Friday, October 22, 2010

ப்ளே ஸ்கூல்

குழந்தைகளை எல்.கே.ஜியில் சேர்ப்பதற்கு முன்னால் சும்மா ஒரு நட்பு சூழலில், பெற்றோரை பிரிந்து தனியா மத்த குழந்தைகளுடன் சேர்ந்து இருக்க முடிகிறதா?னு டெஸ்ட் செய்யற இடம் தான் ப்ளே ஸ்கூல் என அறிந்து கொண்டேன். எங்க ஏரியாவில் அடுத்த தெருவில் இப்படி ஒன்னு இருக்கு. ஜூனியரை அங்க சேர்த்து பாக்கலாமா?னு தங்க்ஸ் கேட்க, சரி பாக்கலாம்னு சொல்லியாச்சு.

அந்த சுப தினமும் நெருங்க எனக்கு டென்ஷன் அதிகமாச்சு. கண்டிப்பா ஸ்கூல் அனுப்பனுமா? நாமே ஏன் நேரு மாதிரி வீட்டுக்கே சில டீச்சர்களை வரவழைச்சு பாடம் சொல்லி குடுக்க கூடாது?னு நான் வெகுளியா மேலிடத்தை கேட்க, அது என்ன டீச்சர்கள்..? என பப்ளிக் பிராஸிகியூட்டர் மாதிரி பாயிண்ட புடிக்க எதுக்கு வம்பு?னு பேசாம இருந்துட்டேன்.

முந்தின நாளே வாட்டர் பாட்டில், அத வைக்க ஒரு ஸ்கூல் பேக், மத்த குழந்தைகளுக்கு குடுக்க சாக்லேட்ஸ்னு ஒரே அமர்க்களம். முத முதலா ஸ்கூல் போறான், ஒரு ஸ்வீட் பண்ணிக்கோ!னு என் பங்குக்கு ஒரு பிளேட் கேசரிக்கு ஒரு பிட்டை போட்டு வைத்தேன்.

ஜூனியர் வயத்தில் இருந்த போது, தங்க்ஸ் ரெண்டு தடவை வசூல் ராஜா டிவிடி பாத்ததின் விளைவோ என்னவோ புதுசா எந்த குழந்தைகளை பாத்தாலும் ஜூனியர் முதலில் ஒரு கட்டிபுடி வைத்தியம் செய்து விடுவான். அதன்பின் "மை நேம் இஸ் சூர்யா!"னு தன்னை அறிமுகப்படுத்தி கொள்வான். அவனிடம் நாங்கள் தமிழில் மட்டுமே உரையாடுவதால், யாரேனும் திடீர்னு ஆங்கிலத்தில் என்ன கேட்டாலும் ஒரே பதில் தான். அதுக்கும் எதிராளி மசியவில்லையெனில் ஷேக்கன்! என கூறி கைகுலுக்கி விடுவான்.

ப்ளேஸ்கூலில் என்ன நடக்க போகுதோ? புது டிரஸ் எல்லாம் போட்டு சாமி கும்பிட்டு போதாகுறைக்கு எங்கள் காலிலும் விழ " நல்லா படிச்சு விக்ரமன் படத்துல வர மாதிரி நாளைக்கே நீ கலெக்டராகி அம்பாசிடர் கார்ல வந்து இறங்கனும்!"னு உணர்ச்சிவசப்பட்டு ஆசிர்வாதம் செஞ்சேன்.

சுவரெங்கும் வண்ண வண்ண கார்டூன்கள், பஞ்ச தந்திர கதை சித்திரங்கள்(சிம்ரன், ரம்யா கிருஷ்ணன் படங்கள் மிஸ்ஸிங்), சறுக்கு மரம், சீஸா, நிறைய்ய கலர்-கலர் பிளாஸ்டிக் பந்துகள், புடவை கட்டி பன் கொண்டை போட்ட ஒரு மிஸ், சுடிதார் அணிந்து, லிப்ஸ்டிக் அடித்து, குதிரை வால் கொண்டை போட்ட இன்னொரு மிஸ் என கலக்கலாய் இருந்தது ப்ளே ஸ்கூல்.

ஜூனியர் மிஸ்ஸிடம் வழக்கம் போல தன்னை அறிமுகப் படுத்தி கொண்டு சாப்டாச்சா? என அக்கறையுடன் விசாரிக்கவும் செய்தான். முதல் வாரத்தில் ஒரு மணி நேரம் தான் வைத்துக் கொள்வார்களாம். சில ஸ்கூலில் சிடி போட்டு டீச்சரும் பாட்டு பாடிக் கொண்டே டான்ஸ் எல்லாம் ஆடுவாங்களாமே..? இந்த மிஸ்ஸும் ஆடுவாங்களா? என தங்க்ஸிடம் டவுட் கேட்டு வாங்கி கட்டி கொண்டேன். ஜூனியர் புதிய சூழலில் எப்படி நடந்து கொள்கிறான் என பாக்க எனக்கு அளவிடமுடியாத ஆவல். குழந்தைகளுக்கும், அம்மாக்களுக்கு மட்டும் தான் கிளாஸ் ரூமில் அனுமதியாம். என்னை மாதிரி குழந்தை உள்ளம் கொண்ட அப்பாக்களுக்கு அனுமதி இல்லையாம்.

