இந்த ஒன்பது என்ற எண்ணுக்கு தான் எத்தனை சிறப்பு!
1) நவ கிரகங்கள் ஒன்பது.
2) நவ ரத்னங்கள் ஒன்பது
3) ஜோதிஷத்தில் நவாம்சம் என்று சொல்வர்கள்
4) சக்தி உபாசனையில் ஷ்ரி சக்ரத்துக்கு நவாபர்ண பூஜை என்று ஒன்று உண்டு.
5) நவமி திதியில் தானே ராமர் மானிடராக ஜனித்தார்.
6) ஒன்பது ஒளஷதங்களை கொண்டு தான் நவபாஷணம் என்ற அரிய மருந்து தயாரிக்கப் படுகிறது.
7) நவ ரசங்கள் - கோபம், சிருங்காரம், ஹாஸ்யம் என உணர்வுகள் ஒன்பது விதமானதே!
8) பூவுலகில் எம் பெருமாளுக்கு திருப்பதிகள் ஒன்பது.( நவ திருப்பதி)
9) நவராத்திரி - தேவி கொலுவிருந்து ஆட்சி செய்யும் திரு நாட்கள்.
இன்று துர்க்காஷ்டமி. சக்தி சீற்றம் கொண்டு மகிஷனை சம்காரம் செய்த நாள். கருணையே வடிவம் கொண்ட அவளா இவள்? என்று உலகே அதிசயித்த நாள்.
எனக்கு சின்ன குழந்தையிலிருந்தே பாட்டியிடம் கதை கேட்கும் போது அஷ்டபுஜங்களில், சகல விதமான ஆயுதஙளுடனும் சிங்க வாகனத்தில் புயலென நேரில் வருவதை போல உணர்வேன்.

மேலும் சாந்தமான அம்மனை விட, இந்த துர்க்கா, காளி, சண்டி, அபராஜிதா தேவி போன்ற உக்ர தேவிகள் தான் என்னை மிகவும் கவர்ந்தனர்.
சக்தி, இந்த உலகத்துக்கே அவள் தான் ஆதாரம். அந்த சிவனும் இயங்குவதே இந்த சக்தியால் தானே!
துர்க்கை, லக்ஷ்மி, சரஸ்வதி என நாம் அந்த ஆதார சக்தியை பிரித்து அவர்களுக்கு ஒரு உருவமும் குடுத்து வழிபடுகிறோம். ஆனால் இம் மூன்று சக்திகளும் நம்முடனே உள்ளது.
துர்கை (இச்சா சக்தி) - மன உறுதி.
லக்ஷ்மி (க்ரியா சக்தி) - மனம் லயித்த செயல்பாடு.
சரஸ்வதி (க்னான சக்தி) - தெளிந்த ஆறிவு.
நம் உடம்பை கிரியா சக்தியும், புத்தியை இச்சா சக்தியும், ஆத்மாவை க்னான சக்தியும் ஆள்கிறது.
தெளிந்த அறிவுடன் புத்தி சரியாக கட்டளை இட்டால் மனம் லயிகிறது. உடம்பு சொன்னபடி கேட்கிறது. ஒரு வேலையில் உடல், மனம், புத்தி எல்லாம் மன உறுதியுடன் ஈடுபடுகிறது.
நல்ல பழக்கமும், புலன்களை நம் கட்டுக்குள் வைப்பதன் மூலம் லக்ஷ்மி வந்தடைகிறாள். மனதை கட்டுபடுத்துவதன் மூலம் துர்க்கை நம்மை வந்தடைகிறாள்.
உண்மையான, குளிர்ந்த சொற்களை பேசுவதன் மூலம் சரஸ்வதி வருகிறாள்.
இந்த துர்க்காஷ்டமி அன்று தேவியை பார்த்தால் அடுத்த நாள் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்ற நம்பிக்கை உண்டு. ஏனெனில் துர்க்கை உக்ரமாக தீப்பறக்கும் கண்களுடன், "இனி உனக்கு மன்னிப்பில்லை! தைரியம் இருந்தால் வாடா!"னு அசுரனை அறைகூவல் விடுத்து சம்காரம் முடித்து, குருதி அபிஷேகத்துடன் கோபம் தணியாமல் நின்ற கோலம் அது.

ஆனால் மறு நாள், கருணையே வடிவாக, கையில் மாணிக்க வீணையேந்தி, மதுர மொழிகள் பேசி, அபய முத்திரை காட்டி, தம்மை நாடி வருபவர்களுக்கு அவரவர் தகுதிக்கு ஏற்ப கலைகளை வாரி வழங்கும் சரஸ்வதியாக அருள் பாலிக்கிறாள்.

Pic courtasy: www.starsai.com
போஜ ராஜன் தீவிர லக்ஷ்மி உபாசகன். எனவே, அவனது மெய்யான பக்திக்கு கட்டுபட்டு, அஷ்ட லக்ஷிமிகளும் அவனது தேசத்தில் வாசம் செய்தனர்.
ஒரு நாள், மாஹாலக்ஷ்மி அவன் முன் தோன்றி, "போஜ ராஜனே! உன் நாட்டிலேயே பல காலமாக நாங்கள் தங்கி இருந்தால், மற்ற இடங்களுக்கு நாங்கள் எப்போழுது செல்வது? என முறையிட்டாள்.
போஜனும், சரி அம்மா! ஒரெ ஒரு லக்ஷ்மியை தவிர மீதி எல்லோரும் விடை பெறுங்கள்" என கூற, மஹாலக்ஷ்மியும் சம்மதிதாள்.
போஜன் கேட்டது தைரிய லக்ஷ்மியை தான்!
தைரிய லக்ஷ்மி அவனுடன் இருக்க, மற்ற லக்ஷ்மிகளும் வேறு வழியில்லாமல் மறுபடி அவனிடமே வந்தடைந்தனர்.

இந்த நவராத்திரி - விஜயதசமி நன் நாளில் நம் எல்லோர் மனதிலும் அந்த தைரிய லக்ஷ்மி குடி கொள்ளட்டும். மற்ற எல்லா லக்ஷிமிகளும் தன்னாலே நம்மை வந்தடைவார்களாக!