Thursday, February 26, 2009

தங்க நகை வாங்க போறீங்களா?

ஜூஸ் போட்டபின், மிச்சம் இருக்கும் எலுமிச்சம்பழ மூடிகளை தூர எறியாமல், நட்டு கழன்ற உங்க வீட்டு ரங்கமணி தலையில் தடவி வர, ரெண்டு வாரத்தில் நல்ல முன்னேற்றம் தெரியும்! என சமையல் குறிப்புகள்(?) வரும் மாதம் ஒரு முறை வரும் ஒரு பெண்கள் பத்திரிகையில், கார்டன் சில்க்ஸ் கட்டி போஸ் குடுத்து கொண்டிருந்த மாடலை எங்கோ பாத்ருக்கோமே? என ஆழ்ந்த யோசனையில் இருந்த நான் "கிளம்புங்க, ஷாப்பிங்க் போகனும் என தங்க்ஸின் குரல் கேட்டு மறுபேச்சு இல்லாமல் கிளம்பியாச்சு.

அங்க சுத்தி, இங்க சுத்தி, கடைசில தங்க்ஸின் நண்பி ஒருத்தர் சொன்னாரேன்னு ஒரு குறிபிட்ட வகை நகையை தேடி சென்னையில் அந்த பிரபலமான நகைக் கடைக்கு போனோம். அவங்க சமீபத்துல தான் வேளச்சேரியிலும் ஒரு கடைய தொறந்து கல்லா கட்டிட்டு இருக்காங்க, யாருன்னு கண்டுபிடிங்க பாப்போம். :)

நாங்க போன அன்னிக்கு தங்கம் கிராம் ஆயிரத்து நானூற்றி ஐம்பத்தி ஏழு ரூபாய். என்ன இப்பவே கண்ண கட்டுதா? ஆமா, எனக்கும் கட்டிடுச்சு. இருந்தாலும் என்ன தான் நடக்குது பாத்துடுவோம்னு கம்முனு இருந்தேன்.

எங்களை பாத்ததும் நாங்க என்னவோ கிலோ கணக்குல வாங்க போறோம்னு நினைச்சோ என்னவோ பலத்த வரவேற்பு. ஜில்லுனு பேஃன்டா எல்லாம் குடிக்கக் குடுத்தாங்க.
கடைசில நாங்க எதிர்பார்த்து போன நகை ரெண்டு கிராம்லயும் இருக்கு, நாலு கிராம்லயும் இருக்குனு தெரிஞ்சது. அந்தாளுக்கு சப்புனு போச்சு. இருந்தாலும் வந்தவரை லாபம், கொண்ட வரை மோகம்னு சளைக்காம எங்களுக்கு நகைய எடுத்து காட்டி கால்குலேட்டரை தட்டினார்.

நாலு கிராமுக்கு எவ்ளோ வரும்னு நீங்களே கணக்கு போட்டுகுங்க. செய்கூலி கிராமுக்கு ஐம்பது ரூவாயாம். அதுக்கப்புறம் தான் மேட்டரே. சேதாரம் பதினெட்டு சதவீதம் போட்டு இருக்கோம்னு சொன்னாரு.

அதாவது நாலு கிராம் நகைய செய்யும் போது பதினெட்டு சதவீதம் வேஸ்ட்டா போச்சாம். அதுக்கும் நாம தான் மொய் எழுதனும்னு சொல்லி ஒரு ரேட்டை போட்டு மொத்தம் ஏழாயிரத்து சொச்சம் வந்திச்சு. சுருக்கமா சொல்லனும்னா நாலு கிராம் நகைக்கு ஐந்தேமுக்கால் கிராம் ரேட் வருது.

மிச்சம் இருந்த பேஃன்டாவை முழுக்க குடிச்சு முடிச்சேன்.
வீட்ல பெரியவங்களை கேட்டு ஒரு முடிவுக்கு வரோம்னு சொல்லிட்டு அந்தாளு விட்ட லூக்கை பாத்தும், பாக்காம நைசா அங்கிருந்து எஸ்கேப் ஆயிட்டோம்.