ஒரு மணி நேரம் கழிச்சு வீட்டுக்கு வந்த ஜூனியரிடம், உனக்கு எத்தனை பிரண்ட்ஸ் கெடச்சாங்க சொல்லு பாப்போம் என விசாரிக்க,

அபிராமி, மம்தா, ப்ரஜக்தா, எல்லாரும் பிரண்ட்ஸாயிட்டாங்க பா.

ஏன்டா உனக்கு ஒரு பையன் கூடவா பிரண்டா கெடைக்கல..? அவ்வ்வ்வ்வ்.

Tuesday, September 28, 2010

NRI மாமி

Part-1

பொதுவாக கல்யாணம் ஆன ஆண்களுக்கு தமது மாமியார் வீடுகளில் தங்கமணியின் தூரத்து சொந்த பந்தங்களிடமிருந்து சிலபல சோதனைகள் வந்து வாய்க்கும். அதையெல்லாம் எடுத்தோம் கவிழ்த்தோம்னு டீல் பண்ண முடியாது, பண்ணவும் கூடாது. அப்படி செய்தால் செய்கூலியும் சேதாரமும் ஜாஸ்தியா இருக்கும். வள்ளுவர் சொன்ன மாதிரி அகலாது அணுகாது, நாலு பேரையும் கணக்கில் எடுத்துக் கொண்டு தான் ஒரு முடிவுக்கு வரனும். சரி, நேரே விஷயத்துக்கு வரேன்.

ஒரு தரம் குடும்ப சகிதமாய் நங்கநல்லூர் அனுமார் கோவிலுக்கு போய்விட்டு அக்கடானு வந்த நேரம் தங்க்ஸின் தூரத்து சொந்த பந்தம் வந்து சேர்ந்தனர்.
ஒரு எழுபது வயது மதிக்க தக்க ஒரு என்.ஆர்.ஐ மாமா, மாமி. அவங்களும் பெண்களூர்ல தான் இருக்காங்களாம். கர்ணனுக்கு கவச குண்டலம் போல என்ஆர்ஐ மாமிகளுக்குன்னு சில பொதுவான விஷயங்கள் உண்டு.

காதில் எட்டு கல் வைத்து வைர தோடு(கலிபோர்னியாவில் வாங்கியது) தான் போட்டு இருப்பார்கள்.

தர்மாவரமோ ஆரணியோ அல்லது காட்டன் சில்கோ(ஆழ்வார்பேட்டை பிரசாந்தினியில் நல்ல வெரைட்டி இருக்கு தெரியுமா?) தான் உடுத்தி இருப்பார்கள்.

"திஸ் ஓல்ட் மேன் இஸ் ஆல்வேஸ் லைக் தேட்!" என அவர்களது ரங்க்ஸை அன்பாக கடிந்து கொள்வார்கள்.

போன டிசம்பர் சீசன்ல சீனி(மான்டலீன் ஸ்ரீனிவாஸ்) சிகாகோ வந்ருந்தான், பின்னிட்டான் தெரியுமா! என ஒரு பிட்டை போடுவார்கள்.

மேற்படி விஷயங்களில் வைரத் தோடு, ஆரணி நீங்கலாக எந்த பந்தாவும் இல்லை இந்த மாமியிடம். பரஸ்பர ஷேமம் உபயஷேமம் முடிந்த பின் இவர் தான் எங்க வீட்டு மாப்ளை என நான் அறிமுகம் செய்து வைக்கப்பட்டேன்.

பெண்களுர்ல நீங்க எங்க இருக்கீங்க..?

சொன்னேன்.

அவர்கள் யெலஹங்காவில் இருக்காங்களாம். ஒரு தரம் ஆத்துக்கு கண்டிப்பா வரனும் என அன்பு கட்டளை. பெண்களூரில் இருந்து யெலஹங்கா போற நேரத்துல ஸ்ரீலங்காவுக்கே போயிட்டு வந்துடலாம். :)

அவர்களுக்கு ஐந்து பிள்ளைகள் அமெரிக்காவில் ஐந்து வேவ்வேறு மாநிலங்களில் இருக்காங்க. சான் ஜோஸ் கிளைமேட் தான் எனக்கு ஒத்துக்கும்! அதுனால் அந்த பிள்ளை வீட்ல தான் தங்குவோம்! என்றார்.

