Monday, March 15, 2010

கொசுத் தொல்லைகள்

சென்ட்ரலிலிருந்து வேளச்சேரி வரை செல்லும் மின் தொடர் வண்டி யாருக்கு உபயோகமா இருக்கோ எனக்கு தெரியாது, என் தங்கமணி பிறந்த வீட்டுக்கு (அதான் என் மாமியார் வூட்டுக்கு) செல்ல ரொம்பவே சவுகரியம். ஆனால் இந்த மார்க்கத்தில் பயணம் செய்ய தங்கமணிக்கு உடன்பாடில்லை. (உடன்பாடில்லாததால் தான் அவுக தங்கமணி).

காரணம் ரொம்ப சிம்பிள். அதிகாலை ஐந்தரை மணிக்கு நாங்கள் சென்னைக்கு வந்திறங்கி பார்க் ஸ்டேஷனில்(வேளசேரி மார்க்கம்) ஏதோ கள்ள கடத்தல் பண்ண வந்த கஜா மாதிரி ஆளுக்கு ஒரு பையுடன் ஆறு மணி வரை காத்திருக்க வேண்டும். நாம் கொஞ்சம் கண்யர்ந்தால் அங்கிருக்கும் கொசுக்கள் அலேக்காய் தூக்கிக் கொண்டு போய்விடும். கொசு கடிச்சா மலேரியா வரும் சாத்தியங்களும் உண்டு என்பது அம்மணியின் வாதம்.

பார்க் ஸ்டேஷனில் இருந்து மவுண்ட் ஸ்டேஷன் மார்க்கமாய் போற ரயில் மட்டும் நேரே என் மாமியார் வீட்டு மாடியில் போய் நிற்கப் போவதில்லை. அங்கிருந்தும் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பக் காவடி எல்லாம் எடுத்து தான் மாமியார் வீட்டை அடையனும். (ஒரு புஃளோவுல ரொம்பவே உளறிட்டேனோ..?)

ஐந்தரை மணி நிசப்தமான சூழலில் நாம் இருவர் மட்டும் ஒரு பிளாட்பார பெஞ்சில் அமர்ந்தபடி, மெல்ல புலரும் இந்த சென்னையின் காலைவேளையை அனுபவிக்க, வேளச்சேரி மார்க்கமல்லவோ சிறந்த இடம்! என நான் போட்ட பிட்டுகள் எதுவும் பலிப்பதில்லை.

சம்பவம் நடந்த அன்று ஏதோ ஒரு தேவதை ஆசிர்வதிக்க என் பிட்டு பலித்தே விட்டது. சம்பவம் என்ன?னு பதிவின் முடிவில் சொல்வேன். (உடனே ஸ்க்ரோல் பண்ண வேண்டாம்).

வழக்கம் போல கொசுக்கள் தங்கள் வேலையை காட்டத் தொடங்கிய நேரத்தில் தான், அந்த நால்வர் அணி தொலைவில் இருந்து எங்களை பாத்து விட்டு மெதுவாக நெருங்கியது. மெகா சீரியலா இருந்தா இந்த இடத்துல தொடரும்னு போட்டு இருக்கலாம், இங்க போட்டா நீங்க என் முதுகுல நாலு போட்ருவீங்கன்னு எனக்கு தெரியும்.

மைலாப்பூர் ட்ரேயினுக்கு இந்த பக்கம் தானே நிக்கனும்?னு அவர்களில் ஒருவன் மங்கிலத்தில் கேட்டான். மலையாளமும் ஆங்கிலமும் கலந்தா மங்கிலம் தானே?
ஆமாம்னு நான் சொல்லி சரியாக அஞ்சாவது நிமிடத்தில் ரயில் வந்து சேர்ந்தது. அவர்களுக்கு என்ன தோணியதோ, நாங்கள் ஏறிய அதே பெட்டியில் ஏறி எங்களுக்கு பக்கவாட்டு சீட்டில் அமர்ந்து கொண்டனர். ஒருத்தன் மட்டும் என் எதிர்புற சீட்டில் அமர்ந்து என்னிடம் பேச்சு குடுக்கத் தொடங்கினான்.

மைலாப்பூர் ஸ்டேஷன் எப்போ வரும்..?

இன்னும் சரியாக இருபது நிமிஷத்தில்...

ஸ்டேஷன் வந்தால் கொஞ்சம் சொல்ல முடியுமா?

கண்டிப்பாக.

நீங்கள் எல்லாரும் கேரளாவா?

ஆமா.

கேரளாவுல எங்க?

எனக்கு கோட்டயம், அவங்களுக்கு ஆலப்புழா.

ஒஹோ! மைலாப்பூர் சுத்தி பாக்க வந்தீங்களா?

இல்ல, ஒரு வங்கி தேர்வுக்காக வந்தோம். (Not only for Big boys - விளம்பரம் வருமே! அந்த வங்கி தான்). நாங்க எல்லாருமே ஒரே காலேஜ்.

வெரிகுட். இத மாதிரி போட்டி தேர்வுகள் எழுதினா தான் ஸ்டூடன்ஸுக்கு ஒரு நல்ல எக்ஸ்போஷர் கிடைக்கும்! - மையமாய் உளறி வைத்தேன்.

உங்க காலேஜ் பேரு என்ன?

சொன்னான்.

கோ-எஜுகேஷனா?

ஆமா.

இந்த கேள்வியோடு நான் சும்மா இருந்து இருக்கலாம். விதி வலியது.

உங்க கிளாஸ்ல இருந்து வெறும் நாலு பேர் தான் தேர்வு எழுத வந்தீங்களா?

(கேள்வியின் உள்ளர்த்தம் புரிந்து, சத்தமில்லாமல் தங்க்ஸ் என் காலை நறுக்குனு மிதிக்க நானும் சத்தமில்லாமல் கத்தினேன்).

இல்ல, மத்தவங்களுக்கு தி.நகர் சென்டர். என் மாமியார் வீடு தி.நகர்லயே இருந்து இருக்கலாம்.

கிளம்பும்போது தான் அந்த பையன் ஒரு வெடிகுண்டு வீசினான்.

உங்க ஹெல்ப்புக்கு ரொம்ப தாங்க்ஸ் அங்கிள்!

சட்னி, சாம்பாரோட பிரேக்பாஸ்டுக்கு பதினஞ்சு இட்லி திங்கற மாதிரி இருக்கும் உனக்கு நான் அங்கிளா? கர்ர்ர்ர்ர்.

தங்கமணிக்கு பரம சந்தோஷம். சாலமன் பாப்பையா சன் டிவியில் வராமலயே அந்த நாள் இனிய நாளானது.

எதை பாத்து அங்கிள் என விளித்தான்?

1) பத்து வார்த்தைகள் பேசும் இடத்தில் இப்போதெல்லாம் ரெண்டு அல்லது மூனு வார்த்தைகள் நிதானமாக பேசும் என் அணுகுமுறையா?

2) ஷேர், மியூச்சுவல் பண்டுகள் என தேடிய என் கண்கள் லைஃப் இன்ஷூரன்ஸ், ரிடையர்மென்ட் பிளான்களையும் இப்போது பார்கின்றதே.

3) இரண்டு முறை சாலையை இடம் வலமாக பார்த்துவிட்டு சட்டுனு கடந்து விடுகிற நான் இப்போதெல்லாம் அதிக நேரம் எடுத்துக் கொள்கிறேனே?

4) திண்டுக்கல்லு! திண்டுக்கல்லு! பாடலில் அருமையாக நடனமாடும் அந்த காமெடி நடிகரின் பெயர் கருணாஸ்! என நினைவுக்கு கொண்டு வர அரைமணி நேரம் பிடித்ததே! (அதே பாடலில் கருணாஸுடன் ஆடும் அந்த நடன நாரியின் பெயரும் இன்றுவரை எனக்கு தெரியாது. எனவே முடிந்தால்...)
எனக்குள் ஒரே சிந்தனையோட்டம்.

"Am I getting old..?" - சில கேள்விகள் கேள்விகளாகவே இருப்பது தான் நல்லது. :)

பி.கு: இப்போதெல்லாம் நான் வேளச்சேரி மார்க்கமாக பயணிப்பதை அவ்வளவாக விரும்புவதில்லை. கொசு கடிச்சா மலேரியா வருமாமே..?

Wednesday, March 10, 2010

உலக இணைய தமிழ் மாநாடு

நான் வழக்கம் போல ஆபிசில் பிசியா(?!) வேலை பாத்துக் கொண்டிருக்கையில் தோழர் ஒளி என்பவரிடமிருந்து ஒரு மின்மடல்.

உலக தமிழ் மாநாடு நடக்க இருக்கிறது. அதில் உலக இணைய தமிழ் மாநாடும் ஒரு சப்ஜக்ட். அவரது நட்பு வட்டத்தில் அண்ணா பல்கலை கழகத்தை சேர்ந்த ஒரு பேராசிரியையும் கலந்து கொள்கிறார்கள், இணையத்தில் எப்படி தமிழை வளக்கலாம்னு உங்களுக்கு ஏதேனும் ஐடியா தோணினா சொல்லுங்க, அதை எல்லாம் அந்த மாநாட்டில் தொகுத்து உங்கள் குரலும் ஒலிக்கலாம் என்பது தான் அந்த மின்மடலின் சாரம்சம்.

அதை பாத்ததும் முதலில் எனக்கு மகிழ்ச்சி, ஆனா லேசா சந்தேகம். நம்மை வெச்சு யாரேனும் காமெடி கீமெடி எதுவும் பண்றாங்களோன்னு லேசா ஒரு டவுட்டு.

பின்ன, என்ன மாதிரி பிஸ்கோத்து பதிவரை எல்லாம் மதிச்சு இப்படி யாரு மெயில் அனுப்புவாங்க? நெஜமாவே எனக்கு தான் மெயில் அனுப்பினீங்களா?ன்னு வாய் விட்டு தோழர் ஒளியிடம் கேட்டு விட்டேன். ஆமா!ன்னு அவர் உறுதியா சொன்னதுக்கு அப்புறமா கொஞ்சம் அவகாசம் குடுங்க, மெயிலிடுகிறேன், அல்லது பதிவா போட்டறேன். அப்படியே நம்ம மக்களும் தங்கள் கருத்துக்களை பின்னூட்டமா போடுவாங்க (அப்படியே போட்டுட்டாலும்). நீயா? நானா? கோபி மாதிரி எல்லாத்தையும் நான் தொகுத்து தரேன்னு சொல்லிட்டேன்.

எனக்கு தோணின சில பாயிண்டுகள்:

1) என்ன தான் நாம இங்க்லீஸ்ல பீட்டர் விட்டு பதிவெழுதினாலும் தம் தாய் மொழியில் சொல்வதையே நம் மனம் விரும்பும். தமிழை தாய் மொழியா கொண்டவர்கள் கூட, இப்பல்லாம் வரும்! ஆனா வராதுங்கற மாதிரி, பேச தெரியுது, ஆனா படிக்க எழுத தெரியாதுன்னு ஒரு நிலை மெல்ல உருவாகி இருக்கு.

இந்த நிலை மாறனுமா இணையத்தில் தமிழிலும் எழுத நிறைய்ய பேர் முன் வரனும். முதலில் தப்பு தப்பா தான் வரும். காலப் போக்கில் திருத்திக்கலாம். எனது முதல் ஐந்து பதிவுகள் ஏகப்பட்ட எ-பிழையோட தான் இருக்கு. பழசை மறந்திட கூடாதுன்னு இன்னமும் அப்பதிவுகளை அப்படியே தான் விட்டு வெச்ருக்கேன்.

2) பிற மொழி கலப்பில்லாம எழுத பழகனும். அதுக்காக காப்பியை கொட்டை வடி நீர்ன்னும், ஐஸ்க்ரீமை பனிக்கூழ்ன்னும் ரொம்ப செந்தமிழில் செப்பவும் வேண்டாம். இப்ப இந்த பதிவுலேயே எத்தனை ஆங்கில வார்த்தைகள் இருக்குன்னு ஒரு நிமிஷம் எண்ணி பாருங்க (ஆபிஸ், பிசி, ஐடியா, சப்ஜெக்ட்). இதையெல்லாம் தவிர்க்கலாம் தானே..? :)


3) இணைய தமிழில் தொழில் சார் பதிவுகள் இன்னும் நிறைய்ய வரனும். சொல்ல போனா ஒரு சதவீதம் கூட அப்படிபட்ட பதிவுகள் வரலை என்பது தான் நிதர்சனம். அப்ப தான் தொழில் சார் கலைச் சொற்கள் நிறைய்ய வரும், அட மக்கள் யோசனையாவது செய்வாங்க. ஊடகங்கள் முக்யத்துவம் தருகிற அதே மாதிரி நிகழ்வுகளுக்கு இங்கயும் பதிவுகளா முக்யத்துவம் தந்து எழுதறது எந்த வகையில் நியாயம்? என்பது அவரவர் மன சாட்சியை(அப்படினா?) கேட்டுக் கொள்ளட்டும்.

4) இன்று எங்க பாத்தாலும் பெயர்ப் பலகைகளில் ஒரே தமிங்கலம் தான்.

XYZ ட்ரேடிங்க் ஏஜென்சிஸ்
XYZ டிம்பர் டிப்போ
XYZ மெக்கானிக் ஷாப்
XYZ என்டர்ப்ரைசஸ்
XYZ மெர்சண்ட் ஷாப்
XYZ ஸ்டேஷனரி ஷாப்

.......இப்படி சொல்லிண்டே போகலாம். இணையத்தில் எழுதுபவர்கள் இந்த மாதிரி சொற்களுக்கு தகுந்த தமிழ் சொற்களை பயன்படுத்தலாம். தெரிஞ்ச கடை முதலாளியா இருந்தா நயன்தாரா படத்துக்கு கீழே உங்க கடை பெயரை தமிழிலேயே எழுதுங்க அண்ணாச்சி!னு சொல்லிப் பாக்கலாம். அவரும் நயன் ரசிகரா இருந்தா கண்டிப்பா நீங்க சொல்றதை கேப்பாரு.

