Wednesday, June 27, 2007

எட்டுக்குள்ள (பிளாக்) உலகம் இருக்கு ராமையா!

எட்டி எட்டி பாக்கறியே என் கடைய,ஒரு எட்டு இங்க வந்து எட்டு விளையாடிட்டு போப்பா அம்பி!னு பாசமா வல்லியம்மா கூப்பிட்டு இருக்காங்க. பில்லு பரணி கூப்பிட்டு இருக்காரு! மாமியார் வீடு வேற சென்னைல இருக்கு, பரணி தயவிருந்தா அடிக்கடி சென்னைக்கு போய் வரலாம். என்ன பில்லு, சரி தானே? :)

கல்யாணம் நல்ல படியா நடந்ததா?னு அமெரிக்கவிலிருந்து போன் போட்டு வல்லியம்மா அன்பா விசாரிச்சாங்க. கீதா பாட்டிக்கு பேரன் வயசாகிற இந்த குழந்தை அப்படி என்ன சாதனை பண்ணி இருக்கு இங்க 8 தடவை சொல்றத்துக்கு?(பீத்தறத்துக்கு?னு யாரோ வாசிக்கறாங்களே!)

(கீதா பாட்டி! நோட் தி பாயிண்ட்). :p


ஹிஹி, நாம தீவிர அனுமார் பக்தனாச்சா, அவர மாதிரி தன்னடக்கம் கொஞ்சம் ஜாஸ்தி.(அனுமார் இந்த பதிவை படிச்சா தலைல அடிச்சுப்பார்).

1) எல்கேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை முதல் மூன்று ரேங்க் மட்டுமே எடுத்ததுக்கு ஒரு கேசரி சாப்டற பேசின் வாங்கினத இங்க நான் ஒரு சாதனைனு சொல்ல முடியுமா?
முடியாதே! சில பரீட்சைகளில் பக்கத்து சீட்டு ரஞ்சனி பேப்பரை பார்த்து காப்பி-பேஷ்ட் பண்ணி இருக்கோமே! எனவே செல்லாது! செல்லாது!

2) அட! எட்டாம் வகுப்பில் சுற்றுபுற சூழல் சம்பந்தமா கட்டுரை எழுதற போட்டிக்கு நாம வழக்கம் போல எகப்பட்ட டகால்டி பண்ணி ஒரு ஆராய்ச்சி கட்டுரை ரேஞ்சுக்கு ரெடி பண்ணி கன்னியாகுமரி - விவேகானந்தா கேந்திரத்துக்கு அனுப்பி, அவங்க நம்மள ஐந்து நாள் அங்க ஓசியா கூப்ட்டு சோறு போட்டாங்களே! அத சொல்லலாமா?

நாம எழுதினா கையெழுத்து கேசரி கிண்டின மாதிரி இருக்கும்னு அம்மாவை விட்டு இல்ல எழுத சொன்னேன்? அதனால இதுவும் செல்லாது! செல்லாது.

3) தாமிர பரணியில் நீச்சல் கத்துக்கறேன் பேர்வழி!னு மூழ்க இருந்த என் உடன்பிறப்பை கபால்னு நீச்சல் அடிச்சு போயி தலைய பிடிச்சு தூக்கி கரை சேர்ந்தோமே, அது?
ஹிஹி காப்பாத்த போன நானும் கொஞ்ச நேரம் தண்ணி குடிச்சு தத்தளிச்சு, தட்டு தடுமாறி தானே கரை சேர்ந்தோம், இதுவும் செல்லாது.

4) ஸ்கூல் படிக்கும் போது, என்சிசியில் மாவட்டதிலேயே ஒரே ஆளா பஞ்சாப்(ஆமா! ஆமா!) போறதுக்கு செலக்ட் ஆனோமே, அது..?
ஹிஹி, பூரி கிழங்குக்கு ஆசைப்பட்டு என்சிசியில் சேர்ந்த பய தானே நாம! இதுவும் செல்லாது! செல்லாது!

