Monday, December 31, 2007

இனிய (ஆங்கில) புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


தனித்தனியா மெயில் அனுப்ப சோம்பலா இருப்பதால் இப்படி போஸ்டர் அடித்து வாழ்த்து சொல்லியுள்ளேன்.
பதிவு போட்டுவிட்டு கருத்து சொல்லலைனா எப்படி..?
ஆங்கில புத்தாண்டை கொண்டாடுகிறேன் பேர்வழி!னு இன்று பல ஸ்டார் ஹோட்டல்களில் ஆட்டம் பாட்டம் கேளிக்கை என தூள் பரக்க போகிறது என்பது ஊரறிந்த ரகசியம். மார்கட் போன பல நடிகைகள் எல்லாம் வந்து நடனமாடி புத்தாண்டை வரவேற்க போகிறார்களாம். (தமிழ் குடிதாங்கிகள் இன்னும் கோதாவில் குதிக்க வில்லையா? )
இந்த விஷயங்களுக்கு காசை சும்மா தண்ணீயா(தண்ணிக்கும்) செலவழிக்கும் மக்கள் மூன்றில் ஒரு பங்காவது தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்கி போற வழிக்கு புண்ணியமும், இருக்கும் வரைக்கும் வருமான வரி விலக்கும் பெற்று கொள்ளலாமே!

Saturday, December 29, 2007

போடுங்கம்மா ஓட்டு!

அன்பார்ந்த பிளாக்காளர் பெருமக்களே! சர்வேசன் நடத்தும் கதைப்போட்டி பற்றி கேள்விபட்டிருப்பீர்கள். நமக்கு விழபோவது என்னவோ ஒரு ஓட்டு தான், அதுவும் என்னுடைய ஓட்டு தான்! என நன்றாக தெரிந்து இருந்தும், மனம் தளராமல் பிரசாரத்தை வீட்டிலிருந்தே ஆரம்பிக்கலாம் என முடிவு செய்து, தங்கமணியிடம் கேட்டால், வழக்கம் போல இதெல்லாம் ஒரு பொழப்பா? என்பதையே ரொம்ப டீசன்டா சொன்னதில் இனி வழியில்லை என்பதால் இந்த பதிவு.
பிளாக்கில் பதிவு போட்டு கமண்ட் பொட்டியை தொறந்து வைத்து நாம் தேவுடு காத்து கிடந்தால், அனானியாக வந்து ஆப்படித்த கூட்டம் ஒரு பக்கம் என்றால் சத்தமே போடாமல் வந்து பதிவை படித்து விட்டு இடத்தை காலி செய்த கூட்டம் மறுபுறம். இதையெல்லாம் மீறி போனா போகுது!னு சில நல்லவர்கள், வல்லவர்கள் வந்து போவது மனதுக்கு ஆறுதலாய் இருக்கிறது.

சரி மேட்டருக்கு வருவோம். இந்த லிங்கில் போய் உங்களுக்கு பிடித்த கதையை தேர்வு செய்து உங்கள் ஓட்டை போட்டு விடுங்கள். எனக்கு ஓட்டு போடுங்கள்! என நான் கேட்க போவது இல்லை.

"எம்பெருமான் இலவச கொத்தனாரும், இளையனார் கண்ணபிரானும் கட்டி காத்து வரும் தமிழ் மணத்தில் தகுதியான ஒரு கதை முதலிடம் பெற்றால் அதை கண்டு சந்தோஷபடும் முதல் மனிதன் நான் தான்!, என சீன் போட விரும்பவில்லை. ஹிஹி, என் கதை யாழினியும் உங்களுக்கு பிடிக்கும். எனவே மறக்காமல் ஓட்டு போடுங்கள். கடைசி தேதி டிசம்பர் 31 - 2007.

பி.கு: எதிர் கட்சிகள் இந்த சந்தர்ப்பத்தை நன்றாக பயன்படுத்தி கொள்ளவும்.

