Friday, January 25, 2008

அவுட்லுக்

உங்கள் கம்பனி தனியாக இமெயில் ஐடி குடுத்து இருக்கிறதா? அப்படினா இந்த பதிவுக்கும் உங்களுக்கும் நெருங்கிய சம்பந்தம் உள்ளது. அதுக்காக மற்றவர்களுக்கு தொடர்பில்லைணு அர்த்தம் கொள்ள கூடாது.

அடிச்சு பிடிச்சு டிராபிக்ல சிக்கி ஒரு வழியா ஆபிஸ் போய், கணினி பொட்டியை தொறந்தவுடன் நாம், சரி, நான் செய்யும் முதல் வேலை என்ன? அவுட்லுக்கை தொறந்து என்ன மெயில் வந்ருக்குனு பாக்கறது தானே?

என்னதான் யாஹூ, ஜிமெயில்னு இருந்தாலும், கம்பெனி ஐடியில வர ஈமெயிலை படிக்கற சுகமே அலாதி.

காலையில், ஒரு கரடி கையில ரோஜா பூவை வைத்து கொண்டு குட் மார்னிங்க் சொல்லும் மெயிலாகட்டும், மதியம் புவா முடிந்ததும் ஒரு அரை மயக்கத்தில் நாம் என்ன தட்டுகிறோம்?னு நமக்கும் தெரியாம, கணினிக்கும் தெரியாத அந்த பேரானந்த நிலையை அடையும் போது என்ன தூக்கமா?னு வரும் மெயிலாகட்டும், சாயந்தரம் டீ குடித்த சூடு தணிவதற்குள் ஐஸ் குட்டி முழுகாம இருக்காளாம்!னு என்டி.டிவி கர்ம சிரத்தையாக அளித்த ரிப்போர்டை காப்பி பேஷ்ட் பண்ணி நமக்கு வரும் மெயிலாகட்டும் அடடா! நாம் பிறந்த பயனை அடைந்தே விடுவோம்.

வெள்ளிகிழமையானா போதும் "ஏ மானிடா திங்ககிழமை உலகம் இருக்குமோ இருக்காதோ, அதனால அடுத்து வரும் இரண்டு நாட்களில் வாழ்க்கையை முழுதும் வாழ்ந்து விடு!" என கருத்து கந்தசாமிகள் வீக் எண்ட் ஸ்பெஷல் மெயில் அனுப்புவதை தன் தலையாய கடமையாக கொண்டுள்ளனர்.

இது போதாதுனு பல பேர் ஊர்ல இருக்கற மொக்கை சைட்டுல அதாவது வெப் சைட்டுல எல்லாம் போயி எனக்கும் கம்பெனி ஐடி இருக்கு! எனக்கும் கம்பெனி ஐடி இருக்கு!னு போஸ்டர் அடிச்சு ஓட்டாத குறையா ரிஜிஸ்டர் பண்ணிட்டு வந்து விடுவர்.
அப்புறம் என்ன? இந்தா பிடினு அவனும் தினமும் "விருச்சிக ராசி நேயர்களே! இன்று உங்கள் பதிவுக்கு கமண்ட் போடாம கமுக்கமா படிச்சுட்டு போற கூட்டம் தான் அதிகம்! கவனமா இருக்கனும்"னு ஒத்த ரூவா பொட்டு வெச்ச ஓம் உலக நாதன் ரேஞ்சுக்கு தின, வார, மாத பலன் எல்லாம் அழகாய் அனுப்பி வைப்பான்.

ஏதாவது ஒரு ஏடாகூட வெப்சைட்காரனுக்கு நம்ம ஐடி தெரிந்து விட்டால் போதும், டாலருக்கு நாலு நயாகரா வாங்கிக்கோ! வயாக்ரா வாங்கிக்கோ!னு மெயில் அள்ளி விடுவான்.

