை! நீங்க சம்பாதித்து தந்தால் நான் செலவழிப்பேன், செலவழித்தது போக முடிந்தால் எதிர்காலத்துக்கு சேர்த்து வைப்பேன்! பாவத்தில் எப்படி பங்கு கொள்ள இயலும்? - இது அவனது தங்கமணி.
அவனது குழந்தைகளும் இதே பதிலை தந்ததால் ஏமாற்றத்துடன் நாரதரிடம் வந்தான் வேடன்.

என் சுமையை நான் தான் சுமக்க வேண்டும்! என் அறிந்து கொண்டேன். புண்ணிய நதிகளில் நீராடியதில்லை, கைலை யாத்திரையும் போனதில்லை. செய்த பாவத்தை போக்க வழி சொல்லுங்கள் பெரியவரே!

வேடனே கேள்! எந்த நாமத்தை சொன்னால் எல்லோருக்கும் சந்தோஷத்தை தருமோ, எந்த நாமத்தை சொன்னால் சம்சாரம் என்ற சாகரத்தை எளிதாக கடக்க முடியுமோ, எந்த நாமத்தை பரமேஷ்வரனே பார்வதிக்கு உபதேசித்தானோ அந்த நாமத்தை உனக்கு உபதேசிக்கிறேன். கவனமாக கேள்!
அய்யா! கோவிலுக்கும் போனதில்லை, கையெடுத்து கும்மிட்டதில்லை. மந்திரமும் நான் அறியேன்! என்ன செய்வது?

சரி, இது தான் மரா மரம். இந்த மரத்தின் பெயரை விடாது சொல்லி வா! உனக்கு முக்தி கிடைக்கும் - நாரதர் சென்று விட்டார்.

வேடன் துவங்கி விட்டான்

மரா மரம்

மரா மரம்

மராமரம்

ராம ராம ராம ராம ராம ராம ராம ராம

நாட்கள் வாரங்களாகி, மாதங்கள் வருடங்களாய் உருண்டது. வேடன் வால்மீகி முனிவராய் ஞானம் பெற்று ராமாயண இதிகாசத்தை இயற்ற முடிந்தது.
இன்று(27/3/2007) ஷ்ரி ராம நவமி.
ஒரு சொல்!
ஒரு வில்!
ஒரு இல்!
தந்தையின் ஒரு சொல்லுக்கு கட்டுப்பட்டவனாம், ஒரே வில்லில் பகைவரை அழித்தவனாம், ஒரே இல்லாளுடன் வாழ்ந்தவனாம், தன்னுடைய பக்தர்களுக்கு கோசல ராமனாக, தசரத ராமனாக, சீதாராமனாக, அயோத்தி ராமனாக, ராஜாராமனாக, ஜானகி ராமனாக, ரகுராமனாக, ரங்கராமனாக(!) அருள் பாலிக்கும் அந்த ஷ்ரிராமனின் நாமாவை ஒரு முறையேனும் சொல்வோமாக!
பக்தி பதிவானதால், எல்லோருக்கும் கண்டிப்பாக வடை, சுண்டல், பானகம் உண்டு.

பி.கு: இந்த பதிவை படிக்கும் எல்லா வானரங்களுக்கும் அந்த ராமன் அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும்! :)
ராம ராம ராம ராம ராம ராம ராம ராம

Friday, March 23, 2007

பார்த்த முதல் நாளே! - II


Part-I


என் முறைப்பை புரிந்து கொண்ட TRC சார், "சரி! பொண்ண வர சொல்லுங்கோ!னு சிக்னல் குடுக்க, தாய்மாமா, " TRC சார் வந்ருக்காக, மாப்ள மொக்கை போஸ்ட் அம்பி வந்ருக்காக! மற்றும் நம் உறவினரேல்லாம் வந்ருகாக! வாம்மா! மின்னல்!னு ஒன்னும் டயலாக் அடிக்கலை. அம்மணியும் மின்னல் மாதிரி சரட்டுனு எல்லாம் ஒன்னும் வரலை.

மெதுவாக இட்ட அடி எடுக்க, எடுத்த அடி நோக, வருவது அன்னமா?
மயிலா?னு பார்ப்பவர்களுக்கு சந்தேகம் வரும்படி எனக்கு பிடிச்ச மெரூன் கலர் பட்டு புடவையில்(ஹிஹி, நானும் போன்ல நேயர் விருப்பம் சொல்லிட்டேன்) பாந்தமாக வந்தாங்க. (முந்தின நாள் ரிகர்ஸல் பண்ணி இருப்பாங்க போலிருக்கு!)
என் போஸ்ட் படிச்சதும் உடனே அம்மணி பிளாக் என்ன கலர்?னு கிளிக் பண்ணி பாக்கற வேலை எல்லாம் வேண்டாம், இப்பவே சொல்லிட்டேன் ஆமா!
வந்து பெரியவங்களுக்கு நமஸ்காரம் எல்லாம் பண்ணினாங்க.
"விழுந்து எழுந்தது அவள்
வலித்தன என் கால்கள்!
கால்கள் மட்டுமல்ல
இதயமும் தான்!!
விழுவதே எழுவதற்க்கு தான்!
என எனக்கு புரிய வைத்தாளே!
என்னை புன்னகை புரிய வைத்தாளே!!"