5) இணையத்தில் கதை எழுதுபவர்கள் "ஆஃவ்சம்"(awesome) என்பதை அற்புதம்! என்றே எழுதலாம். கதை அமெரிக்காவுலயே நடக்கறதா இருந்தாலும் மொழி நடை மாறாமால் தமிழிலேயே எழுத முடியும். ரா.கி ரங்க ராஜனின் மொழிபெயர்ப்புக் கதைகள் இதற்கு சரியான உதாரணம்.

இவ்ளோ தான் என் மண்டைக்கு தோணியவை. உங்களுக்கு இதை விட நல்ல ஆக்கங்கள் தோணலாம், கண்டிப்பா அதை (இந்த முறையாவது) இங்க சொல்லுங்க.

Monday, March 01, 2010

தலாய் லாமா வாழ்க!

சமீபத்தில் ஒபாமாவுக்கு புத்த மதத்தில் சில சந்தேகங்கள் வந்து உடனே தலாய் லாமாவை மீட் பண்ணி தன் டவுட்டை க்ளியர் செய்து கொண்டார் எனபது நமக்கு தெரிந்ததே.
தலாய் லாமா வீட்டுக்கு பால்காரன், பேப்பர் காரன், மளிகைகாரன்னு யார் பாக்கி கேட்க போனா கூட சீனாவுக்கு அடி வயிற்றில் புளியை கரைக்கும். இப்போ அமைதிக்காக நோபல் பரிசை வாங்கிய மன்னிக்கவும், பெற்றுக் கொண்ட ஒபாமாவே த-லாமாவை மீட்டினார் என தெரிந்ததும் சீனா அவசர அவசரமாக அமெரிக்க தூதுவருக்கு சம்மன் அனுப்பி காச்சு காச்சென காச்சியது.

"Tibet is an inalienable part of the inviolable territory of China, and the issues concerning Tibet are purely internal affairs of China."

அமெரிக்க தூதுவருக்கு இந்த சம்மன் எல்லாம் சாம்பார் வடை மாதிரி என்பதால் அவர் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளவில்லை. நீங்க குடுத்த டீயில் அடுத்த தடவை கொஞ்சம் ஏலக்காயை தட்டி போட்டு தாங்க, எனக்கு ரொம்ப பிடிக்கும்! என கூலாக சொல்லி விட்டு வந்து விட்டார்.

நிற்க, இதே சீனா தான் இந்தியாவின் ஒருங்கிணந்த பகுதியான அருணாச்சல பிரதேசத்து பாறை, குட்டி சுவர்களில் "சீனா வாழ்க!", "இதுவும் சீனா தான்!" என கிறுக்கி வைத்தது. நாம சீனா தூதுவரை கூப்பிட்டு காய்ச்சினோமா? என்றால் இல்லை என்பது வருத்தமான செய்தி. நமது பிரதமர் தந்து கூட்டணி கட்சிகளிடம் ஒரு யோசனையாவது கேட்டு இருக்கலாம்.

அப்படி கேட்டு இருந்தால் உடனே மாநில கட்சிகளின் கிளைகள்- அருணாச்சல பிரதேசத்தில் துவங்கி இருக்கலாம். அங்கு நடக்கும் தேர்தலில் மாநில கட்சிகளும் போட்டியிட்டு இருக்கும்.


"வருங்கால முதல்வரே வருக!" "எதிர்கால அருணாசல பிரதேசமே வருக!"னு எல்லா சுவர்களிலும் நாம பெயிண்ட் அடிச்சு இருக்கலாம்.

தினமும் ஒரு வட்ட செயலாளர், மாவட்ட செயலாளர்னு எப்பவுமே அந்த மாநிலம் பிசியாக இருக்கும்.

பிரசார கூட்டங்கள் என் வந்து விட்டால் நம்மூர் பேச்சாளர்களின் திறமைக்கு ஒரு அளவே கிடையாது. நாலு முக்கு சேருகிற இடத்தில் ஒரு மேடையை போட்டு "பீஜிங்கும் இந்தியாவின் ஒரு பகுதி தான்!" 2016ல நாங்க தான்டா பீஜிங்கில் ஆட்சி அமைப்போம்! என போகிற போக்கில் சொல்ல வைத்து விடலாம். என்னடா இது? முதலுக்கே மோசமாயிடும் போல!ன்னு சீனா கப்சிப்னு அடங்கிடும்.

தமிழகத்தின் ஒரு கட்சி அங்க போனா மத்த கட்சிகள் சும்மா இருக்குமா? அருணாசல பிரதேசத்து குழாய்களில் தண்ணி வரலை, கக்கூஸ் இல்லைனு தினமும் ஏதாவது ஒரு போராட்டம் நடத்தலாம். இத்தனை நாளா எல்லாப் பயலும் சும்மா தானே இருந்தாங்க, தீடீர்னு எப்படிடா இவ்ளோ கூட்டம்னு சீனா மண்டைய பிச்சுக்கும்.


இதெல்லாம் சரி படலைன்னா கடைசி ஆயுதமாக, சன் பிக்சர்ஸ் தலாய் லாமாவை வைத்து சைன மொழியில் ஒரு படம் எடுக்கலாம். அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு தரம் அந்த படத்தின் ட்ரேய்லரை போட்டே சைனாவை கடுப்பேத்தலாம்.


இருக்கவோ இருக்கு, தமிழக திரைப்பட விருதுகள். தலாய் லாமாவுக்கும் ஒரு விருது வழங்கலாம், ஒரே டேக்கில் எப்படி குறிப்பிட்ட காட்சியை தலாய் லாமா நடித்து காட்டினார்?னு மேடையில் அவரையே சொல்ல வைக்கலாம்.

இல்லாட்டி குறைந்த பட்சம் ஒரு கலைமாமணியாவது வழங்கலாம். அந்த விழாவையும் அருணாச்சல பிரதேசத்திலேயே வைத்து கொள்ளலாம். விழான்னு வந்துட்டா எப்படியும் கலை நிகழ்ச்சிகள் இருக்கனும். மானாட மயிலாட கோஷ்ட்டியை அங்க எறக்கினா சீனா அலறி அடித்து கொண்டு ஓடி விடாதோ?

இதைப் போல உங்களுக்கும் ஏதாவது யோசனை இருந்தால் பின்னூட்டத்தில் கும்முங்க பாப்போம்.

பி.கு: என் பதிவுகளுக்கு அடிக்கடி வந்து தொல்லை குடுக்கும் சைனா காரர்களை கடுப்பேத்தவே தலாய் லாமாவுக்கு ஆதரவாய் இந்த பதிவு.

Thursday, February 18, 2010

My Name is Ambi

சரியாக நான்கு வருடங்களுக்கு முன்பு இதே நாளில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. அன்று உலகில் வழக்கத்துக்கு மாறாக பல செயல்கள் நடந்தது. தொடு வானில் விடிவெள்ளிக்கு நிகராக இன்னொரு நட்சத்திரம் ஒளிர்வதை கண்டு ஜெருசலேம் நகரத்து மக்கள் ஒன்று கூடி அதிசயித்தனர். அட்லாண்டிக் பெருக்கடலில் வழக்கத்துக்கு மாறாக பெரும் அலைகள் எழுந்ததை அமெரிக்க மீனவர்கள் இன்றளவும் நினைவு கூர்கின்றனர். நியூயார்க் டைம்ஸ் ஸ்கொயர் சதுக்கத்தில் பெரும் திரளான மக்கள் கூடி விவாதித்தன்ர். லன்டன் நகரத்து வீதிகளிலும் இதே நிலை தான்.

ரஷ்யா, அமெரிக்கா, சைனா, சப்பான், பிரான்ஸ் போன்ற வல்லரசு நாடுகள் தம்முள் இருக்கும் ஈகோவை மறந்து உடனே இந்த நிகழ்வை ஐ நா சபையில் கூடி விவாதித்தன. பிபிசி நிருபர்களுக்கு அன்று இருபத்தி நாலு மணி நேரங்கள் போதவில்லை. உலகெங்கிலும் இந்த நிகழ்வை பற்றிய செய்திகள் வந்து குவிந்த வண்ணம் இருந்தன.

மாசி மாதமென்றாலும் திடீரென கரும்மேகங்கள் சூழ்ந்து மழை வருஷித்தது. ஏதேனும் அதிசயம் நிகழ இருக்கிறதா? என கேரளாவில் பல பணிக்கர்கள் ப்ரச்னம் வைத்து பார்த்தனர். பெரும் தந்தங்களை உடைய ஆண் யானைகள் பெருங் குரலில் பிளிறின.

சரி, அப்படி என்ன நிகழ்ந்தது..?

அதற்கு முன்னால் இந்த சுட்டியை பார்த்து விடுங்கள். பக்கத்தில் மறக்காமல் வேர்க்கடலை பாக்கெட் வைத்துக் கொள்ளவும், (இந்த பக்கத்தில் உள்ள வீடியோ லோட் ஆக நேரமாகும், அதுவரைக்கும் கடலையை...)

சுட்டி அனுப்பிய தானைத் தலைவி ராப்புக்கு மிகவும் நன்றி.




ஹிஹி, நான் பிளாக் ஆரம்பித்து இன்றோடு நான்கு வருடங்கள் ஆகி விட்டது. அது தான் அந்த நிகழ்வு. :)

உங்கள் தற்போதைய மன நிலையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நாலு வரியில் இதை சொல்லி, கமண்டு போட்டவர்களுக்கும், கமண்டு போடாமல் முக்காடு போட்டு படிப்பவர்களுக்கும் நன்றினு சொன்னா சப்புனு இருக்காது? அதான் இவ்ளோ பில்டப்.

இதே சோலியை தான் கரண் ஜோக்கரும்(எ-பிழை இல்லை), ஷாருக் கானும் செய்திருக்கிறார்கள். போதா குறைக்கு சிவசேனையின் பால் தாக்ரே கையில் பசை வாளியுடன் மும்பை நகர வீதி சுவர்களில் போஸ்டர் ஒட்டாத குறையா இந்த படத்துக்கு அரும்பணியாற்றி இருக்கிறார். அன்னாருக்கு எங்கள் மனமார்ந்த நன்றினு படம் ஆரம்பிக்கும் போது ஒரு ஸ்லைடு காண்பித்து இருக்கலாம். மற்றபடி இந்த படத்தை விமர்சனம் செய்து உங்கள் நேரத்தை வீணடிக்க விரும்ப வில்லை.

இந்த நாலு வருடங்களில் நீங்கள் காட்டிய ஆதரவுக்கு மிகவும் நன்றி.

Tuesday, February 09, 2010

கலைமகள்

பொதுவா சில பத்திரிகைகள் பெயரை கேட்டாலே நமக்குள் ஒரு மரியாதை உருவாகுவதை தவிர்க்க இயலாது. கல்கி, கலைமகள் போன்ற சஞ்சிகைகள் தனகென்று ஒரு தரம், வாசகர் வட்டம் வைத்துள்ளது. பத்திரிகை தர்மத்தை ஒரு போதும் விட்டு குடுக்காமல், சீப்பான மார்கெட்டிங்க் டெக்னிக் எதுவும் பண்ண தெரியாமல் காமராஜர் காலத்து காங்கிரஸ் போல இன்னமும் கம்பீரமாக வெளிவந்து கொண்டிருக்கிறது என சொன்னால் அது மிகையல்ல.

ஒரிரு முறை பள்ளி பருவத்தில் கலைமகள் வாசித்து அதன் தரத்துக்கு தாக்கு பிடிக்க முடியாமல் விழி பிதுங்கியதுண்டு. நிறைய தமிழ்சொற்கள், மொழி ஆளுமை எல்லாம் வசப்பட(இன்னும் இல்லை) நல்ல பயிற்சி களமாக திகழ்கிறது.

கலைமகளில் இணைய ஜர்னலிஸ்ட்டுகளான( நாமே சொல்லிக்க வேண்டியது தான்) நம்மை பத்தி, நமது பதிவுலகத்தை பத்தி ஒரு கட்டுரை எழுத போறோம். சுருக்கமாக ஒரு குறிப்பு எழுதி, சின்னதா ஒரு போட்டோவும் அனுப்பவும்னு மெயில் வந்ததும் நான் செய்தது:


1) நம்மை வெச்சு யாரும் காமெடி கீமடி பண்றாங்களோ?னு முதலில் இமெயில் முகவரியை செக் செய்து கொண்டேன்.


2) போட்டோ எடுக்க பி.சி ஸ்ரீராம் ப்ரீயா இருக்காரா?னு கேட்டு பாத்தேன். பிசியாம். சரி விடுங்க, அவருக்கு யோகம் அவ்ளோ தான்.


பத்திரிகையில் போட்டோ எல்லாம் வரப்போகுது, எப்படி போஸ் குடுக்கலாம்? ஒரு பேனாவை மூக்கினுள் விட்ட படியே (ஆழ்ந்து யோசிக்கறாங்களாம்) ஒரு ஷாட் எடுக்கலாமா? இல்லாட்டி செல்போன் பேசியபடி ஒரு ஷாட் எடுக்கலாமா? அல்லது தலைக்கு பின்னாடி ஒரு ஜீரோ வாட் பல்ப் மட்டும் எரிய விட்டு, விட்டத்தை பாத்தபடி ஒரு போஸ் குடுக்கலாமா?னு ஒரே யோசனை.

முகத்துக்கு ஒரு ப்ளீச் செய்து போட்டோ எடுத்தால் நன்றாக இருக்கும்னு ஆபிசில் உள்ள பெங்காலி யோசனை சொன்னது. "பேஷியல் செய்து கொண்டால் ஒரு மஜாஜ் ப்ரீ" - புதுசா ஒரு மலபார் பியூட்டி பார்லர் நம்ம ஏரியாவுல கடை தொறந்ருக்கான். கடையும் கண்ணுக்கு குளிர்ச்சியா, நல்லா காத்தோட்டமா இருக்கு. நான் ஒரு நடை போயிட்டு வரேன்னு நைச்சியமாய் நான் சொன்னதையெல்லாம் மேலிடம் காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. கேரளா என்றவுடன் பார்ட்டி உஷார் ஆகி விட்டது.


பின் ஒரு முடிவுக்கு வந்து எந்த போட்டோவை தங்கமணிக்கு முதன்முதலில் அனுப்பினேனோ அதே போட்டோவையே கொஞ்சம் டச்சப் பண்ணி அனுப்பி வைத்தேன். (இங்குள்ள படம் பிடிஎப் கோப்பிலிருந்து எடுத்தது, எனவே படத்தின் குவாலிட்டி கம்மியா தான் இருக்கும், ஆகவே யாரும் நமுட்டு சிரிப்பு சிரிக்க வேண்டாம்.)



