Wednesday, August 29, 2007

ஒரு அறிவிப்பு

என்னவோ நான் தான், கல்யாணத்துக்கு அப்புறம் என் தங்கமணியை எழுத விடலை!னு எதிர் கட்சிகள் சுமத்திய பழி இதோ தூள் தூளாகிறது.

என்னை "நல்லவன்! வல்லவன்! நாலும் தெரிந்தவன்!" என போற்றி புகழ்ந்து அம்மணி எழுதிய பதிவை பாரீர். (போய் பாருங்க, அப்புறம் தெரியும்).
அங்க போனோமா, பதிவை படிச்சோமானு இருக்கனும். ஐடியா குடுக்கற வேலை எல்லாம் வேணாம்! இப்பவே சொல்லிக்கறேன்.

இதேல்லாம் ஒரு பொழப்பா?னு மண்டகபடியை இங்கயும் ஆரம்பிக்கலாம்.

Tuesday, August 28, 2007

ரக்க்ஷா பந்தன் ஒச்சாயினு!

என் இனிய பதிவுலக பாச மலர்களாம் அக்கா, தங்கைகளுக்கு இனிய ரக்க்ஷா பந்தன் வாழ்த்துக்கள்.

கீழே படத்தில் அல்லாடி கொண்டிருப்பது எனது அருமை தம்பி, குவைத் புகழ், பக்கா திருடன் என செல்லமாக அழைக்கபடும் நமது சச்சின் கோப்ஸ் இல்லை! என நான் உறுதியாக கூறுகிறேன்.

*ahem, இரண்டாம் படத்தில் இருப்பது அம்பி தான்! என சில எதிர் கட்சிகள் புரளியை கிளப்பி விட்டு கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு எல்லாம் நான் ஒன்று சொல்லி கொள்கிறேன்.

ஆயிரம் பூரி கட்டைகளை பார்த்தும் தனது கொள்கையில்(என்னது?) உறுதியாக அஞ்சாமல் இருப்பான் இந்த அம்பி! :)


பிளாஷ் நியூஸ்: நமது மலேசியா மாரியாத்தா! காமடி குயின் "மை ஃபிரண்ட்" 'பாய்ஸ் புகழ்' சித்தார்த்தை தனது உடன் பிறவா சகோதரனாக ஏற்று கொண்டு ஒரு ராக்கி அனுப்பி உள்ளார்.

அதை தம்பி சித்தார்த்தும் தொல்லை விட்டது! என மிகவும் மகிழ்ச்சியாக ஏற்று கொண்டு விட்டார்! என்பதை நமது பிமுகவின் தகவல் தொடர்பு துறை உறுதி செய்கிறது. :)))


Monday, August 27, 2007

தங்கத் தேரில் ஓணம் வந்தல்லோ!







நம் அண்டை மாநில கேரள சேட்டன்களுக்கும், சேச்சிகளுக்கும், மற்றும் காவ்யா மாதவன், நவ்யா நாயர், மீரா ஜாஸ்மீன், நயன் தாரா, அசின் அக்கா, ரேணுகா மேனன் எல்லோருக்கு ஒணம் நல்வாழ்த்துக்கள்.


சரி போனா போகுது,

மமுட்டி மாமா, மோஹன் லால் பெரியப்பா, ப்ரித்விராஜ் சித்தப்பா எல்லோருக்கும் இனிய ஓணம் வாழ்த்துக்கள். பாருங்க, சென்னைக்கே லீவு விட்ருக்கோம். இப்பவாவது ஒழுங்க தண்ணிய தொறந்து விடுங்க. என்ன சேட்டங்களா மனசிலாயிட்டோ?

மோகினியாட்டம். (இன்னிக்கு எனக்கு இருக்கு வசமா :)

Wednesday, August 22, 2007

சக் தே இந்தியா

இந்த ஜிலேபி தேசத்தில் 'சிவாஜி' என்ற தமிழ் படத்தின் பெயரையே கன்னடத்தில் எழுதி போஸ்டர் ஒட்டுகிற நிலமையில், இங்குள்ள என் இனிய தமிழ் மக்களுக்கு இஷ்க், பிஷ்க் போன்ற இந்தி படங்களும் 300 பருத்தி வீரர்கள், உறுமாறும் வேட்டையர்கள் போன்ற ஆங்கில படங்களே ஆறுதல்.
நீண்ட்ட்ட நாட்களுக்கு பிறகு நல்ல ஹிந்தி படம் வந்ருக்கு! மிஸ் பண்ணிடாத!னு எங்க ஆபிஸ் ரசகுல்லா சொன்னதை தட்ட முடியாமல், தங்கமணி சகிதமாய் இந்த படத்துக்கு போயாச்சு.