நயாகராவை ரெண்டு பக்கத்துல இருந்தும் பாத்தாச்சாம். நயந்தாராவை எதுக்கு இவங்க ரெண்டு பக்கத்துல இருந்தும் பாக்கனும்? எந்த பக்கம் பாத்தாலும் அழகா தானே தெரியும்?னு தங்கஸிடம் கிசுகிசுத்தேன். நறுக்குனு ஒரு கிள்ளு மட்டும் பதிலாக வந்தது. எப்போதும் அப்பாவிகளை தான் இந்த உலகம் தண்டிக்கிறது.

எந்த கம்பெனியில் வேலை..?

சொன்னேன்.

இங்க தான் ஒரு சூட்சமம் இருக்கு. மூன்றேழுத்து, நாலேழுத்துன்னு அவங்க ஒரு கம்பெனி பட்டியல் வைத்திருப்பார்கள். அந்த லிஸ்டுகுள்ள நம்மது இருந்தா தப்பிச்சது. நம்மது ஒரு மன்னார் அன்ட் மன்னாராகவோ இல்ல ஒரு கெக்ரான் மோக்ரானாகவோ இருந்து தொலச்சா மேலும் சில குறுக்கு விசாரணைகள் தொடரும். இது கூட பரவாயில்லை, நம்ம நேரம், போன வருடமோ, போன மாசமோ நம்ம கம்பெனிய வேற ஒருத்தன் சல்லிசா இருக்கேன்னு வாங்கி இருப்பான். இல்ல, நம்ம கம்பெனி, நமக்கு குடுக்க வேண்டிய சம்பளத்துல ஒரு பக்கோடா கம்பெனிய வாங்கி இருப்பான். உடனே மாத்துடா கம்பெனி போர்டை!னு ரீபிராண்ட் செய்து இருப்பார்கள். இதை புரிய வைப்பதற்குள் நமக்கு நாக்கு தள்ளி விடும்.

உங்கள நம்பி தான் எங்க பொண்ணை தந்ருக்கோம், கண்ண கசக்காம இருந்தா சரி! என முடிவுரை எழுதி விடுவார்கள்.

அந்த கம்பெனில நீங்க என்ன பண்றீங்க..?

கால் கிலோ ரவைய வறுத்து முக்கா கிலோ சீனி, 200 கிராம் நெய்யும் விட்டு கேசரி கிண்டிட்டு இருக்கேன்னா சொல்ல முடியும்..? ரொம்ப எளிமையா நான் செய்யறதை சொல்லி புரிய வைத்தேன். ஒரு வழியாக சமாதானம் ஆகி மறுபடியும் ஸ்ரீலங்காவுக்கு, சே யெலஹங்காவுக்கு எங்களை அழைத்து விட்டு பின்கோடு உட்பட அவர்கள் முகவரியை எழுதி குடுத்து விட்டு சென்றனர். :)

Thursday, September 09, 2010

விடுமுறை தின நல்வாழ்த்துக்கள்

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும்
கலந்தெனக்கு நீ தருவாய்!
கோலம் செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே
சங்கத் தமிழ் இந்தா!

அவ்வை மூதாட்டி எழுதியதை யாரோ ஒரு புது கவிஞர் இப்படி மாத்தி எழுதியதாய் படித்த நினைவு.

நாடு இருக்கற நிலமையில் மக்களும் இப்படி தான் பிள்ளையாரிடம் வேண்டிப்பாங்கன்னு எனக்கும் தோணுது.

ஆங்! எல்லாருக்கும் ரம்ஜான் மற்றும் விடுமுறை தின(அதான்பா! வினாயக சதுர்த்தி) நல் வாழ்த்துக்கள்.

Friday, August 13, 2010

மனீஷாவும் சோன் பப்படியும்

சில பதார்த்தங்களுக்கு ஏன் இந்த பெயர் வைத்தார்கள்? என ரூம் போட்டு ஆராய்ச்சி செய்வதை விட கையில் கிடைத்தால் லபக்குனு முழுங்கி விட தோணும். சோன் பப்டியும் அப்படி தான். மாலை நேரங்களில் தெருவில் டிங்க் டிங்க்னு மணி அடித்து கொண்டு தள்ளு வண்டியில் ஒரு கண்ணாடி ஜாடியில் வெள்ளை வெளேர்னு இருக்கும். அந்த ஜாடிக்குள் லாவகமா கையை விட்டு ஒரு கைப்பிடி சோ-பாவை ஒரு பேப்பரில் போட்டு தருவார்.

