பெங்க்ளுரில் நீங்கள் ரோட்டில் தடுக்கி விழுந்தால் மூன்று இடங்களில் விழ வாய்ப்புள்ளது.
1) அனுமார் கோவில்கள் - தினமும் நான் சாஷ்டாங்கமாக விழும் இடம்.
2) பூங்காக்கள் - 1 அல்லது 2 வாரங்களுக்கு ஒரு முறை சன்டேக்களில் லால் பாகில் அதி காலை தடுக்கி விழுவேன்.
3) பப்புகள்.
நான் நெல்லை மாவட்டத்தில் பள்ளி செல்லும் காலங்களில்(ஒரு 8th படிக்கும் போது), நம்ம தோஸ்து ஒருத்தன் லீவுக்கு பெங்க்ளுர் போய்ட்டு வந்து, எங்களிடம் 70 எம்.எம் சினிமாஸ்கோப்பில் பி.வாசு மாதிரி சூப்பரா கதை விட்டான். அதில் சில துளிகள்:
1) பெங்க்ளுரில் எப்போ பார்த்தாலும் பனி மழை தான். நன்னாரி சர்பத் பாட்டில் கையில இருந்தா, நாம ஜூஸ் போட்டு, போட்டு குடிச்சுண்டே இருக்கலாம்.
(இங்கு இருக்கும் மிதமான கிளைமேட்டுக்கு தான் அந்த p.வாசு இவ்வளவு பில்டப் குடுத்தான்னு எனக்கு அப்போ தெரியாது. ஆஆ!னு வாய் பிளந்தேன்.)
2) சகஜமா நாம, தெருவுல கூட எல்லா இந்தி நடிகைகளையும் பார்க்கலாம். மாதுரி தீட்சித்தை கூட நான் பார்த்தேன்.(அப்போ, ஏக்! தோ! தீன் பாட்டு சக்கை போடு போட்டது!)
(இங்கு உலா வரும் சில சப்பாத்திகளை தான் அந்த நாதாரி பாத்துட்டு, "மாதுரி தீட்சித்"னு எங்களிடம் கதை விட்டான்னு எனக்கு இப்போ தான் உரைக்கிறது.)
3) அங்கே நிறைய பப்புகள் இருக்கு!
மூணாவது பாயிண்ட் தான் எங்களுக்கு புரியலை.
"போடா! நீ ஆக்ஸ்போர்ட் டிக்க்ஷனரியில் ஏதோ ஒரு வார்த்தையை பாத்துட்டு எஙகளிடம் ரீல் விடறியா?"னு எங்கள் செட்டில் ஒருத்தன் சுதாரித்து விட்டான்.
நானும் என் பங்குக்கு, " நான் குழந்தையா இருக்கும் போது(இப்பவும் நான் குழந்தை தான்) என் அம்மா நெய் விட்டு பிசைஞ்சு பிசைஞ்சு எனக்கு ஊட்டி விட்ட
பப்பு சாதம் விக்கற ஓட்டலை தானேடா நீ சொல்ற?" இது ஒரு பெரிய விஷயமா?னு புத்திசாலிதனமா அவனை மடக்கி விட்டேன்.
அந்த கூட்டத்துக்கு நான் தான் மொட்டை பாஸ்.
என் கூட்டத்துக்கு நான் சொல்றது தான் தீர்ப்பு! செல்லாது! செல்லாது!னு அவனது மூணாவது பாயிண்டை தள்ளுபடி செய்து விட்டோம்.
அதன் பின் நான் காலேஜ் படிக்க மதுரை வந்தாச்சு. இரண்டாம் ஆண்டு படிக்கும் போது, இங்கேயும் ஒரு நண்பன் லீவுக்கு பெங்க்ளூர் போயிட்டு வந்து, "பெங்க்ளூர் கலக்கலா இருக்குடா மச்சான்! கிளைமேட்டும் சரி, அத விடு,
பப்ஸ் எல்லாம் அட்டகாசமா இருக்கு டா மாப்ளே!"னு சொல்ல, நான் "சரி, இவன் ஏதோ ஐயங்கார் பேக்கரி கடையில் கிடைக்கும்
பப்ஸை தான் சொல்றான்!"னு நினைத்துக்கொண்டேன்.
வேலைக்கு சென்னை வந்து ஒரு வருடம் ஓடிய பின் தான் கொஞ்சம் விவரம் புரிந்தது. அதுவும், கம்பெனியில் எதாவது பார்ட்டி வந்தா, உடனே, நண்பர்கள் "எலா! சன்முகம்! எடுறா வண்டிய!"னு நாட்டாமை விஜயகுமார் ரேஞ்சுக்கு சவுண்டு விட்டு, பப்ஸை நோக்கி படை எடுப்பார்கள்.(அங்கு சென்று வாந்தி எடுப்பார்கள், அது வேற விஷயம்!)
நீயும் வா! சும்மா வேடிக்கை பாரு!னு கெஞ்சினாலும் நான் சிக்கியதில்லை.
அதன் பின் பெங்க்ளுரில் வேலை கிடைத்தவுடன், ஊருக்கு போய் அம்மா, அப்பாவிடம் சொல்லிவிட்டு ஜாயின் பண்ணலாம்னு போனேன்.
என் பக்கத்து வீட்டுல ஒரு புண்ணியவான் இருக்கார். அவர் நின்ன இடம் தீப்பற்றி எரியும். கொளுத்தி போடுவதில் டாக்டர் பட்டம் பெற்றவர்.