எனக்கெல்லாம் கோபுரம் பூசு மஞ்சள் தூள், ஜெயசந்திரன் டெக்ஸ்டைல்ஸ், மற்றும் அண்ணாச்சி கடையில் எடுத்துக்கோ!னு விளம்பரம் பாத்துட்டு தான் படம் பார்க்க பிடிக்கும். இங்கே ஒன்னுமே காட்டாமல், படக்குனு படத்தை போட்டு விட்டார்கள். என்னை மாதிரியே தான் மற்றவர்களுமா?னு நான் சுற்றும் முற்றும் பார்த்ததை தப்பா புரிந்து கொண்ட தங்கமணி, பக்கத்து சீட்டுல என்ன லுக்? ஒழுங்கா படத்தை பாருங்கோ!னு இடிக்க சுய நினைவுக்கு வந்தேன்.

இதான்பா கதை:

பாகிஸ்தானுக்கு எதிரான ஹாக்கி பைனல் மேட்சில் கைக்கு கிடைத்த கேசரி போன்ற கோல் போடும் வாய்ப்பை கோட்டை விட மீடியாக்களால் ஷாருக் தேச துரோகி! என முத்திரை குத்தப்படுகிறார்.ஏழு வருடங்களுக்கு பிறகு இந்திய மகளீர் ஹாக்கி டீமுக்கு கோச்சாகி எப்படி பட்டய கிளப்புகிறார்? என்பது தான் கதை.

இது கதையல்ல நிஜம்:

மிர் ரஞ்சன் நேகி என்ற இந்திய ஹாக்கி வீரர் 1983 ல் பாக்குக்கு எதிரான மேட்ச்சில் 1 - 7 என கோட்டை விட, மேட்ச் பிக்ஸிங்க் செய்ததாக குற்றம் சுமத்தபடுகிறார். சில வருடங்களுக்கு பிறகு இந்திய மகளிர் அணிக்கு கோச்சாகி காமவெல்த் போட்டிகளில் தங்கம் வாங்கி தந்தார்.


திரைக்கதை நகர்த்திய விதம் அருமையோ அருமை. 16 பேர் கொண்ட டீமில் ஆந்திரா, ஹரியானா, மிசோரம், பஞ்சாப்(ஆமா! ஆமா) என பலதரப்பு முகங்கள். முதன் முறையாக யஷ் சோப்ரா படத்தில் கும்பலாக கும்மியடிக்காத, லிப்ஷ்டிக்கே போடாத பெண்கள்!

ஆச்சரியம் ஆனால் உண்மை!

உச்சா போறத்துக்கு கூட கோட் சூட் போட்டு ஹெலிகாப்டரில் ஒத்தை பெட்டியுடன் வந்திறங்கும் ஷாரூக் இதில் இல்லை.வசனங்கள் மிக ஷார்ப். "ஏக் காவ் மேம் ஏக் கிசான்" ஹிந்தி தெரிஞ்ச எனக்கே வசனம் புரிஞ்சதுனா பார்த்து கொள்ளுங்கள். அதிலும் அந்த ஜார்கண்ட் மா நில பெண்கள் வசனம் உச்சரிக்கும் விதம், ஹரியான்வி மொழியில் பேசும் பெண் கைத்தட்டலை பெறுகிறார்கள்.


பஞ்சாபி பெண் அந்த மாநிலத்துக்கே உரிய வேகம், கோபம் எல்லாம் கலந்து கட்டி அடிக்கிறார்! என நான் இங்கு மெய் மறந்து எழுதினால் ஒரு வாரம் நீங்க தான் பாத்ரம் தேய்க்க வேண்டி இருக்கும் என அம்மணி அன்பாக எச்சரித்து இருப்பதால் நீங்களும் இந்த வரிகளை விட்டு விட்டு படியுங்கள். கமண்ட் செக்ஷனில் காப்பி பேஷ்ட் பண்ற வேலை எல்லாம் வேணாம்! இப்பவே சொல்லிக்கறேன் .