எனக்கு தெரிந்து சோ-பாவை யாரும் தீபாவளிக்கோ, பொங்கலுக்கோ வீட்டில் செய்தது இல்லை என நினைக்கிறேன். சோன்பப்படி செய்வது எப்படி?னு எந்த பதிவும் எனக்கு தெரிந்தவரை தமிழில் வந்ததில்லை. கூகிளில் தேடினால் ஆங்கில பதிவுகள் காண கிடைக்கின்றன. ராஜஸ்தானிகள் - லாலா மிட்டாய் கடை வைத்திருப்பவர்கள் தான் செய்கிறார்கள். ஹால்டிராம்ஸ் காரர்கள் கட்டி கட்டியாக அழகா பீஸாக பாக் செய்து பேக்கரிகளில் வைத்திருக்கிறார்கள்.

யாராவது தங்கள் வீட்டுக்கு என்னை சாப்பிட கூப்பிட்டால் நான் வாங்குவது கால் கிலோ சோ-பா தான். ஒரு கட்டத்தில் நான் அந்த பேக்கரிக்கு போனாலே கடைகாரன் சோ-பாவை எடுத்து பேக் பண்ண ஆரம்பித்து விட்டான். தெரிந்த சிலர் வீட்டுக்கு ரெண்டாம் தரம் போன போது, "என்ன அம்பி, சோன் பப்டியா?" என அவர்களே கேட்க ஆரம்பித்து விட்டார்கள். :)

கேசரியெல்லாம் கிண்டி டிபன் பாக்ஸில் போட்டு கொண்டு போக முடியாது. சூடு ஆறி விடும் என்பது மட்டுமல்ல மத்த ஸ்வீட்ஸ் எல்லாம் ரொம்பவே காஸ்ட்லி, மேலும் சோ-பா பாக்கெட்டை நம் கண் முன்னாடியே பிரித்து நமக்கும் ஒரு பீஸ் தருவார்கள். ஹிஹி.

ஆத்தா நான் பாசாயிட்டேன்!னு ஹிந்தியில் கத்தி கொண்டே வரும் அமிதாப், ஜிதேந்திரா, சாருகான், சல்மான்கான்களுக்கு அவர்கள் அம்மா மஞ்ச கலர் லட்டுவோ அல்லது சோன் பப்டியையோ தான் ஊட்டுவார்கள். கவிஞர் வாலிக்கும் என்னை மாதிரி சோன் பப்டி பிடிக்கும் போல. இந்தியன் படத்தில் 'மாயா மச்சீந்திரா' என ஆரம்பிக்கும் பாடலில் சோன் பப்படி! என அழுத்தம் திருத்தமாக எஸ்.பி.பி குரலில் மனீஷா கொய்ராலாவை வர்ணித்து இருப்பார். அந்த வரிக்கு தியேட்டரில் நான் மட்டும் கை தட்டினேன், மனீஷாவுக்காக இல்லை சோ-பாவுக்காக! என நான் சத்தியம் செய்தாலும் நீங்கள் நம்ப போவதில்லை.

சோன் பப்டிக்கு விக்கி பக்கங்கள் எல்லாம் இருக்கு. என்ன தான் சோ-பா செய்வது எப்படின்னு பல ரெஸிப்பிகள் வந்தாலும் லாலா மிட்டாய்காரகளின் ரெஸிபி இன்னமும் ரகசியமா இருக்குனு கேள்விப்பட்டேன்.

இங்கு பெண்களுர் தெருக்களில் சோ-பா வண்டி எல்லாம் வருவதில்லை. சென்னையிலும் அதிகம் பாத்ததில்லை. ஒரு வேளை சில ஏரியாக்களில் வரலாம். இன்றைய விலைவாசியில், பாவம் இந்த சோன் பப்டிகாரர்கள் எப்படி தாக்கு பிடிப்பார்களோ..? ரேஷன் கார்டு இருந்தா தானே ஒரு ரூவாய்க்கு அரிசி கிடைக்கும்..? இவர்களுக்கும் ரேஷன் கார்டு இருக்குமா? ம்ம், கடவுள் ஒவ்வொரு சோன் பப்டி பாக்கெட்டிலும் ஒருத்தர் பெயரை எழுதி வைத்திருப்பான் என்ற நம்பிக்கை தான் இவர்களை வழி நடத்திக் கொண்டிருக்கிறது என நினைக்கிறேன்.

Friday, August 06, 2010

கதை கட்றாங்க பா

சாட்டிலைட் டிவிகளும் எப்.எம்களும் தமிழகத்தில் வராத காலத்தில் ரேடியோ தான் நம் மக்களுக்கு பொழுதுபோக்கு. அதில் நாடகம் எல்லாம் கூட ஒலிபரப்புவார்கள். ஒரு நாலு பேர் சுத்தி உக்காந்து கதாபாத்ரமாகவே மாறி டயலாக் பேசுவார்கள். ரொம்ப சுவாரசியமா இருக்கும். அதில் வரும் குரல்கள் நமக்கு ரொம்பவே பரிச்சயமா இருக்கும். ஏன்னா ராஜ ராஜ சோழனுக்கு குரல் குடுத்த அதே ஆள் தான் ஒட்டக்கூத்தருக்கும் குரல் குடுப்பார். எபப்டி ஜோதிகாவுக்கு குரல் குடுத்த அதே அம்மணி (சவிதா) சிம்ரனுக்கும் டப்பிங்க் குடுக்கறாரே அதே மாதிரி.

