Wednesday, April 30, 2008

ரங்கமணி Vs கிச்சன்

இந்த பெண்கள் மத்த விஷயங்களில் 33 சதவித இட ஒதுக்கீடு கேட்டாலும், கிச்சன் சமாசாரங்களில் ஆண்களை ஒதுக்கியே வைத்து நூறு சதவிதத்தையும் தம்மிடமே வைத்துள்ளனர். இரண்டு நாள் தங்கமணிகள் பிறந்த வீட்டுக்கு போவதாக இருந்தாலும், நீங்க ஓட்டலில் பாத்து கொள்ளுங்கள்! தேவையில்லாம கிச்சன்ல நுழைய வேணாம்!னு ஒரு அபாய எச்சரிக்கை செய்து விட்டு தான் பெட்டியை தூக்குவார்கள். நாமளும், அவங்க சொன்ன சொல்லை மீறாம திக்கற்ற ரங்குகளுக்கு தெருவோர ஓட்டலே கதி!னு சரணடைவோம்.

சமையல் ஒன்னும் பெரிய கம்ப சூத்திரம் இல்லை!னு முதலில் நாம் நம்ப வேணும். மனுஷனுக்கு நம்பிக்கை தான் முக்யம். சாதரணமா நாம காலையில் எழுந்தவுடன் ஒரு காப்பி, அப்புறமா ஏதேனும் ஒரு டிபன், மதியம் லஞ்சுக்கு என்ன பெரிசா இருக்க போவுது, ஒரு காய், சாம்பார் அல்லது ரசம், தயிர், முடிந்தால் ஒரு அப்பளம்/வடகம் இவ்ளோ தான் மேட்டர். இதுக்கு போய் பயப்படனுமா என்ன?

இதோ நானும் கோதாவுல குதிச்சாச்சு. காலை எழுந்து பல் தேய்த்தவுடன் அடுத்தது காப்பி தானே. அடடா! காப்பி வேணும்னா முந்தய நாளே பால் கூப்பன் வெச்சு இருக்கனும். ஐபிஎல் மேட்சுல கிரிக்கெட்டை (மட்டும்) ஆ!னு வாய் பிளந்து இரவு பதினோரு மணி வரை பாத்ததில் பால் கூப்பன் வைக்க மறந்தாச்சு. சரி விடுங்க, காப்பி குடிக்காதவங்க எவ்ளோ பேர் உலகத்துல இருக்காங்க.

டிபன் கடைக்கு போவோம். நேத்திக்கே மாவாட்டி வெச்சதுனால தோசை ரெடி பண்ணிடலாம். குடுகுடுனு போய் தோசைக்கல்லை கேஸ் அடுப்புல வெச்சதுக்கு அப்புறம் தான் நினைவுக்கு வருது, மாவு இன்னும் பிரிஜ்ஜுல தான் இருக்கு, அதை ஒரு பத்து நிமிஷம் வெளில எடுத்து வைக்கனுமே! சரி அதுவும் பண்ணியாச்சு.

தோசை வார்க்க எண்ணெய் வேணுமில்ல. நல்லெண்னையா? ரீபைண்ட் ஆயிலா? ஒரு மனுஷனுக்கு என்னவெல்லாம் சந்தேகம் வருது? நல்லெண்னையா தான் இருக்கும். ஆமா! ஜோதிகா கூட தோசைக்கு ஒரு கப் இதயம் நல்லெண்ணை தானே விடறாங்க. அடடா அம்பி! என்னே ஒன் பொதுஅறிவு! ஆமா! நம்மை நாம் தான் முதலில் மெச்சிக்கனும். சமைக்கும் போது அது ரொம்ப முக்யம்.

அட, தோசை வாக்க சட்டுவம் வேணுமில்ல. (ம்ஹும், மறக்க கூடிய பொருளா அது?)
பொதுவாக எல்லோர் வீட்டு கிச்சனும் ஒரு அலிபாபா குகை மாதிரி தான். தங்கமணி "திறந்திடு சீசேம்!னு சொன்னா தான் எல்லா பொருளும் நம் கண் முன்னால் வரும் போலிருக்கு. அது எப்படிங்க தங்கமணிகள் அவங்களுக்கு மட்டும் தெரியும்படியா ரசபொடியிலிருந்து, பெருங்காயம் வரைக்கும் மறைச்சு வெக்கறாங்க. நம்ம கண்ணுக்கு ஒன்னுமே தெரிய மாட்டேங்குது. எல்லாம் காலகாலமா ஆண்களுக்கு எதிரா நடந்துட்டு வர கூட்டு சதி.

கிச்சனையே ஒரு புரட்டு புரட்டி, ஒரு வழியா சட்டுவத்தை பார்த்ததும், "கண்டேன் சட்டுவத்தை!"னு துள்ளி குதிக்காத குறை தான்.
ஒரு வழியா கல்லுல தோசை விட்டாச்சு. அட! காலைல சன் மியூசிக்குல வர அந்த மஹாலட்சுமிய( நிஜ பெயரும் அது தான்) பாக்கலைனா இந்த நாள் எப்படி இனிய நாளாகும்? அடடா! அடடா! என்ன நளினம், என்ன தமிழ் உச்சரிப்பு!

தோசைய திருப்பி போடனுமில்ல? திரும்பி வந்து பாத்தா தோசை கலரும், தோசகல்லு கலரும் ஒன்னா இருக்கு. சே! அடுத்த தோசைல கவனமா இருக்கனும். காலைல சன் மியூசிக்குல இனிமே கந்த சஷ்டி கவசம் மட்டும் தான் ஒலிபரப்பனும்!னு சட்டம் கொண்டு வரனும். ரெண்டாவது தோசை கல்லை விட்டு வர சண்டிதனம் பண்ணியதில் கொத்து பரோட்டாவாக மாறி இருந்தது.

சரி, இப்ப என்ன ஆகி போச்சு? எல்லாரும் என்ன ஒரு முழு தோசைய ஹார்லிக்ஸ் மாதிரி, அப்படியேவா சாப்டறாங்க? பிச்சு பிச்சு சாப்டற வேலை மிச்சம்.