5) ஒரு கல்லூரியில் மாதம் இரண்டு கிலோ லயன் டேட்ஸுக்கு (அதான் பேரீச்சம்பழங்க) வேலை பார்த்த காலத்தில், சுனாமிக்கு கூட ஸ்கூல் பக்கம் ஒதுங்காத சில மக்களுக்கு எழுத்தறிவித்தோமே அது?

ஒரு இந்தியனா, சரி விடுங்க, ஒரு மனிதனா என் கடமையை தானே செஞ்சேன்? அது எப்படி சாதனையாகும்?
ஆமா! என்.டி. ராமாராவே சொல்லி இருக்காரே,
கடமையை செய்!
பலனை எதிர்பார்க்காதே!

6) எவ்வளோ சோதனை வந்தாலும் சைவ உணவு தவிர வேற எதையும் சாப்பிடகூடாது! பெருமாள் கோவில் தீர்த்தம் தவிர வேறு எந்த தீர்த்தமும் குடிக்க கூடாதுனு உறுதியா இருக்கோமே அது..?

7) என்னை மாதிரி பசங்க எழுதற பதிவுகளுக்கு அனானி கமண்ட் விழறதே பெரிசா இருக்கற இந்த காலத்தில் நான் படைத்த இலக்கியங்களை, ஹிஹி பதிவுகளை தமிழை மூன்றாம் மொழியாக ஸ்கூலில் எடுத்த என் தங்கமணி பார்த்து பரவசமாகி, என்னயும் நல்லவன்னு நம்பி கழுத்தை நீட்டி இருக்காங்களே! இது கூட ஒரு சாதனையா? இல்ல இது அவங்களுக்கு வந்த சோதனையா?

8) முகம் தெரிந்த நண்பர்களே முகவரி தொலைந்து போன இந்த நாட்களில், முகம் தெரியா முத்துக்களாகிய என் இனிய பிளாக் உலக மக்களே! உங்களை நண்பர்களாய் அடைய நான் என்ன தவம் செய்தோனோ?

அது மட்டுமா?
அம்பி அண்ணா! அம்பி அண்ணா!னு பாசமாய் அழைத்திடும் பிளாக் உலக தங்கைகள்/தம்பிகள், தம்பி!னு பாசம் காட்டும் டிடி, எஸ்கேஎம் போன்ற அக்காமார்கள், தங்கள் வீட்டில் ஒரு பிள்ளையாய் என்னை வைத்து பார்க்கும் வல்லியம்மாக்கள், தனது பேரனாய் பாசம் காட்டி என் காதை திருகும் கீதா பாட்டிகள்,
அடடா! ஒரே பீலிங்க்ஸ் ஆஃப் பெங்களூரா இருக்கு.
( நல்ல வேளை, என் தங்கமணி மட்டும் அண்ணா!னு அல்வா குடுக்கலை)

ஏற்கனவே நிறைய பேர் எட்டடி பாஞ்சுட்டாங்க. அப்படி பாயாதவங்க, தாராளமா பாயலாம், கமண்ட் போட நான் இருக்கேன்.

ஒன்னு மட்டும் நல்லா தெரியுது, அடுத்த சங்கிலி பதிவு "ஒளிமயமான ஒன்பது" தான். யாரு ஷ்டார்ட் மியூசிக் போட போறாங்களோ? நல்லா இருங்கப்பா!

பி.கு: ஆமா! யாரு அந்த ராமையா?னு யாரும் கேட்கபடாது.
காலம் நம் தோழன் முஸ்தபா!ல முஸ்தபா யாரு?னு நாம கேட்டோமா? இல்லையே! அத மாதிரி தான்!

