Friday, February 22, 2008

போடுங்கம்மா ஓட்டு!

அன்பார்ந்த பிளாக்காளப் பெருங்குடி மக்களே!
நம்ம பிளாக் யூனியன் ஆரம்பித்து ஒரு வருடம் நிறைவடைய போகுது. உருப்படியா என்னத்தை கிழிச்சோம்? என நாளைய சரித்திரம் சொல்லும். (ஹிஹி, வேற எப்படி தான் சமாளிக்கறதாம்?).

சென்னை வரும் நம் யூனியன் மக்களை மிக அன்பாக தட்டி கொடுத்து, ஹோட்டலுக்கு தள்ளிகொண்டு போயி கிடா வெட்டும் நமது ஜி3 அக்காவின் பெருந்தன்மையாகட்டும், ஜிடாக்கில் சிக்கினால், மொக்கை போட்டு எதிராளியை துண்டை காணோம்! துணியை காணோம்! என ஓட வைக்கும் நமது மை பிரண்டின் தன்னிகரில்லா சேவையாகட்டும், மொக்கை போடவென்றே தனியாக ஒரு பிளாக், ஆன்மீகத்துக்கு தனி பிளாக் என பதமாக பிரித்து, இதமாக மொக்கை போடும் நம் பதிவுலக காரக்கால் அம்மையாராம் கீதா பாட்டியின் திருத்தொண்டாகட்டும், நமது யூனியனின் சேவை சொல்ல, சொல்ல புல்லரிக்க வைக்கும்.

இது தவிர, அவ்வப்போது வேலைவாய்ப்பு, பொது விழிப்புணர்வு, சுகாதாரம் சம்பந்தமாக சில பதிவுகளும் வரத்தான் செய்கின்றன.

என்னடா இழுவை?னு நீங்கள் கும்முவதற்க்கு முன்னால் மேட்டருக்கு வருகிறேன். நமது பிளாக் யூனியனையும் சிறந்த வலைப்பூவாக கருதி, சங்கமம் (படம் பெயர் இல்லை) வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்து இருக்கிறார்கள்.


ஓட்டு எப்படி போடனும்? என்ன செய்யனும்? என்ற விவரம் எல்லாம் இந்த சுட்டியில் உள்ளது. எனவே நம் யூனியன் மக்கள் அனைவரும் தவறாமல் இந்த வாக்கெடுப்பில் பங்கு கொண்டு நம் பிளாகுலக கடமையை நிறைவேத்திட வேண்டும்.

வாக்களிக்க கடைசி நாள் 29-பிப்பரவரி 2008. வழக்கம் போல பதிவை படித்து விட்டு கமண்ட் போடாமல் நழுவுவது மாதிரி ஓட்டு போடாமல் இருந்துவிட வேண்டாம். :))

Friday, February 01, 2008

பொங்கல் ரிலீஸ்

இந்த சன் டிவியில் கோட் சூட் அணிந்து, சலூன் கடை சேரில் கால் மேல் கால் போட்டு கொண்டு திரை விமர்சனம் செய்ய வருவாரே ஒருத்தர், அது மாதிரி என்னை நினைத்து கொண்டு மேலே படியுங்கள். பொங்கலுக்கு ரீலீஸ் ஆன படங்களில் பீமா, பழனி, மற்றும் காளை ஆகிய படங்களை தான் இப்போ கிழிக்க போறோம்.

முதலில் பீமா. படத்துக்கு இந்த பேர் வைச்சதுக்கே இயக்குனருக்கு சுத்தி போடனும். ஏற்கனவே தர்மா, அர்ஜுனா, கர்ணா எல்லாம் வந்து விட்டது. இந்த வரிசையில் இனி நகுலா, துரியோதனா, துச்சாதனா! சகுனினு வரலாம். கெளரவர்கள் நூறு பேர் பெயரும் என்ன?னு தெரிஞ்சா நம் தமிழ் இயக்குனர்களுக்கு ரொம்ப வசதியா இருக்கும்.

சரி படத்துக்கு போவோம்! விக்ரம் இந்த படத்தில் பஜாஜ் பல்சர் பைக் மாதிரி கும்முனு இருக்கார். படத்தில் அவர் வரும் பைக்குக்கும் அவருக்கும் வித்யாசமே தெரியலை. பாட்டி வடை சுடுவது போல டுமீல், டுமீல்னு படம் முழுக்க துப்பாக்கியால் யாரையோ சுட்டு கொண்டே இருக்கார். பாவம்! தயாரிப்பாளர் சம்பள பாக்கி வைத்து விட்டாரோ என்னவோ? படத்தில் பிரகாஷ் ராஜ் கூட இருக்கிறார். இப்படி பத்து படம் நடித்தால் தான் அவரால் மொழி போன்ற படம் தயாரிக்க முடியும் என்பதால் மன்னித்து விடுவோம்.

த்ரிஷா டூயட் பாடல் காட்சிகளில் காத்தாட வளைய வருகிறார் என்பதால் இசை மற்றும் பாடல் வரிகளை கவனிக்கவே முடியலை. அப்படியே கவனிக்க முயன்றாலும் (இசையை தான் சொன்னேன்) தங்கமணி டக்குனு கார்ட்டூன் நெட்வர்க் மாத்தி விடுகிறார். என் நிலையை பாத்து டாம் & ஜெர்ரி கூட விழுந்து விழுந்து சிரிக்கிறதோ?னு ஒரு சந்தேகம் அடி மனதில் உள்ளது.