சரி, எனக்கு ஒரு சந்தேகம். நகை செய்யும் போது சேதாரம் ஆகற பதினெட்டு சதவித தங்கத்துக்கும் நாம தானே துட்டு குடுக்கறோம்? அவங்க ஏன் அந்த சேதார தங்கத்தை அல்லது தங்கப் பொடியை ஒரு பொட்டலத்துல மடிச்சு நம்மகிட்ட தர மாட்டேங்கறாங்க? தராத ஒரு பொருளுக்கு நாம ஏன் துட்டு குடுத்துட்டு இருக்கோம்? இதை பத்தி நீ என்ன நினைக்கறன்னு தங்கஸ் கிட்ட ரொம்ப சீரியஸா கேட்டேன். அம்மணி வழக்கம் போல நமுட்டு சிரிப்புடன் ஒரு லூக் விட்டுட்டு பேசாம இருந்துட்டாங்க.

இதைப் பற்றி நீங்க என்ன நினைக்கறீங்க?

பி.கு: எனக்கு பேஃன்டா பிடிக்காது, மேங்கோ ஸ்லைஸ் தான் பிடிக்கும்னு அடுத்த தடவை போகும் போது அந்த கடைக்காரர் கிட்ட சொல்லனும். :)

Friday, February 20, 2009

மானேஜர்கள் S/W இஞ்சினியர்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்




1) அது எப்படி கண்ணா, ஒரு மெயின்டன்ஸ் பிராஜக்டை கூட இப்படி ஜவ்வா இழுத்து, இழுத்து உன்னால வேலை செய்ய முடியுது?

2) காலையில வந்தவுடனே தமிழ்மணம், ஜிடாக்குல போஸ்ட் போட்ருக்கேன், பாருங்க!னு அறைகூவல், போதாகுறைக்கு யாஹு மெயில், ஹாட்மெயில். ஆனா நாங்க வரது தெரிஞ்ச உடனே பிராஜக்டுல மூழ்கி முத்தெடுக்கற மாதிரி ஒரு சீன் எப்படி ராசா உன்னால போட முடியுது?

3) அப்ரைஸல் டையத்துல மட்டும் ஒரு நாளைக்கு பத்து தடவ என்னை பாத்து சிரிக்கிறியே ஏம்பா?

4) அப்ரைஸலுல குறைவா ரேட்டிங்க் குடுத்தா உடனே நவுக்ரில ரெஸ்யூம் அப்டேட் பண்றியே அது ஏன் ராசா? டாப் மேனேஜ்மெண்ட் சொல்றதை தானே நாங்க செய்றோம், என்ன, வெச்சுகிட்டா வஞ்சனை பண்றோம்?

5) யாராவது உன் செல்லுக்கு கூப்டா உடனே கட் பண்ணிட்டு டக்குனு ஆபிஸ் போனை தேடறீயே, இதோட பில்லை உன் சம்பளத்துல கழிச்சுடலாமா?

6) மானேஜர்னாலே டெக்னிக்கலா ஒன்னும் தெரியாது!னு நீயே எப்படிபா முடிவு செஞ்சுக்கற? நாளைக்கு நீயும் மேனேஜர் ஆனபிறகு உனக்கும் இது பொருந்துமா?

7) வார நாட்கள்ல குடுத்த வேலைய ஜவ்வா இழுத்து வெள்ளிகிழமை வரை வெச்ருந்தா நாங்க எப்படிபா அதுக்கு பொறுப்பாளி ஆக முடியும்? உனக்கு சம்பளம் என்ன தமிழ்மணமா குடுக்குது?

8) ஆன் சைட் போயிட்டு வந்தபுறம் ஒரு வாரத்துக்கு கால் கீழ படாம நடக்கறீயே அது ஏன்பா?

9) டீம்ல ஒரு நல்ல பிகரோட ஜகஜமா நாங்க பேசினா அது கடலை! அதையே நீங்க பேசினா டெக்னிகல் டிஸ்கஷனா? எந்த ஊர் நியாயம்பா இது? :)

10) யாரோ கஷ்டப்பட்டு அடிச்சு வெச்ச கோடை சும்மா அல்வாவாட்டும் கூகிள் ஆண்டவரிடம் வாங்கி ஒரு கட்டிங்க் ஒரு ஒட்டிங்க் போட்டு நீயே டெவலப் பண்ணின மாதிரி அத ஒழுங்கா டெஸ்ட் கூட பண்ணாம,எப்படிபா உன்னால சீன் போட முடியுது? டெஸ்டிங்க் டீம்னு ஒன்னு இருக்கு, நியாபகம் இருக்கா?