Wednesday, June 20, 2007

வாஷிங்க் மெஷின்

எப்பொழுதும் கரை புரண்டு ஓடும் தாமிரபரணி பாயும் நெல்லைச்சீமையில் வாஷிங்க் மெஷின் என்ற சாதனம் 5 வருடம் முன் வரை கூட வரவில்லை. எல்லோருக்கும், எல்லாத்துக்கும் பரணி தான்! (யப்பா பில்லு! இதுல எந்த உள்குத்தும் இல்லை).

எங்கூர் மாமாக்கள் காலங்க்காத்தால ஒரு 6 மணிக்கு எழுந்து, துண்டை தலைபாகையா கட்டி, வேட்டிய மடிச்சு கட்டி அப்படியே ஹாயாக வயற்வரப்பில் நடந்து, அக்கம்பக்கம் யாராவது வராங்களா?னு பார்த்து, "சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா?"னு வரவேண்டியதை பாட்டு பாடி வரவழைத்து, நைசா பங்காளி வயலுக்கு உரமிட்டு, அந்த வேட்டியை நம்ம வடிவேலு ஸ்டைலில் லேசா தூக்கிண்டு ஒரு வழியா ஆத்தங்கரைக்கு போய் சேர்ந்து, 501 சூப்பர் பார் சோப் போட்டு பாறாங்கல்லில் அந்த வேட்டியை அடிஅடினு அடித்து(துவைக்கும் போது அவரது தங்கமணி நியாபகம் போலும்) அதிரடி சலவை செய்து வீட்டுக்கு வந்து சேர்வார்கள்.

ஒரு சில மாமாக்கள் பொறுப்பு சிகாமணியாய் தங்கள் தங்கமணியின் புடவை, ரவிக்கை, இன்ன பிற ஐட்டங்களையும் அரசன் சோப் போட்டு வெளுத்து கட்டி எடுத்து வருவார்கள். அப்படி வந்தால் தான் ஒழுங்கா புவா கிடைக்கும் அது வேற விஷயம்.

தீடிரென்று சீமாச்சு மாமா மட்டும், "டெக்னாலஜி எல்லாம் நாமும் யூஸ் பண்ண வேண்டாமா? எத்தனை நாளைக்கு தான் இப்படி உழச்சு உழச்சு(துவைச்சுனு வாசிக்கவும்) ஓடா தேயறது?"னு பேங்க்ல லோன் போட்டு ஒரு வாஷிங்க் மெஷின் வாங்கி வந்து விட்டார்.
எங்க தெருவே ஓடி போய் பார்த்து, வாய் பிளந்து நின்றது.

"என்னடா சீமாச்சு! துணி துவைக்கறத்துக்கு இவ்ளோ பெரிய பொட்டியா? ஆனாலும் இதுக்கு இம்புட்டு ரூவாயா?

கிரிஜா! உங்காத்துகாரரை அனியாயத்துக்கு வேலை வாங்கற, அதான் பாவம்! பொறுக்க முடியாம இந்த வண்ணான் பொட்டிய வாங்கிட்டான் பாரு!னு போற போக்கில், சீமாச்சு மாமாக்கும் ஆப்படித்து விட்டு போனார்கள்.

வெறும் சோப் பவுடரை போட்டு தண்ணிய வாரி விட்டாச்சுனா அரைமணி நேரத்துல அதுவே கும்மு கும்முனு கும்மி, துவைச்சு, பிழிஞ்சு மொட்டை மாடியில காய போட்டு மடிச்சு எல்லாம் வெச்சுடுறது!னு சீமாச்சு மாமா தனது சகாக்களிடம் அள்ளி விட்டதில் சங்கு மாமா, வெங்காச்சம் மாமா, கிச்சா மாமா என மேலும் சில மாமாக்கள் தங்கள் தங்கமணிகளிடம் கண்ணை கசக்கி, வண்ணான் பொட்டி வாங்கி அழகு பார்த்தனர்.

