Tuesday, September 23, 2008

உங்களுக்கு சாருவை தெரியுமா?

ரொம்ப நாளாவே சாரு பத்தி எழுதனும்னு நினைச்சுட்டு இருந்தேன். இப்ப தான் நேரம் கிடைச்சது.

இந்த அம்பி அப்படி என்னடா சாரு பத்தி எழுத போறான்?னு உங்களுக்கு இருக்கற ஆர்வம் ரொம்ப நியாயம் தான். தப்பு!னு எல்லாம் சொல்ல மாட்டேன்.

சாதகம் பண்ணியவர்களுக்கு சாரு ஒரு கைக்குழந்தை. மத்தவர்களுக்கு ஒரு முரட்டு பிள்ளை. ஆமாம்! சாருவை கேட்பவர் அப்படியே பரவச நிலைக்கு ஆட்பட்டுவிடுவார்னு பரவலா பேச்சு இருக்கு.

எழுபத்திரெண்டு மேளகர்த்தா ராக அமைப்பில் சாரு இருபத்திஆறாவது மேளகர்த்தாவா வராரு. சாரு ஒரு சம்பூர்ணம் ராகம். எப்படின்னா ஏழு ஸ்வரங்களும்(ச ரி க ம ப த நி) சாருவில் வருது. சாருவை தழுவி வந்தவங்களை ஜன்ய ராகம்னு சொல்லுவோம். தரங்கிணி, மாரவி, பூர்வதன்யாசி, சிவமனோஹரினு ஒரு லிஸ்டே இருக்குங்க.

திரைபடங்களில் இந்த சாரு ரொம்பவே வந்து போயிருக்காரு. வரிசையா நான் பாடல்களை சொன்னா அட ஆமாம்!னு சொல்வீங்க.


1) பீமா படத்துல வர ரகசிய கனவுகள் ஜல் ஜல். இந்த பாட்டுல த்ரிஷாவ பாக்காம கண்ண மூடிட்டு கேட்டு பாருங்க, சாரு தெரிவாரு.


2) வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் பெண் புறாவே! பாட்டு நியாபகம் இருக்கா? என்ன படம் சொல்லுங்க பாப்போம்..? அதுவும் சாரு தான்.


3) ஆடல் கலையே தேவன் தந்தது! - ரஜினி நிஜமாவே நடிச்ச ராகவேந்திரா படத்திலும் சாரு தான்.


4) காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே - தம்பிக்கு எந்த ஊரு? இங்கயும் சாரு தான்.


5) ஏதோ ஏதோ - உனக்கு 18 எனக்கு 20. வேற யாரு சாரு தான்.


6) கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா?னு சாமில கேட்டதும் சாரு தான்.


பி.கு: சொல்ல மறந்துட்டேனே, எனக்கு சாருன்னா சாருகேசி ராகம் தான் நினைவுக்கு வரும். உங்களுக்கு எப்படி..?

Friday, September 12, 2008

நயன் தாராவுக்கு ஓணம் நல்வாழ்த்துக்கள்

உங்களுக்கு காந்தி ஜெயந்தி நியாபகம் இருக்கா? காந்தி தெரியும்! யாரது ஜெயந்தி?னு எல்லாம் கலாய்க்க கூடாது. காந்தி ஜெயந்தியன்று எல்லா டாஸ்மார்க் கடைகளுக்கும் லீவு விட்டாலும் சில ஊர்களில் கடைக்கு பின்னாடியோ, இல்ல அரை ஷட்டர் திறந்து வெச்சோ வியாபாரம் ஆகுமாமே. அத மாதிரி ஆகி போச்சு என் நிலைமை.

வீட்லயும், ஆபிஸ்லயும் ஓயாத வேலை...வேலை...வேலை. சுத்தமா ஏறக்குறைய ஒரு மாசம், இந்த பக்கமே வர முடியலை. இருந்தும் சைலண்டா சில பதிவுகளை படிச்சு பின்னூட்டம் போட முடியாம இருந்து வந்தேன்.

ஓணமும் அதுவுமா ஒரு வாழ்த்து பதிவு போடலைனா ஆபிஸ்ல இருக்கற ஓமனக் குட்டி கோச்சுக்காதோ? அதான் இதோ தட்டியாச்சு.

காலைல டிபன் சாப்டற நேரத்துல தற்செயலா( நிஜ்ஜம்மா) சூர்யா டிவிய திருப்பினா யேசுதாஸ் பாட்டுக்கு சில மோகினிகளே மோகினி ஆட்டம் ஆடிக் கொண்டிருந்தார்கள். அடடா! கண் கொள்ளா காட்சி! என்ன நெளிவு சுளிவு! என்ன லாவகம்!னு என்னை மறந்து ஆட்டத்தை மட்டும் ரசித்து கொண்டிருந்த எனக்கு பக்கத்தில் தங்கமணி வந்தது கூட தெரியவில்லை.

அடடா! அவங்கள பாரேன்! ஓணம்னா கரக்ட்டா அது சம்பந்தமா தான் புரோகிராம் போடறான். நம்மூர்ல தான் பிள்ளையார் சதுர்த்திக்கு நமீதா பேட்டிய போடறான். இதை பாத்தாவது நம்மாளுங்க திருந்தனும். அப்ப தான் இத மாதிரி அரிய கலைகள் எல்லாம் அழியாம நாளைக்கு வர போற சந்ததியினருக்கு நாம தர முடியும். நீ என்ன நினைக்கிற இத பத்தி?னு ரொம்ப சீரியசா முகத்தை வெச்சுண்டு நான் கேட்டதை, ஒரு நிமிஷம் (ஒரு நிமிஷம் தான்) உண்மைனு நம்பி, பின் வழக்கம் போல இதெல்லாம் ஒரு பொழப்பு?னு புகழாரம் கிடைத்தது. எனக்கு டிபனும் செமித்தது.


கேரள சமையலில் தேங்காய் அதிகம் இருக்கும். நெல்லைகாரர்களின் சமையலிலும் அந்த தாக்கம் கண்டிப்பாக இருக்கும். அவியல், ஓலன், அடபிரதமன், பச்சடி, கிச்சடின்னு சமையல் அட்டகாசமாக இருக்கும்.



என்ன தான் அவங்க நமக்கு முல்லை பெரியாரில் தண்ணி தர மறுத்தாலும், நாம அவங்களை மதிக்க தான் செய்யரோம். அசின், கோபிகா, நயன்தாரா, பாவனா, மீரா ஜாஸ்மின், நவ்யா நாயர்னு தமிழுக்கு அவங்க ஆற்றியுள்ள சேவைகள் கொஞ்சமா நஞ்சமா? :)

பண்டிகைனாலும் பத்தாயிரத்துக்கு பட்டுபுடவை வாங்காம, சிம்பிளா சந்தன கலரில் பொன் பார்டர் போட்டு அவங்க பாரம்பரிய புடவையில கலக்குவாங்களே, அதுக்கே ஒரு ஓ! போடலாம். (கொஞ்சம் ஓவரா தான் போறேனோ?)


சரி மறுபடியும் என் ஓணம் நல் வாழ்த்துக்களை சொல்லிக்கறேன்.

Tuesday, August 19, 2008

கஷ்டமர் கேர்

நீங்க எப்பவாவது வங்கிகளின் கஷ்டமர் கேரை அணுகி இருக்கீங்களா? அப்ப தொடர்ந்து படிங்க.

என்னது அணுகியதேயில்லையா? என்னனு தெரிஞ்சுக்கனும் இல்ல, அதனால நீங்களும் தொடர்ந்து படிங்க. :)


சென்னையிலிருந்து பெங்களூர் வந்து பிறகு, அங்க இருந்த வங்கி அக்கவுண்டை தொடவேயில்லை, ஏன்னா இங்கயுள்ள கமபனி வேற ஒரு வங்கில கணக்கு தொடங்கி குடுத்துடுச்சு. ஒரு வருடம் கழிச்சு கல்யாணம் ஆகி, தங்கமணி வந்துபிறகு நிதி நிர்வாக கணக்குகள் எல்லாம் முறைப்படி ஒப்படைக்கிறப்ப தான், இந்த வங்கி கணக்கு பத்தி பேச்சு வந்தது.

சரி, அந்த கணக்கை இங்க உள்ள கிளைக்கு மாத்தி விடலாம்னு தங்க்ஸை நேர்ல கூட்டிட்டு வங்கிக்கு போயாச்சு. அம்மணியும் நானும் அவங்க குடுத்த பேப்பர்ல எல்லாம் என் வீட்டு நம்பர், தெரு பெயர், எத்தனாவது சந்து, என் பிளாக் அட்ரஸ் எல்லாம் ரொப்பி குடுத்துட்டு வந்தாச்சு. அவங்களும் பொறுப்பா உங்க புதிய அக்கவுண்ட் நம்பர் இது தான்!னு பத்து நாள் கழிச்சு கொரியர் அனுப்பிட்டாங்க.

இணைய வங்கி சேவைக்கு பாஸ்வெர்டு அனுப்புங்க!னு அதுக்கு ஒரு விண்ணப்பம் குடுக்க, அந்த பிரஹஸ்பதி அனுப்பிய பாஸ்வேர்டு வெச்சு திறந்திடு சிசேம்!னு என் அக்கவுண்டை திறக்க முடியலை. இப்ப தான் ஒரு சிக்கல். என் பழைய ATM (அழகிய தமிழ்மகன் இல்லை) கார்டு காலாவதி ஆகிடுச்சு. அத்தோடு நானும் மறந்திட்டேன், தங்கமணியும் மறந்தாச்சு (அதிசயம் தான்!).


இப்ப தீடிர்னு தங்க்ஸ்க்கு நியாபகம் வந்து, வீட்ல வெட்டியா தானே இருக்கீங்க, ஒழுங்கா அந்த வேலைய முடிங்க!னு அன்பா சொல்ல, ஓடு! அந்த பேங்குக்கு!னு போயாச்சு. அங்க இருந்த ஒரு கஷ்டமர் கேர் அம்மணியை உதவி கேட்டேன். சந்தன கீத்து எல்லாம் வெச்சு பாக்க பாவனா மாதிரி நல்லா இருந்தாங்க, ஆனா லிப்ஸ்டிக் தான் கொஞ்சம் ஓவர்! என்பதெல்லாம் இந்த பதிவுக்கு அவசியமில்லாத விஷயம். அவங்களும் போன்ல பேசுங்க!னு நம்பர் போட்டு குடுத்தாங்க. ஒன்று! ரெண்டு!னு அவ்வையார் முருகனை வரிசைபடுத்தி பாடின மாதிரி போன்ல அந்தம்மா சொன்ன எல்லா நம்பரையும் அமுக்கியாச்சு. ஒரு பயலும் அந்த பக்கம் எடுக்க மாட்டேங்கறான். அவங்களும் நம்ம மாதிரி ஆபிஸ்ல பிளாக் எழுதறாங்க போலிருக்கு.

நீயே பாரு தாயி! உங்காளுக வேலை செய்யற லட்சணத்த!னு அவங்களவிட்டே டயல் பண்ண வெச்சேன். வெண்டகாய்க்கு ஏன் லேடிஸ் பிங்கர்!னு வெள்ளகாரன் பேரு வெச்சான்?னு அப்ப தான் புரிஞ்சது. சோக்கா சொல்லி இருக்கான்யா இங்க்லீஸ்காரன். அந்த அம்மணியும் ரொம்ப நேரம் ட்ரை பண்ணி கடைசியா ஒரு ஆளை லைன்ல புடிச்சுடுச்சு. போன் இப்ப என் கைக்கு வந்தது.

எதிர்முனை, "உங்க அக்கவுண்ட் நம்பர் சொல்லுங்க பாப்போம்".