ஷாரூக் - இதுவரை நான் நினைத்து கூட பார்த்திராத ஷாரூக். டான்(DON) என்ற படத்தில் ஹீரோவாக வந்து காமடியில் கலக்கிய ஷாரூக்கா இது? வயதுக்கேற்ற குறுந்தாடி, உடல் அசைவுகள், முழுக்கை சட்டையை அழகாக முட்டி வரை மடித்து விட்ட நேர்த்தி, மனித சைக்காலஜியை அழகாய் புரிந்து கொண்டு மகளீர் அணியினை வழி நடத்தும் விதம், தான் துரோகி இல்லை! என்பதை 4 பக்க வசனங்களாய்(கேப்டன விட்டா பட்டய கிளப்பி இருப்பார்) பொழியாமல் கண்களிலேயே காட்டிய விதம் என நடிப்பில் பிஸ்த்து காட்டுகிறார். அவார்டு உறுதிங்கோ!
கண்களை உறுத்தாத லைட்டிங்க், ஆஸ்த்ரேலியாவை படமாக்கிய விதம், மற்றும் குறிப்பிட்ட ஆங்கிள்களில் காமிரா கோணங்கள் குறிப்பாக சொன்னால் அந்த இந்தியாவுக்கும் அர்ஜெண்டினாவுக்கும் நடக்கும் ஹாக்கி மேட்ச்சை காமிரா வீராங்கனைகளோடு வந்து, பின் ட்ராலி ரோலிங்க் செய்து, சட்டுனு கிரேன் ஷாட்டில் மைதானத்தை காட்டிய விதம் இருக்கே! அடடா! (இப்படிலாம் டெக்னிகலா எழுதினா தான் இந்த பதிவு தேசி பன்டிடிலோ, கில்லியிலோ வருமாம் அதான்! கண்டுகாதீங்க)

இந்தியாவில் கிரிகெட்டை தவிர வேறு விளையாட்டை (டென்னிஸ் விதிவிலக்கு அதுவும் சானியா இருப்பதால் தான்) கண்டுகொள்ள ஆட்கள் இல்லை! என்ற உண்மையை அழகாக வாழைபழத்தில் ஊசி ஏற்றுவது போல சொல்லி இருக்கிறார்கள். இந்திய விளையாட்டு வீரர்களுக்கு கோச்சாக இருப்பது எவ்ளோ கடினம்? என்பதை இதை விட சிறப்பாக யாராலும் காட்ட முடியாது. சாப்பல் மாமா ஏன் துண்டை கானோம் துணிய காணோம்னு ஓடினார்?னு இப்போ தெரியுது எனக்கு.

இந்த படத்தின் மிக பெரிய பிளஸ் பாயிண்ட் ஷாருகிற்க்கு இல்ல, யாருக்குமே டூயட் கிடையாது. ஒவ்வோரு வசன முடிவிலும், எஸ்.ஏ. ராஜ்குமார் தயவில் "ல லா லா ல லா லா" கோரஸ் கிடையாது. மல்லிகா ஷெராவத்தின் ஐட்டம் சாங்க் இல்லை.

இன்டர்வல் ஒரு மணி நேரத்திலேயே வந்து விடுகிறது. பக்கத்து சீட் நாதாரி, பாப்கார்ன், பெப்ஸி, ஐஸ்க்ரீம் என வாங்கி வந்து என் வயதெறிச்சலை கொட்டி கொண்டான்.

தங்கமணி: எவ்ளோ பாசமா அவன் தங்கமணிக்கு பாப்கார்ன் ஊட்றான் பாருங்கோ!

அது அவன் தங்கமணி இல்லை, தள்ளிண்டு வந்தது.

உங்களுக்கு எப்டி தெரியும்?

எந்த லூசாவது நாப்பது ரூவாய்க்கு ஒரு பாக்கட் பாப்கார்ன் வாங்குவானா? எங்க ஊர்ல ரூவாய்க்கு நாலு அச்சு முறுக்கு. ரெண்டு ரூவாய்க்கு வாங்கினா ஒன்னு கொசுறு தருவான்.

