Wednesday, April 28, 2010
விளம்பரங்கள்
ஒரு தேசிய வங்கிக்கு உள்ளே செல்லவே நம்மில் பலருக்கு ஒரு வித தயக்கம் இருந்திருக்கும். உள்ள போனா ஒருவரும் கண்டுகொள்ள மாட்டார்கள். வங்கிக்குள் நுழையறதுக்கே ஒரு ஆள் சிபாரிசு வேண்டும். டிமாண்ட் டிராப்டோ, ஒரு செலானோ நிரப்புவதற்குள் யப்பா! இந்த ஆபிஸர்கள் படுத்தர பாடு இருக்கே! இதெல்லாம் ஒரு பத்து வருடங்களுக்கு முன்னால். இப்போ நிலைமை ரொம்பவே தேவலை.
எல்லாம் காம்படீஷன் பாஸ்! காம்படீஷன்!
ஆனாலும் தேசிய வங்கிகளை விட தனியார் வங்கிகள் தனித்து நிற்பது வாடிக்கையாளர் சேவை என்ற விஷயத்தில் தான்!னு அவங்களே சொல்லிக்கறாங்க.
வாடிக்கையாளர் சேவையை மையமாக வைத்து மூன்று விதமான விளம்பரங்கள் இப்போது வந்து கொண்டிருக்கிறது.
ஒரு அப்பாவி வாடிக்கையாளர் கஸ்டமர் ரிலேஷன் ஆபிஸராக இருக்கும் ஒரு பெண்மணியிடம் மிகவும் தயக்கமுடன் ஒரு அக்கவுண்ட் ஆரம்பிக்கனும்!னு சொல்கிறார். உடனே அதற்கான விண்ணப்பம் வருகிறது. (தேசிய வங்கிகளில் இந்த விண்ணப்பம் வாங்கவே ஒரு ஆள் சிபாரிசு வேணும்). அவர் அதை பூர்த்தி செய்து குடுக்க உடனே அந்த அம்மணி ஒரு அப்ரன்டீசை கூப்பிட்டு அவன் காதில் "ஒரு மாக்கான் சிக்கிட்டான், அமுக்கி போட்ருவோம்!னு சொல்கிறார்.
ஐந்து வினாடியில் அந்த அப்ரண்டீஸ், ஒரு தட்டில் குலாப்ஜாமூன் தலையில் ஒத்தை மெழுகுவர்த்தியுடன் வந்து ஹேப்பி பர்த்டே! என பாடுகிறார். எனக்கு ஒரு சந்தேகம், மெழுகு சூட்டில் குலாப் ஜாமூன் உருகிடாதோ..? இதே ஒரு பிளேட் கேசரின்னா பிரச்சனை இல்லை. சும்மா, ஒரு ஐடியாவுக்கு சொன்னேன், அவ்ளோ தான்.
அந்த கஸ்டமர் திருதிருவென முழிக்கிறார். "யோவ்! நீ தான்யா இன்னிக்கு உன் பர்த்டே!னு எழுதி இருக்க, ஒழுங்கா குலாப் ஜாமூனை சாப்பிடு!" என அந்த அம்மணி அன்பாக மிரட்டுகிறார். "நல்லா ஸ்வீட்டா இருக்கா?" என அந்த அப்ரண்டீஸ் தன் பங்குக்கு விசாரிக்கிறது.
"கஸ்டமர் சேவையில் சின்ன சின்ன விஷயங்களில் கூட கவனமா இருப்போம்!" என்ற பீத்தலுடன் அந்த விளம்பரம் முடிகிறது.
இந்த விளம்பரத்துக்கு தேசிய வங்கிகள் ஏதும் எதிர் விளைவு நிகழ்த்தினால் எப்படி இருக்கும்? என எனக்கு பாத்ரூமில் தோன்றியது. ஆமா, பல பேருக்கு அங்க தான் ஞானோதயம் பிறந்து ஐடியா மணிகளாக திகழ்கிறார்கள். கட்டின துண்டுடன் (யு)ரேகா! என கத்தியபடி கிரேக்க விஞ்ஞானி அரிக்கமெடிஸ் ஓடலாம், அதுக்காக நான் ஓட முடியுமா..? அதான் இங்க பதிகிறேன்.
சரியாக ஒரு மாதம் கழித்து அதே கஸ்டமருக்கு அதே வங்கியிடம் இருந்து ஸ்டேட்மண்ட் வருகிறது. ஒரு மாதம் முன்னாடி நீ அமுக்கிய குலாப் ஜாமூக்கு ரூபாய் நூறை உன் அக்கவுண்டில் இருந்து கழித்து விட்டோம். புரிந்துணர்வுடன் கூடிய உன் ஒத்துழைப்புக்கு மிகவும் நன்றி! என அந்த லெட்டரை வாசித்தவுடன் நம்மாளு மயக்கம் போட்டு விழுகிறார். அப்படியே அந்த காட்சியை ப்ரிஸ் பண்ணி பேக்ரவுண்டில் ஒரு வாய்ஸ் ஒலிக்கிறது.
"எங்கள் வங்கியில் இந்த மாதிரி மறைமுக வரி என்ற பெயரில் மொள்ள மாரித்தனம் எல்லாம் கிடையாது. நாங்கள் ஒரு திறந்த புத்தகம்!"