சொன்னேன்.

நீங்க பிறந்த தேதி..? (பர்த்டே கேக் அனுப்ப போறாங்களா? அட செக் பண்றாங்களாம்!)

சொன்னேன்.

கடைசியா நீங்க பண்ண ஒரு மூணு டிரான்ஸாக்ஷன் என்னனு சொல்லுங்க பாப்போம்?

கடைசியா எழுதின மூணு பதிவை கேட்டா சொல்லி இருப்பேன். இருந்தும் தட்டு தடுமாறி சொல்லிட்டேன்.

இல்லயே அம்பி! தகவல் ஓரளவு தான் கரக்ட்டா இருக்கு. சரி, கார்டு நம்பர் சொல்லுங்க.

அதுக்கு தான் கண்ணு நான் போன் பண்ணி இருக்கேன். புது கார்டு வேணும்.

அடடா! நாங்க அதெல்லாம் கவனிக்கறதில்லை. நீங்க பேங்குலயே ஒரு விண்ணப்பம் குடுங்க. வேற ஏதேனும் வேணுமா?

ஆமா! இன்னும் டிபன் சாப்டலை. ஒரு மசால் தோசை கிடைக்குமா?

எதிர்முனை சிரிப்பு சத்ததுடன் தூண்டிக்கப்பட்டது. நான் மறுபடி பாவனாவிடம் சென்று முறையிட, அடடா!னு ஒரு உச்சு கொட்டி பக்கத்து சீட்டில் இருந்த ரீமா சென்னிடம் உதவி கேட்டது. மறுபடி ஒரு விண்ணப்பம் எழுதி குடுத்தாச்சு! பத்து நாளைக்குள்ள உங்களுக்கு தபால் வரலைன்னா என் பெயரை நயன் தாரானு மாத்தி வெசுக்கறேன்னு பாவனா சூளூரைக்க, மெய் சிலிர்த்து விட்டது எனக்கு.

சொன்ன மாதிரியே நாலாவது நாளில் தபால் வந்து விட, ஐந்தாம் நாள் பாவனாவே செல்பேசி உறுதி செய்ய, நான் இருக்கறது இந்தியாவில் தானா?னு ஆச்சர்யம் தாங்க முடியலை. அக்கவுண்ட் பேலன்ஸ் செக் பண்ணினா இரு நூற்றி இருபதைந்து ரூபாய் பாவனா பேரை சொல்லி அந்த பேங்குக்கு மொய் எழுதப்பட்டு இருந்தது. அட பாவிகளா! இந்த சேவை ஓசி!னு இல்ல நான் நினைச்சேன். இப்ப கார்டு வந்தாச்சு, ஆனா இணைய சேவைக்கு பாஸ்வேர்டு வரலை.

திக்கற்றவர்க்கு பாவனாவே கதி!னு மறுபடி படையெடுக்க இந்த தடவை போன்லேயே விண்ணப்பம் பெற்று கொண்டனர். இந்த தடவையும் மொய் எழுதனுமா?னு கேக்க, இல்ல, இது இலவசம் தான்!னு அம்மணி திருவாய் மலர்தருளினாங்க.

சொல்ல மறந்துட்டேனே! இந்த தடவை லிப்ஸ்ட்க் அளவா போட்டிருந்தாங்க. :)

Saturday, August 09, 2008

பிறந்த நாள் வாழ்த்து சொல்லேலோ ரெம்பாவாய்

அடக்கத்தின் திருவுருவம்,ஆன்மீக செம்மல், இளிச்ச சாரி சிரித்த முகம், ஈகை குணம், உரத்த சிந்தனை, ஊக்கமிகுந்த மனம், எளிய நடை, ஏற்றமிகு செயல்கள், ஐய்யமில்லா மனம் என நம் எல்லோர் மனத்தையும் கவர்ந்து, பந்தல் போட்டு பாசுரம் பாடுபவரும், சுப்ரபாதம் பாடி, முருகனருளில் காவடி எடுத்து, சிவன் பாட்டில் தேவாரம் ஓதி, கந்தனுக்கு அலங்காரம் செய்து கண்ணனுக்கும் பாட்டு பாடி, மறக்காமல் ஆச்சார்யருக்கு தலை வணங்குபவருமான கேஆரெஸ் என அன்புடன் அழைக்கபடும் கண்ணபிரான் ரவிசங்கருக்கு இன்று(9th aug) பிறந்த நாள்.

(picture source: மலேசிய மாரியாத்தா :-)

இது நாள் வரை நமக்கு வாழைப் பந்தல் தான் தெரியும். ஆனால் இந்த மனுஷன் வந்த பிறகு மாதவி பந்தல்னு ஒன்னு இருக்கு!னு தெரிய வந்தது.
அண்ணனுக்கு இத்தனை பிளாக்கா?னு நீங்கள் எண்ணும் போதே பிள்ளையாருக்கு ஒரு பிளாக், அனுமாருக்கு ஒரு பிளாக்னு அண்ணன் ஆரம்பிக்க கூடிய சாத்திய கூறுகள் அதிகம். அதனால் சீக்ரம் வாழ்த்திட்டு, சக்ர பொங்கல் வாங்கிகுங்க.

மறக்காம புளியோதரையும் வாங்கிகுங்க.

(picture source:neivedyam.blogspot.com)
இது ஸ்பெஷலா கேஆரெஸ் அண்ணனுக்கு ஜிரா அண்ணன் தர சொன்னது:
பழனி பஞ்சாமிர்தம். :-)

(picture source: www.palanitemples.com)

Friday, August 01, 2008

இப்படிக்கு பெங்களூரிலிருந்து அம்பி

கடந்த வெள்ளி லீவு எடுத்து கொண்டு சென்னை சென்ற பின், முழுதுமாக என்னை ஊடகங்களிடமிருந்து தொடர்பற்றவனாக்கி கொண்டாலும் மதியம் என் ஆபிஸ் நண்பனிடம் வந்த குறுஞ்செய்தி என்னை அவசரமாக டிவி பார்க்க சொன்னது. நடந்து போன விபரீதமும் புரிந்தது. அடுத்த நாள் முந்தைய நாள் நிகழ்வுகள் ச்சும்மா டிரெயிலர் தான் என்பதும் அறிந்து கொள்ள முடிந்தது.

பொட்டலம் பொட்டலமாக வைத்தவர்களது கொள்(ல்)கை வெற்றி பெற்றதா? என அதையும் ஈமெயில் செய்தால் நன்றாக இருந்திருக்கும். விடுமுறை முடிந்து சென்னை சென்ட்ரல் வந்தால் ஒரே களேபரம். என் மாமியார் எனக்கு கட்டி குடுத்த சப்பாத்திகளை எல்லாம் போலிஸ்காரரிடம் காட்ட வேண்டி இருந்தது. தொட்டுக்க ஒன்னும் இல்லையா?னு அவர் கேட்டு விடுவாரோ என எனக்கு பயம். அவர் பக்கத்தில் இருந்த நாய் வேறு என்னை பார்த்து சினேகமாக வால் எல்லாம் ஆட்டியது. படக்குனு சப்பாத்தி பாக்கெட்டை கவ்வின்டு ஓடிட்டா என்ன செய்வதுனு என் கவலை.

பாதுகாப்புக்கு இருந்த அத்தனை காவல்துறையினர் முகத்திலும் ஒரு வித பதட்டம் தெரிந்தது. வீரம் என்பது பயம் இல்லாத மாதிரி நடிப்பது!னு சும்மாவா சொன்னார்கள். பாவம் அவர்களுக்கும் குழந்தை குட்டி இருக்குமே! இந்த பாமை செயலிழக்க செய்யும் வீரர்களுக்கு எந்த ஒரு நிறுவனமும் இன்ஷுரன்ஸ் அளிக்க முன்வருவதில்லையாம். வருத்தப்பட வேண்டிய விஷயம்.

பெங்களூரில் மக்கள் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீள வில்லை. பஸ் ஸ்டாபில் ஒருவரை ஒருவர் சந்தேகத்துடன் பார்த்து கொள்கிறார்கள். தியேட்டர்களில் எல்லாம் ரூவாய்க்கு மூனு டிக்கட்னு கூவாத நிலை தான். மெகா மால்களில் மக்கள் செல்ல தயங்குகிறார்கள். அனேகமாக பெங்களூரில் இன்று பசுபதி நடித்த குசேலன் ரீலிஸ் செய்வார்கள் என எண்ணுகிறேன். அதுல ரஜினி கூட வந்து போயிருக்காராம். அதான் ரஜினி மாப்பு மன்னிப்பு எல்லாம் கேட்டு இருக்காரேன்னு பாத்தா, அவர் இங்கு நேர்ல வந்து மன்னிப்பு கேக்கனுமாம். இது கன்னட கண்மணிகளின் கோரிக்கை(மிரட்டல்னு கூட வாசிக்கலாம்).

இவ்வளவு நாளாக மன்னிப்பு கேட்க தோன்றாத எண்ணம் தீடிர்னு ரஜினிக்கு தோணியது ஒன்றும் ஆச்சர்யம் இல்லை. இதே போல தெரியாம குண்டு வெச்சுட்டோம்!னு எதிர்காலத்தில் அவர்களும் மன்னிப்பு கேட்கலாம். நமக்கு தான் பெரிய மனசாச்சே! கேசை ஜவ்வாக இழுத்து மன்னித்து விடுவோம். ரெண்டு வாரத்துக்கு குசேலனில் நியூட்டன் தியரி, ஐன்ஸ்டீன் தியரினு திறனாய்வு பதிவுகளும், பசுபதிக்கு பல்பு, மீனாவுக்கு அல்வா, ரஜினிக்கு ஒரு திறந்து மூடிய கடிதம்னு பதிவுகள் தமிழ்மணத்தில் வலம் வரலாம். வாழ்க இந்திய ஜன நாயகம்!

Tuesday, July 22, 2008

அமுதுக்கும் தமிழ் என்று பெயர்!

மற்ற டிவிகளை ஒப்பிடும் போது விஜய் டிவியில் பல உருப்படியான, சிந்திக்க வைக்கும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறார்கள். அனேகமாக வாரத்தில் ஒரு நாலு நாட்கள் யாராவது சோபாவில் உட்கார்ந்து கொண்டு பேசுகிறார்கள். இதை மாதிரி டாக் ஷோ நடத்த ரொம்பவே தில்லு வேணும்.

  1. முதலில் சரியான நிகழ்ச்சி நடத்துனர்(Anchor) வேணும்.
  2. மக்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் நிகழ்ச்சியை வடிவமைக்க தெரியனும்.
  3. மூணாவது, நல்ல ஸ்டூடியோ தளம் அமையனும். ஒரு சில டிவிகள் வாய்கால் ஓரங்களில் எல்லாம் பேட்டி எடுக்கிறார்கள். பேக்ரவுண்டில் ஒருத்தர் சொம்பை தூக்கி கொண்டு நமக்கு தரிசனம் தருகிறார்.

இல்லாட்டி பொதிகையில் ஒரு காலத்தில் வந்த செவ்வாய் கிழமை நாடகம் மாதிரி ஆகி விடும். :)

நெல்லை கண்ணனை குழு தலைவராக கொண்டு "தமிழ் எங்கள் பேச்சு!" என ஒரு நிகழ்ச்சி தினமும் இரவு பத்து மணிக்கு நடந்து வருகிறது. பல்வேறு கட்டங்களாக தமிழகத்தின் தமிழ் ஆர்வலர்களை வடிகட்டி இப்போ நிகழ்ச்சி களை கட்ட தொடங்கி விட்டது. வெகு காலத்துக்கு பிறகு இனிய தமிழை அதுவும் தனியார் டிவியில் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. நெல்லை கண்ணன் அவர்களின் ஆழ்ந்த தமிழறிவு, தங்குதடையற்ற தமிழ் பேச்சு, திருகுறளாகட்டும், அக/புற நானூறு, சிலப்பதிகாரம், என வெள்ளம் போல பாய்ந்து வருகிறது.