வெட்டியின் பதிவை பாத்ததும் டக்குனு தோணிச்சு. இதுல ஏதும் மனம் புண்படும்படி எழுதி இருந்தா சொல்லுங்க, தூக்கிடறேன்.

டிஸ்கி: நான் மேனேஜர் இல்லை. :)

Tuesday, February 17, 2009

மதுரை

பெங்களூரில் இருந்து மதுரைக்கு செல்லும் ஒன்னே ஒன்னு! கண்ணே கண்ணு டிரெயினில் லல்லு பிரசாத் யாதவுக்கு மட்டுமே டிக்கட் கிடைக்கும் போலிருக்கு. ஒரு மாதம் முன் கூட்டியே ஆன்லைனில் டிக்கட் நிலவரம் பார்த்தால் வெய்டிங்க் லிஸ்ட் என பல்லிளிக்கிறது.

மதுரை - தென் தமிழகத்தின் தலை நகரம். இரவு பன்னிரெண்டு மணிக்கு கூட சுடசுட இட்லியும், தொட்டுக்க மூனு வகை சட்னிகளும், போதாகுறைக்கு தளதளவென கொதிக்கும் சாம்பாரும் தந்து, நல்லா பிணைஞ்சுச் சாப்டுங்கண்ணே! காசில்லாட்டி நாளைக்கு தாங்க!என பாசத்தை போதிக்கும் உறங்கா நகரம். தென் மாவட்ட மக்களுக்கு ஏதெனும் கேஸ், வாய்தான்னாலும் மதுரை தான். வெட்டு குத்து கேசில் ஆஸ்பத்திரி என்றாலும் மதுரை தான்.
இங்கு பல விஷயங்கள் பேசி தீர்க்கபடுகின்றன, சில விஷயங்கள் தீர்க்கப்பட்டு பேசப்படுகின்றன.

இங்குள்ள மக்களுக்கு வாக்கும்,கையும் ரொம்பவே சுத்தம். மதுரை மல்லி, ஜில் ஜில் ஜிகர் தண்டா, முருகன் இட்லி கடை, தமிழ் மாதங்களின் பெயர்களில் வீதிகள் என தனக்கே உரிய சிறப்புடன் திகழ்வது மதுரை தான்.

மதுரை மீனாட்சி அம்மனை தம் வீட்டுப் பெண்ணாகவே பாவிக்கின்றனர். நீ பண்றது கொஞ்சம் கூட நல்லாயில்ல, உன் மனசுல என்ன தான் நினச்சுட்டு இருக்க?ன்னு மீனாட்சி கோவிலில் என் அருகில் இருந்த ஒரு அம்மா மிக இயல்பாக அம்மன் சன்னதியை பாத்து கேக்க எனக்கு அது ஒன்றும் வியப்பாக இல்லை.

ஏப்ரல் எட்டாம் தேதி கும்பாபிஷேகத்துக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது மீனாட்சி கோவில். இப்போதெல்லாம் டூரிஸ்ட் கூட்டம் ரொம்பவே அதிகம். கோவிலை சுற்றி இருக்கும் வீதிகளை சிமெண்ட் தளம் அமைத்து வாகனங்கள் நுழையாதவாறு செய்து விட்டனர். உருப்படியான விஷயம். அப்படியே பொற்றாமரைக் குளத்தையும் தூர் வாரினால் நல்லா இருக்கும்.

மதுரையிலும் மெல்ல மெல்ல அப்பார்ட்மெண்ட் கலாச்சாரம் அடி எடுத்து வைத்து இருக்கிறது. இன்னும் டைடல் பார்க் வேற வரப் போகுதாம். வரிசையாக மால்கள், நாப்பது ரூபாய்க்கு ஒரு பாக்கெட் பாப்கார்ன், ஐநாக்ஸ் எல்லாம் வந்து விடும். மீனாட்சி தான் காப்பாத்தனும்.