Sunday, December 23, 2007

யாழினி

நாள்: 20- பிப்ரவரி-2030

நேரம்: மாலை 4 மணி அடிக்க ஐந்து நிமிஷம்

மிதமாக குளிரூட்டப்பட்ட அந்த கான்பிரன்ஸ் ஹால் அனைத்து உலக டெலிவிஷன், பத்திரிகை, மீடியா மக்களால் நிரம்பி வழிந்தது. மரபியல் விஞ்ஞானி புரபசர் பத்ரிநாத் தீடிரென்று அழைத்தால் விஷயம் இல்லாமல் இருக்குமா? ஏதாவது புதுவகை லேகியம் கண்டுபிடித்து விட்டாரா?

சரியாக மணி நாலு அடிக்க, அந்த ஹாலில், கையில் லாப்டாபுடன் புரபசரின் உதவியாளினி மிஸ்.யாழினி உள்ளே நுழைய ஹால் களை கட்டியது. சுடசுட நெய் விட்டு சட்டியிலிருந்து இறக்கிய கேசரி போல இருக்கும் யாழினியை பற்றி நாம் வர்ணிக்க ஆரம்பித்தால் இது தொடர்கதையாகி விடும் என்பதால் வழுக்கை தலை, கோல்ட் பிரேம் கண்ணாடியுடன் உற்சாகமாக வரும் நமது புரபசர் பக்கம் திரும்புவோம்.

புரபசர் மரபியல் துறையில் ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பழம் தின்னு கொட்டை போட்டவர். இரண்டு முறை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கபட்டு, ரஷ்ய, அமெரிக்கர்களின் உருப்படாத கண்டுபிடிப்புகளால் கோட்டை விட்டவர். சரி, புரபசருக்கு இவ்ளோ அறிமுகம் போதும். புரபசரும், யாழினியும் தமது இருக்கைகளில் அமர்ந்து கொள்ள கூட்டம் நிமிர்ந்து உட்கார்ந்தது. யாழினி, தனது லாப்டாப்பை உயிர்ப்பித்து, விரல்கள் நோகாமல் அதில் பியோனோ வாசிக்க ஆரம்பித்தாள். குடுத்து வைத்த லாப்டாப்.

புரபசர் தொண்டையை கனைத்து கொண்டு பேச்சை ஆரம்பித்தார். டியர் பிரண்ட்ஸ்! என் அழைப்பை ஏற்று வந்தமைக்கு முதலில் நன்றி. நான் மரபியல் துறையில் ஒரு மாபெரும் புரட்சிக்கு வித்திட்டு இருக்கிறேன். அதை பற்றி விளக்க தான் இந்த கூட்டம். விளக்கமா சொல்றேன்.

நம்ம எல்லோருக்குமே தத்தம் குழந்தைகள் பெரிய டாக்டரா, இஞ்சினியரா, ஒரு கிரிகட் ஸ்டாரா வரனும்! என்ற கனவு இருக்கு இல்லையா? ஆனா, படிக்க வசதி வாய்ப்பு இருந்தும், ஒரு சில பேர் தான் அவங்க துறையில மிளிர முடியுது. இதுக்கு வெளி காரணிகள் பலது இருந்தாலும், ஒரு மரபியல் விஞ்ஞானியா நான் கண்டுபிடிச்சது அவங்க ஜீன்களின் அமைப்பு தான் மெயின் காரணம்.

இன்னும் விளக்கமா சொல்லனும்னா, ஒரு சிலர் கணக்குல புலியா இருப்பாங்க. அதுக்கு அவங்க மரபியல் அமைப்பே காரணம். இந்த ஜீன்களின் அமைப்பை நமது விருப்பத்துக்கேப்ப மாத்த முடிஞ்சா, அதாவது கணினி புரோகிராமிங்க் மாதிரி எல்லாம் ஒரு கட்டுகோப்பா நடக்கும்.

