மற்ற டிவிகளை ஒப்பிடும் போது விஜய் டிவியில் பல உருப்படியான, சிந்திக்க வைக்கும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறார்கள். அனேகமாக வாரத்தில் ஒரு நாலு நாட்கள் யாராவது சோபாவில் உட்கார்ந்து கொண்டு பேசுகிறார்கள். இதை மாதிரி டாக் ஷோ நடத்த ரொம்பவே தில்லு வேணும்.
- முதலில் சரியான நிகழ்ச்சி நடத்துனர்(Anchor) வேணும்.
- மக்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் நிகழ்ச்சியை வடிவமைக்க தெரியனும்.
- மூணாவது, நல்ல ஸ்டூடியோ தளம் அமையனும். ஒரு சில டிவிகள் வாய்கால் ஓரங்களில் எல்லாம் பேட்டி எடுக்கிறார்கள். பேக்ரவுண்டில் ஒருத்தர் சொம்பை தூக்கி கொண்டு நமக்கு தரிசனம் தருகிறார்.
இல்லாட்டி பொதிகையில் ஒரு காலத்தில் வந்த செவ்வாய் கிழமை நாடகம் மாதிரி ஆகி விடும். :)
நெல்லை கண்ணனை குழு தலைவராக கொண்டு "தமிழ் எங்கள் பேச்சு!" என ஒரு நிகழ்ச்சி தினமும் இரவு பத்து மணிக்கு நடந்து வருகிறது. பல்வேறு கட்டங்களாக தமிழகத்தின் தமிழ் ஆர்வலர்களை வடிகட்டி இப்போ நிகழ்ச்சி களை கட்ட தொடங்கி விட்டது. வெகு காலத்துக்கு பிறகு இனிய தமிழை அதுவும் தனியார் டிவியில் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. நெல்லை கண்ணன் அவர்களின் ஆழ்ந்த தமிழறிவு, தங்குதடையற்ற தமிழ் பேச்சு, திருகுறளாகட்டும், அக/புற நானூறு, சிலப்பதிகாரம், என வெள்ளம் போல பாய்ந்து வருகிறது.
திரு.கண்ணன் நாவில் பாரதியும், பாவேந்தரும் ரவுண்டு கட்டி வருகிறார்கள். போட்டியில் பங்கு பெறுபவர்களும் சளைத்தவர்களாக தெரியவில்லை. கவிதை சுற்று, எதுகை மோனை சுற்று என தெள்ளமுதாய் தமிழ் பிரவாகமெடுத்து வருகிறது. ஐந்து நிமிடங்களுக்கு மேல் இப்போதெல்லாம் எந்தவொரு நிகழ்ச்சியையும் பாக்க முடியாத நிலையில், இது போன்ற நிகழ்ச்சிகள் அத்தி பூத்தாற் போல வருவது மனதுக்கு இதமாக உள்ளது.
பல புதிய தமிழ் சொற்களின் அறிமுகம் கிடைத்தது. அவர்கள் முன் இலக்கியமோ, பின் இலக்கியமோ என்னை மாதிரி பட்ஜட் பத்மநாபனுக்கும் புரியும்படி பேசினார்கள்! எனபது இங்கு குறிப்பிடத்தக்க விஷயம். அதுவும் தமிழ்மணத்துக்கு ஒவ்வாத சொற்கள் அறவே இல்லாமல் பின்னிலக்கியமும் பேசபடுகிறது. ஒரு வேளை *** தான் பின்னிலக்கியமோ? என்ற எனது மாயை விலகியது. நிகழ்ச்சியை வெகு சுவாரசியமாக சின்ன சின்ன தகவல்களுடன் நெல்லை கண்ணன் கொண்டு செல்லும் அழகே அழகு. நிறை குடம் என்றும் தளும்புவதில்லை.
விஜய் டிவியின் கிரியேட்டிவ் டீமுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். நேரம் இருந்தால் நீங்களும் கண்டு களியுங்கள்.