சும்மா நான் லீவுக்கு போனாலே, "ஏய்! என்ன அம்பி வந்துட்ட? வேலை அவ்ளோ தானா?"னு கேட்டவர். யோவ்! லீவுக்கு வந்திருக்கேன்யா! 4 நாளுல திரும்பி போயிடுவேன்!னு நான் மட்டும் விளக்கம் சொல்லலை அவ்ளோ தான்!
"நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி!அம்பியை வேலயை விட்டு தூக்கிட்டா! அதான் திரும்பி வந்துட்டான்!'னு டமுக்கு அடித்து விடுவார் அந்த மனுஷன்.
நான் தாமிர பரணியில் குளிக்க போயிருக்கும் போது(சுமாரா ஒரு 4 மணி நேரம் ஊறுவேன்) என் அம்மா அப்பாவிடம் என்ன சொன்னாரோ தெரியாது.
நான் (ஊறி) வந்தவுடன் என் அம்மா, "இதோ பாரு! பெங்களுரில் கண்ட கண்ட இடத்துக்கேல்லாம் போக கூடாது! நல்லவாளோட சேரணும்! உனக்கு நல்ல புத்தியை குடுக்கனும்னு அந்த பகவானிடம் நாங்க வேண்டிப்போம்! நீயும் வேண்டிக்கோ! என்ன புரிஞ்சதா?"னு என்னை போட்டு தாக்க, "ஆகா! பத்த வெச்சியே பரட்டை!"னு நான் அந்த ஆள் வீட்டை பார்த்து முறைத்தேன்.
என் தம்பி, இது தான் நல்ல சமயம்னு, அம்மா! அண்ணா அத மாதிரி எல்லாம் பண்ண மாட்டான் மா! தண்ணி அடிச்சாலும், வாந்தி எடுக்க மாட்டான் மா!னு ஸேம் சைடு கோல் அடித்தான்.
அடப்பாவி! உனக்கு பேண்ட், டி.ஷர்ட், sweets எல்லாம் நான் வாங்கி தறலையா? ஏன்டா இந்த நேரத்துல பழி வாங்கற?னு நான் கெஞ்சினேன்.
அதன் பின், தென் ஆப்ரிக்காவுக்கு போகும் காந்தி ரேஞ்சுக்கு, "பெருமாள்/அனுமார் கோவில் தீர்த்தம் தவிர எதையும் நான் இதுவரை தொட்டதில்லை! இனி தொட போவதும் இல்லை!"னு டிஸ்கிளைமர் குடுத்த பின் தான் வீடு சகஜ நிலைக்கு திரும்பியது.
போன வாரம், நண்பர் ஒருவருடன் M.G.ரோடில் ரோடில் உள்ள ஒரு ரெஸ்டாரெண்டில் இரவு டிபன் சாப்பிட நேர்ந்தது. பில்லை அவர் கட்டுவார்னு நான் நினைக்க, என்னை விட பார்ட்டி படு உஷாரு. பின் இரண்டு பேரும் ஷேர் பண்ணினோம்.
மாடியில் இருந்த அந்த ஓட்டலுக்கு கீழே ஒரு பப் இருந்ததை நான் கவனிக்க வில்லை. அவர் பார்த்து விட்டு, "என்ன, அம்பி! இதேல்லாம் பாத்ருக்கீங்களா? தண்ணி அடிச்ச்ருக்கீங்களா?னு கேட்டார்.
இது என்ன, மைசூர் ராஜா அரண்மனையா? மற்றபடி, மதுரையில் இரண்டு நாளைக்கு ஒரு தரம் வைகை தண்ணீர் கார்பரேஷனில் விடுவார்கள். குடம் குடமா எங்க பாட்டிக்கு அடிச்சு குடுத்ருக்கேன்னு நான் நக்கல் விட்டதில் பார்ட்டி டென்ஷனாகி விட்டார்.
சம்போ மகாதேவா! நாம கிளம்பலாமே!னு அவஸ்தையாக நெளிந்தேன்.
அவர் விடாமல், எப்படி இருக்கு?னு சும்மா உள்ள போயி பாருங்க!னு கூட்டி போனார்.
நைட் லேம்ப் தான் எல்லா டேபிள்களிலும் போட்டிருந்தனர். ஒரே புகை மண்டலம். எல்லார் கையிலும் புகைந்து கொண்டு இருந்தது.
சிவ சிவா! ராம ராமா! சில பாரதி கண்ட புதுமை(?) பெண்களும் ஊதிக் கொண்டு இருந்தனர். சில பேர் கையில் சோம பானம் வேறு!
பாவம்! அவாளுக்கு வீட்டில் என்ன கஷ்டமோ, மாமியார் கொடுமையோ யாரு கண்டா!
"மூச்சு முட்றது! போகலாம்!"னு நான் வெளியே வந்து விட்டேன்.
ரூமுக்கு வந்ததும், ஜில்லுனு(night 10 pm) ஒரு குளியல் போட்டு அனுமார் ஸ்லோகங்கள் சொன்ன பிறகு தான் நிம்மதி பிறந்தது!
நான் UG - B.sc(chem)படித்ததால், சிகரெட், மற்றும் தண்ணியால் என்னவேல்லாம் வரும்னு நல்லா தெரியும்.
பின் குறிப்பு: அடுத்த போஸ்ட் "கும்பாபிஷேகா! ஆராதனா!"
எட்டாவது அதிசயமான
ஐஸ் குட்டி நடித்த ஜீன்ஸ் படம் பார்த்து விட்டு இந்த போஸ்ட்டை படிக்கவும்.