(சரி, சரி, இதேல்லாம் கண்டுக்கப்படாது!)
எல்லாரும் ஒரு வழியா அவங்க அவங்க இடத்துல செட்டில் ஆனதுக்கு அப்புறமா டிபனும் வந்து சேர்ந்தது. வேற என்ன, கேசரி தான்! பஜ்ஜிக்கு பதிலா போண்டா!
கேசரி நன்னா இருந்தது. போண்டா தான் கொஞ்சம் ஹார்டா இருந்தது. மிருதுவா இருக்க வேண்டாமோ?

சரி, மறப்போம்! மன்னிப்போம்!

அடுத்த தடவை சரி பண்ணிடுவாங்க!னு நம்பறேன்.
டீயா? காப்பியா?னு தங்கமணி அம்மா விசாரிக்க நான் பால்!னு அசடு வழிந்தேன்.
இந்த இடைப்பட்ட கேப்புல, சில பெரியவர்கள் இரண்டாம் தடவை எல்லாம் கேசரி சாப்ட்டுடாங்க. அது TRC சார் தானா?னு நீங்க சந்தேகப்படலாம். தப்பில்லை. :)

எனக்கு ஒரு தடவை தான் கேசரி கிடைச்சது!

இதுக்கு தான், சைட் அடித்து கொண்டே உண்ணேல்!னு அவ்வையார் சொல்லி இருக்காங்க.
அண்ணலும் நோக்கினேன்!
அண்ணியும் பதிலுக்கு நோக்கினாள்!
அவள் மாமாவும் நோக்கி விட்டார்!
எனவே கண்ணும் கண்ணும் நோக்கியா!னு மலேசியா ஏர்போர்ட் எல்லாம் போயி டூயட் பாட முடியலை.

தங்கமணி பரத நாட்டிய டான்ஸர்! அதுக்காக நடு ஹால்ல சலங்கைய கட்டிண்டு, ரா! ரா! சரசுக்கு ரா! ரா!னு ஆட சொல்ல முடியுமா?
எங்க அப்பாவுக்கு பாட்டுனா உயிர். காலையில 4 மணிக்கு எழுந்து சாதகம் எல்லாம் நடக்கும். அதுவும் முருகன் பாட்டுனா அவ்ளோ இஷ்டம். அதுனால ஏற்கனவே தங்கமணிய ஏதவது முருகன் பாட்டு நாலு வரி பிராக்டிஸ் பண்ணி வை!னு சொல்லிட்டேன்.
சொல்லிட்டாலும் எனக்கு ஒரே பயம்!
மேடம், "பழம் நீயப்பா! தமிழியான பழம் நீயப்பா!னு பாடிட்டா என்ன பண்றது? நல்ல வேளை! அம்மணியும் பொறுப்பா நெட்ல தேடி 4 வரில நச்னு பாடிட்டாங்க. எங்க அப்பா ரொம்ப சந்தோஷப்பட்டு, அவரும் ஒரு பாட்டு பாடிட்டார். அம்மணி வீட்டுல எல்லோருக்கும் செம ஷாக். மாமனாரே இவ்ளோ கேஷுவலா பந்தா பண்ணாம பாட்டு பாடறாரே?

ஹிஹி அன்னிக்குனு பாத்து எனக்கு தொண்டை சரியில்லை. இல்லாட்டி... (சரி துப்ப வேண்டாம்.)

எல்லோரும் கேசரிய முழுங்கறதுலயே கவனமா இருந்தாங்களே தவிர, அடே! பொண்ணு கூட தனியா பேசறீங்களா(கடலை போடறீங்களா) அம்பி?னு யாருக்கும் தோணலை.
இதுக்கா நான் இவ்ளோ கஷ்டப்பட்டு தமிழ்ல பிளாக் எழுதி, 68 போஸ்ட் போட்டு, தங்கமணிய புடிச்சு, டகால்டி பண்ணி, கேசரி தின்னு... ம்ஹூம்...

அப்ப தான் ஒரு வழியா தாய் மாமா திருவாய் மலர்ந்தார், "பொண்ணு கிட்ட ஏதவது தனியா கேக்க(வறுக்க) ஆசைப்படறீங்களா?"