அதே வங்கிக்கு இன்னொரு விளம்பரம். ஒரு பாட்டி (கீதா பாட்டி மாதிரி ) அந்த வங்கி கிளைக்கு சென்று தான் எழுதி வரும் கண்ணன் வருவான்! கண்ணை குத்துவான்! தொடர் பதிவு பத்தி நீ என்ன நினைக்கிறாய்? அதுல என் எழுத்து நடை எப்படி..? பின்னூட்டமா வந்து குவிகிறதே! என மொக்கை போடுகிறார். உங்களை கஸ்டமராக அடைந்த பாவத்துக்கு எனக்கு இதுவும் வேணும்! இன்னமும் வேணும்!னு அந்த மேனேஜர் (அனன்யா மஹாதேவன் மாதிரி ) மனசுகுள் புலம்பினாலும் "அடடா! உங்களை மாதிரி வருமா? உங்க லெவல் என்ன? நடை என்ன? வயசென்ன..? என்று சகித்துக் கொள்வது போல காண்பிக்கிறார்கள்.
அந்த விளம்பரத்தில் வர மாதிரி எல்லாம் எந்த தனியார் வங்கி கிளையிலும் போய் மொக்கை போட முடியாது. பொதுவாக ரிலேஷன்ஷிப் மானேஜராக நல்ல வாட்டசாட்டமா அசோக் பில்லர் மாதிரி இருக்கும் ஒரு குஜராத்தி பெண்ணையோ, மார்வாடியையோ தான் அந்த சீட்டில் உக்காத்தி இருப்பார்கள். (எம்.ஜி ரோடு கிளை டாப் டக்கர். காலை எட்டு மணிக்கே கூட்டம் அம்முது).
அந்த பிகரிடம் பேச டோக்கனெல்லாம் கூட தருவார்கள். மிகச் சரியாக பத்து நிமிடம், பத்தே நிமிடம் தான் நம் பேச்சை கேக்கும். அப்புறம் அதன் பேச்சை அதுவே கேக்காது. நமக்கு பேக்ரவுண்டில் வீணை, புல்புல்தாரா, சாக்ஸ்போன் சவுண்டெல்லாம் ஒரே டிராக்கில் கேக்கும். அதுக்கப்புறம் நாம குணா கமல் மாதிரி கையில் லட்டு வாங்கிண்டு கிளம்பிட வேண்டியது தான். ஏன்னா அடுத்த ஆள்
"ஒரு லட்டே
லட்டு தருகிறதே!
அடடா!ன்னு ஆயில்யன் மாதிரி கவிஜ வாசிச்சுண்டு லட்டு வாங்க வரிசையில் இருப்பான். :)
சரி, டிராக் மாறி விட்டது. இவ்வளவும் எதுக்கு சொல்றேன்னா இப்பல்லாம் தனியார் வங்கிகள் கடைந்த மோரில் வெண்ணெய் எடுத்து விடுகிறார்கள். அதனால நாம் தான் உசாரா இருக்கனும். பத்து நிமிடம் அங்கே லட்டு வாங்கினாலும் ஒழுங்கா தேசிய வங்கியில் யாரையாவது பிடிச்சு ஒரு அக்கவுண்ட் துவங்கி வெச்சுக்கனும். இல்லாட்டி உன் குத்தமா? என் குத்தமா?னு பாடிட்டு போயிடுவாங்க.
Thursday, January 21, 2010
விளம்பரங்கள்
அதிகாலை ஆறு மணிக்கு(பெங்களூர் வாசிகளுக்கு மட்டும்) ஜெயா டிவியில் மார்கழி மஹா உத்சவம் ஒளிபரப்பினார்கள். கட்டளைதாரர்கள்(அதாம்பா ஸ்பான்சர்) ஆரெம்கேவி. போட்டிக்கு போத்தீஸ்காரகள் ஏழு மணிக்கு(இதுவும் அதிகாலை தான்) விஜய் டிவியில் சங்கீத சங்கமம்னு ஒரு இசை நிகழ்ச்சிக்கு மண்டகபடி நடத்தினார்கள். இந்த பதிவு இசை நிகழ்ச்சிகளை பற்றி அல்ல.
போத்தீஸ் விளம்பரங்கள் நம்மை ஒரு நிமிடம் நின்னு கவனிக்க வைக்கும். ஏதோ சாமுத்ரிகா பட்டுக்கு மீரா ஜாஸ்மின் வந்ததால் மட்டும் நான் சிபாரிசு செய்கிறேன் என நினைத்து விட வேண்டாம்.
இப்போ ஒரு விளம்பரம் காட்டுகிறார்கள்.
ஒரு கல்யாண வீடு, மணப்பெண்ணின் தங்கை(அதாவது மச்சினி) எல்லோர் கவனத்தையும் தன் பக்கம் திருப்பி, ஆளுக்கு எவ்ளோ புடவை? என்ன புடவை?னு புரோட்டா கடை மாஸ்டர் மாதிரி கணக்கெடுக்கிறார். மனப்பெண்ணுக்கு தான் முதல் சாய்ஸ். அந்த பெண் ரொம்பவே வெக்கப்பட்டுக் கொண்டு சாமுத்ரிகா என அகவுகிறது. (குயில் கூவும், மயில் அகவும் - ஒன்னாங்கிளாஸ்ல சொல்லி தந்தாங்க).
