நெல்லை பிளாகர்கள் மாநாட்டுக்கு பக்காவா பிளான் பண்ணி வைத்து இருந்த நேரத்தில், நம்ம ஆபிஸ்ல மேனேஜர், "அம்பி! லீவு இப்ப கிடையாது!"னு டமால்னு ஒரு குண்டை தூக்கி போட்டார். ஆஹா! இப்பவே எதிர் கட்சியின் சதி தொடங்கி விட்டதா?னு ஒரு நிமிடம் மலைத்து விட்டேன். அத தொடர்ந்து என் உடன்பிறப்புடன் அவசர ஆலோசனை நடத்தி, பயண திட்டத்தை மாற்றி விட்டேன். முந்தய நாளில் எனது அருமை அண்ணன் டுபுக்கு போனில் அழைத்து நான் வருவதை உறுதி செய்து கொண்டார்.
அப்புறம் என்ன? "எலெய்! எடுறா வண்டிய!"னு கிளம்பி விட்டேன். நெல்லைக்கு சரியாக 65 கிலோமீட்டர் தொலைவில் வரும் போது பஸ் டயர் பஞ்சர். சே! இப்படி ஒரு சோதனையா? "எத்தனை சதி வந்தாலும் முறியடிப்போம்! இப்படை தோற்பின் எப்படை வெல்லும்?"னு நமது தொண்டர்களின் உற்சாக குரல் கேட்டு சிலிர்த்து விட்டேன்.
பெங்க்ளுரில் இருந்து புறப்படும் போதே எனக்கு சிறிது உடல் நல குறைவு, ஜல தோஷம், இருமல் எல்லாம் இருந்தது. இருந்தாலும், கொள்கை பெரிதா? நமது உடல் நலம் பெரிதா? வீடு பெரிதா? நாடு பெரிதா? என்ற தன்மான உணர்ச்சி பொங்கி வழிந்திட, பிடரிகள் சிலிர்க்க, கர்ஜனை புரிந்து, தோள் தட்டி,அதோ தெரிகிறது பார் இமயம்! என்று கூறிக்கொண்டே வந்து சேர்ந்தேன் கல்லிடை.
வந்து விட்டான் எங்கள் யசோதை இளஞ்சிங்கம்! என்று அன்னையின் ஆனந்த கண்ணீர் ஒருபுறம், ஆபிஸ்ல ஒழுங்கா வேலை எல்லாம் செய்றியா?னு தந்தையின் அன்பான விசாரிப்புகள் ஒரு பக்கம் என்றால், "என்ன மாப்ளே! பெங்க்ளுரில் இருந்து தனியா தான் வந்தியா? சே! சப்புனு போச்சே!"னு நண்பர்களின் வழக்கமான வாரல்கள் மறுபுறம் என்று கச்சேரி ஆரம்பமே களை கட்ட தொடங்கியது.
2 வாரமாக துவைக்காத டிஷர்ட் நாலு, துவைத்து 2 மாதமே ஆன(ஹி,ஹி) 2 ஜீன்ஸ்களை என் பையில் இருந்து என் அம்மா கைப்பற்றினார்கள்.
உடல் நிலை சரி இல்லாததால் அம்மா தாமிர பரணி நதியில் குளிக்க 144 தடை உத்தரவு பிறப்பித்தார்கள். பின் நான் கொஞ்சம் அழுது அடம் பிடித்து, உருண்டு புரண்டதில், 30 நிமிடம் மட்டும் சென்று வர அனுமதி கிடைத்தது. ஆனால் நான் 1 மணி நேரம் ஜலக்ரீடை நடத்தி விட்டு தான் வந்தேன்! அதன் பலனாக நிமிட்டாம்பழம் ஒன்று கூட கிடைத்தது,அது வேறு விஷயம்.
பின் வழக்கம் போல தட்டில் மல்லிகை பூக்கள்(தமிழ்நாட்டில்,இட்லினு பொதுவாக சொல்வார்கள்) தக்காளி சட்னியுடன், சுட சுட பறிமாறப்பட்டன.
அதன் பின் அம்மாவுடன் துணைக்கு சமையல் செய்து கொண்டே(சும்மா வறுத்தல், கிண்டுதல் தான்) ஆபிஸ் கதை, சில மாஹானுபாவுலு பிளாக்கர்கள் பற்றி எல்லாம் கதையடித்து விட்டு மாலை மாநாடுக்கு செல்ல தயார் ஆனேன். எல்லா மாவட்டத்திலிருந்தும் கூட்டம் வந்திருப்பதால் கூட்டம் பெரிய திடலுக்கு மாற்றபட்டதாக என் அண்ணாச்சி தகவல் சொன்னார்.
மாவட்ட வாரியாக வண்டி கட்டிக் கொண்டு "உடல் மண்ணுக்கு! உயிர் பிளாக்குக்கு!
இதை உரக்க சொல்வோம் உலகுக்கு!"னு வந்திருக்கும் கூட்டதின் ஒரு பகுதி தான் இது!

மாலை ஆனதும், என் அண்ணாச்சியின் காரை பின் தொடர்ந்து ராமரை தொடரும் இளவலை போல நான் மக்கள் கூட்டதில் நீந்தி செல்லும் காட்சியை பாரீர்.