சரி நம்ம கதைக்கு வரேன். கல்யாண கிப்டாக வாஷிங்க் மெஷின், பிளாஸ்மா டிவி எல்லாம் வரும்னு சப்பு கொட்டிண்டு இருந்த எனக்கு ஜலதரங்க கிண்ணங்கள், டீ கப், ஜி3 அக்கா சரக்கடிக்கற (சாரி உளறிட்டேன்!) சூசு குடிக்கற கண்ணாடி கோப்பைகள்னு தந்து ஆப்படித்து விட்டனர்.

சரி, நம்ம ஜீன்ஸை எல்லாம் வருஷத்துக்கு ஒரு முறை தானே துவைக்கிறோம்? வாஷிங்க் மெஷின் எல்லாம் இப்போ தேவைப்படாது!னு நினைத்த எனக்கு " பீரானாலும் சைடு டிஷோடு அடி! ஜீன்ஸானாலும் கசக்கி கட்டு!னு தங்கமணி மண்டையில் குட்டு குட்டுனு குட்ட அகர முதல எழுத்தேல்லாம் அறிய வைத்தாய் தேவி!னு கதறாத குறையாய் எந்த கம்பெனிகாரன் மலிவு விலையில் மெஷினும் தந்து துவைத்து போட கேரளாவிலிருந்து ஓமனகுட்டியும் தருகிறான்?னு ஒரு வாரமாய் என்கொயரி செய்ததில் மூன்று தேறியது (சத்தியமா நான் வாஷிங்க் மெஷினை தான் சொன்னேன்).
ஒரு மாலை இளவெயில் நேரம், தங்கமணியையும் கூட்டிக்கொண்டு நாலு கடை ஏறி இறங்கி சேல்ஸ்மேன் கையில் துண்டு போட்டு பேரம் பேசி, இதுக்கு மேல விலையை குறைக்கனும்னா நான் தான் உங்க வீட்டுக்கு வந்து தினமும் துவைச்சு போடனும்!னு கடைக்காரான் கத்தியதில் கடைசியாக ஒன்னை வீட்டுக்கு தள்ளிண்டு வந்தாச்சு (இப்பவும் நான் வாஷிங்க் மெஷினை தான் சொல்றேனுங்கோ)

அடுத்த நாள் டெமோ காட்ட ஆள் வருவான்! சன் மியூஸிக்குல ஹேமா சின்ஹாவ பாத்து ஊத்திண்டு இருக்காம ஒழுங்கா கவனிச்சு வைங்கோ!னு அம்மணி டோஸ் விட்டவுடன் எனக்கு டக்குனு ஏனோ சீமாச்சு மாமா தான் நினைவுக்கு வந்தார்.

"இதோ பாருமா! எங்க பேமிலில டீவி ரிமோட்டுக்கு பேட்டரி மாத்தறத்துக்கே நாங்க வீட்டு மெயினை ஆஃப் பண்ணிட்டு தான் மாத்துவோம். கரண்ட் சமாச்சாரம்னா அவ்ளோ பயம்!"னு டகால்டி பண்ணி பாத்தும் ஒன்னும் நடக்கலை.
முதலில் நீ கத்துக்கோ! அடுத்த மாசம் நான் தேறிடுவேன்!னு இப்போதைக்கு வண்டி ஓடுகிறது. (இந்த போஸ்ட் பப்ளிஷ் ஆனதும் அதுக்கும் ஆப்பு - இதுக்கு பேர் தான் சொந்த செலவில் சூனியம் வெச்சுக்றது சொல்றாங்களா?)

நமது பிளாகர் யூனியனிலிருந்து திரட்டப்பட்ட நிதியிலிருந்து தான் இந்த வாஷிங்க் மெஷின் வாங்கப்பட்டுள்ளது! அதுக்காக நீங்க பெங்களூர் வரும் போது உங்க டிரஸ் எல்லாம் கழட்டி தந்து என்னை துவைத்து தர சொல்லப்படாது. இப்பவே சொல்லிட்டேன் ஆமா!)
இந்த அரிய பணியில் புயல் போல சுழன்று, இடி போல முழக்கமிட்டு, சூறாவளியாய், வசூல் செய்த நமது ஜி3 அக்காவுக்கு என் உளமார்ந்த நன்றிகள் கோடி.
ஜி3 யக்கா, நீங்க மட்டும் பெங்களூர் வாங்க, உங்களுக்கு நான் ட்ரீட் தரேன் சுக் சாகருல. மெனு - வேற என்ன, சூசு தான்! :)
(உங்க ரேஞ்சுக்கு பில்லு பரணி தாங்குவான், நம்மால முடியாதுக்கா!)