இனிமே லஞ்சுக்கு போவோம்.
கேஸ் அடுப்புல ஒரு சைடு குக்கர வெச்சு, இன்னொரு சைடுல பீன்ஸை வதக்கி, கொஞ்ச நேரம் கழிச்சு பருப்பை கரச்சு ஊற வெச்ச புளியோட கொதிக்க விட்டா சாம்பார் ரெடி. முடிஞ்சது சமையல்! அப்படினு நான் இங்க ஒரு பாராவில எழுதற மேட்டர் இல்லைனு பிறகு தான் புரிஞ்சது.

பீன்சை முந்தின நாளே நறுக்க வேண்டி இருக்கு, புளிய முன்னாடியே ஊற போடனும் போல, குக்கருக்கு மறக்காம காஸ்கட் போட வேண்டி இருக்கு. ஒரு நாள் அரிசிக்கு தண்ணிய குறைச்சா சரியா வரலைனு, மறு நாள் தண்ணிய கூட்டி வெச்சா சுட சுட பொங்கல் வருது. ஸ்ஸ்ப்ப்பா!
வருஷ கணக்குல இத எல்லாம் பொறுமையா செஞ்சு, நாம குடுக்கற பின்னூட்டத்தையும் வாங்கிட்டு, எப்படி தான் பெண்கள் பொறுமையா இருக்காங்களோ?

இங்க அம்பி! அம்பினு ஒரு மானஸ்தன் இருந்தானே? எங்கப்பா அவன்?னு நீங்க கேக்கறது நல்லா காதுல விழுது.
*************************************************
இந்த இடுகையும் இரண்டு போட்டிக்கு தான்!

Tuesday, April 29, 2008

தீதும் நன்றும்...


டிஸ்கி ஒன்னு: இந்த கதையில் வரும் பெயர்கள்,சம்பவங்கள் யாவும் கற்பனையே!

காட்சி ஒன்று:

புகழேந்திக்கு மிகவும் படபடப்பாக இருந்தது. ஆளுங்கட்சியில் ஒரு முக்ய பொறுப்பில் இருந்தாலும், அவனுக்கு இந்த இரண்டாம் நிலை தலைவர்கள் என்ற பட்டம் பிடிக்கவில்லை. அதுலயும் தன்னை விட வயதிலும் அனுபவத்திலும் முதிந்தவர்கள் பலர் இருக்கிறார்களே! என்ற ஏக்கம் பெருமூச்சாக வெளி வந்து கொண்டிருந்தது. ஏதேனும் செஞ்சே ஆகனும்!

மருத்துவர், முதல்வர் அறையிலிருந்து வெளிவருவதை பார்த்து, அரக்க பரக்க முக்ய தலைகள் ஓடினர்.

தலைவருக்கு ஒன்னும் ஆபத்தில்லையே?

ஒன்னும் சொல்றதுக்கில்லை, இருபத்தி நாலு மணி நேரம் கழித்து தான் எதுவும் சொல்ல முடியும். என்னால முடிஞ்சத எல்லாம் செஞ்சு இருக்கேன். பார்ப்போம்! மருத்துவர் நகர்ந்து விட்டார்.

மருத்துவரின் பேச்சு பெருந்தலைகளுக்கு காத்து புடுங்கி விட்டது போல ஆனது. ஒருவர்பின் ஒருவராக கலைய தொடங்கினர்.

புகழு! இதவிட்டா அடுத்து ஒரு வாய்ப்பு கிடைக்காது. சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கோ! என உள்மனம் சொல்ல, "அய்யகோ! தமிழகத்தின் தலைமகன் தலையணை இல்லாமல் உறங்குவதா?" என கதறியபடியே முதல்வர் அறைக்குள் சென்ற புகழை மெய்காவலர்கள் தடுக்க வில்லை.

நாற்பது வருடங்களுக்கு பிறகு,

காட்சி இரண்டு:

முதல்வர் வீட்டுக்கு வெளியே வட்டம், மாவட்டம் என எல்லாம் ஒன்று கூடி ஒரே சலசலப்பு.

முறைப்படி, மூத்தவர் தானே ஆட்சிக்கும் வாரிசா வரனும்?

என்னயா முறைப்படி? இரண்டாமவர் தான் கட்சிக்கு எல்லாம். எல்லா தொகுதி பணிகளையும், மாநாட்டையும் இவரு தான் முன்னின்னு நடத்தறாரு. அப்ப எல்லாம் வராத மூத்தவரு இப்ப எங்கயா வந்தாரு? ஒரு வட்டம் தன் விசுவாசத்தை காட்டியது.

மூக்கு ஒழுகிட்டு இருந்தவங்க எல்லாம் முச்சந்தில மேடை போட்டு பேசினா முதல்வராகிட முடியுமா? தென் மாவட்ட ஆதரவு இல்லாம தமிழகத்துல எவனும் ஆட்சி அமைக்க முடியாது. எங்க அண்ணன் கன்ட்ரோலுல இருக்கு டோட்டல் தென்னகமே! அது தலைவருக்கும் தெரியும். தல இருக்கும்போது வாலாட கூடாது. ஒரு மாவட்டம் பதிலுக்கு வாலாட்டியது.

இந்த சூடான விவாதங்களை எல்லாம் மாடியிலிருந்து கேட்டபடியே நம்பர் இரண்டு, முதல்வர் அறைக்கு நுழைந்தது.

என்ன டாக்டர்? இப்ப எப்படி இருக்கு தலைவருக்கு?

தலைவர் நிறைய ரெஸ்ட் எடுக்கனும். இப்பவும் தலைவர்னு தான் கூப்டனுமா? அப்பானு சொல்ல கூடாதா? டாக்டர் சரியான நேரத்தில் பிட்டு போட்டார். மருத்துவ கல்லூரிக்கு அப்ரூவல் வாங்கியாகனுமே!

