க்ரிப்டாலஜி படித்து சைடு போசில்(அப்போதைய) அரவிந்தசாமி சாயலில் இருக்கும் என்னை, இன்டர்போலுக்கு ஆலோசனை வழக்குவதற்காக என் துறைத் தலைவர் டெல்லிக்கு அனுப்பினார் என நான் இந்த பதிவை ஆரம்பித்தால் உங்களில் பலருக்கு தொண்டையில் கிச்கிச் வந்து, ஹக்க்க் என துப்பி விடுவீர்கள் என எனக்கு தெரியும்.
காலாவதியாகி விட்ட எங்கள் கம்பெனியின் பிராடக்ட் லைசன்ஸை இந்த ரிசிஷன் நேரத்தில் புதுப்பிக்கலாமா? வேணாமா? என மண்டையை தடவியபடி கிளைன்ட் யோசிப்பதற்குள், அவர்களை நேரில் சந்தித்து, எங்கள் பிராடக்டை வாங்கினால் ஈரேழு பதினாலு லோகங்களில் உள்ள செய்திகள் எல்லாம் உங்கள் லேப்டாபிலேயே அருவியா கொட்டும். உங்கள் பிசினஸில் தேனாறும் பாலாறும் ஓடும்! என அள்ளிவிடும் வழக்கமான சீப் டிரேய்னர் தன் மனைவியின் ரெண்டாவது பிரசவத்துக்கு போய் விட்டதால், பிராடக்ட் பில்டப் குடுக்க நீ தான் டெல்லிக்கு போகனும்! என என் துறை தலைவர் எனக்கு கொம்பு சீவி விட்டபடியால், நானும் வழக்கமாக எங்கள் ஆபிசில் டிக்கட் புக் பண்ணி தரும் ஹெச்ஆர் அட்மின் உதவியை நாடினேன்.
எப்பவோ எனக்கும் அவனுக்கும் நடந்த ஒரு வாய்க்கால் தகராறை மனதில் வைத்து, யேர் இந்தியாவுல மட்டும் தான் டிக்கட் இருக்கு, இந்த பிடி! என டிக்கட்டை கையில் குடுத்தான். ஏன் இப்படி?னு நான் கேட்டதுக்கு, நாம் எல்லோரும் இந்தியர்கள், எனவே இந்திய பொருளையே வாங்குவோம்! என எழுந்து நின்னு உறுதிமொழி எடுக்கறான். விஜய் மல்லய்யா கூட இந்தியர் தான்டே! என நான் சொன்னதை எல்லாம் பொருட்படுத்தவேயில்லை.
எனக்கு யேர் இந்தியாவில் டிக்கட் கிடைத்ததில் தங்கமணிக்கு அளவில்லா சந்தோஷம். உங்களுக்கு பிரேக் பாஸ்ட் ஊட்டிவிட்டு, பாட்டு பாடி, கதை சொல்லி தூங்க வைத்து பத்ரமா டெல்லியில் கொண்டு போய் விடுவாங்க! கவலையே படாதீங்க! என தங்கமணி தன் பங்குக்கு வெந்த புண்ணில் வெங்காயத்தை தடவினார். நல்லா இருடே!
உங்களுக்கு லால் பகதூர் சாஸ்த்ரியை தெரியுமா? இந்திய பிரதமராக இருந்தாரே! அவர் பிரதமராக பதவியேற்ற அதே வருஷம் யேர் இந்தியாவிலும் நிறைய்ய பேர் யேர்ஹோஸ்டஸ்ஸாக டூட்டியில் சேர்ந்தார்களாம். அதுக்கப்புறமா புது அப்பாயின்மெண்டே போடலை போலிருக்கு.