திரு.கண்ணன் நாவில் பாரதியும், பாவேந்தரும் ரவுண்டு கட்டி வருகிறார்கள். போட்டியில் பங்கு பெறுபவர்களும் சளைத்தவர்களாக தெரியவில்லை. கவிதை சுற்று, எதுகை மோனை சுற்று என தெள்ளமுதாய் தமிழ் பிரவாகமெடுத்து வருகிறது. ஐந்து நிமிடங்களுக்கு மேல் இப்போதெல்லாம் எந்தவொரு நிகழ்ச்சியையும் பாக்க முடியாத நிலையில், இது போன்ற நிகழ்ச்சிகள் அத்தி பூத்தாற் போல வருவது மனதுக்கு இதமாக உள்ளது.

பல புதிய தமிழ் சொற்களின் அறிமுகம் கிடைத்தது. அவர்கள் முன் இலக்கியமோ, பின் இலக்கியமோ என்னை மாதிரி பட்ஜட் பத்மநாபனுக்கும் புரியும்படி பேசினார்கள்! எனபது இங்கு குறிப்பிடத்தக்க விஷயம். அதுவும் தமிழ்மணத்துக்கு ஒவ்வாத சொற்கள் அறவே இல்லாமல் பின்னிலக்கியமும் பேசபடுகிறது. ஒரு வேளை *** தான் பின்னிலக்கியமோ? என்ற எனது மாயை விலகியது. நிகழ்ச்சியை வெகு சுவாரசியமாக சின்ன சின்ன தகவல்களுடன் நெல்லை கண்ணன் கொண்டு செல்லும் அழகே அழகு. நிறை குடம் என்றும் தளும்புவதில்லை.

விஜய் டிவியின் கிரியேட்டிவ் டீமுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். நேரம் இருந்தால் நீங்களும் கண்டு களியுங்கள்.

Friday, July 18, 2008

கோபிகாவுக்கு கல்யாணமாம்!

அம்பியை எப்படி தான் மறக்க போறேனோ?


அம்பியவே நினைச்சுட்டு இருக்காத! என்ன புரிஞ்சதா?


வெட்டுப்படுவது கேக் மட்டுமல்ல...

பல கோடி இதயங்களும் தான்...


எங்கிருந்தாலும் வாழ்க!

ஸ்டிக்கர் பொட்டுடன் வாழ்க!
டிஸ்கி: கோபிகா போலவே, எனக்கும் துக்கம் தொண்டைய அடைக்கறது. அதனால் இந்த வாரம் ஒன்னும் எழுத முடியலை.
பி.கு: தங்கமணி இந்த பதிவ பாத்து, எதிர்வினை பதிவு போட்டா இப்படி தான் இருக்கும். ஹிஹி.

Friday, July 11, 2008

பக்கத்து சீட்டுல பிளாகர் உட்காந்தா....-II

ஏற்கனவே இந்த பதிவின் மூலம் உங்களுக்கு நன்கு அறிமுகமான ஜம்புலிங்கம், வெள்ளிகிழமையும் அதுவுமா அவருக்கு ஏற்பட்ட சில சந்தேகங்களை எனக்கு தனிமடலில் கேட்டுள்ளார். எனக்கும் பதிவிட ஒரு விஷயம் (நல்லா பாருங்கண்ணா! மேட்டர்னு எழுதலை!) கிடைத்தது.
மெயில் எல்லாம் சரிபடாதுன்னு சாட்டுல வர சொன்னேன்.

அம்பி, நானும் ஒரு வலைப்பூ தொடங்கறத்துக்கு முன்னால சில சந்தேகங்கள் இருக்கு.

வெரிகுட், கேளுங்க ஜம்பு.

என் அனுபவத்தையெல்லாம் கூட பதிவா போடலாம் தானே?

யூ மீன் சுற்றுலா, வேலை சம்பந்தமாவா?

ஆமா! அதே தான்!

(நல்ல வேளை, நான் வேற நினைச்சேன்) ஓ! தாராளமா பதிவிடுங்க. என்ன எழுதினாலும், நீங்க ஒரு இணைய ஜர்னலிஸ்ட், அத மனசுல வெச்சுட்டு எழுதுங்க.

என்னாது இணைய ஜர்னலிஸ்ட்டா?

இத பாருங்க ஜம்பு, முதல்ல உங்கள நீங்க நம்பனும், அப்ப தான் மத்தவங்க நம்புவாங்க. சரியா? உங்களுக்கு பிடிச்ச நடிகர் யாரு?

ஜிம் கேரி.

நல்லதா போச்சு! ஜிம் கேரியின் மறுபக்கம்னு ஒரு பதிவ போட்ரலாம். மக்கள் விரும்பினா ஜிம் கேரியின் இடது பக்கம், வலது பக்கம்னு ஒரு சீரிஸ் கூட எழுதலாம்.

அட சூப்பர் ஐடியா அம்பி! இந்த சூடான இடுகைன்னா என்ன அம்பி?

அதுவா? உங்க பதிவை எத்தனை பேரு கமண்டு போடாம படிச்சுட்டு போனாங்கனு காட்டறது தான் சூடான இடுகை. இதுல வரனும்னா நீங்க ரூம் போட்டு யோசிச்சு பதிவுக்கு தலைப்பு வைக்கனும்.

அப்படியா?

ஆமா! இப்போ நீங்க சமையல் குறிப்புகளை பத்தி எழுத போறிங்கன்னு வெச்சுபோம். என்ன தலைப்பு வைப்பீங்க?

வேற என்ன, ஜம்புஸ் கிச்சன் கார்னர்!

அதான் இல்லை, சட்டிக் கதைகள் அப்படின்னு தலைப்பு வைக்கனும். நீங்க சட்டியே இல்லாம மைரோவேவ்ல கூட சமைக்கலாம். கடைசில இதே பதார்தத்தை சட்டியிலும், அதாவது வானலியிலும் சமைக்கலாம்!னு யதார்த்தமா ஒரு டிஸ்கி போட்ருங்க. இதான் டெக்குனிக்கு. புரிஞ்சதா?

இப்போ புரியுது.

வெரிகுட். உங்க இஷ்ட தெய்வம் யாரு? சிவனா? விஷ்ணுவா? இல்ல முருகனா?

ஐயப்பன்.

தப்பிச்சீங்க. ஐயப்பன் எல்லாருக்கும் வேண்டியபட்டவர் தான். சாமியே சரணம்!னு ஒரு பக்தி வலைபூ பெயரை துண்டு போட்டு வெச்சுகுங்க. பின்னாடி உதவும்.

ஓகே அம்பி, வேற ஏதாவது சந்தேகம்னா மறுபடி கேக்கறேன்!னு சொல்லிட்டு ஜம்பு எஸ்கேப் ஆயிட்டார். உங்களுக்கும் ஏதாவது யோசனை தோணிச்சுனா சொல்லுங்களேன், பாவம் ஜம்புவுக்கு உதவியா இருக்கும்.

Wednesday, July 09, 2008

வங்கி தேர்வு - நடந்தது என்ன?

நீங்கள் எப்போதாவது இந்த வங்கி தேர்வுகள் ஏதேனும் எழுதியதுண்டா? ஆம்! எனில் மேற்கொண்டு படியுங்கள். இல்லையெனில் என்னவென்று தெரிந்து கொள்ள மேற்கொண்டு படியுங்கள்.(அவ்ளோ லேசுல விட்ற மாட்டோம் இல்ல).
80-90களில் வங்கியில் வேலை செய்வது என்பது பலருக்கு ஒரு லட்சிய கனவாகவே இருந்தது. பிஎஸ்ஆர்பி(BSRB) என்ற வார்த்தை மந்திரம் போல உச்சரிக்கப்பட்ட காலம் அது. அந்த போட்டி தேர்வுக்கு ஏதோ அலங்க நல்லூர் ஜல்லிகட்டுக்கு காளையை தயார் செய்வது போல சிலர் பத்தாவதில் இருந்தே தம் மக்களை தயார் செய்தவர்களும் உண்டு.

கணக்கில் ஆழ்ந்த அறிவு, நுண்ணிய லாஜிக்கல் அறிவு, ஊறுகாய் போல கொஞ்சம் ஆங்கில அறிவு இருந்தால் ஞான பழம் எனக்குத் தான்!னு சொல்லி விடலாம். கணக்குனா சும்மா எட்டில் ஐந்து போனால் மிச்சம் எவ்வளவு? ரகம் இல்லை.
நான் குறிப்பிட்ட எட்டு, ஐந்து என்பதை வெறும் நம்பர்கள் என நினைவில் கொள்க.

1) சென்னையிலிருந்தும், மதுரையிலிருந்தும் இரண்டு வேறு ரயில்கள் மணிக்கு முறையே 50, 40 கிமீ வேகத்தில் வந்தால் அவை இரண்டும் எங்கு சந்தித்து கொள்ளும்? - இது ஒரு வகை.

2) ரமா, ஸ்வேதா, ரம்யா, அக்ஷிதா, ஷாலினி ஆகிய ஐந்து பேரும் வட்டமாக உக்காந்து கேசரி சாப்பிட்டால், ரமாவுக்கு பக்கத்தில் ரம்யா இல்லை, ஷாலினிக்கு பக்கத்தில் ஸ்வேதா தான் இருக்கா, அக்ஷிதாவுக்கு கேசரி பிடிக்காது, அப்போ அம்பி யாரு பக்கத்துல உக்காந்து இருப்பான்? - இது லாஜிக்கல் ரீஸனிங்கில் ஒரு வகை.

3) ரூம் போட்டு யோசித்து ஐந்தாண்டு திட்டத்தை நேரு தீட்டியதால் இந்தியாவுக்கு விளைந்த நன்மைகளை பத்தி ஒரே பீட்டரா எடுத்து விடு - இது ஆங்கில அறிவை சோதிக்க ஒரு வழிமுறை.

இதற்கென ப்ரத்யேக வகுப்புகள் எல்லாம் அனல் பறக்கும் பயிற்சிகள் அளித்து வந்தன. கேள்விக்கான விடைகள் ஏ/பி/சி/டி தான் (டிபிசிடி இல்லை). எங்க ஊரில் இவ்வகை வகுப்பு ஒன்று ரொம்பவே பிரசித்தம். நெல்லை மாவட்டத்திலேயே எங்க ஊரில் உள்ள அந்த குறிப்பிட்ட வகுப்பில் பயிற்சி எடுக்கவென்றே பலர் தங்கி படித்த காலங்களும் உண்டு. உங்க ஆட்கள் கொஸ்டின் பேப்பரை லவட்டி விடுவீர்களோ? என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை. எல்லாம் திட்டமிட்ட பயிற்சிகள் தான்.

இவ்வகை தேர்வு மையங்கள் பெரும்பாலும் பெரு நகரத்தில் உள்ள கல்லூரிகளாக தான் இருக்கும். பையங்கள் எல்லாம் ஏதோ ஜாலி டூர் போவது போல போவார்கள். பெண்கள் தேர்வு எழுத கிளம்பினால், உஜாலா சொட்டு நீலம் போட்டு வெளுத்த வேட்டியும், முழங்கை வரை மடித்து விட்ட வெள்ளை சட்டையுடன் அப்பாவோ, தம்பியோ (வெட்டியாக இருக்கும் பட்சத்தில்) முந்தைய நாளே மஞ்சபையுடன் கூடவே கிளம்பி விடுவார்கள்.
முப்பிடாத்தி அம்மன் கோவில் குங்குமம், அதற்கு மேல் திருனீறு, பின் ஒரு சாந்து பொட்டு, அதற்க்கு மேல் வீட்டின் பெரியவர்கள் யாரேனும் இட்டு விட்ட வெற்றி திலகம் சகிதமாக தேர்வு மையத்துக்கு ஒரு ஸ்பெஷல் எபக்டோடு வருவார்கள்.