இப்படி உன்னிப்பாக கேட்டு வளந்ததாலோ என்னவோ பள்ளியில் படிக்கும்போதும் என்னையறியாமலே ஒரு கதை சொல்லியாக திகழ்ந்து இருக்கிறேன். பேச்சு போட்டிக்கு போய், கதை சொல்லும் போட்டியில் சும்மா கதை சொல்லி, நவராத்திரிக்கு வெத்தலை பாக்குடன் அரைத்த சட்னியை வழிச்சு போட உதவும் பேசின் கிண்ணங்களை பரிசாக வாங்கியதும் உண்டு. பேச்சு போட்டியில் மண்ணை கவ்விய விவரம் இங்கு தேவையில்லை.

அந்த அனுபவம் எல்லாம் இப்போ என் ஜூனியர் சாப்பிட அடம் பிடிக்கும் போது கைகுடுக்கிறது. நித்தமும் எங்க வீட்டில், அனுமார் கடல் தாண்டி இலங்கை சென்று சீதைக்கு கனையாழி குடுத்து விட்டு திரும்புகிறார். அனுமாருக்கே இப்படி தினமும் இலங்கை செல்வது போர் அடித்தாலும் என் மகனுக்கு மட்டும் போரடிப்பதில்லை. சமயத்தில் அனுமார் பொம்மையை தூக்கி கொண்டு சொய்ய்யிங்க்க்னு நான் ஸ்பெஷல் எபஃக்ட் எல்லாம் குடுத்து கொண்டு பறக்க வேண்டி இருக்கு. குழந்தைகள் கதை கேட்கும் போது அந்த உலகத்துக்கே சென்று விடுகிறார்கள். அதனால் தான அவர்களுக்கு அலுக்க வில்லை போலும்.

இன்னும் மொழி, அதன் எழுத்துக்கள், இலக்கணமெல்லாம் அறியப் பெறாத வயதில் (3 முதல் 6 வயது வரை) கதைகளின் மூலம் பயிற்றுவித்தல் ஒரு சிறந்த முறை என அறிகிறேன். இப்படி கதை கேட்டு வளந்த குழந்தைகளின் கற்பனை திறனும், படைப்பு திறனும் அபாரமாக இருக்குமாம். (அப்படியா..?#தன்னடக்கமாம்)..

மான்டிசரி முறையிலும் இத்தகைய கதை சொல்லல் முறை உள்ளதாமே. யாராவது வந்து சாட்சி சொல்லுங்க பாப்போம்.

பதிவர் விதூஷ் Scheme என்ற அமைப்பின் மூலம் ஒரு கதை சொல்லியாக திகழ்ந்து வருகிறார் என ஸ்ரீதர் நாராயண் பதிவின் மூலம் அறிந்தேன். அவருக்கு என் மனமர்ந்த வாழ்த்துக்கள்.

இதைப் போன்ற முயற்சிகள் ரொம்பவே அரிதாக நடைபெற்று வருகிறது. யாருக்கும் நேரம் இல்லை, அதை விட பொறுமை இல்லை. பெண்கள் இதழில் "என் குழந்தைகளுக்கு முள்ளங்கினாலே அலர்ஜி. ஆனா அவங்களுக்கு தெரியாம முள்ளங்கி போண்டா செஞ்சு குடுத்தேன், மிகவும் ப்ரியமாக சாப்பிட்டார்கள். என்னவர் கூட (எப்போதும் போல) என்ன? ஏது?ன்னு கேக்காமயே சாப்பிட்டார்" என வாசகர் கடிதம் எழுதும் மாதர் சங்க பெண்மணிகள் இதை மாதிரி அக்கம்பக்கம் இருக்கும் குழந்தைகளுக்கு ஒரு கதை சொல்லியாக இருந்து அந்த அனுபவத்தையும் கடிதமாக எழுதலாம்.

பெண்களூரில் இதை மாதிரி கதை சொல்லியாக இருப்பதில் சில நடைமுறை சிக்கல்கள் உண்டு. ஒரே அப்பார்ட்மெண்டில் ஆறு வங்காளிகள், நாலு மல்லு, மூனு தமிழர்கள், கொசுறாக சில கன்னடர்கள், மராத்திகள் என இருப்பார்கள். என்ன தான் 'ஏக் காவ் மேன்' ஹிந்தியை மைய மொழியாக கொண்டாலும் தாய் மொழியில் வரும் திருப்தி வேறு எதிலும் வருவதில்லை. மேலும் இங்குள்ள குழந்தைகள் இங்க்லிஸில் பொளந்து கட்டுவார்கள். நாம் தட்டு தடுமாறி ஆங்கிலத்தில் கதை சொன்னாலும் குழந்தைகள் கொட்டாவி விடும் வாய்ப்புகள் அதிகம். "டோன்ட் போர் அஸ் அங்கிள்!னு நமக்கு ஆப்படித்து விட சாத்தியங்கள் இருப்பதால் நான் இந்த முயற்சியில் ஈடுபட வில்லை.