என் வயத்துல ஆரோக்யா பால வார்த்தீங்க மாமா!னு தடால்!னு எழுந்துட்டேன்.
TRC சார் உடனே சுதாரிச்சு, அம்பி முழியே சரியில்லை. கைய கால வெச்சுண்டு சும்மா இருக்க மாட்டான். எதுக்கும், நீயும் அவன் கூட போயிட்டு வா!னு என் உடன்பிறப்பையும் என் கூட அனுப்பி விட்டார்.
மைக்கேல் மதன காமராஜன் படம் மாதிரி, திருப்பு! என்னது இது? நான் கேள்விப்பட்டதே இல்லை. கடைசி வரைக்கும் இந்த அவினாசி கூடவே இருப்பானா?னு நானும் டயலாக் விடாத குறை தான்.
பக்கதுல இருக்கற தங்கமணியின் தனியறையில் உள்ளே நுழைந்தது தான் தாமதம், நானும் தங்கமணியும் விக்கட் எடுத்த வீரர்கள் கை தட்டி கொள்வதை போல தட்டி கொண்டோம். என் தம்பி தலையில் அடித்து கொண்டான்.
ம்ம், ம்ம், அப்புறம்?னு எல்லோரும் சப்பு கொட்ட வேண்டாம்.

வெறும்ன பேசிட்டு வெளியே வந்தோம்.(வர வெச்சுட்டாங்க).
எனக்கு அந்த பொண்ணை தான் பிடிச்சு இருக்கு!னு ரோஜா படத்து அரவிந்தசாமி மாதிரி மச்சினியை எல்லாம் கை காட்ட முடியலை.
ஊருக்கு போயி லெட்டர் போடரோம்!னு அல்வா குடுக்கலை. உடனே ரிஸல்ட் டிக்ளேர் செய்யப்பட்டது.
நல்ல நாள் பார்த்து நிச்ச்யதார்த்தம் வெச்சுக்கலாம்!னு நடுவர் மன்றம் தீர்ப்பு கூறியது! :)

Friday, March 16, 2007

பார்த்த முதல் நாளே!

பெண் பாக்கற அந்த நிமிடம் வரை தங்கமணியை நேர்ல பாக்கலை, போட்டோல பாத்தது தான். அதுனால சம்ப்ரதாயபடி பொண்ணு பாக்க வாங்க!னு அழைப்பு வந்ததும், நானும் என் உடன்பிறப்பும் பெங்க்ளூரில் இருந்து சென்னைக்கு வந்து TRC சார் வீட்டுல டேரா போட்டோம். எங்க பெற்றோர் திருனெல்வெலியிலிருந்து தங்கமணிக்கு அல்வா எல்லாம் வாங்கிண்டு வந்து சேர்ந்தாங்க.

என்னடா ஆரம்பமே அல்வாவா?னு நீங்க யோசிக்கலாம். ஹிஹி, அது தான் நெல்லை ஸ்டைல்.

"ஸ்கை ப்ளு தான்
எனக்கு புடிச்ச கலரு!
(டொயிங்க்! டொயிங்க்!)"
னு அம்மணி போன்ல பாடினதுனால சென்னைக்கு வரதுக்கு முன்னாடியே ஜிலேபி தேசத்துல புதுசா வாங்கியாச்சு! அண்ணனுக்கு ஒரு நீல கலர் சட்டை பார்சல்!னு தம்பி வேற மானத்த(எங்கே இருக்கு?) வாங்கிட்டான்.

காலையில அம்மா கூட GRT ல ஷாப்பிங்க் எல்லாம் போயிட்டு சாயந்தரம் பொண்ணு பார்க்க TRC சாரோட கிளம்பினோம்.
(ஹிஹி அப்ப தானே டிபன் கிடைக்கும்!)

சாரோட நீல கலர் கார்ல சர்ர்ருனு போயி இறங்கியாச்சு! தங்கமணி வீடு மாடில இருந்ததால மேல இருந்து ஒரு க்ரூப் நேரடி வர்ணனை குடுத்து கொண்டு இருந்தது.

அவங்க வீட்டுகுள்ள போனா,

ஆஹா! தங்கமணி பெரிம்மா, பெரியப்பா, அவங்க பசங்க, மாமா, மாமி, அவங்க பசங்க, சித்தி, சித்தப்பா!னு சுத்தி கும்மி அடிக்க ரெடியா இருந்தாங்க.
மூனு அத்தைமார்கள் ஊருல இருந்து வர டிக்கட் கிடைக்கலையாம்.
கிழிஞ்சது கிருஷ்ணகிரி!
நம்பள வெச்சு காமெடி கீமெடி எதுவும் பண்ணிடுவாங்களோ?னு எனக்கு கொஞ்சம் உதறல் தான்!
க்ரூப் டிஸ்கஷன் மாதிரி என்னை உக்காத்தி வெச்சு சுத்தி உக்காந்து இருந்தாங்க.
நட்ட நடு ஹால்ல அவங்க தாய் மாமா நாட்டாமை மாதிரி உக்காந்து, "கேள்விகளை நீ கேட்கிறாயா? நான் கேட்கட்டுமா?"னு என்னை ஒரு லுக்கு விட்டு அஹம்!னு தொண்டையை கணைத்து கொண்டார்.
சரி எதுக்கு வம்பு?னு நானே முதல்ல என்னை பத்தி சுருக்கமா சொல்லிக்கலாம்!னு நான் எல்கேஜில வாங்கின மார்க்லேந்து இப்ப பிடுங்கற ஆணி சைஸ் வரைக்கும் சொல்லி முடிச்சேன்.
அவங்களும் அம்மணி, நல்லவள், வல்லவள்! நாலும் தெரிஞ்சவள்!னு சொன்னாங்க. பரத நாட்யத்துல அம்மணி பட்டைய கிளப்பி இருக்காங்க!னு போட்டோ எல்லாம் காமிச்சாங்க. சிதம்பரம் நாட்யாஞ்சலில ஆடி இருக்காங்க!னு சொன்னாங்க.