இதை திறம்பட ஒருங்கிணைத்த டாக்டர் டிடி அக்காவுக்கு மிக்க நன்றி ஹை!

பி.கு: விரைவில் எதிர்பாருங்கள் கும்தலக்கடி கும்மாவா! கேரளானா சும்மாவா! - உங்கள் அபிமான பிரவுஸர்களில் - உலகமெங்கும்...

Thursday, June 14, 2007

மொய்

பொதுவாக கல்யாணங்களில் மக்கள் எந்த அளவுக்கு சாப்பாடு பத்தி பேசுவார்களோ( நான் ஜி3 அக்காவ ஒன்னும் சொல்லலை) அதே அளவு முக்கியத்துவத்தை மொய் எழுதுவதிலும் (ஹிஹி வசூலிப்பதிலும் தான்) காட்டுவர்.

குழந்தைக்கு (அட நான் இல்ல பா) காது குத்துவதிலிருந்து, பூப்புனித நீராட்டு, பரிசமிடுவது, முறை மாமன் சீர், கல்யாணம் என தமிழர்களின் வாழ்வில் மொய் என்பது பின்னி பிணைந்து விட்ட ஒரு விஷயமாகி விட்டது.
அன்பை வெளிகாட்ட ஒரு வழியாக இருந்த இந்த மொய், இப்போழுது பலருக்கு கவுரவப் பிரச்சனையாகி அடிதடி வரை கூட சென்று விடுகிறது.

"சோறு சாப்ட கோவிந்தசாமி எழுதும் மொய் பணம் நூறு ரூபாய்ய்ய்ய்ய்"னு எங்க ஊர்களில் குழாய் மை செட்டில் ஒருவர் முழக்கமிட்டால் தான் அவரது சாதி சனங்கள் மத்தியில் அவருக்கு பெருமை.

பெரிய குடம், அரிசி அண்டா, குத்து விளக்கு, காமாட்சி விளக்கு, வெள்ளி விளக்கு, என பொருளாகவும் இந்த மொய் வசூலாகும்.
பின்னர் காலம் மாற, மாற அண்டா-குண்டா எல்லாம் சுவர் கடிகாரம், டின்னர் செட், கண்ணாடி-பீங்கான் செட், மிக்ஸி, கிரைண்டர் என புதிய அவதாரம் எடுத்தது.
இதில் மாப்பிளை பேரில் வரும் மொய் தனி, பெண் பேரில் வருவது தனிதனியாக பிரித்து குடுக்கப்படும். கல்யாணம் எல்லாம் முடிந்து, மணமக்கள் இருவரும் ஒரு வழியாக செட்டில் ஆன பிறகு இந்த கிப்ட் வகையறாக்களை பிரித்து பார்த்து தம் பெயரில் வந்த கிப்ட் பத்தி ஒருவருகொருவர் நக்கல் விட்டு கொள்வது பொதுவாக நடக்கும் விஷயம்.

ரங்கு: ( நக்கலாக) உன் அருமை பெரியம்மா என்ன இப்படி 10 கண்ணாடி கிண்ணமா பிரசண்ட் பண்ணி இருக்கா? நான் என்ன அதுல தண்ணி விட்டு டிங்-டிங்-டிங்க்னு ஜலதரங்கம் கச்சேரியா பண்ண போறேன்?

