Wednesday, November 25, 2009

ட்விட்டர்

நீங்க ட்விட்டர்ல இருக்கீங்களா?னு ரொம்ப நாளாகவே நெறைய பேர் என்கிட்ட கேக்கற போதெல்லாம், இல்லீங்க, கெக்ரான் மொக்ரான் கம்பெனில தான் ஆணி பிடுங்கறேனு ரொம்ப அப்பாவியா நானும் பதில் சொல்லி வந்ருக்கேன். என்னை மாதிரி ஏகபிளாக்விரதர்களுக்கு ஒன்னை கட்டியே சமாளிக்க முடியறதில்லை, இதுல உனக்கு ட்விட்டர் ஒரு கேடா?னு என் அபிமானிகள்(இருக்கீங்களா யாரும்?) துப்பிவிடும் சாத்திய கூறுகள் பிரகாசமா இருப்பதால் பேசாம தான் இருந்தேன்.

மேலும் ஆசை ஆசையாய் ஆர்குட்ல வீடு கட்டி சிலபல பழைய காலேஜ் மக்களின்(பிகர்களின்) ஏகோபித அபிமானத்தை பெற்று, வளர்ந்து வந்த நிலையில், ஒரு சபிக்கப்பட்ட ஞாயிறு நன்பகல் ரெண்டு மணியளவில் "கீழுதட்டில் வாய்ப்புண் வந்துருக்கு, என்ன செய்யனும் அம்பி? என்ற ஒரு பிகரின் ஸ்கிராப்புக்கு கர்ம சிரத்தையாய் பதில் ஸ்க்ராபிக் கொண்டிருக்கும் போது தங்கமணி நெற்றிக் கண்ணை திறக்க, அத்தோடு என் ஆர்குட் அக்கவுண்ட் பஸ்பமாகி போனது. உடனே, "தாட்சாயிணி, நன்றாக என்னை பார்!"னு எல்லாம் ஒன்னும் எகிறிக் குதிக்கலை. (ஆமா! அப்படியே குதிச்சுட்டாலும்).

நாட்டுல பல கிரிமனல் வேலைகள் எல்லாம் இப்ப ஆர்குட் வழியாத் தான் நடக்கறதாம்! அதான் நான் ஒதுங்கிட்டேன்! என தனி மெயிலில் துக்கம் விசாரித்தவர்களிடம் டெம்ளேட் மெயில் அனுப்பி ஆறுதலடைந்தேன்.

தங்கமணி கட்டிக் குடுத்த வெங்காய சாம்பாரும், உருளைகிழங்கு கார கறியையும் ஒரு கட்டு கட்டிவிட்டு, ஆபிசில் மதியம் கண் சொருகும் நேரத்தில் எல்லாரும் பீட்டர் விடும் இந்த ட்விட்டர்னா என்னனு கொஞ்சம் நோண்டிப் பாப்போம் என ஒரு நப்பாசையுடன் லேசா துருவினால் முக்காலேஅரைக்கால் பிளாகுலக மக்களும் ட்விட்டர்ல வூடு கட்டிக் கொண்டு இருக்கிறர்கள் என புரிந்தது.

  1. பல்லில் தேங்காய் துகள் புகுந்து விட்டது.
  2. குண்டூசி தேடுகிறேன்.
  3. கண்டேன் குண்டூசியை!
  4. மிஷன் இன் பிராக்ரஸ்.
  5. முடிஞ்சது சோலி!

இப்படியெல்லாம் ட்விட்டி இருக்கிறார்கள்.( நல்லா இருங்கடே!)

சிலபேர் வெண்பா பாடி இருக்கிறாகள். நமீதா பத்தி கிசுகிசு எல்லாம் ட்விட்டி இருக்கிறார்கள். சிலபேர் வெள்ளகார தொரை அவங்களுக்கு அனுப்பிய தபால் பத்தி எல்லாம் சொல்லி இருக்கிறார்கள்.

வீட்ல கரண்ட் இல்லை. டாய்லெட்ல தண்ணி வரலை. பேப்பர்காரனுக்கு பாக்கி இருக்கு.