இவங்க கூட தான் காதலன் படத்துல நக்மா( நடிகர் சூர்யா மச்சினி) ஆடினாங்களா மாமா?னு கேக்கனும்னு வாய் வரைக்கும் வந்து விட்டது.

அப்புறம், செல்லாது! செல்லாது!னு தீர்ப்பு சொல்லிட்டா என்ன பண்றது?
" மனமே பொறு!
மாலையை இடு!
அப்புறம் காட்டு உன் வாலுத்தனத்தை!"னு அசடு வழிய ஒரு சிரிப்பு சிரிச்சேன்.
இப்படியே அரை மணி நேரம் ஓட்டிடாங்க.
கேசரியும் காணும்! பொண்ணையும் காணும்!
செம கடுப்பா TRC சாரை ஒரு லுக்கு விட்டேன்.

மீதியை அடுத்த பதிவில் பார்ப்போமா? :)

Wednesday, March 14, 2007

Pointers in C

உங்களுக்கு ஆபிஸில் ரொம்ப வேலை பளுவா?
ரெஸ்ட் எடுக்க ஒரு ரிஸர்ட் வேணுமா?
ஆணி பிடுங்கி பிடுங்கி சோர்ந்து விட்டீர்களா?

ஆமாம்பா ஆமாம்! என்பது உங்கள் பதிலாக இருந்தால் உடனே நீங்கள் போக வேண்டிய இடம் கிண்டியில் இருக்கும் TRC சாரின் அழகிய வீடு.

இந்த பக்கம் நிஜமான நாலு கால் குதிரைகள் ஓடும் ரேஸ்கோஸ் மைதானம், அந்த பக்கம் பசுமையான கோல்ப்(Golf) புல்வெளி.

ஒரு 2 நாளுக்கு தேவையான உடைகளுடன் போய் விடுங்கள். நல்லா ஒரு குளியல்(வென்னீரும் உண்டு) போட்டு, உமா மேடம் சமயலை ஒரு கட்டு கட்டி விட்டு அருகில் இருக்கும் சோபாவில் சாய்ந்து கொண்டு ஒரு குட்டி தூக்கம் போடுங்கள்.
பக்கத்துல இருந்து சார் ஏதாவது தொண தொணனு பேசினாலும் ஒன்னும் கண்டுக்க வேண்டாம்.
சாயந்தரம் ஏலக்காய் மணக்க டீயுடன் சமோசாவும் உண்டு. (எலேய் கொடி, எத்தனை சமோசாவை நைஸா அமுக்கின எனக்கு தராம?)
சாயந்தரம், அப்படியே ரிலாக்ஸ் பண்ணிக்க இந்த பீச், நாரத கான சபா எல்லாம் TRC சாரே கூட்டிண்டு போவார்.

மிகவும் ராசியான வீடு. பிளாகர் மாநாட்டில் கலந்து கொண்ட என் அருமை சகோதரி பொற்கொடிக்கு ஒரே மாதத்தில் டும் டும் டும்! எனக்கு 2 வது மாததில் தங்கமணி பிக்கப்பு! :)

அட! இப்பவே நிறைய பேரு கிளம்பறாங்க பாருடா! ஷ்யாம் நீ எங்க புறப்படற?
நான் சொல்வதில் சந்தேகம் இருந்தால் பக்கா திருடனையோ அல்லது வேதா(ளத்தை)வையோ கேட்டு பாருங்கள்.

இந்த கோடை விடுமுறையை கொண்டாடுங்கள் TRC சாரின் வீட்டில்.
பேஜர் கிடையாது, பேக்ஸ் கிடையாது. போனா வராது! கேட்டாலும் கிடைக்காது! உடனே முன்பதிவுக்கு முந்துவீர்!