வாம்மா மின்னல்! இது எத்தனையாவது படையெடுப்பு?னு ஏதேனும் ஒரு பையன் சவுண்டு விட்டா, பதிலுக்கு வெள்ளை வேட்டி விடும் சவுண்டுக்கு ஏரியாவே அதகளபடும். தப்பிச்சோம்! பிழைச்சோம்!னு அந்த பையன் எக்ஸாம் எழுதாமலேயே எஸ்ஸாகி விடுவான்.

சும்மா ஆசைக்கு ஒரு தரம் நானும் தேர்வுக்கு போய் நட்ராஜ் பென்சிலால் கொஸ்டின் பேப்பரில் ஷேடு அடித்து விட்டு வந்தேன். நல்ல வேளை தேர்வாகவில்லை, பேங்குல உக்காந்து பிளாக் எல்லாம் எழுத/படிக்க முடியுமோ?

இனிமே இவ்வகை தேர்வுகளுக்கு ஹால் டிக்கட்டுடன் பணம் கட்டிய ரசீது, ரசீது தந்த காஷியரின் பெயர், முகவரி, அவருக்கு எத்தனை குழந்தைகள்? போன்ற விபரங்களும் தெரிந்து கொண்டு போகனும் போலிருக்கு. அமெரிக்காவில் இருக்கும் வங்கிகளுக்கு பாங்கிங் சாப்ட்வேர் எழுத தெரிந்த நம்மால், நிஜமான சமீபத்தில் (போன வாரம் தான்) இங்கு ஒரு வங்கி தேர்வை கணினிமயமாக்க முடியலை என எண்ணும் போது சிலபல தெலுங்கு பட டைடில்கள் எல்லாம் வாய்க்கு வருகிறது.

Friday, July 04, 2008

எதிரொலி

சன் டிவியும் விஜய் டிவியும் தமிழனின் வரவேற்பறையில் நுழையாத என்பதுகளில் தூர்தர்ஷன்காரர்கள் டில்லியிலிருந்து, போனா போகட்டும் என அவ்வப்போது தமிழ் நிகழ்ச்சிகளையும் நடத்தி கொள்ள அனுமதித்து இருந்த காலம்.
உடனே வாசகர்கள் கிரேன் ஷாட், காமிரா ஆங்கிள் எல்லாம் யோசித்து பார்க்க வேண்டாம்.

திங்கள் கிழமைன்னா எல்லா மொழி பாடல்களும் வரும் தமிழ்மணம் போன்ற சித்ரஹார், செவ்வாய்னா ஒரு ரூம் செட்டுக்குள்ளேயே மொத்த கதையையும் நகர்த்தும் குடும்ப நாடகம், புதனும் வியாழனும் சில மொக்கை பேட்டிகள், வெள்ளி கிழமைன்னா ஒளியும் ஒலியும், சனி கிழமைன்னா ஸ்லீவ்லஸ் ஸ்வட்டர் போட்ட ராஜேஷ் கண்ணாவும், பன் கொண்டை போட்ட ஷர்மிளா டாகூரும் தள்ளி தள்ளி நின்னு டூயட் பாடும் ஹிந்தி படம், ஞாயிறுன்னா காலையில் ரங்கோலி, பின் ராமாயணம், சாயந்திரம் மனாளனே மங்கையின் பாக்கியம் என்ற புத்தம் புதிய திரைபடம் என மக்களை மெய்மறக்க வைத்து இருந்தது தூர்தர்ஷன்.

இதுல வியாழ கிழமைன்னு நினைக்கிறேன், ஒரு வார நிகழ்ச்சிகளை சில வாசக கண்மணிகள், விமர்சனம் என்ற பெயரில் டெம்ளேட் கடிதங்கள் போடுவார்கள். அந்த நிகழ்ச்சிக்கு பேர் எதிரொலி. காமடி நிகழ்ச்சி இல்லாத குறையை இந்த நிகழ்ச்சி போக்கி கொண்டிருந்தது என சொல்லலாம்.

அந்த நிகழ்ச்சிக்குன்னே பாலசந்தர் ப்ரேம் போட்ட கண்ணாடி அணிந்த ஒருத்தர் தான் பதில் சொல்ல வருவார். நியூஸ் படிக்க செலக்ட் செய்யாமல், இந்த எதிரொலிக்கு கடிதம் படிக்க ஒரு அம்மணியை அனுப்பி இருப்பார்கள். ஏன்னா அப்ப ஷோபனா ரவியின் புடவை டிஸைனுக்கு தான் மவுசு.

பெரும்பாலும் எதிரொலிக்கு வரும் கடிதங்கள் எல்லாம் ஜிங்ஜக்காக தான் இருக்கும்.
உதாரணமாக, போன வாரம் செவ்வாய் இரவு 7 மணிக்கு வயலும் வாழ்வும் நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அந்த நிகழ்ச்சியில் இயற்கை உரம் பற்றி எடுத்துரைத்த நபர் சட்டை கூட போட நேரமில்லாமல் உள்பனியனோடு வந்திருந்தது நெஞ்சை நெகிழ செய்தது! என்று விழுப்புரத்திலிருந்து வீராச்சாமி என்ற நேயர் எழுதியுள்ளார்!னு அந்தம்மா ஒரு பிட்டை போடுவாங்க.

உடனே நம்மாளு ஒரு தெய்வீக சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டு, அடுத்த தடவை அவரை சட்டை போட்டு பேட்டி குடுக்க செய்கிறேன் அப்படின்னு சமாளிப்பார்.

ஏன் செவ்வாய்கிழமை நாடகங்களை ஒரே ரூமில் எடுக்கறீங்க?னு ஜாம்பஜார்லேருந்து ஜக்கு என்ற வாசகர் கேட்டு இருக்கார்.

இது ஒரு நல்ல கேள்வி. இப்ப குடும்ப விஷயங்கள்னா அது நாலு சுவத்துகுள்ள தான் இருக்கனும் என்பதை தான் அந்த நாடகத்தின் இயக்குனர் சிம்பாலிக்கா சொல்லி இருக்கார்.
ஜாம்பஜார்ல தக்காளி ரொம்ப சீப்பா கிடைக்குமாமே! தக்காளி தொக்கு போட்டா இட்லிக்கும், தயிர் சாததுக்கும் செம காம்பினேஷன் மிஸ்டர் ஜக்கு! அப்படினு ஒரே போடா போடுவார் நம்மாளு.

இப்ப இந்த நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருக்கும் ஜக்கு, கேள்வியை விட்டுவிட்டு தக்காளி வாங்கி தொக்கு போட ஆரம்பிச்சுடுவார்.

டிஸ்கி: தமிழ்மணத்துல சில கேள்வி பதிவுகளை படித்து விட்டு பின் அதுக்கு பதில்களையும், பதிலுக்கு பதிலையும், பதிவா படிக்கும் போது இந்த எதிரொலி நிகழ்ச்சி எனக்கு நியாபகத்துக்கு வரவில்லைன்னு சொல்லிக்கறேன். :))

Wednesday, July 02, 2008

புலம் பெயர்ந்த NRI


சென்னைக்கும் பெங்களூருக்கும் நான் சீசன் டிக்கட் எடுத்து வைத்திருப்பதால் தான் லாலுவால் துண்டு விழாமல் ரயில்வே பட்ஜெட் போட முடிகிறது என இப்பதிவை ஆரம்பித்தால் இதுவும் பட்டர்பிளை எபக்ட் தான் என பின்னூட்டம் விழற வாய்ப்புக்கள் பிரகாசமாக இருக்கிறபடியால் நேரே மேட்டருக்கு வருகிறேன். (மேட்டர் என்றால் விஷயம் என இங்கு பொருள் கொள்ளவும், என்ன செய்ய? தமிழ்மண நிலமை அப்படி)

உலக தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக திரைக்கே வராத ஏதோ ஒரு படம் ஓடிகொண்டிருக்கும் ஒரு இனிய மாலை வேளையில் தங்கமணியின் அப்பாவழி பாட்டியோட தம்பி பையன் டெக்சாஸிலிருந்து தம்பதி சமேதராக எங்களுக்கு காட்சி குடுக்க விழைகிறார் என தொலைபேசி செய்தி கேட்டு, நான் அவருக்கு என்ன முறை?னு யோசிக்கும்முன்னரே எங்கள் தெருவுக்கு எப்படி வரனும் என்று மறுபடி போன் கால்.

இந்த இடத்தில் தங்க்ஸின் ஏரியா பத்தி ஒரு சிறுகுறிப்பு. ஆட்டோ பிடிக்கவே ஆட்டோல தான் போகனும். மதுரை மீனாட்சி கோவிலில் கூட தெற்கு கோபுரம் வழியா நுழைஞ்சு, வடக்கு கோபுரம் வழியா வெளிய வந்து சிம்மக்கல் பஸ் ஸ்டாப்புக்கு வந்து சேர்ந்து விடலாம். ஆனால் இந்த ஏரியாவில் எந்த தெருவில் நுழைஞ்சு எந்த பக்கம் வந்தாலும் மறுபடி அதே தெருவுக்கு வந்து விடுவோம். ஒரு பிரபல பதிவர் கூட இதே ஏரியா தான்! என்ற க்ளூவுடன் இந்த இடத்தில் நிறுத்தி கொள்கிறேன்.(இதுக்கே இருக்கு எனக்கு மண்டகபடி).

ஒரு வழியாக அந்த குடும்பம் எங்கள் தெரு முக்கு வரைக்கும் வந்து விட்டது. நேர வர வேண்டியது தானே? மறுபடி ஏதோ குழப்பம் ஆகி, சத்யமா முடியலை!னு மறுபடி ஒரு போன். சரின்னு என் மாமனாரே எதிர் கொண்டு அழைத்து வந்து சேர்ந்தார்.


சரி பாவம்!னு ஆளுக்கு ஒரு சொம்பு தண்ணி காட்டினோம். அவங்க வீட்டு அம்மணி உடனே இது பாயில்டு வாட்டரா?னு புருவத்தை நெளித்தார்.
அக்குவா கார்டு வாட்டர்னு பதில் வந்த பிறகும் பல்ராம் நாயுடு பைனாக்குலரில் பாப்பது போல ஒரு லுக் விட்டுவிட்டு குடித்தார். பரஸ்பர ஷேம உபயஷேமம் எல்லாம் விசாரித்து கொண்டோம்.

அந்த டெக்சாஸ் பார்ட்டி என்ன பேசினாலும் தமிழிலும், பின் அதையே ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்து மேஜர் சுந்தர் ராஜன் பேசுவது போல பேசினார்.

"நைஸ் மீட்டிங்க் யூ! உங்கள பாத்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம். "

"எங்க வேலை பாக்கறீங்க? வேர் ஆர் யூ வேர்க்கிங்க்?"

என்னடா நம்மள வெச்சு காமடி கீமடி எதுவும் பண்றாங்களா?னு எனக்கு முதலில் சின்ன டவுட்டு. சரி இவங்க வழியிலேயே போவோம்!னு நானும் மே.சு.ரா பாஷையில் ஆரம்பித்து விட்டேன்.

"இப்ப உங்களுக்கு லீவா? ஆர் யூ இன் ஹாலிடே?"
"யெஸ்! ஆமா".