தங்கமணி: ( நக்கலாக) உங்க ஊர்ல சக் தே இந்தியா படம் வருமா?

கிளைமாக்ஸ் எடுத்த விதம் மிக நேர்த்தி. டைரக்டருக்கு இது இரண்டாம் படமாம். நம்ப முடியலை. பின்ணணி இசை இன்னும் கொஞ்சம் மெருகேற்றி இருக்கலாமோ? நல்ல கதைகளம், சோப்ரா சார், எங்க ஏ.ஆர். ரஹ்மானிடம் குடுத்து இருக்கலாமே! லகான் பாத்தீங்க இல்ல? பிரியாணி நல்ல வேணும்னா பாஸ்மதி ரைஸ் வாங்க தயங்க கூடாது சார்.

மொத்ததில் சக் தே இந்தியா - சலாம் இந்தியா.

இதே படத்தை பற்றி ஒரு அசத்தலான விமர்சனத்தை பிலாகேஸ்வரி வாயால் கேளுங்கள். அக்கா குவிஸ் போட்டி எல்லாம் நடத்தறாங்க. செம சுவாரசியமா இருக்கு.
இந்த படத்தின் தமிழ் உரிமை நமது ரீமேக் ராஜாக்கள் கையில் கிடைக்காமல் இருக்கனும். இல்லாட்டி, மாடசாமி s/o மயில்சாமி!னு ரீமேக் பண்ணிவிடுவார்கள்!

Friday, August 17, 2007

வல்லிய கேரளம்!

மு.கு: "போதுமே! நீங்க டைட்டில் வைக்கிற லட்சணம்! என்று சென்ஸார் போர்டின் கடுமையான ஆட்சேபனை காரணமாக "கும்தலக்கடி கும்மாவா! கேரளானா சும்மாவா?" என்ற அருமையான தலைப்பு கைவிடப்பட்டது.

கேரளா என்றவுடன் உங்களுக்கு சட்டுனு என்ன நினைவுக்கு வருகிறது?
1) God's Own country! India's Venice - என பீட்டர் விட ஆரம்பித்தால் அப்படியே சுண்டல் வாங்கி கொண்டு நடையை கட்டவும்.

2) நேந்ரங்காய் சிப்ஸ் சாம்பார் சாததுக்கு நல்ல சைடு டிஷ் என்று நினைத்தால் நீங்கள் ஒரு பொறுப்பான குடும்ப தலைவி.

3) கதகளி, கப்ப கிழங்கு, குழல் புட்டு, முல்லை பெரியார் அணை, ஆன்டனி என்று நீங்கள் நினைத்து இருந்தால் சினிமா அதிகம் பார்பவராக இருப்பீர்கள்.

4) மீரா ஜாஸ்மின், மஞ்சு வாரியர், கோபிகா குட்டி, காவ்யா மாதவன், நவ்யா நாயர் போன்றவர்கள் அவதரித்த திவ்ய ஷேத்ரம் என நீங்கள் நினைத்து இருந்தால் கையை குடுங்கள் - யூ ஆர் ஸ்டில் யூத்.

5) சபரி மலை, மலையாள பகவதினு நீங்கள் அடுக்கினால் ஹிஹி, பழம் நீயப்பா! உலா வரும் ஒளிகதிர் நடத்த நீங்கள் தான் சரியான ஆள்.

6) களரிப் பயட்டு, வர்ம கலைனு உங்களுக்கு அதிரடியாக தோன்றினால் நீங்கள் தினமும் ஆப்பு வாங்கும் அப்பாவி ரங்கு அல்லது ஆப்படிக்கும் ஒரு தங்கமணி.
டேய்! உனக்கு என்ன தோணிச்சு? அத சொல்லு முதல்லனு நீங்கள் கேட்கலாம்.
என் போன்ற குழந்தைகளுக்கு கிருஷ்ணர் குழந்தை ரூபமாக தவழும் குருவாயூர் தான் நினைவுக்கு வரும்னு நான் சொன்னால் நீங்கள் நம்ப போவதில்லை. :)

சரி, பில்டப் போதும், மேட்டருக்கு வரேன்.
திருமணம் ஆனதும் ஹைனிமூனுக்கு மொரிஷியஸா? மாலத்தீவுகளா? எங்க போக போறோம்?னு தங்கமணி தாக்குதலில் குதிக்க, நாம எல்லாம் இந்தியர்கள், அதனால அன்னிய தேசத்துக்கு எல்லாம் ஹைனிமூன் போனா அப்துல்கலாம் கோச்சுப்பார்.