எதிரியை ஓட ஒட விரட்டியவரே! தென் மண்டல தளபதியே! நாளைய நாடாளுமன்றமே! ( நல்ல வேளை, ஜனாதிபதி மாளிகையை விட்டு வெச்சாங்க), எதிரிகளுக்கு பட்டை நாமம் சாத்தியவரே! எதிர்கால சிம்மாசனமே! - இதெல்லாம் அஞ்சா நெஞ்சரை போற்றி ஒட்டப்பட்ட போஸ்டர்கள் தான். சும்மாவா? சங்கம் வெச்சு தமிழ் வளர்த்த மதுரையாச்சே!

மதுரைக்கு போகும் போது பஸ்ஸில் போக்கிரி படம் போட்டார்கள். ஏதோ அசினுக்காக படத்தை பாத்தாச்சு. திரும்பி வரும் போது கன்டக்டருக்கு என்ன தோணியதோ டபக்குனு வில்லு பட டிவிடியை போட்டு விட்டார். என்ட்ரி சாங்குல ராமன் கிட்ட வில்லை கேட்டேன், பீமன் கிட்ட கதய கேட்டேன்னு வரிசையா இளைய தளபதி அடுக்கிக் கொண்டே போக, டக்குனு ஒரு பெரியவர், ஏம்பா! இனிமே டைரக்டர் கிட்ட கதைய கேளுப்பா முதல்ல!னு சத்தமா சொல்ல பஸ் முழுக்க சிரிப்பொலி. மதுரைகாரங்க நக்கல் நையாண்டி, குசும்புக்கு ரொம்பவே பெயர் பெற்றவர்கள் என சொல்வது உண்மை தானே?

Friday, February 13, 2009

Bangalore Pubs

பெங்க்ளுரில் நீங்கள் ரோட்டில் தடுக்கி விழுந்தால் மூன்று இடங்களில் விழ வாய்ப்புள்ளது.
1) அனுமார் கோவில்கள்
2) பூங்காக்கள்
3) பப்புகள்.

நான் நெல்லை மாவட்டத்தில் பள்ளி செல்லும் காலங்களில்(8th படிக்கும் போது), நம்ம தோஸ்து ஒருத்தன் லீவுக்கு பெங்க்ளுர் போய்ட்டு வந்து, எங்களிடம் 70 எம்.எம் சினிமாஸ்கோப்பில் பி.வாசு மாதிரி சூப்பரா கதை விட்டான்.

அதில் சில துளிகள்:

1) பெங்க்ளுரில் எப்போ பார்த்தாலும் பனி மழை தான். நன்னாரி சர்பத் பாட்டில் கையில இருந்தா, நாம ஜூஸ் போட்டு, போட்டு குடிச்சுண்டே இருக்கலாம்.

(இங்கு இருக்கும் மிதமான கிளைமேட்டுக்கு தான் அந்த p.வாசு இவ்வளவு பில்டப் குடுத்தான்னு எனக்கு அப்போ தெரியாது. ஆ!னு வாய் பிளந்தேன்.)

2) சகஜமா நாம, தெருவுல கூட எல்லா இந்தி நடிகைகளையும் பார்க்கலாம். மாதுரி தீட்சித்தை கூட நான் பார்த்தேன். அப்போ, ஏக்! தோ! தீன் பாட்டு சக்கை போடு போட்டது!

(இங்கு உலா வரும் சில சப்பாத்திகளை தான் அந்த நாதாரி பாத்துட்டு, "மாதுரி தீட்சித்"னு எங்களிடம் கதை விட்டான்னு எனக்கு இப்போ தான் உரைக்கிறது.)

3) அங்கே நிறைய பப்புகள் இருக்கு!
மூணாவது பாயிண்ட் தான் எங்களுக்கு புரியலை.
"போடா! நீ ஆக்ஸ்போர்ட் டிக்க்ஷனரியில் ஏதோ ஒரு வார்த்தையை பாத்துட்டு எஙகளிடம் ரீல் விடறியா?"னு எங்கள் செட்டில் ஒருத்தன் சுதாரித்து விட்டான்.