ஆஹா! அவனா நீயி? சரி, ஒரு வழி பண்ணிடறேன்னு தொடர்ந்து போட்டு தாக்க, சிரிப்பை அடக்க முடியாமல் தங்கமணி உள் அறைக்கு ஓடி விட்டார்.
அப்படி இருந்தும் அந்த டெக்சாஸ் அம்மணி விடாமல் என் தங்க்ஸ் பின்னாடியே போய் அமெரிக்கா தல புராணம் பாட ஆரம்பித்து விட்டார். தல புராணம் என்றால் அஜித் வாழ்க்கை வரலாறு இல்லைனு இங்க சொல்லிக்க கடமை பட்டுள்ளேன்.

அங்க வீட்டுகுழாயை திறந்தா பாலும் தேனுமா வரும். இந்தியன் ஸ்டோர்ஸ்ல எல்லாம் கிடைக்கும்னு அம்மணியின் பில்டப் ஓவரா போகவே, தங்கமணியை காப்பாற்ற, "கேசரி பவுடர் கிடைக்குமா அங்கே?னு நானும் கேட்டு விட்டேன்.

அவரின் மூத்த பெண் பரத நாட்டியம் கற்று வருவதாய் டெக்சாஸ் அம்மணி அபிநயம் பிடித்து காண்பிக்க, தில்லானா வந்தாச்சா? இல்ல பதங்களா?னு நானும் அபிநயத்துலேயே கேட்டு விட்டேன். அடுத்த வருடம் அரங்கேற்றமாம்.

மறக்காம போட்டோ எடுத்து அனுப்புங்க!னு என் தங்கமணியும் அபிநயம் புடிக்க, என்னடா இது? ரெண்டாயிரம், மூவாயிரம்! மாமா பிஸ்கோத்து! ரேஞ்சுக்கு நிலைமை மாறுதேனு எனக்கு சிரிப்பு ஒரு பக்கம், கவலை ஒரு பக்கம் வந்துடிச்சி.

கண்டிப்பா ஈமெயிலில் அனுப்புறோம்!னு தட்டச்சு சைகை செய்தபடியே டெக்சாஸ் பார்ட்டி விடை பெற்றது.

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும். இந்தியாவுல இருக்கற எங்களுக்கு தமிழ் தெரியாதுனு அவங்க நெனச்சாங்களா, இல்ல அவங்களுக்கு தமிழ் மறந்து போச்சா?

பி.கு: கடைசியில் ஈமெயில் முகவரி அவங்களும் வாங்கிக்கவே இல்லை, நாங்களும் குடுக்கலை.

Monday, June 30, 2008

பக்கத்து சீட்டுல பிளாகர் உக்காந்தா...


போன முறை மைசூர் காவிரி எக்ஸ்பிரஸில் பூஜா விளைவால் கடுப்பான தங்கமணி, இந்த முறை புத்திசாலிதனமாய் செய்வதாய் நினைத்து, கவுஹாத்தி எக்ஸ்பிரஸில் எனக்கு டிக்கட் புக் செய்து இருந்தபடியால் அடியேன் ராமானுஜ தாசன் (மன்னிக்கவும், தமிழ்மணத்துல நிறையா விமர்சனம் படிச்ச விளைவு) ரயில் நிலையத்துக்கு போய் சேர்ந்தேன். என் ரயில் தவிர எல்லா ரயிலும் எந்த பிளாட்பாரத்தில் வரும்?னு அறிவிப்பு வருகிறது. சரினு கவுண்டரிடம் (சாதி பெயர் இல்லீங்கண்ணா) கேட்டால் கவுஹாத்தி கேன்சலாகி விட்டதே!னு ரெம்ப சந்தோஷமா சொல்றார். வட மாநிலத்தில் பலத்த மழையால் ஒரு வாரமாகவே அந்த ரயில் எல்லாம் ரத்தாம். அப்புறம், ஒரு பேருந்தில் இடம் பிடித்து அருகில் அமர்ந்திருந்த ஒருவரிடம் என் சோக கதையை சொல்ல வேண்டியதா போச்சு.

நீங்க பேப்பர் எல்லாம் படிக்கறதில்லையா? பக்கத்தில் அமர்ந்த பாவத்துக்கு துக்கம் விசாரித்தார்.

இல்லீங்க, நான் பிளாக் தான் படிக்கறது.


அவர் ஒரு நொடி ஙேனு முழித்துவிட்டு, அதுல கூடவா இந்த செய்தியெல்லாம் வரதில்லை?


அதுல இதெல்லாம் வராதுங்க. ஒரு வேளை "ஒரு தன்மான தமிழனை ஊருக்கு போக விடாமல் வடைமொழி மாநிலத்தவர் செய்த சதி!"னு நான் பதிவு போட்டா தான் உண்டு.


என்னை ஒரு ரேஞ்சாக பாத்துவிட்டு, நீங்க மாவோயிஸ்ட்டா? இல்ல கம்யூனிஸ்ட்டா? ஒரு ரேஞ்சா பேசறீங்க. இப்படிதான் பிளாக்குல வருமா?

அய்யா சாமி, நான் ரிசப்ஷ்னிஸ்ட் கூட இல்லை. நான் சும்மா ஒரு சாம்பிளுக்கு சொன்னேன், இதவிட பலபல மேட்டர்கள் எல்லாம் வெளிவரும்.

உதாரணத்துக்கு சிலது சொல்லுங்களேன்! மனுசன் லேசுலுல விடுவதாயில்லை.


உலத்தரத்துல எப்படி படம் எடுக்கனும்?னு கமலுக்கு ஒரு மூடிய கடிதம் போடுவாங்க. ஜூராஸிக் பார்க்குக்கும் தசாவதாரத்துக்கும் பத்து வித்யாசங்கள் காட்டுவாங்க. ஜலஜாவின் ஜல்சா கதைகள்னு ஒரு தொடரை ரீலீஸ் பண்ணுவாங்க. முன்/பின்/ நடு இலக்கியமெல்லாம் படைப்பாங்க.

கொஞ்சம் இருங்க, அது என்னங்க பின்னிலக்கியம்? நான் கேள்விபட்டதேயில்லையே?

அடடா இது தெரியாதா? விசித்திரன் (இதுல பெயர் இப்படி தான் வைக்கனும்) வீட்டின் பின்கதவை திறந்து பார்த்தான் அப்படினு சொல்ல வரதையே, உடலுக்கு ஒன்பது வாசலில் கண், மூக்கு, காது வாய் துவாரங்களை போல சமூகத்தில் அங்கீகாரம் பெற்றவை தவிர்த்து, விளிம்பு நிலை மனிதர்களை போல அதிகம் கண்டுகொள்ளபடாமல், ஆனால் தவிர்க்கவே முடியாத மீதி துவாரங்கள் போல இருக்கும் வீட்டின் பின்கதவை, இந்தியா சமீபத்தில் 1990களில் உலகமயமாக்கலுக்காக தனது வெளி நாட்டு கொள்கைகளை அமெரிக்க/ஐரோப்பிய ஏகாதிபத்தியத்துக்கு திறந்து விட்டது போல விசித்திரன் திறந்து பார்த்தான். இது பின்னிலக்கியம். புரிஞ்சதோ?

பாவம்! கேட்டவருக்கு கொஞ்சம் கண்ண கட்டி இருக்கும் போல. ஒரு மடக்கு தண்ணிய குடித்து கொண்டார்.

இப்படி எழுதினா யாரு படிப்பாங்க? நம்ம எழுதினதை மத்தவங்க படிச்சாங்களா இல்லையா?னு எப்படி தெரிஞ்சுக்கறது?

என்ன இப்படி கேட்டுடீங்க? நாங்களும் பதிவை படிச்சோம்னு சொல்ற விதமா "அவ்வ்வ்வ்" "ரீப்பீட்டேய்ய்ய்" "நல்ல பதிவு", :))னு எல்லாம் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பாங்க.


அட, இது நல்லா இருக்கே! நீங்க சொல்றத கேட்டதும் எனக்கும் ஒரு பிளாக் ஆரம்பிக்கனும்னு ஆசையா இருக்கு.


அதுகென்ன? காசா பணமா? கூகிள்காரன் சும்மா தரான். ஊருக்கு போனதும் ஆரம்பிச்சுடுங்க, சரியா?

சரிங்க, சாரி, கேக்க மறந்துட்டேன், உங்க பேரு?


அடியேன் நம்பி! சாரி அம்பி, ஆமா உங்க பேரு?


லிங்கம், ஜம்புலிங்கம்...

Wednesday, June 25, 2008

தகப்பஞ்சாமி




When the student is ready, the master appears - Buddhist Proverb.


இன்றைய சூழலில் பிள்ளைகள் மட்டுமல்ல, பெற்றோரும் செல்பேசி, கணிணி, ஈமெயில் அறிவு பெற்றவர்களாக இருப்பது காலத்தின் கட்டாயமாகி உள்ளது. இப்பொழுது வரும் செல்போன்கள் எல்லாம் பாக்க அழகா பாவனா மாதிரி இருக்கு. ஆனா கீபேடுகள் அவ்ளோ சுலபமா இருப்பதில்லை. அதிலும் நேரு காலத்து ட்ரிங்க் ட்ரிங்கையே உபயோகித்து வந்தவர்களுக்கு தீடீர்னு இப்படி உள்ளங்கையில் உலகம் வந்தவுடன் சிறிது தயக்கம், நாம ஏதும் அமுக்கி, ஏதும் ரிப்பேர் ஆனா பையனுக்கு வேற தண்டச் செலவு என்ற பெற்றோருக்கே உரித்தான பயம். செல்போனுக்கே இப்படினா கணிணி இன்னும் மோசம்.



அம்மா! இங்க பாரு, இது தான் இன்டர் நெட் எக்ஸ்ப்ளோரர், இது வழியா தான் மெயில் அனுப்ப முடியும், என நம் வழக்கமான மேதாவிதனத்தை காண்பித்தால் பெற்றோர் முகத்தில் தயக்கம், மலைப்பு என எல்லாம் ஒன்று சேர்ந்து விடுகிறது.


அப்புறம் நாம் புரிந்து கொண்டு சுலபமான வார்த்தைகளை போட்டு சொல்லி குடுத்தால் கற்று கொள்ளும் ஆர்வம் கண்ணில் மின்னுகிறது. இருந்தும் இந்த வயதில் கத்துக்க முடியுமா? இதெல்லாம் சாத்தியமா? என நியாயமான கவலைகள். ஆனாலும் பிள்ளைகளின், பேரன்களின் ஓட்டத்துக்கு ஈடு குடுக்கனுமே? என்ற பரபரப்பு.



நினைத்து பார்க்கிறேன், நான் வார்த்தைகளை கூட்டி கூட்டி பேச ஆரம்பித்த புதிதில் இந்த 'க' எனக்கு வராது. எனவே தக்காளியெல்லாம் தத்தாளி தான். கத்ரிக்காய் எல்லாம் தத்தரிதாய் ஆனது. ஆங்கில எழுத்தில் 'சி' எனக்கு மட்டும் வலது பக்கமாக வரும் அரைவட்டம்(தாரே சமீன் பர்?). ஆனாலும் பொறுமையாக எனக்கு பயிற்சி அளித்து, திருத்திய அவர்களின் பொறுமையில் தசாம்சமாவது (அய்யோ! படம் இல்லீங்கணா! பத்தில் ஒரு பங்குனு சொல்ல வந்தேன்) எனக்கு வாய்க்காதா என்ன?