வாஸ்தவம் தானே? என அந்த பெண்ணின் சித்தி வழிமொழிகிறார். சித்தியே கல்யாணப் பெண் போல லட்சணமா இருக்கா! மூக்குல சானியா மிர்சா மாதிரி அந்த வளையம் டாப் டக்கர்னு நான் நேரம் காலம் தெரியாமல் உளறி வைக்க... சரி விடுங்க. நான் ஒரு உண்மையான கலாரசிகன் என என்னிக்கு மேலிடம் நம்பி இருக்கு? (யாரந்த கலா? போன்ற பின்னூட்டங்கள் நிராகரிக்கப்படும்.)
அத்தைகள் எல்லோருக்கும் பரம்பரா பட்டு என ஒரு அத்தை தன் பங்குக்கு பிட்டு போடுகிறார். ஸ்க்ரீன்ல ஒரு அத்தைய மட்டும் தான் காட்டினாங்க. இல்ல, லாஜிக் இடிக்குதுன்னு சொல்ல வந்தேன். அவ்ளோ தான்.
இப்பதான் மணப்பெண்ணின் அப்பாவை காட்டுகிறார்கள். அவர் வழக்கம் போல ரொம்பவே சாதுவா அவர் தங்கமணியை பாக்கறார். ஒன்னும் கவலப்பாடாதீங்க! என்பது போல அந்த அம்மா ஒரு காருண்ய புன்னகை சிந்துகிறார்.
இப்ப மறுபடி அதே வளையம் மாட்டிய சித்தி. எல்லா சித்திகளுக்கும் வஸ்த்ரகலா என ரொம்பவே பாந்தமாக சொல்கிறார். பாருங்க இப்பவும் ஒரு சித்தியை தான் காட்டுகிறார்கள்.
இதை கேட்டு ரொம்பவே ஆடிப் போகிறார் நம்ம ரங்கமணி. வெறும் நாலாயிரத்திலிருந்தே இருக்கு, ஒன்னும் கவலப்படாதீங்க!னு மறுபடி ஆறுதல் மொழி வருகிறது. இங்க இருக்கும் நுண்ணரசியலை புரிந்து கொள்ளனும். விலை எல்லாம் நாலாயிரத்தில் ஆரம்பம் தான், அதுவே முடிவு இல்லை.
இந்த நேரத்தில் கடமையே கண்ணான ஒரு அத்திம்பேர் பரம்பராலாம் கையை தூக்குங்கோ!னு பைனல் டச் தர, தலையை எண்ணிப் பாத்தா ஒரு வஸ்த்ரகலா அதிகமா இருக்கு. அது வேற யாருமில்ல மணப் பெண்ணின் பாட்டி. நல்லா விசாரிச்சு பாத்தா அந்த பாட்டியின் பெயர் திருமதி.கீதா சாம்பசிவம் என்று இருக்கும். :)
இதான் எங்க பட்டு பட்டியல்! என லிஸ்ட்டை அந்த பெண் தந்தவுடன் நமது ரங்கமணி வேறு வழியில்லாமல் "போத்தீசுக்கு போகலாமா?"னு அப்பாவியாய் கேட்கிறார். இதோடு விளம்பரம் முடிகிறது. சுமார் இருபது நொடி வருதுன்னு நினைக்கிறேன்.
சரி கொஞ்சம் டெக்னிக்கலா பேசலாம்.
மேலே சொன்ன விளம்பர படம் முழுக்க முழுக்க ஸ்க்ரிப்டை நம்பியே எடுக்கப்பட்டுள்ளது. பிண்னனி இசை இல்லை, ஜிங்கிள்ஸ் இல்லை, எந்த ஒரு கிராபிக்ஸும் இல்லை, பெரிய்ய ஸ்டார் வேல்யூ இல்லை(என எண்ணுகிறேன்). கடையின் பெயர் கூட கடைசியில் தான் வருது. மிக கவனமாக, நேர்த்தியான, ஷார்ப்பான வசனங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட பொருத்தமான மாடல்கள். ஒரு கல்யாணத்துக்கு ஒரு வாரம் முந்தைய சூழலை அதிக பொருட்செலவில்லாமல் ஏதோ நம்ம வீட்டில் நடக்கற மாதிரி பார்வையாளரை முதலில் தயார் படுத்தி திரையில் காட்டின நேர்த்தி.
ப்ரேம்-பை-ப்ரேமாக கவனமாக எடுத்துள்ளனர். ஏற்கனவே சாமுத்ரிகா, வஸ்ரகலா, பரம்பரா பட்டுக்கள் மக்களிடம் ரீச் ஆகியுள்ளதால் அந்த வகை பட்டுக்களை திரையில் கூட காட்ட தேவையில்லை என்ற இயக்குனரின் தைரியத்தை பாராட்டுகிறேன். ஸ்க்ரிப்ட் எழுதிய காப்பி எடிட்டருக்கும் முழு விளம்பர குழுவினருக்கும், நடித்தவர்களுக்கும்(அதானே!) என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
கோ-ஆப்டெக்ஸுக்கு என்னை ஒரு விளம்பர படம் எடுக்க சொன்னால், இந்த விளம்பரத்தின் முடிவில் இருந்து ஆரம்பித்து, போத்தீசுக்கு போனது போக மிச்சத்துல கோ-ஆப்டெக்ஸுக்கு போய் நமக்கெல்லாம் நாலு முழ துண்டு எடுக்கலாம்!னு அந்த ரங்க்மணியை பேச வைத்து ஷாட்டை ஓகே பண்ணி இருப்பேன்.
