போன முறை மைசூர் காவிரி எக்ஸ்பிரஸில் பூஜா விளைவால் கடுப்பான தங்கமணி, இந்த முறை புத்திசாலிதனமாய் செய்வதாய் நினைத்து, கவுஹாத்தி எக்ஸ்பிரஸில் எனக்கு டிக்கட் புக் செய்து இருந்தபடியால் அடியேன் ராமானுஜ தாசன் (மன்னிக்கவும், தமிழ்மணத்துல நிறையா விமர்சனம் படிச்ச விளைவு) ரயில் நிலையத்துக்கு போய் சேர்ந்தேன். என் ரயில் தவிர எல்லா ரயிலும் எந்த பிளாட்பாரத்தில் வரும்?னு அறிவிப்பு வருகிறது. சரினு கவுண்டரிடம் (சாதி பெயர் இல்லீங்கண்ணா) கேட்டால் கவுஹாத்தி கேன்சலாகி விட்டதே!னு ரெம்ப சந்தோஷமா சொல்றார். வட மாநிலத்தில் பலத்த மழையால் ஒரு வாரமாகவே அந்த ரயில் எல்லாம் ரத்தாம். அப்புறம், ஒரு பேருந்தில் இடம் பிடித்து அருகில் அமர்ந்திருந்த ஒருவரிடம் என் சோக கதையை சொல்ல வேண்டியதா போச்சு.
நீங்க பேப்பர் எல்லாம் படிக்கறதில்லையா? பக்கத்தில் அமர்ந்த பாவத்துக்கு துக்கம் விசாரித்தார்.
இல்லீங்க, நான் பிளாக் தான் படிக்கறது.
அவர் ஒரு நொடி ஙேனு முழித்துவிட்டு, அதுல கூடவா இந்த செய்தியெல்லாம் வரதில்லை?
அதுல இதெல்லாம் வராதுங்க. ஒரு வேளை "ஒரு தன்மான தமிழனை ஊருக்கு போக விடாமல் வடைமொழி மாநிலத்தவர் செய்த சதி!"னு நான் பதிவு போட்டா தான் உண்டு.
என்னை ஒரு ரேஞ்சாக பாத்துவிட்டு, நீங்க மாவோயிஸ்ட்டா? இல்ல கம்யூனிஸ்ட்டா? ஒரு ரேஞ்சா பேசறீங்க. இப்படிதான் பிளாக்குல வருமா?
அய்யா சாமி, நான் ரிசப்ஷ்னிஸ்ட் கூட இல்லை. நான் சும்மா ஒரு சாம்பிளுக்கு சொன்னேன், இதவிட பலபல மேட்டர்கள் எல்லாம் வெளிவரும்.
உதாரணத்துக்கு சிலது சொல்லுங்களேன்! மனுசன் லேசுலுல விடுவதாயில்லை.
உலத்தரத்துல எப்படி படம் எடுக்கனும்?னு கமலுக்கு ஒரு மூடிய கடிதம் போடுவாங்க. ஜூராஸிக் பார்க்குக்கும் தசாவதாரத்துக்கும் பத்து வித்யாசங்கள் காட்டுவாங்க. ஜலஜாவின் ஜல்சா கதைகள்னு ஒரு தொடரை ரீலீஸ் பண்ணுவாங்க. முன்/பின்/ நடு இலக்கியமெல்லாம் படைப்பாங்க.
கொஞ்சம் இருங்க, அது என்னங்க பின்னிலக்கியம்? நான் கேள்விபட்டதேயில்லையே?
அடடா இது தெரியாதா? விசித்திரன் (இதுல பெயர் இப்படி தான் வைக்கனும்) வீட்டின் பின்கதவை திறந்து பார்த்தான் அப்படினு சொல்ல வரதையே, உடலுக்கு ஒன்பது வாசலில் கண், மூக்கு, காது வாய் துவாரங்களை போல சமூகத்தில் அங்கீகாரம் பெற்றவை தவிர்த்து, விளிம்பு நிலை மனிதர்களை போல அதிகம் கண்டுகொள்ளபடாமல், ஆனால் தவிர்க்கவே முடியாத மீதி துவாரங்கள் போல இருக்கும் வீட்டின் பின்கதவை, இந்தியா சமீபத்தில் 1990களில் உலகமயமாக்கலுக்காக தனது வெளி நாட்டு கொள்கைகளை அமெரிக்க/ஐரோப்பிய ஏகாதிபத்தியத்துக்கு திறந்து விட்டது போல விசித்திரன் திறந்து பார்த்தான். இது பின்னிலக்கியம். புரிஞ்சதோ?
பாவம்! கேட்டவருக்கு கொஞ்சம் கண்ண கட்டி இருக்கும் போல. ஒரு மடக்கு தண்ணிய குடித்து கொண்டார்.
இப்படி எழுதினா யாரு படிப்பாங்க? நம்ம எழுதினதை மத்தவங்க படிச்சாங்களா இல்லையா?னு எப்படி தெரிஞ்சுக்கறது?
என்ன இப்படி கேட்டுடீங்க? நாங்களும் பதிவை படிச்சோம்னு சொல்ற விதமா "அவ்வ்வ்வ்" "ரீப்பீட்டேய்ய்ய்" "நல்ல பதிவு", :))னு எல்லாம் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பாங்க.
அட, இது நல்லா இருக்கே! நீங்க சொல்றத கேட்டதும் எனக்கும் ஒரு பிளாக் ஆரம்பிக்கனும்னு ஆசையா இருக்கு.
அதுகென்ன? காசா பணமா? கூகிள்காரன் சும்மா தரான். ஊருக்கு போனதும் ஆரம்பிச்சுடுங்க, சரியா?
சரிங்க, சாரி, கேக்க மறந்துட்டேன், உங்க பேரு?
அடியேன் நம்பி! சாரி அம்பி, ஆமா உங்க பேரு?
லிங்கம், ஜம்புலிங்கம்...