நீங்க எப்பவாவது வங்கிகளின் கஷ்டமர் கேரை அணுகி இருக்கீங்களா? அப்ப தொடர்ந்து படிங்க.
என்னது அணுகியதேயில்லையா? என்னனு தெரிஞ்சுக்கனும் இல்ல, அதனால நீங்களும் தொடர்ந்து படிங்க. :)
சென்னையிலிருந்து பெங்களூர் வந்து பிறகு, அங்க இருந்த வங்கி அக்கவுண்டை தொடவேயில்லை, ஏன்னா இங்கயுள்ள கமபனி வேற ஒரு வங்கில கணக்கு தொடங்கி குடுத்துடுச்சு. ஒரு வருடம் கழிச்சு கல்யாணம் ஆகி, தங்கமணி வந்துபிறகு நிதி நிர்வாக கணக்குகள் எல்லாம் முறைப்படி ஒப்படைக்கிறப்ப தான், இந்த வங்கி கணக்கு பத்தி பேச்சு வந்தது.
சரி, அந்த கணக்கை இங்க உள்ள கிளைக்கு மாத்தி விடலாம்னு தங்க்ஸை நேர்ல கூட்டிட்டு வங்கிக்கு போயாச்சு. அம்மணியும் நானும் அவங்க குடுத்த பேப்பர்ல எல்லாம் என் வீட்டு நம்பர், தெரு பெயர், எத்தனாவது சந்து, என் பிளாக் அட்ரஸ் எல்லாம் ரொப்பி குடுத்துட்டு வந்தாச்சு. அவங்களும் பொறுப்பா உங்க புதிய அக்கவுண்ட் நம்பர் இது தான்!னு பத்து நாள் கழிச்சு கொரியர் அனுப்பிட்டாங்க.
இணைய வங்கி சேவைக்கு பாஸ்வெர்டு அனுப்புங்க!னு அதுக்கு ஒரு விண்ணப்பம் குடுக்க, அந்த பிரஹஸ்பதி அனுப்பிய பாஸ்வேர்டு வெச்சு திறந்திடு சிசேம்!னு என் அக்கவுண்டை திறக்க முடியலை. இப்ப தான் ஒரு சிக்கல். என் பழைய ATM (அழகிய தமிழ்மகன் இல்லை) கார்டு காலாவதி ஆகிடுச்சு. அத்தோடு நானும் மறந்திட்டேன், தங்கமணியும் மறந்தாச்சு (அதிசயம் தான்!).
இப்ப தீடிர்னு தங்க்ஸ்க்கு நியாபகம் வந்து, வீட்ல வெட்டியா தானே இருக்கீங்க, ஒழுங்கா அந்த வேலைய முடிங்க!னு அன்பா சொல்ல, ஓடு! அந்த பேங்குக்கு!னு போயாச்சு. அங்க இருந்த ஒரு கஷ்டமர் கேர் அம்மணியை உதவி கேட்டேன். சந்தன கீத்து எல்லாம் வெச்சு பாக்க பாவனா மாதிரி நல்லா இருந்தாங்க, ஆனா லிப்ஸ்டிக் தான் கொஞ்சம் ஓவர்! என்பதெல்லாம் இந்த பதிவுக்கு அவசியமில்லாத விஷயம். அவங்களும் போன்ல பேசுங்க!னு நம்பர் போட்டு குடுத்தாங்க. ஒன்று! ரெண்டு!னு அவ்வையார் முருகனை வரிசைபடுத்தி பாடின மாதிரி போன்ல அந்தம்மா சொன்ன எல்லா நம்பரையும் அமுக்கியாச்சு. ஒரு பயலும் அந்த பக்கம் எடுக்க மாட்டேங்கறான். அவங்களும் நம்ம மாதிரி ஆபிஸ்ல பிளாக் எழுதறாங்க போலிருக்கு.