Friday, April 17, 2009
மனம் கவரும் விளம்பரங்கள்
சராசரியாக ஒரு நாளைக்கு முப்பது முதல் நாப்பது நிமிடங்கள் டிவி பார்ப்பவராக நீங்கள் இருந்தால் இந்த பதிவுக்கும் உங்களுக்கும் நிறைய தொடர்பு உண்டு. சமீப காலமாக உலா வரும் சில விளம்பரங்களை (சரி, அதில் வரும் மாடல்களை) உன்னிப்பாக கவனித்தது உண்டா?
ஒரு அம்மணி வழியில் கார் ரிப்பேர் ஆனதால் நடந்தே வந்ததாக தன் ரங்குவுடம் கூற, அந்த ரங்கு நிலைமை புரியாமல், காரை பூட்டிட்டு வந்தியா? எங்க பார்க் பண்ணிட்டு வந்தாய்? போன்ற சில்லி கேள்விகள் கேக்கிறார். காராய்யா இப்ப முக்யம்? என்பது போல அந்த அம்மணி ஒரு முறை முறைத்து விட்டு, கடனே என்று ஒரு ப்ரூ காப்பியை கலக்கி அந்தாள் கைல குடுக்க, நம்மாளு ஒரு வாய் குடித்து விட்டு ஞானம் வந்து அம்மணி காலை அமுக்குகிறார். அரை கண்ணால் இதை ரசித்த அந்த அம்மணி தன் இன்னொரு காலையும் நீட்டுகிறார்.
நல்லா இருங்கடே!
காபி அருந்துவது உடல் நலத்துக்கு கேடுன்னு டாக்டர்கள் சொன்னா கேக்றாங்களா? :)
காபில தான் இப்படி ஆப்புன்னா தேனீர்லயும் அதே கதை தான்.
அவசரக் குடுக்கையா ஒரு மலர் கொத்தும் ஒரு ஜோடி ஜிமிக்கியையும்(டிசைன் சூப்பர்)கைல வைத்துக் கொண்டு ஹேப்பி பர்த்டே சுஜி!னு ஒரு ரங்கு வழிய, யோவ்! பொறந்த நாளு அடுத்த மாசம்யா!ன்னு அந்தம்மா கடுப்பாறாங்க.
லூசுப் பய! யாராவது பொண்டாட்டி பிறந்த நாளை மறப்பாங்களா? அப்படியே மறந்தா என்ன நடக்கும்னு ஒரு நிமிஷம் நெனச்சுப் பாக்க வேணாம்.
அந்தம்மா கொஞ்சம் சாது போல. நல்லா யோசிச்சு அந்தாளுக்கு ஒரு மாசம் வல்லாரை கலந்த தேனீர் குடுக்கறாங்க. அப்புறம் என்ன, ரிசல்ட் பிரமாதமா வருது. அம்மணி கிட்ட எத்தனை டிசைன்ல எத்தனை கலர்ல புடவை இருக்குன்னு எல்லாம் நம்மாளு மைன்டுல வெச்சுக்கறாரு.
இன்னொரு விளம்பரம்:
சீக்கிரமே வீட்டுக்கு வந்த ஒரு ரங்கு பொறுப்பு சிகாமணியா மனைவிக்கு டின்னர் தயார் பண்ணி விட்டு "டின்னர் இஸ் வெய்டிங்க்"னு அம்மணிக்கு போன் போடுகிறார். வேலை அதிகம், வர லேட்டாகும்!னு பதில் வர, அப்படியே எல்லாத்தையும் பிரிஜ்ஜுல வெச்சு மூடி விட்டு "டின்னர் இஸ் ஸ்டில் வெய்டிங்க்"னு சந்தோஷப்படுகிறார். அந்த பிரிஜ் அவ்ளோ ப்ரெஷ்ஷா வெச்சு இருக்குமாம்.
இதே நீங்களா இருந்தா ஐபிஎல் மேட்சை பாத்துட்டு இருப்பீங்க, நான் வந்து தான் சமைச்சாகனும்!னு எங்க வீட்ல கமண்டு விழுந்தது. அந்த விளம்பர டைரக்டர் அட்ரஸ் தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்க. ஆட்டோ அனுப்பனும்.
காலத்துக்கு ஏற்ற மாதிரி விளம்பரங்களும் தம்மை புதுப்பித்துக் கொண்டால் தான் போட்டியை சமாளிக்க முடியும் என்பதை தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள் இன்றைய விளம்பர இயக்குனர்கள். ஏனெனில் மாற்றம் ஒன்று தானே மாற்றமில்லாதது! அவர்களுக்கு என் மனப்பூர்வமான பாராட்டுக்கள்.
Tuesday, December 02, 2008
சில விளம்பரங்கள் - ஒரு குயிஜு
புது காரு! புது வீடு! கலக்கறே சந்துரு! என்றால் நமக்கு ஏஷியன் பெயின்ட்ஸ் நினைவுக்கு வருகிறது இல்லையா? அது தான் ஜிங்கில்ஸின் மாயம். திரைப்பட பாடல் வரிகளை விட சில விளம்பர பட வரிகள் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கிறது என நான் சொன்னால் அது மிகையில்லை. பாடல் வரிகள் என்று இல்லை, சில தீம் மியூசிக், அல்லது பிஜிஎம் உதாரணமாக டைட்டன் வாட்ச்சுக்க்கான தீம் மியூசிக்கை கொஞ்சம் அசை போடுங்கள் பார்க்கலாம், சரி வேணாம்! லேட்டஸ்ட் ஹிட்டான ஏர் டெல் பிஜிஎம் நினைவுக்கு வருதா? அதான் அவ்ளோவே தான்.