நான் நல்லவளா கெட்டவளா?

உங்க வீட்ல நவராத்ரிக்கு என்ன சுண்டல்?

மூனார் போயி நாலு மாசமாச்சே! வீட்ல ஏதேனும் விஷேசம் உண்டா?

மாமியாருக்கு பிபி ஷுகர் எல்லாம் எகிறி விட்டதா?

இந்த ஆதி ஏன் தான் அபிய இப்படி படுத்தறானோ?

எங்காத்து அர்ஜுன் ஜுனியர் சிங்கர்ல பாடறான்.

போளி செய்வது எப்படி?(போலி இல்ல போளி, திரும்ப படிங்கடே!)

புது பதிவு போட்டால் போஸ்டர் ஒட்ட(என்னையும் சேர்த்து தான்) இதுவும் ஒரு சுவராக பயன்படுகிறது. இதுலயும் ஜிகினா வேலை காட்டுகிறர்கள் சில டெம்ளேட் ராஜாக்கள். பதிவுகளை விட, இணையத்தில் சிதறி கிடக்கும் பல சுவாரசிய தகவல்களின் லிங்குகள் டிவிட்டுகளாக வருவது நன்றாக உள்ளது. ஆனால் இங்கயும் தங்கள் அதிமேதாவித்தனத்தை பறை சாற்றும் சில ட்விட்டுகள் அயர்ச்சியைத் தான் தருகிறது.

ட்விட்டர்ல வெறும் நூத்தி நாப்பது எழுத்துக்கள் தான் எழுத முடியுமாம். உனாதானா அண்ணாச்சி எல்லாம் தன் பதிவின் தலைப்பே இவ்ளோ நீளத்துக்கு வெப்பாரு. ட்விட்டர்ல உங்களுக்கு அக்கவுண்டு தர மாட்டோம்னு அவருக்கு மெயில் அனுப்பிட்டாங்களாமே, நெஜமா? :)

தமிழ் வெர்ஷன்ல ட்விட்டர் வந்தா சிட்டுக்குருவின்னு பெயர் வெப்பாங்களா?சரி தான், இது பிளாக், ஆர்குட்டை விட வெட்டி போலிருக்கு. சீசீ, இந்த பழம் புளிக்கும். :)

Friday, November 06, 2009

பெண்களூரு

part - 1

தமிழ் நாட்டிலிருந்து இந்த பெண்களுருக்கு வந்தவர்கள் அனைவரும் ஒரு குறையாக சொல்லும் விஷயம் இங்கு சாம்பார் என்று சொல்லி அதில் சர்க்கரையை போட்டு ஒரு திரவத்தை தராங்க பா! என்பது தான். வெங்காய சாம்பார், வெண்டைக்காய் சாம்பார், முள்ளங்கி சாம்பார், முருங்கைகாய் சாம்பார்னு நம்மாட்கள் வெரைட்டியா அங்கு வெட்டி விட்டு இங்கு ரொம்பவே சிரமப்படுவார்கள்.

விடுமுறை நாளில் (பிள்ளையார் சதுர்த்தி அல்ல) மதிய சாப்பாடு ஒரு வெட்டு வெட்ட வேண்டும் என சபதம் எடுத்துக் கொண்டவர்கள் இந்த ஊரில் செல்ல வேண்டிய ஒரு இடம்: எம்டிஆர்(MTR) டிபன் ஹவுஸ். ஊர்வசி தியேட்டருக்கு நேர் எதிர்புறம் இருக்கிறது. (என்னது, ஊர்வசி தியேட்டர் எங்க இருக்கா?)