நம்மிடையே வலையில் உலா வரும் பல அம்மாக்களின்/பாட்டிகளின் முயற்சிகளை நினைத்து பிரமிக்கிறேன். செளகார் ஜானகி, காரைக்கால் அம்மையார் என எத்தனை காரண பெயர்களுடன்(பட்ட பெயர்களுடன்) வலையுலா வந்து, பின்னூட்டமிட்டு, சமையல் குறிப்பு எழுதி, ஊர் உலகமெல்லாம் நமக்கு சுத்தி காட்டி, கதை சொல்லி, படம் காட்டி, தாலேலோ பாடி, நம் இல்ல விழாக்களில் முடிந்தால் நேரிலோ, மெயில் மூலமாகவோ வந்து வாழ்த்தி, ஹிஹி, மொய்யெழுதி, கால ஓட்டத்தில் கரைந்து விடாமல் நாணலாய் வளைந்து, தம் மக்கள் நின்றால் குடையாக, அமர்ந்தால் சிம்மாசனமாக வலம் வரும் எல்லா பெற்றோருக்கும் இந்த பதிவு சமர்ப்பணம். :)

Friday, June 13, 2008

அம்பியின் பார்வையில் தசாவதாரம்

ரொம்ப நாளா, இல்ல இல்ல ரொம்ப மாசமா பாக்கனும்! பாக்கனும்னு தணியாத ஆவலுடன் இருந்தது வீண் போகலை. ஏற்கனவே மனதில் பலத்த எதிர்பார்ப்பு. அதுலயும் அடிக்கடி நம்ம பாசுர புயலின் மாதவி பந்தலில் ஒதுங்கி, சுப்ரபாதம் எல்லாம் கேட்டு, கொதிக்கிற கேசரியில் நெய்யை விட்ட மாதிரி ஆசை பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்து விட்டது.

சரி, வளவளனு பேசாம படத்துக்கு போகலாம். கதை என்னவோ குழந்தையிலிருந்தே கேட்டு வளர்ந்த கதை தான். கெட்டது செய்தா, உம்மாச்சி ஏதாவது ஒரு ரூபத்தில் வந்து நம் கண்ணை குத்துவார். ஆனா அதை படமாக்கிய விதம், அதான் திரைகதைனு சொல்லிக்கறாங்களே அங்க தான் நிக்கறார் டைரக்டர்.

மாயாஜால கதைகள், காட்சிகள்னா எனக்கு உசுரு. மாயா பஜார் படத்துல ரங்காராவ் வாயில லபக்குனு லட்டு போறதையே கண் கொட்டாம பாத்தவனாக்கும். விட்லாச்சாரியார்னு ஒருத்தர் (நம்ம கீதா பாட்டிக்கு சம காலத்தவர் தான்) இதுல கிங்க்னு கேள்வி. தந்திர காட்சிகள்னா கூப்டுடா விட்டலை!னு சொன்ன காலம் போய் நம்ம ஆட்களே சும்மா பின்னி பெடலெடுத்து இருக்காங்க. அதுலயும், அந்த கடலுக்கடியில் தண்ணிக்கு உள்ளே விஷ்ணு வர ஷாட் இருக்கே! அடடா! ரொம்ப ப்ரமாதம்.

படத்தின் கதை யுகங்கள் கடந்து சென்றாலும் திரைகதையில ஏகப்பட்ட நெளிவு சுளிவுகள் இருந்தாலும் ஒன்னு கூட சிக்கல் இல்லாம இருந்து இருக்கு. குறிப்பிட்டு சொல்லனும்னா, ஒரே காட்சியில் இரண்டு அவதாரங்கள் சந்தித்து கொள்கின்றன. ஆனாலும் நாம எப்படி ஜாங்கிரி வேற, ஜிலேபி வேறனு தெளிவா இருக்கோமோ, அதே மாதிரி, இவர் வேற, அவர் வேற!னு எந்த வித குழப்பங்களும் ஏற்படவில்லை.

கதையில் பல திடிக்கிடும் திருப்பங்கள் சுவையா இருக்கு. உயிருக்கே மிரட்டல் வருகிற நிலையில் கூட அவர் வாயிலிருந்து "ஓம் நமோ நாராயணாய!" என ஆரம்பிக்கற போது நம்மை சீட் நுனிக்கே வர செய்கிறது. படத்தில் ஆக்ரோஷமான சண்டை காட்சிகள் மெய் சிலிர்க்க வைத்து, கன்னத்தில் போட்டு கொள்ள வைக்கின்றன. அதிலும் தூணை பிளந்து கொண்டு கர்ஜித்து வருகிற காட்சி இருக்கே! கிளாசிக்.

கேமிரா எடுத்தவர் கைக்கு தங்கத் தோடா செஞ்சு போடலாம், தப்பேயில்லை. மேக்கப்மேன் சில இடங்களில் சொதப்பி விட்டாரோனு தோணுது. ஆனாலும் இந்த ராமருக்கும், கிருஷ்ணருக்கும் இப்படி அனியாயத்துக்கு பெயிண்டை வேஸ்ட் பண்ணி இருக்க வேண்டாம். அந்த செலவில் பாமாவுக்கும், சீதைக்கும் கொஞ்சம் டச்சப் செய்து இருக்கலாம். ஹிரண்யகசிபுவுக்கு வேறு நல்ல விக் குடுத்து இருக்கலாம். பழைய விக் போல, பேன் வேற இருந்து இருக்கும் போல. தலையை சொறிய முடியாத எரிச்சலோடு வசனங்களை பேசுகிறார்.

பாட்டெல்லாம் ரொம்பவே இனிமையா இருக்கு தான்.அதுக்காக உச்சா போறத்துக்கு கூட இடைவேளை விடாம, இந்த பிரகலாதன் ரொம்பவே பாடி இருக்க வேணாம். எழுந்து போனால் கதையின் கன்டினியுட்டி போயிடுமேனு அடக்கிண்டே இருக்க வேண்டியதா போச்சு.

சரி, நீங்க பல்ல கடிக்கறது எனக்கே கேக்கறது, இதோட நிறுத்திக்கறேன். பின்ன என்னங்க, நான் இல்லாம நீங்க மட்டும் தசாவதாரம் ரீலீஸ் அன்னிக்கு என்னைய விட்டுட்டு பாத்தா, ஜுனியர் போன உச்சாவை/கக்காவை உங்க வெள்ளை சட்டையால் தொடைப்பேன்னு மிரட்டல் விடுத்து இருக்காங்க தங்கமணி. அந்த கடுப்புல எழுதின பதிவு இது.

Wednesday, June 11, 2008

ஜுனியர் அம்பி

கங்கிராஜுலேஷன்ஸ்! நீங்க அப்பாவாயிட்டீங்க!னு கையை கழுவி கொண்டே, மூக்கு கண்ணாடியும், பன் கொண்டையும் போட்ட பெண் டாக்டர் வந்து மேலே சொன்ன வசனத்தை கேட்டு, "டாக்ட்ட்டர்ர்ர்ர், தேங்க் யூ! தேங்க் யூ! வெரி மச்!"னு நவ ரசத்தையும் முகத்தில் காட்டி, எப்படி சொல்லனும்?னு ஏகப்பட்ட சிவாஜி படங்கள் பார்த்து மனப்பாடம் பண்ணியதெல்லாம் போன வாரம் வேஸ்டா போச்சு.

ஜூன் மாதம் ஐந்தாம் தேதி காலை ஏழு மணிக்கு தங்கமணி, லேசா வலிக்குது, எதுக்கும் டாக்டர்கிட்ட போய் செக்கப் பண்ணிக்கவா?னு செல்பேசிய போது, சுந்தர காண்டம் அடுத்த ரவுண்டு படிக்க ஆரம்பிச்சுட்டியா? அதான் குழந்தையும் கடலை தாண்டற மாதிரி உதச்சு இருப்பான். போய்ட்டு வந்து போன் பண்ணு!னு கர்ம சிகாமணியா ஆபிஸ் போனது பெரிய தப்புனு பகல் பத்து மணிக்குதான் உரைத்தது.

12:32 க்கு நீங்க அப்பாவாகிட்டீங்க!னு செல்பேசியில் பன் கொண்டை போட்ட டாக்டர் ஒன்னும் சொல்லலை. என் மாமனார் தான் திருவாய் மலர்ந்தார். உடனே புடுங்கிய ஆணியெல்லாம் ஒப்படைத்து விட்டு, தெரிந்த பேருக்கு எல்லாம் கைக்கு வந்தபடி மெயிலனுப்பி விட்டு, டிராபிக்கில் சிக்கி, சென்னை பஸ்ஸை பிடித்தால் மணி மூணு. பெட்ரோல் சிக்கனம், தேவை இக்கனம்! என்பதை டிரைவர் தவறாக புரிந்து கொண்டு மணிக்கு முப்பது கிலோமீட்டர் வேகத்தில் ஒட்டு ஒட்டுனு ஒட்டி இரவு பன்னிரெண்டு மணிக்கு கத்திபாராவில் விடபட்ட நான், சுத்தி சுத்தி பாத்தும் ஆட்டோ தவிர ஏதும் இல்லை.

லிட்டருக்கு அஞ்சு ரூபா ஏறிடுச்சு சார்!னு சொல்லி என்னிடம் ஆட்டோ விலையை சொல்லிய அவரிடம், சிலிண்டருக்கு ஐம்பது ரூபா ஏறிடுச்சுண்ணே!னு பாவமாய் கேட்ட என்னை மனதுக்குள் @#$# என திட்டி கொண்டே ஏற்றி கொண்டார். விசிட்டர் நேரம் முடிந்து போய் மறு நாள் தான் தவபுதல்வனை பாக்க முடிந்தது.

எனக்கொரு மகன் பிறந்தான்! அவன் என்னை போலவே இருப்பான்!னு கையை வீசி பாடி காட்டினால், வேணாம்! குழந்தையை கெடுக்காதீங்கோ! அதாவது உருப்படியா வளரட்டும்! என பதில் வந்தது.

ம்ஹும், அடுத்த பிரசவத்துக்காவது கரக்ட் டைத்துக்கு வந்துடரேன் என்ன? சமாளிக்க பார்த்தேன்.
என்னது இன்னோன்னா? இனிமே பூரி கட்டை இல்லை, கர்லா கட்டை தான் என சொல்லாமல் சொல்லியது அந்த பார்வை. பேசாம நானும் எனது பிளாக் பெயரை இனி அம்பி அப்பா!ணு மாத்தி விடலாமா என தீவிரமாக யோசித்து வருகிறேன்.

மின்னலென போஸ்டர் அடித்து ஒட்டிய தாய்மாமன் கைப்பு அங்கிளுக்கு ஜுனியர் அம்பி ரெம்ப தேங்க்ஸ் சொல்ல சொன்னான்.

பி.கு: பிளாக்கர் இலவசம் ஆஸ்பிடல் பில்லை செட்டில் செய்வார் என நம்புகிறேன். பிரசவத்துக்கு இலவசம்னு சொன்னாங்களே! அது இது தானே? :)

Monday, May 26, 2008

சரம் தெரியுமா சரம்?

சரம் என்றவுடன் உங்களுக்கு மல்லிகை சரம் நினைவுக்கு வந்தால் நீங்கள் நம் குசும்பன் போல சமீபத்தில் (அந்த சமீபம் இல்ல) திருமணம் ஆனவராக இருக்கலாம்.

சர வெடி நினைவுக்கு வந்தால் நீங்கள் கைப்புள்ளை, என்னை போல சமீபத்தில்(இப்பவும் அந்த சமீபம் இல்ல) தலை தீபாவளி கொண்டாடியவராக இருக்கலாம்.

சரம் என்றவுடன் சூடி கொடுத்த சுடர் கொடி நினைவுக்கு வந்தால் அடிக்கடி நம் 'பாசுரபுயல்' கேஆரெஸ் பதிவுகளுக்கு சென்று வந்தவராக இருக்கலாம்.