பொதுவாக லிங்குசாமி படங்களின் கிளைமாக்ஸ் எல்லாம் ஒரு பாட்டில் பீரை இரண்டு லிட்டர் தண்ணி கலந்து குடித்தது போல சப்புனு இருக்கும். இந்த படத்திலும் அப்படித்தான். இந்த பீர் மேட்டர் எல்லாம் நண்பன் ஒருத்தன் தான் டெக்னிகல் சப்போர்ட் என்று நான் சத்யம் செய்தால் நீங்கள் நம்பி தான் ஆகனும்!
ஆக மொத்ததில், பீமா - பலசாலி இல்லை!

அடுத்து வருவது பழனி. படத்தின் பெயரை கேட்டவுடன் முருகன் பத்திய பக்தி படம் என நினைத்து, பதிவு போட ஏதாவது மேட்டர் கிடைக்கும் என சப்பு கொட்டிகொண்டு ஆன்மிக பதிவர்களான அண்ணன் கண்ணபிரான், ஜி.ரா, கீதா பாட்டி மற்றும் சிலர் தியேட்டருக்கு காவடி எடுக்க வேண்டாம் என இந்த சமயத்தில் எச்சரிக்கபடுகின்றனர்.

பாய்ஸ் படத்தில் அறிமுகமான பலரில் ஓரளவுக்கு உருப்பட்டது பரத், மற்றும் சித்தார்த் (இந்த வரியை படித்தவுடன் மை பிரண்ட் முகத்தில் பிரகாசமாய் பல்ப் எரியுது பாருங்க).

அஜித்தை வைத்து திருப்பதி என்ற முழு நீள காமெடி வெற்றி படம் குடுத்த இயக்குனர் பேரரசு "நல்ல வெயிட்டான ரோல்"னு பரத்துக்கு பஞ்சாமிர்தம் குடுத்திருக்கிறார்.

"வெட்டி சீவ நான் ஒன்னும் இளனி இல்ல பழனி" போன்ற காமெடி வசனங்களுக்காகவே படத்தை கண்டிப்பா பாக்கனும். ஏனேனில் வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும். பூ பூத்து, காயாகி, பழமாகி...னு பல்லை கடித்து கொண்டு பரத் வசனம் பேசி முடிக்கும்போது வில்லனுக்கு மட்டுமல்ல, நமக்கும் கொட்டாவி வருவது நிச்சயம்.

ஆக பழனி தயாரிப்பாளருக்கு மொட்டை! ரசிகர்களுக்கு அரோகரா!

அடுத்து வருவது சிம்பு நடித்த(?) காளை. அட பெயரை கேட்டவுடன் களுக்குனு யாருப்பா அங்க சிரிக்கறது? பொங்கல் சமயத்தில் படம் ரிலீஸ் என்பதால் காளைனு பெயர் வைத்தால் படம் தறி கெட்டு ஓடி விடும் என முடிவு செய்து விட்டார்கள் போலும். உண்மை தான்! தியேட்டரை விட்டு படம் தறி கெட்டு ஓடுகிறது, ரசிகர்களும் தான்.

நீளமாய் முடி வைத்த சிம்புவை அடிக்க வரும் அடியாட்களும் நீளமாய் ஹேர்ஸ்டையிலில் இருப்பதால் எல்லோருமே அடியாட்களாய் தெரிவதை தவிர்க்க முடியலை. "டண்டணக்கா டணக்கு டக்கா" என செவிக்கு இனிமையாய் பாடல்களை கேட்கும் போது, தயாரிப்பு செலவை குறைக்க பேசாம சிம்பு அப்பாவையே பாட்டு எழுத சொல்லி விட்டனரோ?னு நமக்கு சந்தேகம் வருகிறது. ஹிரோயின் பெயர் நினைவில் இல்லை.

பாடல்களை படமாக்கிய விதத்தை பாக்கும் போது சென்சார் போர்டில் உள்ளவர்கள் பாதி படத்தில் எழுந்து போய் பக்கோடா சாப்பிட போய் விட்டனர் என நினைக்கிறேன்.அனேகமாக எல்லா பாடல்களுமே ஏதோ விஜய் டிவியில் வரும் ஜோடி நம்பர் ஒன் சீசன்:ஐந்து பார்ப்பது போல் உள்ளது. ப்ரித்விராஜ்(எ) பப்லு தான் முதல் நாள் முதல் காட்சி முதலில் டிக்கட் எடுத்து தியேட்டரில் குலுங்கி குலுங்கி சிரித்தார் என ரகசிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மொத்தத்தில் காளை - ரொம்பவே முட்டி விட்டது.

பழனியையும் காளையையும் ஆஸ்கார் நாமினேஷனுக்கு இந்தியா சார்பாக அனுப்பியே தீருவோம்! என இரண்டு இயக்குனர்களும் அடம் பிடிக்கிறார்களாம்.

வெற்றி பெற நம் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.