என்னோட ஆராய்ச்சிபடி, கருவில ஒரு உயிர் உருவானவுடன் சரியாக அறுபதாவது நாளில், 0.12 மில்லிமீட்டர் மட்டுமே இருக்கும் அந்த உயிரின் க்ரோமோசோம் கட்டமைப்பை மாத்தி அமைச்சா உங்க விருப்பத்துக்கு ஏத்த மாதிரி உங்க குழந்தை பெரிய டாக்டராவோ, விண்வெளி வீரனாகவோ, வர முடியும்! என சொல்லி நிறுத்தி ஒரு மடக்கு தண்ணீரை புரபசர் பருக,

இது சாத்யமா புரபசர்? இதை நீங்கள் எப்படி நிரூபிக்க முடியும்? ஒரு ரிப்போட்டர் இடைமறித்தார்.

முப்பது வருஷத்து ஆராய்ச்சி இது. இன்னிக்கி புகழ் பெற்று விளங்கும் சில பேர் என்னோட ஆராய்ச்சிக்கு உட்படுத்தபட்டவர்கள் தான், என சில பெயர்களை உரக்க சொல்ல, வரிசையாக புகழ் பெற்ற சில டாக்டர்கள், கம்யூட்டர் புலிகள், விளையாட்டு வீரர்கள் அணிவகுத்து வந்து புரபசரின் கூற்று உண்மை தான்! என கூறினர்.

இந்த ஆராய்ச்சியில் உள்ள தீமைகள் ஏதாவது சொல்ல முடியுமா புரபசர்?

இந்த ஆராய்ச்சியில் நன்மைகள் தான் அதிகம். ஒரு ஆரோக்கியமான, வலிமையான பாரதத்தை நாம் உருவாக்க முடியும். நம் குழந்தை என்னவாக வேண்டும்? என்பதை கருவிலேயே நாம் முடிவு செய்து விடலாம். தீமைகள்னு பாத்தா, இவங்க தம் துறை தவிர மத்த விஷயங்களில் கிட்டத்தட்ட பூஜ்யமா இருப்பாங்க. உதாரணமா சொல்லனும்னா, கம்யூட்டர் துறையை சேர்ந்த ஒருவர், ஆபிஸ்ல உக்காந்து பிளாக் எல்லாம் எழுத மாட்டார், ஏன்னா அவருக்கு மொக்கை போடவே தோணாது.

அதாவது, கிட்டதட்ட ஒரு ரோபோ மதிரி இருப்பாங்க!னு சொல்றீங்க இல்லையா புரபசர்?

இல்ல, ஏவி விட்ட ஏவுகணை மாதிரி இருப்பாங்க.என பெருமையுடன் சொன்ன அந்த மைக்ரோ வினாடி, யாழினியின் செல்பேசி, "பூம்பாவாய் ஆம்பல்! ஆம்பல்! புன்னகையோ மெளவல்! மெளவல்!" என்ற பழைய திரைபட பாடலை ரிங்க்டோனாக ஒலித்தது.

ஈஸிட்? ரியலி? ஐ கான்ட் பீலீவ் திஸ் நியூஸ்! என ஏற்கனவே பெரிதான தனது அழகிய கண்களை இன்னும் அதிகமாக விரித்து பல ரிப்போட்டர்களின் இதய துடிப்பை அதிகரிக்க செய்தாள் யாழினி.

என்ன விஷயம்? எனபது போல புரபசர் புருவத்தை தூக்க, உங்களுக்கு மரபியல் துறையில், இந்த மிகப் பெரிய ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு அறிவிச்சு இருக்காங்க! என யாழினி திருவாய் மலர, அந்த அரங்கமே கரகோஷத்தில் அதிர்ந்தது. சந்தோஷத்தாலும், ரிப்போட்டர்களின் வாழ்த்துக்களாலும் திக்குமுக்காடி போனார் புரபசர்.