வகுப்பறை ஆசான் சுப்பையா வாத்தியார், துளசி டீச்சர், ரிஷான் ஷெரீப் போன்ற பெரிய பெரிய்ய ப்ரைம் டைம் ஜாம்பவான் வித்வான்களுக்கு இடையில் கமர்ஷியல் ப்ரேக் போல என் பதிவு பற்றியும், என் உள்ளங்கவர் கேசரி பற்றியும் கட்டுரை வந்துள்ளது. முழு கட்டுரையையும் வாசிக்க சொந்த காசிலோ, ஓசியிலோ இந்த மாத கலைமகள் வாங்கி படியுங்கள்.


அடுத்த மாத இதழில் இன்னும் பெரிய பெரிய்ய ஆட்கள் பத்தி எல்லாம் வரப் போகுது. அந்த சஞ்சிகை ஆசிரியருக்கு என் மனமார்ந்த நன்றிகள். இந்த கட்டுரை தொடர்பாக பாராட்டு கடிதம் ஏதும் தப்பித் தவ்றி வந்தால் உங்களுக்கும் தெரிவிக்கிறேன்.

Thursday, January 21, 2010

விளம்பரங்கள்

Part-1 ; Part-2 ; Part -3

அதிகாலை ஆறு மணிக்கு(பெங்களூர் வாசிகளுக்கு மட்டும்) ஜெயா டிவியில் மார்கழி மஹா உத்சவம் ஒளிபரப்பினார்கள். கட்டளைதாரர்கள்(அதாம்பா ஸ்பான்சர்) ஆரெம்கேவி. போட்டிக்கு போத்தீஸ்காரகள் ஏழு மணிக்கு(இதுவும் அதிகாலை தான்) விஜய் டிவியில் சங்கீத சங்கமம்னு ஒரு இசை நிகழ்ச்சிக்கு மண்டகபடி நடத்தினார்கள். இந்த பதிவு இசை நிகழ்ச்சிகளை பற்றி அல்ல.

போத்தீஸ் விளம்பரங்கள் நம்மை ஒரு நிமிடம் நின்னு கவனிக்க வைக்கும். ஏதோ சாமுத்ரிகா பட்டுக்கு மீரா ஜாஸ்மின் வந்ததால் மட்டும் நான் சிபாரிசு செய்கிறேன் என நினைத்து விட வேண்டாம்.

இப்போ ஒரு விளம்பரம் காட்டுகிறார்கள்.

ஒரு கல்யாண வீடு, மணப்பெண்ணின் தங்கை(அதாவது மச்சினி) எல்லோர் கவனத்தையும் தன் பக்கம் திருப்பி, ஆளுக்கு எவ்ளோ புடவை? என்ன புடவை?னு புரோட்டா கடை மாஸ்டர் மாதிரி கணக்கெடுக்கிறார். மனப்பெண்ணுக்கு தான் முதல் சாய்ஸ். அந்த பெண் ரொம்பவே வெக்கப்பட்டுக் கொண்டு சாமுத்ரிகா என அகவுகிறது. (குயில் கூவும், மயில் அகவும் - ஒன்னாங்கிளாஸ்ல சொல்லி தந்தாங்க).

வாஸ்தவம் தானே? என அந்த பெண்ணின் சித்தி வழிமொழிகிறார். சித்தியே கல்யாணப் பெண் போல லட்சணமா இருக்கா! மூக்குல சானியா மிர்சா மாதிரி அந்த வளையம் டாப் டக்கர்னு நான் நேரம் காலம் தெரியாமல் உளறி வைக்க... சரி விடுங்க. நான் ஒரு உண்மையான கலாரசிகன் என என்னிக்கு மேலிடம் நம்பி இருக்கு? (யாரந்த கலா? போன்ற பின்னூட்டங்கள் நிராகரிக்கப்படும்.)

அத்தைகள் எல்லோருக்கும் பரம்பரா பட்டு என ஒரு அத்தை தன் பங்குக்கு பிட்டு போடுகிறார். ஸ்க்ரீன்ல ஒரு அத்தைய மட்டும் தான் காட்டினாங்க. இல்ல, லாஜிக் இடிக்குதுன்னு சொல்ல வந்தேன். அவ்ளோ தான்.
இப்பதான் மணப்பெண்ணின் அப்பாவை காட்டுகிறார்கள். அவர் வழக்கம் போல ரொம்பவே சாதுவா அவர் தங்கமணியை பாக்கறார். ஒன்னும் கவலப்பாடாதீங்க! என்பது போல அந்த அம்மா ஒரு காருண்ய புன்னகை சிந்துகிறார்.

இப்ப மறுபடி அதே வளையம் மாட்டிய சித்தி. எல்லா சித்திகளுக்கும் வஸ்த்ரகலா என ரொம்பவே பாந்தமாக சொல்கிறார். பாருங்க இப்பவும் ஒரு சித்தியை தான் காட்டுகிறார்கள்.
இதை கேட்டு ரொம்பவே ஆடிப் போகிறார் நம்ம ரங்கமணி. வெறும் நாலாயிரத்திலிருந்தே இருக்கு, ஒன்னும் கவலப்படாதீங்க!னு மறுபடி ஆறுதல் மொழி வருகிறது. இங்க இருக்கும் நுண்ணரசியலை புரிந்து கொள்ளனும். விலை எல்லாம் நாலாயிரத்தில் ஆரம்பம் தான், அதுவே முடிவு இல்லை.

இந்த நேரத்தில் கடமையே கண்ணான ஒரு அத்திம்பேர் பரம்பராலாம் கையை தூக்குங்கோ!னு பைனல் டச் தர, தலையை எண்ணிப் பாத்தா ஒரு வஸ்த்ரகலா அதிகமா இருக்கு. அது வேற யாருமில்ல மணப் பெண்ணின் பாட்டி. நல்லா விசாரிச்சு பாத்தா அந்த பாட்டியின் பெயர் திருமதி.கீதா சாம்பசிவம் என்று இருக்கும். :)

இதான் எங்க பட்டு பட்டியல்! என லிஸ்ட்டை அந்த பெண் தந்தவுடன் நமது ரங்கமணி வேறு வழியில்லாமல் "போத்தீசுக்கு போகலாமா?"னு அப்பாவியாய் கேட்கிறார். இதோடு விளம்பரம் முடிகிறது. சுமார் இருபது நொடி வருதுன்னு நினைக்கிறேன்.

சரி கொஞ்சம் டெக்னிக்கலா பேசலாம்.

மேலே சொன்ன விளம்பர படம் முழுக்க முழுக்க ஸ்க்ரிப்டை நம்பியே எடுக்கப்பட்டுள்ளது. பிண்னனி இசை இல்லை, ஜிங்கிள்ஸ் இல்லை, எந்த ஒரு கிராபிக்ஸும் இல்லை, பெரிய்ய ஸ்டார் வேல்யூ இல்லை(என எண்ணுகிறேன்). கடையின் பெயர் கூட கடைசியில் தான் வருது. மிக கவனமாக, நேர்த்தியான, ஷார்ப்பான வசனங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட பொருத்தமான மாடல்கள். ஒரு கல்யாணத்துக்கு ஒரு வாரம் முந்தைய சூழலை அதிக பொருட்செலவில்லாமல் ஏதோ நம்ம வீட்டில் நடக்கற மாதிரி பார்வையாளரை முதலில் தயார் படுத்தி திரையில் காட்டின நேர்த்தி.

ப்ரேம்-பை-ப்ரேமாக கவனமாக எடுத்துள்ளனர். ஏற்கனவே சாமுத்ரிகா, வஸ்ரகலா, பரம்பரா பட்டுக்கள் மக்களிடம் ரீச் ஆகியுள்ளதால் அந்த வகை பட்டுக்களை திரையில் கூட காட்ட தேவையில்லை என்ற இயக்குனரின் தைரியத்தை பாராட்டுகிறேன். ஸ்க்ரிப்ட் எழுதிய காப்பி எடிட்டருக்கும் முழு விளம்பர குழுவினருக்கும், நடித்தவர்களுக்கும்(அதானே!) என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

கோ-ஆப்டெக்ஸுக்கு என்னை ஒரு விளம்பர படம் எடுக்க சொன்னால், இந்த விளம்பரத்தின் முடிவில் இருந்து ஆரம்பித்து, போத்தீசுக்கு போனது போக மிச்சத்துல கோ-ஆப்டெக்ஸுக்கு போய் நமக்கெல்லாம் நாலு முழ துண்டு எடுக்கலாம்!னு அந்த ரங்க்மணியை பேச வைத்து ஷாட்டை ஓகே பண்ணி இருப்பேன்.

Thursday, January 07, 2010

என்னது? இயக்குனர் ஷங்கரும் வலைபதிவரா?

முதல்ல எனக்கும் ஆச்சர்யமா தான் இருந்தது. எந்திரன் படத்தை பத்தி விரிவாக ரசிகர்களுடன் விவரிக்க வலைதள்ம் ஒரு நல்ல மீடியம் என அவரும் ஜோதியில் ஐக்கியமாகி விட்டாராம். ஏற்கனவே அமிதாப், அமீர்கான் எல்லாரும் சொந்த வலைதளம் இருக்கு. இப்பதான் ஷாரூக் டிவிட்டர்ல அக்கவுண்ட் (உபயம் கரண் ஜோ(க்)கர்)தொடங்கி இருக்கார். மத்திய அமைச்சர் சஸி தரூர் டிவிட்டர்ல அடிக்கற கூத்தை பத்தி நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. டிவிட்டரின் கைபுள்ள இவரு தான்.

இவ்ளோ ஏன், நம்மூர் எஸ்.வி.சேகர், துணை முதலமைச்சர் ஸ்டாலின், 'ஸ்பெக்ட்ரம் புகழ்' ராசா இவங்களுக்கும் வலைதளம் இருக்கு. (ஏடாகூடமா கமண்ட் போட்டா ஆட்டோ அனுப்புவீங்களா சார்?).

ஷங்கரின் வலைதளம் சில துளிகள்:


தளத்தை அவர் மனதுக்கு பிடித்த கருப்பு கலரில் வடிவமைத்து இருக்கிறார்கள். (கருப்பு தான் ஷங்கருக்கு புடிச்ச கலரு).

எந்திரன் படபிடிப்பு தொன்னுறு சதவீதம் முடிந்து விட்டதாம். (தயவு செய்து சன் டிவியில் ட்ரைலராவது ஓட்டுங்க, வேட்டைகாரன் ட்ரைலர்(ரே) தாங்க முடியல)

இப்போதைக்கு ஆங்கிலத்தில் தான் வலை பதிகிறார். (என்னா சார்?)

இன்னும் தமிழ்மணம், தமிழிஷ் பட்டையெல்லாம் நிறுவவில்லை. ( நிறுவி பாருங்க, அப்புறம் தெரியும் சங்கதி)

துரத்தி துரத்தி பாலோயர்கள் எல்லாம் பிடிக்கவில்லை. அட! ஹிட் கவுண்டர் கூட போடலை.

முதல் பதிவுக்கு 439 கமண்ட் விழுந்து உள்ளது. அதில் பத்து தான் அவரது.

எல்லா கமண்டுக்கும் தனிதனியா பதில் போட்டு கமண்ட் எண்ணிக்கையை கூட்ட தெரியவில்லை.

அஜீத்தை வைத்து ஏன் நீங்கள் படம் பண்ண வில்லை? என உரிமையோடு ஒருவர் கேட்டு உள்ளார். (ஏய்! அது.)

நம்ம பதிவர்கள் சிலரும் அங்க போய் தங்கள் கைவரிசையை காட்டி இருக்கிறார்கள். (அதானே! எவ்வளவோ பண்ணிட்டோம், இத பண்ண மாட்டோமா?).

எல்லா கேள்விகளுக்கும் பதிலளிக்கவில்லை. சூசகமான, நேர்த்தியான கேள்விகளுக்கு மட்டும் நம் பெயரை சொல்லியே பதிலளிக்கிறார். (யதேச்சதிகாரத்தின் உச்சதில் இருந்து பூர்ஷ்வாத்தனமாக பதிலளிக்கும் டைரக்டர் ஷங்கருக்கு பத்து கேள்விகள்.... எதிர்வினை ஆத்த ஒரு தலைப்பு ரெடி).


ஐஸ் குட்டிக்கு கேசரி பிடிக்குமா?னு நான் கூட ஒரு கேள்வி தயார் பண்ணிட்டு தங்கமணி அப்ரூவலுக்காக அனுப்பி உள்ளேன். அனுமதி கிடைத்தால் ஷங்கருக்கு அனுப்புவதாக உத்தேசம். எனக்கு நம்பிக்கை உள்ளது.

அடுத்த பதிவர் மீட்டுக்கு காந்தி சிலைக்கு கீழே சாருவை அழைத்தது போலவே ஷங்கரையும் அழைக்கலாம். யாரு கண்டா? ரஜினியும் அவர் கூட வரலாம். :)

இவ்ளோ சொல்லிட்டு அவர் வலை தள் முகவரி சொல்லலைனா எப்படி? இந்தாங்க

அங்க போய் அம்பி தான் உங்க வீட்டு அட்ரஸ் குடுத்தான்னு கமண்டு போடுபவர்களுக்கு எந்திரன் படத்தில் ஐஸ் குட்டிக்கு முறை மாமன் ரோல் கிடைக்குமாம். :)

Monday, January 04, 2010

சந்தோஷம் பொங்குதே!

கல்யாணம் ஆகி கடந்த ரெண்டு வருஷத்தில் இப்படி ஒரு புத்தாண்டை நான் எதிர்கொள்ளவேயில்லை. இந்த முறை புத்தாண்டு ரொம்பவே வித்யாசமாய், விசேஷமாய், குதூகலமாய் அமைந்தது என மெய்மறந்து நான் சொல்ல நினைத்தாலும் கடந்த கால வரலாறு கற்றுக் கொடுத்ததை எண்ணி அடக்கி வாசிக்கிறேன். சரி, பீடிகை போதும்.