திருநெல்வேலியில் இல்லாத இடங்களா? அகஸ்த்தியர் அருவி இருக்கு, மணிமுத்தாறு, பாப நாசம் அணைகள் இருக்கு! எங்கூர் ஆத்தங்கரையில் உள்ள பாறையில் அமர்ந்து தாமிரபரணியில் கால் நனைத்து கொண்டே ஹனிமூனை கொண்டாடலாம்னு ஒரு பட்ஜட் பத்மநாபன் பிட்டை போட்டு பார்த்தும் ஒன்னும் நடக்கவில்லை.

நீங்க இப்படி ஏதாவது டகால்டி பண்ணுவீங்கனு எனக்கு தெரியும், அதனால நானே எல்லாம் விசாரிச்சு, கேரளா டிரிப்புக்கு ஆன்லைன்ல அட்வான்ஸ் கட்டியாச்சு. ஒழுங்கா பாக்கி பணத்தை கட்டிடுங்கனு தங்கமணி பதிலடி குடுக்க வாத நாடி அடங்கி போச்சு எனக்கு.

அப்ப மாலதீவு, மொரீஷியஸ்னு சொன்னது எல்லாம்?

ச்சும்மா! அப்படி ஷ்டார்ட் பண்ணா தான் எல்லா ரங்கமணிகளும் இதுக்காவது ஒழுங்கா வழிக்கு வருவாங்கனு என் பிரண்டு சொன்னா!

ஆஹா! தெளிவா தான் இருக்காங்க, அப்ப தான் லூசா?

(அந்த பிரண்டை நான் அவசியம் பாக்கனும். அவளுக்கு இருக்கு தீவாளி. கர்ர்ர்ர்ர்ர்)

மிக சரியா அம்மணி பிறந்த நாள் வேற வந்து சேர்ந்தது. அதனால ஒன்னும் பேச முடியலை. முதலில் குருவாயூர் போனோம்.

திருப்பதி ரேஞ்சுக்கு வரிசை நீன்டு இருந்தாலும் நிற்கும் களைப்பே தெரியலை. ஹிஹி, குருவாயூர் குத்து விளக்குகள் எல்லாம் கையில் விளக்குடன் வரிசையில் நின்னா எப்படிப்பா களைப்பு தெரியும்?

ஆபிஸில் இருக்கும் திருச்சூர் குத்து விளக்கிடம் சம்சரித்து(வறுத்து) டெவலப் பண்ணிய மலையாளம் எல்லாம் நன்னாவே கை குடுத்தது.

ஆனால் தமிழ் படங்களில் கிளைமாக்ஸ் காட்சியில் போலீஸ் வருவது போல "ஹி இஸ் மை ரங்கமணி!"னு அம்மணி சமயம் பார்த்து கோல் போட்டு நமட்டு சிரிப்பு(வில்ல சிரிப்பு) சிரிக்க, அதுவரை நன்னா சம்சரித்து வந்த குத்துவிளக்கு, "என்ட அம்மே அழைக்கினு"! சேனலை மாற்றி, கிளிக்கு இறக்கை முளைச்சு பறந்து போக, கோவில் கடைகளில் பூரிக்கட்டை என்ன விலை?னு அம்மணி விசாரிப்பதை பார்த்து விட்டு அவசரமாக ஒரு உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டோம்.

ஒரு வழியா தரிசனம் முடிந்து(உம்மாச்சி தரிசனம்ப்பா!) அங்கிருந்து எர்ணாகுளம் சென்றடைந்தோம். அங்கே தயராக எங்கள் டிராவல் ஏஜண்ட் காருடன் வந்து எங்களை பிக்கப் செய்து கொண்டார்.

அடுத்த நாள் முழுக்க மூனார் ரவுண்டப் தான்.
அழகிய கேரள படங்களுடன் அடுத்த பதிவில் பார்ப்போமா?

Monday, August 13, 2007

இன்றைய சுதந்திரம்

இடம்: திருநெல்வேலி
இந்த தடவையாவது அப்பா லீவுக்கு வருவாரா மா? எனக்கு புது சைக்கிள் கிடைக்குமா?

