Monday, March 15, 2010

கொசுத் தொல்லைகள்

சென்ட்ரலிலிருந்து வேளச்சேரி வரை செல்லும் மின் தொடர் வண்டி யாருக்கு உபயோகமா இருக்கோ எனக்கு தெரியாது, என் தங்கமணி பிறந்த வீட்டுக்கு (அதான் என் மாமியார் வூட்டுக்கு) செல்ல ரொம்பவே சவுகரியம். ஆனால் இந்த மார்க்கத்தில் பயணம் செய்ய தங்கமணிக்கு உடன்பாடில்லை. (உடன்பாடில்லாததால் தான் அவுக தங்கமணி).

காரணம் ரொம்ப சிம்பிள். அதிகாலை ஐந்தரை மணிக்கு நாங்கள் சென்னைக்கு வந்திறங்கி பார்க் ஸ்டேஷனில்(வேளசேரி மார்க்கம்) ஏதோ கள்ள கடத்தல் பண்ண வந்த கஜா மாதிரி ஆளுக்கு ஒரு பையுடன் ஆறு மணி வரை காத்திருக்க வேண்டும். நாம் கொஞ்சம் கண்யர்ந்தால் அங்கிருக்கும் கொசுக்கள் அலேக்காய் தூக்கிக் கொண்டு போய்விடும். கொசு கடிச்சா மலேரியா வரும் சாத்தியங்களும் உண்டு என்பது அம்மணியின் வாதம்.

பார்க் ஸ்டேஷனில் இருந்து மவுண்ட் ஸ்டேஷன் மார்க்கமாய் போற ரயில் மட்டும் நேரே என் மாமியார் வீட்டு மாடியில் போய் நிற்கப் போவதில்லை. அங்கிருந்தும் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பக் காவடி எல்லாம் எடுத்து தான் மாமியார் வீட்டை அடையனும். (ஒரு புஃளோவுல ரொம்பவே உளறிட்டேனோ..?)

ஐந்தரை மணி நிசப்தமான சூழலில் நாம் இருவர் மட்டும் ஒரு பிளாட்பார பெஞ்சில் அமர்ந்தபடி, மெல்ல புலரும் இந்த சென்னையின் காலைவேளையை அனுபவிக்க, வேளச்சேரி மார்க்கமல்லவோ சிறந்த இடம்! என நான் போட்ட பிட்டுகள் எதுவும் பலிப்பதில்லை.

சம்பவம் நடந்த அன்று ஏதோ ஒரு தேவதை ஆசிர்வதிக்க என் பிட்டு பலித்தே விட்டது. சம்பவம் என்ன?னு பதிவின் முடிவில் சொல்வேன். (உடனே ஸ்க்ரோல் பண்ண வேண்டாம்).

வழக்கம் போல கொசுக்கள் தங்கள் வேலையை காட்டத் தொடங்கிய நேரத்தில் தான், அந்த நால்வர் அணி தொலைவில் இருந்து எங்களை பாத்து விட்டு மெதுவாக நெருங்கியது. மெகா சீரியலா இருந்தா இந்த இடத்துல தொடரும்னு போட்டு இருக்கலாம், இங்க போட்டா நீங்க என் முதுகுல நாலு போட்ருவீங்கன்னு எனக்கு தெரியும்.

மைலாப்பூர் ட்ரேயினுக்கு இந்த பக்கம் தானே நிக்கனும்?னு அவர்களில் ஒருவன் மங்கிலத்தில் கேட்டான். மலையாளமும் ஆங்கிலமும் கலந்தா மங்கிலம் தானே?
ஆமாம்னு நான் சொல்லி சரியாக அஞ்சாவது நிமிடத்தில் ரயில் வந்து சேர்ந்தது. அவர்களுக்கு என்ன தோணியதோ, நாங்கள் ஏறிய அதே பெட்டியில் ஏறி எங்களுக்கு பக்கவாட்டு சீட்டில் அமர்ந்து கொண்டனர். ஒருத்தன் மட்டும் என் எதிர்புற சீட்டில் அமர்ந்து என்னிடம் பேச்சு குடுக்கத் தொடங்கினான்.

மைலாப்பூர் ஸ்டேஷன் எப்போ வரும்..?