என்னடா தலைப்புக்கும், பதிவுக்கும் சம்பந்தமே இல்லையே?னு நீங்க கேக்கலாம். தப்பில்லை.
இப்ப முஸ்தபா! முஸ்தபா! டொன்ட் வொரி முஸ்தபா! பாட்டுல எங்கே முஸ்தபா வரான்? நாம கேட்டோமா? அதே மாதிரி தான் இதுவும்.
கூகிள்ல யாராவது "Pointers in C"னு தட்டினா ஹிஹி நம்ம பிளாக்கும் அவன் கண்ணுக்கு படும். ஹேப்பியா எல்லா வேலையவும் மூட்டை கட்டி வெச்சுட்டு (பொற்கொடி மாதிரி) நம்ம பிளாக்கை படிப்பான். கமண்டும் விழும். இதுவும் ஒரு பிளாக் பிரமோஷன் டெக்னிக் தான். எப்புடி நம்ம டகால்டி...?

உடனே இதை பார்த்து எதிர்கட்சிகள்னு வரிசையாக
1) ASP .NET
2) C#
3) UNIX and LINUX in 30 Days போஸ்ட் போட வேண்டாம். ஏற்கனவே அதை எல்லாம் காப்பிரைட் வாங்கி வெச்சுருக்கோமாக்கும். :)
பி.கு: அடுத்த பதிவு நீங்கள் கும்மி அடிக்க ஆவலுடன் காத்திருக்கும் "பார்த்த முதல் நாளே!"

Friday, March 09, 2007

உளறுதல் என் உள்ளத்தின் வேலை!









மருண்ட விழி பார்த்து
மானே என்றேன்!
இருண்ட கூந்தலை
கார் முகில் தான் என்றேன்!
செவ்விதழ் பார்த்து
செர்ரி என்றேன்
பித்தன் என்றனர்!
பிதற்றுகிறான் என உமிழ்ந்தனர்.
கவலையில்லை என் கண்மணி!
பிறை சூடி மான் மழு ஏந்தி
சதிக்கு நிகராய் சதிராடிய
சண்முகன் தகப்பனும்
பித்தன் தானே என் பொன்மணி!

அண்ணா சாலையில் பாலே நடனம்
சன் டிவியில் பிளாஷ் நியூஸ்!
ஓ! சாலையில் ஒயிலாக நீ நடந்தாயா?
டிராபிக் ஜாமானது என் மனது!
சிவப்பு விளக்காய் உன் மாமன்
ஆரஞ்சு விளக்காய் என் மச்சினி
பச்சை விளக்காய் நீ கண் சிமிட்டினால்
டாப் கியரில் பறக்காதோ நம் காதல் வண்டி?

நேர்-நேர் தேமாவாம்!
நிரை-நேர் புளிமாவாம்!
இலக்கணம் சொன்னது மல்லிகா டீச்சர்!
நான்-நீ இணைந்தால் என்ன மா?
இதை நான் கேட்டால் தப்பா மா?

பக்குவமாய் நாள் பார்த்து
பதவிசாய் உன் பக்கம் அமர்ந்து
பரவசமாய் பரிசமிட்டேன்
கண்ணாலே பல கதைகள் பேசி
காதோரம் கதைத்து விட்டு
கடமை அழைக்கிறது! என
காற்றாய் பறந்து விட்டாய்!
கரிசனமாய் கணினியில் கையசைத்து
கண்ணோரம் வந்த நீர் துடைத்து
கல கலவென வெளியே சிரித்து
ஓவென உள்ளே அழுது
நாளைய ஆஸ்காருக்கு காத்திருக்கிறேன்
நானும் ஒரு கைதேர்ந்த நடிகனாய்!

.......... அம்புட்டு தான் பா! ஸ்ப்ப்பா மூச்சு வாங்குது!

ரொம்ப நாளா களுத, இந்த காதல் கவித எல்லாம் எழுதனும்!னு ஒரே ஆசை.
அட பாருங்க, இந்த நேரம் பார்த்து நமக்கு பாட்டெழுத வரல! பாட்டெழுத வரல! மண்டபத்துல யாரோ எழுதி குடுத்தத வாங்கவும் மனசு இல்ல.


இந்த நேரத்துல ரிலே கவிதை எழுதி எனகுள்ள தூங்கிட்டு இருந்த சிங்கத்த சொறிஞ்சு விட்டுடாங்க.
சரி உளறல் தானே!னு விடுட முடியுமா? நாளைக்கு பாராளுமன்றத்துல எதிர் கட்சிகள் எள்ளி நகையாடிட கூடாது இல்ல? அதுனால கவிதை எழுத என்னென்ன வேணும்?னு ஒரு லிஸ்ட் போட்டேன்.

இதோ உங்கள் பார்வைக்கு:


1) மானே! தேனே! எல்லாம் சரளமா அங்கங்க தூவிக்கனும்.


2) கண்மணி போட்டா பொண்மணி கண்டிப்பா போடனும், அப்ப தான் கவிதை tally ஆகும்.