இல்ல டாக்டர், அவர் இந்த நாட்டுக்கே தலைவர், அப்புறம் தான் எங்களுக்கு எல்லாம் அப்பா.

சரி தம்பி, நான் கிளம்பறேன், ஏதாவது தேவைனா போன் பண்ணுங்க.

இருவரின் சம்பாஷணைகளை கேட்டு புன்முறுவல் பூத்த தலைவர்,

தமிழ் மூன்றேழுத்து!

தம்பி மூன்றேழுத்து!

அன்பு மூன்றேழுத்து!

கட்சி மூன்றேழுத்து!

வெற்றி மூன்றேழுத்து!

வீரம் மூன்றேழுத்து!

யோவ்! அல்வா கூட மூன்றேழுத்து தான்! இப்ப எதுக்கு இந்த பிட்டு? இப்பவே என்னை அடுத்த வாரிசு!னு அறிவிக்கனும், இல்ல நடக்கறதே வேற.

ஆத்திரம் அறிவுக்கு பகை தம்பி! பொதுகுழு கூடி ஒரு நல்ல முடிவு எடுக்கும். அதுவரை காத்திரு!
கழகம் காத்து இரு!
பொறுமை கூட மூன்றேழுத்து தான் தம்பி! (புகழேந்தியா கொக்கா? )

கடுப்புடன் நம்பர் இரண்டு, அறையை விட்டு வெளியேறியதும் நம்பர் ஒன் வந்து சாமியாடிவிட்டு, அதே பதிலை வாங்கி கொண்டு கடுப்புடன் வெளியேறியது.

நடு நிசியில், "அய்யகோ! தமிழகத்தின் தலைமகன் தலயணை இல்லாமல் உறங்குவதா?னு கூவியபடியே நுழைந்த நம்பர் ஒன்னையும், இரண்டையும், முதல்வரின் மெய்காவலர்கள் ஏனோ தடுக்க வில்லை.

டிஸ்கி இரண்டு: டிஸ்கி ஒன்னை மறுபடியும் படித்து விட்டு பின்னூட்டத்துக்கு செல்லவும்.
*************************************************
இந்த இடுகையும் ரெண்டு போட்டிக்கு தான்.

Monday, April 21, 2008

தமிழ் Vs உதித் நாராயண்

எந்த மொழி பாட்டானாலும் அந்த பாடல் ஹிட்டாக மூன்றே காரணங்கள் தான் இருக்க முடியும். ஒன்னு அந்த பாடல் வரிகள், இரண்டு பாடல் வரிகளை அமுக்காத இசை, மூணு அந்த பாடலை பாடிய பாடகரின் தனிதிறமை. நான்காவதாய் படமாக்கிய விதத்தையும், அதில் நடித்த நடிக/ நடிகையரின் திறமையை சேர்த்து கொள்ளலாம், என்றாலும் அது இரண்டாம் பட்சமே!
என்ன தான் கவிஞர் சிறப்பாக எழுதினாலும், இசை கருவிகள் அந்த வரிகளை அமுக்கி விட்டால் அந்த பாடலின் கதி கோவில் திருவிழாவில் கொட்டு சத்தத்துக்கு இடையில் வில்லுபாட்டு மாதிரி தான். இதற்க்கு சரியான உதாரணம் சிவாஜியில் வரும் ஒரு கூடை சன் லைட் பாட்டு. அதில் அந்த பாடகர் ஒரு வாரமாய் ரெண்டுக்கு வராமல் நயம் மலவாழபழம் நான்கை உள்ள தள்ளி விட்டு, இரண்டு டம்ளர் தண்ணீரையும் குடித்து விட்டு டாய்லட்டில் பிரம்மபிரயத்தனம் செய்யும் போது ஏ.ஆர்.ரஹ்மான் ரீரெக்கார்டிங்க் வைத்திருப்பார் போலும். ரொம்பவே மெனக்கெட்டிருப்பார் பாவம்.

பிற மாநில பாடகர்களை வைத்து தமிழ்பாடல்களை பாட வைக்கும் போது இசை அமைப்பாளர்கள் சில தியாகங்கள் செய்ய வேண்டி இருக்கும். யேசுதாஸ், சித்ரா, ஹரிஹரன்(?) போன்ற பிற மா நில பாடகர்கள் தம் கடும் உழைப்பால் தமிழர் மத்தியில் நீங்கா இடம் பெற்றுவிட்டனர். இந்த வரிசையில் ஷ்ரேயா கோசல், சாதனா சர்கம் போன்றோரும் மிக வேகமாக முன்னேறி வருகிறார்கள்.

இப்போ நம் பதிவின் நாயகன், உதித் நாராயண் பத்தி சில வரிகள் சொல்லியே ஆகனும். பல மொழிகளிலும், அவரது தாய்மொழியாம் போஜ் புரியிலும் பல பாடல்கள் பாடி உள்ளார். "மெஹந்தி ரஹா கே ரஹ்னா"வையும், லகானில் வரும் "மிட்டுவா! அரே மிட்டுவா!"வையும் யாராலும் மறக்க முடியாது. எல்லாம் சரி தான்.



இந்த சப்பாத்தி தேசகாரங்களுக்கு 'ச' 'ஸ'காரங்களில் உள்ள வித்யாசம் அவ்ளோ லேசில் வராது. டென் தெளசண்ட் என நாம் சொன்னால் டென் தெளஜண்ட் என அவர்கள் உச்சரிப்பார்கள். என் மீது நம்பிக்கை இல்லையானால் உங்க ஆபிஸில் இருக்கும் ஒரு சப்பாத்தியிடம் (பிகராய் இருத்தல் சால சிறந்தது) வாயை கிண்டி பாருங்கள்.

நமது அண்ணன் உதித் தென்னிந்திய மொழி அனைத்திலும் இப்போ சக்கை போடு போடுகிறார். ரன் படத்தில், "காதல் பிசாசே! ஏதோ சவ்க்யம் பரவாயில்லே!" என இவரின் பாடலை கேட்டு புளங்காகிதமடைந்த தமிழர்கள் ஏராளம். சரி விடுங்க, மாதவனே அப்படி தான் தமிழ் பேசறார், அதான் உதித்தை பாட வெச்ருகாங்க, இல்லையா?னு சமாதானம் சொல்லி கொண்டேன்.