சார், ஒன் மோர் குட் நியூஸ் பார் யூ! உங்க பொண்ணு ஒரு அழகான ஆண் குழந்தைக்கு அம்மாவாகி இருக்காங்க, இப்ப தான் ஹஸ்பிடலில் இருந்து கால் வந்தது என மறுபடி யாழினி இன்ப அதிர்ச்சி குடுக்க,

யாழ்! நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்! போதும், இன்னிக்கு இவ்ளோ சந்தோஷம் போதும். நான் உடனே என் மகளை பாக்க ஹாஸ்பிடல் கிளம்பறேன். நீ இந்த ரிப்போட்டர்ஸ்க்கு நம் ஆராய்ச்சி பற்றி தேவையான மேட்டரை குடுத்து பிரஸ் மீட்டை முடிச்சுடு. எனக்கு வரும் வாழ்த்துக்களை பதிவு செய்து, நன்றி தெரிவித்து விடு. பை டேக் கேர்! என சொல்லி விர்ரென புரபசர் பறந்தார்.

போடா போ! அங்க உன் பேர குழந்தை என்ற பெயரில் பிறந்து இருக்கும் ரோபோவை பாக்க போ! உன் ஆராய்ச்சிக்கு என் அக்கா குழந்தையை பலி வாங்கின இல்ல, உன் பேரனின் ஜீன் அமைப்பை உனக்கு தெரியாமல் மாத்தியாச்சு. 3 வருஷம் கழிச்சு அது உன்னை பாத்து தாத்தா!னு ஆசையா கூப்டாது. மாமா! பிஸ்கோத்துனு கேக்கும் பாரு.

இது தான் நான் உனக்கு குடுக்கும் தண்டனை! என மனதுக்குள் சிரித்துக் கொண்டே அழுதாள் யாழினி.

பி.கு: சர்வேசன் நடத்தும் நச்சுனு ஒரு கதை போட்டிக்கு கடைசி நாளான இன்று அவசரமாய் எழுதியது. வழக்கம் போல நீங்க ஷ்டாட் மிஜீக் போடுங்க.

Sunday, December 16, 2007

2007 பிளாகர் அவார்டுகள்

இந்த 2007 வருடத்தில் நம்மை கவர்ந்த சில பிளாகர்கள் வாங்கிய அவார்டுகளை இப்போ பார்ப்போம்:
முதல் போட்டியாளர்:
இவர் வலைபூவை திறந்தாலே திருப்பதிக்குள்ள நுழைஞ்ச மாதிரி ஒரு எபக்ட் கிடைக்கும். திருப்பதி லட்டு பத்தி நம்மாழ்வார் என்ன சொல்றாரு? புளியோதரை பத்தி பெரியாழ்வார் என்ன சொல்றாரு?னு அ முதல் ஃ வரை சும்மா பிரிச்சு மேஞ்சுபுடுவாரு. :)

அட சே! நாமளும் தான் பதிவு எழுதறோமே?னு சில(பல)சமயம் வெக்கபட வெச்சுபுடுவாரு.



போட்டோவுல சும்மா ஹாலிவுட் ஹீரோ கணக்கா இருந்தாலும், அண்ணாச்சி தமிழ்ல சும்மா லெப்ட், ரைட்டுனு யூ டர்ன் போட்டு வருவாரு. அண்ணாச்சியை வெச்சு ஏதேனும் காமடி பண்ணலாம்னு நினைச்ச சங்கத்து சிங்கங்களுக்கு, வெங்கல கடையில் யானை புகுந்த கதையா நமது அண்ணன் அதிர்ச்சி வைத்தியம் குடுத்துட்டார் என்பது டாக் ஆஃப் தி தமிழ்மணம்.
எனவே இந்த வருடத்தின் பழம் நீயப்பா! அவார்டை போட்டியின்றி தட்டி செல்கிறார்.