தங்கமணி டிசம்பர் கடைசி வாரம் என்னை தனியே விட்டு விட்டு பிறந்த வீட்டுக்கு சென்று விட (இல்லை, டீவி சீரியலில் வருகிற மாதிரி புருஷன் கொடுமையெல்லாம் ஒன்னுமில்லை) எனக்குள் ஷெம்பெய்ன் பாட்டிலை ஒப்பன் பண்ணியது போல, கழுத்துப் பட்டை செயினை அவுத்து விட்டதும் ஒரு வித மகிழ்ச்சியுடன் துள்ளி குதித்து ஓடும் நாய் போல, ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி. அதெல்லாம் வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது. கண்டவர் வின்டிலர் மாதிரி தான் இதுவும்.

சட்டுனு வெளிகாட்டினா தங்க்ஸ் பிரோக்ராமை கான்சல் செய்துவிடக் கூடிய அபாயங்கள் இருந்ததால் நிர்மலமான முகத்துடன் வளைய வந்தேன்.
நீங்க குக்கர் வெச்சா சாதம் குழஞ்சு கஞ்சி மாதிரியில்ல வரும்?
ஒரு வாரம் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவீங்க? போன்ற கிடுக்குபிடி கேள்விகளுக்கு எல்லாம் லாவகமாய் தப்பினேன்.

சாப்பாடா முக்யம்? இப்ப என்ன, சாம்பார் வெச்சா ரசம் மாதிரி வரபோகுது. சாதம் கெட்டியா தான் இருக்கனும், இப்படிதான் சாம்பார் இருக்கனும் என்ன கோபன் ஹேகன்ல தீர்மானமா இயற்றி இருக்கு..?

திடுதிடுப்புனு கிச்சனுக்குள் நுழைந்தால் அலிபாபா குகை மாதிரி தான் இருக்கும். எப்படியும் தேடி கண்டுபிடிச்சுக்கலாம். என்ன ஆனாலும் புளி எங்க இருக்கு? பருப்பு எங்க இருக்கு?னு போன் பண்ணி கேட்க கூடாது. இந்த முறை தீர்மானமாய் இருந்தேன்.

"கொடுத்ததெல்லாம் கொடுத்தான்,
அவன் யாருக்காக கொடுத்தான்?"

"யார் தருவார் இந்த அரியாசனம்?"

மனதினில் கன்னாபின்னாவென சிச்சுவேஷன் சாங்க் வந்து விழுகிறது.

எப்படியும் ப்ரீயா தானே இருப்பீங்க, இதையெல்லாம் முடிச்சு வைங்க. ஒன்னரை முழத்துக்கு ஒரு லிஸ்ட் நீளுகிறது.

ப்பூ இவ்ளோ தானா? தொலைஞ்சு போறது. எவ்வள்வோ பண்ணிட்டோம், இத பண்ண மாட்டோமா?

ஒரு வாரம் தங்கு தடையில்லாமல் கிரிகெட் மாட்ச் (ஹைலேட்ஸ் உட்பட) பாக்கலாம். ஜிடாகில் பழைய நண்பர்களுடன் வம்பளக்கலாம்.

"சொல்லில் வருவது பாதி!
நெஞ்சில் தூங்கி கிடப்பது மீதி!!"

இந்த பதிவை படித்துவிட்டு, கமண்டாமல் நீங்கள் நழுவுகிற நேரத்தில் இதோ ஒரு வாரம் முடிய போகிறது.

அந்த நாளும் வந்திடாதோ? (இல்ல சும்மா பக்த மீரா பாடலை பாடினேன் அவ்ளோ தான்).

எல்லோருக்கும் இனிய (தாமதமான) புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

பி.கு: அடுத்த பதிவு வர தாமதமானால் நீங்கள் அதிசயிக்க வேணாம். முடிந்தால் ஒரு பாட்டில் ஹார்லிக்ஸுடன் பதிவின் ஆசிரியரை நேரில் சந்திக்கவும். :)

Thursday, December 03, 2009

சைனாவின் மற்றுமொரு சதி

இந்த சைனாகாரன் இருக்கானே, சும்மாவே இருக்க மாட்டான். இல்ல, அவங்க மக்கள் தொகையை பத்தி நான் சொல்ல வரல. எல்லையில என்னடானா சின்ன பிள்ளதனமா பாறையில சைனானு எழுதி வைக்கறான். அருணாசல பிரதேசத்துல எல்லாருக்கும் மூக்கு சப்பையா இருக்கு, அதனால் அதுவும் எங்க இடம் தான்னு சொல்லிட்டு இருக்கான். பிராணப் முகர்ஜியும் சும்மா தாமாசு!னு சிரிச்சுகிட்டே அறிக்கை விடறாரு. எப்படியோ ஒழியட்டும்.


ஆட்ட கடிச்சு மாட்ட கடிச்சு கடைசில தமிழ் பதிவர்கள் தலையிலுமா கைய வெப்பான்? உங்க பதிவுகளில் அனானி கமண்ட் போடற ஆப்ஷன் இருந்ததுனா போச்சு! உடனே உங்க பதிவுக்கு வந்து முத்து முத்தா பின்னூட்டம் போட்டுட்டு போயிடுவான். நான் கூட ரொம்ப நாளா நம்ம பதிவு சைனா கொரியா வரைக்கும் ரீச் ஆயிருக்கு போல!னு ஆனந்த கண்ணீர் விட்டுட்டு இருந்தேன்.


அவன் போட்ட கமண்ட் எல்லாம் வைரஸ்ஸாம். நிலா ரசிகனையே புலம்ப வெச்சுருக்கான் பாருங்க.


இதெல்லாத்துக்கும் ஹைலேட்டா அருமை அண்ணன், பக்கபக்கமா எழுதும் உனாதானா அண்ணாச்சியின் பதிவையே கடத்திவிட்டான். அவர் எழுதி இருக்கறத எல்லாம் கடத்தறதுக்கே சைனா காரனுக்கு மூனு நாள் ஆயிருக்குமே! அவ்ளோ எழுதி இருக்காரு அவரு.

சைபர் கிரைமில் புகார் குடுத்தாரா? அப்படியே குடுத்தாலும் ஏதோ கிணத்தை காணல!னு வடிவேலு குடுத்த மாதிரி என் பிளாக்கை காணலை!னு சொன்னா புகாரை எடுத்துப்பாங்களா? ஒன்னும் புரியலை.

சமீபத்தில் பாண்டிசேரி அமைச்சர்களின் தீனிப் பழக்கத்தை எதிர்த்து ஒரு பதிவு போட்டு இருந்தாரு(பாருங்க, அவரு பதிவுக்கு லிங்க் கூட குடுக்க முடியலை இப்போ). ஒரு வேளை இது அரசியல் காழ்ப்பின் காரணமாக இருக்குமோ? என்ற கோணத்திலும் சைபர் போலிஸ் விசாரிக்க வேண்டும்.

இதற்கு பதிலடியாக சைனாகாரனை எதிர்த்து உடனே பதிவர்கள் எல்லாரும் எதிர்வினை ஆத்தி பதிவு போடனும். முடிஞ்சா அவன் பிளாக்குல போய் நாம தமிழ்ல கமண்ட் போட்டுட்டு வரலாம்.

கொஞ்சம் சீரியசா சொல்லனுமா:

1) எல்லாரும் உடனே தங்கள் பதிவை பேக்கப் எடுத்துக் கொள்ளவும். ( நிலா ரசிகன் விரிவா விளக்கி இருக்காரு.)

2) பின்னூட்டத்தை மட்டுறுத்தவும்.

3) மட்டுறுத்த சோம்பலா நினைக்கும் என்னைப் போன்றவர்கள் வேர்டு வெரிபிகேஷன் வைக்கவும். சைனா காரனுக்கு இங்க்லீஸ்னா அலர்ஜி என்பதை நினைவில் கொள்க. :)

4) எல்லாத்துக்கும் மேலே காக்க காக்க என் பிளாக்கை காக்க!னு பிளாகுலக குலசாமி மகர நெடுங்குழை காதனிடம் வேண்டி கொள்ளவும். :))

அவ்ளோ தான் எனக்கு தெரிஞ்சது.

Wednesday, November 25, 2009

ட்விட்டர்

நீங்க ட்விட்டர்ல இருக்கீங்களா?னு ரொம்ப நாளாகவே நெறைய பேர் என்கிட்ட கேக்கற போதெல்லாம், இல்லீங்க, கெக்ரான் மொக்ரான் கம்பெனில தான் ஆணி பிடுங்கறேனு ரொம்ப அப்பாவியா நானும் பதில் சொல்லி வந்ருக்கேன். என்னை மாதிரி ஏகபிளாக்விரதர்களுக்கு ஒன்னை கட்டியே சமாளிக்க முடியறதில்லை, இதுல உனக்கு ட்விட்டர் ஒரு கேடா?னு என் அபிமானிகள்(இருக்கீங்களா யாரும்?) துப்பிவிடும் சாத்திய கூறுகள் பிரகாசமா இருப்பதால் பேசாம தான் இருந்தேன்.

மேலும் ஆசை ஆசையாய் ஆர்குட்ல வீடு கட்டி சிலபல பழைய காலேஜ் மக்களின்(பிகர்களின்) ஏகோபித அபிமானத்தை பெற்று, வளர்ந்து வந்த நிலையில், ஒரு சபிக்கப்பட்ட ஞாயிறு நன்பகல் ரெண்டு மணியளவில் "கீழுதட்டில் வாய்ப்புண் வந்துருக்கு, என்ன செய்யனும் அம்பி? என்ற ஒரு பிகரின் ஸ்கிராப்புக்கு கர்ம சிரத்தையாய் பதில் ஸ்க்ராபிக் கொண்டிருக்கும் போது தங்கமணி நெற்றிக் கண்ணை திறக்க, அத்தோடு என் ஆர்குட் அக்கவுண்ட் பஸ்பமாகி போனது. உடனே, "தாட்சாயிணி, நன்றாக என்னை பார்!"னு எல்லாம் ஒன்னும் எகிறிக் குதிக்கலை. (ஆமா! அப்படியே குதிச்சுட்டாலும்).

நாட்டுல பல கிரிமனல் வேலைகள் எல்லாம் இப்ப ஆர்குட் வழியாத் தான் நடக்கறதாம்! அதான் நான் ஒதுங்கிட்டேன்! என தனி மெயிலில் துக்கம் விசாரித்தவர்களிடம் டெம்ளேட் மெயில் அனுப்பி ஆறுதலடைந்தேன்.

தங்கமணி கட்டிக் குடுத்த வெங்காய சாம்பாரும், உருளைகிழங்கு கார கறியையும் ஒரு கட்டு கட்டிவிட்டு, ஆபிசில் மதியம் கண் சொருகும் நேரத்தில் எல்லாரும் பீட்டர் விடும் இந்த ட்விட்டர்னா என்னனு கொஞ்சம் நோண்டிப் பாப்போம் என ஒரு நப்பாசையுடன் லேசா துருவினால் முக்காலேஅரைக்கால் பிளாகுலக மக்களும் ட்விட்டர்ல வூடு கட்டிக் கொண்டு இருக்கிறர்கள் என புரிந்தது.

  1. பல்லில் தேங்காய் துகள் புகுந்து விட்டது.
  2. குண்டூசி தேடுகிறேன்.
  3. கண்டேன் குண்டூசியை!
  4. மிஷன் இன் பிராக்ரஸ்.
  5. முடிஞ்சது சோலி!

இப்படியெல்லாம் ட்விட்டி இருக்கிறார்கள்.( நல்லா இருங்கடே!)

சிலபேர் வெண்பா பாடி இருக்கிறாகள். நமீதா பத்தி கிசுகிசு எல்லாம் ட்விட்டி இருக்கிறார்கள். சிலபேர் வெள்ளகார தொரை அவங்களுக்கு அனுப்பிய தபால் பத்தி எல்லாம் சொல்லி இருக்கிறார்கள்.

வீட்ல கரண்ட் இல்லை. டாய்லெட்ல தண்ணி வரலை. பேப்பர்காரனுக்கு பாக்கி இருக்கு.

நான் நல்லவளா கெட்டவளா?

உங்க வீட்ல நவராத்ரிக்கு என்ன சுண்டல்?

மூனார் போயி நாலு மாசமாச்சே! வீட்ல ஏதேனும் விஷேசம் உண்டா?

மாமியாருக்கு பிபி ஷுகர் எல்லாம் எகிறி விட்டதா?

இந்த ஆதி ஏன் தான் அபிய இப்படி படுத்தறானோ?

எங்காத்து அர்ஜுன் ஜுனியர் சிங்கர்ல பாடறான்.

போளி செய்வது எப்படி?(போலி இல்ல போளி, திரும்ப படிங்கடே!)

புது பதிவு போட்டால் போஸ்டர் ஒட்ட(என்னையும் சேர்த்து தான்) இதுவும் ஒரு சுவராக பயன்படுகிறது. இதுலயும் ஜிகினா வேலை காட்டுகிறர்கள் சில டெம்ளேட் ராஜாக்கள். பதிவுகளை விட, இணையத்தில் சிதறி கிடக்கும் பல சுவாரசிய தகவல்களின் லிங்குகள் டிவிட்டுகளாக வருவது நன்றாக உள்ளது. ஆனால் இங்கயும் தங்கள் அதிமேதாவித்தனத்தை பறை சாற்றும் சில ட்விட்டுகள் அயர்ச்சியைத் தான் தருகிறது.

ட்விட்டர்ல வெறும் நூத்தி நாப்பது எழுத்துக்கள் தான் எழுத முடியுமாம். உனாதானா அண்ணாச்சி எல்லாம் தன் பதிவின் தலைப்பே இவ்ளோ நீளத்துக்கு வெப்பாரு. ட்விட்டர்ல உங்களுக்கு அக்கவுண்டு தர மாட்டோம்னு அவருக்கு மெயில் அனுப்பிட்டாங்களாமே, நெஜமா? :)

தமிழ் வெர்ஷன்ல ட்விட்டர் வந்தா சிட்டுக்குருவின்னு பெயர் வெப்பாங்களா?சரி தான், இது பிளாக், ஆர்குட்டை விட வெட்டி போலிருக்கு. சீசீ, இந்த பழம் புளிக்கும். :)

Friday, November 06, 2009

பெண்களூரு

part - 1

தமிழ் நாட்டிலிருந்து இந்த பெண்களுருக்கு வந்தவர்கள் அனைவரும் ஒரு குறையாக சொல்லும் விஷயம் இங்கு சாம்பார் என்று சொல்லி அதில் சர்க்கரையை போட்டு ஒரு திரவத்தை தராங்க பா! என்பது தான். வெங்காய சாம்பார், வெண்டைக்காய் சாம்பார், முள்ளங்கி சாம்பார், முருங்கைகாய் சாம்பார்னு நம்மாட்கள் வெரைட்டியா அங்கு வெட்டி விட்டு இங்கு ரொம்பவே சிரமப்படுவார்கள்.