நானும் என் பங்குக்கு, " நான் குழந்தையா இருக்கும் போது(இப்பவும் நான் குழந்தை தான்) என் அம்மா நெய் விட்டு பிசைஞ்சு எனக்கு ஊட்டி விட்ட பப்பு சாதம் விக்கற ஓட்டலை தானேடா நீ சொல்ற?" இது ஒரு பெரிய விஷயமா?னு புத்திசாலிதனமா அவனை மடக்கி விட்டேன்.

அந்த கூட்டத்துக்கு நான் தான் மொட்டை பாஸ்.என் கூட்டத்துக்கு நான் சொல்றது தான் தீர்ப்பு! செல்லாது! செல்லாது!னு அவனது மூணாவது பாயிண்டை தள்ளுபடி செய்து விட்டோம்.

அதன் பின் நான் காலேஜ் படிக்க மதுரை வந்தாச்சு. இரண்டாம் ஆண்டு படிக்கும் போது, இங்கேயும் ஒரு நண்பன் லீவுக்கு பெங்க்ளூர் போயிட்டு வந்து, "பெங்க்ளூர் கலக்கலா இருக்குடா மச்சான்! கிளைமேட்டும் சரி, அத விடு, பப்ஸ் எல்லாம் அட்டகாசமா இருக்குடா மாப்ளே!"னு சொல்ல, நான் "சரி, இவன் ஏதோ பேக்கரி கடையில் கிடைக்கும் பப்ஸை தான் சொல்றான்!"னு நினைத்துக்கொண்டேன்.

வேலைக்கு சென்னை வந்து ஒரு வருடம் ஓடிய பின் தான் கொஞ்சம் விவரம் புரிந்தது. அதுவும், கம்பெனியில் எதாவது பார்ட்டி வந்தா, உடனே, நண்பர்கள் "எல சன்முகம்! எடுறா வண்டிய!"னு நாட்டாமை விஜயகுமார் ரேஞ்சுக்கு சவுண்டு விட்டு, பப்ஸை நோக்கி படை எடுப்பார்கள்.(அங்கு சென்று வாந்தி எடுப்பார்கள், அது வேற விஷயம்!)

நீயும் வா! சும்மா வேடிக்கை பாரு!னு கெஞ்சினாலும் நான் சிக்கியதில்லை.
அதன் பின் பெங்க்ளுரில் வேலை கிடைத்தவுடன், ஊருக்கு போய் அம்மா, அப்பாவிடம் சொல்லிவிட்டு ஜாயின் பண்ணலாம்னு போனேன்.
என் பக்கத்து வீட்டுல ஒரு புண்ணியவான் இருக்கார். அவர் நின்ன இடம் தீப்பற்றி எரியும். கொளுத்தி போடுவதில் டாக்டர் பட்டம் பெற்றவர்.

சும்மா நான் லீவுக்கு போனாலே, "ஏய்! என்ன அம்பி வந்துட்ட? வேலை அவ்ளோ தானா?"னு கேட்டவர். யோவ்! லீவுக்கு வந்திருக்கேன்யா! 4 நாளுல திரும்பி போயிடுவேன்!னு நான் மட்டும் விளக்கம் சொல்லலை அவ்ளோ தான்!

"நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி!அம்பியை வேலயை விட்டு தூக்கிட்டா! அதான் திரும்பி வந்துட்டான்!'னு டமுக்கு அடித்து விடுவார் அந்த மனுஷன்.
நான் தாமிர பரணியில் குளிக்க போயிருக்கும் போது, என் அம்மா அப்பாவிடம் என்ன சொன்னாரோ தெரியாது.
நான் (ஊறி) வந்தவுடன் என் அம்மா, "இதோ பாரு! பெங்களுரில் கண்ட கண்ட இடத்துக்கெல்லாம் போக கூடாது! நல்லவங்க கூட சேரனும். உனக்கு நல்ல புத்தியை குடுக்கனும்னு அந்த பகவானிடம் நாங்க வேண்டிப்போம்! நீயும் வேண்டிக்கோ! என்ன புரிஞ்சதா?"னு என்னை போட்டு தாக்க, "ஆகா! பத்த வெச்சியே பரட்டை!"னு நான் அந்த ஆள் வீட்டை பார்த்து முறைத்தேன்.