இரண்டாவது போட்டியாளர்:
தில்லுமுள்ளு படத்தில் ஒரு ரோஜா மாலைக்காக சுவர் ஏறி குதிச்சு அம்மாவா நடிச்ச செளகார் ஜானகியை உங்களுக்கு நியாபகம் இருக்கா? நல்லது!
நல்லா எழுதி இருக்கீங்க! அல்லது சிறந்த பதிவு!னு நீங்க ஒரு கமண்ட் போட்டா உங்கள் மீது பாச மழை பொழிவார் இவர். போன் போட்டு சொன்னா நீங்க அனானியா இருந்தா கூடா உங்க பேர்ல தனி பதிவு போட்டு விடுவார்.
கைலாச யாத்ரை போற வழில பில்டர் காப்பி கேட்டு அந்த டிராவல் ஏஜண்டை ஓட ஓட விரட்டிய கதைய சொல்லவா? இல்லாட்டி, அமர்நாத் யாத்ரையில் குதிரை ஏறி இவங்க பாரம் தாங்காமல் அது குப்புற விழுந்த கதைய சொல்லவா?

சமயம் கிடைக்கும் போதெல்லாம் நான் தான் ரவுடி! நான் தான் ரவுடி!னு வடிவேல் சொல்ற மாதிரி நான் தான் தலைவி! நான் தான் தலைவி!னு சொல்லிப்பாங்க. ஆன்மிகம், தமிழ், பாரதி, சுதந்திர போராட்ட வரலாறுனு அவியல் மாதிரி கலந்து கட்டி அடித்தாலும் மவுஸ் வேலை செய்யலை! என் வீட்டு (ரங்கு வைக்கற) ரசத்துல புளி இல்லை!னு இவங்க போடற மொக்கை தான் மக்கள் மனசுல நிலைச்சு இருப்பதால் (மொக்கை) பதிவுச் சூறாவளி - 2007 என்ற அவார்டை இவர் போட்டியின்றி தட்டி செல்கிறார்.

அடுத்த போட்டியாளர்:
உங்கள் கையில் நயன் தாரா அல்லது கோபிகா படம் கிடைத்தால் என்ன செய்வீர்கள்? சபையில் சொல்ல கூச்சமாக இருக்கலாம். இவர் கையில் கிடைத்தால் "கை வண்ணம் இங்கு கண்டேன்! கால் வண்ணம் அங்கு கண்டேன்!" என நடுவில் மானே! தேனே போட்டு தேவதைகளை ஊர்வலம் வர செய்து விடுவார்.
இவரது மன நிலைக்கு ஏற்ப திரிஷா சிரிப்பார் அல்லது முறைப்பார். இவர் ஒரு போட்டியாளர். சரி அடுத்த ஆளை பார்ப்போம்.

சுட்ட பழம் வேணுமா? சுடாத பழம் வேணுமா?னு அவ்வைக்கு முருகன் கேட்ட மாதிரி இவர் சுட்ட பதிவு வேணுமா? சுடாத பதிவு வேணுமா?னு லெவல் காட்டுவார்.
இவர் போகாத ஹோட்டல் கிடையாது. இவருக்கு ட்ரீட் தந்து ஓட்டலில் மாவு ஆட்டாத பதிவரும் கிடையாது. இவரும் ஒரு போட்டியாளர்.

மூன்றாம் போட்டியாளரை பார்ப்போம்.
எல்லோரும் கவிதையோ கவிஜயோ தங்களது பதிவிலேயே போட்டு பதிவு எண்ணிக்கையை கூட்டுவர். ஆனா கவிதைக்கு தனி கடை வைத்து, தோணும் போதேல்லாம் கவிதைய போட்டு அது குப்பை தொட்டியோ, ரோஜா செடியோ எத பத்தி வேணாலும் பதிஞ்சு விடிவார். அவ்ளோ லேசுல புரியற மாதிரி இல்லாட்டியும், அங்க தான் நீங்க நிக்கறீங்க! அப்படினு எல்லோரும் பாராட்டுவாங்க, அது வேற விஷயம்.
எனவே இந்த மூனு போட்டியாளர்களில் கவிதைக்கு தனிகடை வைத்த தங்கம்! என்ற பட்டத்தை இவர் தட்டி செல்கிறார்.