சனி, ஞாயிறுகளில் காலை லைட்டா ஒரு ஜுஸ் மட்டும் குடித்து விட்டு, மதியம் பனிரெண்டரை மணியளவில் இங்கு வந்தால் மீல்ஸ் கூப்பன் வாங்க பத்தாவது ஆளாக வரிசையில் நிற்ப்பீர்கள். முடிந்த வரை ரெண்டு அல்லது மூனு பேருக்கு மேல் உங்களுடன் சேர்த்து கொள்ள வேணாம். டேபிள் கிடைக்காது. அளவற்ற ஒரே சாப்பாடு தான். டிக்கட் விலை 120 ரூபாய்(ஒரு ஆளுக்கு). கொஞ்சம் காஸ்ட்லி தான் ஆனால் தாஜ், ஓபராய் என நமக்கு பஃபே காட்டும் மெனுவோடு ஒப்பிட்டால் இது ஒன்னுமில்லை.

முதலில் ஏதாவது ஒரு பழரசம் வெள்ளி டம்பளரில்(250 மில்லி பிடிக்கும்) தருவார்கள். (எங்களுக்கு திராட்சை ஜூஸ் வந்தது). பழக்க தோஷத்தில், ஒரே மடக்காக குடித்து விட்டால் சரியாக சாப்பிட முடியாது. எனவே லைட்ட்டா நாலு சிப் செய்யவும். நாம் சாப்பிட்டு முடிந்ததும், மறக்காமல் வெள்ளி டம்பளரை எடுத்து செல்ல தனியாக ஒரு ஆள் வருகிறார்.

அதன்பின், ஒரு பெரிய தட்டில்(இது வெள்ளி இல்லை) வரிசையாக பதார்த்தங்கள் வர ஆரம்பிக்கும். முதலில் சுடச்சுட பூரிகள் வரும். ரெண்டுக்கு மேல் வேணாம் என சொல்லி விடுங்கள். நல்ல பிசிபேளா பாத்தின் முக்ய லட்சணமே மிதமான காரத்தில், தகதகவென ஒரு ஜொலிப்போடு, முந்திரி பருப்பு மணக்க, இளம்சூடாக ஆனால் கையையோ நாக்கையோ பொத்து போகிற அளவுக்கு இல்லாமல் இருக்க வேண்டும். இவங்க இதுல எக்ஸ்பர்ட் போலிருக்கு. நீங்கள் நாலு வாய் சாப்பிடுமுன் பொன்னி அரிசியில் சாதம் வந்து விடும். சொல்ப வெய்ட் மாடி! என கூச்சமில்லாமல் சொல்லி விடுங்கள். நிஜமான சாம்பார் எல்லாம் விடுகிறார்கள். ரசமும் உண்டு.

அன்றைய ஸ்பெஷல் ஸ்வீட் என்னவோ அது வரும். எங்களுக்கு பாதாம் அல்வா கிடைத்தது. பால் பாயசமும் வரும்.

1) கட்டிடம் கட்டி சுமார் அறுபது ஆண்டுகளாவது இருக்கும்.
கை அலம்ப வைத்திருக்கும் குழாயை திறக்க காரில் பிரேக் போடுவது போல கீழே இருக்கும் பெடலை மிதிக்க வேண்டும்.

2) ஊழியர்கள் எல்லோரும் லைட் ரோஸ் நிறத்தில் சட்டையும், வெள்ளை வேட்டியும் அணிந்து இருக்கிறார்கள். சமைப்பவர் முதல் பறிமாறுபவர் வரை எல்லாம் நள பாகம் தான். நோ தமயந்திஸ்.

3) எல்லோருமே சுத்தமான கன்னடம் தான் பேசுகிறார்கள். மைசூர்காரகள் என பாத்தவுடன் சொல்லி விடலாம்.

4) யாரும் தானாக டிப்ஸ் கேட்பதில்லை. பெரும்பாலனவர்கள் குடுப்பதும் இல்லை. எனக்கு அன்னிக்குனு பாத்து மறந்து போச்சு. ஹிஹி.

5) மாடிக்கு போகும் வழியில் சுதந்திரத்துக்கு முன்னாடி எடுத்த நிழற்படங்களை மாட்டி வைத்திருக்கிறார்கள். சர்.சி.வி. ராமன், கோக்லே, நேரு என பலப்பல முக்ய தலைவர்கள் தம் தங்கமணி சகிதம் போண்டா சாப்பிட வந்திருக்கிறார்கள். அவங்க தங்கமணிகளும் சனிக்கிழமை சமைக்காதோர் சங்கத்தில் மெம்பர் போலிருக்கு.

