part- Iஒரு விளம்பரம் வெற்றியடைய அடிப்படையாக சில விஷயங்கள் தேவை.
1) மக்கள் வாழ்வோடு தொடர்புடைய நிகழ்வுகளை சிம்பிளாக சொல்லும் விதம். எ.கா: குழந்தைகள் உண்டியலில் சேமிக்கும் பழக்கத்தை அழகாக தங்கள் வங்கிக்கு பயன்படுத்தி இருப்பார்கள் பாங்க் ஆப் இந்தியா.
2) எளிமையான, நாம் அன்றாடம் புழங்கும் வார்த்தைகள், வரிகள், பாடல்கள். புது வீடு! புது மனைவி! கலக்கற சந்துரு! - ஏஷியன் பெயின்ட்ஸ்.
3) விளம்பர படத்தில் நடிக்க தேர்ந்தெடுக்கப்படும் மாடல்கள் நமது பக்கத்து, எதிர் வீட்டு தெரிந்த முகங்கள் போல இருப்பது பிளஸ் பாயிண்ட். பத்தே மூவுல செக் மேட் என பிஸ்து காட்டுவாரே அந்த ஏர்டெல் தாத்தா மாதிரி.
இது மூணும் சரியாக இருந்து விட்டால் அந்த விளம்பரம் ஹிட் என நான் அடித்து கூறுவேன்.
வளவள டயலாக்ஸ், சொல்ல வந்த விஷயத்தை தலையை சுத்தி மூக்கை தொடும் பாணி, முகம் சுளிக்க வைக்கும் விதமாய் படமாக்கிய விதம் என பல விஷயங்கள் ஒரு நல்ல பிராண்டை கூட மக்கள் ஏறெடுத்து பார்க்காத நிலைக்கு தள்ளி விடும்.
நான் சொன்ன அடிப்படை விஷயங்கள் தவிர ஒவ்வோரு பொருளை மார்கட் பண்ண ஒரு தனி டெக்னிக் கையாள வேண்டி இருக்கும்.
உதாரணமாக, "வாஷிங்க் பவுடர் நிர்மா! பாலை போல வெண்மை - நிர்மாவாலே வருமே!" என பாட்டு பாடி, நிர்மாவின் சிறப்பை சொல்லுவது ஒரு விதம் என்றால் மஞ்ச கட்டியை வாங்கினா மஞ்ச சட்டை, நீல கட்டியை வாங்கினால் வெள்ளை சட்டை என கம்பேரிசன் பண்ணி தனது மார்கட் எதிரிக்கு ஆப்பு வைப்பது ஒரு வகை.
ஆடை வகைகளுக்கு என்றுமே ஒரு தனி மார்கட் உண்டு. பொங்கலுக்கு ஆரம்பித்தால் கிறிஸ்மஸ் வரை புத்தாடை வாங்காத ஆள் தான் யாரு? அதுவும் புடவை என்றால் கேட்கவே வேணாம்.
எனவே ஜவுளி கடைகள் போட்டி போட்டு கொண்டு விளம்பர ஏஜன்சிகளை அணுகி ஒரு படம் எடுத்து குடுங்க எஜமான்! என கெஞ்சுகின்றன. இதில் டாப் டக்கர் என சொன்னால்
சென்னை சில்க்ஸ் தான்!
"மத்தாப்பு சுட்டு சுட்டு போட தான் வேணும்" என ரீமேக் சாங்க் பாடி, சென்னை சில்க்ஸில் தீபாவளி! என ஒரு தீபாவளியை நம் கண் முன் கொண்டு வந்து விடுகிறார்கள். முக்யமாக, இவர்கள் தேர்ந்தெடுக்கும் மாடல்கள் இருக்கே! ஆஹா! சுப்பரோ சூப்பர்!
இப்போழுது
ஸ்ரீதேவி சில்க்ஸ் - கோவை ஒரு விளம்பரம் காட்டுகிறார்கள்.
ஏதோ ஒரு பழைய பாடலை நினைவுபடுத்தும் வகையில் "ஆசை அதற்க்கும் மேலே!" என ஒரு மாடல் தன் தோழியரோடு ஆடுவது அடடா! கண் கொள்ளா காட்சி. அந்த மாடல் நடிகை பத்மப்ரியா தான்! என என் தங்கமணி அடித்து(தரையில தான்) கூற, நான் இல்லை என மறுக்க, இப்படியாக இன்னும் அந்த விளம்பரம் சென்சார் இல்லாமல் எங்கள் வீட்டில் ஓடி கொண்டிருக்கிறது. (இனி என்ன ஆகுமோ?)