கண்டிப்பா வருவார் கண்ணா! நேத்து நைட் கூட போன்ல உங்கிட்ட பிராமிஸ் பண்ணாரே?

ஆமா! போன வருஷம் கூட இப்படி தான் சொன்னார், வந்த ரெண்டு நாளுல கிளம்பிட்டார். ராஜேஷ், பிரகாஷ் அப்பா எல்லாம் அவங்க கூடவே இருக்காங்க. ஹோம் வர்க் செய்ய கூட ஹெல்ப் பண்றாங்களாம்.

சரிடா ராஜா! எல்லார் மாதிரியா உங்க அப்பா! அவங்க எல்லாம் மவுண்ட் எவரெஸ்ட் எங்க இருக்கு? எவ்ளோ உயரம்?னு புக்குல தான் படிக்கறாங்க. பாரு உங்க அப்பா அங்க தான் வேலை பண்றாரு.
இதோ பாரு அப்பா எவ்ளோ பெரிய டிரஸ் போட்டுண்டு கைல மெஷின் கன் வெச்சுண்டு ஹெலிகாப்டர் பக்கத்துல நிக்கறார் பாரு!

இடம்: சியாசின், மைனஸ் 52 டிகிரி குளிர், 21537 அடி உயரம்.

ஹலோ மேஜர்! இந்த தடவை நீங்க லீவுக்கு போறீங்க போல, கங்கிராட்ஸ்.

தாங்க்ஸ் ராஜ்! ரொம்ப சந்தோஷமா இருக்கு. எனக்கு ஒரு வாரம் முன்னடியே நீங்க திருநெல்வேலி போறீங்க இல்லையா, ஒரு சின்ன ஹெல்ப் பண்ண முடியுமா?

நோ பிராப்ளம்! சொல்லுங்க வாட் கேன் ஐ டூ பார் யூ?

என் பையன் புது சைக்கிள் கேட்ருக்கான். நான் ஊருக்கு போற வழில வாங்க முடியுமா?னு தெரில. எனக்காக நீங்க வாங்கி வைக்க முடியுமா? நெல்லை ஸ்டேஷன்ல நான் வாங்கிக்கறேன்.

ஷ்யுர்! இது கூட செய்ய மாட்டேனா உங்களுக்கு?

தாங்க்ஸ் ராஜ்!

இடம்: அகஸ்தியர்பட்டி விமான தளம் - நெல்லை மாவட்டம்

மேஜரின் மனைவி, ராஜ் மற்றும் குழந்தை அர்ஜுன் கையில் புது சைக்கிளுடன் மேஜரின் வரவுக்காக காத்திருந்தனர்.

ராணுவ விமானம் ரன்வேயில் வந்திறங்கியது. மூவர்ண கொடி போர்த்திய பெட்டி வந்திறங்கியது!

"சியாசினில் நடந்த தீவிரவாத ஊடுருவலை நமது இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது. இதில் நடந்த பயங்கர சண்டையில் அன்னிய நாட்டு கூலிபடைகள் 150 பேர் கொல்லப்பட்டனர். ராணுவ தரப்பில் ஒரு மேஜர் உட்பட இருபது வீரர்கள் உயிர் நீத்தனர். இறந்தவர் குடும்பங்களுக்கு பிரதமர் தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்டார். இத்துடன் செய்திகள் முடிவடைகிறது.

நேயர்களே! சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகள்:
காலை 7.30க்கு:
தேச பக்தி பாடல்கள் - பாடுபவர் சீர்காழி சிவசிதம்பரம்

9.00 மணிக்கு:
மேடி மாதவனுடன் கல்லூரி மாணவிகள் ஒரு குறும்பு பேட்டி

9.30 க்கு:
சரோஜ்ஜா சாமான் நிக்காலோ - உருவான கதை

10.30க்கு:
உடையணிவதில் ஆண்களுக்கு அதிக சுதந்திரமா? பெண்களுக்கு அதிக சுதந்திரமா? கலகலப்பான பட்டிமன்றம் சாலமன் பாபையா தலைமையில் காண தவறாதீர்.

11.30 க்கு:
நமீதாவுடன் சும்மா நச்சுனு ஒரு பேட்டி.