தங்கமணி: (பதிலுக்கு நக்கலாக) உங்காத்துல மட்டும் என்ன வாழுதாம்? உங்க அருமை அத்தை பெரிய தூக்கு சட்டி குடுத்ருக்கா. உங்களுக்கு அதுல நாளைக்கு லஞ்ச் கட்டி தரட்டுமா?

ரங்கு: (சமாளிப்புடன்) சரி, குழந்தைகள் எண்ணை பட்சணம் போட்டு வெச்சுகட்டுமேனு ஆசையா குடுத்ருக்கா. எவ்ளோ வெயிட்டா இருக்கு பாரு! இத மாதிரி தூக்கு உங்காத்துல பாத்ருக்கவே மாட்டா.

தங்கமணி: நன்னா சமாளிக்காதீங்கோ! ஈஈஈனு இளிச்சுண்டு வந்தாளே உங்க பாம்பே மாமி, வெறும் ஃபொக்கேவோட தானே கை வீசிண்டு வந்தா ரிஷப்ஷனுக்கு. அதுவும் ஊமத்தம் பூ வெச்சு ஒரு ஃபொக்கே, இந்த ஊருலயே உங்காத்து காராளுக்கு தான் கிடைக்கும்.

ரங்கு: (ரோஷத்துடன்), இதோ பாரு, நானும் பேசுவேன் அப்புறம்! சாயந்தரம் ஜானுவாசத்துக்கு கடலேண்ணைல ஒரு பஜ்ஜி போட்ருந்தேளே, யப்பா சாமி! சாப்ட அவனவனுக்கு கார்க் புடுங்கிருச்சு தெரியுமா? உங்க சித்திக்கு கூட நாலு வாட்டி போச்சாம்.

தங்கமணி: சரி, சன் பிளவர் ஆயில் காலியாயிடுச்சுனு ஒரு சேஞ்சுக்கு அதுல போட்டோம். அந்த பஜ்ஜிய கூட விட்டு வைக்காம ஒரே ஆளா 15 பஜ்ஜி சாப்டாரே உங்க கல்கத்தா சித்தப்பா அவருக்கு எத்தனை தடவ போச்சு?னு நான் சொல்லவா? மண்டபமே நாறி போச்சு.
இதுல கொத்தமல்லி சட்னி இல்லையா?னு மனுஷனுக்கு ரொம்ப குறை வேற.

ரங்கு: டிஸன்சியே இல்லை உங்காத்து காராளுக்கு.

தங்கமணி: டிஸன்சி பத்தி ரொம்ப பேச வேண்டாம். லைட் மியூசிக் காரா பாடின "அப்படி போடு! போடு! பாட்டுக்கு வேட்டி அவுந்தது கூட தெரியாம உங்க மாதுங்கா மாமா ஆடின ஆட்டம் தான் அன்னிக்கு டாக் ஃஆப் தி டவுனாம். சன் டிவியில பிளாஷ் நியூஸ்ல போடாத குறை தான்.

ரங்கு: (சமாதான தொனியுடன்) சரி, வீட்டுக்கு வீடு வாசப்படி!

தங்கமணி: ( நக்கலாக) எங்காத்துல எல்லாம் ஃலிப்ட் தான்.

ரங்கு: (பாவமான முகத்துடன்) ரொம்ப டயர்ட்டா இருக்கு. உங்க டெல்லி அத்தை ஆசையா பிரசண்ட் பண்ண சரக்கடிக்கற கண்ணாடி கோப்பைல அட்லீஸ்ட் ஒரு ஜூஸாவது தாயேன். உங்க அத்திம்பேருக்கு அதேல்லாம் உண்டா?

தங்கமணி: இந்த நக்கலுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.

Monday, June 04, 2007

வந்தேன்! வந்தேன்!

வீட்டை கட்டி பார்! கல்யாணம் பண்ணி பார்!னு சொன்னவங்க வாயில நெய்யோட முந்திரிபருப்பு போட்டு இளம் சூடான கேசரிய தான் போடனும்.