ரயிலா இருந்தா பயணிகள் சார்ட் எல்லாம் ஒட்டுவாங்க. லிஸ்ட் பாத்து அண்டை அயலார் நட்புறவை வளக்கலாம், வேற ஒன்னுமில்லை. இங்க அத மாதிரி லிஸ்ட் எல்லாம் ஒட்ட மாட்டாங்க போல. பிளைட்டில் அவ்வளவாக கூட்டமில்லை. பக்கத்து சீட்டில் ஆள் அமைவதெல்லாம் இறைவன் குடுக்கும் வரம்! என உறுதியாக சொல்வேன். என்ன தான் யேர் இந்தியாவில் டிக்கட்டை கிழித்து குடுத்தாலும், அன்னிக்கு கடவுள் ரொம்பவே கருணை காட்டி இருந்தான். குதிரை வால் கொண்டை, காதில் பிளாட்டினம் ரிங்க், டெனிம் டி-ஷர்ட், த்ரீ-போஃர் என அழைக்கப்படும் முக்காலே அரைக்கால் ஜீன்ஸ், கையில் ஷெர்லாக் ஹோம்ஸ் புத்தகம்.
இந்த பெண்கள் ஏன் தான் ஷெர்லாக் ஹோம்ஸையும், ஹாரி பாட்டரையும் கட்டி கொண்டு அழுகிறார்களோ? எனக்கு தெரிந்ததெல்லாம் என் அருமை மகன் உண்ணும் செர்லாக் தான். (அதையும் இப்பலாம் துப்பி விடுகிறான், ஃபேளவர் மாத்தனும் போல.)
இந்த கதையின் முடிவில் ஒரு எதிர்பாராத திருப்பம் வரும் பாருங்கள்! அங்க தான் ஷெர்லாக் ஹோம்ஸ் சேர் போட்டு நிக்கறார்! என பொத்தாம் பொதுவாக நூல் விட்டதில் க்ளிக் ஆகி விட்டது.
இந்த கதையை நீங்கள் ஏற்கனவே படித்து இருக்கிறீர்களா?
ரெண்டு தடவை. உங்களுடன் சேர்ந்து மூனாம் தடவையும் படிக்க எனக்கு ஆட்சேபனை இல்லை.
இந்த சம்பாஷனைக்கு பிறகு, லேமேன் பிரதர்ஸ் செய்த தவறுகள், ஐரோப்பாவின் வேலையில்லா திண்டாட்டம், நார்த் கொரியா பரிசோதனை செய்த ஏவுகணை டெக்னாலஜி, என லோக விஷயங்களை பத்தி கன்னாபின்னாவென குதிரை வால் கொண்டையுடன் விவாதிக்க நான் ஒன்னும் லூசு இல்லை.
1) பாந்தினி சில்க் மெட்டீரியலில் கரீனா கபூர் அணிந்து வரும் பட்டீயாலா மாடல் எடுப்பாக இருக்குமா? இல்லை கட் சுடிதார் தான் சிறந்ததா?
2) கார்னியரில் என்ன பொருட்கள் புதிதாக மார்கெட்டுக்கு வந்திருக்கிறது?
3) ராக்கி சாவந்துக்கு வாழ்வு குடுக்கப் போகும் வள்ளல் யார்?
4) பெண்களுரில் மிகச் சிறந்த மால் எது? என உபயோகமான கருத்துக்கள் பரிமாறப் பட்டன. அடுத்த சீட்காரர்களும் தங்கள் கருத்துக்களை தாராளமாக அள்ளி வழங்க, நீயா? நானா? கோபி மாதிரி நிகழ்ச்சியை(கடலையை) சுமூகமாக கொண்டு செல்ல வேண்டியதா போச்சு.
ஆனாலும் இந்த பைலட் ரொம்ப மோசம். வண்டி உளுந்தூர்பேட்டையில அஞ்சு நிமிஷம் நிக்கும். டிபன், காப்பி சாப்டறவங்க சாப்டுக்கலாம்னு ஒரு அறிவிப்பு குடுத்து, ஹைதராபாத், நாக்பூர்னு வண்டியை ஸ்டாப்பிங் போட்டு ஓட்ட வேணாமோ? எங்கயும் நிப்பாட்டாமல் வண்டியை நேரே டெல்லிக்கு கொண்டு போய் விட்டார்.
டக்குனு எழுத பேப்பர் எதுவும் கிடைக்காததால், குதிரை வால், தனது ஈமெயில் ஐடியை என் உள்ளங்கையில் எழுத வேண்டியதா போச்சு. முகம் அலம்பும் போது தண்ணீர் பட்டதால் அந்த ஐடி அழிந்து விட்டது என நான் சத்தியம் செய்தாலும் மேலிடம் நம்ப மறுக்கிறது. :)