நம்ம பாசக்கார மக்கள் மட்டும் என்ன சும்மாவா? தியேட்டருக்கு போனா பக்கத்து சீட்ல யாரு இருக்கா?னு பாக்காம உன் சீட்டுல ஊசி இருக்கா?னு பாரு. இப்படி தான் ஐதராபாத்துல ஐதர் அலி உக்காந்த சீட்டுல எயிட்ஸ் பரப்புற ஊசி இருந்ததாம்! இந்த மெயிலை ஐந்து பேருக்கு அனுப்பினா ஐஸ் குட்டி கனவுல வருவா! பத்து பேருக்கு அனுப்பினா பத்ம ப்ரியா வருவா! 15 பேருக்கு அனுப்பினா...னு பீதியை கிளப்பி விடுவர்.

சாப்பிட்ட பின், உடனே ஜில்லுனு தண்ணி குடிச்சா கான்சர் வரும், பழங்களை உணவு உண்ட பின் எடுத்து கொண்டால் கக்கா வரும்!னு இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே போகும்.

ஆபிஸில் இந்த யாஹூ, ஜிமெயில் எல்லாம் தடா செய்யப்பட்ட திக்கற்றவர்களுக்கு அவுட்லுக்கே துணை! சதா சர்வ காலமும் ஜிமெயிலிலேயே மோன நிலையில் தவம் கிடக்கும் ஒரு க்ரூப்புக்கு(இப்போ உங்களுக்கு ஜி3 அக்கா, ரசிகன் எல்லாம் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பில்லை) தப்பி தவறி சவுக்கியமா?னு மெயில் அனுப்பினா நம்ம ஐடிக்கு சும்மா வளைச்சு வளைச்சு கும்மி அடித்து விடுவார்கள்.

ஒரு கட்டத்தில் நமக்கு வரும் மெயிலுக்கு, நமது ஆபிஸில் பொழுது போகாமல் பிளாக் படித்து கொண்டிருக்கும் நாகை சிவா போன்ற நெட்வர்க் அட்மின்களே பதில் போடும் அளவுக்கு நம் இன்பாக்ஸ் எகிறி விடும்.

இந்த களேபரத்தில், "சாயந்தரம் வரும் போது அரைகிலோ தக்காளி, மற்றும் எலுமிச்சம்பழம் வாங்கி வரவும்! வழக்கம் போல, கறிவேப்பிலைக்கு தனியாக காசு குடுத்து ஏமாற வேண்டாம்"னு பின்குறிப்பு போட்டு தங்கமணியிடமிருந்து வந்திருக்கும் அதிமுக்யமான மெயிலை காண தவறிவிட்டால், சாலமன் பாப்பையா சொன்ன மாதிரி, இந்த நாள் இனிய நாளாகி விடும்.

இரண்டு வருடங்களுக்கு ஒருதரம், ஒரு கம்பெனி விட்டு இன்னொரு கம்பெனி தாவும் என்னை போன்ற வானரங்களுக்கு, அட்ரஸ்புக்கில் இருக்கும் ஈமெயில் ஐடிகளை சிந்தாமல் சிதறாமல் கொண்டு போவதே பெரிய வேலை.

புது கம்பெனியில் பிளாக் எல்லாம் பிலாக் ஆகாமல் இருக்கனும்!
நம்ம கணினியில் சீன, ஜப்பான் மொழி எல்லாம் வராமல் தமிழ் எழுத்துக்கள் தெரியனும், நாம் உட்காரும் சீட் டேமேஜர் சீட்டுக்கு முதுகுபக்கமா இருக்கனும், அப்ப தான் நம்ம வழக்கமான தமிழ்தொண்டை(ஹிஹி) தங்குதடையில்லாமல் செய்ய முடியும்! போன்ற நியாயமான கவலைகள் எல்லாம் தலைவிரித்தாடும்.