Wednesday, July 14, 2010

ஐஸ் ராவணன்

கர்நாடக பிலிம் சேம்பரின் அழுகுனி ஆட்டத்தாலும், என் மேனேஜரின் சதியாலும் படம் வந்த முதல் வாரம் போக முடியலை. இப்பல்லாம் படத்தின் ப்ரிவியூவுக்கே லாப்டாப்புடன் பதிவர்கள் சென்று அந்த டைரக்டருடன் அமர்ந்து விமர்சனம் எழுதி விடுகிறார்கள். போகட்டும்.

கதை என்ன? கருத்து என்ன?னு எல்லாம் நான் நீட்டி முழக்க விரும்பலை. கவனமாக எல்லா விமர்சனங்களையும் தவிர்த்து விட்டு தான் இந்த படத்தை பாத்தேன். படத்தில் ஐஸ் நடித்திருப்பதே தியேட்டருக்கு போன பின்பு தான் தெரியும். :)

பெண்களூரில் வார கடைசியில் தியேட்டருக்கு போனால் தலையில் துண்டு போட்டு கொண்டு தான் திரும்ப வரனும். எனவே கடவாய் பல்லில் தேங்காய் துகள் புகுந்து விட்டதுனு ஆபிசுக்கு லீவு சொல்லி ஐஸ் ராவணன் படம் பாக்க தம்பதி சமேதராய் கிளம்பியாச்சு. நிற்க, அம்மணிக்கு மணி ரத்ன படங்கள் பிடிக்கும்.

முன்புற சீட்டீல் காலை நீட்டாதீர், ஒன்று பெற்றால் ஒளி மயம், அரசன் சோப் ரொம்ப ரொம்ப நல்ல சோப், கோபுரம் மஞ்சள் தூள், பெண் குழந்தைகளை படிக்க வைங்க! என ஒரு விளம்பரமும் போடாமல் படக்குனு படத்தை போட்டுட்டாங்க பாவி பசங்க.

பொதுவாக மணி ரத்னம் படங்களை பார்ப்பதற்கு முன்னால் முந்தைய நாள் ஜான்சன் அன்ட் ஜான்சன் காது குடையும் பட்ஸ் வாங்கி காதை நன்றாக க்ளீன் செய்து கொள்வேன். படத்தில் பக்கோடா விக்கும் துணை நடிகர் முதல் வில்லன் வரை எல்லாருமே "ஏன்? எப்படி? அப்டியா? யாரு..?சொல்லிடு"னு ஏதோ கிச்சனுக்குள் கேசரி திருடி திங்க போனவன் மாதிரியே ஹஸ்கி வாய்ஸில் பேசுவார்கள். "வானம் பொழிகிறது, பூமி விளைகிறது"னு எழுபது டெசிபலில் வசனம் கேட்டு வளந்த நம்ம கூட்டத்துக்கு இதெல்லாம் ஒத்து வராது. புதுசா நாலு எவரெடி(சிவப்பு) பாட்டரி போட்ட ஒரு டார்ச் லைட்டும் ரொம்ப அவசியம். மொத்த படத்தையும் நாப்பது வாட்ஸ் பல்பு வெளிச்சதில தான் அவரு படமாக்கி இருப்பாரு. இருட்டா இருக்கற எடத்துல நாம டார்ச் அடிச்சு பாத்துக்கலாம்.

ஆனா இதுகெல்லாம் கொஞ்சமும் இடம் தராமல் இந்த படத்தில் ஐஸ் வராத ப்ரேம் கூட பளிச்சுனு இருக்கு. ஐஸை அறிமுகப்படுத்தும் காட்சியில் ஒரு பாட்டு கூட வைக்க தெரியலை மணிக்கு. அட, விக்ரமுக்காவது
" நான் தான்டா வீரா,
பறக்குது பாரு புறா!
பாத்து தொலச்சியா சுரா?"னு ஒரு ஒப்பனிங்க் சாங்க் வைக்க வேண்டாமோ..?

மனிதர்களை அப்படியே காட்ட முயற்சி செய்திருக்கிறார்கள். ஒரு பில்டப் இல்லை, இவன் தான் வில்லன், இவன் தான் ஹீரோன்னு எல்லாம் முத்திரை குத்தலை. விக்ரம் ஏன் அடிக்கடி வாயல் கொட்டு அடிக்கிறார்?னு புரியலை. ஆனால் அவரது உடல்மொழிகள் அற்புதம். நாகரீகம் கருதி மிக கவனமாக பல வட்டார (கெட்ட) வார்த்தைகளை தவிர்த்து அல்லது எடிட் செய்து இருக்கிறார்கள்.