உங்களுக்கு வாக்கப்பட்டு என்னத்த கண்டேன்? ஒரு ஹோட்டல் உண்டா? சினிமா உண்டா?னு நேரு தங்கமணியும் இடித்து இருப்பார்கள் போலும். நேரு ரொம்பவே பவ்யமாய் அமர்ந்து சாப்பிடுகிறார். வெளில தான் முன்கோபம் எல்லாம் காட்டுவார் போல. ஹும்! வீட்டுக்கு வீடு வாசப்படி! இல்ல, சும்மா ஒரு பழமொழி சொன்னேன் அவ்ளோ தான். :)

6) தங்கள் முறை வரும் வரை காத்திருக்க மர பெஞ்சு போட்டிருக்கிறார்கள். நாங்கள் உண்ட களைப்பால் கொஞ்ச நேரம் பெஞ்சில் அமர்ந்திருந்து விட்டு கிளம்பினோம். ஹோட்டல்கார்களுக்கு செம சிரிப்பு.

7) சரியான பார்கிங் வசதி இல்லை. செம பிசியான ரோடு, இடத்துக்கு எங்க போறது? ஹோட்டல் காரகளை குத்தம் சொல்ல்ல முடியாது.

பெண்களூர் வாசிகள் கண்டிப்பாக ஒரு முறையேனும் இங்கு வந்திருப்பார்கள். மற்றவர்கள் காலமும், சந்தர்ப்பமும் கிடைத்தால் வாருங்கள்.

Monday, November 02, 2009

ஏர்டெல் சூப்பர் சிங்கர் - ஜூனியர்

புது பதிவு போட இப்பல்லாம் ரொம்பவே மெனக்கட வேண்டியுள்ளது. எழுத நிறைய விஷயங்கள் இருந்தாலும் நேரம் வாய்க்கறதே இல்லை.

தினமும் தவறாம வந்து பார்ப்பவர்களுக்கும், இவனுக்கெல்லாம் ஏன்டா பாலோயர்களா ஆனோம்? என நொந்து கொள்பவர்களுக்கும்:

உங்களின் ஒத்துழைப்புக்கும், புரிந்துணர்வுக்கும் ரொம்ப நன்றி.(மைக் கெடச்சா போதுமே?)
***********************************************************************************
என் அருமை மகனுக்கு மியுசிக் ரொம்ப பிடிக்கறதே என்பதாலும், தங்கமணி குடுத்த குடைச்சலாலும் பேட்டரி போட்டு இசைக்கும் ஒரு பியூனோவை எங்கள் ஏரியாவில் உள்ள என் ஆஸ்தான கடையில் முடிந்த வரை பேரம் பேசி வாங்கி வந்தேன்.

ஜுனியருக்கு என்ன தோணியதோ தெரியலை, பியூனோவை கடம் மாதிரி தட்ட ஆரம்பித்து விட்டான். பின் அதை கவுத்தி போட்டு மிருதங்கமாகவும் வாசிக்க ஆரம்பித்து விட்டான். தெரிஞ்சு இருந்தா கடமே வாங்கி குடுத்து இருக்கலாம். ஒரு பியானோ தப்பித்து இருக்கும்.
***********************************************************************************
ப்ரைம் டைமில் பாடாவதி சீரியல்களுக்கு நடுவில், ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி வருவதால் எங்கள் வீட்டில் ஒட்டுமொத்த ஆதரவும் பெற்று விட்டது. ஒரு மணி நேரம் ரிமோட் கன்ட்ரோலை மறந்து நாங்கள் பார்க்கும் நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. சீனியர்களை விட ஜுனியர் குழந்தைகள் மிக கடினமான பாடல்களை மிக எளிதாக பாடி வருகிறார்கள்.

