குழந்தைகளை எல்.கே.ஜியில் சேர்ப்பதற்கு முன்னால் சும்மா ஒரு நட்பு சூழலில், பெற்றோரை பிரிந்து தனியா மத்த குழந்தைகளுடன் சேர்ந்து இருக்க முடிகிறதா?னு டெஸ்ட் செய்யற இடம் தான் ப்ளே ஸ்கூல் என அறிந்து கொண்டேன். எங்க ஏரியாவில் அடுத்த தெருவில் இப்படி ஒன்னு இருக்கு. ஜூனியரை அங்க சேர்த்து பாக்கலாமா?னு தங்க்ஸ் கேட்க, சரி பாக்கலாம்னு சொல்லியாச்சு.
அந்த சுப தினமும் நெருங்க எனக்கு டென்ஷன் அதிகமாச்சு. கண்டிப்பா ஸ்கூல் அனுப்பனுமா? நாமே ஏன் நேரு மாதிரி வீட்டுக்கே சில டீச்சர்களை வரவழைச்சு பாடம் சொல்லி குடுக்க கூடாது?னு நான் வெகுளியா மேலிடத்தை கேட்க, அது என்ன டீச்சர்கள்..? என பப்ளிக் பிராஸிகியூட்டர் மாதிரி பாயிண்ட புடிக்க எதுக்கு வம்பு?னு பேசாம இருந்துட்டேன்.
முந்தின நாளே வாட்டர் பாட்டில், அத வைக்க ஒரு ஸ்கூல் பேக், மத்த குழந்தைகளுக்கு குடுக்க சாக்லேட்ஸ்னு ஒரே அமர்க்களம். முத முதலா ஸ்கூல் போறான், ஒரு ஸ்வீட் பண்ணிக்கோ!னு என் பங்குக்கு ஒரு பிளேட் கேசரிக்கு ஒரு பிட்டை போட்டு வைத்தேன்.
ஜூனியர் வயத்தில் இருந்த போது, தங்க்ஸ் ரெண்டு தடவை வசூல் ராஜா டிவிடி பாத்ததின் விளைவோ என்னவோ புதுசா எந்த குழந்தைகளை பாத்தாலும் ஜூனியர் முதலில் ஒரு கட்டிபுடி வைத்தியம் செய்து விடுவான். அதன்பின் "மை நேம் இஸ் சூர்யா!"னு தன்னை அறிமுகப்படுத்தி கொள்வான். அவனிடம் நாங்கள் தமிழில் மட்டுமே உரையாடுவதால், யாரேனும் திடீர்னு ஆங்கிலத்தில் என்ன கேட்டாலும் ஒரே பதில் தான். அதுக்கும் எதிராளி மசியவில்லையெனில் ஷேக்கன்! என கூறி கைகுலுக்கி விடுவான்.
ப்ளேஸ்கூலில் என்ன நடக்க போகுதோ? புது டிரஸ் எல்லாம் போட்டு சாமி கும்பிட்டு போதாகுறைக்கு எங்கள் காலிலும் விழ " நல்லா படிச்சு விக்ரமன் படத்துல வர மாதிரி நாளைக்கே நீ கலெக்டராகி அம்பாசிடர் கார்ல வந்து இறங்கனும்!"னு உணர்ச்சிவசப்பட்டு ஆசிர்வாதம் செஞ்சேன்.
சுவரெங்கும் வண்ண வண்ண கார்டூன்கள், பஞ்ச தந்திர கதை சித்திரங்கள்(சிம்ரன், ரம்யா கிருஷ்ணன் படங்கள் மிஸ்ஸிங்), சறுக்கு மரம், சீஸா, நிறைய்ய கலர்-கலர் பிளாஸ்டிக் பந்துகள், புடவை கட்டி பன் கொண்டை போட்ட ஒரு மிஸ், சுடிதார் அணிந்து, லிப்ஸ்டிக் அடித்து, குதிரை வால் கொண்டை போட்ட இன்னொரு மிஸ் என கலக்கலாய் இருந்தது ப்ளே ஸ்கூல்.
ஜூனியர் மிஸ்ஸிடம் வழக்கம் போல தன்னை அறிமுகப் படுத்தி கொண்டு சாப்டாச்சா? என அக்கறையுடன் விசாரிக்கவும் செய்தான். முதல் வாரத்தில் ஒரு மணி நேரம் தான் வைத்துக் கொள்வார்களாம். சில ஸ்கூலில் சிடி போட்டு டீச்சரும் பாட்டு பாடிக் கொண்டே டான்ஸ் எல்லாம் ஆடுவாங்களாமே..? இந்த மிஸ்ஸும் ஆடுவாங்களா? என தங்க்ஸிடம் டவுட் கேட்டு வாங்கி கட்டி கொண்டேன். ஜூனியர் புதிய சூழலில் எப்படி நடந்து கொள்கிறான் என பாக்க எனக்கு அளவிடமுடியாத ஆவல். குழந்தைகளுக்கும், அம்மாக்களுக்கு மட்டும் தான் கிளாஸ் ரூமில் அனுமதியாம். என்னை மாதிரி குழந்தை உள்ளம் கொண்ட அப்பாக்களுக்கு அனுமதி இல்லையாம்.
ஒரு மணி நேரம் கழிச்சு வீட்டுக்கு வந்த ஜூனியரிடம், உனக்கு எத்தனை பிரண்ட்ஸ் கெடச்சாங்க சொல்லு பாப்போம் என விசாரிக்க,
அபிராமி, மம்தா, ப்ரஜக்தா, எல்லாரும் பிரண்ட்ஸாயிட்டாங்க பா.
ஏன்டா உனக்கு ஒரு பையன் கூடவா பிரண்டா கெடைக்கல..? அவ்வ்வ்வ்வ்.