சரவணா ஸ்டோர்ஸ்காரர்கள் சினேகாவை தங்கள் விளம்பரங்களுக்கு வருட கான்டிராக்ட் போட்டுவிடுவார்கள் போலும். ஆனால் தீடிர்னு "எல்லோர் கண்களும் எந்தன் மேலே"னு அழகான ஒரு அமீர் கல்யாணி ராகத்தில் அமைந்த ஜிங்கிளுக்கு ஷ்ரேயா ஆடி வருகிறார்.
சரி, டிராக் மாறி விட்டேன்.
இப்போ விளம்பர ஏஜன்சிகளின் லேட்டஸ்ட் டிரண்ட் குழந்தைகளை முன்னிலைபடுத்தி விளம்பரங்களை அமைப்பது.
a) மூணு மாசம் முழுகாம இருக்கேன்!னு தன் கணவனுக்கு ப்ரூ காப்பி குடுத்து புரிய வைக்கிறாள் அவரது தங்கமணி.
b) ஆரோக்யம்னா அது கோல்ட் வின்னர் தான்!னு சமையலே தெரியாத ஒரு குழந்தை அம்மாக்களுக்கு அறிவுறுத்துகிறது.
c) கறை நல்லதாக்கும்!னு ஒரு பாசமலர் அண்ணன் -தங்கை குழந்தைகள் சொல்கின்றன.
d) தாத்தா குடுத்த உண்டியலை, பத்ரமா பாங்க் ஆப் இந்தியாவின் லாக்கரில் வைக்கிறான் அந்த பொடியன்.
e) நூடுல்ஸ் எங்கே?னு வீட்டையே அட்டகாசம் செய்கிறான் ஹார்லிக்ஸ் பொடியன்.
அடிப்படையில் லாஜிக் இல்லை என்றாலும், நம் மனதில் இத்தகைய விளம்பரங்கள் ஒரு மாஜிக் செய்து விடுகின்றன, இல்லையா?
விளம்பரங்கள் காலத்துக்கேற்ப மாறிக்கொண்டே வரனும். இல்லாவிட்டால் மக்களுக்கு போரடித்து விடும்.
அமுல் - டேஸ்ட் ஆஃப் இந்தியா சிறந்த உதாரணம். சென்னையில் பனகல் பார்க், மவுண்ட் ரோடு என நெரிசல் மிகுந்த சிக்னல்களில் பில் போர்டுகள் வைத்து இருப்பார்கள். வாரம் ஒரு முறை, அந்த வாரத்தில் நடந்த ஏதேனும் முக்ய நிகழ்வுகளை ஹைலைட் பண்ணியிருப்பார்கள். கவனித்ததுண்டா?
கற்பனை வளமும், கிரியேட்டிவா திங்க் பண்ண தெரிந்து இருந்தாலும், மக்களின் மனசை பல்ஸ் பிடித்து பார்க்க தெரிந்து இருந்தால், எல்லாவற்றுக்கும் மேலாக நீங்கள் செய்யும் விஷயத்தை ரசித்து, அனுபவித்து செய்ய கூடிய மனபான்மை இருந்தால், விளம்பர துறை உங்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க தயாராக இருக்கிறது.
வாய்ப்பு கிடைத்தால், கோபிகாவுடனோ, யானா குப்தாவுடனோ மாடலாக நடிக்க நான் கூட தயாராக தான் உள்ளேன். ஒரு பயலும் கூப்ட மாட்டேங்கறான். மீசையை எடுத்து, கோட் சூட் போட்டா நானும் சஞ்சய் ராமசாமி தான்!னு சொன்னா தங்கமணி வாயை மூடிக் கொண்டு சிரிக்கற நிலைமை தான் உள்ளது. ஹும்! ஆசை இருக்கு தாசில் பண்ண! அதிர்ஷடம் இருக்கு பிளாக் எழுத! :)
நாகை சிவா வீட்டுக்கு போய் பல விளம்பரங்களை கண்டு ரசியுங்களேன்.