மாலை 5 மணிக்கு:
உலக தொலைக்காட்சிகளில் முதன்முறையாக இன்னும் திரைக்கே வராத கமலின் தசாவதாரம் - திருட்டு சிடி காண தவறாதீர்.

நேயர்களே! சுந்திர தின நிகழ்ச்சிகளை கண்டு மகிழுங்கள், இந்திய சுதந்திரத்தை கொண்டாடுங்கள்" - எங்கோ டிவி பெட்டி அலறிக் கொண்டிருந்தது.

Thursday, August 02, 2007

மாமியார் வீடு

பொதுவாக, கல்யாணம் முடிந்து ஒன்று அல்லது ரெண்டு மாதம் கழித்து எல்லா ரங்குகளும் கண்டிப்பாக தங்கள் மாமியார் வீட்டுக்கு போயே தீர வேண்டும். தானாக கூட்டி போனால் தங்கமணியிடம் ராஜ மரியாதை தான். ஆபிஸ் ஆணிகளில் மூழ்கி முத்தெடுத்து கொண்டிருந்தால், முதலில் தங்குகளிடமிருந்து "என்னங்க! நாம வாங்கி வந்த சாம்பார் பொடி, ரச பொடி, பருப்பு பொடி, மூக்கு பொடி எல்லாம் காலியாக போகுது. அதனால நாம ஒரு எட்டு நம்ம அம்மா வீட்டுக்கு போயிட்டு வரலாம்!"னு ஒரு வேட்பு மனு தாக்கல் ஆகும்.
அடுத்த வாரம், சாம்பார், ரசத்தில் உப்பு புளி எல்லாம் குறைய தொடங்கும்(என்ன ஒரு வில்லதனம்?). அப்படியும் புரியாத மாங்கா மண்டைகளுக்கு கடைசியாக ரிவிட்டு தான்.
எப்படா மாப்ள வர போறார்? நம்ம பொண்ண எப்படி பாத்துக்கறார்?னு தங்கமணி சைடுலயும் அவங்க பெரியம்மா, சித்தி, மாமா, மாமினு ஒரு பெரும் படையே ரொம்ப ஆவலா இருக்கும்.

நல்ல வேளை, நானே முந்திக் கொண்டேன். ஒழுங்கா இருபது நாளுக்கு முன்னாடி டிக்கட் எல்லாம் புக் பண்ணி, டேமேஜரிடம் புளுகி லீவு எல்லாம் வாங்கிண்டு, டிரெயின் ஏறியாச்சு. நம்ம கோச்சுல லோயர் பர்த், மிடில் பர்த் யாரு? என்ன வயசு? போன்ற தங்கமணியின் பூரிக் கட்டைக்கு வேலை குடுக்கும் அதி முக்யமான தகவல்களை எல்லாம் கூட சர்வ ஜாக்ரதையாக தவிர்த்து விட்டு குட் நைட் சொல்லி(தங்கமணிக்கு மட்டும் தான் சாமி!) உறங்கி விட்டேன்.
என் தங்கமணி இருக்கும் ஏரியா இருக்கே, அடடா! ஒரு ஆட்டோ பிடிக்கறதுக்கே ஆட்டோல தான் போகனும். போயி இறங்கியதும், நல்ல குளியல் போட்டு டிபனுக்கு உக்காந்தாச்சு. என் புத்தி தெரிஞ்சோ என்னவோ, முதல் ஐட்டமே கேசரி சுட சுட வந்தது. அப்புறம் ஏன் நான் வாய தொறக்க போறேன்? நானுன்டு என் கேசரியுண்டு!னு கர்மமே கண்ணாக இருந்தேன்.