சில பிரபல வரிகளை கீழே குடுத்துள்ளேன், எந்த பொருள்? என நீங்கள் சொல்லனும். சிம்பிள் தானே? ரொம்பவே எளிமையாக தான் கேள்விகள் இருக்கு என நம்புகிறேன். எல்லாம் போன தடவை பட்ட அனுபவம் தான்.
1)தொட்டுத் தொடரும் ஒரு பட்டுப் பாரம்பரியம்.
2) ஸ்வீட்ட எடு! கொண்டாடு!
3) வெண்மையின் புது மந்திரம்!
4) மனைவி பேச்ச கேளுங்க!
5) நான் என் மனம் சொல்வதை கேட்டேன்.
6) தாய் வீட்டு சீதனம்.
7) ஐ மிஸ் யூ ஸோ மச்! இட் ஹர்ட்ஸ். (i miss you so much, it hurts).
8) எடுத்துக்கோ! எடுத்துக்கோ! அண்ணாச்சி கடையில் எடுத்துக்கோ!
9) தி டேஸ்ட் ஆப் இந்தியா!
10) டோண்ட் ப்ரே! ஜஸ்ட் ஸ்ப்ரே! (Don't pray! Just spray)
Saturday, March 01, 2008
கும்மி அடிக்க வாரீகளா?
சற்றே பசி எடுக்க துவங்கும் பகல் சுமார் பன்னிரெண்டு மணிவாக்கில் ஆபிசில் நாம் பிசியாக வேலையில் மூழ்கி இருந்த போது (சரி, இதுக்கே சிரிச்சா எப்படி?) ஒரு போன் கால். யாருனு பாத்தா அட நம்ம தல கைப்புள்ளை. பரஸ்பரம் ஷேமம்! உபயஷேமம், எல்லாம் விசாரித்தபின் மேட்டருக்கு வந்தார் நம்ம தல.
வ.வா.சங்கத்தில் மார்ச் மாத அட்லாஸ் வாலிபராக நம்மை தேர்ந்தேடுத்துள்ளதாகவும், ஒரு மாதம் அங்க வந்து கும்மி அடித்து சிறப்பிக்க வேணும்! என அவர் சொன்னதை கேட்டவுடன், நமக்கு ஒரு சின்ன தயக்கம். என்னடா! எம்பெருமான் இலவச கொத்தனாரும், இளயனார் கண்ணபிரானும் கட்டிகாத்த வ.வா.சங்கத்தில் இந்த குழந்தை வந்து என்ன செய்ய போறது? நீங்களே சொல்லுங்கள்!
அட்லாஸ் குழந்தை கேட்டகரியில் வர வேண்டிய நம்மை இப்படி வாலிபர் கேட்டகரியில் சேர்த்தால் எப்படி அது நியாயம்..? நாம ஏற்கனவே ஒரு இளஞ்சிங்கம்! என்பது வேறு விஷயம் என நைசா சைடு கேப்பில் கோல் போட முயற்சிக்க, தங்கமணிக்கு தொண்டையில் கிச் கிச். பொதுவாக தொண்டையில் கிச் கிச் வந்தால் விக்ஸ் சாப்பிடனும், இல்லாட்டி நன்றாக காறி துப்பி விட வேண்டும். அது என்னவோ முக்ய தருணங்களில் எல்லா தங்கமணிகளும் இரண்டாவது வழியை தான் கடைபிடிக்கிறார்கள்.
சரி, வருடம் ஒரு முறை திருஷ்டி கழிக்க நம்மை கூப்பிட்டு இருக்கிறார்கள் போலும். ஆக மார்ச் மாதம் வவா சங்கத்தில் தான் நம்ம கச்சேரி. ஆமா! இங்க கிழிச்சாச்சு! என்ன செய்ய? வீட்லயும், ஆபிஸ்லயும் ஒரே வேலை. ஒத்து கொண்டதால் வாரம் ஒரு பதிவாவது அங்கே கண்டிப்பாக போட்டு விடுவேன்! என்ற நம்பிக்கையுடன் உங்கள் ஆதரவை வழக்கம் போல் எதிர்பார்த்து இருக்கிறேன்.
Friday, February 22, 2008
போடுங்கம்மா ஓட்டு!
அன்பார்ந்த பிளாக்காளப் பெருங்குடி மக்களே!
நம்ம பிளாக் யூனியன் ஆரம்பித்து ஒரு வருடம் நிறைவடைய போகுது. உருப்படியா என்னத்தை கிழிச்சோம்? என நாளைய சரித்திரம் சொல்லும். (ஹிஹி, வேற எப்படி தான் சமாளிக்கறதாம்?).