Wednesday, January 16, 2008

எழுதியதில் பிடித்தது

அன்புடன் வல்லி அம்மா ஒரு கொக்கியில் என்னை மாட்டிவிட்டு விட்டார்கள். ஏற்கனவே ரசிகனின் டேக் பாக்கி. ஆனால் நாம் எழுதுவதில் முக்கால்வாசி மொக்கை வகை தான் என்பதால் தனியா நாம வேற ஒரு டேக் எழுதனுமா?னு ஒரு யோசனை. அதனால கோச்சுகாதீங்க ரசிகன்.

அடியேன் எழுதியதில் பிடித்தது எது?னு ஒன்று! இரண்டு!னு வரிசைபடுத்தி, கீதா பாட்டி மாதிரி, மன்னிக்கவும், அவ்வையார் மாதிரி நமக்கு நாமே திட்டப்படி ஒரு விளம்பரம் தேங்க்!னு சுட்டி(லிங்க்) குடுக்கனும்.

ஆஹா! கைல கிடைச்ச லட்டு போல அருமையான வாய்ப்பு. விட்ருவோமா என்ன? இதோ:

1) சென்னையில் நான் வேலை பாத்த போது நடந்த ஆபிஸ் பார்ட்டி தான் நான் மிகவும் ரசித்து எழுதியது.
(பார்ட்டி என்றால் எல்லோரும் சந்திக்கும் நிகழ்ச்சி! என பொருள் கொள்ளவும்.)

2a) இதே மாதிரி நாங்கள் கலந்து கொண்ட ஒரு இசை போட்டி பற்றிய பதிவுக்கு தான் இரண்டாம் இடம்.
2b) தங்கமணியை பொண்ணு பாக்க போன நிகழ்வுகள் பற்றிய பதிவும் இரண்டாம் இடத்தை பிடிக்கிறது. (ஹிஹி, மூணாம் இடம் குடுத்தா என்ன நடக்கும்?னு எங்களுக்கு தெரியாது?)

3) தீபாவளிக்கு(பாவனா நடிச்ச படம் இல்லை) பஸ் டிக்கட் எடுத்த நிகழ்வு பத்திய பதிவு மூணாம் இடத்தை பிடிக்கிறது.

ஆன்மீக பதிவுகள், என்ன தான் நான் கஷ்டப்பட்டு எழுதினாலும், "எல்லா புகழும் தம்பி கனேசனுக்கே!" என எதிர் கட்சிகள் முழங்குகிறார்கள்.
சரி, பரவாயில்லை, கந்த சஷ்டி விழாவின் போது நான் ரொம்ப ரசித்து, உருகி எழுதியது என் மனதுக்கு நிறைவை தந்த பதிவு.

நான் டேக் செய்ய விரும்பும் நபர்கள்:

1) கண்ணபிரான் ரவி சங்கர் அண்ணா: ஆன்மீகத்தில் பட்டய கிளப்பும் பதிவர்.

2) கைபுள்ளை: காமடி, பயண குறிப்புகள், குவிஜுனு ஒரு நடமாடும் தகவல் சுரங்கம். இட்டிலி நல்லா சாப்ட்டா வந்ருக்கா தல? :)