இன்னும் சரியாக இருபது நிமிஷத்தில்...

ஸ்டேஷன் வந்தால் கொஞ்சம் சொல்ல முடியுமா?

கண்டிப்பாக.

நீங்கள் எல்லாரும் கேரளாவா?

ஆமா.

கேரளாவுல எங்க?

எனக்கு கோட்டயம், அவங்களுக்கு ஆலப்புழா.

ஒஹோ! மைலாப்பூர் சுத்தி பாக்க வந்தீங்களா?

இல்ல, ஒரு வங்கி தேர்வுக்காக வந்தோம். (Not only for Big boys - விளம்பரம் வருமே! அந்த வங்கி தான்). நாங்க எல்லாருமே ஒரே காலேஜ்.

வெரிகுட். இத மாதிரி போட்டி தேர்வுகள் எழுதினா தான் ஸ்டூடன்ஸுக்கு ஒரு நல்ல எக்ஸ்போஷர் கிடைக்கும்! - மையமாய் உளறி வைத்தேன்.

உங்க காலேஜ் பேரு என்ன?

சொன்னான்.

கோ-எஜுகேஷனா?

ஆமா.

இந்த கேள்வியோடு நான் சும்மா இருந்து இருக்கலாம். விதி வலியது.

உங்க கிளாஸ்ல இருந்து வெறும் நாலு பேர் தான் தேர்வு எழுத வந்தீங்களா?

(கேள்வியின் உள்ளர்த்தம் புரிந்து, சத்தமில்லாமல் தங்க்ஸ் என் காலை நறுக்குனு மிதிக்க நானும் சத்தமில்லாமல் கத்தினேன்).

இல்ல, மத்தவங்களுக்கு தி.நகர் சென்டர். என் மாமியார் வீடு தி.நகர்லயே இருந்து இருக்கலாம்.

கிளம்பும்போது தான் அந்த பையன் ஒரு வெடிகுண்டு வீசினான்.

உங்க ஹெல்ப்புக்கு ரொம்ப தாங்க்ஸ் அங்கிள்!

சட்னி, சாம்பாரோட பிரேக்பாஸ்டுக்கு பதினஞ்சு இட்லி திங்கற மாதிரி இருக்கும் உனக்கு நான் அங்கிளா? கர்ர்ர்ர்ர்.

தங்கமணிக்கு பரம சந்தோஷம். சாலமன் பாப்பையா சன் டிவியில் வராமலயே அந்த நாள் இனிய நாளானது.

எதை பாத்து அங்கிள் என விளித்தான்?

1) பத்து வார்த்தைகள் பேசும் இடத்தில் இப்போதெல்லாம் ரெண்டு அல்லது மூனு வார்த்தைகள் நிதானமாக பேசும் என் அணுகுமுறையா?

2) ஷேர், மியூச்சுவல் பண்டுகள் என தேடிய என் கண்கள் லைஃப் இன்ஷூரன்ஸ், ரிடையர்மென்ட் பிளான்களையும் இப்போது பார்கின்றதே.

3) இரண்டு முறை சாலையை இடம் வலமாக பார்த்துவிட்டு சட்டுனு கடந்து விடுகிற நான் இப்போதெல்லாம் அதிக நேரம் எடுத்துக் கொள்கிறேனே?

4) திண்டுக்கல்லு! திண்டுக்கல்லு! பாடலில் அருமையாக நடனமாடும் அந்த காமெடி நடிகரின் பெயர் கருணாஸ்! என நினைவுக்கு கொண்டு வர அரைமணி நேரம் பிடித்ததே! (அதே பாடலில் கருணாஸுடன் ஆடும் அந்த நடன நாரியின் பெயரும் இன்றுவரை எனக்கு தெரியாது. எனவே முடிந்தால்...)
எனக்குள் ஒரே சிந்தனையோட்டம்.

"Am I getting old..?" - சில கேள்விகள் கேள்விகளாகவே இருப்பது தான் நல்லது. :)

பி.கு: இப்போதெல்லாம் நான் வேளச்சேரி மார்க்கமாக பயணிப்பதை அவ்வளவாக விரும்புவதில்லை. கொசு கடிச்சா மலேரியா வருமாமே..?