மாநாட்டின் முக்கிய ஹைலேட்டே அம்பி தலைமையில் நடந்த சைக்கிள் பேரணி தான்!
"சிங்கமொன்று புறப்பட்டதே!
அதுக்கு நல்ல காலம் பொறந்திருக்கு!"னு குழாய் மைக் செட்டில் பாடல் ஒலிபரப்ப பட்டது.

"முதல்வனே! எனை கண் பாராய்!....
ஆசை பூவை தவிக்க விட்டு அமைச்சரோடு நகர்வலமா?"னு பல நெல்லை ஜிகிடிகள் மாடியிலிருந்து பூ தூவிய படியே பாடியதை எல்லாம் இந்த அம்பி கேட்கவே இல்லை.
நமக்கு கொள்கை தானே முக்கியம்!
பின் இரவு சுமார் 9.30 க்கு மாநாட்டு மேடையில் கொள்கை சிங்கம், தாமிர பரணி தங்கம்! தமிழர் குலகொழுந்து! எனது அண்ணன் டுபுக்கு அவர்களை சந்தித்தேன். உணர்ச்சி பெருக்கில் இருவருக்கும் பேச்சே வர வில்லை. வெறும் காத்து தேங்க்(வாயிலிருந்து தான்) வந்தது.
"ஒரு மந்தையிலிருந்து இரண்டு ஆடுகள் தனி தனியே சென்றன. மீண்டும், அவையிரண்டும் சந்தித்த போது பேச முடியவில்லையே?"
(ஆடு எங்கடா பேசும்?னு கமண்ட் போட கூடாது! சொல்லிட்டேன் ஆமா!)
3 வருடம் கழித்து இருவரும் சந்தித்து கொள்கிறோம். அந்த சந்திப்பு, வராலாற்று சிறப்பு வாய்ந்த ஒரு சந்திப்பு. நதி கடலை சேருவது போன்றது.
"நாம் இருவரும் சேரும் சமயம்! நம் கைகளில் வரும் இமயம்!"

தம்பி! எப்படி பா இருக்கே? என்று படையப்பா சிவாஜி மாதிரி உச்சி முகர்ந்தார்.(நல்ல வேளை தலைக்கு ஷாம்பு போட்டு குளித்திருந்தேன்).
இதயமும், இதயமும் அங்கு பேசி கொண்டன. எனவே வார்த்தைகளுக்கு அங்கு இடம் இல்லை. (செமத்தியா என்னை ஓட்டு ஓட்டுனு ஓட்டினார்!னு உண்மையை இங்கு சொல்லவா முடியும்?).
மாநாட்டிற்க்கு வந்திருந்த மழலை பிளாக்கர்கள் படை(என்னையும் சேர்த்து தான்)

சித்தப்பாவின் கன்னத்தில் முத்தமிட்டால்
இதற்கு தானே செல்லம் 600 கிலோமீட்டர் தாண்டி வந்தேன்!

பல முக்கிய தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
1) பதிவில் முதல் கமண்ட் போடுபவர்களுக்கு புளியோதரை, சர்க்கரை பொங்கல், ரவா லட்டு, பால் திரட்டி பால் என தாராளமாக குகிள்.காம் வழங்க வேண்டும்.
2)மொக்கை பதிவு போடுபவர்களுக்கு வயதில் மூத்த பிளாக்கர் கீதா மேடம், தனது சொந்த செலவில் தங்க கங்கணம் வழங்குவார்.
பிளாக் ஸ்பாட்டை தடை செய்ததற்க்கு கடும் கண்டனம் தெரிவித்து, தீர்மானம் இயற்றப் பட்டது.
1) ஆட்சியாளர்கள் 108 தோப்பு கரணம் போட வேண்டும். இல்லாவிட்டால், மாதம் ஒரு போஸ்ட் போடும் ஒரு குழந்தை, இனி வருடம் ஒரு போஸ்ட் போட ஆரம்பித்து விடும்.
2) "தினம் ஒரு போஸ்ட்" புகழ் சுபா இனி ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை மொக்கை போஸ்ட் போட ஆரம்பித்து விடுவார்கள்.
3) பிளாக் புளியோதரை மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழும் ஷ்யாம் இந்த தடையை எதிர்த்து ஆட்சியாளர்கள் வீட்டிலும் இனி புளியோதரை கேட்க ஆரம்பித்து விடுவார்.
வந்திருந்த அத்தனை பேருக்கும்(இதை படிப்பவர்களுக்கும் சேர்த்து தான்) நெல்லை அல்வா கிண்டி கொடுக்கப்பட்டது. இவ்வாறு நெல்லை மாநாடு இனிதே நிறைவுற்றது.
பி.கு: மேல சொன்ன மாதிரி எல்லாம் மாநாடு நடத்த எனக்கு மட்டும் ஆசை இல்லையா என்ன? ஆனால் நானும், என் அண்ணனும் அவர்கள் மாமியார் வீட்டு (சே! சே! லாக்கப் எல்லாம் இல்லை) ஹாலில் சுட சுட வாழைக்காய், உருளைகிழங்கு பஜ்ஜி, கெட்டி சட்னியுடன் பிளாக்கர்கள் மாநாட்டை கொண்டாடினோம். ஒரு சின்ன வருத்தம், வெறும் பஜ்ஜி தான் தந்தார்கள், கேசரியும் தரலை -(ஹி,ஹி) ஒரு பொண்ணையும் காட்ட வில்லை.