என் தம்பி, இது தான் நல்ல சமயம்னு, அம்மா! அண்ணா அத மாதிரி எல்லாம் பண்ண மாட்டான் மா! தண்ணி அடிச்சாலும், வாந்தி எடுக்க மாட்டான் மா!னு ஸேம் சைடு கோல் அடித்தான்.

அதன் பின், தென் ஆப்ரிக்காவுக்கு போகும் காந்தி ரேஞ்சுக்கு, "பெருமாள்/அனுமார் கோவில் தீர்த்தம் தவிர எதையும் நான் இதுவரை தொட்டதில்லை! இனி தொட போவதும் இல்லை!"னு டிஸ்கிளைமர் குடுத்த பின் தான் வீடு சகஜ நிலைக்கு திரும்பியது.

போன வாரம், நண்பர் ஒருவருடன் M.G.ரோடில் ரோடில் உள்ள ஒரு ரெஸ்டாரெண்டில் இரவு டிபன் சாப்பிட நேர்ந்தது. பில்லை அவர் கட்டுவார்னு நான் நினைக்க, என்னை விட பார்ட்டி படு உஷாரு. பின் இரண்டு பேரும் ஷேர் பண்ணினோம்.

மாடியில் இருந்த அந்த ஓட்டலுக்கு கீழே ஒரு பப் இருந்ததை நான் கவனிக்க வில்லை. அவர் பார்த்து விட்டு, "என்ன, அம்பி! இதேல்லாம் பாத்ருக்கீங்களா? தண்ணி அடிச்ச்ருக்கீங்களா?னு கேட்டார்.

இது என்ன, மைசூர் ராஜா அரண்மனையா? மற்றபடி, மதுரையில் இரண்டு நாளைக்கு ஒரு தரம் வைகை தண்ணீர் கார்பரேஷனில் விடுவார்கள். குடம் குடமா எங்க பாட்டிக்கு அடிச்சு குடுத்ருக்கேன்னு நான் நக்கல் விட்டதில் பார்ட்டி டென்ஷனாகி விட்டார்.
நாம கிளம்பலாமே!னு அவஸ்தையாக நெளிந்தேன்.

அவர் விடாமல், எப்படி இருக்கு?னு சும்மா உள்ள போயி பாருங்க!னு கூட்டி போனார்.
நைட் லேம்ப் தான் எல்லா டேபிள்களிலும் போட்டிருந்தனர். ஒரே புகை மண்டலம். எல்லார் கையிலும் புகைந்து கொண்டு இருந்தது.

சில பாரதி கண்ட புதுமை(?) பெண்களும் ஊதிக் கொண்டு இருந்தனர். ஜக் மாதிரி இருந்த சில பெண்கள் கையில் ஜக்குடன் பீர் வேறு. சாந்த ஜக்குபாய் இவங்க தான் போலிருக்கு! :)

பாவம்! அவங்களுக்கு வீட்டில் என்ன கஷ்டமோ, மாமியார் கொடுமையோ யாரு கண்டா!

சக பதிவர்கள் எல்லாருக்கும் அன்பார்ந்த நேச தின நல்வாழ்த்துக்கள், அதான் வாலன்டைன்ஸ் டேன்னு ஆங்கிலத்துல சொல்றாங்களே தொரைமாருங்க. என்னவோ போங்க.

நாம எல்லாரையும் எல்லா நாளும் நேசிக்க கத்துகிட்டோம்னா எதுக்கு ஒரு தனி டே! கொண்டாடனும்?

பி.கு: மங்களூர்ல/பெண்களூருல யாரேனும் காதலர்களை பாத்தா ராம் சேனா ஆளுக நாளைக்கு கல்யாணம் முடிச்சு வெச்சுபுடுவாங்களாம். மங்களுர் சிவா இதான் சாக்குன்னு சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்க வேணாம், அவ்ளோ தான் சொல்வேன். :)