Wednesday, March 10, 2010

உலக இணைய தமிழ் மாநாடு

நான் வழக்கம் போல ஆபிசில் பிசியா(?!) வேலை பாத்துக் கொண்டிருக்கையில் தோழர் ஒளி என்பவரிடமிருந்து ஒரு மின்மடல்.

உலக தமிழ் மாநாடு நடக்க இருக்கிறது. அதில் உலக இணைய தமிழ் மாநாடும் ஒரு சப்ஜக்ட். அவரது நட்பு வட்டத்தில் அண்ணா பல்கலை கழகத்தை சேர்ந்த ஒரு பேராசிரியையும் கலந்து கொள்கிறார்கள், இணையத்தில் எப்படி தமிழை வளக்கலாம்னு உங்களுக்கு ஏதேனும் ஐடியா தோணினா சொல்லுங்க, அதை எல்லாம் அந்த மாநாட்டில் தொகுத்து உங்கள் குரலும் ஒலிக்கலாம் என்பது தான் அந்த மின்மடலின் சாரம்சம்.

அதை பாத்ததும் முதலில் எனக்கு மகிழ்ச்சி, ஆனா லேசா சந்தேகம். நம்மை வெச்சு யாரேனும் காமெடி கீமெடி எதுவும் பண்றாங்களோன்னு லேசா ஒரு டவுட்டு.

பின்ன, என்ன மாதிரி பிஸ்கோத்து பதிவரை எல்லாம் மதிச்சு இப்படி யாரு மெயில் அனுப்புவாங்க? நெஜமாவே எனக்கு தான் மெயில் அனுப்பினீங்களா?ன்னு வாய் விட்டு தோழர் ஒளியிடம் கேட்டு விட்டேன். ஆமா!ன்னு அவர் உறுதியா சொன்னதுக்கு அப்புறமா கொஞ்சம் அவகாசம் குடுங்க, மெயிலிடுகிறேன், அல்லது பதிவா போட்டறேன். அப்படியே நம்ம மக்களும் தங்கள் கருத்துக்களை பின்னூட்டமா போடுவாங்க (அப்படியே போட்டுட்டாலும்). நீயா? நானா? கோபி மாதிரி எல்லாத்தையும் நான் தொகுத்து தரேன்னு சொல்லிட்டேன்.

எனக்கு தோணின சில பாயிண்டுகள்:

1) என்ன தான் நாம இங்க்லீஸ்ல பீட்டர் விட்டு பதிவெழுதினாலும் தம் தாய் மொழியில் சொல்வதையே நம் மனம் விரும்பும். தமிழை தாய் மொழியா கொண்டவர்கள் கூட, இப்பல்லாம் வரும்! ஆனா வராதுங்கற மாதிரி, பேச தெரியுது, ஆனா படிக்க எழுத தெரியாதுன்னு ஒரு நிலை மெல்ல உருவாகி இருக்கு.

இந்த நிலை மாறனுமா இணையத்தில் தமிழிலும் எழுத நிறைய்ய பேர் முன் வரனும். முதலில் தப்பு தப்பா தான் வரும். காலப் போக்கில் திருத்திக்கலாம். எனது முதல் ஐந்து பதிவுகள் ஏகப்பட்ட எ-பிழையோட தான் இருக்கு. பழசை மறந்திட கூடாதுன்னு இன்னமும் அப்பதிவுகளை அப்படியே தான் விட்டு வெச்ருக்கேன்.

2) பிற மொழி கலப்பில்லாம எழுத பழகனும். அதுக்காக காப்பியை கொட்டை வடி நீர்ன்னும், ஐஸ்க்ரீமை பனிக்கூழ்ன்னும் ரொம்ப செந்தமிழில் செப்பவும் வேண்டாம். இப்ப இந்த பதிவுலேயே எத்தனை ஆங்கில வார்த்தைகள் இருக்குன்னு ஒரு நிமிஷம் எண்ணி பாருங்க (ஆபிஸ், பிசி, ஐடியா, சப்ஜெக்ட்). இதையெல்லாம் தவிர்க்கலாம் தானே..? :)