பெங்களுர்-மதுரை-சென்னை-திருநெல்வேலி-கேரளா - மறுபடி தமிழ் நாடு - பெங்களுர்..... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா!

16 நாளில் 3500 கி.மீட்டர்கள் 3 மாநிலங்கள். லட்சகணக்கான நமது கட்சி தொண்டர்களின் ஆரவார வரவேற்பு.(ஒரு விளம்பரம்தேங்க்!)

இதோ உங்கள் அம்பி வந்து விட்டான். ஒரு 16 நாள் பிளாக் படிக்காதது, சைடு டிஷ் இல்லாம பகார்டி அடித்த ஷ்யாம் ரேஞ்குக்கு நம்ம நிலமை ஆகி போச்சு.
ஒரு வழியா இன்னிக்கு நானும் தங்கமணியும் ஆபிஸுக்கு கிளம்பியாச்சு. அம்மணி ஆபிஸ் பஸ் தான் முதலில் வரும். காலைல அரக்க பரக்க 5.30 க்கு எழுந்து, தங்கமணிய ரெடி பண்ணி, எந்த எடத்துல பஸ் வரும்?னு விசாரிச்சு, ஸ்டாபுல கொண்டு போய் விட்டு, பஸ் வர வரைக்கும் ரோட்டுல பராக்கு பாத்து(ஜொள்ளூ விட்டு!னு உண்மைய எழுதுங்கோ!னு அம்மணி மிரட்டல் வேற), ஒரு வழியா அம்மணிய ஏத்தி விட்டு டாட்டா-பிர்லா எல்லாம் காட்டி (அவங்க பக்கத்து சீட்டு பிகருக்கும் சேர்த்து காட்றேனோ?னு மேடத்துக்கு சந்தேகம் வேற) வீடு வந்து சேர்ந்தா காலை மணி எட்டு.


சரி, நாமளும் ஒரு வழியா ஆபிஸுக்கு கிளம்பற நேரத்துல டிவில நச்சுனு ஒரு பாட்டு!


"போகின்றேன் என நீ பல நூறு முறைகள் விடை பெற்றும் போகமால் இருப்பாய்!

சரியென்று சரியென்று உனை போக சொல்லி கதவோரம் நானும் நிற்க சிரிப்பாய்!"

உடனே நாமளும் ஒரு ரொமாண்டிக் மூடுல, வீட்டுல சின்னதா ஒரு டான்ஸ் ஆடலாம்னு டிரை பண்ணினா,"டாய் அம்பி! ஒழுங்க மரியாதையா இன்னிக்கு ஆபிஸ் வந்து சேரு! ஆணி இல்ல, கடப்பாரையே சேர்ந்து போச்சு!" வேற என்ன, டேமேஜர் கிட்ட இருந்து போன்.

சே! டீம்ல ஒருத்தன் புள்ள குட்டியோட சந்தோஷமா இருக்கறது இந்த டேமேஜர்களுக்கு பிடிக்கவே பிடிக்காதே!

என்ன கொடுமை இது சிங்கம்லே ACE? (வேற பெயர் இன்னும் மாத்தலையா?)
எழுத நிறைய விஷயங்கள் இருக்கு, என் கல்யாண கலாட்டாக்கள், கேரள டிரிப்னு ஒவ்வோன்னா வரும். (பின்ன எப்படி பதிவு எண்ணிக்கைய கூட்டறதாம்?).

எனக்கு நேரிலும், கைபேசியிலும், இமெயிலிலும், பதிவுகள் வாயிலாகவும் வாழ்த்து தெரிவித்த, ஹிஹி, மொய் எழுதிய, இன்னும் Belated மொய் எழுத துடிக்கும்,(விட மாட்டோம் இல்ல) அனைத்து அன்பர்களுக்கும் கோடானு கோடி நன்றி ஹை!

இதுக்கு மேல டைப் பண்ண முடியல, ஆனந்த கண்ணீர்ல கீ-போர்ட் நனைஞ்சு போச்சு). :)