விடுமுறை நாளில் (பிள்ளையார் சதுர்த்தி அல்ல) மதிய சாப்பாடு ஒரு வெட்டு வெட்ட வேண்டும் என சபதம் எடுத்துக் கொண்டவர்கள் இந்த ஊரில் செல்ல வேண்டிய ஒரு இடம்: எம்டிஆர்(MTR) டிபன் ஹவுஸ். ஊர்வசி தியேட்டருக்கு நேர் எதிர்புறம் இருக்கிறது. (என்னது, ஊர்வசி தியேட்டர் எங்க இருக்கா?)

சனி, ஞாயிறுகளில் காலை லைட்டா ஒரு ஜுஸ் மட்டும் குடித்து விட்டு, மதியம் பனிரெண்டரை மணியளவில் இங்கு வந்தால் மீல்ஸ் கூப்பன் வாங்க பத்தாவது ஆளாக வரிசையில் நிற்ப்பீர்கள். முடிந்த வரை ரெண்டு அல்லது மூனு பேருக்கு மேல் உங்களுடன் சேர்த்து கொள்ள வேணாம். டேபிள் கிடைக்காது. அளவற்ற ஒரே சாப்பாடு தான். டிக்கட் விலை 120 ரூபாய்(ஒரு ஆளுக்கு). கொஞ்சம் காஸ்ட்லி தான் ஆனால் தாஜ், ஓபராய் என நமக்கு பஃபே காட்டும் மெனுவோடு ஒப்பிட்டால் இது ஒன்னுமில்லை.

முதலில் ஏதாவது ஒரு பழரசம் வெள்ளி டம்பளரில்(250 மில்லி பிடிக்கும்) தருவார்கள். (எங்களுக்கு திராட்சை ஜூஸ் வந்தது). பழக்க தோஷத்தில், ஒரே மடக்காக குடித்து விட்டால் சரியாக சாப்பிட முடியாது. எனவே லைட்ட்டா நாலு சிப் செய்யவும். நாம் சாப்பிட்டு முடிந்ததும், மறக்காமல் வெள்ளி டம்பளரை எடுத்து செல்ல தனியாக ஒரு ஆள் வருகிறார்.

அதன்பின், ஒரு பெரிய தட்டில்(இது வெள்ளி இல்லை) வரிசையாக பதார்த்தங்கள் வர ஆரம்பிக்கும். முதலில் சுடச்சுட பூரிகள் வரும். ரெண்டுக்கு மேல் வேணாம் என சொல்லி விடுங்கள். நல்ல பிசிபேளா பாத்தின் முக்ய லட்சணமே மிதமான காரத்தில், தகதகவென ஒரு ஜொலிப்போடு, முந்திரி பருப்பு மணக்க, இளம்சூடாக ஆனால் கையையோ நாக்கையோ பொத்து போகிற அளவுக்கு இல்லாமல் இருக்க வேண்டும். இவங்க இதுல எக்ஸ்பர்ட் போலிருக்கு. நீங்கள் நாலு வாய் சாப்பிடுமுன் பொன்னி அரிசியில் சாதம் வந்து விடும். சொல்ப வெய்ட் மாடி! என கூச்சமில்லாமல் சொல்லி விடுங்கள். நிஜமான சாம்பார் எல்லாம் விடுகிறார்கள். ரசமும் உண்டு.

அன்றைய ஸ்பெஷல் ஸ்வீட் என்னவோ அது வரும். எங்களுக்கு பாதாம் அல்வா கிடைத்தது. பால் பாயசமும் வரும்.

1) கட்டிடம் கட்டி சுமார் அறுபது ஆண்டுகளாவது இருக்கும்.
கை அலம்ப வைத்திருக்கும் குழாயை திறக்க காரில் பிரேக் போடுவது போல கீழே இருக்கும் பெடலை மிதிக்க வேண்டும்.

2) ஊழியர்கள் எல்லோரும் லைட் ரோஸ் நிறத்தில் சட்டையும், வெள்ளை வேட்டியும் அணிந்து இருக்கிறார்கள். சமைப்பவர் முதல் பறிமாறுபவர் வரை எல்லாம் நள பாகம் தான். நோ தமயந்திஸ்.

3) எல்லோருமே சுத்தமான கன்னடம் தான் பேசுகிறார்கள். மைசூர்காரகள் என பாத்தவுடன் சொல்லி விடலாம்.

4) யாரும் தானாக டிப்ஸ் கேட்பதில்லை. பெரும்பாலனவர்கள் குடுப்பதும் இல்லை. எனக்கு அன்னிக்குனு பாத்து மறந்து போச்சு. ஹிஹி.

5) மாடிக்கு போகும் வழியில் சுதந்திரத்துக்கு முன்னாடி எடுத்த நிழற்படங்களை மாட்டி வைத்திருக்கிறார்கள். சர்.சி.வி. ராமன், கோக்லே, நேரு என பலப்பல முக்ய தலைவர்கள் தம் தங்கமணி சகிதம் போண்டா சாப்பிட வந்திருக்கிறார்கள். அவங்க தங்கமணிகளும் சனிக்கிழமை சமைக்காதோர் சங்கத்தில் மெம்பர் போலிருக்கு.

உங்களுக்கு வாக்கப்பட்டு என்னத்த கண்டேன்? ஒரு ஹோட்டல் உண்டா? சினிமா உண்டா?னு நேரு தங்கமணியும் இடித்து இருப்பார்கள் போலும். நேரு ரொம்பவே பவ்யமாய் அமர்ந்து சாப்பிடுகிறார். வெளில தான் முன்கோபம் எல்லாம் காட்டுவார் போல. ஹும்! வீட்டுக்கு வீடு வாசப்படி! இல்ல, சும்மா ஒரு பழமொழி சொன்னேன் அவ்ளோ தான். :)

6) தங்கள் முறை வரும் வரை காத்திருக்க மர பெஞ்சு போட்டிருக்கிறார்கள். நாங்கள் உண்ட களைப்பால் கொஞ்ச நேரம் பெஞ்சில் அமர்ந்திருந்து விட்டு கிளம்பினோம். ஹோட்டல்கார்களுக்கு செம சிரிப்பு.

7) சரியான பார்கிங் வசதி இல்லை. செம பிசியான ரோடு, இடத்துக்கு எங்க போறது? ஹோட்டல் காரகளை குத்தம் சொல்ல்ல முடியாது.

பெண்களூர் வாசிகள் கண்டிப்பாக ஒரு முறையேனும் இங்கு வந்திருப்பார்கள். மற்றவர்கள் காலமும், சந்தர்ப்பமும் கிடைத்தால் வாருங்கள்.

Monday, November 02, 2009

ஏர்டெல் சூப்பர் சிங்கர் - ஜூனியர்

புது பதிவு போட இப்பல்லாம் ரொம்பவே மெனக்கட வேண்டியுள்ளது. எழுத நிறைய விஷயங்கள் இருந்தாலும் நேரம் வாய்க்கறதே இல்லை.

தினமும் தவறாம வந்து பார்ப்பவர்களுக்கும், இவனுக்கெல்லாம் ஏன்டா பாலோயர்களா ஆனோம்? என நொந்து கொள்பவர்களுக்கும்:

உங்களின் ஒத்துழைப்புக்கும், புரிந்துணர்வுக்கும் ரொம்ப நன்றி.(மைக் கெடச்சா போதுமே?)
***********************************************************************************
என் அருமை மகனுக்கு மியுசிக் ரொம்ப பிடிக்கறதே என்பதாலும், தங்கமணி குடுத்த குடைச்சலாலும் பேட்டரி போட்டு இசைக்கும் ஒரு பியூனோவை எங்கள் ஏரியாவில் உள்ள என் ஆஸ்தான கடையில் முடிந்த வரை பேரம் பேசி வாங்கி வந்தேன்.

ஜுனியருக்கு என்ன தோணியதோ தெரியலை, பியூனோவை கடம் மாதிரி தட்ட ஆரம்பித்து விட்டான். பின் அதை கவுத்தி போட்டு மிருதங்கமாகவும் வாசிக்க ஆரம்பித்து விட்டான். தெரிஞ்சு இருந்தா கடமே வாங்கி குடுத்து இருக்கலாம். ஒரு பியானோ தப்பித்து இருக்கும்.
***********************************************************************************
ப்ரைம் டைமில் பாடாவதி சீரியல்களுக்கு நடுவில், ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி வருவதால் எங்கள் வீட்டில் ஒட்டுமொத்த ஆதரவும் பெற்று விட்டது. ஒரு மணி நேரம் ரிமோட் கன்ட்ரோலை மறந்து நாங்கள் பார்க்கும் நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. சீனியர்களை விட ஜுனியர் குழந்தைகள் மிக கடினமான பாடல்களை மிக எளிதாக பாடி வருகிறார்கள்.

விஜய் டிவியின் மிகப் பெரிய பலமே ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் அவர்கள் வடிவமைக்கும் கண்கவர் செட்டுகளும் ஒரு காரணம். குடுத்த காசுக்கு மேலேயே ஆர்ட் டைரக்டர் கூவி இருப்பார். (கலைஞர் டிவியில் மானாட மயிலாட நீங்கலாக( அதுவும் நமீதா வருவதால்) மற்ற நிகழ்ச்சிகளுக்கு ஏதோ கோவில் மண்டபத்தில் செட் போட்டது போல இருக்கும்.)

இந்த நிகழ்ச்சிக்கு மற்றுமொரு பலம் இப்பொழுது வாய்த்துள்ள நடுவர்கள். அதுவும் பாடகர் மனோ நிகழ்ச்சியை கொண்டு செல்லும் விதம் ரொம்பவே அருமையா இருக்கு.

சில துளிகள்:

1) பாடுகிற குழந்தைகளை விட அவர்களின் பெற்றோர் தான் ரொம்ப டென்ஷனாகிறார்கள். இந்த கொம்பு சீவி விட்டு பந்தயத்துக்கு அனுப்பும் மனப்பான்மை என்று தான் மாறுமோ?

2) ஆறிலிருந்து பதினான்கு வயது வரை என அறிவித்து இருப்பதால் மழலை மாறாத குழந்தைகளும் உள்ளன. எலிமினேஷன் என அவர்களை நோகடிப்பது மிகவும் வருத்தமிகு செயல். இதை தவிர்த்து இருக்கலாம்.

3) ஸ்பாட் செலக்ட் ஆகும் குழந்தைகள் மேல் சாக்லேட் மழை பொழிவது போல செட் செய்து இருக்கிறார்கள். எல்லாமே காட்பரீஸ், கிட்காட் என பெரிய்ய பெரிய்ய சாக்லேட் பட்டைகள். தொம் தொமென குழைந்தைகள் தலையில் விழுகிறது.

"குழந்தைகள் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறை" என பதிவர்கள் யாரேனும் பின் நவீனத்துவமாக பதிவிடுமுன்னர், எக்லஸ், லாக்டோ கிங்க் போன்ற சின்ன சின்ன சாக்லேட் மழை பொழியுமாறு செய்தால் விஜய் டிவிக்காரர்கள் தப்பித்தார்கள். (வன்முறையில் கூட பெரிசு, சின்னதுன்னு இருக்கா? என்றெல்லாம் பதிவு வராது என நம்புகிறேன். :)

இப்பலாம் நடுவர் பேச ஆரம்பிக்கும் முன்னரே இந்த குழந்தைக்கு நல்ல குரல் வளம், செம எனர்ஜி, ரெண்டு ஸ்கேல் சுருதி கம்மியா எடுத்து இருக்கலாம், ரெண்டாவது சரணத்துல தாளம் கொஞ்சம் மாறி விட்டது! என தங்கமணி டெக்னிக்கலா பேச ஆரம்பித்து விடுகிறார்.

அதோடு விட்டா பரவாயில்லை, நீங்க என்ன நோட் பண்ணீங்க?னு என்னை கேக்கனுமா?

1) தொகுப்பாளினி வில்லு புகழ் திவ்யா ஆரம்பத்தில் கொஞ்சம் நெர்வஸ்ஸா இருந்தார். இப்ப தேறி விட்டார்.

2) பெரும்பாலும் பழுப்பு, மருதாணி கலர் என லைட் ஷேடுகளிலேயே தம் உடையை தேர்ந்தெடுக்கிறார்.

3) உடை கலருக்கு மேட்சாக லைட் ஷேட் லிப்ஸ்டிக் தான் போடுகிறார்.

4) பேசி முடித்த பின், இடது புறமாக தலையை சாய்த்து கொள்கிறார்.

5) தலைமுடியை கட் செய்து ஸ்ட்ரெய்ட்டனிங்க் செய்து இருக்கிறார்.

- என நானும் என் பங்குக்கு சில டெக்னிக்கல் பாயிண்டுகளை அடுக்கி விட்டேன். :)

Tuesday, October 13, 2009

கிரெடிட் கார்டு/லோன் வேணுமா?

மும்பையை தலைமையிடமாக கொண்ட அந்த பேங்கிலிருந்து கரக்ட்டா என் சம்பள நாளுக்கு அடுத்த நாள் மேற்படி கேள்விகளுடன் ஒருத்தர் எனக்கு போன் பண்ணுவார். எனக்கு அந்த ஆள் பேசும் தொனி பிடிக்காது. நான் என்னவோ திக்கு தெரியாத காட்டில் தவிப்பது போலவும், அவங்க பேங்க் தான் ஏதோ கோவிலில் குடுக்கும் சுண்டல் போல எனக்கு கிரெடிட் கார்டும் பெர்சனல் லோனும் வழங்குவது போல பில்டப் குடுப்பார்.