3) இணைய தமிழில் தொழில் சார் பதிவுகள் இன்னும் நிறைய்ய வரனும். சொல்ல போனா ஒரு சதவீதம் கூட அப்படிபட்ட பதிவுகள் வரலை என்பது தான் நிதர்சனம். அப்ப தான் தொழில் சார் கலைச் சொற்கள் நிறைய்ய வரும், அட மக்கள் யோசனையாவது செய்வாங்க. ஊடகங்கள் முக்யத்துவம் தருகிற அதே மாதிரி நிகழ்வுகளுக்கு இங்கயும் பதிவுகளா முக்யத்துவம் தந்து எழுதறது எந்த வகையில் நியாயம்? என்பது அவரவர் மன சாட்சியை(அப்படினா?) கேட்டுக் கொள்ளட்டும்.

4) இன்று எங்க பாத்தாலும் பெயர்ப் பலகைகளில் ஒரே தமிங்கலம் தான்.

XYZ ட்ரேடிங்க் ஏஜென்சிஸ்
XYZ டிம்பர் டிப்போ
XYZ மெக்கானிக் ஷாப்
XYZ என்டர்ப்ரைசஸ்
XYZ மெர்சண்ட் ஷாப்
XYZ ஸ்டேஷனரி ஷாப்

.......இப்படி சொல்லிண்டே போகலாம். இணையத்தில் எழுதுபவர்கள் இந்த மாதிரி சொற்களுக்கு தகுந்த தமிழ் சொற்களை பயன்படுத்தலாம். தெரிஞ்ச கடை முதலாளியா இருந்தா நயன்தாரா படத்துக்கு கீழே உங்க கடை பெயரை தமிழிலேயே எழுதுங்க அண்ணாச்சி!னு சொல்லிப் பாக்கலாம். அவரும் நயன் ரசிகரா இருந்தா கண்டிப்பா நீங்க சொல்றதை கேப்பாரு.

5) இணையத்தில் கதை எழுதுபவர்கள் "ஆஃவ்சம்"(awesome) என்பதை அற்புதம்! என்றே எழுதலாம். கதை அமெரிக்காவுலயே நடக்கறதா இருந்தாலும் மொழி நடை மாறாமால் தமிழிலேயே எழுத முடியும். ரா.கி ரங்க ராஜனின் மொழிபெயர்ப்புக் கதைகள் இதற்கு சரியான உதாரணம்.

இவ்ளோ தான் என் மண்டைக்கு தோணியவை. உங்களுக்கு இதை விட நல்ல ஆக்கங்கள் தோணலாம், கண்டிப்பா அதை (இந்த முறையாவது) இங்க சொல்லுங்க.

Monday, March 01, 2010

தலாய் லாமா வாழ்க!

சமீபத்தில் ஒபாமாவுக்கு புத்த மதத்தில் சில சந்தேகங்கள் வந்து உடனே தலாய் லாமாவை மீட் பண்ணி தன் டவுட்டை க்ளியர் செய்து கொண்டார் எனபது நமக்கு தெரிந்ததே.
தலாய் லாமா வீட்டுக்கு பால்காரன், பேப்பர் காரன், மளிகைகாரன்னு யார் பாக்கி கேட்க போனா கூட சீனாவுக்கு அடி வயிற்றில் புளியை கரைக்கும். இப்போ அமைதிக்காக நோபல் பரிசை வாங்கிய மன்னிக்கவும், பெற்றுக் கொண்ட ஒபாமாவே த-லாமாவை மீட்டினார் என தெரிந்ததும் சீனா அவசர அவசரமாக அமெரிக்க தூதுவருக்கு சம்மன் அனுப்பி காச்சு காச்சென காச்சியது.

"Tibet is an inalienable part of the inviolable territory of China, and the issues concerning Tibet are purely internal affairs of China."

அமெரிக்க தூதுவருக்கு இந்த சம்மன் எல்லாம் சாம்பார் வடை மாதிரி என்பதால் அவர் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளவில்லை. நீங்க குடுத்த டீயில் அடுத்த தடவை கொஞ்சம் ஏலக்காயை தட்டி போட்டு தாங்க, எனக்கு ரொம்ப பிடிக்கும்! என கூலாக சொல்லி விட்டு வந்து விட்டார்.

