இடம்: திருநெல்வேலி
இந்த தடவையாவது அப்பா லீவுக்கு வருவாரா மா? எனக்கு புது சைக்கிள் கிடைக்குமா?
கண்டிப்பா வருவார் கண்ணா! நேத்து நைட் கூட போன்ல உங்கிட்ட பிராமிஸ் பண்ணாரே?
ஆமா! போன வருஷம் கூட இப்படி தான் சொன்னார், வந்த ரெண்டு நாளுல கிளம்பிட்டார். ராஜேஷ், பிரகாஷ் அப்பா எல்லாம் அவங்க கூடவே இருக்காங்க. ஹோம் வர்க் செய்ய கூட ஹெல்ப் பண்றாங்களாம்.
சரிடா ராஜா! எல்லார் மாதிரியா உங்க அப்பா! அவங்க எல்லாம் மவுண்ட் எவரெஸ்ட் எங்க இருக்கு? எவ்ளோ உயரம்?னு புக்குல தான் படிக்கறாங்க. பாரு உங்க அப்பா அங்க தான் வேலை பண்றாரு.
இதோ பாரு அப்பா எவ்ளோ பெரிய டிரஸ் போட்டுண்டு கைல மெஷின் கன் வெச்சுண்டு ஹெலிகாப்டர் பக்கத்துல நிக்கறார் பாரு!
இடம்: சியாசின், மைனஸ் 52 டிகிரி குளிர், 21537 அடி உயரம்.
ஹலோ மேஜர்! இந்த தடவை நீங்க லீவுக்கு போறீங்க போல, கங்கிராட்ஸ்.
தாங்க்ஸ் ராஜ்! ரொம்ப சந்தோஷமா இருக்கு. எனக்கு ஒரு வாரம் முன்னடியே நீங்க திருநெல்வேலி போறீங்க இல்லையா, ஒரு சின்ன ஹெல்ப் பண்ண முடியுமா?
நோ பிராப்ளம்! சொல்லுங்க வாட் கேன் ஐ டூ பார் யூ?
என் பையன் புது சைக்கிள் கேட்ருக்கான். நான் ஊருக்கு போற வழில வாங்க முடியுமா?னு தெரில. எனக்காக நீங்க வாங்கி வைக்க முடியுமா? நெல்லை ஸ்டேஷன்ல நான் வாங்கிக்கறேன்.
ஷ்யுர்! இது கூட செய்ய மாட்டேனா உங்களுக்கு?
தாங்க்ஸ் ராஜ்!
இடம்: அகஸ்தியர்பட்டி விமான தளம் - நெல்லை மாவட்டம்
மேஜரின் மனைவி, ராஜ் மற்றும் குழந்தை அர்ஜுன் கையில் புது சைக்கிளுடன் மேஜரின் வரவுக்காக காத்திருந்தனர்.
ராணுவ விமானம் ரன்வேயில் வந்திறங்கியது. மூவர்ண கொடி போர்த்திய பெட்டி வந்திறங்கியது!
"சியாசினில் நடந்த தீவிரவாத ஊடுருவலை நமது இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது. இதில் நடந்த பயங்கர சண்டையில் அன்னிய நாட்டு கூலிபடைகள் 150 பேர் கொல்லப்பட்டனர். ராணுவ தரப்பில் ஒரு மேஜர் உட்பட இருபது வீரர்கள் உயிர் நீத்தனர். இறந்தவர் குடும்பங்களுக்கு பிரதமர் தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்டார். இத்துடன் செய்திகள் முடிவடைகிறது.
நேயர்களே! சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகள்:
காலை 7.30க்கு:
தேச பக்தி பாடல்கள் - பாடுபவர் சீர்காழி சிவசிதம்பரம்
9.00 மணிக்கு:
மேடி மாதவனுடன் கல்லூரி மாணவிகள் ஒரு குறும்பு பேட்டி
9.30 க்கு:
சரோஜ்ஜா சாமான் நிக்காலோ - உருவான கதை
10.30க்கு:
உடையணிவதில் ஆண்களுக்கு அதிக சுதந்திரமா? பெண்களுக்கு அதிக சுதந்திரமா? கலகலப்பான பட்டிமன்றம் சாலமன் பாபையா தலைமையில் காண தவறாதீர்.
11.30 க்கு:
நமீதாவுடன் சும்மா நச்சுனு ஒரு பேட்டி.
மாலை 5 மணிக்கு:
உலக தொலைக்காட்சிகளில் முதன்முறையாக இன்னும் திரைக்கே வராத கமலின் தசாவதாரம் - திருட்டு சிடி காண தவறாதீர்.
நேயர்களே! சுந்திர தின நிகழ்ச்சிகளை கண்டு மகிழுங்கள், இந்திய சுதந்திரத்தை கொண்டாடுங்கள்" - எங்கோ டிவி பெட்டி அலறிக் கொண்டிருந்தது.