மும்பை எஸ்டிடி கோட் பாத்தவுடனேயே மொபைலை கட் பண்ணி விடுவேன். அந்த நம்பர் கூட எனக்கு அத்துபடி. போன தடவை அதே மும்பையில் இருந்து கால், வேற நம்பரில் இருந்து. புத்திசாலித்தனமா கால் பண்றாராம். பெரிய ஆபிஸ்களுக்கு நாலைந்து போன் லைன்கள் வரிசையாக இருக்கும் என்பது பொதிகை தொலைகாட்சியில் "காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு" பார்த்தவர்களுக்கு கூட தெரியும். சரி விடுங்க, என்ன தான் சொல்றார் இந்த ஆள்?னு இந்த தடவை பேசினேன். ஆச்சர்யம் பாருங்கள் இந்த தடவை போன் பண்ணியது ஒரு பெண். ஜொள்ளாண்டவரின் கருணையே கருணை.

ஹலோ, நான் ராக்கி பேசறேன், நீங்க தானே அம்பி..? உங்களுக்கு கோல்டன் கிரெடிட் கார்டு தரப்....

கார்டு கிடக்குது கழுத. என்னமா ராக்கி, உன் கல்யாணம் தான் என்.டி.டிவில அமர்களப்படுது. நீயே கதின்னு கனடால இருந்து வந்திருக்கற அந்த மொட்டையவே கல்யாணம் பண்ணிக்க தாயி. நீ விரும்பறவனை விட உன்னை விரும்பறவனை கல்யாணம் பண்ணிக்கனு ரஜினி சொல்லி இருக்காரு.

அடக் கடவுளே! நன் ராக்கி சாவந்த் இல்ல, ராக்கி ஜெயின். என் ஆபிஸ்ல தான் என்ன கலாய்க்கறாங்கன்னா கிளையன்ட் நீங்களுமா?

அப்படியா? வெரி சாரி. எனக்கு கார்டெல்லாம் வேணாம். எதிர்காலத்துல தேவை இருந்தா ராக்கிக்கு தான் போன் போடுவேன். ஓக்கேவா? -ஹெவ் ஏ நைஸ் டே!

கலகலவென சிரிப்பு சத்ததுடன் (ரெண்டு பக்கத்திலும் தான்) போன் கட் செய்யப்பட்டது.

இதே மாதிரி பல ராக்கிகள், திவ்யாக்கள், லாவண்யாக்கள் தங்கள் வங்கிக்காக தினமும் போன் செய்கிறார்கள். நமக்கு வேணாம் என்பதை எதுக்கு வள்ளுனு விழுந்து பிடுங்கி சொல்லனும்? யோசித்து பாருங்கள், அவங்க வேலைய அவங்க செய்றாங்க. நமது கிளையன்ட் இதே மாதிரி விழுந்து பிடுங்கினா நமக்கு எப்படி இருக்கும்?

நம்மால் இத்தகைய ராக்கிகளுக்கு, திவ்யாக்களுக்கு போன் மூலம் பரிமாறப்படும் கோபம், இன்னொரு ரூபத்தில் வேறு யாருக்கோ போய் சேரும். அது ஒரு சாலை விபத்தாக கூட முடியலாம். இதுவும் பட்டர்பிஃளை எபக்ஃட் தான். சட்டியிலிருந்து கிண்ணத்தில் மாற்றுவதற்க்கு கோபம் ஒன்னும் சூடான கேசரி இல்லை. :)

இது என் கருத்து மட்டுமே. எல்லாருக்கும் பொருந்துமா? என தெரியாது. :)

Tuesday, October 06, 2009

புடவை

சார் தசரா வருது, ஒரு புடவை எடுத்து தாங்க! இப்படி உரிமையுடன் என் வீட்டில் வேலை செய்யும் லலிதா கேட்டவுடன் எனக்கு கொஞ்சம் ஆச்சர்யமாக இருந்தது.


தசரா எல்லாம் வழக்கம் கிடையாது மா! தீபாவளிக்கு தான் சீலை எடுத்து கொடுப்போம். சரியா? என பதில் குடுத்ததும் சரியென்று தலையாட்டினாலும் ஏமாற்றத்தை முகம் காட்டி கொடுத்து விட்டது. நானும் மறந்து விட்டேன்.


அதே கேள்வி. இந்த முறை என்னிடம் அல்ல, தங்கமணியிடம். கேட்டது லலிதா இல்லை, அவளின் அக்கா சரளா. லலிதா லீவு எடுத்தால் சரளா தான் சப்ஸ்ட்யூட். என்னடா இது வம்பா போச்சு? சரி, தசராவுக்கே எடுத்து குடுத்தறலாம்னு முடிவு பண்ணி தங்கமணி சகிதமா எங்க ஏரியாவுல இருக்கற ஒரு புடவை கடைக்கு போயாச்சு.


வருஷத்துல ஒரு தரம் எடுக்கறோம், நல்லதா குடுக்கனும்னு முடிவு பண்ணி, இந்த கலர் அந்த கலர்னு பாத்து, பார்டர்ல அன்னம் இருக்கா? மயில் இருக்கா? பூ போட்டு இருக்கா?, ஐந்தரை மீட்டர் இருக்கா? டேமேஜ் இல்லாம இருக்கானு எல்லாம் செக் பண்ணி மயில் கழுத்து கலர்ல ஒரு புடவை எடுத்து அதுக்கு மேட்சிங்க் பிளவுஸ் எல்லாம் செலக்ட் பண்ணி ஒரு வழியா வீட்டுக்கு வந்தாச்சு.


வீக் எண்டுல சென்னை செல்வதால், மறக்காம புது புடவையை லலிதாவிடம் குடுக்க சொல்லி தம்பியிடம் சொல்லிட்டு ஊருக்கு போய் விட்டோம். தசரா முடிந்த பிறகு மறுபடி பெங்களூருக்கு வந்தபின் ஆபிஸ், வேலைன்னு ஓட்டம் துவங்கியது.


நான் ஆபிஸ் கிளம்புமுன் லலிதா வேலைக்கு வர, என்னமா? தசரா எல்லாம் சிறப்பு தானே? என மையமாய் கேட்டு வைத்தேன்.


புடவை நல்லா இல்லை சார்! பளிச்சென்று வந்த பதில் என்னை அதிர வைத்தது. உடுத்தின அன்றே துவைத்து இருப்பாளா? சுருங்கி விட்டதா? சாயம் போய் விட்டதா? படபடவென கேள்விகள் என்னிடம் இருந்து பறக்க, கலர் நல்லா இல்லை சார்! - ரொம்பவே நிதானமாக பதில் வந்தது.

நான் எதுவும் பதில் பேசவில்லை. ம்ம், நமக்கு பிடித்த கலர் அடுத்தவங்களுக்கும் பிடிக்கும் என எப்படி எதிர்பாக்க முடியும்? வாங்கறத்துக்கு முன்னாடி அட்லீஸ்ட் உன் விருப்ப கலர் என்ன?னு ஒரு வார்த்தை கேட்டு இருக்கலாம். யதேச்சதிகார அமெரிக்க மனப்பான்மையுடன் நாமே ஒரு முடிவு எடுத்து அதை அடுத்தவர் மேல் திணிக்கும் மனோபாவம் தானே இது? (கொஞ்சம் ஓவராத் தான் போறேனோ?)

மனதில் பட்டதை பளிச்சுனு, தைரியமா சொன்ன லலிதாவின் துணிச்சல்(அல்லது அட்டிடியூட்) என்னை மிகவும் கவர்ந்தது. போன தடவை நீங்க எனக்கு குடுத்த ரேட்டிங்க், சம்பள உயர்வு விகிதம் எனக்கு சுத்தமா பிடிக்கலை! என துணிச்சலாய் என் டாமேஜரிடம் சொல்ல எனக்கு துணிவு இல்லையே? ஒரு வேளை அப்படி துணிந்து சொல்லி இருந்தால் ஏதேனும் நிகழ்ந்து இருக்குமா? தெரியலை. காலம் பல நேரங்களில் சிலர் மூலமாக பரீட்சை வைத்து விட்டு பின் பாடத்தை நடத்துகிறது.

Wednesday, September 02, 2009

ஓணம் வந்தல்லோ!

பத்து நாளா கேரளா முழுக்க ஒரே கொண்டாட்டங்கள். அதன் சிகரமாக இன்னிக்கு தான் திருவோணம். அது என்ன மாயமோ மந்திரமோ தெரியல, ஓணம் வந்துட்டா எங்க வீட்டு டிவி தானாகவே ஏஷியா நெட்டோ, சூர்யா டிவிக்கோ சேனல் மாறி விடுகிறது. டிவி ரிமோட்ல ஏதோ பிராப்ளம் போல. :)

ஏஷியா நெட்ல ஸ்வைன் ப்ளூ தடுப்பு முறைகளை பத்தி நவ்யா நாயர் ஒரு பேட்டி குடுத்து இருக்காங்க பாருங்க, ஆஹா, டாப் டக்கர். இங்க இப்படின்னா சூர்யா டிவில எக்னாமிக் மெல்டவுன் பத்தி கோபிகா எவ்ளோ பாயிண்ட் பாயிண்டா பேசறாங்க தெரியுமா? அடடா! ஆபிசுக்கு லீவு போட்டு கேக்கலாம், அவ்ளோ விஷயம் இருக்கு அதுல.



குலோபல் வாமிங் பத்தி ஏன் நயன்தாராவிடம் பேட்டி எடுக்க வில்லை? இதை வன்மையாக கண்ணடிக்கிறேன், சே! கண்டிக்கிறேன்.

எப்படித் தான் இவ்ளோ பொறுமையா, அழகா பூக்கோலம் போடறாங்களோ?









ஏதோ ஒரு வருஷம் திருவனந்தபுரத்துல இன்போசிஸ்ல ஓணம் கொண்டாடினாங்களாம், அதை எனக்கு மெயிலா அனுப்பனுமா? நான் கேட்டேனா? :)

என்ட கேரளம், என்ட மலயாளம்னு இருக்காம என்ட இந்தியானு ஒரு பரந்த மனசுடன் இருங்க டே! பாருங்க நானும் வருஷம் தவறாம(2007, 2008) ஓணத்துக்கு பதிவு போடறேன். :)

சரி, இப்படியே இந்த பதிவை நான் நீட்டி முழக்கினா விளைவுகள் கடுமையாக இருக்கலாம்! என கடந்த கால வரலாறு தெரிவிக்கிறது. தங்கமணி வேறு ஊரில் இல்லை, எனவே நான் முடிச்சிக்கறேன்.

Friday, August 28, 2009

இலவசமா குடுக்கறாங்க பா!

இதுக்கு இவ்ளோ துட்டுனு விலை சொன்னா நாம உடனே பேரத்துல எறங்குவோம். அதனால தானோ என்னவோ இலவசமாவே குடுக்கறாங்க.

அப்படி என்னத்த தான் குடுக்கறாங்க?

கீழே உள்ள படத்தை பாருங்க.



மரக் கன்றை வாங்கி நான் போன்சாய் முறையில தான் வளக்க போறேன்னு அடம் பிடிக்க கூடாது. மரக் கன்றுகள் லிஸ்டுல சந்தன மரம் இல்லையே?ன்னு எல்லாம் என்னை நோண்டக் கூடாது. :)

முப்பது, நாப்பது வருஷம் கழிச்சு மரம்ன்னு ஒன்னு இருந்ததுனு நம் வருங்கால சந்ததியினர் படிக்கற அளவுக்கு இப்போ நம் கைவரிசைய காட்டிட்டு இருக்கோம்!னு சொல்ல எனக்கு ரொம்ப வெக்கமா இருக்கு.


என் பதிவுக்கு ஓட்டு போடுங்க, பின்னூட்டம் போடுங்கன்னு எல்லாம் நான் கேக்க மாட்டேன். தயவு செஞ்சு சென்னைவாசிகள் குறிப்பிட்ட நம்பருக்கு குறுஞ்செய்தி அனுப்பி ஒரு மரக் கன்றை இலவசமா பெறுங்க. தினமும் மறக்காம ஒரு கப் தண்ணியும் விடுங்க. ஏன்னா மரத்தை வெச்சவன் தண்ணி ஊத்துவான்னு இளைய ராஜா பாடி இருக்காரு. :)

மத்தவங்க சென்னைல இருக்கற உங்க உறவினர், நண்பர்களுக்கு வழக்கம் போல கம்பெனி குடுக்கற இலவச நெட் சேவையை பயன்படுத்தி என்னை மாதிரி பார்வேர்ட் பண்ணுங்க. :)

நல்ல பதிவு, பகிர்வுக்கு நன்றி, கலக்கிட்டீங்க அம்பி!, கழுவிட்டீங்க அம்பி! ன்னு எனக்கு பின்னூட்டம் போடற நேரத்துல ஒரு குறுஞ்செய்தி அனுப்பிறலாம் தானே! :)

Monday, August 24, 2009

யேர் இந்தியா

க்ரிப்டாலஜி படித்து சைடு போசில்(அப்போதைய) அரவிந்தசாமி சாயலில் இருக்கும் என்னை, இன்டர்போலுக்கு ஆலோசனை வழக்குவதற்காக என் துறைத் தலைவர் டெல்லிக்கு அனுப்பினார் என நான் இந்த பதிவை ஆரம்பித்தால் உங்களில் பலருக்கு தொண்டையில் கிச்கிச் வந்து, ஹக்க்க் என துப்பி விடுவீர்கள் என எனக்கு தெரியும்.

காலாவதியாகி விட்ட எங்கள் கம்பெனியின் பிராடக்ட் லைசன்ஸை இந்த ரிசிஷன் நேரத்தில் புதுப்பிக்கலாமா? வேணாமா? என மண்டையை தடவியபடி கிளைன்ட் யோசிப்பதற்குள், அவர்களை நேரில் சந்தித்து, எங்கள் பிராடக்டை வாங்கினால் ஈரேழு பதினாலு லோகங்களில் உள்ள செய்திகள் எல்லாம் உங்கள் லேப்டாபிலேயே அருவியா கொட்டும். உங்கள் பிசினஸில் தேனாறும் பாலாறும் ஓடும்! என அள்ளிவிடும் வழக்கமான சீப் டிரேய்னர் தன் மனைவியின் ரெண்டாவது பிரசவத்துக்கு போய் விட்டதால், பிராடக்ட் பில்டப் குடுக்க நீ தான் டெல்லிக்கு போகனும்! என என் துறை தலைவர் எனக்கு கொம்பு சீவி விட்டபடியால், நானும் வழக்கமாக எங்கள் ஆபிசில் டிக்கட் புக் பண்ணி தரும் ஹெச்ஆர் அட்மின் உதவியை நாடினேன்.