விஜய் டிவியின் மிகப் பெரிய பலமே ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் அவர்கள் வடிவமைக்கும் கண்கவர் செட்டுகளும் ஒரு காரணம். குடுத்த காசுக்கு மேலேயே ஆர்ட் டைரக்டர் கூவி இருப்பார். (கலைஞர் டிவியில் மானாட மயிலாட நீங்கலாக( அதுவும் நமீதா வருவதால்) மற்ற நிகழ்ச்சிகளுக்கு ஏதோ கோவில் மண்டபத்தில் செட் போட்டது போல இருக்கும்.)

இந்த நிகழ்ச்சிக்கு மற்றுமொரு பலம் இப்பொழுது வாய்த்துள்ள நடுவர்கள். அதுவும் பாடகர் மனோ நிகழ்ச்சியை கொண்டு செல்லும் விதம் ரொம்பவே அருமையா இருக்கு.

சில துளிகள்:

1) பாடுகிற குழந்தைகளை விட அவர்களின் பெற்றோர் தான் ரொம்ப டென்ஷனாகிறார்கள். இந்த கொம்பு சீவி விட்டு பந்தயத்துக்கு அனுப்பும் மனப்பான்மை என்று தான் மாறுமோ?

2) ஆறிலிருந்து பதினான்கு வயது வரை என அறிவித்து இருப்பதால் மழலை மாறாத குழந்தைகளும் உள்ளன. எலிமினேஷன் என அவர்களை நோகடிப்பது மிகவும் வருத்தமிகு செயல். இதை தவிர்த்து இருக்கலாம்.

3) ஸ்பாட் செலக்ட் ஆகும் குழந்தைகள் மேல் சாக்லேட் மழை பொழிவது போல செட் செய்து இருக்கிறார்கள். எல்லாமே காட்பரீஸ், கிட்காட் என பெரிய்ய பெரிய்ய சாக்லேட் பட்டைகள். தொம் தொமென குழைந்தைகள் தலையில் விழுகிறது.

"குழந்தைகள் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறை" என பதிவர்கள் யாரேனும் பின் நவீனத்துவமாக பதிவிடுமுன்னர், எக்லஸ், லாக்டோ கிங்க் போன்ற சின்ன சின்ன சாக்லேட் மழை பொழியுமாறு செய்தால் விஜய் டிவிக்காரர்கள் தப்பித்தார்கள். (வன்முறையில் கூட பெரிசு, சின்னதுன்னு இருக்கா? என்றெல்லாம் பதிவு வராது என நம்புகிறேன். :)

இப்பலாம் நடுவர் பேச ஆரம்பிக்கும் முன்னரே இந்த குழந்தைக்கு நல்ல குரல் வளம், செம எனர்ஜி, ரெண்டு ஸ்கேல் சுருதி கம்மியா எடுத்து இருக்கலாம், ரெண்டாவது சரணத்துல தாளம் கொஞ்சம் மாறி விட்டது! என தங்கமணி டெக்னிக்கலா பேச ஆரம்பித்து விடுகிறார்.

அதோடு விட்டா பரவாயில்லை, நீங்க என்ன நோட் பண்ணீங்க?னு என்னை கேக்கனுமா?

1) தொகுப்பாளினி வில்லு புகழ் திவ்யா ஆரம்பத்தில் கொஞ்சம் நெர்வஸ்ஸா இருந்தார். இப்ப தேறி விட்டார்.

2) பெரும்பாலும் பழுப்பு, மருதாணி கலர் என லைட் ஷேடுகளிலேயே தம் உடையை தேர்ந்தெடுக்கிறார்.

3) உடை கலருக்கு மேட்சாக லைட் ஷேட் லிப்ஸ்டிக் தான் போடுகிறார்.

4) பேசி முடித்த பின், இடது புறமாக தலையை சாய்த்து கொள்கிறார்.

5) தலைமுடியை கட் செய்து ஸ்ட்ரெய்ட்டனிங்க் செய்து இருக்கிறார்.

- என நானும் என் பங்குக்கு சில டெக்னிக்கல் பாயிண்டுகளை அடுக்கி விட்டேன். :)