மலையில் இருந்து ஐஸ் கீழே விழும் காட்சியை வைரமுத்துவுக்கு போட்டு காட்டி விட்டு தான் உசுரே போகுதே! பாட்டை எழுதி வாங்கி இருப்பார்கள்னு உறுதியாக சொல்கிறேன். கள்வரே பாடலில் ஐஸை சுத்தி எதுக்கு ஆறு கண்ணாடி வைத்து படமாக்கினார்கள்னு தெரியலை. படத்தின் பல முடிவுகளை பார்வையாளர்களிடமே விட்டு விடுகிறார். "என்ன தைரியம் இருந்தா என் கண் முன்னாடியே வீராவ சுடுவீங்க?னு வீட்டுக்கு போயி, ஐஸ் ப்ருத்வியை கும்மு கும்முனு கும்முவாரா..? அல்லது ஐஸே ஒரு முடிவுக்கு வந்து ப்ரித்வியை டைவர்ஸ் செய்து விட்டு "ஓ! ஒரு தென்றல் புயலாகி வருதே!னு பேக்ரவுண்டில் சாங்க் ஒலிக்க இன்ஸ்டென்ட் பெண்ணீயவாதியாக மாறி நடந்து போய்கிட்டே இருப்பாரா?னு எனக்கு ஒரே மண்ட குடச்சல். மணிக்கு மெயில் அனுப்பனும்.

வசனங்கள் ஒகேன்னு சொல்ல தோணினாலும் ஷார்ப்பா இல்லை. வட்டார வழக்கு என்றெல்லாம் சொல்லி தப்பிக்க முடியாது. எங்கூரு பாசை எங்களுக்கு தெரியும்லே!

தூத்துகுடி இன்ஸ்பெக்டர் பெயர் ஹேமந்த் என்பது ரொம்பவே ஓவர். என்னிடம் கேட்டு இருந்தால் ஒரு டஜன் பெயர்கள் சொல்லி இருப்பேன். வழக்கமாக மணி படங்களில் வரும் கல்யாண சீன் பாடல்களில் ஏதாவது ஒரு பாட்டி அபிநயம் பிடிப்பார். ப்ரியா மணி கல்யாண சீன் மீண்டும் யாரோ யாரோடி நினைவு படுத்துகிறது. 'நித்தி புகழ்' ரஞ்சிதா அந்த பாடலில் ஏதோ ரேணிகுன்டா ரெட்டி வீட்டுப் பெண் போல காசு மாலை எல்லாம் போட்டுக் கொண்டு வருவதாக காட்டுகிறார்கள். இதையும் சன் டிவி நிஜம் நிகழ்ச்சியில் புலனாய்வு செய்வார்கள் என நம்புகிறேன்.


கார்த்திக், பிரபு இருவரையும் இதே மணி தான் அக்னி நட்சத்திரத்தில் இயக்கினார். இப்பொழுதும் அதே மணி தான் இயக்கி இருக்கிறார். தம்மை அடிக்கடி புதுப்பித்துக் கொள்ளாதவர்கள் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகிறார்கள். இளமையும், காலமும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை.

இன்னமும் அலை பாயுதே போல இல்லை, அக்னி நட்சத்திரம் போல இல்லைன்னு எத்தனை காலம் நாம் சொல்லி கொண்டிருக்க போகிறோம்னு தெரியலை. அதை போலவே இந்த படம் இருந்தால் தான் தப்பு. எனக்கு படம் பிடித்து இருந்தது. ஒரு வேளை நான் அறிவு ஜீவியாகி விட்டேனோன்னு பயமாகவும் உள்ளது.

பி.கு: எனக்கென்னவோ மணி படத்தின் பெயரை ஐஸ் ராவணன் என வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என தோன்றுகிறது.

Tuesday, July 06, 2010

நமீதாவுக்கு மிகவும் பிடித்த பாடல்

என்னிடம் ஒரு நல்ல (கெட்ட?) பழக்கம். காலையில் எந்த பாடலை முணுமுணுக்க ஆரம்பிக்கறேனோ அதே பாடல் இரவு தூங்க போகும் வரைக்கும் என்னுடன் பயணிக்கும். இதில் இன்னும் ஒரு படி மேலே போயி, பாடலுடன் அதன் பின்ணனி இசை எல்லாம் வேறு வந்து தொலைக்கும். உதாரணமாக

மேகம் கருக்குது! (டக்கு சிக்கு டக்கு சிக்கு)

மின்னல் சிரிக்குது (டக்கு சிக்கு டக்கு சிக்கு).