இதைப் போல உங்களை கவர்ந்த பிளாக்கர்களுக்கு நீங்களும் அவார்டுகளை வாரி வழங்கலாமே! :)

Wednesday, December 05, 2007

உள்ளேன் மக்களே!

அடுத்த பதிவு போட ரொம்பவே நாளாகி விட்டது, என்ன செய்ய, ஆபிஸ்ல மலை போல வேலை பளு.சரி, இப்படியே விட்டா நம்ம பிளாக் பாஸ்வேர்டே நமக்கு மறந்து விடும் போலிருக்கு. என்னத்தை எழுத?னு ஒரே யோசனை வேற.

பேசாம, ஒரு மொக்கைய போட்டு அதை நாலு நாலு வரியா பிரிச்சு எழுதி கவிதை!னு லேபிள் குடுத்ரலாமா? இல்லாட்டி, சன்/விஜய்/ஜெயா டிவிகளில் வரும் மெகா சீரியல் பாடல்களை "எனக்கு பிடித்த பாடல்"னு ஒரு பதிவு போட்ரலாமா? இல்லாட்டி
"அ முதல் ஃ தானடா!
என் அக்கா பொண்ணு கிக்கு தானடா!" என்ற செந்தமிழ் பாடல் வரிகளை பதிவா போடலாமா?னு ஒரே குழப்பம்.

எனக்கு தான் மேட்டர் பஞ்சம்னு பாத்தா இந்த சாட்டிலைட் சானல்களுக்கும் இதே கதி தான் போலிருக்கு. எந்த டிவிய திருப்பினாலும் ஏதோ ஒரு க்ரூப் மேடையில் ஆடுகிறார்கள், அல்லது மைக்கை பிடித்து கொண்டு பாடுகிறார்கள். அதுக்கு நடுவரா ஒரு நாலு பேர் - மார்கட் போயே போன நடிகை, போனா போறதுனு ஒரு இளிச்சவாய டான்ஸ் மாஸ்டர்/பாடகர்/இசையமைப்பாளர் என அல்லோலபடுகிறது.

இதில் கலைஞர் டிவியில் வரும் நடன நிகழ்ச்சிக்கு நமீதா நடுவராய் வருவதால் எங்கள் வீட்டில் அந்த நிகழ்ச்சி நிரந்தரமாய் தடை செய்யப்பட்டு அதற்க்கு மாற்றாக பொதிகையில் வரும் வயலும் வாழ்வும் ஒளிபரப்ப படுகிறது. இதுக்கு நான் கார்ட்டூன் சானலே மேல்!னு சமரச உடன்பாடு செய்து கொண்டு விட்டேன்.

இடைப்பட்ட கேப்பில், பிறந்த நாள் எல்லாம் வந்து போனது. நேத்து நடந்த மாதிரி இருக்கு. போன வருடம் இதே நாளில் தான் சுடச்சுட கேசரி சாப்பிட போனேன். ஹிஹி, தங்கமணியையும் பார்த்தேன்.

இந்த குழந்தையையும் மறக்காமல், கைபுள்ளை, வல்லி சிம்ஹன், பிலாக்கேஸ்வரி, கீதா பாட்டி போன்றவர்கள் போனிலும், மெயிலிலும் வாழ்த்தினார்கள். மிகவும் சந்தோஷம். தலப்பிறந்த நாளுக்கு எங்க அண்ணன் பெயரை சொல்லி வெயிட்டா அவருக்கு வேட்டு வைங்க மன்னி!னு பொற்கொடி வேலை மெனக்கெட்டு என் தங்கமணிக்கு மெயிலில் அட்வைஸ் வேற. என்னத்த சொல்ல?

இப்போதைக்கு இவ்ளோ மொக்கை போதும்.

விரைவில் எதிர்பாருங்கள் 2007 பிளாகர் அவார்டுகள்!