சென்னை வரும் நம் யூனியன் மக்களை மிக அன்பாக தட்டி கொடுத்து, ஹோட்டலுக்கு தள்ளிகொண்டு போயி கிடா வெட்டும் நமது ஜி3 அக்காவின் பெருந்தன்மையாகட்டும், ஜிடாக்கில் சிக்கினால், மொக்கை போட்டு எதிராளியை துண்டை காணோம்! துணியை காணோம்! என ஓட வைக்கும் நமது மை பிரண்டின் தன்னிகரில்லா சேவையாகட்டும், மொக்கை போடவென்றே தனியாக ஒரு பிளாக், ஆன்மீகத்துக்கு தனி பிளாக் என பதமாக பிரித்து, இதமாக மொக்கை போடும் நம் பதிவுலக காரக்கால் அம்மையாராம் கீதா பாட்டியின் திருத்தொண்டாகட்டும், நமது யூனியனின் சேவை சொல்ல, சொல்ல புல்லரிக்க வைக்கும்.
இது தவிர, அவ்வப்போது வேலைவாய்ப்பு, பொது விழிப்புணர்வு, சுகாதாரம் சம்பந்தமாக சில பதிவுகளும் வரத்தான் செய்கின்றன.
என்னடா இழுவை?னு நீங்கள் கும்முவதற்க்கு முன்னால் மேட்டருக்கு வருகிறேன். நமது பிளாக் யூனியனையும் சிறந்த வலைப்பூவாக கருதி, சங்கமம் (படம் பெயர் இல்லை) வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்து இருக்கிறார்கள்.
ஓட்டு எப்படி போடனும்? என்ன செய்யனும்? என்ற விவரம் எல்லாம் இந்த சுட்டியில் உள்ளது. எனவே நம் யூனியன் மக்கள் அனைவரும் தவறாமல் இந்த வாக்கெடுப்பில் பங்கு கொண்டு நம் பிளாகுலக கடமையை நிறைவேத்திட வேண்டும்.
வாக்களிக்க கடைசி நாள் 29-பிப்பரவரி 2008. வழக்கம் போல பதிவை படித்து விட்டு கமண்ட் போடாமல் நழுவுவது மாதிரி ஓட்டு போடாமல் இருந்துவிட வேண்டாம். :))
Friday, November 02, 2007
விளம்பரங்கள் - II
ஒரு விளம்பரம் வெற்றியடைய அடிப்படையாக சில விஷயங்கள் தேவை.
1) மக்கள் வாழ்வோடு தொடர்புடைய நிகழ்வுகளை சிம்பிளாக சொல்லும் விதம். எ.கா: குழந்தைகள் உண்டியலில் சேமிக்கும் பழக்கத்தை அழகாக தங்கள் வங்கிக்கு பயன்படுத்தி இருப்பார்கள் பாங்க் ஆப் இந்தியா.
2) எளிமையான, நாம் அன்றாடம் புழங்கும் வார்த்தைகள், வரிகள், பாடல்கள். புது வீடு! புது மனைவி! கலக்கற சந்துரு! - ஏஷியன் பெயின்ட்ஸ்.
3) விளம்பர படத்தில் நடிக்க தேர்ந்தெடுக்கப்படும் மாடல்கள் நமது பக்கத்து, எதிர் வீட்டு தெரிந்த முகங்கள் போல இருப்பது பிளஸ் பாயிண்ட். பத்தே மூவுல செக் மேட் என பிஸ்து காட்டுவாரே அந்த ஏர்டெல் தாத்தா மாதிரி.
இது மூணும் சரியாக இருந்து விட்டால் அந்த விளம்பரம் ஹிட் என நான் அடித்து கூறுவேன்.
வளவள டயலாக்ஸ், சொல்ல வந்த விஷயத்தை தலையை சுத்தி மூக்கை தொடும் பாணி, முகம் சுளிக்க வைக்கும் விதமாய் படமாக்கிய விதம் என பல விஷயங்கள் ஒரு நல்ல பிராண்டை கூட மக்கள் ஏறெடுத்து பார்க்காத நிலைக்கு தள்ளி விடும்.
நான் சொன்ன அடிப்படை விஷயங்கள் தவிர ஒவ்வோரு பொருளை மார்கட் பண்ண ஒரு தனி டெக்னிக் கையாள வேண்டி இருக்கும்.
உதாரணமாக, "வாஷிங்க் பவுடர் நிர்மா! பாலை போல வெண்மை - நிர்மாவாலே வருமே!" என பாட்டு பாடி, நிர்மாவின் சிறப்பை சொல்லுவது ஒரு விதம் என்றால் மஞ்ச கட்டியை வாங்கினா மஞ்ச சட்டை, நீல கட்டியை வாங்கினால் வெள்ளை சட்டை என கம்பேரிசன் பண்ணி தனது மார்கட் எதிரிக்கு ஆப்பு வைப்பது ஒரு வகை.
ஆடை வகைகளுக்கு என்றுமே ஒரு தனி மார்கட் உண்டு. பொங்கலுக்கு ஆரம்பித்தால் கிறிஸ்மஸ் வரை புத்தாடை வாங்காத ஆள் தான் யாரு? அதுவும் புடவை என்றால் கேட்கவே வேணாம்.
எனவே ஜவுளி கடைகள் போட்டி போட்டு கொண்டு விளம்பர ஏஜன்சிகளை அணுகி ஒரு படம் எடுத்து குடுங்க எஜமான்! என கெஞ்சுகின்றன. இதில் டாப் டக்கர் என சொன்னால் சென்னை சில்க்ஸ் தான்!