இந்த ஹீரோக்கள் தண்ணீயடித்து விட்டு "ஏரோப்ளேன் பறக்குது பார் மேல"னு ஒரு தத்துவ பாடல் பாடுவார்கள் நம் தமிழ் சினிமாவில். அந்த பாடல்களுக்கு கூப்டுடா உதித் அண்ணனை!னு கோடம்பாக்கம் சிவப்பு கம்பளம் விரித்தது. பின் மெல்ல மெல்ல "சோனியா! சோனியா சொக்க வைக்கும் சோனியா" என டூயட் எல்லாம் உதித் குரலில் நம் ஹீரோக்கள் பாடி ஆடினார்கள். இப்போ என்னடானா மெலடில கூட உதித் அண்ணன்,ஏழரை கட்டையில் பாட ஆரம்பித்து விட்டார்.

எந்த பாடலுக்கு யாரை பாட வைத்தால் அந்த பாடல் சிறப்பாக அமையும்? என திறமையான இசையமைப்பாளருக்கு கணிக்க தெரிய வேண்டும். இந்த விஷயத்தில் எனக்கு தெரிந்து ராஜா, ரகுமானை விட விஞ்சி நிற்கிறார் என கருதுகிறேன். (ரகுமான் ரசிகர்கள் என் வீட்டுக்கு ஆட்டோ அனுப்ப நேரிடலாம்). :)

பல புதிய குரல்களை நமக்கு அறிமுகபடுத்தியதில் ரகுமான் கிங்க் தான். ஆனால் சிவாஜியின் சஹானாவை உதித் அண்ணனுக்கு தாரை வார்த்தது எல்லாம் டூ மச்சோ மச்! ஆமா!
இதே பாடலை, ஒரு மது பாலகிருஷ்ணனோ, ஷ்ரிராம் பார்த்தசாரதிக்கோ ஹரிஷ் ராகவேந்திராவுக்கோ குடுத்து இருந்தால் பின்னி பெடலெடுத்து இருப்பார்கள். தமிழில் தான் உதித் அண்ணன் தாண்டவமாடுகிறார் என பார்த்தால் இங்கு கன்னடத்திலும் அண்ணன் பட்டய கிளப்புகிறார் என கன்னட கண்மணிகள் புலம்புகிறார்கள்.

பள்ளி காலங்களில் கோனார் தமிழ் உரைகளை படிக்காத மாணவர்களே இருக்க முடியாது. அதுபோல உதித் நாராயண் தமிழ் உரைனு யாரேனும் கைடு போட்டால் கொஞ்சம் உபயோகமாய் இருக்கும். திரைபடங்களுக்கு தமிழில் பெயர் வைத்து வரிவிலக்கு வாங்குபவர்கள் நல்ல தமிழ் பாடல் உச்சரிப்புக்களில் அசட்டையாக இருப்பது ஏனோ? எனபது புரியாத புதிராகவே உள்ளது.
********************************************************
இந்த இடுகையும் ரெண்டு போட்டிக்கு தான்.

Thursday, April 17, 2008

ரெட்டை ஜடை வயசு - II

Part-I

மேக்கப் என்னவோ திருவள்ளுவர் மாதிரி போட்டாச்சு. நான் நினைத்த அனிமேஷனை எப்படி கொண்டு வருவது? என ஒரே யோசனை. பரமார்த்த குரு தன் சிஷ்ய புள்ளைகளிடன் யோசனை கேட்பது மாதிரி என் விசுவாச மாணவர்களிடமே மேட்டரை விளக்கினேன். ஒரு ஊஞ்சலில் வள்ளுவரை உக்காத்தி திரைக்கு பின்னாடி இருந்து இயக்கலாம்!னு சொல்றான் ஒருத்தன், வள்ளுவரையே கயிறு கட்டி மேடைக்கு மேலிருந்து தூக்கலாம்னு சொல்றான் இன்னொருத்தன். ஒன்னும் சரி வரலை. என் நோக்கம் எல்லாம், பார்வையாளருக்கு நாம் எப்படி வள்ளுவரை இயக்குகிறோம்? என்பது தெரியவே கூடாது.

அப்ப தான் கிஷ்கிந்தா வானர சேனையில் ஜாம்பவான் மாதிரி ஒருத்தன் பளிச்சுனு ஒரு ஐடியா குடுத்தான். கார்களை தூக்க ஜாக்கி பயன்படுத்துவோம் இல்லையா? அத மாதிரி ஏதாவது?னு அவன் சொல்ல, எனக்குள் வள்ளுவர் சும்மா ஜிவ்வுனு மேடையில் எழும்ப துவங்கினார்.

போட்டி நாளும் வந்தது. மேக்கப் எல்லாம் கச்சிதமாக அமைந்தது.கையில் ஏற்கனவே எழுதி வைத்த பனை ஓலை சுவடி, திருக்குறள், எழுத்தாணி எல்லாம் குடுத்து வெச்சாச்சு. மேடையில் வழக்கம் போல காந்தி வந்தார், அன்னை தெரஸா, இந்திரா காந்தி, ஆதி வாசி எல்லாம் வந்து போனார்கள்.

தீடிரென மொத்த அரங்க விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டன. பவர் கட் என எல்லோரும் நினைத்திருக்கும் வேளையில், மேடையில் வள்ளுவர் தலைக்கு பின்னாடி ஒரு ஓளி வட்டம் தெரிந்தது. மேடை முழுக்க சாம்பிராணி புகை மூட்டம். பிண்னணியில் கவிதாலயாவின் "அகர முத எழுத்தெல்லாம்" பாடல் ஓடிக் கொண்டே இருந்தது. தீடிரென வள்ளுவர் உட்கார்ந்திருந்த மரபலகை மெல்ல இஞ்ச் இஞ்சாக எழும்ப துவங்கியது.