3) எதுகை மோனை இருந்தா டாப்பு டக்கர், உதாரணமா
மாப்பிள்ளை
வேப்பிலை
(கருவேப்பிலை கூட போட்டுக்கலாம் தப்பில்லை!)


தொடர் ஒட்டத்தில்---------------------------------

தலைவர்(கார்த்திக்) : கொதிக்கின்ற நீருக்குள் குதிக்கும் பொருளாய்

நிதியமைச்சர் (பரணி) : விழி விழுந்து என் விதி பார்த்துது.

துணைமுதல்வர் (வேதா) : உன் உதோட்டோர வழியும் சிரிப்பில்

கலை மற்றும் விளம்பரதுறை (மணி) : என் எல்லா நாட்காட்டி பொழுதுகளிலும்
பொதுப்பணித் துறை (ஜி-Z): சத்தமில்லாமல் புன்னகையிலும்...

மத்திய தகவல் தொடர்புதுறை (அடியேன்) : நானும் ஒரு கைதேர்ந்த நடிகனாய்!

டிஸ்கி: அந்த படத்தை பார்த்து ஒன்னும் நான் கவிதை எழுதலை! என்னய நம்புங்க எஜமான்! :)

Tuesday, March 06, 2007

மத்திய அமைச்சர் பதவியேற்ப்பு விழா!

நாட்டாமை ஷ்யாம் (ஓ.பன்னீர்செல்வம்!னு வாசிக்கபடாது) தலைமையில் பிளாக் முன்னேற்ற கழக மாநில அமைச்சர்கள் பதவியேற்ற கையோடு
மத்திய அமைச்சர்களும் பதவியேற்று கொண்டதை கழக செய்தி மலரான சங்கொலி மூலம் நீங்கள் அறிவீர்கள்.



நாம் என்றுமே பதவியை தேடி போனதில்லை, வந்த பதவியை ஒரு வழி பண்ணாமல் விட்டதில்லை, மேலும் பதவி என்பது நமக்கு மூக்கில் ஒழுகும் சளி போல, எந்த நேரமும் சிந்தி விட்டு போயிவிடுவோம்! என்பதை தமிழகம் அறியும். தரணியும் புகழும்.



இந்த நேரத்தில் மத்திய தகவல் தொடர்புதுறை அமைச்சர் பதவி என்னை தேடி வந்ததால் வேறு வழியில்லாமல் தம்பி! உன் சொல்லுக்கு கட்டுப்பட்டு இந்த முள் கீரீடத்தை சுமக்க இசைந்து விட்டேன், தலை அசைத்து விட்டேன்.


இதோ நாம் பதவியேற்றுக் கொண்ட காணக் கிடைக்காத காட்சி! (படத்துக்கு நன்றி கோல்மால் கோபால்)
தூர்தர்ஷன் முதல் கிரான்ட்ஸன் டிவி வரை கோலங்கள் மற்றும் செல்வி சீரியலின் நடுவே ஒரு வாரத்துக்கு ஒளிபரப்பும் செய்யப்படும். நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் குடும்ப குத்து விளக்கு செல்வி கவுஷா! இந்த நிகழ்ச்சியின் விளம்பரதாரர் நாயுடு ஹால். (பார்த்தே ஆகனும்! அது உங்க தலைவிதி)

நாட்டு மக்களுக்கு என்ன சலுகைகள்? என்று கேட்கும் எதிர்கட்சிகளின் வாயை அடைக்க இதோ:

1a) புதிதாக என்கேஜ்மெண்ட் ஆன ஜோடிகளுக்கு இலவச சாடிலைட் போன், வெப் காமிரா.(ஒரு நாளைக்கு 18 மணி நேரம் மட்டுமே டாக் டைம்).

1b) உள்ளூர், வெளியூர் கட்டணங்களூம் அவர்களுக்கு ப்ரீ. (என்ன சந்தோஷம் தானே பிரியா?)

2) பத்து பைசாவில் பஞ்சாப்புக்கு கால் செய்யலாம்! அதாவது பஞ்சாபில் உள்ள மக்களுக்கு கால் செய்யலாம்!னு சொல்ல வந்தேன். (எவன்டா அவன்! என் தங்கமணிட்ட போட்டு கொடுக்கறது?)

3) பிளாக் எழுதும் இளம் பேச்சுலர்களுக்கு ஆபிஸில் ஸ்பெஷல் பெர்மிஷன், ஒரு நாளைக்கு 4 மணி நேரம் மட்டும் வேலை செய்தால் போதும்.(அந்த நேரத்திலும் கமண்ட் போட்டுண்டு இருக்க கூடாது)

எப்படியோ நல்லது நடந்தா சரி! :)

4) இனி ஒவ்வோர் ஊரிலும் எத்தனை கல்லூரிகள், எத்தனை பிகர்கள் என்ற தகவல் சுரங்கம் டச் ஸ்கீரினில் அந்த கல்லூரி வாசலிலேயே நிறுவப்படும். நாட்டமை சில வருஷங்களுக்கு முன் மிகவும் கஷ்ட்டப்பட்டதாக கேள்வி, அதான் இந்த ஏற்பாடு!