சரம் என்றவுடன் லலிதாம்பிகையின் புருவங்கள் தானே! என்று தோன்றினால் சாக்த சிரோண்மணி மதுரையம்பதி அவர்களின் பதிவில் தடுக்கி விழுந்தவராக இருக்கலாம்.

சரம் என்றவுடன் பச்சை கிளி முத்துச் சரம் என நீங்கள் பாடினால் நீங்கள் எம்ஜிஆர் ரசிகர். கரக்ட்டா? இல்ல, டக்குனு ஜோதிகா முகம் நினைவுக்கு வந்தால் பிறர் மனை நோக்கா பேராண்மையாளர் நீங்க தான். ஹிஹி.


இதை எல்லாம் மீறி அட வலை சரம்னு சொல்ல வேண்டியது தானே?னு நீங்க முணுமுணுத்தால் கைய குடுங்க. அதே தான்! இந்த வாரம் என்னை வலை சரத்துக்கு ஆசிரியரா இருக்க சொல்லிருக்காங்க. பாவம், அவங்க போதாத நேரம்!
ஏற்கனவே பல ஜாம்பவான்கள் (கரடினு எல்லாம் ஒன்னும் திட்டலப்பா) முத்திரை பதித்த இடம் அது. என்னை போன்ற தேங்காய் மூடி பாகவதர்களுக்கும் ப்ரைம் டைமில் நாரத கான சபாவில் தெரியாத்தனமா நேரம் ஒதிக்கிட்டாங்களோ?னு எனக்கே ஒரு சந்தேகம் இருக்கு.

ஆகவே ஒரு வாரம் அங்க தான், தினம் ஒரு பதிவு போடலாம்னு எண்ணம். எல்லோரும் வந்து வழக்கம் போல அட்சதை போட வேணும்னு கேட்டுக்கறேன்.

Monday, May 19, 2008

மைசூர் காவேரி எக்ஸ்பிரஸ்

சென்னை மத்திய புகைவண்டி நிலையத்தில்(சென்ட்ரல் ஸ்டேஷன்னு சொல்ல வந்தேன்) சிட்டு குருவி லேகியம் தவிர எல்லா கடைகளும் வந்து விட்டது. ஆனாலும் நிலையத்தின் தூய்மை என்னவோ இன்னும் விஜய் படங்கள் போல அதே நிலைமையில் தான் இருக்கு. சட்ட வட்டமாக நடுவில் உட்கார்ந்து கொண்டு தலைக்கு நாலு சப்பாத்தியும் சப்ஜியையும் குடும்பத்துக்கே பறிமாறி கொண்டிருந்தாள் ஒரு பரதேவதை.

ஸ்டேஷனில் இருக்கும் டிவிக்களில் அண்ணாச்சி கடையில் குளிர் அடிக்குது!னு யாரோ ஒரு நடிகை வாங்கிய காசுக்கு அள்ளி விட்டு கொண்டிருந்தார். (அந்த நடிகையின் பெயரை முடிந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும், சும்மா ஒரு பொது அறிவுக்கு தான். )

சென்னையில் அடிக்கும் வெய்யிலுக்கு அப்பளம் காய போட்டால் எண்ணெய் செலவின்றி பொரிந்து விடும் போலிருக்கு. 9.30க்கு தான் ரயில். எனக்கு கொஞ்சம் எப்பவுமே எச்சரிக்கை உணர்வு அதிகம். ஆனாலும் ஒரு மணி நேரத்துக்கு முன்னாடியே வந்து தேவுடு காப்பது எல்லாம் எனக்கே டூ மச்சாக இருந்தது. ஏற்கனவே பிளாட்பாரத்தில் வண்டி நின்று கொண்டிருந்தாலும், எனக்கு வண்டிக்குள்ளே போக இஷ்டமில்லை. சும்மாவே நம் மக்களுக்கு பேசறத்துக்கு காசு கொடுக்கனும். அதிலும், அறிமுகம் இல்லாதவர்களிடம், அது சன் பீஸ்ட் பிஸ்கோத்து விக்கும் சூர்யாவா இருந்தா கூட பேச்சு வெச்சுக்காதீங்கனு மைக்கில் அறிவித்து இருந்தபடியால், சுமாராக சூர்யா போல் இருக்கும் என்னை (சரி, இதுக்கே துப்பினா எப்படி?) சந்தேகமாகவே பார்க்கும் வாய்ப்புக்கள் இருக்கறபடியால், எதுக்கு வம்பு?னு சரியாக 15 நிமிடத்துக்கு முன்னாடி தான் வண்டியில் ஏறினேன்.

ரயிலில் தனியாக, அதுவும் என்னை போன்ற ஏமாந்த சோனகிரிகள் பயணித்தால் எப்படி தான் கூட இருப்பவர்களுக்கு தெரியுமோ?
"எச்சூஸ்மி! நாங்க பேமிலியா வந்ருக்கோம். என் மச்சினி மட்டும் 10ம் நம்பர் சீட். கொஞ்சம் மாத்திக்க முடியுமா?னு சொல்லி அந்த சீட்டை தள்ளி விட்டு விடுவார்கள். அங்க போனா உச்சா வாடை புரட்டி எடுக்கும். கூட பயணிக்கும் சதாவை பார்க்காமல் டாய்லைட்டை பார்த்து டிடிஆர்ர்ர்ர்ர்!னு தொண்டை கிழிய கத்றத்துக்கு நான் என்ன அன்னியன் படத்து அம்பியா என்ன?

நல்ல வேளை இந்த தடவை அந்த மாதிரி ஒன்னும் நடக்கலைனு நான் பெறுமூச்சு விடுமுன் தொப்பி போட்ட ஒரு தடியன் (மிடில் பர்த்தாம்)மெதுவாக தொண்டையை கனைத்தான். நானும் என் பிரண்டும் சேர்ந்து வந்துருக்கோம். அதனால....
(பெரிய துரியோதனனும் கர்ணனும்) நானும், என் பிரண்டு கூட தான் வந்ருக்கேன்! அதனால... அதே பிட்டை அவனுக்கே போட்டதில் கடுப்பாகி போனான். ஆனால் இன்னொரு லோயர் பர்த்த்காரனை சரி கட்டி இடத்தை பிடித்து விட்டான்.

இந்த பெங்களுர் டிரெயினில் பயணிப்பவர்களை மிக எளிதாக கண்டு கொள்ளலாம்.

ஆண்கள் எல்லோரும் டவுசர் பாண்டிகளாக இருப்பார்கள். தோளில் ஏதேனும் கேக்ரான்-மோக்ரான் சாப்ட்வேர் கம்பனி ப்ரீயா குடுத்த பை இருக்கும். இடது கையில் கண்டிப்பாக ஒரு பிஸ்லரி பாட்டில் இருக்கும், வலது கையில் காமிரா மொபைல் (யாருக்கு தான் பேசுவார்களோ?). ஏதேனும் ஒரு காதில் கடுக்கன், ஈயம் பித்தளையில் தேள் டாலர் போட்ட செயின் கண்டிப்பாக இருக்கும்.

அம்மணிகளை பத்தி சொல்ல வேண்டியதில்லை. சென்னையில் மீரா சீயக்காய் போட்டு வளர்த்த கூந்தலை, பெங்களுரில் கழுதை வால் மாதிரி வெட்டி இருப்பார்கள் என்பதோடு நிறுத்தி கொள்கிறேன். முக்யமா எல்லோரும் இ-டிக்கட் தான் வைத்து இருப்பார்கள்.

ரயில் புறப்பட்டு பத்து நிமிடத்தில் பரிசோதகர் நீல நீற கோட்(இந்த வெய்யிலில் எப்படி சார்?) அணிந்து வந்தார். ஒழுங்கா இ-டிக்கட்டுக்கு ஐடி கார்டு எடுத்து வைங்க!னு கறாராக சொல்லி விட்டார். அதோடு நிற்கவில்லை, இந்த சீட் எக்ஸ்சேஞ்ச் மேளா நடத்திய தொப்பிகாரனை ஒழுங்கா அவன் சீட்டுக்கே போக சொல்லிவிட, கம்பார்ட்மெண்ட் முழுக்க பலபேர் குறுக்கேயும் நெடுக்கேயும் போக ஆரம்பித்து விட்டனர். எல்லோரும் இடம் மாத்தி இருக்காங்க போலிருக்கு.

வாலு போச்சு! கத்தி வந்தது டும்! டும்! டும்! போல தனக்குரிய சீட்டுக்கு ஜீன்ஸும், டிஷர்ட்டும் அணிந்த பெண் வந்து சேர்ந்தாள். ஒட்டு கேட்கும் பழக்கம் எல்லாம் எனகில்லை, காத்து வாக்கில் டிடிஆரிடம் சொன்ன போது விழுந்தது, பெயர் கூட ஏதோ பூஜாவாம்.

சரி, இந்த டிடிஆர் செஞ்சது கரக்ட்டா? அதாவது கராறாக ரூல்ஸ் ராமானுஜமாக இருந்ததை சொல்றேன். மக்களுக்காக தான் ரூல்ஸ்!னு நினைக்கறீங்களா? இல்ல ரூல்ஸுக்காக தான் மக்கள்!னு நினைக்கறீங்களா? வளர்ச்சியடைந்த நாடுகளில் எல்லாம் மக்கள் சட்டத்தை மிகவும் மதிக்கிறார்கள், பொது இடத்தில் குப்பை போடாமல் இருப்பது, துப்புவது போன்றவை. சட்டங்கள் கடுமையாக்கப்பட்டால் மக்கள் நம்மூரிலும் சட்டத்தை மதிப்பார்களா? இதை பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க?

டிஸ்கி#1: கடைசி பாரா தான் மாரல் ஆப் தி பதிவு. :)

டிஸ்கி#2: அப்புறம் பூஜா பற்றிய பிற தகவல்களை அடுத்த பதிவுல சொல்லுவியா அம்பி?னு பின்னூட்டம் எல்லாம் போட கூடாது. :))

Tuesday, May 13, 2008

இந்த நாள் உன் காலண்டர்ல குறிச்சு வெச்சுக்கோ!

பதினாலு மே 2007

அக்னி நட்சத்திர வெய்யிலையும் பொருட்படுத்தாது வந்திருந்த கூட்டம் குளிரூட்டபட்டு இருந்த அந்த மண்டபத்தில் பிதுங்கியது. ஒன்பதரைக்கு முகூர்த்தம் ஆரம்பம் என்பதால் காலையில் இட்லி, மசால் தோசை, நெய் வழுக்கிய கேசரியை சுகமாய் உள்ளே தள்ளி விட்டு சாவகாசமாய் வம்படித்து கொண்டிருந்தனர் பல மாமாக்கள்.

மண மேடையில் ஒன்னுமே சாப்பிடாம உட்கார்ந்து இருக்கும் மாப்ளையையும், பெண்ணையும் மிலிட்டரி டிரில் வாங்கி கொண்டிருந்தனர் இரு வீட்டு புரோகிதர்களும். நெக்லஸ் புதுசா? செவப்பு கல் வெச்ச தோடு போட்டு இருந்தா உனக்கு இன்னும் எடுப்பா இருந்திருக்கும்! ஆம்படையான்ட சொல்லி இந்த தீவாளிக்கு வாங்கிக்கோ! என யாரோ ஒரு அப்பாவி ரங்குவுக்கு ஆப்படித்து கொண்டிருந்தார் ஒரு மாமி.

டிரவுசரை அவுத்து கொண்டு "டாடி! அலம்பி விட வா! என திருவாய் மலர்ந்து அவசரமாய் ஓடிய தன் மூணு வயது தவபுதல்வனை பின் தொடர்ந்து ஓடி கொண்டிருந்தார் இன்னொரு அப்பாவி ரங்கு. வாங்கிய காசுக்கு வஞ்சனையில்லாமல் "வள்ளி கணவன் பெயரை வழிப்போக்கன் சொன்னானடி!"னு அட்ரஸ் விசாரித்து கொண்டிருந்தார் நாதஸ்வர வித்துவான்.