மரபலகையின் மேல் ஒரு சால்வை போட்டு வள்ளுவர் அமர்ந்து இருந்ததால் பலகை எப்படி இயக்கபடுகிறது? என பாக்கறவங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. வள்ளுவரின் முதுகுக்கு பின்னால் இருக்கும் மிக பெரிய திரை மறைவில் இருந்து பரமார்த்த குருவின் சிஷ்யர்கள் இருவர் கார் ஜாக்கியை பதமாக இயக்கினார்கள்.

டக்குனு பிண்னணி இசை நிறுத்தப்பட்டது. "குழந்தாய்! இந்த ஒலை சுவடியை நடுவர்களிடம் கொண்டு போய் குடு!" என வள்ளூவர் முன் வரிசையிலிருந்த ஒரு பிகரை பாத்து பிட்டு போட, அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது. வள்ளுவர் கிடைத்த கேப்பில் கெடா வெட்டி விட்டார். அடபாவி! நான் எழுதி குடுத்த டயலாக்குல இது இல்லவே இல்லையே? என நான் பதற, அந்த குழந்தை வேறு வழியில்லாமல் வள்ளுவரிடம் ஓலை வாங்கி நடுவர் குழுவிடம் சமர்த்தாக குடுத்து விட்டு இருக்கையில் அமர்ந்து வள்ளூவரை முறைத்தது.

நடுவர் குழுவில் இரண்டு தமிழ் புரபசர்களும் இருந்தனர். அவர்கள் வள்ளுவரை நேரில் பாத்த பரவச நிலையிலிருந்து சகஜ நிலைக்கு வரவே இரண்டு நிமிடங்கள் ஆனது. அப்புறம் என்ன, காந்தி, இந்திரா என எல்லாரையும் பின்னுக்கு தள்ளிவிட்டு வள்ளுவர் பரிசு கோப்பையை தட்டி சென்றார்.

நான் லெக்சரராக பணி புரிந்த இரண்டாம் ஆண்டில், இரண்டாம் ஆண்டு மாணவர்களோடு ஏற்பட்ட இந்த அனுபவத்தை வ.வா சங்கத்தின் ரெண்டு போட்டிக்கு அனுப்புகிறேன்.

அப்புறம், படிச்சுட்டு ஆளுக்கு ரெண்டு கமண்ட் போட்டுட்டு போங்க என்ன?

Wednesday, April 16, 2008

ரெட்டை ஜடை வயசு

பொதுவா இந்த கல்லூரிகளில் வருடம் முழுக்க செமஸ்டர் பரீட்சை, பிராக்டிகல்ஸ்னு மாணவர்களை பிராண்டி எடுத்தாலும் யூத் வெஸ்டிவல், ஒவ்வோரு துறைக்கும் தனி விழானு ஏதாவது ஒரு வகையில் ஒரு இடைகால நிவாரண நிதி அளித்து விடுவார்கள். அதுவரை வாலை சுருட்டி கொண்டிருந்த வானரங்கள் எல்லாம் அந்த ஒரிரு நாட்களில் அசோக வனத்தில் புகுந்த அனுமாராட்டும் கல்லூரியை துவம்சம் செய்து விடுவார்கள்.

அவனவன் த(ண்)னி திறமை எல்லாம் சும்மா பீறிட்டு வந்து பார்வையாளர்களை பரவசபடுத்தும். அதுவும், பதினெட்டு பட்டி மகளீர் கல்லூரிகளும் வருகிறார்கள் என்றால் கேட்கவே வேண்டாம்.

தீடிரென கடைகளில் பேர் அன் லவ்லி கீரிம்கள் அனைத்தும் விற்று தீரும். சலூன்களில் கூட்டம் ரொம்பி வழியும். துவைக்காத ஜீன்ஸும் டீ-ஷர்ட் சகிதமாய் பேஷன் ஷோவுக்கு வெங்கல கடையில் யானை புகுந்த கதையாய் இளைஞர் பட்டாளமும் களத்தில் குதிக்கும். ரீமிக்ஸ், மசாலா மிக்ஸ்னு கேசட் கடைகாரன் உயிரை வாங்கி பழம் நீயப்பா!வில் ஆரம்பித்து பம்பர கண்ணாலே! காதல் சங்கதி சொன்னாளேனு நைசா ப்ரபோஸ் பண்ணும் கேடிகளும் உண்டு.

தப்பிதவறி ஏதேனும் அப்பிராணி பெண் மேடையேறி அவள் குலதெய்வத்தை கும்பிட்டு, கண் மூடி, நித்யஷ்ரி மகாதேவன் ரேஞ்சுக்கு வாதாபி கணபதிம்! பஜே!னு ஆரம்பித்தால் பஜல்! பஜல்! காமன் பஜல் ஸே! பஜல்! பஜல்!னு மேடைக்கு கீழே ஒரு கூட்டம் தனியாவர்த்தனம் வாசிக்கும்.

இசைகருவிகள் போட்டினா, ஸ்டைலாக கிதார் வைத்து கொண்டு மைக்கேல் ஜாக்ஸனின் மச்சினன் மாதிரி பீட்டர் விடுவது ஒரு கோஷ்டினா மதுரை மண் மணம் கமழ, கரகாட்டகாரன் கவுண்டமணி மாதிரி தனிதவில் வாசித்து அசத்தும் இன்னொரு கோஷ்டி. டான்ஸ் போட்டினா இந்த மக்களுக்கு எங்கிருந்து தான் அவ்ளோ ஐடியா பெறுக்கெடுக்குமோ? ஆனா அழகா வந்து, அம்சமாய் ஆடி, முதல் பரிசை மகளிர் கல்லூரி தான் தட்டி செல்லும் எனபது ஊரறிந்த ரகசியம்.