5) மொக்கை போஸ்ட் போடுபவர்களுக்கு ஊக்க தொகை வழங்கப்படும். அதை வருடம் தோறும் நடக்கும் மொக்கைகள் முன்னேற்ற கழகத்தின் தற்போதைய தலைவியாம் நமது ஜி3 அக்கா வழங்குவார்கள். கீதா மேடம் தான் அந்த கட்சியின் நிறுவனர் எனபதை நீங்கள் அறிவீர்கள்.

இதை எல்லாம் வரவேற்காமல் வெளி நடப்பு செய்ய நினைக்கும் எதிர்கட்சிகளுக்கு நான் ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன்.

எங்கள் வாரிய தலைவர்கள் வசம் சகாய வாடகைக்கு ஆட்டோக்கள், சுமோக்கள், லாரிகள் எல்லாம் ஜாமான் செட்டுக்களுடன் தயாராக உள்ளன. ரெண்டு முட்டை பிரியாணி மட்டும் தான் எங்களுக்கு செலவு, ஆகவே ஒழுங்கா மரியாதையா நாடாளு மன்றத்தில் அவரவர் இருக்கையில் அமரவும்.

Thursday, March 01, 2007

அந்ந்ந்த கலர்!

ஜிலேபி தேசத்திலிருந்து திருனெல்வேலி வரை பஸ்ஸில் பயணம் செய்து ஒரு வழியாக கல்லிடைக்கு பஸ் பிடிக்க பாபநாசம் செல்லும் பேருந்தில் ஏறி சன்னலோர இருக்கையில் அமர்ந்தவுடன், "என்ன லே புறத்தாலயே நிக்க! முன்னால வாலே!னு கண்டக்டர் நெல்லைத் தமிழிலில் கொஞ்சியதை கேட்டவுடன் பாரதியின் காதில் பாய்ந்த தேன் என் காதிலும் பாய்ந்தது!

ஹப்பா! எவ்ளோ நாளாச்சு இத எல்லாம் கேட்டு!

எல்லா வயல்களிலும் அறுவடைக்கு அனேகமாக இன்னும் ஒரு வாரம் இருக்கும். மண நாளை எதிர்பார்த்து காத்திருக்கும் நிச்சயக்கப்பட்ட பெண் போல (ஹிஹி, என் தங்கமணியைப் போல!னும் வாசிக்கலாம்) நெற்கதிர்கள் மேற்க்குத்தொடர்ச்சி மலையின் காற்றில் தலை சாய்த்து நிற்கும் காட்சியை நேரில் பார்த்தால் தான் அழகு! என்பதால் போட்டோ பிடிக்க வில்லை.

(ஹிஹி, காமிரா கொண்டு போக மறந்துவிட்டேன்! என்ற மேட்டரை பின்ன எப்படி சமாளிக்கறதாம்? தங்கமணியிடம் செம ஆப்பு! :(

ஊருக்கு போனவுடன் சுகமாக தாமிரபரணியில் 2 மணி நேர குளியல், சுடச்சுட அடை!னு மெனு களை கட்டியது.



மறு நாள் அதிகாலையிலேயே நெல்லை ஆரேம்கேவிக்கு பயணம். கடையவே நாம தான் தொறந்தோம்.

அடடா! எத்தனை புடவைகள்! எத்தனை கலர்கள்!

இந்த பாவப்பட்ட ஆண்களுக்கு திரும்ப திரும்ப ஒரு சில பொதுவான நிறங்களில் தான் சட்டையும் சரி, பேண்டும் சரி அமையும். ஆனால் மீனா ஆண்டி சொல்லியபடி லேடிஸ்க்கு தான் எத்தனை சிங்குசா கலர்கள்!

மாம்பழ கலர்ல அரக்கு பார்டர்!


எம்.ஸ் ப்ளு, நேவி ப்ளு, ஸ்கை ப்ளு, டார்க் ப்ளு, காப்பர் சல்பேட் ப்ளு


கேவா கலர் (தெரியுமா?), பால் கோவா கலர், நவாப்பழ கலர்,


வெங்காய கலர் (அதுல பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் வேற)

பாட்டில் க்ரீன், ஆலிவ் க்ரீன், கிளிப்பச்சை,


பர்கண்டி(ஜருகண்டி இல்லை),


மெரூன் ரெட், பிளட் ரெட், அஜித் ரெட்,


வெளிர்மஞ்சள், பச்சமஞ்சள், பொன்னிறம்(ஹிஹி, ஐஸ் குட்டி நிறம்!னு நான் கேட்டேன்),


லைட் பிரவுன், டார்க் பிரவுன், காப்பி பிரவுன்,


யானை கலர், கழுதை கலர்(கஷ்ட காலம்),


சிமெண்ட் கலர், செங்கற்பொடி கலர்,

அடங்கப்பா சாமி! என்ன, படிக்கற உங்களுக்கே கண்ண கட்டுதா?
கடைகாரனுக்கு எப்படி இருக்கும்?