"மத்தாப்பு சுட்டு சுட்டு போட தான் வேணும்" என ரீமேக் சாங்க் பாடி, சென்னை சில்க்ஸில் தீபாவளி! என ஒரு தீபாவளியை நம் கண் முன் கொண்டு வந்து விடுகிறார்கள். முக்யமாக, இவர்கள் தேர்ந்தெடுக்கும் மாடல்கள் இருக்கே! ஆஹா! சுப்பரோ சூப்பர்!
இப்போழுது ஸ்ரீதேவி சில்க்ஸ் - கோவை ஒரு விளம்பரம் காட்டுகிறார்கள்.
ஏதோ ஒரு பழைய பாடலை நினைவுபடுத்தும் வகையில் "ஆசை அதற்க்கும் மேலே!" என ஒரு மாடல் தன் தோழியரோடு ஆடுவது அடடா! கண் கொள்ளா காட்சி. அந்த மாடல் நடிகை பத்மப்ரியா தான்! என என் தங்கமணி அடித்து(தரையில தான்) கூற, நான் இல்லை என மறுக்க, இப்படியாக இன்னும் அந்த விளம்பரம் சென்சார் இல்லாமல் எங்கள் வீட்டில் ஓடி கொண்டிருக்கிறது. (இனி என்ன ஆகுமோ?)
சரவணா ஸ்டோர்ஸ்காரர்கள் சினேகாவை தங்கள் விளம்பரங்களுக்கு வருட கான்டிராக்ட் போட்டுவிடுவார்கள் போலும். ஆனால் தீடிர்னு "எல்லோர் கண்களும் எந்தன் மேலே"னு அழகான ஒரு அமீர் கல்யாணி ராகத்தில் அமைந்த ஜிங்கிளுக்கு ஷ்ரேயா ஆடி வருகிறார்.
சரி, டிராக் மாறி விட்டேன்.
இப்போ விளம்பர ஏஜன்சிகளின் லேட்டஸ்ட் டிரண்ட் குழந்தைகளை முன்னிலைபடுத்தி விளம்பரங்களை அமைப்பது.
a) மூணு மாசம் முழுகாம இருக்கேன்!னு தன் கணவனுக்கு ப்ரூ காப்பி குடுத்து புரிய வைக்கிறாள் அவரது தங்கமணி.
b) ஆரோக்யம்னா அது கோல்ட் வின்னர் தான்!னு சமையலே தெரியாத ஒரு குழந்தை அம்மாக்களுக்கு அறிவுறுத்துகிறது.
c) கறை நல்லதாக்கும்!னு ஒரு பாசமலர் அண்ணன் -தங்கை குழந்தைகள் சொல்கின்றன.
d) தாத்தா குடுத்த உண்டியலை, பத்ரமா பாங்க் ஆப் இந்தியாவின் லாக்கரில் வைக்கிறான் அந்த பொடியன்.
e) நூடுல்ஸ் எங்கே?னு வீட்டையே அட்டகாசம் செய்கிறான் ஹார்லிக்ஸ் பொடியன்.
அடிப்படையில் லாஜிக் இல்லை என்றாலும், நம் மனதில் இத்தகைய விளம்பரங்கள் ஒரு மாஜிக் செய்து விடுகின்றன, இல்லையா?
விளம்பரங்கள் காலத்துக்கேற்ப மாறிக்கொண்டே வரனும். இல்லாவிட்டால் மக்களுக்கு போரடித்து விடும்.
அமுல் - டேஸ்ட் ஆஃப் இந்தியா சிறந்த உதாரணம். சென்னையில் பனகல் பார்க், மவுண்ட் ரோடு என நெரிசல் மிகுந்த சிக்னல்களில் பில் போர்டுகள் வைத்து இருப்பார்கள். வாரம் ஒரு முறை, அந்த வாரத்தில் நடந்த ஏதேனும் முக்ய நிகழ்வுகளை ஹைலைட் பண்ணியிருப்பார்கள். கவனித்ததுண்டா?
கற்பனை வளமும், கிரியேட்டிவா திங்க் பண்ண தெரிந்து இருந்தாலும், மக்களின் மனசை பல்ஸ் பிடித்து பார்க்க தெரிந்து இருந்தால், எல்லாவற்றுக்கும் மேலாக நீங்கள் செய்யும் விஷயத்தை ரசித்து, அனுபவித்து செய்ய கூடிய மனபான்மை இருந்தால், விளம்பர துறை உங்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க தயாராக இருக்கிறது.
வாய்ப்பு கிடைத்தால், கோபிகாவுடனோ, யானா குப்தாவுடனோ மாடலாக நடிக்க நான் கூட தயாராக தான் உள்ளேன். ஒரு பயலும் கூப்ட மாட்டேங்கறான். மீசையை எடுத்து, கோட் சூட் போட்டா நானும் சஞ்சய் ராமசாமி தான்!னு சொன்னா தங்கமணி வாயை மூடிக் கொண்டு சிரிக்கற நிலைமை தான் உள்ளது. ஹும்! ஆசை இருக்கு தாசில் பண்ண! அதிர்ஷடம் இருக்கு பிளாக் எழுத! :)
நாகை சிவா வீட்டுக்கு போய் பல விளம்பரங்களை கண்டு ரசியுங்களேன்.