நடன போட்டிகளுக்கு நடுவராய் அமர்ந்து சபாஷ்! சரியான போட்டி!னு சேவை புரிய புரபசர்களிடையே பலத்த போட்டி நிலவும். சலங்கை ஒலி பத்து தடவை பாத்தவனாக்கும்!னு பிஸ்து காட்டுவார்கள் சில பெருந்தலைகள்.

மாதம் ஒரு கிலோ லயன் டேட்ஸ்(பேரீச்சம்பழம்) சம்பளத்துக்கு நான் ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு கணிணி மாணவர்களோடு சேர்ந்து நானும் லெக்சரர் என்ற பெயரில் நான் படித்த காலத்தில் சாய்ஸில் விட்ட பாடங்களை மறுபடி படித்து, நடத்தி கொண்டிருந்த போது நடந்த நிகழ்ச்சி இது.

என்னை போன்ற அம்மாஞ்சிகளுக்கு "களி மண்ணில் கை வண்ணம் காணும் போட்டி" அல்லது " நேர் நேர் தேமா! நிரை நேர் புளிமா! போன்ற கவிதை போட்டிகளுக்கு நடுவராய் மாரடிக்கும் பாக்யம் தான் வந்து சேரும்.

அந்த வருஷ போட்டிகளில் மாறுவேட போட்டியும் இருந்தது. சுமார் ஒரு பத்து கல்லூரிகள் கலந்து கொண்டன. என் மாணவன் ஒருவனும் போட்டி ஆரம்பிக்கும் ஒரு வாரத்துக்கு முன்னாடி இருந்தே என்ன வேஷம் போடலாம்? ஒரு ஐடியா குடுங்க சார்!னு என்னை நச்சரித்து கொண்டிருந்தான்.

பொதுவா இந்த மாறுவேட போட்டினா ஒன்னு மொட்டை அடித்து கொண்டு கையில் கம்பு வைத்து, ஒரு டைம்பீஸ் கடிகாரத்தை முக்கால் முழ வேட்டியின் இடுப்பில் சொருகி காந்தினு பில்டப் குடுப்பார்கள், இல்லாட்டி தலையில் முக்காடு போட்டு கொண்டு அன்னை தெரஸானு அல்வா குடுப்பார்கள். நீ ஏதாவது வெரைட்டியா குடுடா! அப்ப தான் ஜெயிக்க முடியும்னு நான் வேறு கடுப்பேத்தி இருந்தேன்.

பையனுக்கு என்ன தோணினதோ தெரியலை, குடுகுடுனு போய் ஒரு நாடக கம்பனியிலிருந்து ஜடா முடி, நீளமான தாடி கமண்டலம் என அள்ளி கொண்டு வந்து சாமியார் வேஷம் போட போறேன்!னு ஒரு குண்டை தூக்கி போட்டான். வெறும் சாமியார் வேஷம் எல்லாம் கதைக்கு ஆவாதுனு நான் சொல்லியும் பையன் விடாபிடியா இருந்தான். சரி, வழக்கம் போல ஏதவது டகால்டி பண்ணிட வேண்டியது தான்!னு முடிவு பண்ணி கையில் பனை ஓலை கட்டு, எழுத்தாணி, வடகம் காய போட்டிருந்த வெள்ளை வேட்டினு சாமியாரை திருவள்ளுவரா மாத்தியாச்சு. மாத்தினாலும் ஒரு சின்ன நெருடல் இருந்தது. நமக்கு எல்லம் திருவள்ளுவர் என்றவுடன் என்ன ஞாபகம் வரும்? "அகர முத எழுத்தெல்லாம்"னு கே.பாலசந்தரின் கவிதாலயா தானே? (எனக்கு அப்படி தான்பா!)

அதே மாதிரி ஒரு அனிமேஷன் மேடையில பண்ணினா என்ன?னு தோணியது. அதை எப்படி செயல்படுத்தினேன்னு அடுத்த பதிவில் பார்ப்போமா?

Friday, April 11, 2008

ரெண்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா!

இந்த இரண்டு என்ற எண் இருக்கே! சராசரி மனிதன் முதல் சன்யாசி வரை எல்லோர் வாழ்க்கையிலும் ஒரு நீங்கா இடம் பிடித்து விடுகிறது. இன்பம்-துன்பம், பகல்-இரவு, பிறப்பு-இறப்பு, வானம்-பூமி, ஆண்-பெண், இளமை-முதுமை, சூரியன் - சந்திரன், நட்பு-பகை, தேவன் - சாத்தான், அகம்-புறம், சரி-தவறு, இந்த லிஸ்ட் போயிண்டே இருக்கும்.

அட உணவுல கூட பாருங்க நீங்க சைவமா? அசைவமா?னு தான் கேக்கறாங்க. சரி உணவை விட்டு தள்ளுங்க, ஆன்மிகத்துல ஜீவாத்மா-பரமாத்மானு த்வைதம் சொல்லுது. ஜீவன் பரமாத்மாவிலே அடக்கம்னு அத்வைதம் சொல்லுது. (எல்லாம் இந்த கேஆரெஸ் அண்ணன் பெங்களூர் விஜிட்டின் மகிமை.)

அரசியலுல பாருங்க, அது பிரிட்டீஷ் நாட்டுல இரண்டு கட்சி ஆட்சி முறை தான், இங்க தமிழ் நாட்டுலயும் அதே கதி தான்! அடிக்கடி காமராஜர் ஆட்சி அமைப்போம்!னு ஒரு கோஷ்டி காமெடி பண்ணும், அத எல்லாம் கண்டுக்கபடாது. :)

சினிமா துறைய எடுத்துகோங்க, தியாகராஜ பாகவதர் - பி.யூ.சின்னப்பா, சிவாஜி-எம்ஜிஆர், ரஜினி-கமல், என எல்லாமே ரெண்டு தான். ஹிரோக்களை சொல்லிட்டு மகளீர் பத்தி ஜொள்ளியே ஆகனும்னு நான் பாவனா - நயன்தாரானு ஷ்டார்ட் மீஜிக் போட்டால் வீட்ல சாம்பாரில் உப்பு அதிகரிக்க கூடிய சாத்தியங்கள் இருப்பதால், அந்த அரிய பணியை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

சலசல! சலசல! ரெட்டைகிளவி தமிழில் உண்டல்லோ?னு ஐஸ் குட்டியே ஜீன்ஸ் படத்துல திருவாய் மலர்ந்திருக்காங்களே! (இன்னிக்கு சாம்பாரில் தெரியும் இந்த வரியின் தாக்கம்)

சினிமா காமடில ஒரு பழம் இந்தா இருக்கு! இன்னோரு பழம் எங்கே?னு கேட்ட அந்த காமடிய நம்மால மறக்க முடியுமா?
என்ன இப்ப எல்லாம் ரெட்டை அர்த்த வசனங்களில் வரும் நகைச்சுவைகளை சகித்து கொள்ள வேண்டி இருப்பது வருந்ததக்க விஷயமே!