இப்படிதான் ஒரு நாள் "எம் பேரு மீனாக்குமாரி" வந்து விட மேலிடம் நெற்றிக் கண்ணை திறந்ததில் நாலு நாளைக்கு வலுக்கட்டயமாக "வினாயகனே வினை தீர்ப்பவனே" என சீர்காழி மாதிரி முணுமுணுக்க வேண்டியதா போச்சு.

நிற்க, நேற்று ஆபிஸ் கிளம்பும் வரை ஒரு பாடலும் வரவில்லை. இதற்காக நானும் ஒன்னும் பிரயத்தனப்படுவதில்லை. ஆபிஸ் போகிற வழியில் யாரோ ஒரு புண்யவான் தன் செல்பேசியில் ரிங்க் டோனாக கர்ணன் படத்தில் வரும் "கண்கள் எங்கே? நெஞ்சமும் எங்கே? என்ற பி.சுசீலா அம்மா பாடிய பாடலை வைத்திருக்க இதோ இன்னிக்கு வரைக்கும் இந்த பாடல் தான் ஓடிக் கொண்டு இருக்கிறது. கவியரசு கண்ணதாசன் அவர்கள் கை வண்ணத்தில் இதை விட எளிமையாக ஒரு பெண்ணின் மனோபாவத்தை சொல்ல கூடிய பாடல் உண்டா? என சந்தேகமே.

இந்த பாடல் முழுக்க பிஜிஎம்மில் "ஆ ஆ" என ஒரு கோரஸ் ஒரே ராகத்தில் ஓடிக் கொண்டே இருக்கும். நாமே ஏதோ அரண்மனை அந்தபுரத்தில்(ஆசை தான்) உலவுவது போல தோன்ற வைக்கும்.

முதல் சரணத்தில் வரும்

"மணி கொண்ட கரம் ஒன்று அனல் கொண்டு வெடிக்கும்" - இதுக்கு என்ன அர்த்தம்? என் சந்தேகத்தை தீர்த்து வைப்பவர்களுக்கு என்றும் தன்யனாக இருப்பேன்னு சொல்ல வந்தேன். தங்கம் விக்கற விலையில ஆயிரம் பொற்காசு எல்லாம் பாண்டிய மன்னனுக்கே டூ மச்சோ மச்சு.

ரெண்டாம் சரணத்தில் வரும்
"கொடை கொண்ட மத யானை உயிர்க் கொண்டு நடந்தான்" - என்ன ஒரு உவமை.

யானை நின்றாலே அழகு, அதுவும் நடந்து வந்தால் இன்னும் அழகு. இதே வரிகளை கொஞ்சம் தூசி தட்டி
"தேக்கு மரம் உடலை தந்தது,
சின்ன யானை நடையை தந்தது"னு எம்ஜியாருக்கு பாடி விட்டார் ஒரு கவிஞர்(யார்னு தெரியுமா?).

சமீபத்தில் கவிஞர் தாமரை கூட காக்க காக்க படத்தில்

"சந்தியா கால மேகங்கள் வானில் ஊர்வலம் போகுதே,
பார்க்கையில் ஏனோ உந்தன் நடையின் சாயலே தோணுதே" என எழுதி இருந்தார்.

மறுபடியும் கர்ணன் பாடலுக்கு வருவோம். இந்த இடத்தில் கொடையா? குடையா..? குடையுடன் கூடிய யானை நடந்து வருவதை பார்த்ததுண்டா? ஒரு வேளை கர்ணன் என்பதால் இங்கே கொடை என்ற சொல் வந்ததா..? யாராவது கொஞ்சம் விம் பார் போட்டு விளக்குங்களேன்.

ஆபிஸ் மீட்டிங்குல கூட இதே சந்தேகம் தான். எவ்ரி திங்க் க்ளியர்?னு கேட்ட டாமேஜரிடம் இந்த டவுட்டை எல்லாமா கேக்க முடியும்? :)

கொடை கொண்ட மத யானை எப்படி நடந்து இருக்கும்?னு வீட்டில் நடந்து பாக்கும் போது தானா என் ஜூனியர் வரனும்? பார்த்து விட்டு கெக்கபிக்கெவென சிரித்து அவன் அம்மாவ வேற அங்கு கூட்டி வந்து விட்டான். இது போதாதா?

"என்னங்க, குழந்தை சாப்ட படுத்தறான், கொஞ்சம் சீக்ரம் வந்து அந்த நடை நடந்து காட்டுங்க" என தனக்கு கிடைத்த பெனால்டி கார்னரில் கோல் போட்டுக் கொண்டிருக்கிறார் தங்க்ஸ். ஆக கொடை கொண்ட மத யானை இப்பொழுது கோவில் யானையாக மாறி வீட்டில் சலாம் போட்டுக் கொண்டிருக்கிறது.

பி.கு: தலைப்பு சும்மா லுலுவாயிக்கு. :)