நீயே பாரு தாயி! உங்காளுக வேலை செய்யற லட்சணத்த!னு அவங்களவிட்டே டயல் பண்ண வெச்சேன். வெண்டகாய்க்கு ஏன் லேடிஸ் பிங்கர்!னு வெள்ளகாரன் பேரு வெச்சான்?னு அப்ப தான் புரிஞ்சது. சோக்கா சொல்லி இருக்கான்யா இங்க்லீஸ்காரன். அந்த அம்மணியும் ரொம்ப நேரம் ட்ரை பண்ணி கடைசியா ஒரு ஆளை லைன்ல புடிச்சுடுச்சு. போன் இப்ப என் கைக்கு வந்தது.
எதிர்முனை, "உங்க அக்கவுண்ட் நம்பர் சொல்லுங்க பாப்போம்".
சொன்னேன்.
நீங்க பிறந்த தேதி..? (பர்த்டே கேக் அனுப்ப போறாங்களா? அட செக் பண்றாங்களாம்!)
சொன்னேன்.
கடைசியா நீங்க பண்ண ஒரு மூணு டிரான்ஸாக்ஷன் என்னனு சொல்லுங்க பாப்போம்?
கடைசியா எழுதின மூணு பதிவை கேட்டா சொல்லி இருப்பேன். இருந்தும் தட்டு தடுமாறி சொல்லிட்டேன்.
இல்லயே அம்பி! தகவல் ஓரளவு தான் கரக்ட்டா இருக்கு. சரி, கார்டு நம்பர் சொல்லுங்க.
அதுக்கு தான் கண்ணு நான் போன் பண்ணி இருக்கேன். புது கார்டு வேணும்.
அடடா! நாங்க அதெல்லாம் கவனிக்கறதில்லை. நீங்க பேங்குலயே ஒரு விண்ணப்பம் குடுங்க. வேற ஏதேனும் வேணுமா?
ஆமா! இன்னும் டிபன் சாப்டலை. ஒரு மசால் தோசை கிடைக்குமா?
எதிர்முனை சிரிப்பு சத்ததுடன் தூண்டிக்கப்பட்டது. நான் மறுபடி பாவனாவிடம் சென்று முறையிட, அடடா!னு ஒரு உச்சு கொட்டி பக்கத்து சீட்டில் இருந்த ரீமா சென்னிடம் உதவி கேட்டது. மறுபடி ஒரு விண்ணப்பம் எழுதி குடுத்தாச்சு! பத்து நாளைக்குள்ள உங்களுக்கு தபால் வரலைன்னா என் பெயரை நயன் தாரானு மாத்தி வெசுக்கறேன்னு பாவனா சூளூரைக்க, மெய் சிலிர்த்து விட்டது எனக்கு.
சொன்ன மாதிரியே நாலாவது நாளில் தபால் வந்து விட, ஐந்தாம் நாள் பாவனாவே செல்பேசி உறுதி செய்ய, நான் இருக்கறது இந்தியாவில் தானா?னு ஆச்சர்யம் தாங்க முடியலை. அக்கவுண்ட் பேலன்ஸ் செக் பண்ணினா இரு நூற்றி இருபதைந்து ரூபாய் பாவனா பேரை சொல்லி அந்த பேங்குக்கு மொய் எழுதப்பட்டு இருந்தது. அட பாவிகளா! இந்த சேவை ஓசி!னு இல்ல நான் நினைச்சேன். இப்ப கார்டு வந்தாச்சு, ஆனா இணைய சேவைக்கு பாஸ்வேர்டு வரலை.
திக்கற்றவர்க்கு பாவனாவே கதி!னு மறுபடி படையெடுக்க இந்த தடவை போன்லேயே விண்ணப்பம் பெற்று கொண்டனர். இந்த தடவையும் மொய் எழுதனுமா?னு கேக்க, இல்ல, இது இலவசம் தான்!னு அம்மணி திருவாய் மலர்தருளினாங்க.
சொல்ல மறந்துட்டேனே! இந்த தடவை லிப்ஸ்ட்க் அளவா போட்டிருந்தாங்க. :)