சினிமால டபுள் ஆக்க்ஷன் படங்கள் சக்கை போடு போட்டு இருக்கு. எங்க வீட்டு பிள்ளை, கெளரவம், வாணி-ராணி, பில்லா, நாட்டாமைனு ஒரு பெரிய லிஸ்டே நீளும். ஆனா இப்ப எல்லாம் ஹீரோக்கள், அப்பா, பெரியப்பா, மகன், பேரன்னு சகட்டு மேனிக்கு எல்லா வேஷங்களையும் கலந்து கட்டி அடிக்கறாங்க. இதுனால் என்ன ஆகுது? இந்த அப்பா ரோலில் வரும் வி.எஸ்.ராகவன், பூர்ணம் விஸ்வ நாதன், மேஜர் சுந்தர்ராஜன் எல்லாம் பீல்ட் அவுட் ஆகி வீட்ல கோலங்கள் சீரியல் பாக்கற நிலைமை உருவாகிடுச்சு.

இசைத் துறையிலும் இந்த இரண்டு ஆதிக்கம் செலுத்திகிறது. கர்நாடக இசையில் ப்ரியா சகோதரிகள், கனேஷ்-குமரேஷ் (வயலின்), மான்டலின் ஷ்ரினிவாஸ்-ராஜேஷ்,மாம்பலம் சகோதரிகள், சூலமங்கலம், பாம்பே சகோதரிகள்னு எல்லாம் இரண்டு மயம் தான்.

(இன்னும் யாரையாவது மிஸ் பண்ணி இருந்தா பின்னூட்டதில் தெரிவிக்கலாமே!)

சினிமா இசையிலும் விஸ்வநாதன்-ராமமூர்த்தி, லக்ஷ்மிகாந்த்-பியாரேலால், சங்கர் கணேஷ், டைரக்டர்கள் ஜெடி-ஜெர்ரினு ரெண்டு ரெண்டா கலக்கி இருக்காங்க.

விளையாட்டு துறைய பாருங்க, டென்னிஸ்ல வீனஸ்-செரினா வில்லியம்ஸ் சகோதரிகள், கிரிக்கெட்டுல மார்க் வாக் - ஸ்டீவ் வாக்(ஆஸி), கிராண்ட் பிளவர்- ஆன்டி பிளவர்(ஜிம்பாவே)னு ரெண்டு ஆதிக்கம் செலுத்துகிறது.

உளவியல் ரீதியா சொல்லனும்னா, மனிதர்கள் எல்லோருக்குமே ரெண்டு முகங்கள் உண்டு. ஒன்னு சமூகத்தில் அவர்கள் காட்டும் முகம், மற்றது தனிப்பட்ட வாழ்க்கையில் காட்டும் முகம். கூடியவரை இந்த ரெண்டு வாழ்க்கையிலும் கோபம், பொறாமை, பேராசை,காம கசடுகள் இல்லாமல் பாத்து கொள்வது தனி மனிதனுக்கும், சமூகத்துக்கும் நல்லது. இல்லையா?

எதுக்குடா அம்பி இவ்ளோ பெரிய வில்லுபாட்டு?னு நீஙக கேக்கலாம்.

இந்த வ.வா.சங்கத்து இரண்டாம் ஆண்டு விழவுக்கு அவங்க அறிவிச்சு இருக்கற போட்டிக்கு தான் இந்த மொக்கை. அதானே! எலி ஏன் அம்மணமா ஓடுது?னு இப்ப புரிஞ்சுருக்குமே உங்களுக்கு.

ஆங்க்! சொல்ல மறந்துட்டேனே! வ.வா.சங்கம் ஏற்கனவே அறிவிச்சு இருந்த பிரம்ம ரச புகைப்பட போட்டிக்கு நான் அனுப்பி இருந்த படங்களில் எனது இரண்டாம் படத்துக்கு இரண்டாம் பரிசு அறிவிச்சு இருக்காங்க. (அட பாருங்க! இங்கயும் இரண்டு தான்).

Friday, April 04, 2008

பரீட்சை

வால் டிராயர் போட்டு கொண்டு எல்.கேஜி படிக்க ஸ்கூல் போன காலத்திலும் சரி, துவைக்காத ஜீன்ஸ் அணிந்து காலேஜ் செமஸ்டர் பரீட்சை எழுத போன போதும் சரி இந்த எக்ஸாம் பீவர் என சொல்லபடும் பரீட்சை பயம் எல்லாம் எனக்கு இருந்ததில்லை.
இதற்கு காரணம் அட்டை டூ அட்டை எல்லாம் கரைத்து குடித்து விட்டு போனேன் என அர்த்தம் கொள்ள கூடாது.

பள்ளி காலங்களில் அப்படி படித்ததுண்டு. ஐந்தாம் வகுப்பில் தொடர்ந்து எல்லா பரீட்சைகளிலும் முதலாவதாக வந்ததுக்காக, ஆண்டு இறுதியில் மேடை போட்டு கேசரி சாப்பிட ரெண்டு எவர்சில்வர் பேசின் குடுத்தார்கள். இன்னும் பத்ரமாக வைத்திருக்கிறேன்.