எப்பவோ எனக்கும் அவனுக்கும் நடந்த ஒரு வாய்க்கால் தகராறை மனதில் வைத்து, யேர் இந்தியாவுல மட்டும் தான் டிக்கட் இருக்கு, இந்த பிடி! என டிக்கட்டை கையில் குடுத்தான். ஏன் இப்படி?னு நான் கேட்டதுக்கு, நாம் எல்லோரும் இந்தியர்கள், எனவே இந்திய பொருளையே வாங்குவோம்! என எழுந்து நின்னு உறுதிமொழி எடுக்கறான். விஜய் மல்லய்யா கூட இந்தியர் தான்டே! என நான் சொன்னதை எல்லாம் பொருட்படுத்தவேயில்லை.

எனக்கு யேர் இந்தியாவில் டிக்கட் கிடைத்ததில் தங்கமணிக்கு அளவில்லா சந்தோஷம். உங்களுக்கு பிரேக் பாஸ்ட் ஊட்டிவிட்டு, பாட்டு பாடி, கதை சொல்லி தூங்க வைத்து பத்ரமா டெல்லியில் கொண்டு போய் விடுவாங்க! கவலையே படாதீங்க! என தங்கமணி தன் பங்குக்கு வெந்த புண்ணில் வெங்காயத்தை தடவினார். நல்லா இருடே!

உங்களுக்கு லால் பகதூர் சாஸ்த்ரியை தெரியுமா? இந்திய பிரதமராக இருந்தாரே! அவர் பிரதமராக பதவியேற்ற அதே வருஷம் யேர் இந்தியாவிலும் நிறைய்ய பேர் யேர்ஹோஸ்டஸ்ஸாக டூட்டியில் சேர்ந்தார்களாம். அதுக்கப்புறமா புது அப்பாயின்மெண்டே போடலை போலிருக்கு.

ரயிலா இருந்தா பயணிகள் சார்ட் எல்லாம் ஒட்டுவாங்க. லிஸ்ட் பாத்து அண்டை அயலார் நட்புறவை வளக்கலாம், வேற ஒன்னுமில்லை. இங்க அத மாதிரி லிஸ்ட் எல்லாம் ஒட்ட மாட்டாங்க போல. பிளைட்டில் அவ்வளவாக கூட்டமில்லை. பக்கத்து சீட்டில் ஆள் அமைவதெல்லாம் இறைவன் குடுக்கும் வரம்! என உறுதியாக சொல்வேன். என்ன தான் யேர் இந்தியாவில் டிக்கட்டை கிழித்து குடுத்தாலும், அன்னிக்கு கடவுள் ரொம்பவே கருணை காட்டி இருந்தான். குதிரை வால் கொண்டை, காதில் பிளாட்டினம் ரிங்க், டெனிம் டி-ஷர்ட், த்ரீ-போஃர் என அழைக்கப்படும் முக்காலே அரைக்கால் ஜீன்ஸ், கையில் ஷெர்லாக் ஹோம்ஸ் புத்தகம்.

இந்த பெண்கள் ஏன் தான் ஷெர்லாக் ஹோம்ஸையும், ஹாரி பாட்டரையும் கட்டி கொண்டு அழுகிறார்களோ? எனக்கு தெரிந்ததெல்லாம் என் அருமை மகன் உண்ணும் செர்லாக் தான். (அதையும் இப்பலாம் துப்பி விடுகிறான், ஃபேளவர் மாத்தனும் போல.)

இந்த கதையின் முடிவில் ஒரு எதிர்பாராத திருப்பம் வரும் பாருங்கள்! அங்க தான் ஷெர்லாக் ஹோம்ஸ் சேர் போட்டு நிக்கறார்! என பொத்தாம் பொதுவாக நூல் விட்டதில் க்ளிக் ஆகி விட்டது.

இந்த கதையை நீங்கள் ஏற்கனவே படித்து இருக்கிறீர்களா?

ரெண்டு தடவை. உங்களுடன் சேர்ந்து மூனாம் தடவையும் படிக்க எனக்கு ஆட்சேபனை இல்லை.

இந்த சம்பாஷனைக்கு பிறகு, லேமேன் பிரதர்ஸ் செய்த தவறுகள், ஐரோப்பாவின் வேலையில்லா திண்டாட்டம், நார்த் கொரியா பரிசோதனை செய்த ஏவுகணை டெக்னாலஜி, என லோக விஷயங்களை பத்தி கன்னாபின்னாவென குதிரை வால் கொண்டையுடன் விவாதிக்க நான் ஒன்னும் லூசு இல்லை.

1) பாந்தினி சில்க் மெட்டீரியலில் கரீனா கபூர் அணிந்து வரும் பட்டீயாலா மாடல் எடுப்பாக இருக்குமா? இல்லை கட் சுடிதார் தான் சிறந்ததா?

2) கார்னியரில் என்ன பொருட்கள் புதிதாக மார்கெட்டுக்கு வந்திருக்கிறது?

3) ராக்கி சாவந்துக்கு வாழ்வு குடுக்கப் போகும் வள்ளல் யார்?

4) பெண்களுரில் மிகச் சிறந்த மால் எது? என உபயோகமான கருத்துக்கள் பரிமாறப் பட்டன. அடுத்த சீட்காரர்களும் தங்கள் கருத்துக்களை தாராளமாக அள்ளி வழங்க, நீயா? நானா? கோபி மாதிரி நிகழ்ச்சியை(கடலையை) சுமூகமாக கொண்டு செல்ல வேண்டியதா போச்சு.

ஆனாலும் இந்த பைலட் ரொம்ப மோசம். வண்டி உளுந்தூர்பேட்டையில அஞ்சு நிமிஷம் நிக்கும். டிபன், காப்பி சாப்டறவங்க சாப்டுக்கலாம்னு ஒரு அறிவிப்பு குடுத்து, ஹைதராபாத், நாக்பூர்னு வண்டியை ஸ்டாப்பிங் போட்டு ஓட்ட வேணாமோ? எங்கயும் நிப்பாட்டாமல் வண்டியை நேரே டெல்லிக்கு கொண்டு போய் விட்டார்.

டக்குனு எழுத பேப்பர் எதுவும் கிடைக்காததால், குதிரை வால், தனது ஈமெயில் ஐடியை என் உள்ளங்கையில் எழுத வேண்டியதா போச்சு. முகம் அலம்பும் போது தண்ணீர் பட்டதால் அந்த ஐடி அழிந்து விட்டது என நான் சத்தியம் செய்தாலும் மேலிடம் நம்ப மறுக்கிறது. :)

Monday, August 10, 2009

ஸ்வைன் ப்ளூவை மும்பை ஏர்போட்டுல எப்படி தடுக்கறாங்க தெரியுமா?

போன வாரம் என் நண்பன் மும்பை சர்வதேச விமான நிலையத்துக்கு (சத்ரபதி சிவாஜி நிலையமாமே!) வந்திறங்கினான். வழக்கம் போல வரிசை என்ற பெயரில் நாலு நாலு பேரா ஒரு லைன்ல போனாங்களாம். பிளைடுலயே ஒரு கார்டு குடுத்து இருக்காங்க. அதுல ஒரு பத்து கேள்விகள் (டிக் செய்யனுமாம்).

அதாகபட்டது, கடந்த பத்து நாளுல நீ இந்த ஸ்வைன் ப்ளூ வந்த நாடுகளுக்கு பயணம் செஞ்சியா? (அறுபத்தி நாலு நாடுகள் லிஸ்டுல இருந்ததாம்)

2) அங்க போயி உனக்கு காய்ச்சல், உடம்பு வலி, தொண்டை வலி, வாந்தி ஏதும் வந்ததா? (யெஸ் அல்லது நோ டிக்குங்க)

3) அப்படி வந்திருந்தால் சிகிச்சை எடுத்தியா? (இதுவல்லவோ கேள்வி!)

4) இந்தியாவுல எங்க தங்க போற?

5) எந்த பிளைட்டுல வந்த?, நம்பர் எழுது.

அப்புறம் வழக்கம் போல பாஸ்போட் நம்பர் எழுது, எங்க பாஸ்போட் எடுத்த?னு சிலபல கேள்விகள்.

இதை எடுத்துகிட்டு நீண்ட கியூவுல போய், அங்கன வரிசையா சிலபல ஹெல்த் ஆபிசர்கள் சேர் போட்டு உக்காந்து இருந்தாங்களாம். (சில பிகர்களும் ஆபிசர்களா இருந்தாங்க என்பது உபரி தகவல்) அவங்க கிட்ட இந்த கார்டை குடுத்தா, உங்களுக்கு காய்ச்சல் வந்துச்சா?னு ராயப்பேட்டை பொது மருத்துவமனை கம்பவுண்டர் மாதிரி கேக்கறாங்களாம். இல்லைனு சொன்னா, ஒரு சீல் குத்தி அனுப்பிடறாங்களாம்.

எனக்கு ஒரே ஒரு டவுட்டு தான்.

நோய் வந்தவரிடமே இப்படி காந்தீய வழியில் விசாரிச்சா அவரு ஆமா! ஆமா! பெரியய்யா!னு ஒத்துப்பார்னு என்ன நிச்சயம்?

எல்லா பயணிகளையும் ஒரு குறைந்த பட்ச உடல் வெப்ப அளவை காட்டும் ஸ்கேன் வழியா வரச் செஞ்சா தானே உறுதியா எதையும் நிர்ணயிக்க முடியும்?

பாதுகாப்பு முதல் ஹெல்த் வரை எல்லா விஷயங்களிலும் இப்படி மெத்தன போக்கான நடைமுறைகளை பின்பற்றினால் அப்புறம் ஏன் அப்பாவி பொது ஜனம் மண்டைய போட மாட்டாங்க?

இந்த நிகழ்வு ஜூலை மாதம் கடைசியில் நிகழ்ந்தது. இதுவரை கிடைத்த தகவல்படி ஸ்வைன் ப்ளூவுக்கு ஆறு பேர் இந்தியாவில் பலி. ஒரு வேளை இப்ப முழிச்சு இருக்கலாம். எனக்கு தெரியலை.

மத்த சர்வதேச விமான நிலையங்களிம் இப்படி தான் செக்கிங்க் நடக்குதா?னு வந்தவங்க யாராவது பின்னூட்டத்தில் சொல்லுங்க.

Thursday, August 06, 2009

சல்சா

தங்கமணியும், ஜுனியரும் நன்றாக அயர்ந்து உறங்கும் ஒரு ஞாயிறு மதிய வேளையில், நான் மட்டும் டிவியை நோண்டிக் கொண்டிருக்கும் போது ஒரு சுவாரசியமான நடன நிகழ்ச்சியை காண நேர்ந்தது. அப்புறம் என்ன ஏதுன்னு கூகிளிட்டு பாத்ததில் அதுக்கு பேரு சல்சா என தெரிய வந்தது. ஸ்பானிஷ் மற்றும் கரீபியனின் கலவையாக உருவாகி இருக்கும் இந்த சல்சா நடனம், பார்ப்பவரை சுண்டி இழுக்கும் திறன் பெற்றது.

பொதுவாக மற்ற நடனங்கள் ஒரு நிமிடத்துக்கு 80 முதல் 120 பீட்டுகள் வரை ஆடப் பெறும். சல்சா 140 பீட்டுகள் வரை போகுமாம். இந்த நடனத்துக்கு சரியான பாடல் அமைவது மிக முக்யம். டூயட் சாங்கிலும் சட்டை பொத்தானை திருகியபடியே, நாலு அடி தள்ளி மரத்துக்கு பின்னாடி நின்னு, நாயகியை பார்த்து பாடும் முரளி சாங்கோ, இல்லாட்டி லல்லல் லா லாலே லல்லலா! என நாயகன், நாயகி, பேக்ரவுண்ட் சிங்கர்ஸ், எஸ்.ஜே.ராஜ்குமார், பின் சந்தேகத்துக்கு டைரக்டர்(விக்ரமன்) குரலில் வரும் பாடல்கள் எல்லாம் சல்சாவுக்கு ஒத்து வரவே வராது. க்யுபா மற்றும் கரீபியன் பாடல்கள் செம காம்பினேஷன். பாடலை கேட்டாலே உற்சாகம் பிறந்து, பக்கத்து சீட்டில் இருப்பவர் கையை பிடித்து கொண்டு ஆடனும் போல இருக்கும். (ஆனா நான் அப்படியெல்லாம் ஒன்னும் இதுவரை ஆடலை).

சரியான பார்ட்னர் அமைவது சல்சாவுக்கு மிக முக்யம்.(இப்ப தான் பாயிண்டுக்கு வர்ரான்யா). தனித் தவில் வைத்து தனியாவர்த்தனம் எல்லாம் இங்க வாசிக்க முடியாது. கண்டிப்பாக ஒரு ஆண், ஒரு பெண் என ஜோடியாகத் தான் ஆட முடியும் (ஆஹா! இதுவல்லவோ நடனம்). ஒருவர் மீது ஒருவர் பரஸ்பர நம்பிக்கை கொள்வது மிக முக்யம். காத்தில் ஆடும் மயிலிறகு போல சுத்தி மிதந்து, சுயன்று, வட்டமடித்து, தரையில் கிங்க் பிஷர் விமானம் போல தரையிறங்கும் போது ஆண் பார்ட்னர் அலேக்காக பிடிக்க தெரியனும். சாம்பார் வெச்சு பத்து, சட்னி வெச்சு அஞ்சு, மிளகாய் பொடி வெச்சு நாலு என ப்ரேக்பாஸ்ட் என்ற பெயரில் இட்லிகளை அமுக்கி விட்டு வரும் ஆள் சல்சாவுக்கு வந்தால் ஆண் பார்ட்னர் சட்னியாகி விடுவார்.

