இந்தியாவே தன் சொந்த தொழிற் நுட்பத்தில் உருவாக்கிய கிரயோஜெனிக் எஞ்சின் ராக்கெட்டை பழுது பார்க்க உங்களால் மட்டும் தான் முடியும்! என என் வீட்டு ஓனரை பெண்களூருக்கு மாற்றல் செய்து விட்டபடியால் நான் அவரது வீட்டை காலி செய்ய வேண்டியதா போச்சு. அதுக்கென்ன? ஒரு மாதத்தில் காலி செய்து விடுகிறேன் என கெத்தாக நான் சொல்லிவிட்டாலும் ரெண்டு நாள் கழித்து தான் இங்குள்ள நிலமைகள் தெரிய வந்தது.
பெண்களூரில் வாடகைக்கு வீடு தேடும் போது சில அடிப்படை விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்:
எக்காரணம் கொண்டும் நாம் வேலை பாக்கும் உண்மையான கமெனி பெயரை சொல்லவே கூடாது. இந்த லிஸ்ட்டில் முக்யமான சில முன்றேழுத்து கம்பெனிகள், சிஎம்எம்(CMM) லெவல் கம்பெனிகள் என்றால் கிழிஞ்சது கிருஷ்ணகிரி. நாம என்னவோ அந்த கம்பெனியின் சி.இ.ஓ மச்சினி பெண்ணை கல்யாணம் கட்டின மாதிரி வீட்டின் வாடகையை சொல்வார்கள்.
மேலும் உங்கள் கம்பெனியின் கடைசி குவாட்டர்(அந்த குவாட்டர் இல்லடே) நிதி நிலை அறிக்கையை கூட வீட்டின் ஓனர்கள் விரல் நுனியில் வைத்திருப்பார்கள்.
அட்வான்சாக குறந்தது எட்டு மாத வாடகையை எண்ணி வைக்க வேண்டும். நீங்கள் மீண்டும் வீடு காலி செய்யும் போது அதே தொகை உங்களுக்கு வரும், ஆனா வராது. ஒரு மாத வாடகையை பெயிண்டிங் என ஸ்வாஹா பண்ணி விடுவார்கள். பல பேர் நாம் குடுக்கும் அட்வான்சில் தான் வருடா வருடம் வீட்டுக்கு பெயிண்ட் அடிக்கிறார்கள்.
இது ஒரு பக்கம் என்றால் அப்பார்ட்மெண்ட்களில் மெயிண்டெனன்ஸ் என குறைந்தது ஆயிரத்தில் இருந்து மூவாயிரம் வரை மாதா மாதம் அழ வேண்டும். கேரளாவை சேர்ந்த ஒரு குறிப்பிட்ட பில்டர் உங்கள் வீட்டின் சதுர அடிக்கு மூனு ரூபாய் விதம் பராமரிப்பு தொகை வசூலிக்கிறாராம். அதாவது உங்கள் வீடு ஆயிரம் சதுர அடி என்றால் மூவாயிரம் ரூபாய் நீங்கள் மாதா மாதம் மொய் எழுதனும்.
சரி அப்படி என்னதான் மெயின்டேன் செய்கிறாகள் என பார்த்தால் நம் வீட்டை தவிர எல்லா இடங்களையும் பெருக்கி துடைப்பார்கள். பகலில் ஒருவர், இரவில் ஒருவர் மூக்கை நோண்டியபடியே சேரில் உட்கார்ந்து இருப்பார். செக்யூரிட்டியாம். எவன்யா கண்டுபுடிச்சான் இதெல்லாம்..?
இது எல்லாத்தையும் விட வீட்டை காலி செய்ய பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் என ஒரு ஒரு க்ரூப் இருக்கிறது. சுண்டைக்காய் காலணா, சுமை கூலி எட்டணா என்பார்களே! அது இவங்களுக்கு தான். வீட்டை காலி செய்யும் போது நாம இத்தனை நாள் லோலோன்னு தேடின பொருட்கள் எல்லாம் ஒவ்வொன்னா நம் கண்ணில் அகப்படுகிறது. காசி யாத்ரைக்கு குடுத்த குடை, வாக்கிங்க ஸ்டிக் கூட கிடைத்தது.
"பாருங்க எப்படி தூசியா இருக்கு..? கொஞ்சம் கூட அக்கறையே இல்லை உங்களுக்கு" - பெண்களுக்கு அவுக பிறந்த வீட்டில் இருந்து சீதனமாக வந்த ஒரு பிஸ்கோத்து டப்பா கூட பொக்கிஷம் தான். அதுக்காக பழைய நடிகர் ரங்காராவ் மாதிரி கையில் வாக்கிங் ஸ்டிக்கெல்லாம் வைத்து கொண்டு கெத்தாக நான் ஆபிஸுக்கு போக முடியுமா..?
வாஜ்பாய், அப்துல் கலாம் எல்லாம் இதனால் தானோ என்னவோ கல்யாணம் பண்ணி கொள்ளாமல் தேமேன்னு இருந்திருக்கிறார்கள். இல்லாட்டி அவுங்களும் காசி யாத்ரைக்கு குடுத்த குடையை தூசி தட்ட வேண்டி இருக்கும். போன், இன்டர் நெட், காஸ் சிலிண்டர், என ஒரு மனுஷனை எத்தனை விஷயங்கள் சம்சார சாகரத்தில் பிடித்து அழுத்துகிறது..?
ஆபிசில் கேட்டால் அவனவன் ரெண்டு வருடத்துக்கு நாலு வீடு மாறி இருக்கேன்னு பீத்தி கொள்கிறார்கள். அந்த மாஹானுபாவர்களுக்கு பூ போட்டு கால்ல விழுந்து தான் கும்படனும்.
இந்த கோலாகலத்தில் என் பிளாக்கின் பாஸ்வேர்டே மறந்து விட்டது என நான் சொன்னால் நீங்கள் நம்ப போவதில்லை. அக்கறையோடு தனி மெயில் விசாரித்த ஆயிரம் பேருக்கும் (சொல்லிக்க வேண்டியது தான்) மிக்க நன்றி.