Sunday, January 06, 2008

சுந்தர காண்டம்

ராமாயணத்தில் ராமனின் சிறப்பை சொல்ல பல பகுதிகளாக(காண்டங்களாக) பிரித்த கம்பர், சுந்தர காண்டம் என ஒரு பகுதிக்கு பெயரிட்டுள்ளார். இந்த பகுதியில் மட்டும் முழுக்க முழுக்க அனுமனின் சிறப்பை நமக்கு விளக்குகிறது. சுந்தர காண்டம் படித்தால் முழு ராமயணமே படித்த மாதிரி. ஏனேனில் சீதையை அசோக வனத்தில் பார்க்கும் அனுமன், ராமனின் பிறப்பு, வளர்ப்பு என அத்தனையும் பாட்டாக பாடி விடுகிறார். மேலும் துயரம் கொள்ளும் சீதையை தேற்றும் விதமாக, "ராவண வதம் நடந்து, நீங்கள் இருவரும் சந்தோஷமாக அயோத்தி சென்று ராஜ்ய பரிபாலனம் செய்வீர்கள்!" என முழு ராமாயணத்தையும் சொல்லி விடுகிறார்.
சுந்தரன் என்றால் அழகன் என பொருள்படும். உருவத்தால் மட்டுமல்ல, குணத்தால், நல்ல மனதால், இனிமையான வார்த்தைகளால் எவர் ஒருவர் பிரகாசிகின்றாரோ அவரே சுந்தரன். தமது இனிமையான, புத்திசாலித்தனமான பேச்சால், துயரத்தில் வாடும் ராமனையும், சீதையையும் தேற்றும் அனுமன் சுந்தரன் தானே!
என்ன தான் ராமன் தெய்வ அம்சமென்றாலும், மனித ஜென்மம் எடுத்ததால், மனைவியை பிரிந்த துயரால் பலவாறு புலம்ப, அப்போழுது அனுமனே தக்க வார்த்தைகள் பேசி தேற்றுகிறான்.
அதே போல வரங்கள் பல வாங்கி இருந்தாலும், ஈஸ்வர பட்டமே பெற்று இருந்தாலும், பிறர் மனை நோக்கும் ஈனச் செயலை ராவணன் செய்துவிடுகிறான். இலங்கைக்கு செல்லும் அனுமன் கடைசி முயற்சியாக ராவணனுக்கு நல்ல புத்தி சொல்கிறார்.
ஆக, பிறப்பால் குரங்காக அவதாரம் எடுத்தாலும், மனிதனாய் பிறந்த ராமனுக்கும், வல்லமை படைத்த அரக்க குலத்தில் பிறந்த ராவணனக்கும் புத்தி சொல்லும் உயரிய நிலைக்கு அனுமன் உயர்கிறார்.
சுருங்க சொல்லி பொருள் விளங்க வைப்பதில் அனுமனுக்கு இணையே இல்லை.
"கண்டேன் கற்பின் கனலை" என்ற ஒற்றை வரியில் தான் எத்தனை பொருள்?
1) எந்த காரியத்துக்கு நான் சென்றேனோ அது ராமன் அருளால் வெற்றி என சூசகமாக, அடக்கமாக சொல்கிறார் அனுமன்.
2) சீதை உயிரோடு இருக்கிறாள், மேலும் சீரிய கற்போடு இருக்கிறாள் என மிக அழகாக தெரிவிக்கிறார் அனுமன்.

இவ்வளவு சிறப்புகள் பெற்றிருந்த போதும், அதை பற்றி துளியும் கர்வம் கொள்ளாமல், "தன்னடக்கமே உன் பெயர் அனுமனா?" என வியக்கும் வண்ணம், ராம பட்டாபிஷேகத்தின் போது, ராமனின் காலடியில் பவ்யமாக அமர்ந்திருந்து, இந்த பூவுலகில் எங்கெல்லாம் ராம நாமம் ஜெபிக்கபடுகிறதோ அங்கெல்லாம் வந்து சேவை சாதிக்கும் அந்த அனுமன் அவதரித்த திருநாள் மார்கழி மாதம் அமாவாசை திதியும் மூல நட்சத்திரமும் கூடிய நன்னாள் வரும் செவ்வாய்கிழமை(8th ஜனவரி) வருகிறது. இந்த நன்னாளில் சின்ன திருவடி என போற்றப்படும் அஞ்சனா மைந்தன், வாயு குமாரன், வானரவீரன், ராமதூதன், பக்தர்களின் குரலுக்கு ஓடி வருபவன் எல்லா வளங்களையும், என்றும் மாறா தன்னடக்கத்தையும் நமக்கு தரட்டும்.


சென்ற வருட பதிவு இங்கே!