Monday, October 15, 2007
விளம்பரங்கள்
ஆரம்ப காலங்களில் "இந்தியா, மலேசியா, சிங்கபூர் போன்ற நாடுகளில் மக்கள் தேய்க்கும் ஒரே பற்பொடி கோபால் பற்பொடி" போன்ற விளம்பரங்களை ஆல் இந்தியா ரேடியோ திருனெல்வேலி வானோலியில் கேட்டு அடடா! அந்த ஊர்ல மக்கள் பல்லு தேய்கறதுக்கு காரணம் நம்ம கோபால் பல்பொடி தான்!னு புல்லரித்து போயிருக்கிறேன்.
டிவி பொட்டி வந்தபிறகு விளம்பரங்கள் இன்னும் மெருகேறின.
"தீபாவளிக்கு ஜவுளி வாங்க கைராசியான ஸ்தாபனம் போத்தீஸ்!" என்று பஸ்டாண்ட் முனையில் கூவி விறபது போல ரேடியோவில் சொன்ன நிலை மாறி, "சாமுத்ரிகா பட்டு! சர்வ லட்சணமான பட்டு!"னு மீரா ஜாஸ்மினுக்கு பட்டு புடவை கட்டி தாலி கட்டி கல்யாணம் எல்லாம் பண்ணி வைத்து என் வயிதெறிச்சலை கொட்டி கொண்டனர். புடவையை சொல்றாங்களா? மீரா ஜாஸ்மினை சொல்றாங்களா?னு எனக்கு அடிக்கடி சந்தேகம் வேற வந்து விடும்.
காலத்துக்கேற்ப விளம்பரங்களும் வளர்ச்சியடைந்து நவீன டெக்னாலஜி எல்லாம் பயன்படுத்தி 10- 20 செகண்டுகளில் ஒரு குட்டி கதையே சொல்லி விடுகிறார்கள்.
சிட்டுகுருவி லேகியம் விற்க தெருவோரத்தில் கூவுவது போல, கூவிய நிலை மாறி, ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி, ஷூட்டிங்க ஸ்பாட் எல்லாம் பாத்து வைத்து, டெக்னிகல் க்ரூ முடிவு செய்து, மாடல்களை தேர்வு செய்து, காப்பி எடிட்டர்களை புழிய புழிய வேலை வாங்கி, எத்திராஜ் போகும் மயில்களை ஜிங்கிள் எல்லாம் பாட வைத்து, மாடல்களை அழகா மிங்கிள் பண்ண வைத்து அர்ஜுன் அம்மா யாரு?னு நம்மை கதற வைத்து விடுகிறார்கள்.
பன்னாட்டு கமபெனிகள் இந்திய சந்தைக்குள் வந்த பிறகு விளம்பர துறைக்கு மவுசு கூடிவிட்டது. லக்ஸ் தேய்ச்சு குளிங்க!னு பாத் டப்புக்குள் ஷாரூகான் இறங்குறார், காட்பரீஸ் சாக்லேட்டுக்கு அமிதாப் ஆலாய் பறக்கிறார், சூர்யா சன் ஃபீஸ்ட் பிஸ்கோத்து விக்கறார், ஜெயசந்திரனில் ஆடை திருவிழா!னு கோபிகா குட்டி குதிக்கறா!
எல்லாம் டப்பு படுத்தற பாடுங்க.
"திரைப்படத்தின் இப்பகுதியை உங்களுக்கு வழங்குபவர்கள்...." என ஆரம்பித்தாலே நம் கைகள் தானாக ரிமோட் பட்டனை அழுத்தும். இல்லையா?
ஆனால் ஒரு சில விளம்பரங்கள் மட்டும் நம் கவனத்தை ஈர்த்து விடும். பத்து அல்லது இருபது செகண்டுகள் நம்மை தன்பால் ஈர்க்க என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கு? என்று நினைத்து பாருங்கள். இன்று பல சாடிலைட் சானல்கள் ஓடிகொண்டிருப்பது இந்த மண்டகபடிதாரர்கள் தயவில் தான்.
போதிய விளம்பரதாரர் இல்லையேனில் அவசர அவசரமாக கோலங்கள்-அபிக்கு குண்டடி படும். நடன போட்டியில் சொம்பு அழுது கொண்டு பஞ்ச்(சர்) டயலாக் விடுவார். எல்லாம் செந்தில் சொன்ன மாதிரி "ஒரு விளம்பரதேங்க்"
சரி, ஒரு விளம்பரம் வெற்றியடைய ஏதேனும் வெற்றி பார்முலா உண்டா? என கேட்டால் நிச்சயம் உண்டு என்பேன்.
எப்படி தாலி, குங்குமம், வேப்பிலை, குரங்கு, நாய், பாம்பு, யானை, கிராபிக்ஸ்,தீமிதி, நாட்டாமை, (நிஜமான) சொம்பு எல்லாம் ராம நாராயணன் படத்தின் வெற்றி பார்முலாவோ அதே போல விளம்பரங்களுக்கும் சில நுணுக்கங்கள் உண்டு. அவை என்ன? என அடுத்த பதிவில் பார்ப்போமா?
(அப்ப தானே என் அடுத்த பதிவின் ஹிட் ஏறும்? - இது என்னோட பார்முலா, ஹிஹி)
பி.கு: நேரமும், ஆர்வமும் இருந்தால், நீங்களும் இந்த விளம்பர விளையாட்டில் கலந்து கொள்ளுங்களேன்.