100 வருஷமா கடை நடத்தறாங்க, அதுனால நாங்க கேட்ட கலர், பிடிச்ச டிஸைன் எல்லாம் ஜஸ்ட் ஒரு 3 மணி நேரத்துல கிடைத்து விட்டது.

"பார்த்தது போதும்! சட்டுபுட்டுனு ஒன்ன செலக்ட் பண்ணு!"னு அவசரப்படுத்தும் ரங்கமணிகளை பாண்டி பஜாருக்கு டிக்கட் எடுத்து குடுத்து நாயுடு ஹாலுக்கு அனுப்பி விடுவது சாலச் சிறந்தது!

அங்கே தான் எடுத்து போட்ட நாலுல, ஒன்ன செலக்ட் பண்ணிண்டு வந்துண்டே இருக்கலாம். (இப்ப அதுலயும் டிசைன் எல்லாம் வந்துடுத்தாம்! )

பாரம்பரிய பட்டு தவிர, இப்ப ஸ்டோன் வர்க்(stone work), திரட் வர்க்(thread work) வெச்சு எல்லாம் வந்துருக்கு. இது போதாது!னு பனாரஸ் பட்டு, பாந்தினி சில்க்ஸ், போச்சம்பள்ளி சாரீஸ் வேற அட்டகாசமா இருக்கு!


- எதிர்கால தங்கமணிகள் கவனிக்கவும். வருங்கால, நிகழ்கால ரங்கமணிகள் கோ-ஆப்டெக்ஸ் துண்டு(அதுவும் 10% தள்ளுபடியில்) வாங்கி கொள்ளவும், வேற எதுக்கு தலைல போட்டுக்க தான்!

நான் எதிர்பார்த்தபடியே எங்களுக்கு பக்கதுல ஒரே கசமுசா!

"ஈ கலரு எனக்கு மேட்ச்சாயிட்டு இருக்கும்! நோக்கிக்கோ" - சூர்யா டிவி டாப் டக்கராயிட்டு ஓடிக்கொண்டிருந்தது.



ஆயிரம் ஏஞ்சலினா வந்தாலும் ஒரு கேரளாவுக்கு ஈடு இணை ஆகுமா?



ஓ! ஆ கலரு நிங்களுக்கு ஒன்னாம் கிளாஸாயிட்டு(first classaa) இருக்கும்! இது சத்யமாக்கும்!னு சொல்லி நெஜாமாலுமே அவங்களுக்கு மேட்ச்சான கலரில் ஒன்னை சுட்டி காட்டி சம்மன் இல்லாம ஆஜர் ஆக வேண்டி இருந்தது,



ஏனெனில் ஆப்பெண்குட்டி கையில் யான் தேடிக் கொண்டிருந்த கலர்ல எம்ராய்டரி பண்ணிய பட்டு புடவையாக்கும்!

ஹிஹி, எல்லா கலருமே அவங்களுக்கு மேட்ச் தான்! (சொக்கா! எனகில்லை! எனக்கில்லை!)

பாலக்காட்டு குட்டிக்கு பரம சந்தோஷம்! (ஆமா! அருண் & KK, அவங்களுக்கு பாலக்காடு தான் ஓரிஜினாம், மத்தபடி ஊரு மட்டும் தான் விசாரிச்சேன்.)

(இது தங்கமணிக்கு- என்ன நம்புங்க எஜமான்!)

கூட வந்த அச்சன் சுதாரிக்குமுன், நைசா அந்த புடவைக்கு பில்லை போட்டு விட்டேன். ஒரு வழியா எல்லா ஷாப்பிங்கும் முடிஞ்சு உங்களுக்கு அல்வா எல்லாம் வாங்கிண்டு இதோ மறுபடி ஆணி பிடுங்க வந்தாச்சு!

நான் சாப்டா நீங்க சாப்ட மாதிரி தானே!னு இந்த தடவையும் நான் அல்வா குடுக்க முடியலை. ஏனெனில் பக்கத்து வீட்டு டுபுக்கு டிசிப்பிள் கொத்தா சட்டைய பிடிச்சு அவங்க பங்கை எடுத்துண்டு தான் எனக்கே குடுத்தாங்க.



அல்வாவை முழுங்கிட்டு அப்டியே போகத லே! நச்சுனு நாலு கமண்ட் போட்டுட்டு போல!


பி.கு: மார்ச் மாத வெளியீடு "பார்த்த முதல் நாளே!" விரைவில் உங்கள் அபிமான பிரவுஸர்களில் உலகமெங்கும்!