அடுத்து சல்சாவுக்கு முக்யமானது உடை. உடனே ஜெயமாலினி, ஜோதி லட்சுமி, யானா குப்தா ரேஞ்சுக்கு காஸ்ட்யூம் இருக்கும் என நீங்கள் கற்பனை செய்து கொண்டால் நான் பொறுப்பில்லை. கால்களை தடுக்காமல், உடலை இறுக்கிப் பிடிக்காதவாறு பைஜாமா வகைகள், முட்டி வரை இருக்கும் நீண்ட பேண்ட் எல்லாம் உசிதமாக இருக்கும். அதுக்காக அலிபாபா பேண்ட் எல்லாம் செல்லாது செல்லாது. நன்றாக பயிற்சி பெற்றவர்கள் நீண்ட கவுன் வகைகளை தேர்வு செய்வார்கள். காற்றில் மிதந்து வருவது போல நடனம் சிறப்பாக அமையும்.

உடை, பாட்டு, பார்ட்னர் இவை எல்லாவற்றையும் விட மிக மிக முக்யமானது ஆடுபவரின் மன நிலை. மனதில் உள்ள மகிழ்ச்சி அப்படியே முகம் வழியா வழிந்து, ஆடுபவரின் நடன அசைவிலும் வெளிப்பட்டால் தான் சல்சா சிறப்பாக அமையும். இது பரதம், குச்சுபுடி, கதகளி(ஹிஹி) என எல்லா வகை நடனங்களுக்கும் பொருந்தும் என்பது அடியேன் கருத்து.

சல்சாவில் உள்ள அசெளகரியம் என்னன்னு பாத்தா "நான் சல்சாவுக்கு போறேன்"ன்னு யாரிடமும் நாம் தைரியமாக சத்தம் போட்டு சொல்ல முடியாது. என்னப்பா! நான் சல்சா பிராக்டிஸுக்கு போறேன்னு அந்த பொண்ணு தைரியமா என்கிட்ட சொல்லிட்டு போகுது. இதுகெல்லாம் கூடவா பிராக்டீஸ்?னு மேனேஜர் என்னிடம் ஆதங்கப்பட, அவருக்கு கூகிளிட்டு காட்டி சல்சானா நடனம்னு புரிய வைத்தேன்.

ஒரு மண்டலம் சல்சா ஆடி வந்தால் சகல நாடிகளும் சுத்தமாகி, கபாலம் திறந்து குண்டலினி எழுந்து, பூரண மோட்சம் கிட்டும்! என சல்சானந்தா புஜண்ட புராணத்தில் சொல்லி இருக்கார். எனவே நான் சல்சா கத்துக்க போறேன்! என தங்கமணியிடம் சொன்னவுடன், நாட்டிய பேரொளி பத்மினி அம்மா மாதிரி முகத்தில் நவரசத்தையும் காட்டி, ஒரு நொடி அதிர்ந்து விட்டார் தங்கமணி. பின் விலாவரியாக விளக்கியபின் சல்சாவில் உள்ள வில்லங்கத்தை மட்டும் சரியாக மோப்பம் பிடித்து, யூ டியூப்ல வீடியோ பாத்து வீட்லயே சல்சா கத்துகுங்க! என பெரிய மனசு பண்ணி அனுமதி வழங்கி, காலை அஞ்சரை மணிக்கு எழுப்பி விட்டு, "அப்பா ஒழுங்கா பிராக்டீஸ் பண்றாரா?"ன்னு நீ பாத்துக்கோ!னு ஜுனியரையும் ஏவி விட்டாச்சு. நல்லா இருங்கடே! :)

டிஸ்கி: சல்சா என்ற தலைப்பை ஜல்சா என்றோ ஜலஜா என்றோ மிகச் சரியாக தவறாகப் படித்து தலைதெறிக்க வந்த மக்களுக்கு நான் ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன். இது முழுக்க முழுக்க சல்சா என்ற நடனத்தை பற்றிய பதிவு மட்டுமே! :)

Friday, June 26, 2009

கேள்வி கேக்கறது ரொம்ப ஈசி

நீங்கள் எப்போதாவது ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து இருக்கிறீர்களா? இந்த சங்கிலி தொடரை ஆரம்பித்தவர் அனேகமாக இதை மனதில் கொண்டு தான் இப்படி கேள்விகளை கொக்கி போட்டுள்ளார் என எனக்கு தோன்றுகிறது.

1) உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

சொந்த பெயரை(ரெங்க ராமன்) தானே கேக்கறீங்க? பெயர் எல்லாம் அப்பா அம்மா வெச்சது தான். ரொம்ப பிடிக்கும். ஏறக்குறைய ஐம்பதாயிரம் பேர் ஆணி புடுங்கும் என் கம்பெனியில் என் பெயர் கொண்ட இன்னொரு நபர் இல்லவே இல்லை.

2) கடைசியா அழுதது எப்போது?

போன ஞாயிறன்று. ஆனாலும் வெங்காயம் ரொம்பவே படுத்தி விட்டது. சுயிங்கம் சாப்பிட்டு கொண்டே வெங்காயம் உரித்தால் கண்ணீர் வராதாமே! உண்மையா?

3) உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?

பத்தாவது வரை அழகாக இருந்தது. காலேஜ் வந்தபுறம் அவசர அவசரமா புரபசர் சொல்வதை நோட்ஸ் எடுத்ததால் கையெழுத்து கெட்டு விட்டது. வேற யாராவது கையெழுத்து போட்டு எனக்கு குடுக்கும் காசோலை ரொம்ப பிடிக்கும்.

4) பிடித்த மதிய உணவு?

சின்ன வெங்காயம் போட்டு மணக்க மணக்க சாம்பார் + உருளைகிழங்கு(காரம் சேர்த்த) ரோஸ்ட்.

செம பசியோடு இருக்கும் போது சாப்பிடும் படி இருக்கும் எந்த சைவ உணவும் எனக்கு இஷ்டமே!

5) நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?

கண்டிப்பாக. முதலில் உங்களை நீங்களே நேசியுங்கள். தன்னாலே உலகம் உங்களை நேசிக்கும்! என்ற வரிகளை நம்புகிறேன்.

6) கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில குளிக்கப் பிடிக்குமா?

அகத்தியர் அருவி, பாண தீர்த்தம்னு மணிக்கணக்கா மூழ்கி முத்தெடுத்த கூட்டம்லே நாங்க. தடுக்கி விழுந்தாக் கூட தாமிர பரணியில் தான் விழுவோம்லே நாங்க.

7) ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?

முகம். ஒருவரின் மன நிலையை முகமே காட்டி விடும்.

8) உங்கள் துணைவர்/துணைவி கிட்டே உங்களுக்குப் பிடிச்ச/பிடிக்காத விஷயம்?

பிடித்தது: எதையும் உடனே செய்து விட வேண்டும் என்ற துடிப்பு. பல சமயங்களில் அது எனக்கே ஆப்பாகி விடுகிறது. :)

பிடிக்காதது: "கலகம் விளைவிக்கும் கேள்விகளை தவிர்த்தால் மங்களம் உண்டாகும்" என சீவல்புரி சிங்காரம் என் ராசிக்கு பலன் சொல்லி இருக்கார், எனவே, நாம அடுத்த கேள்விக்கு போவோமே, ப்ளீஸ்.

(ஆமா, யாரது மங்களம்? என்றெல்லாம் கலாய்த்து பின்னூட்டம் போடக் கூடாது. )

9) இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?

கோபிகா, நயன் தாரா என நான் சொல்வேன் என நீங்கள் எதிர்பார்த்தால் நான் பொறுப்பல்ல. என்னோடு எம்சிஏ படித்த சில நண்பர்கள் இப்போ அருகில் இல்லை.

10) இதை எழுதும்போது என்ன நிறத்தில் ஆடை அணிந்துள்ளீர்கள்?

கறுப்பு கலர் டி-ஷர்ட், சாம்பல் கலர் காட்டன் பேண்ட்.

11) என்ன பார்த்து/கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?

வேற என்ன, நான் பிடுங்கி கொண்டிருக்கும் ஆணியை தான் பாத்திட்டு இருக்கேன். என் பக்கத்து சீட்டிலிருந்து ஏதோ ஒரு மலையாள பாடல் முணுமுணுக்கப்படுகிறது. வல்லிய கேரளம். :)

12) வர்ணப் பேனாவாக உங்களை மாற்றினால், என்ன நிறப் பேனாவாக மாற ஆசை?

ஸ்கை ப்ளூ. ஆமா பேனாவா மாத்தி யாரு கைல குடுப்பீங்க?


13)பிடித்த மணம்?

ரவையை நெய்யோடு சேர்த்து ஐஸ்வர்யா ராய் நிறத்துக்கு வறுத்துகொண்டு, ஒன்றுக்கு ரெண்டு பங்கு சீனி போட்டு, நெய் விட்டு, பதமாக கிண்டிய கேசரியை சுட சுட வாழை இலையில் போடும்போது ஒரு நறுமணம் வரும். அது நமக்கு ரொம்ப இஷ்டம்.

14) நீங்கள் அழைக்கப்போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்? அவரை நீங்கள் அழைக்கக் காரணம் என்ன?

எல்லாரையுமே பிடிக்கும். விருப்பமும், நேரமும் உள்ள யாரும் அம்பி அழைத்ததாய் நினைத்து எழுதலாம், படிக்க ஆவலாய் உள்ளேன்.

15) உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

ராப்: வலையுலகில் வேஷம் போடாமல் மனதில் பட்டதை கலக்கலாய் சொல்ல தைரியம் கொண்ட இவரின் எல்லா பதிவுகளும் தான்.

பிளாகேஸ்வரி: இவரின் எல்லா விளம்பரங்கள் தொடர்பான பதிவுகள் மற்றும் இவரின் நையாண்டி தொணி கலந்த மற்ற பதிவுகளும் தான்.

ஸ்ரீதர்: மிக நேர்த்தியாய், கொஞ்சமும் லாஜிக் இடிக்காமல் இவர் எழுதும் கதைகள்.

16) பிடித்த விளையாட்டு?

லக்கோரி. ஏழு கற்களை வரிசையாக அடுக்கி ஒரு டீமிலிருந்து பந்தை எறிந்து அந்த கற்களை சிதறடிக்க வேண்டும். எதிரணி பந்தை எடுத்து நம்ம டீம் ஆட்கள் மீது எறிவார்கள். நம்மாட்கள் எல்லாரும் அவுட் ஆகறதுகுள்ள சிதறிய கற்களை அடுக்கிடனும். செம த்ரில்லா இருக்கும்.

ரெண்டு விஷயம் இதுல ரொம்ப முக்யம்:

1) கற்களை சிதறடிக்கும் போது கவனமா இருக்கனும். பிள்ளையாருக்கு தேங்காய் வடல் போடற மாதிரி எறிந்தால் அம்பேல்.

2) பந்தை கரக்ட்டா எறிந்து எதிரணியை அவுட் ஆக்கனும். ஒரு தடவை, என் டீம் எறிந்த பந்து குறி தவறி தெருவில் ஒரு மாமியின் பின்புறத்தை பதம் பார்த்து விட மொத்த ஆட்டமும் க்ளோஸ். ஆனா அந்த மாமியின் ரங்கமணி எங்க டீமுக்கு ரகசியமாய் ஆளுக்கு நூறு கிராம் அல்வா வாங்கி தந்தார். :)

17) கண்ணாடி அணிபவரா?

இப்பொழுது கணினிக்கு முன்னால் மட்டும்.

18) எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும்?

போரடிக்காமால் விறுவிறுப்பான திரைகதை உள்ள எந்த படமும்.
பிரெஞ்சு, ஜப்பான், இரானிய மொழி படங்கள் எல்லாம் பாக்க ஆசை, ஆனா இன்னும் நேரம் வாய்க்கவில்லை (அப்படின்னு சொல்லிக்க வேண்டியது தான்)

19) கடைசியாகப் பார்த்த படம்?

வெண்ணிலா க-குழு மற்றும் யாவரும் நலம் (டிவிடி).

20) பிடித்த பருவ காலம் எது?

வெண்பொங்கல் மணம் வீசும் மார்கழி மாதம்.

21) என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?
Magic of Thinking Big

22) உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்றுவீர்கள்?

ஆபிஸ்ல படமே வைக்கறதில்லை.
லேப்டாப்பில் நயந்தாரா, அனுஷ்கா,மேக்னா நாயுடுனு வைக்கனும்னு ஆசை தான், மேலிடம் அனுமதி கொடுக்கவில்லை.

23)பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

மென்டலின், புல்லாங்குழல் இசை பிடிக்கும்.

பூமியில் டர்ர்ர்னு போரிங்க் போடற சத்தம், குழாயை டொர் டொர்ர்னு ரம்பம் வைத்து அறுக்கும் சத்தம் பிடிக்காது.

24) வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு?

இந்த பக்கம் ஆப்ரிக்கா, அந்த பக்கம் அன்டார்டிகானு சொல்ல ஆசை தான். ஆனா அங்க எல்லாம் போனதில்லை. இப்போதைக்கு இந்த பெண்களூரு தான்.

25) உங்களிடம் ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?

இதை என் நண்பர்களாகிய நீங்கள் தான் சொல்லனும். அடக்கம் அமரருள் உய்க்கும் யு நோ!

26) உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்?

தன் பொறுப்பை தட்டிக் கழிக்கும் பொது வாழ்வில் ஈடுபட்டுள்ளவர்களின் செயல்கள்.

27) உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

முன் கோபம்

28) உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?

முன்னார் (கேரளா)

29) எப்படி இருக்கணும்னு ஆசை?

போதுமென்ற நிறைவான மனதுடன்.

30) கணவர்/மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?

மறுபடியுமா? விட மாட்டீங்க போல. பெங்களூர் தக்காளியில் தொக்கு போட்டால் ருசியா இருக்காது, ஆனா ஜாம் செய்யலாம், குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். நாம அடுத்த கேள்விக்கு போவாமா? ( நன்றி பொதிகையில் எதிரொலி நல்ல தம்பி)

31) வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க.

உருகும் ஐஸ்க்ரீம்.
முழுதும் உருகுமுன் நீங்களும் உண்டு பிறருக்கும் பகிர்ந்து வாழுங்கள். (எனக்கே இது டூ மச்சா தெரியுது)

32) உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

பிடித்தது: அதீத தைரியம் (சில நேரங்களில் மட்டும்).

பிடிக்காதது: முன் கோபம், சில சமயம் சோம்பல்.