கல்யாணம் ஆகி முதல் முறையாக மாமியார் வீட்டுக்கு போனால் சில விசாரிப்புக்கள் கண்டிப்பாக இருக்கும்.
முதலில், பிளாடில் இருக்கும் ஒரு பாட்டி தான் தொண்டையை செருமி கொண்டு பஞ்சாயத்தை ஆரம்பிப்பார். என்ன? வீட்டுல ஏதும் விஷேசம் வருதா?னு ஒரு பிட்டு போட்டு விட்டு நம்மை உற்று நோக்குவார்.
இல்லாவிட்டால், தங்குவின் வாயை கிண்டுவார்கள். என்னமா? மாப்ள நன்னா கவனிசுக்கறாரா? அப்புறம், என்ன விஷயம்...? முகம் மலர்ச்சியா இருக்கே! குழந்தைகள் சந்தோஷமா இருந்தா சரி! மாப்ள! என்ன வாயவே தொறக்க மாட்டீங்கறீங்க?
- யப்பா! சிபிஐ, சிபிஸிஐடி எல்லாம் பிச்சை வாங்கனும் இவா கிட்ட.
ஒரு வழியாக இவர்களிடமிருந்து எஸ்கேப் ஆகி வந்தால் அடுத்த ஆப்பு தயாராக இருக்கும். மங்கையர் மலர், அவள் விகடன் போன்ற புத்தகங்களில் வந்திருக்கும் சமையல் ஐட்டங்களை மாப்ளை மீது டெஸ்ட் பண்ணியே தீருவது! என கங்கணம் கட்டிக் கொண்டு வந்திருக்கும் தங்குவின் சாதி சனங்கள் அவரவர் ரெஸிப்பிப்புக்கு தகுந்தவாறு நமது டைம் டேபிளை முடிவு செய்து விடுவார்காள்.
காலை சித்தி வீட்டில் புதினா பொங்கல், கத்ரிக்கா கொச்சு
மதியம் பெரியம்மா வீட்டில் அரைக்கீரை வடை கடலை மாவு பாயசத்துடன் சாப்பாடு
மாலை மாமா வீட்டில் முந்திரி கேக், முள்ளங்கி போண்டா
இரவு ஸ்ஸ்ஸ்ப்ப்பா முடியல! ஜி3 அக்ககிட்ட அடுத்த தடவ டியூசன் எடுத்துக்கனும்.

இதுல எல்லாம் எஸ்கேப் ஆகி வந்தா அடுத்தது, நகர்வலம் செய்யும் கோரிக்கை வந்து சேரும். ரங்குக்களின் பர்ஸ்களுக்கு எதிரிகளான உஸ்மான் ரோடு, டி. நகர், பனகல் பார்க், பாண்டி பஜார், லஸ் கார்னர் போன்ற ஏரியாக்களை கவனமாக தவிர்த்து பார்த்தும் ஸ்பென்ஸரை தவிர்க்க முடியலை.
அதுக்கும் காரணம் இருக்கு. ஏற்கனவே பேசியபடி எஸ்கேஎம் அக்காவை அங்க தான் சந்திக்க முடிவானது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இருக்கும் எல்லை தகராறு, ரூபாய்க்கு எதிராக டாலரின் மதிப்பு சரிவு, நடந்து முடிந்த குடியரசு தேர்தல் போன்ற விஷயங்களை பற்றியெல்லாம் ஒன்னும் நானும் அக்காவும் விவாதிக்கலைனு தான் சொல்ல வந்தேன். அதுக்குள்ள எதுக்கு டென்ஷன் ஆறீங்க? எதுனாலும் பேசி தீத்துக்கலாம்.
இட்டிலிக்கு சரியான மேட்ச் தேங்காய் சட்னியா தக்காளி சட்னியா? மாவாட்டினதுக்கு அப்புறமா எவ்ளோ உப்பு போடனும்? தயிரை புளிக்க வைப்பது எப்படி? போன்ற அதிமுக்யமான விஷயங்களில் அக்காவின் ஆலோசனை கோரப்பட்டது. போகிற போக்கில், எனக்கு எப்படியெல்லாம் ஆப்பு வைக்கலாம்? என்னென்ன ஷாபிங்க் செய்யலாம்? என கொசுறாக அக்கா தங்குவிடம் கொளுத்தி விட்டு வந்த வேலையை செவ்வனே செய்து விட்ட திருப்தியில் நடையை கட்டினார்.
இப்படியாகத் தானே மாமியார் வீட்டின் விஜயத்தை வெற்றிகரமாக முடித்து, மறக்காமல் சாம்பார் பொடி, ரச பொடி, பருப்பு பொடி, புண்ணாக்கு பொடி, மூக்கு பொடி எல்லாம் பொட்டலம் கட்டிக் கொண்டு உங்கள் அம்பி பெங்களுர் வந்து சேர்ந்தான்.