நிற்க, இதே சீனா தான் இந்தியாவின் ஒருங்கிணந்த பகுதியான அருணாச்சல பிரதேசத்து பாறை, குட்டி சுவர்களில் "சீனா வாழ்க!", "இதுவும் சீனா தான்!" என கிறுக்கி வைத்தது. நாம சீனா தூதுவரை கூப்பிட்டு காய்ச்சினோமா? என்றால் இல்லை என்பது வருத்தமான செய்தி. நமது பிரதமர் தந்து கூட்டணி கட்சிகளிடம் ஒரு யோசனையாவது கேட்டு இருக்கலாம்.

அப்படி கேட்டு இருந்தால் உடனே மாநில கட்சிகளின் கிளைகள்- அருணாச்சல பிரதேசத்தில் துவங்கி இருக்கலாம். அங்கு நடக்கும் தேர்தலில் மாநில கட்சிகளும் போட்டியிட்டு இருக்கும்.


"வருங்கால முதல்வரே வருக!" "எதிர்கால அருணாசல பிரதேசமே வருக!"னு எல்லா சுவர்களிலும் நாம பெயிண்ட் அடிச்சு இருக்கலாம்.

தினமும் ஒரு வட்ட செயலாளர், மாவட்ட செயலாளர்னு எப்பவுமே அந்த மாநிலம் பிசியாக இருக்கும்.

பிரசார கூட்டங்கள் என் வந்து விட்டால் நம்மூர் பேச்சாளர்களின் திறமைக்கு ஒரு அளவே கிடையாது. நாலு முக்கு சேருகிற இடத்தில் ஒரு மேடையை போட்டு "பீஜிங்கும் இந்தியாவின் ஒரு பகுதி தான்!" 2016ல நாங்க தான்டா பீஜிங்கில் ஆட்சி அமைப்போம்! என போகிற போக்கில் சொல்ல வைத்து விடலாம். என்னடா இது? முதலுக்கே மோசமாயிடும் போல!ன்னு சீனா கப்சிப்னு அடங்கிடும்.

தமிழகத்தின் ஒரு கட்சி அங்க போனா மத்த கட்சிகள் சும்மா இருக்குமா? அருணாசல பிரதேசத்து குழாய்களில் தண்ணி வரலை, கக்கூஸ் இல்லைனு தினமும் ஏதாவது ஒரு போராட்டம் நடத்தலாம். இத்தனை நாளா எல்லாப் பயலும் சும்மா தானே இருந்தாங்க, தீடீர்னு எப்படிடா இவ்ளோ கூட்டம்னு சீனா மண்டைய பிச்சுக்கும்.


இதெல்லாம் சரி படலைன்னா கடைசி ஆயுதமாக, சன் பிக்சர்ஸ் தலாய் லாமாவை வைத்து சைன மொழியில் ஒரு படம் எடுக்கலாம். அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு தரம் அந்த படத்தின் ட்ரேய்லரை போட்டே சைனாவை கடுப்பேத்தலாம்.


இருக்கவோ இருக்கு, தமிழக திரைப்பட விருதுகள். தலாய் லாமாவுக்கும் ஒரு விருது வழங்கலாம், ஒரே டேக்கில் எப்படி குறிப்பிட்ட காட்சியை தலாய் லாமா நடித்து காட்டினார்?னு மேடையில் அவரையே சொல்ல வைக்கலாம்.

இல்லாட்டி குறைந்த பட்சம் ஒரு கலைமாமணியாவது வழங்கலாம். அந்த விழாவையும் அருணாச்சல பிரதேசத்திலேயே வைத்து கொள்ளலாம். விழான்னு வந்துட்டா எப்படியும் கலை நிகழ்ச்சிகள் இருக்கனும். மானாட மயிலாட கோஷ்ட்டியை அங்க எறக்கினா சீனா அலறி அடித்து கொண்டு ஓடி விடாதோ?

இதைப் போல உங்களுக்கும் ஏதாவது யோசனை இருந்தால் பின்னூட்டத்தில் கும்முங்க பாப்போம்.

பி.கு: என் பதிவுகளுக்கு அடிக்கடி வந்து தொல்லை குடுக்கும் சைனா காரர்களை கடுப்பேத்தவே தலாய் லாமாவுக்கு ஆதரவாய் இந்த பதிவு.