ஆறாவது சற்று பெரிய பள்ளிகூடம். புதிய களம், புதிய ஆசிரியர்கள். கண்ண கட்டி தமிழ்மணத்துல விட்ட மாதிரி இருந்தது. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தேர்வு. இந்த சமூக அறிவியல் பாடத்தில் தூர்தர்ஷனில் வரும் சுரபி ரேணுகா ஷாஹேன் தயவில் இமய மலை பத்தி நான் மட்டும் எக்ஸ்ட்ரா பிட்டு போட்டதில் என்னை தவிர மொத்த கிலாஸும் பெயில். நான் மட்டும் 45 மதிபெண்கள். பாஸ் ஆனா தான் ரேங்க் தருவார்கள். (இப்பவும் அப்படி தானே?)ஆக நான் மட்டும் பாசாகி முதல் ரேங்கும் பெற்று அடுத்த பத்து நாட்களுக்கு கிளாஸில் மகுடம் இல்லாத மகாராஜா ரேஞ்சுக்கு சீன் போட முடிந்தது.

அந்த பள்ளியில் ஒவ்வொரு ஆசிரியருக்கு ஒவ்வொரு மாதிரி எழுதனும்.

1) ஒருத்தருக்கு பாயின்ட் பாயின்டா எழுதினா தான் பிடிக்கும்.
2) ஒரு டீச்சருக்கு முக்யமான வரிகளை கலர் ஸ்கெட்ச்சால் பெயின்ட் அடிக்கனும்.
3) ஒரு ஆசிரியருக்கு பாரா பாராவா எழுதனும். எத்தனை ஷீட் பேப்பர் எழுதி இருக்கோம்னு பாத்து தான் சில பேர் மார்க் போடுவாங்க.

இந்த பாரா பார்ட்டிய நம் மக்கள் ஈசியா ஏமாத்திடுவாங்க. பாராவின் முதல் மற்றும் கடைசி வரிகள் மட்டும் அறிவியல் சம்பந்தமா எழுதிட்டு, நடுவுல அவனவன் ஈஷ்டத்துக்கு ராமாயணம் முதல் படையப்பா படத்தில் நீலாம்பரியின் பங்கு வரை எழுதி வைப்பான். நடுவுல நியூட்டன், ஐன்ஸ்டின் எல்லாம் வேறு வந்து நீலாம்பரியை குசலம் விசாரித்து விட்டு போவார்கள்.இதுல டோட்டல் மிஸ்டேக்னு சொல்லி மேலும் சில மார்க்குகள் வாங்கி வரும் கில்லாடிகளும் உண்டு.

எக்ஸாம் நடக்கற ஹால்களுக்கு மேற்பார்வைக்கு எந்த வாத்யார் வருகிறார்? என்பதை பொறுத்து தம் மார்க்குகளை முடிவு செய்யும் மக்களும் இருந்தனர். குறிபிட்ட ஒரு டீச்சரை எல்லா ஹால் மாணவரும் வலிய போய் தம் ஹாலுக்கு அழைத்து வருவர். ஏன்னா அந்த டீச்சருக்கு அவ்ளோ தயாள குணம்.

ஒரு வழியாக பள்ளீயில் இருந்து கல்லூரி வந்தபிறகு படிப்பு என்பது வேறு விதமாய் மாறியது.
இந்த கிண்டியில் நடக்கும் குதிரை ரேஸ் பத்தி தெரியுமா? இந்த குதிரை தான் ஜெயிக்கும்! என யூகத்துடன் பணம் கட்டுவார்களே, அது போல கல்லூரி வந்தபிறகு குறிபிட்ட பகுதியில் இருந்து தான் கேள்வி வரும் என கணித்து அதை மட்டும் படித்து விடுவேன்.

என் ஜாதகத்தில் பூர்வ புண்ய ஸ்தானமாகிய ஐந்தாம் இடத்தை குரு பார்ப்பதால், நான் படிச்சது மட்டும் தான் பரீட்சைக்கு வரும்! என நான் சொன்னதை இரண்டு ஆண்டுகள் வரை நம்பிய நண்பர்களும் உண்டு. அப்ப மூனாம் ஆண்டு என்ன ஆனது?னு நீங்க பின்னூட்டம் போடலாம். அந்த வருடம் குருபெயற்ச்சி ஆகி விட்டார் என சமாளித்து விட்டேன்.

சரி, இப்ப என்ன மேட்டர்னா, திருமணத்துக்கு பின்பும் எம்பிஏவில் எழுத வேண்டிய பேப்பர் நாலு பாக்கி இருக்கு! என தங்கமணி கூறியதும் (ஹிஹி, நானாவது இனி எக்ஸாமாவது) கடமை கண்ணாயிரமாக, "அதுக்கென்ன! நமக்கு படிப்பு தான் முக்யம்! நீ படிம்மா! என பெரிய தசரத சக்ரவர்த்தி மாதிரி வாக்கு குடுத்து விட்டேன்.

அந்த பரீட்சை இப்ப வந்து நிக்குது. ஈஸ்டர் விடுமுறை! ஹாயா வீட்டுல குறுந்தகடு (சி.டி தான்)பாக்கலாம்! என்ற என் திட்டத்துக்கு ஆப்பு வைப்பது போல் வீட்டில் வேலை செய்பவர் வேறு லீவு எடுத்து கொள்ள, நீங்க தானே வரம் குடுத்து இருக்கீங்க!னு சமயம் பாத்து தங்கமணி கோல் போட, வேற வழி இல்லாமல், எங்க வீட்டு சிற்றம்மல மேடையில் நானே தேவாரம் பாடவேண்டியதாய் போயிற்று. :)

ஆங்க்! சொல்ல மறந்துட்டேனே! விம் பாரும், ஸ்கரப்பரும் கூட்டணி சேர்ந்தால் பாத்ரங்கள் எல்லாம் என்னமா மின்னுது தெரியுமா? இதை தான் கற்றது கையளவு!னு பெரியவங்க சொல்லி இருக்காங்க போலிருக்கு.