பாச மலர் சாவித்திரியின் தோழிகள் ரேஞ்சுக்கு ஐந்து நிமிஷத்துக்கு ஒரு முறை கலகலவென சிரித்து, தம் டிஜிட்டல் காமிராவில் தம் தோழியை பதிந்து கொண்டிருந்தனர் மணபெண்ணின் தோழிகள். உன்னை பாத்து ஒன்னும் சிரிக்கலை, நீ வேஸ்ட்டா அசடு வழியாதே!னு மாப்ளையின் தம்பி தன் பங்குக்கு கடுப்பேத்தி கொண்டிருந்தான்.

இதோ அந்த தருணம் வந்து விட்டது. அண்ணாமலையில் ரஜினி சரத்பாபுவை பாத்து சொல்வாரே!

ஆபிஸ்ல வேலை இல்லாத போதும் நைட் பத்து மணி, பதினோரு மணி வரை வெட்டியா(அய்ய, வெட்டி பாலாஜி உங்கள இல்ல) சீட்ட தேய்ச்சுட்டு ஒவ்வோரு மொக்கை பதிவா போய், பின்னீட்டீங்க அண்ணே! கலக்கிடீங்க அக்கா! அங்க தான் நீங்க நிக்கறீங்க போங்க! ரீப்பீட்டேய்ய்!னு பின்னூட்டம் போட்டுட்டு வர உன்னை,

ஆபிஸ் கேண்டீன், ஓட்டல்னு வெந்ததையும் வேகாததையும் சாப்பிட்டு காலம் தள்ற உன்னை,

பக்கத்து சீட்டு ரசகுல்லா கிட்ட பெங்காலி, எதிர் சீட்டு பஞ்சாபி கிட்ட ஹிந்தி,அடுத்த சீட்டு திருச்சூர் குத்து விளக்குகிட்ட மலையாளம்னு சம்சரிச்சுட்டு இருக்கற உன்னை

ஒரு பொறுப்புமிக்க ரங்குவாக, இட்லிக்கு மாவு பதம் தெரிந்த ஒரு ரங்குவாக, பூரிகட்டையின் நீளம், பருமன், அகலம் தெரிந்த ஒரு ரங்குவாக மாத்தி காட்டறேன்!

இந்த நாள் உன் காலண்டர்ல குறிச்சு வெச்சுக்கோ!

அக்னியை சாட்சியாக வைத்து, பொன் தாலியை மணபெண்ணின் கழுத்தில் கட்டியவுடன் அந்த பெண், இந்த அப்பாவி பையனை பார்த்த பார்வையின் விளைவே இந்த பதிவு. காலம் யாருக்காகவும் நிற்பதில்லை.

மே 15 இன்று தமது திருமண நாளை கொண்டாடும் பிளாகேஸ்வரி அக்காவுக்கு இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.

Friday, May 09, 2008

சென்ஷி அண்ணணுக்கு ஒரு கடிதம்(09/05/2008)

//இது சும்மா இட்லிக்கு மாவு ஆட்டிக்கொடுத்துட்டு சாப்டப்புறம் பாத்திரம் கழுவி வைக்குற வேலை இல்ல.. பின்னூட்டம்.//

இட்லிக்கு மாவட்டறதுன்னா சும்மா இல்ல, முந்தின நாளே சரியா எட்டு மணி நேரத்துக்கு முன்னாடி அரிசிய ஊற போட்டனும், 1 மணி நேரத்துக்கு முன்னாடி உளுந்த ஊற போடனும். அதுவும் கருப்பு உளுந்தா இருந்தா களையற வேலை வேற எக்ஸ்ட்ரா.


அப்புறம் இஷ்ட தெய்வத்தை கும்பிட்டு(அட இட்லி பஞ்சு போல வரனும் இல்ல) கிரைண்டரை முதல்ல லேசா கழுவி, மெதுவா ஓட விட்டு கொஞ்சம் கொஞ்சமா அரிசிய முதல்ல போடனும். உளுந்த போட்டா மாவு காலி. மொத்தமா அரிசிய அரைக்க போட்டா கிரைண்டர் சண்டித்தனம் பண்ணி நின்னுடுமாக்கும். நான் சொல்றது சாய்வு வகை கிரைண்டர். குழவி கல்லு கிரைண்டர்னா எடுத்து அலம்பி வைக்கறதுக்குள்ள தாவு தீர்ந்துடும். பத்து நிமிஷத்துக்கு ஒரு முறை கொஞ்சம் கொஞ்சமா தண்ணி விடனும். நைசா வரனுமில்ல.

நாப்பதஞ்சு நிமிஷம் அரச்ச பிறகு அரிசிய வழிச்சு எடுக்கனும்.


அப்புறம் உளுந்து. ஓவரா தண்ணி காட்டினா நாள் முழுக்க நீங்க உளுந்து மட்டும் தான் அரச்சுட்டு இருக்கனும். சன் மீயூசிக்குல ஹேமா சிம்ஹாவை பாத்து மெய் மறந்து, தண்ணி விட மறந்தீங்கன்னா கிரைண்டரில் இருந்து உளுந்து உருண்டை எடுக்கலாம்.

இத எல்லாத்தையும் விட மெயின் மேட்டர், நீங்க மாவாட்டும் சுபயோக சுப நேரத்தில் மின்சாரம் இருக்கனும். நடுவுல புடுங்கிகிச்சுனா மின்சாரம் வர வரைக்கும் தேவுடு காக்கனும். டிவியும் பாக்க முடியாது. ரீப்பீட்ட்ட்யேயும் போட முடியாது.


அப்புறம் தான் மெயின் மேட்டர்:
சரியான விகிதத்துல உப்பு போடனும். எல்லாம் முடிஞ்சு உடனே தூக்கி பிரிஜ்ஜுல வெச்சுடகூடாது. அரை நாள் வெளியே வெச்சா மாவு பொங்கி பாத்ரம் நுனி வரை வரும். அதனால் கொஞ்சம் பெரிய பாத்ரத்துல தான் மாவை சேமிச்சு வைக்கனும். இல்லாட்டி வீட்டை மறுபடி சுத்தம் பண்ற வேலை வேற.

அடுத்த நாள் இட்லி வார்க்கும் படலம் ஆரம்பமாகுது.

இட்லி அடுக்குகளில் லேசா நல்லேண்ணைய தடவிட்டு, ஒரு கரண்டி மாவை விட்டு, கேஸ் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து விட்டு இப்ப நீங்க டிவி பாக்கலாம். அவசரபட்டு முன்னாடியே இட்லி அடுக்கை தொறந்தா அரிசி மாவு களி தான் கிடைக்கும், இட்லி கிடைக்காது.

இப்ப சொல்லுங்க, கஷ்டப்பட்டு மேட்டர் சேகரிச்சு டாமேஜர் இல்லாத நேரமா பதிவ தட்டி, பின்னூட்டத்துக்கு தேவுடு காத்து கிடந்தா, நீங்க சாவகாசமா வந்து வெறும் ரீப்பிட்டேய்ய்ய்ய் (இதுக்கு தமிழாக்கம் எல்லாம் மிக அருமையா மிஸ்டர் புதசெவி குடுத்து இருக்காரே, பாக்கலையா?) மட்டும் போட்டுட்டு போவீங்களாக்கும்? எந்த ஊர் நியாயம்ண்ணே? :))

டிஸ்கி#1: இந்த பதிவின் உட்பொருள், வெளிபொருள் எல்லாம் கேட்டு குடைய கூடாது.
டிஸ்கி#2: இதுக்கும் மேல ஏதாவது சந்தேகம்னா கைபுள்ளையை தொடர்பு கொள்ளவும். :))

Wednesday, May 07, 2008

ஐபிஎல் கிரிக்கெட்

இந்த ஐபிஎல் கிரிக்கெட் வந்தாலும் வந்தது, ஆபிஸ்ல ஒரே கும்பமேளாவா இருக்கு. அதுவும் பெங்களூரில் பல மாநில மக்கள் ஒன்றாக(?) ஒரே கம்பனியில் வேலை பார்க்கும் நிலையில், அவனவனுக்கு தம் சொந்த ஊர் பாசம் பீறிட்டு(பீர் இட்டுனு வாசிக்கபடாது) கிளம்புகிறது.

இப்ப எங்க ஆபிஸ்லயே பாருங்களேன்:

1) ரசகுல்லா டீம் (ஆமா பெங்காலி ரசகுல்லாஸ் தான்)
2) சப்பாத்தி டீம் (எல்லா வட இந்திய மா நிலங்களும் அடக்கம்)
3) வடா பாவ் டீம் (மாராத்தி டீம்)
4) கொல்டி டீம்
5) கப்பகெழங்கு டீம் (என்டா ஆயில்ய சேட்டா! முழிக்கினது?)
6) காவிரி டீம் (அவங்களே தான்)
7) சாம்பார் இட்லி டீம் (இட்லி வடை இல்லப்பா! நாமே தான்)
8) பஞ்சாப் குதிரைகள் டீம் (எல்லா குதிரகளுமே கிட்டதட்ட ஆறு அடி எழுபது கிலோவுங்கோ)

இதுல ஒருத்தருக்கு ஒருத்தர் அனுசரணையா, ஆதரவா (பிராஜக்ட்டுல தான்) இருந்து வந்த நிலையில் இந்த ஐபிஎல் மொத்தமா ஆப்படித்து விட்டது.

ஏய்! ரூவாய வாங்கிட்டு என்னடா உங்க ஆளு விளையாடவே வர மாட்டேங்கறாரு?னு கப்பகிழங்கு மும்பையை கேட்க,

உங்க ஆளு குமட்டுலயே குத்தினான் பாரு பஞ்சாப்! பேச வந்துட்டாங்க இவங்க!னு பதிலுக்கு தாக்க,

ஆனாலும் ஒரு குத்துக்கு மூணு கோடி! டூ மச்! சர்தாஜிகளால தான் முடியும்!னு கொல்டி குதிரைய வம்புக்கு இழுக்க,

வேணாம்டா உனக்கு! பஞ்சாப் அடி வாங்கனும்னு ஆசையா?னு கொல்டி அட்வைஸ் பண்ணினான்.
(ஏற்கனவே எசகுபிசகா வாங்கி இருப்பான் போல!)

நாலு மேட்ச் வரிசையா ஜெயிச்சதை பாத்து ஏமாந்து போய், "கும்தலக்கடி கும்மாவா? இட்லி சாம்பார்னா சும்மாவா?"னு நாம கடுப்பேத்தியது, இப்ப வரவன் போறவன் எல்லாம் அவ்ளோ தானா?னு துக்கம் விசாரித்து விட்டு போகிறான்.

ஆனா ஒரு விஷயத்துல எல்லோரும் ஒத்துமையா இருக்காங்க.

ஐபிஎல்லுல டிராவிட் தலைமையில் டெஸ்ட் மேட்ச் உங்களால் மட்டும் தான்டா ஆட முடியும்!னு காவிரிகாரங்களை ஓட்டு ஓட்டுனு ஓட்டி தள்றாங்க. அதே சமயம், விஜய் மல்லையாவின் தாராள குணத்தை பாராட்டாத ஆட்களே கிடையாது.

பின்ன, இவ்ளோ காசு செலவழிச்சு வெளிநாட்டுல இருந்து இல்ல கரகாட்ட செட்டை வரவழைச்சு இருக்கார்.

அடடா! என்ன ஆட்டம்! என்ன சுறுசுறுப்பு! :)